11 செப்டம்பர், 2009

கடவுள்!


ரவணன் செல்லும் நூற்றி எட்டாவது நேர்முகத்தேர்வு இது. “ஆண்டவா இந்த வேலையாவது எனக்கு கிடைச்சா லஸ் கார்னர் பிள்ளையாருக்கு 108 தேங்காய் உடைக்கிறேன்” மனதுக்குள் வேண்டியவாறு அந்த அதிகாரியின் அறைக்குள் நுழைந்தான்.

“வாங்க மிஸ்டர் சரவணன்! வாட்ஸ் யுவர் குவாலிஃபிகேஷன்?”

“ப்ளீஸ் ஹேவ் எ லுக் சார்” சான்றிதழ்களோடு இருந்த கோப்பினை நீட்டினான்.

கோப்பினைப் புரட்டியவாறே, “குட். ஸ்போர்ட்ஸ்லயும் நல்ல இண்ட்ரஸ்ட் இருக்கு போலிருக்கே!”

”யெஸ் சார். ஐ ப்ளேட் ஃபார் ஃபோர்த் டிவிஷன் ஆல்சோ!”

“ம்.. நீங்க ஒரு நல்ல கேண்டிடேட் தான். உங்களை கேள்வியெல்லாம் கேட்டு துன்புறுத்த விரும்பலை!”

பலமுறை கேட்ட வாசகம். என்ன சொல்ல வருகிறார் என்று சரவணனுக்கு புரிந்துவிட்டது.

“சாரி சரவணன். ஆஸ் யூஸ்வல் இதுவும் ஒரு கண்துடைப்பு இண்டர்வ்யூ தான். ஏற்கனவே ரெகமண்டேஷன்லே வந்தவங்களுக்குள்ளேயே போட்டி நிறைய இருக்கு!” அதிகாரியின் கண்களில் தென்பட்டது நேர்மையா? பரிதாபமா? என்று சரவணனால் கண்டுபிடிக்க இயலவில்லை.

கோப்பினை வாங்கியவன் எதுவும் சொல்லாமல் புறப்பட்டான். இன்று காலை கையில் இருந்தது ஐம்பது ரூபாய் தான். இண்டர்வியூவுக்கு தாமதமாகி விட்டது என்று பஸ்ஸில் வராமல் ஆட்டோவில் வந்திருந்தான். பாக்கி பத்து ரூபாய் தான் பாக்கெட்டில் இருந்தது. ஊரில் இருந்து மணியார்டர் வந்திருந்தால் இன்று இரவு தண்ணி அடிக்க வேண்டும்.

களைப்பு தெரியக்கூடாது என்பதற்காக ஒரு வில்ஸ் ஃபில்டர் வாங்கி நெருப்பை பற்ற வைத்தான். இரண்டு சாந்தி பாக்கு வாங்கி, ஒன்றை பிரித்து வாயில் கொட்டி நடக்கத் தொடங்கினான். நந்தனத்தில் இருந்து திருவல்லிக்கேணி மேன்ஷன் வரை பாதயாத்திரை.

நல்லவேளையாக அப்பா மணியார்டர் அனுப்பி இருந்தார். ஆயிரத்து எட்டுநூறு ரூபாய். மேன்ஷனுக்கு அறுநூறு ரூபாய் காட்டியவன் மீதி ஆயிரத்து இருநூறு ரூபாயை பர்சில் வைத்தான். இன்னும் பதினைந்து, இருபது நாட்களுக்கு பிரச்சினையில்லை. அறை சாவியை வாங்கிக் கொண்டான். அறை எண் 786.

மது மட்டும் இல்லையென்றால் எப்போதோ அவன் மனநல காப்பகத்துக்கு சென்றிருப்பான். அன்று இரவு அவனுக்கு மதுவே துணை. ஒரு ஹாஃப் வாங்கியவன், அதில் பாதியை தண்ணீர் கூட கலக்காமல் ராவாகவே அடித்தான். லேட் பிக்கப்பாக போதை ஏறியது.

போதை ஏறியவுடன் வழக்கம்போல மொட்டை மாடிக்கு வந்தான். வானத்தைப் பார்த்தான். “டேய் கடவுளே! என்னை ஏண்டா படைச்சே?”

வானம் மவுனத்தையே பதிலாக தந்தது.

“த்தா... பாடு.. மரத்தை வெச்சவன் தண்ணிய ஊத்துவான்னு சொல்றது ரீலாடா? தண்ணி ஊத்துலன்னா கூட பராயில்ல.. ஆசிட் ஊத்துறியேடா கேணைப்பு....”

சரவணனுக்கு கடவுள் ரொம்ப நெருக்கமானவர். போதை ஏறியவுடன் தெரிந்த கெட்டவார்த்தைகளை எல்லாம் சொல்லி திட்டுவது வழக்கம். கடவுளை தவிர வேறு யாரையும் இதுவரை சரவணன் கெட்டவார்த்தைகளில் திட்டியதில்லை. இவனது இந்த வழக்கத்தை கடவுள் ஐந்தாண்டுகளாக பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார்? காலையில் கண்டிப்பாக தெருமுனை பிள்ளையார் கோயிலுக்கு வந்துவிடுவான் என்று அவருக்கும் தெரியும். அப்படியே லூஸ்ல விட்டுவிடுவார்.


பாலைவனத்தில் தண்ணீருக்காக அலைபவன், தூரத்தில் ஏதாவது சோலைவனம் தெரிந்தால் குஷியாகிவிட மாட்டானா? சரவணனுக்கு அதுபோல தெரிந்தவள் சந்தியா. வேலை எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் இருபத்தாறு வயது சரவணனுக்கு அந்த வயதுக்கேயுரிய இளமை எதிர்பார்ப்புகள் இருக்கத்தானே செய்யும்.

வேலை வெட்டிக்கு செல்பவனெல்லாம் சரியாக நேரத்துக்கு செல்வானோ இல்லையோ? தினமும் காலை எட்டரை மணிக்கு பேருந்து நிலையத்தில் சரவணனை டிப்டாப்பாக காணலாம். காரணம் சந்தியா.

அவளுக்கு இருபத்து மூன்று வயதிருக்கலாம். கண்கள் எப்போதும் பட்டாம்பூச்சியின் இறக்கையை போல படபடத்துக் கொண்டிருக்கும். சிகப்பு நிறம், வாளிப்பான தோற்றம். டிசைனர் புடவைகளில் தினுசு, தினுசாக கட்டிக்கொண்டு வருவாள். எங்கேயோ பணியாற்றுகிறாள் போலிருக்கிறது. அவள் பெயர் சந்தியா என்பதைத் தவிர்த்து சரவணனுக்கு வேறு விவரங்கள் தெரியாது. ஆறுமாதமாக காதலிக்கிறான்.

அன்று ஏனோ அவளிடம் தன் உள்ளத்தை திறந்துகாட்ட நினைத்தான் சரவணன்.

“ம்ம்ம்... மிஸ்...”

ஏறிட்டு நோக்கினாள். ஸ்டைலாக வாயைத் திறக்காமலேயே புருவங்களை தூக்கி என்னவென்று வினவினாள்.

“எம் பேரு சரவணன்... ஆறு மாசமா..”

“ஆறு மாசமா..?”

“வந்து... உங்களை லவ் பண்ணுறேன்!”

சுற்றும் முற்றும் பார்த்தாள். பஸ் ஸ்டேண்டிலிருந்தவர்களுக்கு ஆயிரத்தெட்டு பிரச்சினைகள். இவர்களை கவனிக்கும் ஆர்வம் யாருக்குமில்லை.

தன்னை ஒருவன் காதலிக்கிறான் என்ற விஷயம் அவளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், காதலிக்கும் பையன் டொக்காக இருப்பது அவளுக்கு எரிச்சலைத் தந்தது.

“ராஸ்கல்.. உன் மூஞ்சிய கண்ணாடியிலே பார்த்திருக்கியா?”

“ஃபேஸ் கொஞ்சம் டம்மியா இருந்தாலும், என்னோட ஃஹார்ட் ஃபுல்லா நீங்களும், ரொமான்ஸும் தான் இருக்கு!”

“கொண்டு போய் குப்பைத் தொட்டியிலே போடு. ஒரு குரங்கை லவ் பண்ற அளவுக்கு நான் ஒண்ணும் பைத்தியமில்லே!” இவ்வளவு கடுமையாக தன் காதலை மறுப்பாள் என்று சரவணன் எதிர்பார்க்கவில்லை. கண்களில் நீர் முட்ட ஆரம்பித்தது. அழுதுவிட்டால் அசிங்கமாக நினைத்துவிடுவாளோ என்று அவசர அவசரமாக கர்ச்சீப் எடுத்து துடைத்தான்.

அன்றைய இரவும் அவனுக்கு மது தான் துணை. போதை ஏறியவுடன் மொட்டை மாடிக்கு சென்றான்.

“டேய் முட்டாக்...... கடவுளே! என்னை ஏண்டா சுமாரா படைச்சே?” வானத்தைப் பார்த்து கடவுளோடு வழக்கமாகப் பேசினான். திக்கற்றவர்களுக்கு தெய்வம் தான் துணை. சுமார் அரைமணி நேரமாவது கடவுளை திட்டி இருப்பான். திட்டி முடித்தவன் அழுதபடியே தூங்கிப் போனான்.


ரண்டு இரவுகளாக வயிற்றில் ஈரத்துணியை போட்டு உறங்கவேண்டிய நிலை சரவணனுக்கு. ரூம் வாடகை தரவேண்டும், இன்னும் இரண்டு நாட்களில் செட்டில் செய்யாவிட்டால் பொட்டி, படுக்கையை தூக்கி எறிந்துவிடுவேன் என்று மேன்ஷன் மேனேஜர் மிரட்டிவிட்டு போனார். மேன்ஷனுக்கு கீழிருந்த பொட்டிக்கடைக்காரனுக்கு தரவேண்டிய பாக்கி எகிறிக்கொண்டிருந்தது, பழைய பாக்கி இல்லாமல் சிகரெட் தரமுடியாது என்று கைவிரித்து விட்டான்.

அப்பாவிடமிருந்து வரவேண்டிய மணியார்டர் ஏன் தாமதமாகிறது என்று அவனால் அறிந்துகொள்ள முடியவில்லை. ஊரில் போன் என்ற ஒரு வஸ்துவே இல்லை. எனவே போன் செய்து அப்பாவிடம் பேசமுடியாது. அவராக டவுனுக்கு எப்போதாவது வந்தால் மேன்ஷனுக்கு போன் செய்வார். அந்த நேரத்தில் அறையில் இருந்தால் அவரிடம் பேசமுடியும்.

இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் அப்பாவின் மணியார்டரை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதோ என்ற விரக்தி ஏற்பட்டது. பணம் சம்பாதிக்க ஒரு வேலை இல்லை, காதலிக்க ஒரு பெண் இல்லை. என்ன வாழ்க்கை இது?

உச்சிவெயிலில் மொட்டைமாடிக்கு சென்றான். எப்போதும் போதை ஏறினால் (போதை ஏத்திக்க ஏது காசு?) மட்டுமே கடவுளை திட்டுபவன் அன்று ஆத்திரத்தில் அறிவிழந்து திட்ட ஆரம்பித்தான். “அடேய் பொறம்போக்கூ கடவுளே!” உச்சஸ்தாயியில் அவன் கத்தியது அவனுக்கே எதிரொலித்தது. நூற்றிபத்தை சென்னை வெயில் தொட்டு விட்டதால் அக்கம் பக்கத்தில் ஆளரவம் இல்லை. அவனவன் ஏசி ரூமில் அடங்கிக்கிடப்பான் போலிருக்கிறது. வழக்கம்போல வானம் மவுனத்தையே பதிலாக தந்து கொண்டிருந்தது. எதிர்தரப்பு மவுனம் தந்த தெம்பிலோ என்னவோ அன்று அரைமணி நேரம் காட்டுக்கத்தலாக கடவுளை திட்டினான் சரவணன். அவன் திட்டுவதை யாராவது பார்த்திருந்தால் உடனடியாக பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு போன் போட்டிருப்பார்கள். நல்லவேளையாக யாரும் வழக்கம்போல பார்க்கவில்லை.


சூடேறிப் போன மண்டையுடன் அறைக்கு திரும்பினான் சரவணன். இன்றிரவுக்குள் ஒரு மாற்றம் ஏற்படாவிட்டால் தற்கொலை செய்துகொள்ளலாமா என்று நினைக்க ஆரம்பித்தான். பூட்டியிருந்த கதவை திறந்து உள்ளே எட்டிப்பார்த்தவன் ஒரு நொடி அதிர்ந்தான். அறையின் மத்தியில் சப்பணமிட்டு ஒருவர் அமர்ந்திருந்தார். வெள்ளை உடையோடு பார்க்க பிரகாஷ்ராஜ் மாதிரி இருந்தார். பூட்டப்பட்ட அறைக்குள் அவர் எப்படி வந்திருக்க முடியும்? ஒருவேளை ஜன்னல் வழியாக வந்திருப்பாரோ? ஜன்னலும் சாத்தப்பட்டிருந்தது!

“யோவ் யாருய்யா நீயி?” கொஞ்சம் பயத்தோடே அறைக்குள் பாதியாக நுழைந்து, தப்பி ஓடுவதற்கு வாகாக காலை தயார்செய்துகொண்டு கேட்டான்.

“நானா? கடவுள்!”

”கடவுளாவது, மசுராவது.. எப்படிய்யா ரூமுக்குள்ளே வந்தே?”

“நான் படைத்த உலகில் நான் எங்கு வேண்டுமானாலும் பிரவேசிப்பேன்!”

நட்டு கழண்ட கேசு போலிருக்கு என்று மனதுக்குள் நினைத்தவாறே கொஞ்சம் பயம் தெளிந்து அறைக்குள் பிரவேசித்தான்.

“நீ கடவுள்னு எப்படி நம்புறது?”

ஒரு சொடுக்கு போட்ட கடவுள் பழுப்பேறியிருந்த சுவற்றை காட்டினார். சுவற்றில் டிவி போன்ற ஒரு திரை தோன்றியது. சரவணனுடைய அப்பா கட்டிலில் படுத்திருந்தார். அம்மா ஏதோ ஒரு கஞ்சியை அவருக்கு புகட்ட முயற்சித்துக் கொண்டிருந்தார்.

“உன் அப்பாவுக்கு மஞ்சக்காமாலை. அதனாலே தான் போஸ்ட் ஆபிஸுக்கு போய் உனக்கு மணியார்டர் கூட பண்ணமுடியாம படுத்துக் கிடக்கார்!”

அந்த வெள்ளுடை மனிதர் கடவுள் தான் என்று சரவணன் நம்பிவிட்டான். கடவுள் இருக்கிறார் என்று நிரூபிப்பது எவ்வளவு சுலபம்!

“நீங்க நெஜமாலுமே கடவுளா இருந்தா.. சாரி.. மன்னிச்சுக்கங்க.. உங்களை கண்டபடி திட்டியிருக்கேன்!”

“என்னை திட்டாத ஜீவராசிகள் எதுவும் உலகத்தில் இல்லை! மன்னிப்பதாக இருந்தால் மன்னிப்பைத் தவிர வேறெதையும் என்னால் செய்யமுடியாது. மன்னித்துக்கொண்டே.... இருக்கவேண்டும்!”

சடாரென காலில் விழுந்து வணங்கினான்.

“எவருக்கும் கிடைக்காத வாய்ப்பு உனக்கு கிடைத்திருக்கிறது சரவணா. உன்னைப் படைத்தவன் கேட்கிறேன். உனக்கு என்ன வேண்டும்? மூன்று கோரிக்கை வைக்கலாம். மூன்றையுமே நிறைவேற்றுவேன்”

திடீரென கடவுள் என்ன வேண்டும் என்று கேட்டதால் குழம்பிப் போனவன் என்ன கேட்பது என்று புரியாமல் முழித்தான். பொட்டிக்கடைக்காரன் பாக்கி, ரூம் வாடகை போன்றவை உடனடியாக நினைவுக்கு வந்தது.

”ம்ம்ம்... கடவுளே! என் கையில் இருக்கும் பையில் எப்போதும் பணம் இருக்கவேண்டும்!”

“சரி... அப்படியே ஆகட்டும்!”

”அடுத்ததா... ம்ம்ம்ம்...” யோசித்தவன், ஐந்து ஆண்டுகளாக வேலை இல்லாமல் அவமானப்பட்டு வருவதை யோசித்தான். தன் கவுரவத்தை மீட்க தனக்கொரு நல்ல வேலை வேண்டுமென நினைத்தான். “ஒரு கவுரவமான வேலை!”

“அதுவும் அப்படியே ஆகட்டும்!”

வேலை, பணம் இவை இரண்டுமே போதும், தான் விரும்பியது எல்லாவற்றையும் பெறலாம் என்றாலும் மூன்றாவதாகவும் ஏதாவது தருவதாக கடவுள் சொல்கிறாரே? அந்த வாய்ப்பை ஏன் வீணாக்குவது என்று யோசித்தான். மூன்றாவதாக என்ன கேட்கலாம்? சந்தியா... ச்சேச்சே... அது ஒரு மொக்கை ஃபிகர். கடவுள் நினைத்தால் சூப்பர் ஃபிகர் ஒன்றை தனக்கு தரமுடியும்.. ஒன்றா? வேண்டாம் ரெண்டு கேட்கலாமே? வேண்டாம்.. வேண்டாம்... நிறைய கேட்கலாம். ஃபிகர்களை தள்ளிக்கொண்டு போக ஒரு கார் வேணுமே? அதை கேட்டால் அது நான்காவது கோரிக்கையாகிவிடும். கடவுள் தரமாட்டார். மூன்றாவதையும், நான்காவதையும் ஒன்று சேர்த்து ஒரே கோரிக்கையாக வைத்து கடவுளை ஏமாற்ற முடிவுசெய்தான்.

“ம்ம்ம்... நான் எப்பவும் பெரிய வண்டி ஒண்ணுத்துலே போய்க்கிட்டே இருக்கணும்.. என்னை சுத்தி பொண்ணுங்களா இருக்கணும்!”

சரவணனின் புத்திசாலித்தனத்தை வியந்த கடவுள், “அப்படியே ஆகட்டும். நாளை முதல் நீ கேட்டதெல்லாம் உனக்கு கிடைக்கும்!” கடவுள் கடைசியாக சொன்னது அசரீரி போல கேட்டது. அவர் அமர்ந்திருந்த இடம் ஒளிவெள்ளமாக இருக்க, கடவுளைக் காணவில்லை. நடப்பது கனவா? நனவா? என்று புரியவில்லை சரவணனுக்கு. தன் தலையில் தானே ஒரு கொட்டு வைத்து பார்த்துக் கொண்டான், வலித்தது. 'நாளை'க்காக காத்திருக்க ஆரம்பித்தான் சரவணன்.


டிப்பாக்கம் டூ பாரிமுனை வண்டி அது. 51S லேடீஸ் ஸ்பெஷல். பெரிய வண்டி. நாற்பது பேர் உட்காரலாம். நூறு பேருக்கு மேல் நிற்கலாம்.

“டிக்கெட்.. டிக்கெட்..” கண்டக்டர் சரவணனுடைய குரல், போன மாதம் தான் கண்டக்டர் வேலைக்கு சேர்ந்திருந்தான்.

“யோவ் யாரைப் பார்த்து டிக்கெட்டு இன்றே?” பாரிமுனையில் ஏறிய கருவாடை கூடைக்காரி சரவணனை முறைத்தாள்.

“ஆமா. இது ஒரு சூப்பர் டிக்கெட்டு, இதைப்பார்த்து டிக்கெட்டுன்னு சொல்றாங்க. மூஞ்சியப்பாரு. டிக்கெட் எடுத்தியா? உன் கூடைக்கு லக்கேஜ் போட்டியா?” வெயில் தந்த வெறுப்பில் கடுப்பாக குரைத்தான் சரவணன்.

கருவாட்டுக்காரி இருபது ரூபாய் நோட்டை நீட்டினாள். அவளுடைய டிக்கெட் மற்றும் லக்கேஜ் டிக்கெட்டை கிழித்து அவளிடம் தந்தவன், மீதி சில்லறைக்காக பையினுள் கைவிட்டான். பை நிறையப் பணம்.

ஹிந்து நிறுத்தத்துக்கு வந்த பேருந்துக்குள் முட்டி மோதிக்கொண்டு ஏறினார்கள் எஸ்.ஐ.ஈ.டி கல்லூரி மாணவிகள். அதுவரை நடந்துகொண்டே டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்த சரவணனுக்கு சிரமமாகி போனது. கால்வைக்க கூட இடமில்லை. சரவணனை சுற்றிப் பெண்கள்.

பிரகாஷ்ராஜ் ஜாடையிலிருக்கும் கடவுள் வானத்திலிருந்து புன்னகைத்துக் கொண்டிருக்கிறார்.

20 கருத்துகள்:

  1. இது மீள்பதிவா?

    முன்பே படிச்ச நினைவு.

    பதிலளிநீக்கு
  2. கடவுள் வந்தார்னு தெரிஞ்சதுமே ஏடாகுடமா ஏதாவது ஆகும்னு எதிர்பார்த்ததுதான். ஆனாலும், புத்திசாலித்தனமான டிவிஸ்ட்!

    பதிலளிநீக்கு
  3. மூன்று வரம் கேட்டான்,கடவுள் கொடுத்தார்,மாட்டிக்கொண்டான் என்ற ராமகிருஷ்ண விஜயம் ஒரு பக்கக் கதைக்கு எதற்கு குறு நாவல்?

    பதிலளிநீக்கு
  4. பாராட்டிய ஜ்யோவ்ராம், கல்யாணி சுரேஷுக்கு மட்டும் நன்றி.

    துளசி கோபால் மேடம். ஆமாம் மீள்பதிவுதான்.

    கேயாரெஸ் சார்! இன்னைக்கு நானா? :-) அதிஷா எஸ்கேப்பா?

    பதிலளிநீக்கு
  5. லக்கி,

    அது என்ன கலர் மாத்தி சிகப்பு கலர்ல சில வரிகளை எழுதி இருக்கீங்க ? இன்டர்நெட்ல எழுதற கதைக்கான வேறுபாடா ?

    பதிலளிநீக்கு
  6. :-) ஏற்கெனவே படிச்ச ஞாபகம்!
    இதுவும், கிளி ஜோசியம் கதையும் என்றும் நினைவில் நிற்பவை!

    பதிலளிநீக்கு
  7. இது எப்பவோ படிச்ச ஜோக்கின் விரிவாக்கம் லக்கி
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு
  8. யுவகிருஷணா!

    கதை “ 'நாளை'க்காக காத்திருக்க ஆரம்பித்தான் சரவணன் “ என்பது வரை நல்லா இருந்தது.விறுவிறுப்பு நடை.

    ஆனால் வரங்களுக்கு வேறு அர்த்தங்கள் வரும் என்பது ஊகிக்க முடியும் என்பதால் சாதாரணமாகி விட்டது.வித்தியாசம் இல்லை.
    காரணம் நிறைய புராண கதைகள்.

    நான் எப்படி முடிப்பேன்:-

    முடிவு -1

    'நாளை'க்காக காத்திருக்க
    ஆரம்பித்தான் சரவணன்.

    மறு நாள் கடவுள் வந்தார்.

    “சாரி.. சரவணன்.யோசிக்காம கொடுத்துட்டேன். வரங்களை ”டிஆக்டிவேட்” பண்ணீட்டேன்”

    ”என்ன அநியாயம்?நீ கடவுளாடா.டேய்...பேமானி.த்தா... பாடு”

    முடிவு -2

    'நாளை'க்காக காத்திருக்க
    ஆரம்பித்தான் சரவணன்.

    மறு நாள் கடவுள் வந்தார்.

    “சாரி.. சரவணன்.யோசிக்காம கொடுத்துட்டேன். வரங்களை ”டிஆக்டிவேட்” பண்ணீட்டேன்”

    “அட கடவுளே...ஏன் கடவுளே இப்படி?

    ”வழக்கமா வரங்கள மிஸ்யூஸ் பண்ணி அழிஞ்சி போய் கடைசில ‘ரத்த கண்ணீர் எம்.ஆர்.ராதா மாதிரி
    கைய தட்டிகினு “மன்னிச்சுடு”ம்ப. இதெல்லாம்100000000000 வருடங்களா பாத்துப் பாத்துப் புளிச்சுப்போச்சு.”

    பதிலளிநீக்கு
  9. தலைவா எப்போது சூடான அரசியல் பதிவு எழதபோறிங்க. ரொம்ப நாள் ஆச்சி லக்கி உங்க பஞ்ச் பதிவுகளை பார்த்து. சரி பழைய பதிவுகளை படிக்கலாம் பார்த்த அதையும் delete செஞ்சுடிங்க. இப்படி உங்க ரசிகர்களை சோதிக்க கூடாது.

    பதிலளிநீக்கு
  10. கடவுளிடம் வரம் கேட்கும் லூசுங்க எல்லாமே இப்பிடி கேனை மாதிரிதான் வரம் கேட்டு மாட்டிக்குதுங்க.. ஹிஹி..

    பதிலளிநீக்கு
  11. இந்த பதிவு இதுக்கு முன்ன வந்தப்பவும் இதே ஹீரோ தானா? :)

    "புதிய தலைமுறை" க்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. கதை நாயகன் பேரு "சரவணனா?"

    சரிசரி புரியுது. டைமிங்ல லக்கி கிங்கு!

    பதிலளிநீக்கு
  13. சரிசரி புரியுது. டைமிங்ல லக்கி கிங்கு!

    தனக்கு தானே திட்டமா கலக்குங்க

    பதிலளிநீக்கு
  14. '''எப்போது சூடான அரசியல் பதிவு எழதபோறிங்க. ரொம்ப நாள் ஆச்சி லக்கி உங்க பஞ்ச் பதிவுகளை பார்த்து///

    Yes when ??
    suggested Title : 'Jaya after 2011'

    S.Ravi
    Kuwait

    பதிலளிநீக்கு
  15. நல்லா இருக்குங்க... நல்ல கதையை அப்பப்ப நினைவு கூர்வது நல்லது தான். :)

    பதிலளிநீக்கு
  16. நான் சரவணனா இருந்திருந்தா, ஒரு இரண்டு வரம் கேட்டுட்டு, மூனாவது வரம் - 'இன்னும் மூனு வரம் கொடு'ன்னு சொல்லியிருப்பேன். :-)
    இது போங்காட்டமோ?

    பதிலளிநீக்கு