9 நவம்பர், 2009

மழைப்பாக்கம்!


உங்களுக்கு மழையை ரொம்பவும் பிடிக்குமா? தூறத் தொடங்கியதுமே கவிதை எழுத பேனாவைக் கையில் எடுத்துவிடுபவரா?

தோழர் ஆதவன் தீட்சண்யாவின் ‘வேறு மழை’ கவிதையை வாசியுங்கள்...

மிஞ்சிப்போனா என்ன
சொல்லிற முடியும் உன்னால
இந்த மழையைப் பத்தி

ஓதமேறுன கொட்டாய்ல
கோணில மொடங்கியும்
குளுர்ல நடுங்கியிருக்கியா

உங்கூட்டுப் பொண்டுக
நமுத்த சுள்ளியோட சேந்தெரிஞ்சு
கஞ்சிக் காய்ச்சியிருக்காங்களா
கண்ணுத்தண்ணி உப்பு கரிக்க

ஈரஞ்சேராம எளப்பு நோவெடுத்து
செத்த சொந்தத்த எடுக்க வக்கத்து
பொணத்தோட ராப்பகலா
பொழங்கித் தவிச்சதுண்டா

ஒழவுமாடொன்னு கோமாரியில நட்டுக்க
ஒத்தமாட்டைக் கட்டிக்கிட்டு
உயிர்ப் பதற அழுதிருக்கா உங்குடும்பம்

எதுக்கும் ஏலாம
உஞ்செல்லப்புள்ளையோட
சிறுவாட்டக் களவாண்டு
சீவனம் கழிஞ்சிருக்கா

தங்கறதுக்கு வூடும்
திங்கறதுக்கு சோறுமிருந்துட்டா
சவுரியத்துக்கு எழுதுவியாடா மயிரானே
ஒண்ணு தெரிஞ்சுக்கோ
மழை ஜன்னலுக்கு வெளியதான்
எப்பவும் பெய்யுது உனக்கு
எங்களுக்கு எங்க பொழப்பு மேலயே.

* - * - * - * - * - * - * - * - * - *

காலையில் கே.டிவி.யில் ‘பாட்டுக்கு நான் அடிமை’ ஓடிக்கொண்டிருந்தது. கவுண்டமணி-பாண்டு கோஷ்டியின் காமெடிக்குத்து சலிக்கவே சலிக்காது. இசைஞானியின் இசையில் பாடல்கள் தேன். ராமராஜனை வைத்துக்கூட முழுநீள காமெடி கேரக்டரில் சப்ஜெக்ட் எடுத்த இயக்குனர் ஷண்முகப்ரியனின் லேட்டரல் திங்கிங்குக்கு பிக் சல்யூட். படத்தில் ஒரே ஒரு குறை. கதாநாயகி ரேகா. முதிர்கன்னி தோற்றத்தில் அவர் பாவாடைத் தாவணியோடு வருவது கடுப்பு.

* - * - * - * - * - * - * - * - * - *

ஆச்சரியமான விஷயம். முப்பது மணி நேரத்துக்கும் மேலாக மழை அடித்து நொறுக்கியும் கூட இன்னமும் மடிப்பாக்கம் நகரத்திலிருந்து துண்டாகிவிடவில்லை. அதுபோலவே நகரின் ரயில்வே கிராசிங் சப்வேக்கள் நிரம்பிப் போய் போக்குவரத்து ஸ்தம்பித்து விடவில்லை.

நான்கைந்து மணிநேரம் மழைபொழிந்தாலே வெள்ளமாகிவிடும் சென்னை, இம்முறை மழையை கம்பீரமாக வரவேற்றிருக்கிறது. குறிப்பாக தென்சென்னை பளிச். தி.நகர் ஜி.என். செட்டிசாலை மற்றும் வடசென்னையில் சில பகுதிகள் தான் விதிவிலக்கு. இதுபோன்ற மழைக்கு நான்கைந்து நாட்கள் ஸ்ட்ரைக் விடும் வியாசர்பாடி, பெரம்பூர் சப்வேக்கள் கூட விரைவாக இயல்புக்கு திரும்பிவிட்டது.

பெரிய மேஜிக்கெல்லாம் ஒன்றுமில்லை. மழைக்கு முன்பாக கால்வாய்கள் இப்போது தான் ஒழுங்காக தூர்வாரப்பட்டிருக்கிறது. குறிப்பாக மாம்பலம் கால்வாய், பக்கிங்காம் கால்வாய், வேளச்சேரி ஏரி கால்வாய் ஆகியவற்றை தூர்வாரும் பணி, நேர்மையான காண்ட்ராக்டர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் போலிருக்கிறது.

கடந்த வருடமே பாஸ் மார்க் வாங்கிவிட்ட திமுக அரசு, தேர்தலுக்கு முன்பாக பர்ஸ்ட் கிரேடில் தேறிவிடும் என்ற நம்பிக்கை வருகிறது.

* - * - * - * - * - * - * - * - * - *

மழைநேரத்தில் அடிக்கடி உச்சா வருவதைப்போல, அடிக்கடி தம் அடிக்கவேண்டும் என்ற உணர்வும் இயல்பாகவே அடிமனதிலிருந்து நாதவெள்ளம் மாதிரி ஊற்றெடுக்கும். நனைந்தப்படியே பெட்டிக்கடைக்குச் சென்று ஒரு கிங்ஸ் வாங்கி வாயில் வைத்து, தீப்பெட்டியை எடுத்து பற்றவைத்தால்... ம்ஹூம்.. சிக்கிமுக்கி கல்லை வைத்து தேய்த்துக்கூட நெருப்பினை பற்றவைத்து விடலாம். லைட்டாக நனைந்துப்போன நம் தீப்பெட்டிகள் பற்றவே பற்றாது. எனவே, மழைக்காலத்தில் மட்டுமாவது நமுத்துப்போன தீப்பெட்டிகளுக்குப் பதிலாக, அட்லீஸ்ட் மட்டமான பத்துரூவாய் சைனிஸ் லைட்டரையாவது பொட்டிக்கடை அதிபர்கள் கைவசம் வைத்திருக்குமாறு, அடாத மழையிலும் விடாது தம்மடிப்போர் சங்கத்தின் சார்பாக கோரிக்கை விடுக்கிறோம்.

* - * - * - * - * - * - * - * - * - *

இந்தப் பதிவின் தலைப்புக்கு சொந்தக்காரர், மறைந்த தென்கச்சியார்.

8 நவம்பர், 2009

நட்புச் சதுரங்கம்!


"நண்பர்களோடு இருக்கையில் உன்னிடம் மறைவாக குறுவாள் இருக்கவேண்டியது அவசியம்" ஒரு ஐரோப்பிய சிந்தனையாளரின் கருத்து இது.

வாழ்க்கையில் நம்மால் விடையளிக்க முடியாத புதிர்கள் ஏராளம். அவற்றில் முக்கியமானது நட்பு. எது உண்மையான நட்பு? எது போலி நட்பு? என்று கால்நூற்றாண்டுகளுக்கு மேலாக வாழ்ந்தும் இன்னமும் என்னால் அடையாளம் காண இயலவில்லை. ஓரிரு முறை பழகியிருந்தாலும் எந்த பிரதிபலனும் பாராமல் ஆபத்துக் காலத்தில் உதவிய நண்பர்களையும் கண்டிருக்கிறேன். முகத்துக்கு நேரே உயிருக்கு உயிராக பழகி, முதுகுக்கு பின்னால் குத்திய நண்பர்களையும் கண்டிருக்கிறேன்.

ரத்த பந்த உறவுகள் மீது நாம் கொள்ளும் பாசத்துக்கும், அறிமுகமான பாவத்துக்கு நட்புக்கள் நம் மீது காட்டும் பாசத்துக்குமான வேறுபாடுகளை உணரமுடிகிறது. முந்தையது கட்டாயத்தின் பேரில், மரபுரீதியாக, வேறுவழியில்லாமல் வந்து தொலைப்பது. பிந்தையது எந்த புள்ளியிலும் வரையறுக்க இயலாதது.

என்னுடன் பணியாற்றிக் கொண்டிருந்த நண்பர் ஒருவர் எப்போதும் நிர்வாகத்தை குறை சொல்லிக்கொண்டே இருப்பார். முதலாளியைப் பற்றிய மோசமான விமர்சனங்களே அவர் அலுவலக நண்பர்கள் மத்தியில் பேசும்போது அதிகமாக இடம்பெறும். ஆயினும் வருடா வருடம் சம்பள உயர்வின் போது மட்டும் அவர் எங்கள் எல்லாரையும் விட லீடிங்கில் இருப்பார்.

அந்த ரகசியம் சில ஆண்டுகள் கழித்து நான் நிறுவனத்தை விட்டு வெளியே வந்தபின்னர் தான் தெரிந்தது. எங்களிடையே நிர்வாகத்தையும், முதலாளியையும் குறைசொல்வது போல பேசி.. நாங்கள் தெரியாத்தனமாக ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகளை விட்டால் அதை முதலாளியிடம் சொல்லி இரட்டை வேடம் போட்டிருக்கிறார். இன்றும் அவர் என்னிடம் நல்ல நண்பராகத்தான் இருக்கிறார். ஆயினும் எங்கள் நட்பை அவர் தன் சுயலாபத்துக்காக பயன்படுத்திக் கொண்டார் என்ற உறுத்தல் எனக்கு இருக்கிறது.

விளம்பரத்துறைக்கு வந்த என்னுடைய ஆரம்ப நாட்களில் மிகக்குறைந்த சம்பளத்துக்கு அதிகவேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்நிறுவனத்தின் டெல்லி கிளை நிர்வாகி ஒரு முறை சென்னை வந்திருந்தார். ஒத்தவயதினராக இருந்ததால் என்னுடன் மிக சுலபமாக பழகினார். இருவரும் நட்பாக இருந்த காலத்தில் அவருக்கு தனிப்பட்ட முறையில் சில உதவிகளை (ரொம்ப ரொம்ப அல்பமான உதவிகள்) செய்து தந்தேன். அவர் டெல்லி திரும்பியவுடன் அவருடன் இருந்த என்னுடைய நட்பு எப்போதாவது சாட்டிங்கில் "ஹலோ" சொல்லும் அளவிலேயே இருந்தது.

அந்த ஆண்டு சம்பள உயர்வின் போது, சென்னை கிளை நிர்வாகிகளின் பலத்த எதிர்ப்பையும் மீறி நிர்வாக இயக்குனர் நான் எதிர்பாராத பெரிய அளவிலான சம்பள உயர்வையும், மற்ற சலுகைகளையும் வழங்கினார். நானே எதிர்பாராத ஆச்சரியம் அது. சில ஆண்டுகள் கழித்து ஒரு முறை நிர்வாக இயக்குநரே என்னிடம் தனிப்பட்ட முறையில் "உன் டெல்லி நண்பரின் பலத்த சிபாரிசு" தான் உன் உயர்வுக்கு காரணம் என்றார். நானே எதிர்பாராமல் ஒரு சிறுநட்பால் விளைந்த பலன் அது.

உயிர்கொடுத்த நட்புகளையும், முதுகில் குத்தும் நட்புகளையும் வாழ்வில் ஏராளமாக சந்தித்து வருகிறேன். ஆயினும் எந்த நட்பையுமே வரையறை செய்து என்னால் இன்றுவரை தேர்ந்தெடுக்க இயலவில்லை. Junk mails வருவதைப் போல ஏராளமான நண்பர்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள். சில நாட்களில் Not Spam என்ற கட்டளை கொடுத்து அவர்களுடன் நெருங்கிய நண்பன் ஆனதும் உண்டு. நெருங்கிய நட்பு என்று நினைத்தவர்களை Report Spam கொடுத்து விலக்கியதும் உண்டு.

ஆயினும் நான் புரிந்துகொண்ட ஒரே உண்மை. நம் மகிழ்ச்சியை கொண்டாட நம் நட்பு வட்டம் முழுவதுமே நம் அருகிலிருக்கும். துயரத்தைப் பகிர ஓரிரு நட்புகளே முன்வருவார்கள். உண்மையான நட்பு எது என்பதை அப்போது மட்டுமே உணரமுடியும். எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள். நண்பர்களிடம் அதி எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் நெருங்கிய நண்பனுக்குள்ளேயே கூட மோசமான எதிரி ஒளிந்துகொண்டிருக்கலாம். சுயநலவாதிகளுக்கு நட்பு முக்கியமல்ல. நட்பின் பொருள் அவர்களுக்கு தெரியாது.

வாழ்க உண்மையான நண்பர்கள்!!!

7 நவம்பர், 2009

அழித்தொழிப்பு!

முதல் பாகம் : துப்பாக்கிக் குழாயில் அரசியல் அதிகாரம்!
இரண்டாம் பாகம் : வசந்தத்தின் இடிமுழக்கம்!
மூன்றாம் பாகம் : இடியுடன் கூடிய மழை!
நான்காம் பாகம் : மழைக்குப் பின் புயல்!
ஐந்தாம் பாகம் : பீகார் ஜெயில் தகர்ப்பு!


நக்சல்களை வாசிக்கும்போது அடிக்கடி வரும் இந்த ‘அழித்தொழிப்பு’ என்ற பதம் உங்களை அலைக்கழிக்கலாம். நீங்களோ, நானோ ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றால் அதன் பெயர் என்ன? கொலை தானே? இதையே காவல்துறை ஒருவரை சுட்டுக் கொன்றால் அது என்கவுண்டர். இராணுவத்தினர் துப்பாக்கியை முழக்கினால் அதற்குப் பெயர் போர். தங்களை ராணுவத்தினர், கொரில்லாப்படை என்று கூறிக்கொண்ட நக்சலைட்டுகள் தாங்கள் செய்த கொலைகளை ‘அழித்தொழிப்பு’ என்று பெயரிட்டு அழைத்தனர்.

ஒரு குறிப்பிட்ட கிராமத்துக்கு அழித்தொழிப்புப் பணிகளுக்காக செல்லும் போராளிகளை ஏற்கனவே அந்த கிராமத்தில் வசிக்கும் ஒருவர் அழைத்துச் செல்வார். பொதுவாக அந்த கிராமவாசி அக்கிராமத்தில் வசிக்கும் மாணவர்களில் ஒருவராக இருப்பார். அழித்தொழிப்பு குழுவினர் சில காலம் அக்கிராமத்தில் தங்கி ஏதாவது விவசாயக்கூலி வேலை செய்வார்கள். அங்கிருக்கும் மற்ற விவசாயக் கூலிகளோடும், ஒடுக்கப்பட்டோருடனும் பழகி அவர்களில் நம்பகமான சிலரையும் தங்களது அழித்தொழிப்பு பணியில் ஈடுபடுத்திக் கொள்வார்கள்.

ஏற்கனவே இதுபோன்ற கிராமங்களில் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்டு கட்சிகள் காலூன்றியிருக்கும். அக்கட்சியைச் சேர்ந்தவர்களை நக்சல்பாரிகள் எதிரிகளாக பார்ப்பது வழக்கம். அக்கட்சிகள் ஊடுருவமுடியாத கிராமப்புறங்களையும் ஊடுருவியது தான் நக்சல்பாரிகளின் குறிப்பிடத்தக்க வெற்றி.

அழித்தொழிப்பை ஒரு போராட்ட வடிவமாக சாரு மஜூம்தார் பார்த்தார். மக்கள் விடுதலைக்கு அவசியமான ஒரு போராட்டம் இது என்று கருதினார். இதைத்தவிர்த்து வேறு திட்டங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும்படி நக்சல்பாரிகளிடம் இல்லை. அழித்தொழிப்புக்கு தயாராக யார் யார் இருக்கிறார்கள்? எத்தனை பேரை கொல்லப் போகிறார்கள்? எவ்வளவு காலம் பிடிக்கும்? - இதுபோன்ற கேள்விகளுக்கு விடை தேடுவதிலேயே நக்சல்பாரிகள் குறியாக இருந்ததால் அன்றாடம் மக்கள் காணக்கூடிய பிரச்சினைகளுக்கான போராட்டத்துக்கு பின்னடைவு ஏற்பட்டது.

அழித்தொழிப்புப் பணிகளுக்கு செல்லும் போராளிகளுக்கு தெளிவான வழிமுறைகளையோ, பண உதவியையோ இயக்கத்தலைமை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. பணிகளுக்கு செல்லும் போராளிகளே ஆங்காங்கே பணி செய்து தங்களுக்கு தேவையான பணத்தை சம்பாதிக்க வேண்டியிருந்தது. உண்மை நிலைக்கு மாறாக அந்தத பிராந்திய சூழல்களை கருத்தில் கொள்ளாமல் இயந்திரத்தனமான அழித்தொழிப்பு ஒரு கட்டத்தில் போராளிகளுக்கு அலுத்துப் போனது. இதுவரை போதிக்கப்பட்ட தர்ம, நியாயங்களுக்கு கட்டுப்படாத ஒரு செயல் அழித்தொழிப்பு என்பதால் பலபேருக்கு மனநிலையும் பாதிக்கப்பட்டது.

“வர்க்க எதிரியின் இரத்தத்தில் கைநனைப்பவனே உண்மையான கம்யூனிஸ்டு, பத்து அழித்தொழிப்புகளை மேற்கொண்டவன் இந்த உலகத்தில் எதற்குமே அஞ்சவேண்டியதில்லை” போன்ற சாரு மஜூம்தாரின் கருத்துக்கள் இயக்கத்தில் இருந்தவர்களுக்கே பீதியை வரவழைத்தது. தொழிற்சங்கங்களே தேவையில்லை என்பது சாரு மஜூம்தாரின் எண்ணம். அடிப்படையான கட்டமைப்பு, முறையான பயிற்சி மற்றும் முன் அனுபவம் இல்லாமல் அழித்தொழிப்பு பணிக்கு சென்ற பல போராளிகள் அரைகுறையாக பணியை முடித்து, காவல்துறையிடம் மாட்டி உயிரை விட்டார்கள், அல்லது சிறைகளில் கம்பி எண்ணினார்கள்.

ஆரம்பத்தில் அழித்தொழிப்பின் நோக்கம் வேறாக இருந்தது. ஒரு பகுதியில் அழித்தொழிப்பு நடந்தால் சுற்று வட்டாரத்தில் இருக்கும் நிலமுதலாளிகள் அஞ்சுவார்கள். தங்கள் பண்ணைகளில் வேலைபார்க்கும் தொழிலாளிகளை நல்ல முறையில் நடத்துவார்கள். மக்களுக்கும் மனமாற்றம் ஏற்படும். நிலச்சீர்த்திருத்தம் ஏற்படும். புரட்சிக்கு மிக சுலபமாக அவர்கள் தயாராவார்கள். ஆனால் அழித்தொழிப்பு நடந்த பல பகுதிகளிலோ அது சாதியப்போராட்டமாகவும், ஒரு சாதியினரின் வெற்றியாகவும் பார்க்கப்பட்டது.

அழித்தொழிப்பில் மக்களுக்கு பங்கு எதுவுமே இல்லாத நிலையும் இருந்தது. மக்கள் பங்கில்லாத போராட்டங்களில் போராட போராளிகளுக்கு ஒரு கட்டத்தில் அலுப்பு தட்ட ஆரம்பித்தது. வெகுஜனப்போராட்டம் என்பதே சீனாவின் கொள்கையாக இருந்தது. நக்சல்பாரிகளின் அழித்தொழிப்புப் போராட்டத்தில் வெகுஜனத்துக்கு இடமில்லை. மாவோ தேர்தலில் போட்டியிட்டதில்லை, பாராளுமன்ற வாக்கெடுப்பு அரசியல் செய்ததில்லை. ஏனென்றால் சீனாவில் பாராளுமன்றமும் இல்லை, தேர்தலும் இல்லை. வன்முறைப்போராட்டம் என்றில்லாமல் அமைதிப்போராட்டத்துக்கு இடமிருந்தால் அதையும் செய்ய சீனா தயாராகவே இருந்திருக்கிறது. ஆனால் நக்சல்பாரிகள் இந்த விஷயங்களை கணக்கிலெடுக்க தவறிவிட்டார்கள். சீனாவின் பாதை தான் எம்பாதை என்று அவர்கள் முழக்கமிட்டாலும் சீனாவை முழுக்க முழுக்க உணராமலேயே பின் தொடர்ந்தார்கள் என்ற குற்றச்சாட்டும் மற்ற கம்யூனிஸ்டு இயக்கங்களால் நக்சல்பாரிகள் மீது சாட்டப்பட்டது.

“எழுபதுகளை புரட்சிகளின் பத்தாண்டுகளாக்குவோம்” என்று சொல்லிய சாரு மஜும்தார் 72லேயே மரணமடைந்து விட்டார். 80ஆம் ஆண்டுவரை புரட்சி வருவதற்கான அறிகுறியே தெரியாததால் போராளிகள் மனமுடைந்தார்கள். தொடர்ந்து அழித்தொழிப்புப் பணிகளை செய்து மாட்டினால் தூக்குக்கு செல்வது அவர்களுக்கு தொடர்கதை ஆனது. எமர்ஜென்ஸிக்குப் பிறகு இயக்கத்துக்குள் ஏற்பட்ட சித்தாந்த வாதங்களால் 80களின் தொடக்கத்தில் நக்சல்பாரிகள் அதிகாரப்பூர்வமாக அழித்தொழிப்பு நடவடிக்கைகளை கைவிட்டார்கள். ஆனாலும் சாருவின் கட்சியான இந்திய கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியில் இருந்து பிரிந்து சென்ற பல குழுக்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக இன்றும் கூட அழித்தொழிப்பு மூலம் புரட்சி மலரும் என்றும் நம்பிக்கொண்டு தானிருக்கிறார்கள்.

(அழித்தாலும் புரட்சி தொடர்ச்சியாக வெடிக்கும்)

6 நவம்பர், 2009

சினிமாவும், செக்ஸும்!

’அம்முவாகிய நான்’ படம் வெளிவருவதற்கு முன்பாக ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் பத்திரிகையாளர் காட்சி நடந்தது. ஒரு இணையத்தளம் சார்பாக போயிருந்த நான், ஒரு ஐந்து நிமிட இடைவெளியில் அப்படத்தின் இயக்குனரிடம் சின்ன பேட்டி எடுத்தேன். படம் பிற்பாடு பழுத்துவிட்டது என்றாலும் பத்மாமகன் சொன்ன சில விஷயங்கள் யதார்த்தமானவை. எனக்கு தெரிந்து சினிமாவைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்தவர்கள்தான் தோல்விப்படங்களாக தருகிறார்கள். ஒன்றும் தெரியாதவர்கள் (அல்லது தெரிந்தது போல பேசாதவர்கள்) ஹிட்டுக்களாக அடித்துத் தள்ளுகிறார்கள். இன்னொரு எல்லோருக்கும் தெரிந்த ஆச்சரியமான விஷயம், தமிழ் நன்கு பேசத்தெரிந்த நடிகைகள் யாரும் இங்கே பாப்புலர் ஆக முடிவதில்லை. ‘அம்முவாகிய நான்’ படத்தின் நாயகி, நான் எதிர்பாராவண்ணம் நல்ல தமிழில் பேசினார்.

பத்மாமகனின் அந்தப் பேட்டி கீழே :


'அம்முவாகிய நான்' திரைப்படத்தின் இயக்குனர் பத்மாமகன் எளிமையாக இருக்கிறார். வெள்ளந்தியாக சிரிக்கிறார். படம் குறித்த திரையுலகினரின், பத்திரிகையாளரின் பாராட்டு மழையினில் நனைந்து கொண்டிருந்தவர் நமக்கும் சில மணித்துளிகள் ஒதுக்கினார். "படம் நல்லா வந்திருக்கு" என்றதுமே "நன்றிங்க. எல்லாம் உங்க ஆசீர்வாதம் தான்!" என்று கலாய்க்கிறார். முந்தைய தோல்விகளை 'தோல்வி' என்று தைரியமாக ஒப்புக் கொள்கிறார். லேசான தெற்றுப்பல் தெரிய மூச்சுக்கு முன்னூறு தடவை மனம் விட்டு சிரிப்பது பத்மாமகனின் சிறப்பு.

கேள்வி : கமர்சியல் படங்களாலே தமிழ்த் திரையுலகமே அதிருக்கிட்டிருக்கும் போது 'அம்முவாகிய நான்' ஏன்?

பத்மாமகன் : 'அம்முவாகிய நான்' கமர்சியல் படம் இல்லைன்னு யார் சொன்னது? அதிருக்கட்டும் கமர்சியல்னா என்ன?

கேள்வி : கமர்சியல்னா பைட்டு, பாட்டு, ஸ்டார் வேல்யூ...

பத்மாமகன் : அதாவது இண்ட்ரெஸ்டிங் பாயிண்ட் ஏதோ ஒண்ணு இருந்தா அது கமர்சியல். 'செக்ஸ்' ரொம்ப இண்ட்ரெஸ்டிங்கான விஷயம் இல்லையா? அதை ஹேண்டில் பண்ணி படம் எடுத்தா அதுவும் கமர்சியல் தானே? தமிழ் சினிமாவிலே செக்ஸை நம்பி படம் எடுத்தவங்க யாரும் கெட்டதில்லை. ஆனாலும் ஜாக்கிரதையா ஹேண்டில் பண்ண வேண்டிய விஷயம். கரணம் தப்பினால் மரணம் என்கிறமாதிரி கொஞ்சம் வேற மாதிரியா எடுத்தாலும் ஆபாசமாகிட கூடிய வாய்ப்பிருக்கு. ஒரு கழைக்கூத்து ஆடும் தொழிலாளியின் லாவகத்தோடு இதை கையாள வேண்டியிருக்கு.

கேள்வி : புரியலை. யாரெல்லாம் 'செக்ஸை' ஹேண்டில் பண்ணி சினிமாவுலே சக்ஸஸ் ஆயிருக்காங்க?

பத்மாமகன் : எம்.ஜி.ஆரில் ஆரம்பித்து, பாக்யராஜ்... ஏன் நேற்றைய எஸ்.ஜே. சூரியா வரைக்கும் பெரிய வெற்றியாளர்கள் பட்டியல் இருக்கு. இதயக்கனி பார்த்திருக்கீங்களா? இலைமறை காய்மறையாய் செக்ஸை அழகாக காட்டியிருப்பாங்க. பாக்யராஜ்... சொல்லவே தேவையில்லை. முருங்கைக்காயை யாராவது மறந்துடமுடியுமா?

கேள்வி : முதல் படம் செம மசாலாவா எடுத்தீங்க? அடுத்து ஏன் பரிட்சார்த்த முயற்சி?

பத்மாமகன் : முதலில் நான் எடுக்க விரும்பிய படமே இதுதான். தயாரிப்பாளரும் இந்த கதையை கேட்டு தான் எனக்கு வாய்ப்பளித்தார். ஆனாலும் நம்மை நம்பி கோடிகளை முதலீடு செய்யும் தயாரிப்பாளருக்கு லாபம் கொடுக்கணும்னு நெனைச்சி 'பல்லவன்' எடுத்தேன். ஒவ்வொரு இயக்குனருமே நல்ல படம் கொடுக்கணும்னு தான் நெனைக்கிறோம். 'உட்டாலங்கடி படம்' கொடுக்க எங்களுக்கு என்ன வேண்டுதலா?

பல்லவன் தப்பான நேரத்துலே ரிலீஸ் ஆயிடிச்சி. வண்ணத்திரையிலே கூட "உட்டாலங்கடி படம் எடுத்திருக்கார் பத்மாமகன்" அப்படின்னு எழுதினாங்க. வேர்ல்டு கப் நேரத்துலே ரிலீஸ் பண்ணோம். அந்தப் படத்தோட தோல்விக்கு இதுமாதிரி நிறைய Factors இருக்கு. இருந்தாலும் அதே தயாரிப்பாளர் மறுபடியும் என்னை வெச்சி 'ராகவா' படத்துக்கு பூஜை போட்டாங்க. தனுஷ் ஹீரோ. எங்களோட கெட்ட நேரம் என்னென்னவோ நடந்துடுச்சி. அரை கோடி ரூபாய்க்கு தயாரிப்பாளருக்கு நஷ்டம். இருந்தாலும் அதே தயாரிப்பாளர் என் மேல நம்பிக்கை வெச்சி இந்தப் படம் எடுக்க வாய்ப்பு கொடுத்திருக்காரு. முந்தைய தோல்விகளையெல்லாம் ஈடுகட்டற மாதிரி இந்தப் படத்துலே அசலும் முதலுமா வசூலிச்சிடுவோம் இல்லே...

கேள்வி : 'அம்முவாகிய நான்' எப்படி வந்துருக்கு?

பத்மாமகன் : சென்சாருக்கு போட்டு காமிக்கறதுக்கு முன்னாடி 'ஏ' சர்ட்டிபிகேட் தான் கிடைக்கும்னு எல்லாரும் சொன்னாங்க. படம் பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள் என்னை கூப்பிட்டு "The Best Film"னு பாராட்டி 'யூ/ஏ' சர்ட்டிபிகேட் கொடுத்திருக்காங்க. ஒரு சீன் கூட கட் பண்ணலை. எல்லாரும் பார்க்க வேண்டிய படம் இதுன்னு சொன்னாங்க. இதுவே பெரிய வெற்றி தானே?

'பல்லவன்' படத்தோட ப்ரிவ்யூ போட்டு காமிச்சப்ப பல பத்திரிகை நண்பர்கள் என்கிட்டே சொல்லிக்காம, கொள்ளிக்காம ஓடிட்டாங்க. இப்போ நீங்களே பாருங்க படத்தைப் பார்த்துட்டு ஒவ்வொரு பத்திரிகை நண்பரும் நேர்ல வந்து பாராட்டிட்டு போறாங்க. படம் நல்லா வந்துருக்குன்னு நம்பறேன்.


கேள்வி : உங்கள் நாயகன் பார்த்திபனும் நல்ல கிரியேட்டர். படம் எடுக்கறப்போ அவர் எங்காவது குறுக்கிட்டாரா?

பத்மாமகன் : நான் எம்.ஜி.ஆரோட தீவிர ரசிகன். எம்.ஜி.ஆருக்கு அப்புறமா பார்த்திபனை ரொம்பவும் பிடிக்கும். இப்படத்தில் ஒரு நடிகராக மிக நன்றாக அவர் பணியாற்றியிருக்கார். எந்த இடத்திலும் அவர் எதுவும் சொல்லலை. அப்படின்னா நான் ஒழுங்கா ஒர்க் பண்ணியிருக்கேன்னு அர்த்தம்.

அவரது இயல்புக்கு மாறான கதாபாத்திரம் இது. பார்த்திபன்னாலே நெறைய பேசுவார். நக்கல் அடிப்பார். இந்தப் படத்துலே அவருக்கு வசனங்கள் ரொம்ப கம்மி. பேசுற ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து வெச்சி பேசுவார். படம் முடிஞ்சதுமே "ஒரு இங்க்லீஷ் படத்துலே நடிச்சி முடிச்சமாதிரி இருக்கு"ன்னு சொல்லி கைகொடுத்தார்.

கேள்வி : நீங்களே ஹீரோ மாதிரி தானே இருக்கீங்க? நீங்க நடிக்க வேண்டியது தானே?

பத்மாமகன் : இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி தான்யா உடம்பை ரணகளமாக்கிடுறீங்க...

வடிவேலு ஸ்டைலில் சொன்னவர், வெடிச்சிரிப்பு சிரிக்கிறார். படத்தின் வெற்றிக்கு வாழ்த்து கூறி விடைபெற்றோம்.

கண்டேன் காதலை!


சில ஃபிகர்களை பார்த்ததுமே உள்ளங்காலில் முத்தமிட வேண்டும் என்று எனக்கு தோன்றும். உங்களுக்கு தோன்றியிருக்கிறதா? ‘கண்டேன் காதலை’ தமன்னாவைப் பார்த்ததுமே இவ்வுணர்வு தோன்றுகிறது. அந்தக் காலத்து சில்வர் ஃப்ளஸ் பைக் மாதிரி படத்தின் முதல் பாதி முழுக்க லொட லொடத்துக் கொண்டேயிருக்கிறார். சுவாரஸ்யமான லொடலொடப்பு.

வெகுநாட்கள் கழித்து தமிழில் கச்சிதமான ஒரு குடும்பப்படம்.

பரத், தமன்னாவுக்கு நேரெதிர் கேரக்டர். உம்மணாம்மூஞ்சி. நடிப்புக்கான ஸ்கோப் குறைவு. விருத்தாச்சலம் நைட் ஃபைட்டில் மட்டும் அசால்ட்டான உடல்மொழியில் பழைய பரத். இரண்டாம் பாதியில் சிக்ஸர் அடிக்க வேண்டிய காட்சிகளை கூட பரிதாபமாக தேவுகிறார்.

ஏற்கனவே பூவேலி, மேட்டுக்குடி மற்றும் எண்ணற்ற படங்களில் பார்த்த பல காட்சிகள் ரிப்பீட்டுகிறது. ஆனாலும் க்ரிஸ்ப்பான திரைக்கதையில் இயக்குனரின் கைவண்ணம் மிளிருகிறது. நகைச்சுவை, செண்டிமெண்ட், காதல், கலாட்டாவெல்லாம் கரெக்ட்டான மிக்ஸிங். சன் டிவியில் திரும்ப திரும்ப ஒளி-ஒலிபரப்பப்பட்டு பாடல்கள் பழக்கமாகி விட்டதால், படம் பார்க்கும்போதும் இனிக்கிறது.

டிரெயினை தமன்னா ‘மிஸ்’ செய்துவிட்ட அந்த ஓரிரவிலேயே ஒளிப்பதிவாளரின் முழு உழைப்பும் வீணாகிவிட்டதால், ஊட்டியை தேமேவென்று காட்டுகிறார். மெகாசீரியலை நினைவுபடுத்தும் ஃபேமிலி காட்சிகளை, சந்தானத்தை வைத்து புத்திசாலித்தனமாக ஈடுகட்டியிருக்கிறார் இயக்குனர் கண்ணன். தமிழுக்கு வெற்றிகரமான இன்னொரு ஜனரஞ்சக இயக்குனர் தயார்.

சந்தானம் காமெடி கதையோடு ஒட்டிவந்தாலும், அந்த ‘பிட்டு’ சீன் மட்டும் தாமரை மேல் தண்ணீர் போல பட்டும் படாமல் நிற்கிறது.

பத்தாண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இருந்த பார்வை மாறியிருக்கிறது. முன்பு ஹீரோயின் ஹீரோவை மட்டுமே காதலிக்க வேண்டும். வேறொருவனை காதலிப்பது மாதிரியான படங்களை பாலச்சந்தரால் மட்டுமே எடுக்க முடியும். இப்படத்தில் ஹீரோயினுக்கு ஹீரோ மீது க்ளைமேக்ஸில் தான் காதல் வருகிறது. அதுவும் தன்னுடைய காதலன் பேசிக்கொண்டேயிருக்கும் போது மல்லிகை மலர்வது மாதிரி மென்மையாக பரத் மீது தமன்னாவுக்கு காதல் மலரும் காட்சி க்ளாஸ்.

இறுதிக்காட்சியிலும் தேவையில்லாத பரபரப்புக் காட்சிகளை சேர்க்காமல் நறுக்கென்று முடித்திருப்பதில், ரசிகர்களின் மென்னியை சரியாக இயக்குனர் பிடித்திருப்பது தெரிகிறது.

கண்டேன் காதலை - காதல் கரையேற்றுகிறது.