11 நவம்பர், 2009

வேளாண்மை கற்றால் வேலை நிச்சயம்!


திருச்சி மாநகரிலிருந்து இருபத்தைந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளடங்கி இருக்கிறது போதாவூர். மலைப்பாம்பின் உடல்போல் வளைந்து நெளிந்து செல்லும் சாலை. வழியெல்லாம் கண்ணுக்கு தெரியும் எல்லை வரை அடர்பச்சையில் வாழைத்தோப்புகள். பிராதான சாலையிலேயே பிரம்மாண்டமாக வீற்றிருக்கிறது தேசிய வாழை ஆராய்ச்சி மையம். இந்தியாவிலேயே வாழை ஆராய்ச்சிக்காக இயங்கும் ஒரே தேசியமையம் இதுமட்டுமே.

வேளாண்மைத் துறையில் இந்தியாவின் சிறந்த பெண் விஞ்ஞானியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இங்கே வேலை பார்க்கிறார் என்பது அங்கே வசிப்பவர்களுக்கு கூட தெரியவில்லை. விஷயத்தைக் கேள்விப்பட்டு ஆச்சரியப் படுகிறார்கள்.

மெட்ரிக்குலேஷன் பள்ளி டீச்சர் மாதிரி சிம்பிளாக பாப் கட்டிங், காட்டன் சேலையோடு இருக்கிறார் எஸ்.உமா. 46 வயது. ஆசியாவின் மிகப்பெரிய வாழை மரபணு வங்கியை இந்த மையத்தில் உருவாக்கியிருக்கிறார். இதன் பொருட்டே இவரை ஊக்குவிக்கும் விதமாக ‘பஞ்சாபரோ தேஷ்முக் வேளாண்மைக்கான பெண் விஞ்ஞானி விருது’ கடந்த 2008ஆம் ஆண்டுக்காக இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இவ்விருது இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டும் கூட பயோவெர்ஸிடி, பிரான்ஸ் மற்றும் பனானா ஏசிய பசிஃபிக் நெட்வொர்க், பிலிப்பைன்ஸ் ஆகியோர் இணைந்து வழங்கும் ‘பிசாங் ராஜா’ சர்வதேச விருதினை வென்றெடுத்திருக்கிறார்.

மலைவாசஸ்தலங்களான வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் பயணித்து, பலவித ஆபத்துக்களை எதிர்கொண்டு வாழையின மரபுகளை தேடித்தேடி கண்டறிந்திருக்கிறார்கள் உமா தலைமையிலான குழுவினர். ஆயிரத்து அறுநூறுக்கும் மேலான வாழையினங்களை கண்டறிந்து, முன்னூற்றி அறுபது வகைகளை தொகுத்து மரபணு வங்கியை உருவாக்கியிருக்கிறார்கள். இவர்கள் புதியதாக கண்டறிந்த ‘உதயம்’ என்ற பெயரிலான கற்பூரவள்ளி வகை வாழைப்பழம் இன்று நாடு முழுவதும் விற்பனையில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் பிராண்ட்.

போதாவூரில் இருக்கும் அலுவலகத்தில் அவரைச் சந்தித்தோம். விருதுகளுக்கும், பாராட்டு மழைகளுக்கும் இடையே, திணறி நனைந்துக் கொண்டிருக்கும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து ‘மினி பேட்டி’ எடுத்தோம்.

“மரபணு மாற்ற வேளாண்பொருட்களால் பக்கவிளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கிறார்களே?”

“விஷயம் தெரியாதவர்கள் இதுபோல பேசுகிறார்கள். மரபணு மாற்றங்கள் மூலமாக புதிய, நல்ல விஷயங்கள் நிறைய கண்டுபிடிக்கலாம். மாற்றம் நல்லதாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளுவதுதான் முறை. இதுபோல மரபணுக்களை மாற்றி உருவாக்கப்படும் உணவுப் பொருட்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பலவித சோதனை நிலைகளை தாண்டியே மக்களின் பயன்பாட்டுக்கு எந்தவொரு பொருளும் வருகிறது. மக்களுக்கு கெடுதல் தரும் விஷயமென்றால் அரசு அனுமதித்து விடுமா என்ன?

“கடைகளில் விற்கப்படும் பச்சை வாழைப்பழம் இப்போதெல்லாம் மஞ்சளாகத் தெரிகிறதே? இதுவும் கூட மரபணு மாற்றத்தால் ஏற்பட்டிருக்கும் மாற்றமா?”

“ஒருசில வகைகளைத் தவிர்த்து, வாழைப்பழத்தின் அசல் நிறமே மஞ்சள்தான். நம் நாட்டு தட்பவெட்ப சூழலின் காரணமாக முழுமையாக மஞ்சள் நிறத்தை அடைவதற்குள் பழுத்து விடுகிறது. தோல் பச்சையாக இல்லை, மஞ்சளாக இருக்கிறது என்பதற்கெல்லாம் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை” (சிரிக்கிறார்)

பழம் தவிர்த்து, வாழையின் பயன்கள் என்ன?

வாழை மரத்தை கல்பதரு என்று சொல்லுவதே பொருத்தம். பழம், பூ, இலை, தண்டு, நார், வேர் என்று எல்லாமே பணம் தரக்கூடிய விஷயங்கள். உங்களுக்கே தெரியும். நம்மூரில் வாழை இலை மிகப்பெரிய வருவாயைத் தரக்கூடிய தொழில். பழமும் இப்படியே. மற்றப்பழங்கள் விற்கப்படாத பெட்டிக்கடைகளில் கூட வாழைப்பழங்கள் விற்கப்படுகின்றன.

வாழைப்பூவும், தண்டும் சமையலுக்கு பயன்படுகிறது. வாழைப்பழத் தண்டு சிறுநீரகக் கற்களை அகற்றக்கூடிய மருந்து என்பது மருத்துவமுறையில் நிரூபணமான ஒன்று. வாழைத்தண்டை ஜூஸ் வடிவிலும் குடிக்கலாம்.

வாழைநாரில் இருந்து ஃபைபரை பிரித்தெடுத்து கயிறு செய்யலாம். கப்பல்களில் பயன்படுத்தப்படும் கயிறு இவ்வகையானது. இந்தக் கயிறுக்கு மட்டும்தான் கடல்நீரின் உப்பால் அரிக்கப்படாத தன்மை இருக்கிறது. அதுபோலவே நாரில் பிரித்தெடுத்து உருவாக்கப்படும் கார்க் எண்ணெயை உறிஞ்சும் தன்மை கொண்டது. கப்பல்களில் எண்ணெய் கசிந்தால் இந்த கார்க் வைத்தே அடைக்கிறார்கள். இவ்வளவு ஏன்? நீங்களே பார்த்திருப்பீர்கள். எண்ணெய்க் கடைகளில் டின்னில் இருந்து எண்ணெய் வாய்வழியாக கசியாமல் இருக்க வாழைத்தாரின் ஒரு துண்டினை வைத்துதான் அடைத்திருப்பார்கள். அன்றாட வாழ்வில் எங்கெல்லாம் வாழைத் தொடர்பான பொருட்கள் பயன்படுத்தப் படுகிறது என்று சும்மா கணக்கெடுத்துப் பாருங்கள். உங்களுக்கு ஏராளமான ஆச்சரியங்கள் விளங்கும். விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை தரக்கூடியது வாழைசாகுபடி. இதை எப்படியெல்லாம் பணமாக்கலாம் என்பதையே அவர்களுக்கு சொல்லித்தந்து வருகிறோம்.

வேளாண்மைக்கு இங்கே என்ன எதிர்காலம் இருக்கிறது? மாணவர்கள் மேற்படிப்புக்கு வேளாண்மையைத் தேர்ந்தெடுப்பதில் தயக்கம் காட்டுவதாக தெரிகிறதே?

இதற்கு மாணவர்களை குறை சொல்லி என்ன பிரயோசனம்? பள்ளிக் கல்விப்பாடத் திட்டத்தில் இயற்பியல், வேதியியல், உயிரியல் என்று இருக்கிறது. வேளாண்மை இல்லையே? அவர்கள் பண்ணிரண்டு வகுப்பு வரை எது படிக்கிறார்களோ, அதையே மேற்படிப்பில் படிக்க அவர்களுக்கு வசதியாக இருக்கிறது. வேளாண்மை அடிப்படை நாடான இந்தியாவில், பள்ளியிலேயே வேளாண்மை தனிப்பாடமாக அமையவேண்டியது அவசியம்.

வேளாண்மைத் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. வேளாண்மை படித்தவருக்கு வேலை இல்லை என்ற நிலையே இங்கு இல்லை. ஆதியிலிருந்தே உலகில் ‘டல்’ அடிக்காத ஒரே துறை உணவுத்துறை மட்டுமே. மற்ற எந்தத் துறை வேண்டுமானாலும் எழலாம், வீழலாம். காற்று, நீர், உணவு இன்றி வாழமுடியுமா என்ன? உள்நாட்டில் அரசு அலுவலகங்களிலும், பல தனியார் நிறுவனங்களிலும் வேளாண்மை படித்தவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. வெளிநாடுகளிலும் கூட இவர்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. படித்து முடித்தால் வேலை நிச்சயம் என்ற உத்தரவாதம் இருக்கும்போது இதைவிட சிறந்த கேரியர் ஒரு மாணவனுக்கு வேறு எந்தப் படிப்பில் கிடைக்கும்?


ஆராய்ச்சிக்காக செலவழித்துக் கொண்டிருக்கும் அவரது பொன்னான நேரத்தை நமக்காக ஒதுக்கி, பேசியதற்காக நன்றி தெரிவித்து கிளம்பினோம். வாழைமரங்கள் வரிசையாக தலையசைத்து நமக்கு ‘டாட்டா’ காட்டுகிறது.

10 நவம்பர், 2009

லுங்கி!


“லுங்கியுடன் ஆபீஸ் போவதற்கு மனத்தடை இருக்கிறது. அரை டிராயரில் அது இல்லை!” –சமீபத்தில் டவுசர் பற்றிய விவாதம் ஒன்றின்போது ட்விட்டரில் எழுத்தாளர் பாரா சொன்னது இது.

’லுங்கி கட்டிக்கொண்டு படம் பார்க்கும் போராட்டம் நடத்துவேன்!’ சில வாரங்களுக்கு முன்பாக எழுத்தாளர் ஞாநி குமுதத்தின் ’ஓ’ பக்கங்களில் சென்னை கமலா தியேட்டர் நிர்வாகத்தை இவ்வாறாக எச்சரித்திருந்தார். அதாவது புதுப்பிக்கப்பட்ட கமலா தியேட்டருக்கு லுங்கி கட்டிக்கொண்டு படம் பார்க்க வருபவர்களை அனுமதிக்கவில்லை என்பதற்காக இவ்வாறு ஞாநி எச்சரித்திருந்தார். பிற்பாடு கமலா தியேட்டர் ’லுங்கி கட்டிக்கொண்டு வரலாம்’ என்று ஞாநிக்கு சிறப்பு அனுமதியும், மற்றவர்களுக்கு சாதா அனுமதியும் தந்தது, தொடங்கவே தொடங்காத அவரது போராட்டத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ படம் வெளியானபோது தங்கர்பச்சான் புலம்பினார். சென்னை ஐநாக்ஸில் அப்படத்தை திரையிட மறுத்திருந்தார்கள். ‘வேட்டி, லுங்கியெல்லாம் கட்டினவங்க எல்லாம் உங்கப் படத்தைப் பார்க்க வருவாங்க!’ என்று மறுப்புக்கு நியாயம் சொன்னதாம் ஐநாக்ஸ் நிர்வாகம்.

பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக லுங்கி கட்டி வருகிறேன். பத்து வயதில் அப்பா, இரண்டு மாஸ்டர் லுங்கி (ஒன்று வெள்ளைப்பூ போட்ட ப்ளூ, இன்னொன்று பச்சை என்று நினைவு) வாங்கித் தந்தார். கிறிஸ்டியன் ஆண்ட்டி வீட்டு டியூஷனுக்கு கூட அந்த லுங்கியோடு போய் வந்ததாக நினைவிருக்கிறது. பிற்பாடு ஏஜூக்கு வந்து நைட் ஷோக்களாக பார்த்துத் தள்ளியபோது, குரோம்பேட்டை வெற்றி தியேட்டருக்கும் லுங்கியோடே போய்வந்தேன்.

முதல் பாராவில் பாரா சொன்ன அந்த மனத்தடை எனக்கு எப்போது வந்தது என்று சரியாக நினைவில்லை. இத்தனைக்கும் லுங்கி தான் ‘எல்லாவற்றுக்குமே’ வசதியான உடையாக இருக்கிறது என்றபோதிலும், வீட்டுக்கு நூறு அடி தொலைவில் இருக்கும் கடைக்குச் செல்லக்கூட இப்போது ‘முழுநீளக் கொழாய்’ மாட்டிக்கொண்டு தான் போகிறேன். ஆனால் ரெண்டு, மூன்று அரை நிஜார் இருந்தாலும் (ஒன்லி ஃபார் ஸ்விம்மிங் பூல்ஸ்), லுங்கிதான் இன்னும் ஃபேவரைட் உடை. வீட்டிலிருக்கும்போது கீழாடை மட்டுமே, நோ மேலாடை.

சரி, இந்த மனத்தடைக்கு என்ன காரணமாக இருக்க முடியும்?

ஒன்று. நான் எட்டுப்பட்டிராசா மாதிரி தொடை தெரிய ஒரு காலத்தில் லுங்கியை தூக்கிக் கட்டுவேன். ‘ரவுடிப்பய மாதிரி லுங்கி கட்டுறான் பாரு!’ என்ற அப்பாவின் அப்போதைய எரிச்சல் காரணமாக இருக்கலாம், இப்போது அதுமாதிரி சொல்ல அவர் இல்லாவிட்டாலும்.

இரண்டு. லுங்கி கட்டுபவர்கள் எல்லாம் லும்பன்கள் என்று கமலா, ஐனாக்ஸ் மற்றும் சத்யம் நிர்வாகங்கள் நினைப்பது மாதிரி ஒரு பொதுப்புத்தி வெகுமக்களுக்கும் பரவலாக இருப்பதை உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருப்பது இன்னொரு காரணமாக இருக்கலாம்.

எப்படிப் போனாலும் ஒரு அற்புதமான, நிகரற்ற உடை ஒன்றினை என் மனத்தடை காரணமாக பொது இடங்களில் நிராகரிக்கிறேன் என்பதே உண்மை. தெற்காசிய நாடுகள் பலவற்றிலும் லுங்கி பிரபலமான ஆடையாக இருப்பதாகவே தெரிகிறது. பொதுவிடங்களில் லுங்கி கட்டி வருவதும் கூட கவுரவமான விஷயமாகவே பல நாடுகளில் இருக்கிறது. பங்களாதேஷ், இலங்கை, மியான்மர், ஏமன், சோமாலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் பல தெற்காசிய நாடுகளில் லுங்கியின் பயன்பாடு பரவலாக இருக்கிறது. நம்மூரை மாதிரியில்லாமல் இந்நாடுகளில் பெண்களும் லுங்கிவாலாக்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டு உடையாக மட்டுமன்றி திருமணம் போன்ற விழாக்களிலும் லுங்கியின் பயன்பாடு இருந்து வந்தது. அரை டிராயருக்கு ஏற்பட்ட மவுசால் இப்போது ஓரளவுக்கு குறைந்திருக்கிறது. உலகின் மிகச்சிறந்த வசதியான உடைகளில் ஒன்றாக இதை சொல்லலாம். அரை டிராயரைப் போல இதற்கு நாடாவோ, எலாஸ்டிக்கோ தேவையில்லை. தலைக்கு மேல் கவிழ்த்து, இழுத்துப் பிடித்து ஒரு சொருகு சொருகினால் போதும். நாய் துரத்தினாலும் கூட கவுரவமாக அவிழ்ந்துவிடாமல் ஓடித் தப்பிக்கலாம். டீக்கடை நாயர்கள் கட்டும் பாலியஸ்டர் லுங்கி மட்டும் விதிவிலக்கு. இடுப்பில் நிற்கவே நிற்காது.

திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியில் பார்ட்டிவேராக லுங்கி அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இந்தோனேஷியாவிலேயோ, மலேஷியாவிலேயோ இதை தேசிய உடையாகக் கூட அங்கீகரித்திருப்பதாக செவிவழி கேள்வி. திருப்பூர்தான் லுங்கி தயாரிப்புக்கான புண்ணிய ஷேத்திரம். இந்தியாவின் லுங்கித் தேவையில் எழுபது சதவிகிதத்தை கோயமுத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் கவனித்துக் கொள்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

லுங்கியை இழுத்து மடித்து கட்டுவது எப்படியென்று மம்முட்டியும், மோகன்லாலும் பல படங்களில் கிளாஸே எடுத்திருக்கிறார்கள். வெயில் காலங்களில் லுங்கியை விட காற்றோட்டமான உடை ஒன்று உண்டா என்று கேட்டால், இல்லவே இல்லை என்பதுதான் இன்றைய நிலை.

லுங்கி எங்கே தொடங்கியது என்று வரலாற்றில் தேடிப்பார்த்தால், அதுவும் கல்தோன்றி மண் தோன்றா காலத்தில் தமிழோடே தோன்றியிருக்கும் என்பதாகத் தெரிகிறது. வேட்டி என்றழைக்கப்பட்ட துண்டுதான் பிற்பாடு பரிணாம வளர்ச்சியடைந்து லுங்கியாக மாறியிருக்கிறது. எனவே லுங்கியை கண்டறிந்த பெருமையும் தமிழனையே சேருகிறது.

மஸ்லின் துணியால் நேயப்பட்ட வேட்டி பாபிலோனுக்கு தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி ஆகியிருக்கிறது. பாபிலோனை தொல்பொருளாராய்ந்த அறிஞர்கள் இதை ‘சிண்டு’ என்ற பெயரால் குறிப்பிடுகிறார்கள். மேலும் மீனவர்களான பரதவர்கள் கிழக்கு ஆப்பிரிக்கா, எகிப்து மற்றும் மெசபடோமிய பகுதிகளுக்கு லுங்கி ஏற்றுமதி செய்ததாகவும் உலக வரலாறு செப்புகிறது. கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்பே லுங்கியில் கலர்ஃபுல் டிசைன்கள் போடப்பட்டு (அனேகமாக ஆந்திரவாலாக்கள் டிமாண்ட் செய்திருக்கலாம்) தயாராகி வருகிறது.

தமிழர்கள்தான் லுங்கியை கண்டறிந்தார்கள் என்பதை இந்துத்துவா மறுக்கிறது. லுங்கியை கண்டறிந்தவர் அர்ஜூனர் என்பது இந்துத்துவாவின் வாதம். ஒருமுறை அர்ஜூனர் வில்லை எடுத்துக்கொண்டு மலைப்பாங்கான இடத்தில் உணவுக்காக வேட்டையாட அலைந்துக் கொண்டிருந்தாராம். அப்போது ஏதோ ஒரு சுனைக்கு அருகே பாறையில் சில சேலைகள் காயவைக்கப் பட்டிருந்ததாம்.

அந்த சுனையில் யாரோ பெண்கள் குளித்துக் கொண்டிருப்பார்கள் என்ற நினைத்த அர்ஜூனர், பயணத்தைத் தொடராமல் அங்கேயே சில மணி நேரம் நாகரிகமாக நின்றிருக்கிறார். யாரும் வந்து புடவைகளை எடுக்காமல் போகவே, அந்தப் புடவையை தானே எடுத்துக் கொண்டு வீட்டுக்கு திரும்பியிருக்கிறார்.

வாசலில் குந்திதேவி கண்களை மூடி பிரார்த்தனை செய்துக் கொண்டிருந்தாராம். அர்ஜூனனின் அரவத்தைக் கேட்டவர், ‘நீ எது எடுத்து வந்திருந்தாலும், அதை எல்லா சகோதரர்களுக்கும் சமமாகப் பகிர்ந்துக் கொடு!’ என்று சொல்லியிருக்கிறார். புடவைகளோடு வந்த அர்ஜூனனோ, தாய் சொல்லைத் தட்ட மனமின்றி தான் கொண்டு வந்தப் புடவைகளை சரிபாதியாக கிழித்து, சகோதரர்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார். அரையும், காலுமாக கிடைத்த புடவையை இடுப்பில் சுற்றி அணிந்துக் கொண்டனர் பஞ்ச பாண்டவர்கள். லுங்கி தோன்றிய வரலாறு இதுவென்று இந்துத்துவா சொல்கிறது.

எது எப்படியோ, லுங்கி ஒரு சுவாரஸ்யமான உடை என்பதைப் போலவே, அதனுடைய பின்னணிக் கதைகளும் சுவாரஸ்யமானவையாகவே இருக்கிறது.

தமிழ் நக்சலைட்டுகள்!

முதல் பாகம் : துப்பாக்கிக் குழாயில் அரசியல் அதிகாரம்!
இரண்டாம் பாகம் : வசந்தத்தின் இடிமுழக்கம்!
மூன்றாம் பாகம் : இடியுடன் கூடிய மழை!
நான்காம் பாகம் : மழைக்குப் பின் புயல்!
ஐந்தாம் பாகம் : பீகார் ஜெயில் தகர்ப்பு!
ஆறாம் பாகம் : அழித்தொழிப்பு!


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வட இந்திய மாநிலங்கள், ஆந்திரப் பிரதேசம் போன்ற இடங்களில் இருந்த அளவுக்கு நக்சல்பாரிகளால் செல்வாக்கு பெற இயலவில்லை. இத்தனைக்கும் சாரு மஜூம்தார் கட்சி ஆரம்பித்தபோது தமிழ்நாட்டிலும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய தலைவர்கள் இருந்தார்கள். 1970களின் இறுதியில் இங்கிருந்த நக்சல் இயக்கங்கள் தீவிரமாக இயங்கின. 70களின் இறுதியிலும், 80களின் ஆரம்பத்திலும் கடுமையான போலிசாரின் வேட்டைகள் காரணமாக நக்சல் இயக்கம் பெரிய அளவில் இன்றுவரை இங்கே வளர இயலவில்லை.

இருப்பினும் ஆந்திரப் பிரதேசத்தில் எல்லையோரமாக இருக்கும் வேலூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் நக்சல்பாரிகள் அவ்வப்போது ஊடுருவது உண்டு. குறிப்பாக தர்மபுரி மாவட்டம் தமிழகத்திலேயே மிகவும் பின் தங்கிய மாவட்டம் என்பதால் அங்கு நக்சல்பாரிகள் செல்வாக்கு பெறுவது சுலபம். தேனி, பெரியகுளம் பகுதிகளில் போர்ப்பயிற்சி வழங்கப்படுவதாகவும், போலிசார் தேடுதல் வேட்டையென்றும் அவ்வப்போது செய்தித்தாள்களில் பார்த்திருப்பீர்கள். தமிழ்நாடு விடுதலைப்படை என்ற பெயரில் செயல்பட்ட குழு ஒன்று காவல்துறையால் சின்னாபின்னப்படுத்தப்பட்டது. அக்குழுவின் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் அல்லது சிறைபிடிக்கப்பட்டார்கள்.

70களின் இறுதியில் கீழ்வெண்மணி படுகொலைகளுக்கு காரணமான நிலமுதலாளி ஒருவரை நக்சல்பாரிகள் அழித்தொழிப்பு மூலமாக அப்புறப்படுத்தினார்கள். அழித்தொழிப்புப் பணிகளை மார்க்சிஸ்டு - லெனினிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஓரங்கட்ட நினைத்திருந்த நேரத்தில் நடந்த அழித்தொழிப்பு இது. அதிகாரப்பூர்வமாக நடந்த கடைசி அழித்தொழிப்பு என்றும் சொல்லலாம். கீழே சொல்லப்பட்டிருக்கும் இந்த ‘அழித்தொழிப்பு’க்கான சூழலே, நாடுமுழுவதும் அன்று இருந்தது. கொலை செய்யப்பட்டவர்களின் பெயர் தான் மாறியிருக்குமே தவிர, கொல்லப்பட்டதற்கான காரணம் ஒன்றே ஒன்றுதான். அவர்கள் நிலமுதலாளிகள்!!

1968, டிசம்பர் 25. உலக மக்களின் பாவ பாரங்களை தன் முதுகில் சுமந்து பாவிகளை இரட்சிக்க தேவமைந்தன் அவதரிக்கப் போகும் கிறிஸ்துமஸ் தினம். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் கீழ்வேளூர் தாலுக்காவில் இருந்த அந்த குக்கிராமத்துக்கு மட்டும் இருள்நீங்கவேயில்லை. நீண்ட இருளுக்குப் பின்வந்த விடியல் தந்தது அதிர்ச்சி. ஒரே குடிசையில் போட்டு எரிக்கப்பட்டு, கருகிப்போன நாற்பத்தி நான்கு பிணங்களை தான் கிறிஸ்துமஸ் பரிசாக கீழ்வெண்மணி கிராமம் பெற்றது. பதினான்கு பேர் பெண்கள். இருபத்தி இரண்டு பேர் குழந்தைகள். மனித இனம் காட்டுமிராண்டி காலத்திலிருந்து முற்றிலுமாக நாகரிகமடைந்து விடவில்லை என்பதற்கு உதாரணமான இந்த ஒட்டுமொத்த படுகொலைகளால் நாடே அதிர்ந்தது. நாற்பத்தி நான்கு உயிர்களை பதற, பதற நெருப்பில் எரித்துக் கொன்றதற்கு என்ன காரணம்.. மதமா? சாதியா?

மதமும், சாதியும் கூட படுகொலைகளுக்கு சாக்குகளாக சொல்லப்படுபவை தான். உண்மையான காரணம் அவர்கள் உழைக்கும் வர்க்கம். தங்கள் உழைப்புக்கு தகுந்த கூலி கேட்கும் வர்க்கம். இந்த படுகொலைச் சம்பவத்தில் தன் உறவு, சுற்றத்தை இழந்தவர் ஒருவர் தெளிவாக சொன்னார், “இது ஜாதி, மதம் சம்பந்தப்பட்ட விஷயமல்ல. வர்க்கப் பேதத்தால் நடந்த கொடிய சம்பவம்!”

தஞ்சை மண்ணில் அப்போது அதிகார வர்க்கம் ஆழமாய் வேரூன்றி இருந்த காலம். அதிகார வர்க்கத்தில் இருந்தவர்களுக்கு பெயர் பண்ணையார். கோயில்களுக்கும், மடங்களுக்கும் இருந்த பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் கூட பண்ணையார்களின் மேற்பார்வையில், கட்டுப்பாட்டில் இயங்கின. பெருநிலம் கொண்ட இந்த நிலக்கிழார்களிடம் அநியாயமான கூலிக்கு தங்கள் வாழ்க்கையை விவசாயக் கூலிகள் அடகு வைத்திருந்தார்கள்.

சவுக்கால் அடித்தால் வலிக்கும் என்று நிலத்தில் உழும் மாடுகளுக்கு கூட பரிதாபம் பார்த்த பண்ணையார்கள் மனிதர்களுக்கு பார்க்கவில்லை. வேலையில் சுணங்கினால் சவுக்கடி, சாணிப்பால். உணவுக்காக உழைப்பை மூலதனமாக்கிய கூட்டம் பண்ணை அடிமைகளாய் தலைமுறை தலைமுறையாய் வாழ்க்கையை தொடர்ந்தது. எவ்வளவு நாட்களுக்கு தான் அரைவயிற்று கஞ்சியோடு காலம் தள்ள முடியும்?

உரிமைகளை வென்றெடுக்க விவசாயத் தொழிலாளர் சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு விவசாயக் கூலிகள் ஒரு அணியில் திரள தொடங்கினார்கள். செங்கொடி ஏந்தத் தொடங்கினார்கள். கூலியாக அரைப்படி நெல் அதிகம் கேட்டு சங்கம் போராட்டக்களம் கண்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறை ஏவப்பட்டது. கூலிகளின் குடிசைகள் எரிக்கப்படுவதும் தொடர்கதையானது.

தங்கள் அதிகாரத்தை, ஆதிக்கத்தை நிலைநாட்ட பண்ணை உரிமையாளர்கள் ‘நெல் உற்பத்தியாளர் சங்கம்’ என்ற பெயரில் ஒரு எதிர்சங்கம் உருவாக்கினார்கள். செங்கொடிக்கு மாற்றாக இவர்கள் மஞ்சள் கொடியை உயர்த்திப் பிடித்தார்கள். இந்த சங்கத்தின் பெயரால் விவசாயக் கூலிகள் கிராமந்தோறும் மிரட்டப்பட்டார்கள், உயிரெடுக்கப்பட்டார்கள். அப்போதிருந்த ஒரு அதிமுக்கிய அரசியல் தலைவர் கூட “தஞ்சை மாவட்ட விவசாயிகளை பேய் பிடித்திருக்கிறது, கம்யூனிஸ்ட்டு என்ற பேய் பிடித்திருக்கிறது” என்று காட்டமாக சொன்னார். ஆளும் வர்க்கமென்றால் அரசும், அரசாள நினைக்கும் அரசியல்வாதிகளும் கூட உள்ளடக்கம் தானே?

ஆங்காங்கே விவசாய தொழிலாளர் சங்கத்துக்கும், நெல் உற்பத்தியாளர் சங்கத்துக்கும் கூலி உயர்வு விவகாரத்தில் முட்டல் மோதல் நடந்து கொண்டிருந்தது. பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை. கூலியை உயர்த்திக் கொடு, சேற்றில் கால் வைக்கிறோம் என்றார்கள் விவசாயக் கூலிகள்.

இந்நிலையில் தான் விடிந்தால் கிறிஸ்துமஸ் என்று நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த கீழ்வெண்மணி கிராமத்துக்குள் கையில் நாட்டுத் துப்பாக்கி ஏந்திய அடியாள்கள் டிராக்டரில் நுழைந்தார்கள். கண்ணில் கண்டவர்களை குருவியை சுடுவது போல சுட்டார்கள். குண்டடி பட்டவர்கள் சுருண்டு விழ எஞ்சியவர்கள் பாதுகாப்பான இடம் தேடி ஓடினார்கள். அங்கே இருந்ததிலேயே பெரிய வீடு ராமையா என்பவரின் குடிசை வீடு. குழந்தைகளும், பெண்களும், வயோதிகர்களும் அந்த குடிசையில் தஞ்சம் புகுந்தனர்.

அப்போது ஜீப்பில் வந்த நெல் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணநாயுடு “ஒருத்தனையும் விடாதீங்கடா. தீ வெச்சு எரிச்சுக் கொல்லுங்கடா!” என்று வெறியோடு கத்துகிறார். குடிசை அடியாட்களால் இழுத்து பூட்டப்படுகிறது. பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்படுகிறது. தீயின் நாக்குகள் மேனியை சுட ஒட்டுமொத்த பரிதாபக்குரல் அந்தப் பகுதியை அலற வைத்தது. தீவைத்த கொடியவர்களுக்கு நெஞ்சு இரும்பால் படைக்கப்பட்டிருக்க வேண்டும். தீயில் இருந்து தப்பி வந்த நான்கு பேரை மீண்டும் தீக்குள்ளேயே தள்ளிவிட்டார்கள். தான் இறந்தாலும் பரவாயில்லை, தன் குழந்தை பிழைக்கட்டும் என்று தீயில் இருந்து தன் குழந்தையை ஒரு தாய் தூக்கி வெளியே எறிந்தாள். அந்த குழந்தையை கூட ஒரு கொடூரமனதுக்காரன் மீண்டும் தீக்குள் தூக்கியெறிந்தான்.

மக்களுக்கு ஏதாவது கொடுமை நடக்கிறதென்றால் புராணங்களிலும், இதிகாசங்களிலும் கடவுள் வந்து காப்பார். சினிமாக்களில் கதாநாயகர்கள் வந்து வில்லன்களை புரட்டியெடுப்பார். கீழ்வெண்மணி விவசாயக் கூலிகள் தீயில் கருகும் நிலையில் எந்த கடவுளோ, கதாநாயகனோ அவர்களை காக்க வரவில்லை. காவல்துறை வந்தது, தீயில் நாற்பத்தி நான்கு பேர் கருகி முடித்தப்பிறகு. இருபத்தி ஐந்து குடிசைகள் எரிக்கப்பட்டது.

ஜாலியன் வாலாபாக் படுகொலையாவது வெள்ளையர் ஆட்சியில் நடந்தது. கீழ்வெண்மணி படுகொலைகள் சுதந்திரம் வாங்கி இருபது ஆண்டுகளுக்கு பின்னர் நடந்தது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ‘தேசத்தின் அவமானம்’ என்று தலைப்பிட்டு இந்தியத் தலைநகரிலேயே பத்திரிகைகள் அரசை தாக்கின. அவசர அவசரமாக நூற்றி ஆறு பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு கோர்ட்டில் நிறுத்தப்பட்டார்கள். கோபாலகிருஷ்ண நாயுடு முதல் குற்றவாளியாக வழக்கில் சேர்க்கப்பட்டார்.

காவல்துறையோ இது மக்களுக்கு இடையே நடந்த மோதலில் ஏற்பட்ட சம்பவம் என்றது. அந்தப் படுகொலையில் தப்பிப் பிழைத்தவர்கள் கோர்ட்டில் சாட்சியம் சொன்னார்கள். ஏழைச்சொல் எந்த காலத்தில் அம்பலம் ஏறியிருக்கிறது?

1973ஆம் ஆண்டு ஏப்ரல் ஆறாம் தேதி தீர்ப்பளிக்கப்படுகிறது. “அதிக நிலத்தை சொத்தாக வைத்திருப்பவர்கள் இப்படிப்பட்ட சம்பவத்தை செய்திருக்க முடியாது. அவர்கள் குற்றவாளிகள் அல்ல” அதிகார வர்க்கத்திடமிருந்து அரசோ, சட்டமோ தங்களை காக்கும் என்ற நம்பிக்கையை அம்மக்கள் முற்றிலுமாக இழக்கும் வண்ணம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்படியும் அவர்களில் தவிர்க்கவே முடியாத பத்து பேருக்கு மட்டும் பெயருக்கு பத்தாண்டு சிறைத்தண்டனை கிடைத்தது. கீழ்வெண்மணி சம்பவத்தின் வில்லனாகிய கோபாலகிருஷ்ண நாயுடுவும் அவர்களில் ஒருவர்.

சம்பவங்கள் நடந்து பத்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோபாலகிருஷ்ண நாயுடு பழைய செல்வாக்கோடு கீழத்தஞ்சையில் வலம் வருகிறார். பழைய அதிகாரத்தை கையில் எடுக்கிறார். முன்பை விட முனைப்பாக உழைப்பாளிகளை ஒடுக்கிறார். நீதித்துறையும் கூட பணத்துக்கும், அதிகாரத்துக்கும் வாலாட்டும் நிலையில் தங்களை காக்க, அயோக்கியர்களை ஒழிக்க யாராவது வரமாட்டார்களா என்று ஏழைக்கூலிகள் ஏங்கிக் கொண்டிருந்தனர்.

யாரும் எதிர்பாராத ஒரு நேரத்தில் அணக்குடி என்ற பகுதியில் கோபாலகிருஷ்ண நாயுடு வெட்டி சாய்க்கப்படுகிறார். கீழ்வெண்மணி சம்பவத்துக்கு பழிக்கு பழி வாங்கும் முகமாக செய்யப்பட்ட இக்கொலையை செய்தவர்கள் நக்சல்பாரிகள். நந்தன் என்பவரது தலைமையில் ஒரு குழு செயல்பட்டு கோபாலகிருஷ்ண நாயுடுவை அழித்தொழித்தது.

(தொடர்ந்து வெடிக்கும்)

9 நவம்பர், 2009

தீபாவளி சினிமா கலெக்‌ஷன்!


இந்த வருடமும் சினிமாவுலகத்துக்கு தீபாவளி சரியாக களைகட்டவில்லை. ஆதவன் வெற்றிக்காக வேட்டைக்காரன் தியாகம் செய்யப்பட்டதாக சொன்னாலும், வேட்டைக்காரன் வேறு சில காரணங்களுக்காக ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவுக்கு மூன்று சீசன் வசூலுக்கு மிக முக்கியமானது. தீபாவளி, பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு என்று சொல்லப்பட்ட ஏப்ரல் 14. தீபாவளிக்கு போனஸ் புரளும், எனவே வசூலை அள்ளலாம். பொங்கலைப் பொறுத்தவரையும் ஓரளவுக்கு கிராமப்புறங்களில் பணம் ஃப்ளோட் ஆகிக் கொண்டிருக்கும். ஏப்ரலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் ஸ்டூடண்ட்ஸ் கலெக்‌ஷன் அள்ளலாம்.

உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக புதிய படங்கள் ஒளிபரப்பப்படுவதாலும், இப்போதெல்லாம் தீபாவளிக்கு பலருக்கும் போனஸ் நஹி என்பதாலோ என்னவோ, தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் தீபாவளி ரிலீஸில் முன்புபோல ஆர்வம் காட்டுவதில்லை. 1987 தீபாவளியில் பத்தொன்பது படங்கள் வந்ததே எனக்குத் தெரிந்து ரெக்கார்ட் ப்ரேக். 90களின் ஆரம்பத்தில் கூட குறைந்தபட்சம் பத்து படங்களாவது வெளியாகும்.

இம்முறை வெளியான படங்கள் மூன்றே மூன்று. ஆதவன், பேராண்மை, ஜெகன்மோகிணி.

ஆதவன் வெற்றிக்கு காரணம் சொல்லவே தேவையில்லை. சூர்யா, நயன்தாரா, வடிவேல், கே.எஸ்.ரவிக்குமார். முதல் இரண்டு வாரத்தில் சென்னையில் மட்டுமே மூன்று கோடியை வசூல் தாண்டிவிட்டது. எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஹிட் படமான ஈரம், ஏழு வாரங்களில் வசூலித்த தொகை இது. பொதுவான பார்வையில் படம் சுமார் என்றாலும், குடும்பம் குடும்பமாக தியேட்டர்களுக்கு மக்கள் முற்றுகையிடுவதின் காரணம் என்னவென்றே தெரியவில்லை. புதுப்பிக்கப்பட்ட தேவி காம்ப்ளக்ஸில் வாரநாட்களில் கூட ஹவுஸ்ஃபுல் ஆகிறது.

பேராண்மை - பெரியதாக எதிர்ப்பார்க்கப்பட்டு புஸ்ஸான படம். ஆதவனின் கலெக்‌ஷனில் பாதியை எட்டுவதற்கே, இப்படம் திணறிக் கொண்டிருக்கிறது. மூன்று தீபாவளிக்கு முன்பாக ‘ஈ’ கொடுத்து, இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய ஜனநாதன் சறுக்கியிருக்கிறார். படத்தின் முதல் பாதியை சீட்டில் நெளியாமல் பார்ப்பவர்களுக்கு ‘சிறந்த திரைப்பட ரசிகர்’ விருது கொடுக்கலாம். இரண்டாம் பாதி அட்டகாசமாக ஆக்‌ஷன் பேக். முதல்பாதியை தட்டிவிட்டு, இரண்டாம் பாதியையே முழுநீளத்துக்கும் இழுத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்னவோ? எப்படிப் பார்த்தாலும் ஜெயம் ரவிக்கு மட்டும் இப்படம் நல்ல கேரியர் ஸ்கோப்பை கொடுத்திருக்கிறது.

ஜெகன்மோகிணி - ரொம்ப ரொம்ப மொக்கையான படம். நமீதாவை மட்டுமே நம்பி களமிறங்கிய இந்தப் படம் கூட இரண்டு வாரங்களில் சென்னையில் மட்டும் அரை கோடியை குவித்தது வினியோகஸ்தர்களுக்கே ஆச்சரியமளிக்கக் கூடிய விஷயமாக இருந்திருக்கும்.

தீபாவளி முடிந்து இருவாரங்கள் கழித்து வேட்டைக்காரனை இறக்குவதற்கு முன்பாக எவ்வளவு ஆழம் என்று கால்விட்டுப் பார்க்கும் விதமாக ‘கண்டேன் காதலை’யை நைசாக சன் வெளியிட்டது. முதல் மூன்று நாட்களில் மட்டுமே சென்னையில் கால் கோடியை வசூல் எட்டிப் பிடித்திருக்கிறது. ‘சன்’னின் வீரியம் பிரமிப்பு தருகிறது. அனேகமாக வேட்டைக்காரன் முதல் நாள் வசூலே ஐந்து கோடியை எட்டினாலும் நான் ஆச்சரியப்படப் போவதில்லை.

மழைப்பாக்கம்!


உங்களுக்கு மழையை ரொம்பவும் பிடிக்குமா? தூறத் தொடங்கியதுமே கவிதை எழுத பேனாவைக் கையில் எடுத்துவிடுபவரா?

தோழர் ஆதவன் தீட்சண்யாவின் ‘வேறு மழை’ கவிதையை வாசியுங்கள்...

மிஞ்சிப்போனா என்ன
சொல்லிற முடியும் உன்னால
இந்த மழையைப் பத்தி

ஓதமேறுன கொட்டாய்ல
கோணில மொடங்கியும்
குளுர்ல நடுங்கியிருக்கியா

உங்கூட்டுப் பொண்டுக
நமுத்த சுள்ளியோட சேந்தெரிஞ்சு
கஞ்சிக் காய்ச்சியிருக்காங்களா
கண்ணுத்தண்ணி உப்பு கரிக்க

ஈரஞ்சேராம எளப்பு நோவெடுத்து
செத்த சொந்தத்த எடுக்க வக்கத்து
பொணத்தோட ராப்பகலா
பொழங்கித் தவிச்சதுண்டா

ஒழவுமாடொன்னு கோமாரியில நட்டுக்க
ஒத்தமாட்டைக் கட்டிக்கிட்டு
உயிர்ப் பதற அழுதிருக்கா உங்குடும்பம்

எதுக்கும் ஏலாம
உஞ்செல்லப்புள்ளையோட
சிறுவாட்டக் களவாண்டு
சீவனம் கழிஞ்சிருக்கா

தங்கறதுக்கு வூடும்
திங்கறதுக்கு சோறுமிருந்துட்டா
சவுரியத்துக்கு எழுதுவியாடா மயிரானே
ஒண்ணு தெரிஞ்சுக்கோ
மழை ஜன்னலுக்கு வெளியதான்
எப்பவும் பெய்யுது உனக்கு
எங்களுக்கு எங்க பொழப்பு மேலயே.

* - * - * - * - * - * - * - * - * - *

காலையில் கே.டிவி.யில் ‘பாட்டுக்கு நான் அடிமை’ ஓடிக்கொண்டிருந்தது. கவுண்டமணி-பாண்டு கோஷ்டியின் காமெடிக்குத்து சலிக்கவே சலிக்காது. இசைஞானியின் இசையில் பாடல்கள் தேன். ராமராஜனை வைத்துக்கூட முழுநீள காமெடி கேரக்டரில் சப்ஜெக்ட் எடுத்த இயக்குனர் ஷண்முகப்ரியனின் லேட்டரல் திங்கிங்குக்கு பிக் சல்யூட். படத்தில் ஒரே ஒரு குறை. கதாநாயகி ரேகா. முதிர்கன்னி தோற்றத்தில் அவர் பாவாடைத் தாவணியோடு வருவது கடுப்பு.

* - * - * - * - * - * - * - * - * - *

ஆச்சரியமான விஷயம். முப்பது மணி நேரத்துக்கும் மேலாக மழை அடித்து நொறுக்கியும் கூட இன்னமும் மடிப்பாக்கம் நகரத்திலிருந்து துண்டாகிவிடவில்லை. அதுபோலவே நகரின் ரயில்வே கிராசிங் சப்வேக்கள் நிரம்பிப் போய் போக்குவரத்து ஸ்தம்பித்து விடவில்லை.

நான்கைந்து மணிநேரம் மழைபொழிந்தாலே வெள்ளமாகிவிடும் சென்னை, இம்முறை மழையை கம்பீரமாக வரவேற்றிருக்கிறது. குறிப்பாக தென்சென்னை பளிச். தி.நகர் ஜி.என். செட்டிசாலை மற்றும் வடசென்னையில் சில பகுதிகள் தான் விதிவிலக்கு. இதுபோன்ற மழைக்கு நான்கைந்து நாட்கள் ஸ்ட்ரைக் விடும் வியாசர்பாடி, பெரம்பூர் சப்வேக்கள் கூட விரைவாக இயல்புக்கு திரும்பிவிட்டது.

பெரிய மேஜிக்கெல்லாம் ஒன்றுமில்லை. மழைக்கு முன்பாக கால்வாய்கள் இப்போது தான் ஒழுங்காக தூர்வாரப்பட்டிருக்கிறது. குறிப்பாக மாம்பலம் கால்வாய், பக்கிங்காம் கால்வாய், வேளச்சேரி ஏரி கால்வாய் ஆகியவற்றை தூர்வாரும் பணி, நேர்மையான காண்ட்ராக்டர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் போலிருக்கிறது.

கடந்த வருடமே பாஸ் மார்க் வாங்கிவிட்ட திமுக அரசு, தேர்தலுக்கு முன்பாக பர்ஸ்ட் கிரேடில் தேறிவிடும் என்ற நம்பிக்கை வருகிறது.

* - * - * - * - * - * - * - * - * - *

மழைநேரத்தில் அடிக்கடி உச்சா வருவதைப்போல, அடிக்கடி தம் அடிக்கவேண்டும் என்ற உணர்வும் இயல்பாகவே அடிமனதிலிருந்து நாதவெள்ளம் மாதிரி ஊற்றெடுக்கும். நனைந்தப்படியே பெட்டிக்கடைக்குச் சென்று ஒரு கிங்ஸ் வாங்கி வாயில் வைத்து, தீப்பெட்டியை எடுத்து பற்றவைத்தால்... ம்ஹூம்.. சிக்கிமுக்கி கல்லை வைத்து தேய்த்துக்கூட நெருப்பினை பற்றவைத்து விடலாம். லைட்டாக நனைந்துப்போன நம் தீப்பெட்டிகள் பற்றவே பற்றாது. எனவே, மழைக்காலத்தில் மட்டுமாவது நமுத்துப்போன தீப்பெட்டிகளுக்குப் பதிலாக, அட்லீஸ்ட் மட்டமான பத்துரூவாய் சைனிஸ் லைட்டரையாவது பொட்டிக்கடை அதிபர்கள் கைவசம் வைத்திருக்குமாறு, அடாத மழையிலும் விடாது தம்மடிப்போர் சங்கத்தின் சார்பாக கோரிக்கை விடுக்கிறோம்.

* - * - * - * - * - * - * - * - * - *

இந்தப் பதிவின் தலைப்புக்கு சொந்தக்காரர், மறைந்த தென்கச்சியார்.