1 அக்டோபர், 2009

காதலித்த கதை!


டமாரு கொமாரை உங்களுக்கு தெரியுமா? டமாரு கொமாரு மயிலாப்பூர் பல்லாக்கு மாநகரில் வாழும் சாமானியத் தமிழன். சாயங்காலம் ஆறரை மணிக்கு மேல் பட்டினப்பாக்கம் டாஸ்மாக்குக்கு புனித யாத்திரை சென்று வந்தவுடன் 'தமிளு' அவன் நாவில் கொஞ்சி வெளையாடும். லஸ் கார்னர் கேசவன் பீடா ஸ்டாலின் பரமணெண்டு கஸ்டமர் நம்ம டமாரு. மாவா போட்டு வாயை குதக்கி குதக்கி அவன் வாயே மிக்கி மவுஸின் ரப்பர் வாய் போல ஆகிவிட்டது. பத்து மணிக்கு மயிலாப்பூர் ஸ்டேஷன் எஸ்.ஐ. ரவுண்ட்ஸ் வரும் வரை டமாரு கொமாருவின் லந்து லஸ் ரயில்வே ஸ்டேஷன் வாசலில் கொடிகட்டிப் பறக்கும்.

கொமாருக்கு பல்லு கொஞ்சம் நீளம். பார்க்க தேங்காய் துருவி மாதிரி இருக்கும். சினிமா நடிகன் மாதிரி நல்ல கலரு. வடிவேலுவும் சினிமா நடிகர் தானே? அந்த காலத்து வையாபுரி மாதிரி நல்ல உடல்வாகு. ஹிப்பு சைஸு 26. ஆனா சட்டை சைஸு 44. ஏழாவது படிக்கும்போது பெரியம்மை போட்டதால, மூஞ்சி, காதல் படத்தில் வரும் சந்தியாவின் அப்பா மாதிரி கொதறிவெச்சி இருக்கும். மொத்தத்துலே ஒருத்தன் எப்படியெல்லாம் இருக்கக் கூடாதோ அப்படியெல்லாம் டமாரு இருப்பான்.

அதிருக்கட்டும், அவனுக்கு டமாருன்னு ஏன் பேரு வந்துச்சி தெரியுமா? அது ஒரு சப்பை மேட்டரு. வூட்டாண்ட கையை உட்டு சைக்கிள் ஒட்டி பொண்ணுங்களுக்கு ஃபிலிம் காட்டிக்கினு இருந்தப்போ சைக்கிள் டயர் டமாருன்னு வெடிச்சிடிச்சி. ஏர்யால மூக்கு ஒழுவினு இருந்த சின்னப்பசங்கள்லாம் அப்போலேருந்து 'டமாரு மாமா, டமாரு மாமா'னு கூப்பிட்டு அதுவே 'டமாரு கொமாரு' ஆயிப்போச்சி. போலிஸ் ஸ்டேசன்லே கூட கேசு ஃபைல் பண்றப்போ டமாரு குமாருன்னு தான் ஃபைல் பண்ணுவாங்க. டமாருங்கிறது ஒரு மாதிரியா டெர்ரரா இருந்ததாலே கொமாருக்கு டமாரு ரொம்ப பிடிச்சிருந்திச்சி!

டமாரு எப்பவாச்சும் படம் பார்ப்பான். சரக்கு அடிக்க கையிலே காசில்லைன்னா காமதேனு தியேட்டருக்கு போயிடுவான். பத்து ரூவாய்க்கு மாவா வாங்கிப்பான், அஞ்சு ரூவாய்க்கு பீடி வாங்கிப்பான். டிக்கெட் ரேட்டு பத்து ரூவாதான். ஒரு முறை அவன் பார்த்த படம் 'பூவே உனக்காக'. படத்தோட லவ்வு அவனுக்கு ரொம்ப ஃபீலிங்க்ஸ் ஆயிப் போச்சு. படத்துக்கு எஸ்.ஏ.ராஜ்குமார் போட்ட 'லால்ல.. லா.. லா..' மியூசிக்கு அப்படியே அவனுக்கு ங்கொய்யின்னு ரீங்காரம் அடிச்சிக்கினு இருந்தது. க்ளைமேக்ஸுலே விஜய் பேசுற டயலாக்கு 'வெற்றி தோல்வின்னு சொல்றதுக்கு காதல் ஒண்ணும் எக்ஸாம் இல்லே. ஃபீலிங்' இன்ற டயலாக்கு அப்படியே அவன் மூளையிலே ஆணி அடிச்சி உட்காந்திடிச்சி...

அதே ஃபீலிங்கோடு எதுர்லே இருந்த கேசவன் கடைக்கு வந்தான்.

"இன்னா டமாரு இன்னிக்கு ஆபிஸ் போவலியா?" லுங்கியில் இருந்த டமாரை பார்த்து கேசவன் கேட்டான். டமாரு ஒரு ஆபிஸில் ஆபிஸ் பாயா வேலை பார்க்குறான். மாசத்துக்கு ரெண்டு நாள் லீவு போடுவான்.

"ஆமா சகா. நேத்து நைட்டு அடிச்ச சரக்கு ஒடம்புக்கு ஒத்துக்கலே. ரெண்டு தரம் காலீலேர்ந்து காவாக்கரைக்கு போயாந்துட்டேன். டயர்டா இருந்திச்சா. அப்டியே படத்துக்கு வந்துட்டேன்". சிகப்பாக இருப்பவர்களை 'அய்யிரே' என்று கூப்பிடுவதும், மற்றவர்களை 'சகா' என்று கூப்பிடுவதும் டமாரின் வழக்கம்.

"மாவா போடறியா டமாரு"

"வேணாம் சகா. ஒரே பீலிங்ஸா இருக்கு"

"இன்னா பீலிங்ஸு டமாரு?"

"லவ்வு பண்ணனும் மாதிரி இருக்குது சகா. யாரை லவ்வு பண்ணுறதுன்னு தெரியலை!"

"டமாரு கேட்குறேன்னு தப்பா நெனைச்சிக்காதே. லவ்வு பண்ணனும்னா கொஞ்சமாவது பார்க்குறமாதிரி இருக்கணும். நாமெல்லாம் லவ்வு பண்ணுறவங்களுக்கு ஹெல்ப்பு தான் பண்ணமுடியும்"

டமாருக்கு கோவம் கன்னாபின்னாவென்று வந்தது. "சகா லவ்வுங்கிறது அழகை பார்த்து வர்றது கிடையாது. அப்புடி வந்துச்சின்னா கமலாசனும், அஜித்தும் மட்டும் தான் லவ்வு பண்ணமுடியும்! அவ்ளோயேன... நம்ம பல்லி பன்னீர் கூட லவ்வு மேரேஜி தானே பண்ணான். அவன் இன்னா என்னை விட அழகா?"

கேசவனுக்கு புரிந்துவிட்டது. பயல் காதல்வெறியில் இருக்கிறான். என்ன சொன்னாலும் அவன் காதில் விழப்போவதில்லை.

"எங்க வூட்டு எதிர்லே இருக்கே மஞ்சு. அத்த ஜூட்டு உட்டுக்கலாமா சகா?" ஏதோ ஒரே நாளில் காதலித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்தவனை போல கேட்டான் டமாரு.

"ஒன் இஷ்டம் டமாரு. ஆனாக்க மஞ்சு நல்லாருக்குமான்னு தெர்ல. உனக்கு செட் ஆவும்னா லவ்வு பண்ணு. மஞ்சுவோட அண்ணனுங்க நம்ம கடைக்கு வருவானுங்கோ. பாடி கீடில்லாம் காட்டுத்தனமா இருக்கும். கவுன்சிலரு கிட்டே வேலை பார்க்குறானுங்களாம். ஏதாச்சிம் ஏடாகூடமா ஆச்சின்னா பிரச்னை பெருசாயிடும். பார்த்துக்கோ!" கேசவன் தீர்மானமாக சொன்னான். 'இவன் என்ன எழவோ ஆயிட்டு போவட்டும், எனக்கென்ன' என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டான்.

அதிலிருந்து தினமும் கேசவன் கடைக்கு வரும் டமாரு 'மஞ்சு புராணம்' பாட ஆரம்பித்துவிட்டான்.

"எக்ஸ்போர்ட்டு வேலைக்கு போவுது சகா. 45பிலே தான் கிண்டி வரைக்கும் போவுது. டெய்லி சைக்கிள்லே தேனாம்பேட்டை வரைக்கும் ஃபாலோ பண்ணுறேன்"

"மஞ்சத்தாவணிலே எப்டி இருந்திச்சி தெரீமா?"

"வெள்ளிக்கெளம வெள்ளிக்கெளம முண்டக்கன்னி அம்மன் கோயிலுக்கு போவுது"

"பயமாயிருக்கு சகா. அவனுங்க அண்ணனுங்க மேலே ஏற்கனவே கொல கேசுல்லாம் இருக்காம்"

டமாரு சொல்வதெல்லாம் காமெடியாகவே இருந்தது கேசவனுக்கு. மஞ்சு கொஞ்சம் செவப்பா இருந்திருப்பா போலிருக்கு. நம் கருமை நிற டமாருக்கு அதனாலேயே அவள் மீது 'பீலிங்சு' வந்திருக்கணும். ஆனாலும் வெட்டு ஒன்று, துண்டு ரெண்டுன்னு பேசுற டமாரு தன் பீலிங்ஸை மட்டும் அவளிடம் சொல்வதற்கு ரொம்பவும் ஷையா இருந்தான்.

மயிலாப்பூர் அறுவத்தி மூவர் திருவிழா வந்தது. டமாரு எப்படியாவது தன் மனசை படக்குன்னு தாப்பா தொறக்குறா மாதிரி தொறந்து மஞ்சுவிடம் காட்டிடலாம்னு முடிவு பண்ணிட்டான்.

"திருவிழாவுக்கு மஞ்சு ஃப்ரெண்ட்ஸோட வரும். நேரா போயி, 'எனக்கு பீலிங், உனக்கு பீலிங்கா?'ன்னு கேட்டுடணும் சகா. நீயும் என் கூட தொணைக்கு வா. அவனுங்க அண்ணனுங்க பார்த்துட்டாங்கன்னா எஸ்கேப் ஆவ வாட்டமா இருக்கும்" என்றான். கேசவனும் தலையெழுத்தே என்று வந்தான். அறுவத்து மூவர் திருவிழா நடக்கும்போதெல்லாம் கேசவன் கடையை மூடிவிடுவது வழக்கம்.

தெற்கு மாடவீதியில் இருந்த ஒரு திண்ணையில் ஏறி நின்றுகொண்டான் டமாரு. டென்ஷனாக இருந்ததால் ஒரு மாவா பாக்கெட்டை அப்படியே வாயில் போட்டு துப்பிக்கிட்டிருந்தான். மஞ்சூ தூரத்தில் வருவது தெரிஞ்சது. குமார் பேஸ்கட்டுக்கு அது கிடைச்சா அவனுக்கு லாட்டரியில் பம்பர் விழுந்தது மாதிரிதான். அவளோடு ரெண்டு எக்ஸ்போர்ட் பிகருங்க. அதுங்க கொஞ்சம் சுமாரா இருந்ததாலே அதுங்கள்லே ஒண்ணை கரெக்ட் பண்ணிடலாமான்னு கேசவன் கூட யோசிக்க ஆரம்பிச்சிட்டான்.

மெதுவாக திண்ணைலேர்ந்து இறங்கி மஞ்சுவை நெருங்கினான் குமார். கேசவன் சுத்தும் முத்தும் மஞ்சுவோட அண்ணனுங்க வர்றானுங்களான்னு பாத்துகினே இருந்தான். திக்கு.. திக்கு..ன்னு இருந்திச்சி. இவன் மூஞ்சிய அது ஏத்துக்குமா என்ற சந்தேகம் கேசவனுக்கு இருந்தது. நாளாக நாளாக டமாரு மூஞ்சி மூஞ்சூறு மாதிரி ஷேப்பு மாறிக்கினே போவுதே?

"இன்னா மஞ்சு எப்டி கீறே?"

"நா நல்லா கீறேன். நீ எப்டி கீறே?"

"நான் சூப்பரா கீறேன். ரெண்டு பேரும் கண்ணாலம் கட்டிக்கலாமா?"

டீ சாப்பிட போலாமா என்பது மாதிரி டமாரு டமாருன்னு கேட்டிட கேசவனுக்கு தாவூ தீர்ந்துவிட்டது. சினிமாவில் பார்த்தமாதிரி எல்லாம் இல்லாம ரொம்ப கேஸ்வலா கேட்டுட்டான் டமாரு. 'லால்லா.. லா.. லா...' மியூசிக்கெல்லாம் எதுவும் கேட்கலை. ஏதோ பெரீய்ய மேட்டருன்னு நெனைச்சுக்கினு இருந்த கேசவனுக்கு சப்புன்னு போயிடிச்சி. மஞ்சுவும் ஒத்துக்கிட மஞ்சு பின்னாடியே டமாரு போயிட்டான்.

ஒருவாரம் கழிச்சி கேசவனுக்கு நியூஸ் வந்தது. டமாரு மஞ்சுவை இஸ்துக்கினு எங்கியோ ஒடிட்டானாம். மஞ்சுவோட அண்ண‌னுங்க டமாரை மட்டுமில்லாம டமாரோட ப்ரெண்ட்ஸுகளையும் தேடிக்கிட்டிருக்கானுங்களாம். கேசவன் ரெண்டு வாரத்துக்கு கடையை தொறக்கலை.

ஒரு ரெண்டு மூணு மாசம் கழிச்சி டமாரு, மஞ்சுவோட பல்லக்குமாநகருக்கு வந்திருக்கான். அதுக்குள்ளே மஞ்சுவோட அண்ணனுங்களும் சமாதானம் ஆயிட்டானுங்க. கல்யாணம் கட்டிக்கினு ரெண்டு மூணு மாசமா வேலைக்கு போவாததாலே டமாருக்கு வேலை போயிடிச்சி. டமாரு இப்போ பாண்டிபஜார் பிளாட்பார்முலே துணிக்கடை பிசினஸு பண்ணுறான். ரெண்டு கொழந்தைங்க ஆயிடிச்சி. இன்னா பணம் கையிலே பொரள்றதாலே டெய்லி ரெண்டு வேளை குடிக்கிறானாம்.

நம்மாளுங்க இப்படித்தான... டவுசர் கயட்டுற நேரத்துலே லவ்வு வந்துரும். அதே டவுசரை திருப்பி மாட்டுற நேரத்துலே கல்யாணத்தையே முடிச்சிட்டிருப்பானுங்க.

அன்னைக்கி பிஸினஸ் டல்லா இருந்திச்சி. கேசவனுக்கு ரொம்ப போர் அடிச்சிடுச்சு. கடையை இளுத்து மூடிட்டு சினிமாவுக்கு போவலாம்னு இருந்தான். அஞ்சு ரூவாய்க்கு பீடி கட்டு வாங்கிக்கினு எதிர்லேருந்த காமதேனு தியேட்டருக்கு போனான். விஜய் நடிச்ச காதலுக்கு மரியாதை. படம் பார்த்ததுமே கேசவனுக்கு ரொம்ப பீலிங்ஸா ஆயிடிச்சி.. இளையராஜா போட்ட 'லால்ல.. லா.. லா..' மியூசிக்கு, அப்படியே அவனுக்கு ங்கொய்யின்னு ரீங்காரம் அடிச்சிக்கினு இருந்தது. ஷாலினியும், விஜய்யும் பீச்சுலே பேசுற டயலாக்கு அப்படியே அவன் மனசுல‌ ஆணி அடிச்சாமாதிரி உட்கார்ந்திடுச்சி...

அப்புறம் என்னா ஆச்சா? ஸ்டோரியை பர்ஸ்ட்டுலே இருந்து மறுபடியும் படி மாமு...

அக்டோபர் மாத உலகப்படம்!


உரையாடல் அமைப்பு சார்பாக மாதமொருமுறை உலகப்பட கொண்டாட்டம் என்ற வரிசையில் அக்டோபர் மாத படமாக ’The Legend of 1900’ கிழக்கு டூரிங் டாக்கீஸில் திரையிடப்படுகிறது.

படத்தின் பெயர்: The Legend of 1900 (123 நிமிடங்கள்)
நாடு : இத்தாலி
மொழி: ஆங்கிலம்
இயக்குநர் : Giuseppe Tornatore
நாள் : அக்டோபர் 4ம் தேதி, ஞாயிற்றுக் கிழமை
நேரம் : மாலை 6.00 மணி
இடம் : கிழக்கு பதிப்பகம் மொட்டை மாடி
எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை
சென்னை.

இப்படத்தைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புபவர்கள் பைத்தியக்காரனின் இந்தப் பதிவை தயவுசெய்து வாசித்துவிட வேண்டாம். தாவூ தீருகிறது :-( அதற்குப் பதிலாக கூகிளில் இப்படத்தின் பெயரை தட்டி ஏதாவது கில்மா படங்கள் விழுகிறதா என்று உபயோகமாக தேடிப்பார்க்கலாம்.

இப்படத்தின் இயக்குனர், தமிழ் அறிவுஜீவிகளிடம் ஏகத்துக்கும் லோல்பட்ட ’சினிமா பாரடைஸோ’ என்ற டக்கர் படத்தையும் இயக்கியவராம்.

30 செப்டம்பர், 2009

உளியின் ஓசை!


வேற என்னத்தைச் சொல்ல? :-(

* - * - * - * - * - * - * - *

இப்போது எல்லாம் திரைவிமர்சனம் செய்யவே பயமாக இருக்கிறது? உன் நண்பனை காட்டு, உன்னைப் பற்றி சொல்கிறேன் என்பது மாதிரி, உனக்குப் பிடித்த நாலு படங்களின் லிஸ்டைக் கொடு என்று பின்னூட்டத்தில் மிரட்டுகிறார்கள். முன்பெல்லாம் விஜய் படங்களையோ, ரஜினி படங்களையோ கொஞ்சம் அப்படி இப்படி விமர்சித்தால் பின்னூட்டத்தில் ஆபாசமாக திட்டுவார்கள். இப்போது கமல் ரசிகர்களும் லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு ஆட்டையில் இறங்கிவிட்டதாக தெரிகிறது.

'திரு திரு.. துறு துறு'. லோ பட்ஜெட்டில் ஹை குவாலிட்டி. ஆட் ஏஜென்ஸிகளில் சீனியர் விஷுவலைஸராக சில காலம் குப்பை கொட்டிய அருகதையில் சொல்கிறேன். ஆட் ஏஜென்ஸி சூழலை அப்பட்டமாக கொண்டு வந்திருக்கிறார்கள். படத்தின் டைட்டிலுக்கே நாக்கை மடித்துக் கொண்டு விசிலடிக்கலாம். ஹீரோ அஜ்மல் தேமேவென்று இருக்கிறார். ஹீரோயினின் கண்கள் (மட்டும்) கொள்ளை அழகு. மற்ற சமாச்சாரங்கள் பெரியதாக சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

இது காமெடி படமா, சீரியஸ் படமாவென்று தெளிவில்லாமல் இயக்குனர் திருதிருவென்று முழித்திருப்பது புரிகிறது. அதே நேரத்தில் திரைக்கதை துறுதுறுவென்று ஓடுகிறது. சத்யம் சினிமாஸ் இன்னும் கொஞ்சம் தாராளமாய் செலவழித்து, கிரேஸி மோகனை இப்படத்துக்கு வசனம் எழுத வைத்திருந்தால் நிறைவாக இருந்திருக்கும்.

இரண்டேகால் மணிநேர எண்டெர்டெயின்மெண்டுக்கு இந்த படம் காரண்டி!

* - * - * - * - * - * - * - *

'மதுரை டூ தேனி, வழி : ஆண்டிப்பட்டி' என்ற வித்தியாசமான டைட்டிலோடு போனவாரத்துக்கு போனவாரம் ரிலீஸ் ஆகி, இந்த வாரம் ஒரு படம் மூட்டையை கட்டிவிட்டது. படத்தைப் பற்றி பெரியதாக சொல்வதற்கு எதுவுமில்லை. யதார்த்த படம் எடுக்க வேண்டும் என்று இயக்குனர் ரொம்ப முக்கியிருக்கிறார். அட்டகாசமான ஒன்லைனர் மோசமான திரைக்கதையால் பேவென்று இளிக்கிறது. ஹீரோயின் மட்டும் பக்கத்து வீட்டு ஃபிகர் மாதிரி பாந்தம்.

இந்தப் படத்தை பொறுத்தவரை பாராட்டப்பட வேண்டியவர்கள் இருவர். ஒருவர் கேமிராமேன். இவருக்கு ஒரு நல்ல படம் கிடைத்தால் சீக்கிரமே முன்னுக்கு வந்துவிடுவார். இன்னொருவர் பி.ஆர்.ஓ சக்திவேல். ஒரு மொக்கைப் படத்துக்கு கூட இந்தளவுக்கு மக்கள் தொடர்பு செய்யமுடியுமா என்பது ஆச்சரியம். அதுவும் உன்னைப் போல் ஒருவன் வெளியான வாரத்தில் இந்தப் படமும் வெளிவந்து சொல்லிக்கொள்ளத்தக்க வகையில் பேசப்பட்டது ஆச்சரியம்.

* - * - * - * - * - * - * - *

தமிழ் பதிவுகளை எல்லாம் அவ்வளவாக பார்க்க நேரம் கிடைப்பதில்லை. எப்போதாவது எட்டிப் பார்த்தாலும் அரைகுறைகள் அரசியல் பேசுவதை கண்டால் அஜீரணமாக இருக்கிறது. கவிஞர்கள் கவிதையை மட்டுமாவது உருப்படியாக எழுதி தொலைக்கலாம். அரசியல் எழுதுபவர்கள் நாராசமாய் கவிதை எழுத முற்படாமல் இருக்கலாம். இரண்டுமே கண்ணறாவியாக இருக்கிறது.

சில பேர் தினவும் பதிவு போட்டே ஆகவேண்டும். இல்லாவிட்டால் உம்மாச்சி கண்ணை குத்திவிடுமோ என்ற பயத்தில் எந்த கருமத்தையாவது சக்கையாக எழுதி உயிரை வாங்குகிறார்கள். ம்ஹூம். இது ஆவறதில்லே!

27 செப்டம்பர், 2009

கமல் பற்றி சாருநிவேதிதா!


கமல்ஹாசனின் 50 ஆண்டுக் கால சினிமா வாழ்க்கையைப் பற்றி யோசிக்கும் போது பலவிதமான கருத்துக்கள் மனதில் அலை மோதுகின்றன. தமிழ்நாட்டில் வாழும் மத்திய வயதை எட்டியிருக்கும் ஒருவருக்கு அவர் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் தமிழ் சினிமா என்பது அவரது வாழ்வில் ஒரு பிரிக்க முடியாத அங்கமாகவே இணைந்திருக்கும். அதைப் போலவே கமல்ஹாசனும் அவரது வாழ்வில் தவிர்க்க முடியாதவராகிறார். களத்தூர் கண்ணம்மாவின் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று துவங்கி, குணாவில் அபிராமி அபிராமி என்று உருகி, ஆளவந்தானில் மனிதன் பாதி மிருகம் பாதி என்று மிரட்டி, கடைசியில் தசாவதாரத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் முகமூடியை அணிந்து கொண்டது வரை நீளும் ஒரு நீண்ட வரலாறு அது.

ஆனால் இப்படிப்பட்ட உணர்வுபூர்வமான நாஸ்டால்ஜிக் நினைவுகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு, கமல்ஹாசனின் 50 ஆண்டு சினிமா வாழ்வினால் தமிழ் சினிமாவில் நிகழ்ந்த மாற்றங்கள் யாவை என்று தர்க்கரீதியாக யோசித்துப் பார்ப்போம். அவருடைய மகாநதியிலிருந்து தசாவதாரம் வரை ஒவ்வொரு படத்தைக் குறித்தும் பாராட்டுதலாகவும் சில சமயங்களில் எதிர்மறையாகவும் தொடர்ந்து வினையாற்றி வந்திருக்கிறேன். பாராட்டி எழுதியதே அதிகம்.

அந்த அளவுக்குத் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமையாகத் திகழ்பவர் கமல்ஹாசன். ஆனால் அவருடைய இவ்வளவு நீண்ட சினிமா வாழ்வினால் தமிழ் சினிமாவில் நிகழ்ந்த மாற்றம் என்ன என்ற கோணத்திலிருந்து யோசித்துப் பார்த்தால் மிகுந்த ஏமாற்றமே மிஞ்சுகிறது.



கமலுக்கு நேர் எதிர் உதாரணமாக, இயக்குநர் ஷங்கரை எடுத்துக் கொள்வோம். இவருடைய ஒரு படத்தைக் கூட நான் ரசித்ததில்லை. இவரது இயக்கத்தில் வந்த பாய்ஸ், அந்நியன், சிவாஜி போன்ற படங்களை நார்நாராய்க் கிழித்துத் தோரணமே கட்டியிருக்கிறேன். ஆனால் இதே ஷங்கர் வேறோர் விஷயத்திலும் ஈடுபட்டார். புதிய இயக்குனர்களை வைத்து குறைந்த பட்ஜெட் படங்களைத் தயாரித்தார். அந்தப் படங்கள்தான் தமிழ் சினிமாவுக்கு இதுவரை இருந்த அடையாளத்தை முற்றிலுமாக மாற்றியமைத்தது.

இது நடந்தது ஐம்பது ஆண்டுகளில் அல்ல; வெறும் ஆறே ஆண்டுகளில் ஆறே படங்களின் மூலம் இந்த மாற்றம் நடந்தது. இப்போது ஷங்கர் என்ற இயக்குனரையே பிடிக்காத நான் அவருடைய தயாரிப்பில் வரும் படங்களை ஓடிப் போய் பார்க்கிறேன். சமீபத்தில் கூட ஈரம் என்ற படத்தை முதல் நாள் முதல் காட்சியில் சென்று பார்த்தேன். தமிழில் அப்படி ஒரு படத்தை இதுவரை பார்த்ததில்லை. அந்த அளவுக்குப் புதிதாக இருந்தது ஈரம்.

ஷங்கர் மட்டுமல்ல; பிரகாஷ் ராஜின் தயாரிப்பில் வந்த மொழி போன்ற படங்களும் தமிழில் மாற்று சினிமாவுக்கான அசலான முயற்சிகளாக இருந்தன. அதேபோல் சசிகுமார் தயாரிப்பில் வந்த சுப்ரமணியபுரம், பசங்க என்ற இரண்டு படங்களும் பெரிதும் சிலாகிக்கப்பட்டவை.

இப்படியாக பலரும் மாற்று சினிமாவுக்கான முயற்சியில் தங்கள் முத்திரையைப் பதித்துக் கொண்டிருக்கும் போது, அபாரமான நடிப்பாற்றல் கொண்ட, உலக சினிமாவும், இலக்கியமும் தெரிந்த கமலால் ஏன் இப்படி ஒரு படத்தைக் கூடத் தர முடியவில்லை? கமலின் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது என்னவென்று பார்த்தால், சத்யராஜ் நடித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற மொக்கைப் படம்.

ஷங்கர் தன்னை புத்திஜீவி என்று சொல்லிக் கொண்டதில்லை. ஆனால் இப்படிப்பட்ட மாற்று சினிமாவுக்கு தமிழில் ஒரு தேவை இருக்கிறது என்ற உண்மையைப் புரிந்து கொள்ளும் புத்திசாலித்தனம் அவரிடம் இருந்தது. இந்தப் படங்களை மெகா பட்ஜெட் படங்களை இயக்கும் ஷங்கர் இயக்கவில்லை. இதுவரை பெயரே கேள்விப்பட்டு அறியாத புதிய இளைஞர்களைக் கொண்டு இயக்க வைத்தார். இதுதான் இப்போது கமல் செய்ய வேண்டிய வேலை என்று நினைக்கிறேன்.

கமல்ஹாசனின் முக்கியமான எந்தப் படத்தை எடுத்துக் கொண்டாலும் அதன் இயக்குனர் பெயர் வேறாக இருக்கும். ஆனாலும் அது கிட்டத்தட்ட கமலின் இயக்கத்தில் வந்த படம்தான் என்பது தமிழ் சினிமாவில் அனைவருக்கும் தெரியும். இந்தக் குறுக்கீடு இல்லாமல் இருந்திருந்தால் ஒருவேளை கமலின் பயணம் வேறு மாதிரி இருந்திருக்கலாம். மேலும், இதை குறுக்கீடு என்ற சாதாரண சொல்லால் குறுக்கி விட முடியாது. படத்தின் ஒட்டு மொத்த போக்கையே மாற்றி விட்டு, இயக்குனர் என்ற இடத்தில் யாரோ ஒருவரின் பெயரைப் போட்டு விட்டால் அந்தப் பொறுப்பிலிருந்து கமல் தப்பித்துக் கொள்ள முடியுமா என்ன?

கமல் படங்களின் முக்கியமான பிரச்சினை, அவருடைய படங்களில் அவர் தன்னை முன்னிலைப் படுத்துவதுதான் என்று தோன்றுகிறது. வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். என்ற நல்ல பொழுதுபோக்குப் படத்தை எடுத்துக் கொண்டால் அதன் இந்தி மூலமான முன்னாபாய் எம்.பி.பி.எஸ்ஸில் அதன் ஹீரோவான சஞ்சய் தத் அவருடைய பாத்திரமான முன்னாபாயாகத்தான் நடித்திருப்பார். ஆனால் வசூல்ராஜாவில் நடிகர் கமல்ஹாசன்தான் தெரிகிறாரே தவிர ராஜாராமன் என்ற பாத்திரம் அல்ல. அதில் வரும் பாடலையே எடுத்துக் கொள்வோம். ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவா; வேட்டியைப் போட்டுத் தாண்டவா. இந்தப் பாடல் ஆழ்வார்ப்பேட்டை என்ற பகுதியில் வசிக்கும் கமல்ஹாசனைக் குறிக்கிறதே தவிர அந்த ராஜாராமன் என்ற பாத்திரத்தை அல்ல.

இது கமலின் ரசிகர்களை திருப்திப்படுத்தி, படம் ஓடுவதற்காகக் கையாளப்படும் யுத்தி. இந்த யுத்தி சினிமாவுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் கமலுக்கு எதற்காக? ரசிகனுக்காக கலைஞனா; கலைஞனுக்காக ரசிகனா? உலக நாயகன் என்று சொல்லி கமலைத் தன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கும் ரசிகனுக்கு உலக சினிமா தெரியாது. ஆனால் கமல் அதில் மூழ்கித் திளைப்பவர். அப்படியானால், உலக சினிமா தெரிந்த கமல் எதற்காக பாமர ரசனைக்காக படம் எடுக்க வேண்டும்? கமல் ஒன்றும் வாடிக்கையாளருக்கு ’ என்ன வேண்டும்?‘ என்று கேட்டு கொடுக்கும் பரோட்டாக் கடை மாஸ்டர் அல்லவே?

நான் ஒன்றும் பொழுதுபோக்குப் படங்களுக்கு எதிரானவன் அல்ல. ஆனால் எந்தப் படமாக இருந்தாலும் அதில் கமல் தன்னையும் தன் ஆளுமையையும் முன்னிறுத்திக் கொள்வதால் படத்தின் நம்பகத்தன்மை குலைந்து விடுகிறது. அதாவது, கமல் தன்னுடைய படங்களில் தனக்கு ஒரு நாயகத் தன்மையை உருவாக்குகிறார். கமலே எழுதி, இயக்கி, தயாரித்த விருமாண்டியில் இதுதான் நடந்தது. கமலின் தன்முனைப்பே பெரிதாகத் துறுத்திக் கொண்டிருந்ததால் படம் தோல்வியுற்றது. ஆனால் அதே கதை அமீரிடம் பருத்தி வீரன் என்ற கலாசிருஷ்டியாகப் பரிணமித்தது.



இப்போது வெளிவந்துள்ள உன்னைப் போல் ஒருவனை எடுத்துக் கொள்வோம். அதன் இந்தி மூலமான ’ ஒரு புதன்கிழமை ’ யில் வரும் நஸ்ருத்தீன் ஷா ஒரு சாதாரண நடுத்தர வர்க்கக் குடிமகனாக வருகிறார். அந்த வேடத்தில் நடித்திருக்கும் கமலோ அப்படிப்பட்ட நடுத்தர வர்க்க மனிதனாகத் தெரியவில்லை. போலீஸ் கமிஷனருடன் அமெரிக்க ஆங்கிலத்தில் பேசுகிறார் கமல். காரணம், படத்தில் பேசுவது கதாபாத்திரம் அல்ல; கமல்ஹாசன். இந்த யுத்தியெல்லாம் ரஜினிக்கோ விஜய்காந்துக்கோ தேவையாக இருக்கலாம். கமலுக்கு எதற்கு?

மேலும், கமல் தமிழில் மொழியாக்கம் செய்யத் தேர்ந்தெடுக்கும் இந்திப் படங்களின் அரசியலே மிகவும் விவாதத்திற்குரியது. இந்தியாவில் ராணுவ ஆட்சி வந்தால் எல்லாம் சரியாகி விடும், பிரிட்டிஷ்காரன் காலத்தில் இந்தியா நன்றாக இருந்தது என்றெல்லாம் தமது அரசியல் ஞானத்தை வெளிப்படுத்தும் நடுத்தர வர்க்க மனோபாவத்தைப் பிரதிபலிக்கும் படங்களையே அவர் மொழியாக்கம் செய்யத் தேர்ந்தெடுப்பது ஏன் என்று புரியவில்லை.

உதாரணமாக, அப்பாவி மக்களைக் கொல்லும் தீவிரவாதிகளையெல்லாம் விசாரணையில்லாமல் தீர்த்துக் கட்டி விட்டால் இந்தியா அமைதிப் பூங்காவாகி விடும் என்ற நடுத்தர வர்க்கப் புரிதலே ’ ஒரு புதன்கிழமை ’ இந்திப் படத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியல். மற்றபடி, இளம் வயதில் தங்கள் உயிரையே மாய்த்துக் கொண்டு போராளிகளாக மாறும் ஆயிரக் கணக்கான இளைஞர்கள் உருவாவது ஏன் என்பது பற்றிய எந்தச் சிந்தனையும் அந்தப் படத்தில் இல்லை. அது ஒரு நல்ல த்ரில்லர் என்பதில் எனக்கு மறுப்பு இல்லை. ஆனால் அதன் அரசியலில் மிகப் பெரிய அபாயம் உள்ளது. அதோடு, அப்படிப்பட்ட தீவிரவாதிகள் பிரச்சினையும் தமிழ்நாட்டில் இல்லை. தமிழ்நாடு என்ற பிரதேசத்தின் பிரச்சினைகள் வேறு. அந்தப் பிரச்சினைகளை கமல் எதிர்கொள்ள வேண்டுமானால் ஒன்று, அவர் ஒரு தீவிரமான இயக்குனரிடம் தன்னை முழுமையாக ஒப்புக் கொடுக்க வேண்டும். அல்லது, மாற்று சினிமாவை நோக்கிய கனவுகளோடு வரும் இளைஞர் கூட்டத்தைக் கொண்டு குறைந்த செலவிலான புதிய படங்களைத் தயாரிக்க வேண்டும். இதைத் தவிர இதுவரை சென்றிராத வேறு வழிகளிலும் யோசிக்கலாம்.

நன்றி: இந்தியா டுடே

25 செப்டம்பர், 2009

நான் ஏன் செருப்பு வீசினேன்!

ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த ‘குற்றத்திற்காக’ ஒன்பது மாத சிறை வாசத்திற்குப் பின், கடந்த வாரம் விடுதலையாகியுள்ள முன்தாஜர் அல் ஜெய்தி எழுதிய கீழ்க்காணும் கட்டுரை, கார்டியன் செய்தித்தாளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. அதன் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது :


நான் விடுதலையடைந்து விட்டேன். ஆனால், எனது நாடு இன்னமும் போர்க் கைதியாக சிறை வைக்கப்பட்டிருக்கிறது. செயல் குறித்தும், செயல்பட்டவர் குறித்தும், நாயகனைக் குறித்தும், நாயகத்தன்மை வாய்ந்த செயல் குறித்தும், குறியீடு குறித்தும், குறியீடான செயல் குறித்தும் நிறையப் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆனால், எனது எளிமையான பதில் இதுதான். என் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும், எனது தாயகத்தை ஆக்கிரமிப்பானது எவ்வாறு தனது பூட்சுக் கால்களால் நசுக்கி இழிவுபடுத்த விரும்பியதென்பதும்தான், என்னை செயல்படக் கட்டாயப்படுத்தியது.கடந்த சில ஆண்டுகளில், ஆக்கிரமிப்பின் துப்பாக்கி ரவைகளுக்கு இரையாகி பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட தியாகிகள் தமது இன்னுயிரை இழந்தார்கள். கணவனை இழந்த ஐம்பது இலட்சம் பெண்களும், உடல் உறுப்புகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்களும் நிறைந்து கிடக்கும் தேசம்தான் இன்றைய இராக்.

நாட்டுக்குள்ளும், வெளியிலும் இலட்சக்கணக்கானவர்கள் அகதிகளாய் உழன்று கொண்டிருக்கிறார்கள்.துருக்கியர், அசிரியர், சபியர், யாசித் என அனைவரோடும் தனது அன்றாட உணவை அரபு இனத்தவன் பகிர்ந்துண்ட ஒரு தேசமாக நாங்கள் வாழ்ந்திருந்தோம். சன்னியுடன் ஷியா ஒரே வரிசையில் நின்று வழிபட்ட காலமது. கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்தவரோடு இசுலாமியர் இணைந்து கொண்டாடிய நாட்கள் அவை. இவையனைத்தும் பத்தாண்டுகளுக்கும் மேலான பொருளாதாரத் தடைகளுக்கிடையே, பசியை பகிர்ந்து கொள்ள நேர்ந்த போதிலும் கூட நீடித்திருந்தன.எமது பொறுமையும், ஒற்றுமையும் ஏவப்பட்ட ஒடுக்குமுறையை மறக்கவிடாமல் தடுத்தன.

ஆனால், ஆக்கிரமிப்போ சகோதரர்களையும், நெருக்கமானவர்களையும் பிரித்துத் துண்டாடியது. எங்கள் வீடுகளை சுடுகாடுகளாக்கியது.நான் நாயகனல்ல. ஆனால் எனக்கு ஒரு கண்ணோட்டம் உண்டு. ஒரு நிலைப்பாடு உண்டு. எனது நாடு இழிவுபடுத்தப்படுவதைக் கண்ட பொழுது, எனது பாக்தாத் நகரம் தீயில் கருகிய பொழுது, எனது மக்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது, நான் இழிவுபடுத்தப்பட்டவனாக உணர்ந்தேன். ஆயிரக்கணக்கான துயரம் தோய்ந்த காட்சிகள் எனது மனதில் அலைமோதிக் கொண்டிருந்தன. என்னை போரிடத் தூண்டின. இழிவுபடுத்தப்பட்ட அபுகிரைப்…பலூஜா, நஜாஃப், ஹடிதா, சதர் நகரம், பஸ்ரா, தியாலா, மொசூல், தல் அஃபர் என ஒவ்வொரு இடத்திலும் நடைபெற்ற படுகொலைகள்… ஒரு அங்குலம் குறையாமல் காயமுற்ற எனது நாடு… எரியும் தேசத்தினூடாகப் பயணம் செய்து, நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் வலியைக் கண்ணால் கண்டேன். துயருற்றவர்களின் ஓலத்தை, அனாதைகளாக்கப்பட்டவர்களின் அலறலை காதுகளில் கேட்டேன்.

ஒரு அவமானம் என்னை அழுத்தி வாட்டியது. நான் பலவீனனாக உணர்ந்தேன்.அன்றாடம் நிகழ்ந்த துயரங்களை தெரிவிக்கும் ஒரு தொலைக்காட்சி நிருபராக, எனது தொழில்சார்ந்த கடமைகளை முடித்த பின்னால், தரைமட்டமாக்கப்பட்ட இராக்கிய வீடுகளின் இடிபாடுகளின் தூசியையோ அல்லது ஆடைகளில் படிந்த இரத்தக் கறைகளையோ, நான் தண்ணீரால் கழுவிய பொழுதுகளில், பற்கள் நெறுநெறுக்க, பாதிக்கப்பட்ட எனது நாட்டு மக்களின் பேரால் பழிக்குப் பழி வாங்குவேனென நான் உறுதிமொழி எடுத்துக் கொள்வேன்.வாய்ப்பு வழிதேடி வந்தது.

நான் அதனைக் கைப்பற்றிக் கொண்டேன்.ஆக்கிரமிப்பினூடாகவும், ஆக்கிரமிப்பின் விளைவாகவும் சிந்தப்பட்ட அப்பாவிகளின் ஒவ்வொரு இரத்தத் துளிக்கும், வேதனையில் கதறிய ஒவ்வொரு தாயின் ஒலத்திற்கும், துயரத்தில் முனகிய ஒவ்வொரு அனாதையின் கண்ணீருக்கும், பாலியல் வன்புணர்ச்சியால் சிதைக்கப்பட்ட பெண்களின் அலறலுக்கும், நான் செய்ய வேண்டிய கடமையாகக் கருதியதனால்தான் அச்செயலை செய்தேன்.என்னைக் கண்டிப்பவர்களுக்கு நான் சொல்வது: “நான் வீசியெறிந்த காலணி, உடைந்து நொறுங்கிய எத்தனை வீடுகளை தாண்டி வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? பலியான எத்தனை அப்பாவிகளின் குருதியைக் கடந்து வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா?

எல்லா மதிப்பீடுகளும் மீறப்படும்பொழுது செருப்புதான் சரியான பதிலடியாகத் தோன்றுகிறது.”குற்றவாளியான ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த பொழுது, எனது நாட்டின் மீதான ஆக்கிரமிப்பை, எனது மக்களைப் படுகொலை செய்ததை, எனது நாட்டின் வளத்தை கொள்ளையடித்ததை, அதன் கட்டுமானங்களை தரைமட்டமாக்கியதை, அதன் குழந்தைகளை அகதிகளாக்கியதை, நான் ஏற்க மறுக்கிறேன் என்பதையே தெரிவிக்க விரும்பினேன்.ஒரு தொலைக்காட்சி நிருபராக, நிர்வாகத்திற்கு தொழில்ரீதியாக ஏற்பட்ட சங்கடத்திற்கும், ஒருவேளை நான் பத்திரிக்கை தருமத்திற்கும் ஊறு விளைவித்திருப்பதாகக் கருதினால், அத்தகைய நோக்கம் எனக்கு இல்லாத போதும், எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒட்டுமொத்தத்தில், ஒவ்வொரு நாளும் தனது தாயகம் இழிவுபடுத்தப்படுவதைக் காணச் சகியாத ஒரு குடிமகனின் அணையாத மனசாட்சியை வெளிப்படுத்தவே நான் விரும்பினேன். ஆக்கிரமிப்பின் அரவணைப்பிற்குள்ளிருந்து தொழில் தர்மம குறித்து முனகுவோரின் குரல் நாட்டுப்பற்றின் குரலை விடவும் ஓங்கி ஒலிக்கக் கூடாது. நாட்டுப்பற்று பேச விரும்பும் பொழுது, அதனோடு தொழில் தர்மம இணைந்து கொள்ள வேண்டும்.எனது பெயர் வரலாற்றில் இடம் பெறுமென்றோ, காசு, பணம் கிடைக்குமென்றோ, நான் இதனைச் செய்யவில்லை. நான் எனது நாட்டைக் காக்க மட்டுமே விரும்பினேன்.

நன்றி – http://porattamtn.wordpress.com/