7 செப்டம்பர், 2009

கர்ணன்!


சினிமா, சேட்டிலைட் தொலைக்காட்சி போன்ற வெகுஜன ஊடகங்களின் வீச்சு நாடகக்கலையின் தாக்கத்தை வெகுவாக குறைத்திருக்கும் சூழல் இன்று நிலவுகிறது. நாடக அரங்குகள் பெரும்பாலும் ஈ ஓட்டிக்கொண்டிருக்கின்றன. இத்தகைய நிலையில் மீண்டும் நாடகக்கலையை மறுமலர்ச்சி அடையச்செய்ய பரவலான முயற்சிகள் அவ்வப்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இத்தகைய ஒரு முயற்சிதான் அடவு அமைப்பு வழங்கும் ‘கர்ணன்’ ஒருநபர் நாடகம்.

வெகுஜன சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தாலும் அவ்வப்போது கலைசினிமாவுக்காக கைக்காசை செலவழிக்கும் நடிகர் நாசர் கர்ணனாக நடிக்கிறார். ஆண்டாண்டு காலமாக நம் நாட்டில் புனிதமாக்கப்பட்டிருக்கும் மகாபாரதத்தை இன்னொரு பரிணாமத்தில் கேள்விகளுக்கு உள்ளாக்குகிறார் இந்த நவீன கர்ணன். தொடக்கத்தில் ஒலிக்கப்படும் தற்கால போர் ஓலம், மகாபாரத போர் ஒலியோடு இணைவது அவல அழகியல். போர்க்களத்தில் துண்டு துண்டாக சிதறிக்கிடக்கும் மனித உறுப்புகளை கண்டு மனம் வெறுத்து கர்ணன் பேச ஆரம்பிக்கிறார். மனிதநேயத்தின் அவசியம் அவருடைய பேச்சின் அடிநாதம்.

“தந்திரத்தில் சிறந்தவர் சகுனி என்கிறார்களே? அப்படியென்றால் கண்ணனை என்ன சொல்ல?” என்று கேள்வி எழுப்புகிறார். துரியோதனனுக்கு நண்பனாக விதிக்கப்பட்டது தன்னுடைய விதி என்று நொந்துப்போகிறார். பாண்டவர்களின் மேன்மையையும், கவுரவர்களின் நயவசஞ்சகத்தையும் எடுத்துக்காட்ட பகடைக்காய் நான் தானா? என்று வியாசரையே சங்கடத்துக்கு உள்ளாக்குகிறார். பீஷ்மரில் தொடங்கி, தன் தாய் குந்திதேவி வரைக்கும் யாரையும் விடவில்லை இந்த கர்ணன். தன்னைப் போலவே ஒடுக்கப்பட்டவனாக, சக தோழனாக இவர் கருதுவது அரவானை மட்டுமே.

சுமார் நாற்பத்தைந்து நிமிடம் தொடர்ச்சியாக மிக நீண்ட வசனங்களை ஏற்ற இறக்கத்தோடு நல்ல உணர்ச்சி பாவத்தில், தெளிவாக உச்சரிக்கிறார் நாசர். அவருக்கு நடிக்க வருகிறது என்று சொல்லுவது, தேன் தித்திக்கிறது என்று சொல்லுவதற்கு ஒப்பானது. நல்ல நாடகக் கலைஞன் மேடையின் ஒவ்வொரு அங்குலத்தையும் தனது நடிப்புக்குப் பயன்படுத்திக் கொள்வான். நாசர் இதற்கு விதிவிலக்கல்ல. ஒரு நொடியும் ஓயாமல் மேடையில் இங்கும், அங்கும் சுழன்றுக்கொண்டே இருக்கிறார்.

வசனங்களுக்கு ஏற்ப மாறும் ஒளி வண்ணங்களை மாற்றி மாற்றி வழங்குவது நல்ல சிந்தனை. நாடகங்களில் நடிப்பவர்கள் கடைசி வரிசை பார்வையாளனுக்கு கேட்கவேண்டுமே என்ற அக்கறையில் உரக்க பேசுவார்கள். இதனால் அவர்களது நடிப்பு சற்று மிகையாகத் தெரியும். தொழில்நுட்ப வளர்ச்சி கார்ட்லெஸ் மைக் மூலமாக இக்குறையை நிவர்த்தி செய்கிறது. நாசர் நின்று நிதானமாக, பதட்டப்படாமல் வசனங்களை பேச வகை செய்கிறது. கர்ணனின் தோற்றமே பார்வையாளனுக்கு பிரதானமாக தெரியும் வகையில் மேடைப்பின்னணி எளிமையாக வசீகரிக்கிறது. மொத்தத்தில் இன்றைய தொழில்நுட்பத்தை மிகச்சரியாக மேடைநாடகத்துக்கு பொருத்தியிருக்கிறார்கள். இந்நாடகத்தை தொலைக்காட்சியில் கண்டாலோ, வானொலியில் கேட்டாலோ கூட, மேடையில் பார்க்கும் அனுபவமும், பரவசமும் கிஞ்சித்தும் கிடைக்காது.

கே.எஸ்.கருணாபிரசாத் இயக்கியிருக்கும் இந்நாடகத்தின் முதல் நிகழ்வு சமீபத்தில் சென்னையில் நடந்தது. வித்தியாசமான, புதிய முயற்சியாக இருந்தாலும் அரங்கு நிறைந்தது ஆச்சரியமான மகிழ்ச்சி. இதுபோன்ற முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்படும் பட்சத்தில் மீண்டும் மேடை நாடகம் மக்களிடையே வெற்றி வலம் வரக்கூடும்.

5 கருத்துகள்:

  1. உங்கள் பதிவை படித்த பின் இந்த நாடகத்தை பார்க்கும் ஆவல் வந்துவிட்டது. நன்றி.

    பதிலளிநீக்கு
  2. கவனிச்சிங்களா லக்கி? 14 லட்சம் ஹிட்ஸ். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? பைத்தியக்கார பயலுங்களை விட்டு தள்ளுங்க. நீங்க தான் எப்பவுமே எங்க ஹீரோ.

    பதிலளிநீக்கு
  3. கிருஷ்ணா,

    நாசர் உண்மையிலேயே ஒரு அற்புதமான நடிகர். பன்ச் டயலாக் பேசி பார்ப்பவர்களை இம்சிக்குக்கும் பலரை விடவும் நாசர் மிகவும் உயந்தவர்.

    நல்ல பதிவு கிருஷ்ணா!

    பிரபாகர்.

    பதிலளிநீக்கு
  4. தம்பி நாம் தமிழகத்தில் திருநங்கைகளை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறோம் இப்பொழுது. உம் இப்படிக்கு ரோஸ் ! Pls write about this great chinese thirunangai http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/4593717.stm

    பதிலளிநீக்கு