27 செப்டம்பர், 2009
கமல் பற்றி சாருநிவேதிதா!
கமல்ஹாசனின் 50 ஆண்டுக் கால சினிமா வாழ்க்கையைப் பற்றி யோசிக்கும் போது பலவிதமான கருத்துக்கள் மனதில் அலை மோதுகின்றன. தமிழ்நாட்டில் வாழும் மத்திய வயதை எட்டியிருக்கும் ஒருவருக்கு அவர் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் தமிழ் சினிமா என்பது அவரது வாழ்வில் ஒரு பிரிக்க முடியாத அங்கமாகவே இணைந்திருக்கும். அதைப் போலவே கமல்ஹாசனும் அவரது வாழ்வில் தவிர்க்க முடியாதவராகிறார். களத்தூர் கண்ணம்மாவின் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று துவங்கி, குணாவில் அபிராமி அபிராமி என்று உருகி, ஆளவந்தானில் மனிதன் பாதி மிருகம் பாதி என்று மிரட்டி, கடைசியில் தசாவதாரத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் முகமூடியை அணிந்து கொண்டது வரை நீளும் ஒரு நீண்ட வரலாறு அது.
ஆனால் இப்படிப்பட்ட உணர்வுபூர்வமான நாஸ்டால்ஜிக் நினைவுகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு, கமல்ஹாசனின் 50 ஆண்டு சினிமா வாழ்வினால் தமிழ் சினிமாவில் நிகழ்ந்த மாற்றங்கள் யாவை என்று தர்க்கரீதியாக யோசித்துப் பார்ப்போம். அவருடைய மகாநதியிலிருந்து தசாவதாரம் வரை ஒவ்வொரு படத்தைக் குறித்தும் பாராட்டுதலாகவும் சில சமயங்களில் எதிர்மறையாகவும் தொடர்ந்து வினையாற்றி வந்திருக்கிறேன். பாராட்டி எழுதியதே அதிகம்.
அந்த அளவுக்குத் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமையாகத் திகழ்பவர் கமல்ஹாசன். ஆனால் அவருடைய இவ்வளவு நீண்ட சினிமா வாழ்வினால் தமிழ் சினிமாவில் நிகழ்ந்த மாற்றம் என்ன என்ற கோணத்திலிருந்து யோசித்துப் பார்த்தால் மிகுந்த ஏமாற்றமே மிஞ்சுகிறது.
கமலுக்கு நேர் எதிர் உதாரணமாக, இயக்குநர் ஷங்கரை எடுத்துக் கொள்வோம். இவருடைய ஒரு படத்தைக் கூட நான் ரசித்ததில்லை. இவரது இயக்கத்தில் வந்த பாய்ஸ், அந்நியன், சிவாஜி போன்ற படங்களை நார்நாராய்க் கிழித்துத் தோரணமே கட்டியிருக்கிறேன். ஆனால் இதே ஷங்கர் வேறோர் விஷயத்திலும் ஈடுபட்டார். புதிய இயக்குனர்களை வைத்து குறைந்த பட்ஜெட் படங்களைத் தயாரித்தார். அந்தப் படங்கள்தான் தமிழ் சினிமாவுக்கு இதுவரை இருந்த அடையாளத்தை முற்றிலுமாக மாற்றியமைத்தது.
இது நடந்தது ஐம்பது ஆண்டுகளில் அல்ல; வெறும் ஆறே ஆண்டுகளில் ஆறே படங்களின் மூலம் இந்த மாற்றம் நடந்தது. இப்போது ஷங்கர் என்ற இயக்குனரையே பிடிக்காத நான் அவருடைய தயாரிப்பில் வரும் படங்களை ஓடிப் போய் பார்க்கிறேன். சமீபத்தில் கூட ஈரம் என்ற படத்தை முதல் நாள் முதல் காட்சியில் சென்று பார்த்தேன். தமிழில் அப்படி ஒரு படத்தை இதுவரை பார்த்ததில்லை. அந்த அளவுக்குப் புதிதாக இருந்தது ஈரம்.
ஷங்கர் மட்டுமல்ல; பிரகாஷ் ராஜின் தயாரிப்பில் வந்த மொழி போன்ற படங்களும் தமிழில் மாற்று சினிமாவுக்கான அசலான முயற்சிகளாக இருந்தன. அதேபோல் சசிகுமார் தயாரிப்பில் வந்த சுப்ரமணியபுரம், பசங்க என்ற இரண்டு படங்களும் பெரிதும் சிலாகிக்கப்பட்டவை.
இப்படியாக பலரும் மாற்று சினிமாவுக்கான முயற்சியில் தங்கள் முத்திரையைப் பதித்துக் கொண்டிருக்கும் போது, அபாரமான நடிப்பாற்றல் கொண்ட, உலக சினிமாவும், இலக்கியமும் தெரிந்த கமலால் ஏன் இப்படி ஒரு படத்தைக் கூடத் தர முடியவில்லை? கமலின் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது என்னவென்று பார்த்தால், சத்யராஜ் நடித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற மொக்கைப் படம்.
ஷங்கர் தன்னை புத்திஜீவி என்று சொல்லிக் கொண்டதில்லை. ஆனால் இப்படிப்பட்ட மாற்று சினிமாவுக்கு தமிழில் ஒரு தேவை இருக்கிறது என்ற உண்மையைப் புரிந்து கொள்ளும் புத்திசாலித்தனம் அவரிடம் இருந்தது. இந்தப் படங்களை மெகா பட்ஜெட் படங்களை இயக்கும் ஷங்கர் இயக்கவில்லை. இதுவரை பெயரே கேள்விப்பட்டு அறியாத புதிய இளைஞர்களைக் கொண்டு இயக்க வைத்தார். இதுதான் இப்போது கமல் செய்ய வேண்டிய வேலை என்று நினைக்கிறேன்.
கமல்ஹாசனின் முக்கியமான எந்தப் படத்தை எடுத்துக் கொண்டாலும் அதன் இயக்குனர் பெயர் வேறாக இருக்கும். ஆனாலும் அது கிட்டத்தட்ட கமலின் இயக்கத்தில் வந்த படம்தான் என்பது தமிழ் சினிமாவில் அனைவருக்கும் தெரியும். இந்தக் குறுக்கீடு இல்லாமல் இருந்திருந்தால் ஒருவேளை கமலின் பயணம் வேறு மாதிரி இருந்திருக்கலாம். மேலும், இதை குறுக்கீடு என்ற சாதாரண சொல்லால் குறுக்கி விட முடியாது. படத்தின் ஒட்டு மொத்த போக்கையே மாற்றி விட்டு, இயக்குனர் என்ற இடத்தில் யாரோ ஒருவரின் பெயரைப் போட்டு விட்டால் அந்தப் பொறுப்பிலிருந்து கமல் தப்பித்துக் கொள்ள முடியுமா என்ன?
கமல் படங்களின் முக்கியமான பிரச்சினை, அவருடைய படங்களில் அவர் தன்னை முன்னிலைப் படுத்துவதுதான் என்று தோன்றுகிறது. வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். என்ற நல்ல பொழுதுபோக்குப் படத்தை எடுத்துக் கொண்டால் அதன் இந்தி மூலமான முன்னாபாய் எம்.பி.பி.எஸ்ஸில் அதன் ஹீரோவான சஞ்சய் தத் அவருடைய பாத்திரமான முன்னாபாயாகத்தான் நடித்திருப்பார். ஆனால் வசூல்ராஜாவில் நடிகர் கமல்ஹாசன்தான் தெரிகிறாரே தவிர ராஜாராமன் என்ற பாத்திரம் அல்ல. அதில் வரும் பாடலையே எடுத்துக் கொள்வோம். ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவா; வேட்டியைப் போட்டுத் தாண்டவா. இந்தப் பாடல் ஆழ்வார்ப்பேட்டை என்ற பகுதியில் வசிக்கும் கமல்ஹாசனைக் குறிக்கிறதே தவிர அந்த ராஜாராமன் என்ற பாத்திரத்தை அல்ல.
இது கமலின் ரசிகர்களை திருப்திப்படுத்தி, படம் ஓடுவதற்காகக் கையாளப்படும் யுத்தி. இந்த யுத்தி சினிமாவுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் கமலுக்கு எதற்காக? ரசிகனுக்காக கலைஞனா; கலைஞனுக்காக ரசிகனா? உலக நாயகன் என்று சொல்லி கமலைத் தன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கும் ரசிகனுக்கு உலக சினிமா தெரியாது. ஆனால் கமல் அதில் மூழ்கித் திளைப்பவர். அப்படியானால், உலக சினிமா தெரிந்த கமல் எதற்காக பாமர ரசனைக்காக படம் எடுக்க வேண்டும்? கமல் ஒன்றும் வாடிக்கையாளருக்கு ’ என்ன வேண்டும்?‘ என்று கேட்டு கொடுக்கும் பரோட்டாக் கடை மாஸ்டர் அல்லவே?
நான் ஒன்றும் பொழுதுபோக்குப் படங்களுக்கு எதிரானவன் அல்ல. ஆனால் எந்தப் படமாக இருந்தாலும் அதில் கமல் தன்னையும் தன் ஆளுமையையும் முன்னிறுத்திக் கொள்வதால் படத்தின் நம்பகத்தன்மை குலைந்து விடுகிறது. அதாவது, கமல் தன்னுடைய படங்களில் தனக்கு ஒரு நாயகத் தன்மையை உருவாக்குகிறார். கமலே எழுதி, இயக்கி, தயாரித்த விருமாண்டியில் இதுதான் நடந்தது. கமலின் தன்முனைப்பே பெரிதாகத் துறுத்திக் கொண்டிருந்ததால் படம் தோல்வியுற்றது. ஆனால் அதே கதை அமீரிடம் பருத்தி வீரன் என்ற கலாசிருஷ்டியாகப் பரிணமித்தது.
இப்போது வெளிவந்துள்ள உன்னைப் போல் ஒருவனை எடுத்துக் கொள்வோம். அதன் இந்தி மூலமான ’ ஒரு புதன்கிழமை ’ யில் வரும் நஸ்ருத்தீன் ஷா ஒரு சாதாரண நடுத்தர வர்க்கக் குடிமகனாக வருகிறார். அந்த வேடத்தில் நடித்திருக்கும் கமலோ அப்படிப்பட்ட நடுத்தர வர்க்க மனிதனாகத் தெரியவில்லை. போலீஸ் கமிஷனருடன் அமெரிக்க ஆங்கிலத்தில் பேசுகிறார் கமல். காரணம், படத்தில் பேசுவது கதாபாத்திரம் அல்ல; கமல்ஹாசன். இந்த யுத்தியெல்லாம் ரஜினிக்கோ விஜய்காந்துக்கோ தேவையாக இருக்கலாம். கமலுக்கு எதற்கு?
மேலும், கமல் தமிழில் மொழியாக்கம் செய்யத் தேர்ந்தெடுக்கும் இந்திப் படங்களின் அரசியலே மிகவும் விவாதத்திற்குரியது. இந்தியாவில் ராணுவ ஆட்சி வந்தால் எல்லாம் சரியாகி விடும், பிரிட்டிஷ்காரன் காலத்தில் இந்தியா நன்றாக இருந்தது என்றெல்லாம் தமது அரசியல் ஞானத்தை வெளிப்படுத்தும் நடுத்தர வர்க்க மனோபாவத்தைப் பிரதிபலிக்கும் படங்களையே அவர் மொழியாக்கம் செய்யத் தேர்ந்தெடுப்பது ஏன் என்று புரியவில்லை.
உதாரணமாக, அப்பாவி மக்களைக் கொல்லும் தீவிரவாதிகளையெல்லாம் விசாரணையில்லாமல் தீர்த்துக் கட்டி விட்டால் இந்தியா அமைதிப் பூங்காவாகி விடும் என்ற நடுத்தர வர்க்கப் புரிதலே ’ ஒரு புதன்கிழமை ’ இந்திப் படத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியல். மற்றபடி, இளம் வயதில் தங்கள் உயிரையே மாய்த்துக் கொண்டு போராளிகளாக மாறும் ஆயிரக் கணக்கான இளைஞர்கள் உருவாவது ஏன் என்பது பற்றிய எந்தச் சிந்தனையும் அந்தப் படத்தில் இல்லை. அது ஒரு நல்ல த்ரில்லர் என்பதில் எனக்கு மறுப்பு இல்லை. ஆனால் அதன் அரசியலில் மிகப் பெரிய அபாயம் உள்ளது. அதோடு, அப்படிப்பட்ட தீவிரவாதிகள் பிரச்சினையும் தமிழ்நாட்டில் இல்லை. தமிழ்நாடு என்ற பிரதேசத்தின் பிரச்சினைகள் வேறு. அந்தப் பிரச்சினைகளை கமல் எதிர்கொள்ள வேண்டுமானால் ஒன்று, அவர் ஒரு தீவிரமான இயக்குனரிடம் தன்னை முழுமையாக ஒப்புக் கொடுக்க வேண்டும். அல்லது, மாற்று சினிமாவை நோக்கிய கனவுகளோடு வரும் இளைஞர் கூட்டத்தைக் கொண்டு குறைந்த செலவிலான புதிய படங்களைத் தயாரிக்க வேண்டும். இதைத் தவிர இதுவரை சென்றிராத வேறு வழிகளிலும் யோசிக்கலாம்.
நன்றி: இந்தியா டுடே
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Good one!
பதிலளிநீக்குவிபச்சாரிக்கு பிறந்ததால் தன் உடம்பையே அழுக்காக நினைப்பவனின் மனநிலை எப்படி சிதைவுறுகிறது (குணா), குழந்தைகள் செக்ஸ் தொழிலாளிகளாக ஆக்கப்படும் கொடுமையின் ஆணிவேர் எங்கிருக்கிறது(மஹா நதி), சித்தியால் கொடுமைப்படுத்தப்பட்டவனின் மனம் எப்படி உடைகிறது (ஆளவந்தான்), ஜாதி வெறியின் மறுபக்கம்/முடிவு என்ன (தேவர் மகன், விருமாண்டி)...
பதிலளிநீக்குகமலும் நல்ல படங்கள் செய்திருக்கிறார்....ஆனால், கமல்ஹாசனின் ஆளுமையும் வீச்சும் மிகப்பிரமாண்டமானது....அதனால் கதாபாத்திரங்கள் மறைந்து கமல்ஹாசனையே நாம் பார்க்க முடிகிறது....இந்த வீச்சு இல்லாத புதுமுகம் நடித்ததாலேயே பருத்தி வீரனை பருத்தி வீரனாக பார்க்க முடிகிறது....
எம்.ஜி.ஆர், சிவாஜியில் ஆரம்பித்து நாம் கதாநாயகர்களையே பார்த்து பழக்கப்பட்டிருக்கிறோம்...கதாபாத்திரங்களை அல்ல...இது நம் தவறா இல்லை கமல் தவறா??
கமலின் லெகஸி என்பது கமல் பற்றி அதிகம் தெரியாத அடுத்த தலைமுறை வரும்போது தெரியும்....அப்பொழுது நாயகனின் வீச்சும், குணாவின் சிக்கலும் அவர்களால் புரிந்துக் கொள்ளப்படும்...
சாருநிவேதிதாவின் கட்டுரை யோசிக்க வைக்கிறது. சிந்தனைக்குரியது. அழுத்தமான வாதங்களை முன்வைத்திருக்கிறார் சாரு. கமலின் கவனத்துக்கு இது சென்றிருந்தால் மகிழ்ச்சி!
பதிலளிநீக்கு//...அவர் ஒரு தீவிரமான இயக்குனரிடம் தன்னை முழுமையாக ஒப்புக் கொடுக்க வேண்டும்...//
பதிலளிநீக்குஇதுதான் கமல் செய்ய வேண்டியது. உதாரணமாக கமல் இந்த தருணத்தில் அமீர்,பாலா, சசிகுமார் போன்ற இயக்குநர்களிடம் வெறும் நடிகனாக மட்டும் தன்னை ஒப்படைக்க தயாராக இருப்பாரா? இது விடை வராத கேள்வியாகத்தான் இருக்கும். ஆம் என்று இருந்தால் கமல் அவர்களின் திறமை இன்னும் வெளிவரும். ஆனால் அண்மைக்காலமாக வெளிவந்த படங்களில் கமலின் தலையீடு எல்லா இடங்களிலும் நுழைந்திருக்கிறது என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்ளவேண்டும். அண்மையில் அமிதாப் ஒரு இருபதுகளில் இருக்கும் ஒரு இளைஞன் இயக்கும் படங்களில் நடித்தாராம். ஆனால் கமல்?
கமல் சில வட்டங்களில் இருந்து வெளியே வருகின்ற போது இன்னும் தரமான படைப்புக்களை நாங்கள் எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறேன். நன்றி யுவகிருஷ்ணா.
பதிலளிநீக்குCharu should continue writing good articles like this, instead of the rubbish ones of Vimalananda which is similar to the Baba cave stories of JV.
பதிலளிநீக்குவிருமாண்டியை விட பருத்திவீரன் எந்த விதத்தில் நல்ல படம் என்று புரியவில்லை. குறைசொன்னதான் மாற்று கருத்தோ? நல்ல மொக்கை
பதிலளிநீக்குதமிழ் சினிமாவில் பல்துறைகளில் எவரும் தொட முடியாத சாதனைகளைப் படைத்து ,பற்பல முன்னெடுப்புகளுக்கு முன்னோடியாக திகழ்ந்து , தன் நட்சத்திர பலம் கொண்டு தமிழ் சினிமா ரசிகனின் பார்வையை உயர வைப்பதற்கு தன் சொந்த இறக்கங்களை கூட பொருட்படுத்தாமல் செயலாற்றும் ஒரு மாபெரும் கலைஞனின் 50 வருட சாதனை தருணத்தில் அவனை ஒற்றைப் பரிமாணத்தில் மட்டும் நிறுத்தி ,தன் மேதமையை காட்டுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு எழுதபட்ட வழக்கமான சாருவின் அரை குறை மொக்கை கட்டுரை
பதிலளிநீக்குயுவ கிருஷ்ணா விற்கு வணக்கம் ,
பதிலளிநீக்குகமல் பற்றிய இந்த பார்வை சில சதவிகிதம் தான் உண்மை என கூற தோன்றுகிறது ..
கமல் தன்னை முழுமையாக ஒப்படைத்தாலும் சாரு குறிப்பிடும் இயக்குனர்களால் கமலை முழுமையாக
கையாள முடியுமா ? எனபது கேள்விக்குறியே... சாரு ஏன் மணிரத்னம் போன்றவர்களை சேர்க்க வில்லை என்று புரிய வில்லை..
அது போல ஷங்கரையும் கமலயும் ஒரு தராசில் வைத்து பார்ப்பது சரி என தோன்ற வில்லை...
ஒரு படத்திற்கு பத்து கோடி வாங்கும் ஷங்கரும் , எட்டு கோடி வாங்கி அதற்க்கு சரியாக
வருமான வரி கட்டும் கமல் எங்கே...
ராஜ்கமல் எத்தனையோ படங்கள் எடுத்து இருக்கின்றது ..எதுவுமே சராசரி படங்களில் சேர்த்தி இல்லை...
மகளிர் மட்டும்
நள தமயந்தி..
குருதிபுனல்
யாரை கேட்டாலும் சொல்லுவார்கள்... இன்னும் கமல் ஒரு கடனாளி தான்.....
வசூல் ராஜா காலத்தில் சரணிடம் வாங்கிய கடனையே அவர் தசாவதாரம் மூலம்
தான் கொடுத்தார் என்று செய்தி.....
மற்றபடி நீங்கள் எதிர் பார்க்கும் அந்த மாற்றம் கமல் விரைவில் வேறு ஒரு வழியில்
நடத்துவார் என்றே தோன்று கிறது..... கொஞ்சம் யோசித்து பாருங்கள்....
கமல் ஒரு இயக்குனராக சில புது முகங்களை வைத்து அருமையான கிரமத்து காதல் கதையை எடுத்தால் / இயக்கினால் எப்படி இருக்கும்... ?
இல்லை கமல் விஜய் அல்லது அஜித் அல்லது இந்தியில் அக்ஷய் குமார் போல நடிகர்களை வைத்து ஒரு
மசாலா தனமான படம் எடுத்தால் எப்படி இருக்கும்..?
இது போல எதாவது ஒன்று தான் நடக்கும் எனபது என் எண்ணம்....
நன்றி
நவீன்.சோ
இந்த அறிவுஜீவி எழுத்தாளர்கள் எல்லோருக்கும் உள்ள பொதுவான குணம் - வெகுஜன மக்களால் அங்கீகரிகப்பட்ட ஒன்றை நிராகரிப்பது ..அது ஒருவேளை பொறாமை கலந்த உள்மன அரிப்பாக இருக்கலாம் ,அல்லது வெகு ஜன மக்கள் ஒத்துக்கொள்ளும் ஒன்றை நானும் ஒப்புக்கொண்டால் ஐயோ நானும் அவர்களில் ஒருவனாகி விடுவேனே ..பின்னர் என்னை வித்தியாசமாக சிந்திக்கும் அறிவு ஜீவி என சொல்லிக்கொள்ள முடியாதே என்ற எண்ணமாக இருக்கலாம் .
பதிலளிநீக்குஇதே கமல்ஹாசன் ஒரு வேளை மக்களால் நிராகரிக்கப்பட்ட கலைஞனாக இருந்திருந்தால் ,ஆரம்பத்தில் அவர் நடித்த ஓரிரு படங்களில் நடிப்பை சொல்லி மாய்ந்து மாய்ந்து இன்றும் எழுதிக்கொண்டிருப்பார் இந்த சாரு ..இப்போது மாபெரும் திறமையாளன் வெகுஜன மக்களாலும் வர்த்தகரீதியாகவும் அங்கீகரிக்கப்பட்ட ஒருவனாக இருக்கிறானே என்பதே இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது ..இது கமலுக்கு மட்டுமல்ல ,பலருக்கும் பொருந்தும் .
குமுதம், ஆனந்த விகடன் மாதிரி இந்தியாடுடேயில் துணுக்குகள் அல்லது நகைச்சுவைகள் வராது என்ற குறையை இது போன்ற கட்டுரைகள் கொடுத்து நிவர்த்தி செய்கிறார்கள் போலும்....
பதிலளிநீக்குகமல் என்ற ஒரு கலைஞன் எந்த இடத்தில் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற பார்வையுடன் வந்திருந்தால் பராவாயில்லை...ஆனால் முழுக்க முழுக்க தன் அதிமேதாவித் தனத்தை(?) வெளிப்படுத்த, கமலை மட்டந்தட்டி ஒரு கட்டுரையை வடித்திருக்கிறார்.....
இந்தியாடுடே பத்திரிக்கையில் வெளிவந்திருந்த கட்டுரையைப் படித்து மகிழ்ந்த எனக்கு, மீண்டுமொரு முறை அந்த நகைச்சுவையை ரசிக்க வைத்ததற்கு நன்றி லக்கி!!!!
நரேஷ்
www.nareshin.wordpress.com
I completely agree and accept what Joe said.It is 100% true!
பதிலளிநீக்குசாரு அவர்கள் கூறுவது முற்றிலும் உண்மை. ஒரு நல்ல திரைப்படம் மற்றும் "கமல்" எனும் "ரசிகர்களை திருப்திபடுத்தும்" சாக்கடையில் விழுந்த மா மேதை மற்றும் கலைஞனின் ரசிகன் நான்.
பதிலளிநீக்குஅவர் பக்கமே போவதில்லை. இங்க வந்தா...
பதிலளிநீக்குநல்லாத்தான் சொல்லியிருக்கார்... இந்த விஷயத்தில் நான் சாரு பக்கம். ஆஸ்கார் என்பது நமக்கான விருதல்ல என்று சொன்னவர் எதுக்கு சொன்னால் கேள் ஆஸ்கார் தூரமில்லை என்று பாடனும்..
அதுசரி, சாரு போல் அவர் யார்கிட்டயும் உதவி கேட்காம வாழனுமில்ல.. அதுக்குத்தான் போல..:)))
சாருவை விட அறிவு அதிகமான அறிவுஜீவிகள் வலையுலகிலேயே இருப்பதை எண்ணி பெருமைப்படுகிறேன்!
பதிலளிநீக்குபொதுவாக சரி.. :)
பதிலளிநீக்குகமலின் சுய பரீசலனை முடிவுகளையும் சாரு கொஞ்சம் சொல்லி இருக்கலாமே..
பேசும்படம், குருதிப்புனல்,மகாநதி,ஹே ராம்..
கமல் என்ற நடிகர் விஸ்வரூபம் எடுக்கும்போது பாத்திரங்களுள் அவர் ஒன்ற முடியாமல் அவருள் எல்லாம் அடங்கிவிடுவதும் காரணமாக இருக்கலாம்..
ஆனால் ஒரு கருத்தை நான் கண்ணைமூடிக் கொண்டு வழிமொழிகிறேன்,..திறமையான இளம் இயக்குனர்களிடம் கமல்,தன்னை உலக நாயகனாக இல்லாமல் கமலாக ஒப்படைக்கவேண்டும்..
உலகத் தரமான படைப்பொன்று வெளிவரும்.
அருமை பாதி.. ஆப் பாயில் மீதி.. -
பதிலளிநீக்குஆளவந்தான் ஸ்டைலில் வாசிக்கவும்.
I completely agree and accept what Swaminathan told as Joe said.It is 100% true!
பதிலளிநீக்குkamal- miles to go!!!
பதிலளிநீக்குஇப்போது வெளிவந்துள்ள உன்னைப் போல் ஒருவனை எடுத்துக் கொள்வோம். அதன் இந்தி மூலமான ’ ஒரு புதன்கிழமை ’ யில் வரும் நஸ்ருத்தீன் ஷா ஒரு சாதாரண நடுத்தர வர்க்கக் குடிமகனாக வருகிறார். அந்த வேடத்தில் நடித்திருக்கும் கமலோ அப்படிப்பட்ட நடுத்தர வர்க்க மனிதனாகத் தெரியவில்லை. போலீஸ் கமிஷனருடன் அமெரிக்க ஆங்கிலத்தில் பேசுகிறார் கமல். காரணம், படத்தில் பேசுவது கதாபாத்திரம் அல்ல; கமல்ஹாசன்.
பதிலளிநீக்கு////////
கொய்யாலே
சாதாரண நடுத்தர வர்க்கக் குடிமகன் கணினியை வைத்து பல தந்திரங்கள் செய்து காவல்துறை உயர் அதிகாரி கண்னில் விரல் விட்டு ஆட்டுவது பெரிசா தெரியலயாம்
அப்படிபட்ட அந்த மனிதன் ஆங்கிலம் பேசுவது குறையாம்
போங்கபா காமெடி பன்னாம
பருத்தி வீரன், சுப்ரமணியபுரம் எல்லாமும் பெரிய மாற்றம் செய்து விட்டதாக சொல்ல முடியாது. அவையும் வன்முறை சார்ந்த படங்களே. அணுகுமறை தான் வேறு.
பதிலளிநீக்குகமலின் படங்களில் நிறைய உள் அர்த்தங்கள் இருக்கின்றன. இதை நேரடியாக பார்த்தால் வெறும் காட்சியாக, காட்சிக்குரிய வசனமாகத் தெரியும்.
அவர் படங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையன. ஒரு படத்தில் ஒன்றை லேசாகத் தொட்டுச சென்றிருப்பார். அதை பிரிதொரு படத்தில் விரிவாக்கி இருப்பார்.
சாருவின் அணுகுமுறை தவறு.
ஒரு பாடல் கட்சியில் இருந்து, நகைச்சுவைக் கட்சியில் இருந்து, சோகம், சங்கடம், கோபம், வெறுமை, ஆளுமை, சண்டை, காதல், காமம், தந்தை, மகன் என்று இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். அவர் சம்பந்தப் பட்ட காட்சிகள் தனித்து நிற்கும். அதற்கு இணையான ஒரு கட்சியை வேறு யாரும் தந்திருப் பார்களா என்பது சந்தேகமே.
ஒரு புதிய இயக்குனரால் கமலை கையாள்வது கடினம்.
தமிழ் சினிமாவில் இத்தகைய அணுகுமுறையே ஒரு சாதனை தான். எல்லா மாற்றங்களையும் கமல் மட்டுமே தான் செய்ய வேண்டுமா என்ன? பின்னல் வந்தவர்கள் கமலை உதாரணமாகக் கொண்டு புதிய விஷயங்களை செய்ய வேண்டும். மாற்றம் என்பது சத்தியம் என்கிற விதையை விதைக்க ஓரிருவர் வேண்டும். அவரை பிறர் முன்னோடியாக கொள்ளவேண்டும். சினிமா ஒரு சமுத்திரம். ஒருவரே எல்லாம் செய்து விட முடியாது.
கமலின் ரசிகர்களே பின்னால் இத் துறையில் சாரு சொல்லும் மாற்றங்களை செய்யது கொண்டிருக்கிறர்கள்.
http://www.virutcham.com/
விருட்சத்தில் வெளியான கமல் பற்றிய ஒரு கட்டுரை
பகுத்தறிவு கமலின் படங்களில் இழையோடும் உள்ளார்ந்த ஆன்மிகம்
மருபடியும் விருக்ஷம்
பதிலளிநீக்குஎழுத்துலகம் சார்ந்த அனைத்து ஆக்கப் பூர்வமான மாற்றங்களையும் சாரு ஒருவரே செய்து விட வேண்டும் என்றும் இல்லை என்றால் அவர் இத்தனை காலமாக என்ன கிழித்தார் என்று ஒருவர் விமர்சித்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது இவரது இந்தக் கட்டுரை.
குணா. நாயகன். அன்பேசிவம். ஹேராம். மகாநதி. மூன்றாம் பிறை. தசாவதாரம். போன்ற படங்களை சாரு அவர்கள் பார்க்கவும்.
பதிலளிநீக்குஎனக்கு விவரம் தெரிந்து கமல் போன்று வித்தியாசமான படைப்புக்களை வழங்கும் ஒரு மூத்த நடிகனை கண்டதில்லை. ஷங்கர் என்ற புது இயக்குனரிடம் கமல் தன்னை ஒப்டைத்து நடித்த படம் இந்தியன். ஒரு சரியான திரைக்கதை இருந்தால் கமலின் தலையீடு இருக்காது. கதை திரைக்கதையில் இருப்பது கமலின் தலையீடு அல்ல. 50 ஆண்டுகால அனுபவம்.
பதிலளிநீக்குவித்தியாசமாக பேசுவதாக எண்ணி சாரு அவர்கள் தவறாக பேச வேண்டாம்.