2 செப்டம்பர், 2009
ஸ்வீட் சிக்ஸ்டீன்!
சிக்ஸ்டீன் என்ற சொல்லே சிக்கென்று கவர்ச்சியாக இருக்கிறதல்லவா? கூடவே ஸ்வீட்டும் சேர்ந்தால் டூபீஸ் நமீதா மாதிரி கும்மென்று எஃபெக்ட்.
கிழக்கு டூரிங் டாக்கீஸில் இம்மாதம் திரையிடப்படும் படம் ‘ஸ்வீட் சிக்ஸ்டீன்!’ என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. படம் அடல்ட்ஸ் ஒன்லியா என்று தெரியவில்லை. இப்படத்தில் மொத்தமாக முன்னூற்றி சொச்சம் முறை FUCK என்று உச்சரிக்கப்படுகிறதாம். ரசிகர்களின் ’எதிர்ப்பார்ப்பு’ முழுமையாக பூர்த்தியாகுமா என்பதை திரையிடுதலில் தான் தெரிந்துகொள்ள முடியும்.
இப்படம் பற்றிய விவரங்களை அறிய விக்கிப்பீடியா சுட்டிக்கு இங்கே அமுக்கவும்!
இம்மாதம் சிறப்புப் போனஸ் வேறு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இனி மாதாமாதம் உலகப்படத்தோடு ஒரு ஆவணப்படமும் திரையிடப்படுமாம். எழுத்தாளர் மெளனி குறித்த ஆவணப்படமும், ஸ்வீட் சிக்ஸ்டீனுக்குப் பிறகு திரையிடப்படும் என்று உரையாடல் அமைப்பாளர்களால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கிழக்கு டூரிங் டாக்கிஸில் படம் பார்ப்பது ஒரு அலாதியான அனுபவம். திரையிடுதலுக்கான ஏற்பாடுகளை செய்யும் பைத்தியக்காரன், பத்ரி ஆகியோரும் தரை டிக்கெட் ரசிகர்களாகவே இருக்கிறார்கள். எனவே தரையில் உட்கார்ந்தும் பார்க்கக்கூடிய வசதி கடந்த திரையிடுதலின் போது ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
நாள் : 06-09-2009, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.00 மணி
இடம் : கிழக்குப்பதிப்பகம் மொட்டை மாடி
எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை.
அனைவரும் வரலாம். அனுமதி இலவசம்!
1 செப்டம்பர், 2009
மூன்று சம்பவங்கள்!
வலையுலகப் பெருசு ஒருவரோடு வழக்கமாக டீ குடிக்கும் கடை அது. டீ குடிக்க போனால் ரெண்டு மூன்று தம்மை பற்றவைத்து விட்டு அரைமணி நேரம் ஏதாவது மொக்கை போடுவோம். அன்றும் அப்படித்தான். கடந்து போன சேட்டு ஃபிகர் (ஆண்டி?) ஒன்றின் வெள்ளைவேளேர் சதைப்பிடிப்பான இடுப்பை பற்றி சிலாகித்து பேசிக்கொண்டிருந்தேன்.
திடீரென அவருக்கு பெண்ணுரிமை சிந்தனைகள் கிளர்த்தெழுந்து என்னை திட்டிக் கொண்டிருந்தார். ஒரு பெண்ணை எப்படி பார்க்கவேண்டும் என்று ஆவேசமாக கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்தார். அவ்வப்போது பெரியார் சொன்னவற்றை இடை இடையே உதாரணமாக காட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது இரண்டு பேர் எங்களை நெருங்கினார்கள். அவர்களை கவனிக்காமல் அண்ணாத்தையோ ஆவேசமாக உரையாற்றிக் கொண்டிருந்தார். எங்களை நெருங்கியவர்களில் ஒருவர் லுங்கி கட்டிக் கொண்டிருந்தார், இன்னொருவர் வெள்ளைச்சட்டையை கருப்புப் பேண்டில் டக்-இன் செய்திருந்தார்.
லுங்கி கட்டிக் கொண்டிருந்தவர் எங்களை சுட்டிக் காட்டி, “சார் நான் சொன்னேன்லே? இவங்க ரெண்டு பேரு தான்!” என்றவுடனே எனக்கு அடிவயிறு கலக்க ஆரம்பித்தது. வண்டி சாவியை இக்னீஷியனில் செருகி வண்டியை கிளப்ப மனதளவில் தயாரானேன். அண்ணாத்தையை லைட்டாக சீண்டி அவர்களை காட்டினேன்.
வெள்ளை சட்டை கருப்பு பேண்ட் போட்டவர் சினேகமாக சிரித்துக் கொண்டு எங்கள் அருகில் வந்து கை கொடுத்தார். “சார் உங்களை எங்கேயோ பார்த்திருக்கேன், உங்க முகம் எனக்கு நெருக்கமா தெரியுது, நான் ஞாபக மறதிக்காரன். உங்களை எங்கே பார்த்தேன்னு மறந்துடிச்சி” யாரைப் பார்த்தாலும் கொஞ்சம் கூட மனச்சாட்சி இல்லாமல் அண்ணாத்தை சொல்லும் முதல் டயலாக் இது.
“எங்கேயும் பார்த்திருக்க மாட்டீங்க, இங்கே தான் பார்த்திருப்பீங்க. உங்க ரெண்டு பேரையும் ஒரு ரெண்டுமாசமா நான் வாட்ச் பண்ணி இருக்கேன்” லுங்கி ஆசாமி.
“ஆமாங்க. நீங்க ரெண்டு பேரும் வித்தியாசமா ஏதோ பேசிக்கிறீங்கன்னு இவன் சொன்னான். என்னதான் பேசுறீங்கன்னு இன்னைக்கு இங்கே ஒருமணி நேரமா வெயிட் பண்ணி பார்த்தோம்” வெள்ளை சட்டை.
“பாருங்க, பெரியார் பேரை நம்ம மாதிரி யூத்துங்க (அவர்கள் இருவருக்கும் தலா 40, 42 வயதிருக்கலாம்) சொல்லவே பயப்படுறாங்க. ஆனா நீங்க ரெண்டு பேரும் தைரியமா பப்ளிக்லே பேசுறீங்க. அதுமட்டுமில்லே நிறைய சமுதாயப் பிரச்சினைகளை போட்டு அலசு அலசுன்னு அலசுறீங்க. ஒருமுறை நீங்க ரெண்டு பேரும் ஓட்டலுக்குள்ளே பரோட்டா சாப்பிட்டுக்கிட்டிருந்தீங்க. நீங்க என்ன பேசுறீங்கன்னு கேட்குறதுக்காகவே ஓட்டலிலே உங்க பக்கத்து டேபிளுக்கு வந்து உட்கார்ந்து மசாலா தோசை சாப்பிட்டேன்!”
இருவரும் எங்களை பேசவிடாமல் வெள்ளமாய்க் கொட்டினார்கள். பரஸ்பர அறிமுகத்துக்குப் பிறகு வெள்ளைச் சட்டைக்காரர் லுங்கியை காட்டி, “பக்கத்து தெருவிலே பெரியார் சிலை பார்த்திருப்பீங்க. அதை நிறுவுனவரு இவரு தான். நான் வக்கீலா இருக்கேன், பெரியார் போட்ட பிச்சை!” என்றார்.
இரண்டு பேரும் ‘சமுகத்துக்கு ஏதாவது செஞ்சாகணும்!' என்ற வெறியில் இருந்தார்கள். கொஞ்ச நேரம் சம்பிரதாயமாக பேசிக்கொண்டிருந்து பின்னர் கிளம்பினோம்.
“ங்கொய்யால, இனிமே இந்த டீக்கடைப் பக்கமே வரக்கூடாதுடா, டெய்லி ஒரு மணி நேரம் மொக்கைய போட்டு டவுசரை கயட்டிடுவாங்க போலிருக்கு!” என்றார் அண்ணாத்தை.
* - * - * - * - * - * - * - * - * - *
அவர் நல்ல துடிப்பான இளம்பெண். நண்பர் ஒருவரின் அலுவலகத்தில் அவரை சந்தித்தோம். என்னோடு அதே வலையுலகப் பெருசு தானிருந்தார். இணையத்தில் தமிழ், வலைப்பூக்கள் என்றும் பல டாபிக்குகளுக்கு நடுவில் பேசிக்கொண்டிருந்தோம்.
திடீரென்று அந்தப் பெண் கேட்டார், “வலைப்பூக்களில் எழுதுவதால் சமூகத்துக்கு என்ன நன்மை?”
அண்ணாத்தை கொஞ்சம் திணறி, உடனே சுதாரித்து, “நேற்று ஏதோ படம் பார்த்தேன்னு சொன்னீங்கள்லே? அதனாலே சமூகத்துக்கு என்ன நன்மை செஞ்சிருக்கீங்க?” என்றார்.
“படம் என் திருப்திக்கு பார்க்குறேன்!”
“அதுமாதிரி தான் வலைப்பூக்களில் எழுதுறவங்க அவங்கவங்க திருப்திக்கு எழுதறாங்க?”
“சினிமா பார்க்குறதும், எழுதறதும் ஒண்ணா? என்ன சார் சொல்றீங்க? எழுத்துங்கிறது...” ஆவேசமாய் கேட்டார், கொஞ்சம் விட்டால் ‘ஏய் மனிதனே!' என்று ஆவேசக்கவிதை படிப்பார் போலிருந்தது.
“நீங்க மொதல்லே கேட்டதே ஒரு கோயிந்துத்தனமான கேள்வி. உலகத்துலே எவ்வளவோ விஷயம் நடக்குது. ஒவ்வொண்ணாலயும் சமூகத்துக்கு என்ன பயன்னு கேட்டுக்கிட்டிருந்தா எதுவுமே நடக்காது”
“அப்போ நீங்கள்லாம் எழுதறதால பயனேதும் இல்லைன்னு சொல்றீங்க?”
“அதுமட்டுமில்லே, நீங்க படம் பார்க்குறது, இப்போ நாம பேசிக்கிட்டிருக்கிறது இதனால எல்லாம் கூட சமூகத்துக்கு எந்த பயனுமில்லே!”
'ம்ஹூம், இது வேலைக்கு ஆகாது!' என்று அப்பெண் நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை, உடனேயே பேச்சை துண்டித்துவிட்டு கிளம்பி விட்டார்.
* - * - * - * - * - * - * - * - * - *
கொஞ்ச நாட்களுக்கு முன் தண்டையார்ப்பேட்டை மணிக்கூண்டு அருகில் ஒரு கல்யாண மண்டபத்தில் நடந்த திருமண வரவேற்புக்கு சென்றேன். லைட் ம்யூசிக்கில் பாடிக்கொண்டிருந்தவர் மிகக்கொடூரமாக பி.எஸ்.வீரப்பா குரலில் ‘உலக நாயகனே' பாடிக்கொண்டிருந்தார். இவர்களது அவஸ்தையில் இருந்து தப்பிக்க நினைத்து மிரண்டுப் போயிருந்த மணமகனிடம் மொய்க்கவரை திணித்துவிட்டு எஸ்கேப் ஆனேன். வண்டியை மண்டபத்துக்கு எதிரில் ஒரு டீக்கடைக்கு அருகில் நிறுத்தியிருந்தேன்.
வண்டியை எடுத்தபோது ஒருவர் என் தோளை சீண்டி “நீங்கதான் லக்கிலுக்கா?” என்று கேட்டார். எனது வண்டியில் லக்கிலுக் என்ற ஸ்டிக்கர் ஒட்டிவைத்திருந்ததை கவனித்திருப்பார் போலிருக்கிறது. நான் தான் என்று தெரிந்தால் அவரது எதிர்வினை என்னவாக இருக்கும் என்பது தெரியாததால் ”இல்லைங்க. என் பேரு குமார்” என்றேன்.
“உங்க வீடு எங்கே இருக்கு?”
அனிச்சையாக “மடிப்பாக்கம்” என்றேன்.
“மாட்டிக்கிட்டீங்களா, நீங்க தான் லக்கிலுக்கு, நான் இங்கே தான் மிண்டுலே வேலை பார்க்குறேன்” அவர் பெயரோடு, அவர் பணிபுரியும் பிரபலமான அந்த அச்சகத்தின் பெயரை சொன்னார். இந்தியாவின் நெ.1 டயரியை தயாரிப்பவர்கள் அவர்கள். தொழில்நிமித்தமாக அவர்களோடு எனக்கு முன்பு தொடர்பு இருந்தது. மனிதர் பார்க்க வடிவேலுவிடம் ‘செத்து செத்து விளையாடலாமா?' என்று கேட்ட முத்துக்காளை கெட்டப்பில் இருந்தார்.
“நெட்டுலே இமேஜஸ் தேடுவேன் சார். அப்போ யதேச்சையா எப்படியோ தமிழ்மணம் மாட்டிச்சி. உங்க பிலாக் எல்லாம் எனக்கு அப்படித்தான் அறிமுகம். ஒரு வருஷமா தொடர்ந்து உங்க பிலாக் படிக்கிறேன்”
“ரொம்ப நன்றிங்க!”
“ஆனா பாருங்க. உங்களை மாதிரி பெரிய எழுத்தாளர்கள் (யாரும் நகைக்க வேண்டாம், அவர் சீரியஸாக தான் சொன்னார்) அன்றாட மக்களின் பிரச்சினைகளை பத்தி எழுதறது இல்லே!”
”அன்றாட மக்களின் பிரச்சினைன்னா எதுங்க?”
“நான் திருவொற்றியூர் போகணும். ஒருநாள் மகாராணி ஸ்டாப்பிங்க்லே நின்னிக்கிட்டிருந்தேன். 28ஆம் நம்பர் பஸ்காரன் பஸ் ஸ்டேண்டுலே நிறுத்தாம ரொம்ப தள்ளிப்போய் நிறுத்தினான். இதுமாதிரி பிரச்சினைகளை எழுதணும் சார்! அப்போதான் சமூகத்துலே மாற்றம் வரும்!”
“நான் எழுதினா கூட 28ஆம் நம்பர் பஸ் ட்ரைவர் பிலாக்கெல்லாம் படிக்கமாட்டாரே?”
“அட என்ன சார், உங்க பிலாக்கையெல்லாம் கலைஞரே படிப்பாருன்னு (?) கேள்விப்பட்டிருக்கேன். இதுமாதிரி நீங்கள்லாம் எழுதினீங்கன்னா உடனே அரசு அதிகாரிங்கள்லாம் நடவடிக்கை எடுப்பாங்களே?”
“தோழா. நாமல்லாம் சமூகத்தை புரட்டிப் போடவெல்லாம் முடியாதுங்க. சமூகம் எப்பவும் ஒருக்களிச்சு தான் படுத்துக்கிட்டிருக்கும். அதுவா புரண்டு படுத்தாதான் உண்டு”
“என்ன சார் இப்படி சொல்றீங்க? எழுத்தாளர்கள் நினைச்சா எது வேணும்னாலும் பண்ண முடியும் சார்! பிரெஞ்சுப் புரட்சி எப்படி நடந்தது?”
“இது இந்தியாவாச்சே? அதுவுமில்லாம நானெல்லாம் வால்டரோ, ரூசோவோ கிடையாது!”
நண்பர் ஒத்துக்கொள்ளவில்லை, தொடர்ந்து அடம்பிடித்தார். சரி இனி அன்றாட மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளை எழுதறேன் என்று வாக்கு கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆனேன். இதோ 28ஆம் நம்பர் பஸ் மகாராணி ஸ்டாப்பிங்கில் நிற்பதில்லை என்று எழுதிவிட்டேன். ஏதாவது புரட்சி ஏற்படுகிறதா என்று பார்ப்போம்.
இன்னும் கூட எங்களையெல்லாம் இவங்க நம்பிக்கிட்டிருக்காங்களே? :-)
வகை
அனுபவம்,
கட்டுரை,
மசாலா மிக்ஸ்
29 ஆகஸ்ட், 2009
QUICK GUN முருகன்!
QUICK GUN முருகன் ஒரு மாட்டுப்பையன். அதாவது கவ்பாய். க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டை அப்பட்டமாக, அபத்தமாக காப்பி அடிப்பவன். அவனுடைய செயினில் தொங்கிக் கொண்டிருக்கும் லாக்கெட்டுக்குள்ளிருந்து, முருகனின் காதலி திட்டிக்கொண்டே இருக்கிறாள். ரைஸ்ப்ளேட் ரெட்டி என்ற மொக்கை வில்லனோடு கேணைத்தனமாக மோதிக் கொண்டிருப்பது முருகனின் வாடிக்கை. மேங்கோ டாலி என்ற குஜால் ஃபிகரும் முருகனை பிராக்கெட் போட முயற்சிக்கிறாள். ரைஸ் பிளேட் ரெட்டியிடம் வித்தியாசமான அடியாட்கள் உண்டு. கன்பவுடர் என்பவன் முருகனை மாதிரியே இன்னொரு முரட்டு கவ்பாய். ரவுடி, எம்.பி.ஏ, என்ற நவீன அடியாளும் ரைஸ்பிளேட் ரெட்டிக்காக உழைக்கிறான்.
முதல் பத்தியை படித்ததுமே குயிக்கன் முருகன் ரொம்ப சுவாரஸ்யமானவன் என்று நீங்கள் நினைத்துவிடலாம். சுவாரஸ்யமான் தீம் கிடைத்தும் ரொம்ப மொக்கையான பிரசண்டேஷனை தான் இயக்குனர் சஷாங்காகோஸால் தரமுடிந்திருக்கிறது. உடைகள், செட்டிங், கிராபிக்ஸ் எல்லாமே உலகத்தரம் என்று ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். ஆனால் தொழில்நுட்பத்தில் காட்டிய கவனத்தை உள்ளடக்கத்தில் காட்டத் தவறியதால் குயிக்கன் முருகன் அந்தோ பரிதாபமாகி விட்டிருக்கிறார்.
ஷாருக்கின் ஓம் சாந்தி ஓம் பார்த்திருப்பீர்கள். ஒரு போலி படப்பிடிப்புக் காட்சியில் நம்ம ரஜினிகாந்தை நக்கலடித்து கவ்பாயாக தூள் கிளப்பியிருப்பார் ஷாருக். அக்காட்சி குயிக்கன் இயக்குனருக்கு ஒரு முழுநீளப்படத்தை உருவாக்க இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கலாம். நன்கு கவனிக்கவும். ஓம் சாந்தி ஓமில் பரோடி செய்யப்பட்டது நம்ம சவுத் இண்டியன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். குயிக்கன்னிலோ க்ளிண்டன் ஈஸ்ட்வுட்டை பரோடி செய்ய முயன்றிருக்கிறார்கள். நம்ம ஊரு ஆட்கள் லட்சத்தில் ஒருவர் கூட ஈஸ்ட்வுட் படங்களைப் பார்த்திருக்க மாட்டார்கள். இதனாலேயே நம்ம படம் என்ற நேட்டிவிட்டி மிஸ்ஸிங் ஆகிறது. லுங்கி கட்டிக்கொண்டு தப்பாங்கூத்துதான் ஆடவேண்டும். பரதநாட்டியம் ஆடினால், செல்லாது.. செல்லாது..
டாக்டர் ராஜேந்திரபிரசாத் மிகச்சிறந்த நடிகர். காமெடி அனாவசியமாக முகபாவங்களில் எப்போதுமே தொக்கி நிற்கிறது. நடையும், உடையும், நடிப்பும் அபாரம். நீண்டநாள் கழித்து ரம்பா. அறிமுகப்பாடலில் இன்னமும் அவரது தொடை, பதிமூன்று ஆண்டுகள் கழித்தும் அதே பழைய வனப்போடு, கட்டுக்குலையாமல் இருப்பதை உணர்ந்து தமிழர்கள் உவகை அடைகிறார்கள். இரண்டு மூன்று காட்சிகளில் வெளிப்படும் அவரது திறந்த முதுகு பரந்த புல்வெளி மாதிரி மனசுக்கு மகிழ்ச்சி தருகிறது. பார்பீ பொம்மை மாதிரி அழகோ அழகாக இருக்கிறார் ரம்பா. ரைஸ்ப்ளேட் ரெட்டி நாசர் கெட்டப்புகளில் அசத்துகிறார். அவரே டப்பிங் கொடுக்காதது பெரிய மைனஸ் பாயிண்ட். கன்பவுடர் சண்முகராஜனுக்கு இன்னும் சில காட்சிகள் எக்ஸ்ட்ராவாக கொடுத்திருக்கலாம்.
படத்தின் இரண்டு பாடல்களும் சூப்பரோ சூப்பர். படமாக்கிய விதமும் அட்டகாசம். எல்லாமே இருந்தும் நல்ல கதையோ, திரைக்கதையோ அமையாததால், படக்குழுவினரின் உழைப்பு பீருக்கு தண்ணீர் மிக்ஸ் பண்ணி ஊற்றியது மாதிரி ஆகிவிடுகிறது. இந்த கேரக்டர்களை சிம்புதேவனிடம் தந்திருந்தால் அடி பின்னியிருப்பார். அடுத்து அவர் இயக்கும் ‘இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம்’ கவ்பாய் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்யும் என்று நம்பலாம்.
இப்படம் லண்டன் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் படவிழாக்களில் திரையிடப்பட்டிருக்கிறதாம். ஒருவேளை ஆங்கிலத்தில் பார்த்தால் பக்காவாக இருக்குமோ என்னவோ. தமிழ் டப்பிங் படுமோசம். இந்தி விளம்பரப் படங்களை தமிழில் டப்புவார்களே அதுபோல த்ராபையாக வந்திருக்கிறது. வழக்கமாக ஆங்கிலப்படங்களை டப்படிக்கும் நம் ஆட்களிடமே கொடுத்திருந்தால் தூள் கிளப்பியிருப்பார்கள்.
குயிக்கன் முருகன் - சிக்கன் க்ரேவியோடு தரப்பட வேண்டிய தலப்பாக்கட்டு பிரியாணிக்குப் பதிலாக தயிர்சாதமும், வடுமாங்காயும் பரிமாறியிருக்கிறார்கள்!
28 ஆகஸ்ட், 2009
முதல் பாவம்!
ஏவாளுக்கு சஸ்பென்ஸ் தாங்கமுடியவில்லை. அந்த மரத்திலிருந்து மட்டும் ஏன் கனிகளை பறித்து சாப்பிடக்கூடாது என்று கடவுள் சொல்லி இருக்கிறார். மற்ற மரங்களை ஒப்பிடும்போது அந்த மரத்தில் தானே கனிகள் அதிகமாக காய்க்கின்றன. நல்ல சிகப்பில் பெரிய பெரிய கனிகளை கண்டதுமே சாப்பிட அவளுக்கு நாவூறுகிறது. ஆனாலும் கடவுளின் எச்சரிக்கை காதில் ரீங்காரமாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
“உங்களுக்காக நான் படைத்த இந்த உலகில் நீங்கள் எங்கும் போகலாம், எதையும் சாப்பிடலாம். ஆனால் அதோ அந்த ஆப்பிள் மரத்தின் கனிகளை மட்டும் பறித்துவிடக்கூடாது. அதை பறித்து உண்டால் புனித உயிரிகளாய் வாழும் நீங்கள் சராசரி மனிதர்களாகி விடுவீர்கள். மனித உயிரிக்கு என்றிருக்கும் சில உணர்வுகள் உங்களுக்கு ஏற்பட்டு விடும். அது நல்லதல்ல, மீண்டும் சொல்கிறேன். அந்த மரத்து கனிகளை மட்டும் எடுத்து உண்ணாதீர்கள்”
கடவுள் சொன்னதில் 'சராசரி மனிதர்' என்ற வார்த்தைக்கு மட்டும் ஏவாளுக்கு இன்னமும் அர்த்தம் புரியவில்லை. ஆதாமுக்கு இதுகுறித்த எந்த பிரக்ஞையும் இல்லை. கடவுள் என்ன சொன்னாலும் அதை வேதவாக்காக எடுத்துக் கொள்கிறான். யோசனையுடன் நடந்தாள் ஏவாள்.
“ஏவாள். உங்களை நீங்களே எவ்வளவு காலத்துக்கு ஏமாற்றிக் கொள்ளப் போகிறீர்கள்?” புதரிலிருந்து குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தாள் ஆளில்லை ஒரு அரவம் மட்டும் புதருக்குள்ளிருந்து வெளிவந்தது.
“நீ எந்த வகையிலான உயிரி? இதுவரை உன்னை பார்த்ததில்லையே?”
“என் பெயர் சாத்தான். கடவுளுக்கு நிகரான சக்தி படைத்தவன்”
“அப்படியா? வணக்கம். உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி. ஆதாமும் உன்னை சந்தித்தால் மகிழ்ச்சியடைவான்!”
“ஒரு நிமிடம். ஆதாம் ஒரு முட்டாள், உன்னைப்போல அவன் புத்திசாலி இல்லை. நான் சொல்லுவதை உன்னால் மட்டுமே புரிந்துகொள்ள இயலும்!”
ஆதாமை முட்டாள் என்றதுமே ஏவாளுக்கு கொஞ்சம் கூடுதல் மகிழ்ச்சி ஏற்பட்டது. “சரி சொல். என்ன சொல்லப்போகிறாய்?”
“ஆப்பிள் மரத்தில் இருந்து கனிகளை பறித்து உண்ணக்கூடாது என்று கடவுள் சொன்னானில்லையா? அது ஏனென்று தெரியுமா?”
“தெரியாது!”
“இப்போது நீங்கள் கடவுளின் அடிமையாக இருக்கிறீர்கள். அந்த கனியை உண்டால் என்னைப் போல நீங்களும் சுதந்திர உயிர்களாக பரிமாணம் பெற்றுவிடுவீர்கள். உங்களுக்கு வெட்கம், கோபம், சூடு, சொரணை என்று எல்லா உணர்ச்சிகளும் வந்துவிடும். நீங்களும் கடவுளுக்கும், எனக்கும் இணையான சக்தி பெற்றுவிடுவீர்கள்!”
“அப்படியா? நீங்கள் சொன்ன உணர்வுகள் இல்லாமலேயே வாழ்வது சாத்தியமில்லையா?”
“சாத்தியமில்லை. இப்படியே எவ்வளவு நாட்களுக்கு நீயும், ஆதாமும் செக்குமாடு மாதிரி சுற்றிக் கொண்டிருக்கப் போகிறீர்கள்? ஆதாமை காதலிக்கும் எண்ணமே உனக்கு இல்லையா?”
”காதலா? அப்படியென்றால்?”
”அண்டத்தில் இருக்கும் உணர்வுகளிலேயே புனிதமான உணர்வு. இது கொடுக்கும் மகிழ்ச்சிக்கு இணையான மகிழ்ச்சியை யாராலும் தர இயலாது”
“காதல் உணர்வை அடைய நானென்ன செய்யவேண்டும்?”
“அந்த மரத்திலிருந்து ஆப்பிள் கனியை பறித்து உண்ணவேண்டும்”
ஏற்கனவே ஏவாளுக்கு அந்த கனியை உண்டால் என்ன என்ற எண்ணம் இருந்தது. அரவத்துடன் பேசிய பின்னர் காதல் உணர்வை அடையவேண்டுமென்ற ஆவலும் அதிகரித்தது. அம்மரத்தின் கனிகளை பறித்து உண்ண ஆதாமை வற்புறுத்தினாள்.
“வேண்டாம் ஏவாள். கடவுள் தான் நம்மை படைத்தார். அவர் அறிவுரையை நாம் பின்பற்ற வேண்டும்”
“கடவுள் நம்மை அவர் விளையாடும் பொம்மைகளாக தான் படைத்திருக்கிறார். காதல் உணர்வு உனக்கு வேண்டாமா ஆதாம்!”
“காதல் உணர்வா? அப்படியென்றால்?”
“கனியை பறித்து தின்போம். அதன் பின்னர் புரியும்!”
அரைகுறை மனதோடு ஆதாம் சம்மதித்தான். ஒரு கனியை பறித்து ஏவாளிடம் தந்தான். அவள் பாதி கடித்து தந்ததுமே இவன் மீதியை கடித்தான். உடனடியாக அவர்களுக்கு காதல் உணர்வு வரவில்லை. இதுவரை ஏவாளை சக உயிரியாக மட்டுமே பார்த்த ஆதாம் அவளை பெண்ணாக கண்டான். அவள் எதிரில் தான் ஆடையில்லாமல் இருப்பது குறித்து வெட்கம் கொண்டான். இதே நிலைதான் ஏவாளுக்கும், ஆதாமை விட அதிகமாய் வெட்கப்பட்டாள்.
ஆதாம் சில ஆப்பிள் இலைகளை பறித்து ஏவாளிடம் தந்தான், தானும் சில இலைகளை பறித்துக் கொண்டான். தங்களது அந்தரங்கப் பகுதிகளை ஆப்பிள் இலைகளால் மறைத்துக் கொண்டார்கள் இருவரும். உலகின் முதல் ஜட்டி ஆப்பிள் இலைகளால் உருவானது.
தியாகம்?
“ஏன் அந்த தாத்தா வித்தியாசமா டிரெஸ் பண்ணியிருக்காரு?” டிவியில் ஏதோ செய்திகளுக்கு இடையில் காட்டப்பட்ட அந்த தேசத்தலைவரை பார்த்ததும் கேள்வி கேட்டான் நவீனன். பத்து வயது தான் ஆகிறது. பதினாறு வயதுக்கான அறிவு அவனுக்கு. கண்டது, கேட்டது எதையுமே கேள்விக்குள்ளாக்குவான்.
“அது ஒரு பெரிய கதை நவீனா!” மஜூம்தார் பதிலளித்தார். சமகால புரட்சி தமிழ் எழுத்துக்களை வாசித்தவர்கள் யாரும் மஜூம்தாரை புறக்கணிக்க முடியாது. மிகப்பிரபலமான மாற்று சிந்தனை எழுத்தாளர்.
“கதை கேட்பது எனக்கு பிடிக்கும் என்பது உனக்கு தெரியாதா? சொல்லு.. சொல்லு!” பேரன் கேட்கும் எல்லா கேள்விகளுக்குமே விடையளிப்பது மஜூம்தாருக்கு பிடித்தமான விஷயம். எழுதிக் கொண்டிருந்தவர் பேனாவை மூடிவிட்டு, கண்ணாடியை சரிசெய்து கொண்டு சொல்ல ஆரம்பித்தார்.
“நம் நாடு சுதந்திரம் வாங்குவதற்கு 25 ஆண்டுகள் முன்பாக நடந்த விஷயம் அது. நீ பார்த்த தேசத்தலைவர் அப்போதெல்லாம் முழுமையான உடையை தான் அணிந்து கொண்டிருந்தார். ஒருமுறை அவர் நம்முடைய மதுரைக்கு வந்திருந்தார். மதுரை தெரியுமில்லையா உனக்கு? ஒரு கோயிலுக்கு கூட கூட்டிச் சென்றிருக்கிறேனே?”
“தெரியும். மேலே சொல்லு!”
“மதுரையில் அப்போது நிறைய பேர் இப்போது நீ பார்த்தாயே அந்த தலைவரை போல தான் உடையணிந்திருந்தார்கள். அவர்களை பார்த்ததுமே அவருக்கு மனம் உடைந்துப் போனது. எனது நாட்டில் உடலை முழுமையாக மறைக்க உடை கூட இல்லாமல் மனிதர்கள் இருக்கிறார்களே? என்று நொந்துப் போனவர், நானும் இனி இவர்களை போல தான் உடையணியப் போகிறேன் என்று தனது வழக்கமான உடைகளை துறந்தார்”
“சாகும் வரை இப்படித்தான் உடையணிந்திருந்தாரா?”
“ஆம். அரசியல் பேச்சுவார்த்தை நிமித்தமாக அயல்நாடுகளுக்கு சென்றபோது கூட இதே உடையோடு தான் சென்றார். எப்பேர்ப்பட்ட தியாகம் பார்!”
“இதிலென்ன தியாகம் இருக்கிறது? அவரது உடையை அவர் துறந்து விட்டதால் நாட்டில் எல்லோருக்கும் முழுமையான உடை கிடைத்து விட்டதா என்ன? அவர் உடையை துறந்து எண்பத்தி ஐந்து ஆண்டுகள் கழித்தும் நிலைமையில் பெரிய மாற்றம் எதுவும் வந்துவிடவில்லையே? சென்ற வாரம் கூட ஒரு கட்டைவண்டி கிழவர் வெறும் கோவணத்துடன் வண்டி இழுத்துச் சென்றதை நீயும் தானே பார்த்தாய்?”
“மாற்றம் வந்துவிடவில்லை என்று ஒப்புக் கொள்கிறேன். ஆனாலும் அவரது தியாகம் மெச்சக்கூடியது தானே? இந்த நாட்டின் கடைக்கோடி குடிமகனின் நிலையை தன் உடையில் கூட அவர் பிரதிநிதித்துவப் படுத்தினாரே?”
“ரெட்டைமலை சீனிவாசன் என்பவரை பற்றி உங்களுக்கு தெரியும் தானே? இதே தலைவர் சென்ற அயல்நாடுகளுக்கு அவர் கோட்டும், சூட்டும் அணிந்து சென்றாரே? அம்பேத்கர் என்றதுமே நீலக்கலர் கோட், சிகப்பு கலர் டை அணிந்த உருவம் தானே நமக்கு நினைவு வருகிறது? இவர்களெல்லாம் அவர்கள் சார்ந்த மக்களை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை என்கிறீர்களா?”
“உன்னிடம் பேசி என்னால் கூட ஜெயிக்க முடியாது. அந்த தலைவர் இந்த உடையில் இருந்ததில் உனக்கு என்ன பிரச்சினை?”
“எனக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. நல்லவேளையாக நான் இப்போது இருக்கும் கோலத்தை கண்டு எந்தத் தலைவராவது உணர்ச்சிவசப்பட்டு விடக்கூடாது என்று விரும்புகிறேன்”
நவீனன் அப்போது ஜட்டி மட்டுமே அணிந்திருந்தான். ஒரு நாளைக்கு அறுபது முறை மின்சாரம் தடைபடும் நாட்டில் அவனுக்கு இந்த உடையோடு வீட்டில் இருப்பதுதான் வசதியாக இருக்கிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)