கமல்ஹாசனின் 50 ஆண்டுக் கால சினிமா வாழ்க்கையைப் பற்றி யோசிக்கும் போது பலவிதமான கருத்துக்கள் மனதில் அலை மோதுகின்றன. தமிழ்நாட்டில் வாழும் மத்திய வயதை எட்டியிருக்கும் ஒருவருக்கு அவர் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் தமிழ் சினிமா என்பது அவரது வாழ்வில் ஒரு பிரிக்க முடியாத அங்கமாகவே இணைந்திருக்கும். அதைப் போலவே கமல்ஹாசனும் அவரது வாழ்வில் தவிர்க்க முடியாதவராகிறார். களத்தூர் கண்ணம்மாவின் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று துவங்கி, குணாவில் அபிராமி அபிராமி என்று உருகி, ஆளவந்தானில் மனிதன் பாதி மிருகம் பாதி என்று மிரட்டி, கடைசியில் தசாவதாரத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் முகமூடியை அணிந்து கொண்டது வரை நீளும் ஒரு நீண்ட வரலாறு அது.
ஆனால் இப்படிப்பட்ட உணர்வுபூர்வமான நாஸ்டால்ஜிக் நினைவுகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு, கமல்ஹாசனின் 50 ஆண்டு சினிமா வாழ்வினால் தமிழ் சினிமாவில் நிகழ்ந்த மாற்றங்கள் யாவை என்று தர்க்கரீதியாக யோசித்துப் பார்ப்போம். அவருடைய மகாநதியிலிருந்து தசாவதாரம் வரை ஒவ்வொரு படத்தைக் குறித்தும் பாராட்டுதலாகவும் சில சமயங்களில் எதிர்மறையாகவும் தொடர்ந்து வினையாற்றி வந்திருக்கிறேன். பாராட்டி எழுதியதே அதிகம்.
அந்த அளவுக்குத் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமையாகத் திகழ்பவர் கமல்ஹாசன். ஆனால் அவருடைய இவ்வளவு நீண்ட சினிமா வாழ்வினால் தமிழ் சினிமாவில் நிகழ்ந்த மாற்றம் என்ன என்ற கோணத்திலிருந்து யோசித்துப் பார்த்தால் மிகுந்த ஏமாற்றமே மிஞ்சுகிறது.
கமலுக்கு நேர் எதிர் உதாரணமாக, இயக்குநர் ஷங்கரை எடுத்துக் கொள்வோம். இவருடைய ஒரு படத்தைக் கூட நான் ரசித்ததில்லை. இவரது இயக்கத்தில் வந்த பாய்ஸ், அந்நியன், சிவாஜி போன்ற படங்களை நார்நாராய்க் கிழித்துத் தோரணமே கட்டியிருக்கிறேன். ஆனால் இதே ஷங்கர் வேறோர் விஷயத்திலும் ஈடுபட்டார். புதிய இயக்குனர்களை வைத்து குறைந்த பட்ஜெட் படங்களைத் தயாரித்தார். அந்தப் படங்கள்தான் தமிழ் சினிமாவுக்கு இதுவரை இருந்த அடையாளத்தை முற்றிலுமாக மாற்றியமைத்தது.
இது நடந்தது ஐம்பது ஆண்டுகளில் அல்ல; வெறும் ஆறே ஆண்டுகளில் ஆறே படங்களின் மூலம் இந்த மாற்றம் நடந்தது. இப்போது ஷங்கர் என்ற இயக்குனரையே பிடிக்காத நான் அவருடைய தயாரிப்பில் வரும் படங்களை ஓடிப் போய் பார்க்கிறேன். சமீபத்தில் கூட ஈரம் என்ற படத்தை முதல் நாள் முதல் காட்சியில் சென்று பார்த்தேன். தமிழில் அப்படி ஒரு படத்தை இதுவரை பார்த்ததில்லை. அந்த அளவுக்குப் புதிதாக இருந்தது ஈரம்.
ஷங்கர் மட்டுமல்ல; பிரகாஷ் ராஜின் தயாரிப்பில் வந்த மொழி போன்ற படங்களும் தமிழில் மாற்று சினிமாவுக்கான அசலான முயற்சிகளாக இருந்தன. அதேபோல் சசிகுமார் தயாரிப்பில் வந்த சுப்ரமணியபுரம், பசங்க என்ற இரண்டு படங்களும் பெரிதும் சிலாகிக்கப்பட்டவை.
இப்படியாக பலரும் மாற்று சினிமாவுக்கான முயற்சியில் தங்கள் முத்திரையைப் பதித்துக் கொண்டிருக்கும் போது, அபாரமான நடிப்பாற்றல் கொண்ட, உலக சினிமாவும், இலக்கியமும் தெரிந்த கமலால் ஏன் இப்படி ஒரு படத்தைக் கூடத் தர முடியவில்லை? கமலின் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது என்னவென்று பார்த்தால், சத்யராஜ் நடித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற மொக்கைப் படம்.
ஷங்கர் தன்னை புத்திஜீவி என்று சொல்லிக் கொண்டதில்லை. ஆனால் இப்படிப்பட்ட மாற்று சினிமாவுக்கு தமிழில் ஒரு தேவை இருக்கிறது என்ற உண்மையைப் புரிந்து கொள்ளும் புத்திசாலித்தனம் அவரிடம் இருந்தது. இந்தப் படங்களை மெகா பட்ஜெட் படங்களை இயக்கும் ஷங்கர் இயக்கவில்லை. இதுவரை பெயரே கேள்விப்பட்டு அறியாத புதிய இளைஞர்களைக் கொண்டு இயக்க வைத்தார். இதுதான் இப்போது கமல் செய்ய வேண்டிய வேலை என்று நினைக்கிறேன்.
கமல்ஹாசனின் முக்கியமான எந்தப் படத்தை எடுத்துக் கொண்டாலும் அதன் இயக்குனர் பெயர் வேறாக இருக்கும். ஆனாலும் அது கிட்டத்தட்ட கமலின் இயக்கத்தில் வந்த படம்தான் என்பது தமிழ் சினிமாவில் அனைவருக்கும் தெரியும். இந்தக் குறுக்கீடு இல்லாமல் இருந்திருந்தால் ஒருவேளை கமலின் பயணம் வேறு மாதிரி இருந்திருக்கலாம். மேலும், இதை குறுக்கீடு என்ற சாதாரண சொல்லால் குறுக்கி விட முடியாது. படத்தின் ஒட்டு மொத்த போக்கையே மாற்றி விட்டு, இயக்குனர் என்ற இடத்தில் யாரோ ஒருவரின் பெயரைப் போட்டு விட்டால் அந்தப் பொறுப்பிலிருந்து கமல் தப்பித்துக் கொள்ள முடியுமா என்ன?
கமல் படங்களின் முக்கியமான பிரச்சினை, அவருடைய படங்களில் அவர் தன்னை முன்னிலைப் படுத்துவதுதான் என்று தோன்றுகிறது. வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். என்ற நல்ல பொழுதுபோக்குப் படத்தை எடுத்துக் கொண்டால் அதன் இந்தி மூலமான முன்னாபாய் எம்.பி.பி.எஸ்ஸில் அதன் ஹீரோவான சஞ்சய் தத் அவருடைய பாத்திரமான முன்னாபாயாகத்தான் நடித்திருப்பார். ஆனால் வசூல்ராஜாவில் நடிகர் கமல்ஹாசன்தான் தெரிகிறாரே தவிர ராஜாராமன் என்ற பாத்திரம் அல்ல. அதில் வரும் பாடலையே எடுத்துக் கொள்வோம். ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவா; வேட்டியைப் போட்டுத் தாண்டவா. இந்தப் பாடல் ஆழ்வார்ப்பேட்டை என்ற பகுதியில் வசிக்கும் கமல்ஹாசனைக் குறிக்கிறதே தவிர அந்த ராஜாராமன் என்ற பாத்திரத்தை அல்ல.
இது கமலின் ரசிகர்களை திருப்திப்படுத்தி, படம் ஓடுவதற்காகக் கையாளப்படும் யுத்தி. இந்த யுத்தி சினிமாவுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் கமலுக்கு எதற்காக? ரசிகனுக்காக கலைஞனா; கலைஞனுக்காக ரசிகனா? உலக நாயகன் என்று சொல்லி கமலைத் தன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கும் ரசிகனுக்கு உலக சினிமா தெரியாது. ஆனால் கமல் அதில் மூழ்கித் திளைப்பவர். அப்படியானால், உலக சினிமா தெரிந்த கமல் எதற்காக பாமர ரசனைக்காக படம் எடுக்க வேண்டும்? கமல் ஒன்றும் வாடிக்கையாளருக்கு ’ என்ன வேண்டும்?‘ என்று கேட்டு கொடுக்கும் பரோட்டாக் கடை மாஸ்டர் அல்லவே?
நான் ஒன்றும் பொழுதுபோக்குப் படங்களுக்கு எதிரானவன் அல்ல. ஆனால் எந்தப் படமாக இருந்தாலும் அதில் கமல் தன்னையும் தன் ஆளுமையையும் முன்னிறுத்திக் கொள்வதால் படத்தின் நம்பகத்தன்மை குலைந்து விடுகிறது. அதாவது, கமல் தன்னுடைய படங்களில் தனக்கு ஒரு நாயகத் தன்மையை உருவாக்குகிறார். கமலே எழுதி, இயக்கி, தயாரித்த விருமாண்டியில் இதுதான் நடந்தது. கமலின் தன்முனைப்பே பெரிதாகத் துறுத்திக் கொண்டிருந்ததால் படம் தோல்வியுற்றது. ஆனால் அதே கதை அமீரிடம் பருத்தி வீரன் என்ற கலாசிருஷ்டியாகப் பரிணமித்தது.
இப்போது வெளிவந்துள்ள உன்னைப் போல் ஒருவனை எடுத்துக் கொள்வோம். அதன் இந்தி மூலமான ’ ஒரு புதன்கிழமை ’ யில் வரும் நஸ்ருத்தீன் ஷா ஒரு சாதாரண நடுத்தர வர்க்கக் குடிமகனாக வருகிறார். அந்த வேடத்தில் நடித்திருக்கும் கமலோ அப்படிப்பட்ட நடுத்தர வர்க்க மனிதனாகத் தெரியவில்லை. போலீஸ் கமிஷனருடன் அமெரிக்க ஆங்கிலத்தில் பேசுகிறார் கமல். காரணம், படத்தில் பேசுவது கதாபாத்திரம் அல்ல; கமல்ஹாசன். இந்த யுத்தியெல்லாம் ரஜினிக்கோ விஜய்காந்துக்கோ தேவையாக இருக்கலாம். கமலுக்கு எதற்கு?
மேலும், கமல் தமிழில் மொழியாக்கம் செய்யத் தேர்ந்தெடுக்கும் இந்திப் படங்களின் அரசியலே மிகவும் விவாதத்திற்குரியது. இந்தியாவில் ராணுவ ஆட்சி வந்தால் எல்லாம் சரியாகி விடும், பிரிட்டிஷ்காரன் காலத்தில் இந்தியா நன்றாக இருந்தது என்றெல்லாம் தமது அரசியல் ஞானத்தை வெளிப்படுத்தும் நடுத்தர வர்க்க மனோபாவத்தைப் பிரதிபலிக்கும் படங்களையே அவர் மொழியாக்கம் செய்யத் தேர்ந்தெடுப்பது ஏன் என்று புரியவில்லை.
உதாரணமாக, அப்பாவி மக்களைக் கொல்லும் தீவிரவாதிகளையெல்லாம் விசாரணையில்லாமல் தீர்த்துக் கட்டி விட்டால் இந்தியா அமைதிப் பூங்காவாகி விடும் என்ற நடுத்தர வர்க்கப் புரிதலே ’ ஒரு புதன்கிழமை ’ இந்திப் படத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியல். மற்றபடி, இளம் வயதில் தங்கள் உயிரையே மாய்த்துக் கொண்டு போராளிகளாக மாறும் ஆயிரக் கணக்கான இளைஞர்கள் உருவாவது ஏன் என்பது பற்றிய எந்தச் சிந்தனையும் அந்தப் படத்தில் இல்லை. அது ஒரு நல்ல த்ரில்லர் என்பதில் எனக்கு மறுப்பு இல்லை. ஆனால் அதன் அரசியலில் மிகப் பெரிய அபாயம் உள்ளது. அதோடு, அப்படிப்பட்ட தீவிரவாதிகள் பிரச்சினையும் தமிழ்நாட்டில் இல்லை. தமிழ்நாடு என்ற பிரதேசத்தின் பிரச்சினைகள் வேறு. அந்தப் பிரச்சினைகளை கமல் எதிர்கொள்ள வேண்டுமானால் ஒன்று, அவர் ஒரு தீவிரமான இயக்குனரிடம் தன்னை முழுமையாக ஒப்புக் கொடுக்க வேண்டும். அல்லது, மாற்று சினிமாவை நோக்கிய கனவுகளோடு வரும் இளைஞர் கூட்டத்தைக் கொண்டு குறைந்த செலவிலான புதிய படங்களைத் தயாரிக்க வேண்டும். இதைத் தவிர இதுவரை சென்றிராத வேறு வழிகளிலும் யோசிக்கலாம்.
நன்றி: இந்தியா டுடே