13 நவம்பர், 2009

அடிக்கடி தொலையும் ‘அந்த’ மேட்டர்!


கந்தனுக்கு ரயிலுக்கு நேரம் ஆகிக்கொண்டே போகிறது. தேடிக்கொண்டேயிருக்கிறான். எங்கேதான் போயிருக்கும்? ச்சே.. தம்மாத்தூண்டு மேட்டரு, இதைப் போயி அடிக்கடி தொலைக்கிறோமே என்று அவனை அவனே நொந்துகொண்டான். அவன் குட்டிப்பையனாக இருந்தபோது அடிக்கடி இதை தொலைத்துவிட்டு அம்மாவிடம் அடிவாங்குவானாம். இன்னும் கூட வீட்டுக்கு வரும் சொந்தக்காரர்களிடம் சொல்லி சிரித்து மானத்தை வாங்குகிறார் அம்மா.

”போனமாசம் தான் வாங்கியது. புத்தம்புதுசு. அதைப் போய் தொலைத்துவிட்டேனே? எனக்கு பொறுப்பேயில்லை” மனதுக்குள் பேசியவாறே தேட ஆரம்பித்தான். இது அடிக்கடி தொலைந்து போகிறது என்று நண்பர்களிடம் சொன்னால் வாய்விட்டு சிரிப்பார்கள். “இதைப்போயி ஏண்டா கழட்டுறே? அப்படியே போட்டுக்கிட்டிருக்க வேண்டியது தானே?” என்பார்கள். அவர்களுக்கென்ன தெரியும்?

24 மணி நேரமும் அதை போட்டுக் கொண்டிருந்தால் அரிக்காதா? சொறிந்து சொறிந்து சிவந்து விடுகிறது. சில நேரங்களில் புண்ணும் ஆகிவிடுகிறது. சூரிய வெளிச்சம் படாமல் அந்தப் பகுதியின் நிறமே வெளிர்நிறமாய் மாறிவிடுகிறது. காற்றாவது படட்டும் என்றுதான் இரவுவேளைகளில் மட்டும் கழட்டிவிடுகிறான் கந்தன். அதுபோல கழட்டுவது பிரச்சினையில்லை, காலையில் எழுந்ததுமே அதை எங்கே கழட்டி வைத்தோம் என்பதை மறந்துவிடுவது தான் அவனது பிரச்சினை.

அய்யோ. ரயிலுக்கு நேரம் ஆகிறது. இன்னும் ஐந்து நிமிடத்தில் கிளம்பிவிட வேண்டும். அதற்குள் கிடைத்துவிடாதா?

நேற்று இரவு 12 மணிக்கு அறைக்கு வந்தேன். லைட்டுக்கு ஸ்விட்ச் போட்டேன். சட்டையை கழட்டினேன். பேண்டை கழட்டினேன். லுங்கி எடுத்து மாட்டிக் கொண்டேன். அதன்பிறகு தான் ‘அதை' கழட்டி இருக்க வேண்டும். வழக்கமாக அதுதான் நடக்கும். கழட்டி பொதுவாக எங்கே வைப்பேன்? டேபிள் மேல் வைப்பேன்? இல்லை தம் அடிக்க அந்த வேளையில் பாத்ரூமுக்கு போனால் பாத்ரூமில் சோப்பு பெட்டி வைக்கும் இடத்துக்கு அருகில் ஓரமாக வைத்திருப்பேன். அங்கேயும் காணோமே? எங்குதான் போயிருக்கும். சரி நேரம் ஆகிவிட்டது. ஊருக்கு போகவேண்டியதுதான். ஒரு வாரம் கழித்து வந்து ஓய்வாக தேடிக்கொள்ளலாம். பையை எடுத்துக் கொண்டு கந்தன் கதவை சாத்திக் கொண்டு அவசர அவசரமாக கிளம்பினான்.

கந்தன் தேடிக்கொண்டிருந்த அந்த சிகப்புக்கல் மோதிரம் கட்டிலுக்கு கீழே கிடந்தது.

12 நவம்பர், 2009

ஓட்டம்னா ஓட்டம், அப்படி ஒரு ஓட்டம்!

எச்சரிக்கை : இப்பதிவின் தலைப்பை யாரும் எம்.ஜி.ஆர் பாணியில் படித்துத் தொலைத்துவிட வேண்டாம்.

பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. அப்போது +2 படித்துக் கொண்டிருந்ததாக நினைவு. எங்கள் வீடு மெயின்ரோட்டில் இருந்து சிறிய சந்துக்குள் அமைந்திருந்தது. மெயின்ரோட்டில் எங்கள் வீட்டுக்கு முன்பாக ஒரு கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் அலுவலகம். அதற்கு பக்கத்தில் பூசாரிவீடு. பூசாரி வீட்டுக்கு அடுத்ததாக மிஷின்காரம்மா வீடு. அவர்கள் வீட்டுக்கு முன்பாக கடையில் வாடகைக்கு ஒரு ஒயின்ஷாப்பும், பாரும் இருந்தது.

அவ்வப்போது குடிகாரர்கள் குடித்துவிட்டு கலாட்டா செய்வது சுவாரஸ்யமாக இருக்கும். சில குடிகாரர்கள் போதையில் விசில் அடித்துக்கொண்டே வீட்டுக்கு செல்வார்கள். சிலபேர் உரத்தக் குரலில் பழைய பாடல்களை பாடியபடியே தள்ளாடியபடியே நடப்பார்கள். இன்னும் சிலரோ போதையில் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு தெருவில் புரள்வார்கள். சில பேர் பச்சை பச்சையாக எதிரில் இல்லாத எதிரி எவனையாவது திட்டியபடியே நடப்பார்கள். என் பெரியப்பாவும் அந்த பாரில் அவ்வப்போது 'கட்டிங்' விட்டு திராவிட இனமான வரலாறு சொல்ல ஆரம்பிப்பார். தினம் தினம் ஜாலியான கண்காட்சி தான். தெருப்பெண்கள் இரவு ஏழுமணிக்கு மேல் அந்தப்பக்கமாக செல்லமாட்டார்கள். குடிகாரர்கள் யாரும் பெண்களிடம் தவறாக நடந்துகொள்வதில்லை என்றாலும் பெண்களுக்கு குடிகாரர்களை பார்த்தாலே வெறுப்பு.

ராதிகா நடித்த சித்தி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அப்பா சித்தி ரசிகர். எம்.ஆர்.ராதா எங்களுக்கு தூரத்து உறவினர் என்பதால் ராதிகா நடித்த படம், சீரியல் எதையும் வீட்டில் விட்டு வைப்பதில்லை. எங்கள் வீடே 'சித்தி'யை பார்த்துக் கொண்டிருக்க, நான் குமுதத்தின் நடுப்பக்கத்தை அரைமணி நேரமாக ரசித்துக் கொண்டிருந்தேன். பிற்பாடு +2 பெயிலான பிறகு நடுப்பக்கத்தை மட்டும் அப்பா 'சென்சார்' செய்து கிழித்து தந்ததுண்டு :-(

ஒயின்ஷாப்பில் பாட்டில்கள் உடையும் சத்தமும், 'ஆய்.. ஊய்' என்று பலமான சத்தமும் கேட்டது. சித்தியில் மூழ்கியிருந்ததாலும், ஒயின்ஷாப்பில் வழக்கமாக கலாட்டாக்கள் நடந்தவண்ணம் இருந்ததாலும் யாருக்கும் அதில் ஆர்வமில்லை. நான் மட்டும் கதவைத் திறந்துகொண்டு சென்று பார்த்தேன். பக்கத்து பூசாரிவீட்டு காம்பவுண்டை எகிறிக் குதித்து இரண்டு பேர் எங்கள் வீட்டை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தார்கள். இருவர் கையிலும் உடைக்கப்பட்ட பீர் பாட்டில் முனைகள் கூர்மையாக பளபளத்தது. ஒருவனின் சட்டை முழுக்க இரத்தம். அவர்கள் ஓடிவருவதை கண்டதுமே யாரோ துரத்தி வருகிறார்கள் என்பது புலப்பட்டது. எப்படியும் எங்கள் வீட்டில் தான் பாட்டில்முனையில் கட்டாய அடைக்கலம் அடையப் போகிறார்கள் என்று தெரிந்தது. துரத்துவது போலிசாக இருந்தால் எங்களுக்கு தேவையில்லாத பிரச்சினை வரும்.

வேகமாக ஓடிவந்து கதவை மூடி தாளிட்டேன். அப்பாவும், அம்மாவும் வித்தியாசமாக பார்த்தார்கள். உள்ளறைக்கு ஓடி, மரம் வெட்டும் இரண்டு அடி நீள கத்தியை (சாணை பிடிக்காமல் மொக்கையாக இருந்தது) எடுத்துக் கொண்டு கதவுக்கு அருகில் ஓடிவந்து நின்றேன். எங்கள் வீட்டு காம்பவுண்டை அவர்கள் எகிறிக் குதிக்கும் சத்தம் கேட்டது. நான்கைந்து நொடிகளில் கதவை நெருங்கி விடுவார்கள். "த்தா.. ங்கொம்மா.. வெட்டிடுவேன்.. குத்திடுவேன்" என்று பீதியில் வெறிக்கூச்சல் இட்டவாறே கத்தியை தரையில் சரக் சரக்கென இழுத்து பயங்கர சத்தம் எழுப்பினேன். கதவுக்கு அருகில் வந்தவர்கள் உள்ளே ஒரு 'பெரிய ரவுடி' இருக்கக்கூடும் என்று நினைத்திருக்கலாம். அல்லது பதட்டத்தில் உள்ளே எழுந்த கூச்சல் அவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம். குழம்பிப் போனவர்கள் எங்களது பின்வாசல் கேட்டை எகிறிக் குதித்து ஓட ஆரம்பித்தார்கள்.

அவர்கள் ஓட ஆரம்பித்ததுமே எனக்கு தெம்புவந்துவிட்டது. கதவை திறந்துகொண்டு அவர்களை கத்தியோடு துரத்த ஆரம்பித்தேன். வெற்றுடம்பு. வீட்டில் இருக்கும்போது சட்டையோ, உள்பனியனோ போடுவதில்லை. கேட்டை தாண்டி ஓட ஆரம்பிக்கும்போது 'லுங்கி' தடையாக இருந்தது. அதை அவிழ்த்து தூக்கியெறிந்துவிட்டு 'டாண்டெக்ஸ்' ஜட்டியோடு அவர்களை வெறியோடு துரத்தினேன். மூன்று பெரியப்பா வீடுகளும் எங்கள் வீட்டுக்கு அருகருகே இருந்தது. எங்கள் வீட்டிலிருந்து வந்த வினோத சத்தத்தை கேட்டவர்களும் துணுக்கிட்டிருக்கிறார்கள். பெரிய பெரியப்பாவின் மகன் என்னவென்று பார்க்க சாலைக்கு வந்தபோது தம்பி ஜட்டியோடு கத்தியை எடுத்துக்கொண்டு இருவரை துரத்துவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். என்ன ஏதுவென்று தெரியாத அவரும் அந்த 'இருவரை' துரத்த ஆரம்பித்தார். உண்மையில் அவர்களை ஏன் கத்தியோடு துரத்தினேன் என்று எனக்கும் அப்போது தெரியாது.

குடிகாரர்கள் இருவர் மூச்சுவாங்க முன்னால் ஓட.. அவர்களை துரத்தியவாறே நாங்கள் இருவரும் பின்னால் ஓட.. ஒன்றும் புரியாமல் எங்கள் குடும்பத்தார் ஒட்டுமொத்தமாக ரோட்டுக்கு வந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். என் அண்ணனாவது சைலண்டாக ஓடிவந்தார். நானோ அபோகலிப்டோ வேட்டை ஸ்டைலிலும், அப்பாச்சே செவ்விந்தியர்கள் ஸ்டைலிலும் ஆய்.. ஊய்.. என்று கொடூர சத்தம் எழுப்பியவாறே துரத்தினேன். துரத்தப்பட்டவர்கள் மடிப்பாக்கம் பஸ் நிலையத்துக்கு அருகிலிருக்கும் குளத்துக்குள் நுழைந்து ஓட ஆரம்பித்தார்கள். குளத்தை தாண்டினால் அவர்கள் ஊருக்குள் தப்பி ஒளிவது எளிது. ஓட்டம்.. ஓட்டம்.. மரண ஓட்டம்.. அந்த அளவுக்கு வேகமாக வெறிநாய்கள் துரத்தியபோது கூட நான் ஓடியதில்லை. என்னைவிட என் அண்ணன் வேகமாக ஓடினார். முன்னால் ஓடிக்கொண்டிருந்தவர்களை கிட்டத்தட்ட அவர் நெருங்கிய வேளையில், அவர்களில் ஒருவன் சடன் பிரேக் போட்டு திரும்பி உடைந்த பாட்டிலை காட்ட இருவரும் திகிலடித்துப் போனோம். நோஞ்சான்களாக இருவர் இவ்வளவு தூரம் அவர்களை துரத்திவந்தது குறித்து அவன் கருடகர்வ பங்கம் பட்டிருக்க வேண்டும். "அப்படியே திரும்பி ஓடுங்கடா... முன்னாடி ஸ்டெப் வச்சா இறக்கிடுவேன்" என்று பாட்டிலை குத்துவது போல காட்ட..

முன்னால் ஓடிய வேகத்திலேயே அப்படியே அபவுட் டர்ன் போட்டு திரும்பி பின்னால் ஓட ஆரம்பித்தோம். அந்த குடிகாரர்கள் காரிய மண்டபம் பக்கமாக ஓடி ஒளிந்து எஸ்கேப் ஆனார்கள். திரும்பி ஓடிவரும்போது அண்ணன் கேட்டார். "எதுக்குடா அவனுங்களை கையில கத்தியோட துரத்துனே?". என்ன பதில் சொல்லுவதென்றே தெரியவில்லை. அவர்களை துரத்த வேண்ட அவசியம் எதுவுமில்லாமலேயே துரத்திக்கொண்டு ஓடியிருக்கிறேன். "தெரியலையே!" என்று சொன்னபோது மண்டையில் நங்கென்று குட்டினார். மேலதிக விசாரணைகளுக்கு அப்புறம் தான் தெரிந்தது. அந்த ரெண்டு பேரும் குடிபோதையில் ஒயின்ஷாப் மாடியில் இருந்து தெருவில் பாட்டில் விட்டிருக்கிறார்கள். அவர்களது போதாதநேரம் ரோந்துவந்த போலிஸ் ஜீப் ஒன்றின் மீதே பாட்டில் விழுந்து உடைந்திருக்கிறது. போலிஸ் துரத்த, இந்த அப்பாவிகள் தப்புவதற்காக எங்கள் வீட்டுப் பக்கமாக ஓடிவந்திருக்கிறார்கள்.

வீட்டு வாசலில் நின்றிருந்த அப்பா சொன்னார். "நல்லா சவுண்டு உடறே. அரசியலுக்கு போனா அசத்திடுவே!". அதுவரை ஓ.வில் ஆரம்பிக்கும் ஸ்லோகத்தையெல்லாம் என் வாய் உச்சரிக்கும் என்பது என் வீட்டுக்கு தெரியவே தெரியாது. என்னோடு அந்த குடிகாரர்களை துரத்தி வந்த எனது அண்ணன் இப்போது அரசியல்வாதி.

நக்சல் தரப்பு நியாயங்கள்!

முதல் பாகம் : துப்பாக்கிக் குழாயில் அரசியல் அதிகாரம்!
இரண்டாம் பாகம் : வசந்தத்தின் இடிமுழக்கம்!
மூன்றாம் பாகம் : இடியுடன் கூடிய மழை!
நான்காம் பாகம் : மழைக்குப் பின் புயல்!
ஐந்தாம் பாகம் : பீகார் ஜெயில் தகர்ப்பு!
ஆறாம் பாகம் : அழித்தொழிப்பு!
ஏழாவது பாகம் : தமிழ் நக்சலைட்டுகள்!


ஒரு இயக்கம் திடீரென்று ஒரே நாளில் நேற்று பெய்த மழையில் இன்று முளைக்கும் காளானைப் போல தோன்றிவிடுவதில்லை. நக்சல்பாரிகளின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் 1960 காலக்கட்ட நாட்டு நடப்போடு பொருத்திப் பார்த்தோமானால் அந்த இயக்கம் தோன்றியிருக்க வேண்டியதின் அவசியத்தையும் உணரமுடியும்.

எந்த ஒரு நாட்டிலுமே அரசினை எதிர்க்கக் கூடிய மக்கள் இருக்கவே செய்கிறார்கள். அம்மக்களது அன்றாடத் தேவைகள் கூட அவர்களை ஆளும் அரசாங்கங்களால் நிறைவேற்றி வைக்கப்படாத நேரங்களில் அரசினை எதிர்த்து கலகக்குரல் எழுப்புகிறார்கள். முன்னேறிய பல நாடுகளில் கூட இதுபோன்ற புரட்சியாளர்களை காணமுடியும். எல்லாத் தரப்பு மக்களையுமே அரசாங்கங்களால் திருப்திபடுத்திவிடக் கூடிய சாத்தியம் இருக்கிறதா என்பது ஆராயக்கூடிய கேள்வி. வளர்ந்த நாடாக மாறிக்கொண்டிருக்கும் இந்தியாவில் சில தரப்பு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது நமக்கு கண்கூடாகவே தெரிகிறது. எனவே இங்கே புரட்சிக்குரல் எழுந்ததில் எந்த ஆச்சரியமுமில்லை.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்கா கண்டங்களில் புரட்சிகர சிந்தனைகளை வழிதொடர்பவர்கள் அதிகரிக்கிறார்கள். காரல் மார்க்ஸின் சிந்தனைகளை தேடி, தேடி வாசிக்கிறார்கள். சமுதாய நலனுக்காக தங்கள் உயிரையும் தியாகம் செய்ய மனதளவில் தயாராகிறார்கள். கம்யூனிஸம் மக்கள் மனங்களில் ஒரு மதமாகிறது. இந்த மனப்பான்மை வியட்நாமில் எதிரொலித்து புரட்சி மலர்கிறது, அமெரிக்காவை வியட்நாமிய கொரில்லாக்கள் ஓட ஓட விரட்டுகிறார்கள்.

ஐரோப்பாவில் மாணவர்களின் அடக்குமுறைகளுக்கு எதிரான தொடர்போராட்டங்கள், பொலிவியக் காடுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போர் தொடுத்து உயிரிழந்த சேகுவேரா, சீனாவில் மாசேதுங்கின் கலாச்சாரப் புரட்சி என்று உலகளாவிய செய்திகளாலும், 1940களின் இறுதியில் ஆந்திராவில் நடந்த தெலுங்கானா போராட்டங்களாலும் தாக்கத்துக்கு உள்ளானவர்கள் மனதில் ‘புரட்சி' நீறுபூத்த நெருப்பாக உறங்கிக் கிடந்தது. இவையெல்லாம் மனரீதியாக இந்திய விவசாயிகளையும், பாட்டாளிகளையும் புரட்சிக்கு தயார் செய்துவந்தன.

இமயம் முதல் குமரி வரை இந்தியாவில் சுரண்டப்பட்ட விவசாயிகளும், பாட்டாளிகளும் தங்களை காக்க ஒரு தேவமைந்தன் வரமாட்டானா என்று ஏங்கிக் கொண்டிருந்தார்கள். சினிமாக்களில் கதாநாயகன் விவசாயியாக, தொழிலாளியாக நடித்து வில்லன்களான பண்ணையார்களையும், தொழில் அதிபர்களையும் தட்டிக்கேட்டு, அடித்து உதைத்தபோது சந்தோஷமாக கைத்தட்டி ரசித்தார்கள். அதே வேலையை ஒரு அமைப்பு செய்கிறது என்றபோது ஒவ்வொருவரும் ஆயுதம் ஏந்தி அந்த அமைப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். தனிமனிதனாக அதிகார வர்க்கத்தை யாரும் எதிர்க்க முடியாது என்பதை உணர்ந்தவர்கள் நக்சல்பாரியாக மாறி அமைப்புரீதியாக இயங்கத் தொடங்கினார்கள்.

மார்க்சிஸம் - லெனினிஸம் - மாவோயிஸம், இந்த மூன்று முப்பெரும் சிந்தனைகளின் அடிப்படையிலேயே நக்சல்பாரிகளின் கொள்கைகள் கட்டமைக்கப்படுகிறது. காரல்மார்க்ஸின் சிகப்புச் சிந்தனைகளை செயலாக்கிக் காட்டியவர் ரஷ்யாவின் லெனின். லெனினுக்கு பின்பாக இச்சிந்தனைகளை ஆயுதவழியிலும், ஏனைய வழிகளிலும் சீனாவில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியவர் மாவோ என்று கம்யூனிஸ்ட்களால் அழைக்கப்படுகிற மாசேதுங்க்.

மாவோயிஸ்ட்டுகள் என்று சொல்லப்படும் நக்சல்பாரிகள் பின்பற்ற விரும்புவது மாசேதுங்கையே. மாசேதுங் சீனாவில் வெற்றிகரமாக செயல்படுத்திய ‘மக்கள் போர்' தான் மாவோயிஸ்டுகளின் குறிக்கோள். மக்களுக்கான உரிமைகளை மக்களே ஆயுதம் தாங்கி, கொரில்லா போர் முறையில் வென்றெடுப்பது தான் மாவோயிஸ்டுகள் வரையறுக்கும் புரட்சி. இந்திய நக்சல்பாரிகளின் நதிமூலமாக போற்றப்படும் சாருமஜூம்தாரின் மொழியில் சொன்னால், “துப்பாக்கி முனையில் மக்களுக்கான அதிகாரம்!”

“ஓட்டுப் போடாதே, புரட்சி செய்!” என்பது நக்சல்பாரிகளின் இன்னொரு கோஷம். இது ஜனநாயகமுறையில் தேர்தல் நடக்கும் உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான இந்தியாவுக்கு அச்சுறுத்தல் தரும் கோஷம். தேர்தல் புறக்கணிப்பை நீண்டகாலமாக நக்சல்பாரிகள் பல மாநிலங்களிலும் செய்து வருகிறார்கள். தேர்தல் முறையால் நாட்டில் புரட்சி ஏற்படுவது தாமதமாகிறது என்பது அவர்களது குற்றச்சாட்டு.

ஏழ்மை தான் ஒருவனை நக்சல்பாரியாக, புரட்சியாளனாக மாற்றியது, மாற்றுகிறது. இந்தியாவில் இன்றும் செல்வாக்கோடு நக்சல்பாரிகள் இருக்கும் மாவட்டங்களை சற்று கவனத்தோடு நோக்கினோமானால் ஒரு விஷயம் புரியும். எங்கெல்லாம் ஏழ்மை தலைவிரித்தாடுகிறதோ, அங்கெல்லாம் நக்சல்பாரிகள் வலுவாக காலூன்றியிருக்கிறார்கள். இந்தியாவின் சாபம் ஏழ்மை. இந்தியர்களின் ஏழ்மைக்கு ஆட்சியாளர்கள் காரணமா, அரசு அதிகாரிகள் காரணமா, நிலப்பிரபுக்கள் காரணமா, முதலாளிகள் காரணமா என்பதெல்லாம் ஆய்வுக்குரிய, விவாதத்துக்குரிய விஷயம். ஆனால் ஏழ்மை ஆயுதம் தூக்கவும் செய்யும் என்பது மட்டுமே நிரூபிக்கப்பட்ட உண்மை.

இன்றைய நிலையைப் பாருங்கள். பழங்குடி கிராமத்தவர் அதிகம் வசிக்கும் சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் செல்வாக்காக இருக்கிறார்கள். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் உடல்ரீதியாக அதிகம் சுரண்டப்படும் வடகிழக்கு மாநிலங்களில் வலுவாக இருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் ஏழைகளாக மட்டுமே பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும் ஒரிஸ்ஸாவில் அசுரத்தனமாக காலூன்றி வருகிறார்கள்.

அடுத்ததாக கலாச்சாரத் திணிப்பும் கூட ஆயுதமேந்த செய்கிறது என்று சொல்லலாம். இந்தியா யாருக்கு சொந்தமோ இல்லையோ, இந்தியாவின் பூர்வகுடி மக்களாக வாழ்ந்துவரும் பழங்குடியினருக்கு சொந்தம் என்பதை நாம் எல்லோருமே ஒப்புக்கொண்டாக வேண்டும். உலகமயமாக்கல், நகரமயமாக்கல் மற்றும் நவீன பொருளாதாரத் திட்டங்களால் பழங்குடி மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள், சுரண்டப்படுகிறார்கள், அவர்களது சொந்த நிலமான கிராமங்களையும், காடுகளையும் விட்டு துரத்தப்படுகிறார்கள். காடுகளை நகரமயமாக்கல் விழுங்குகிறது. கிராமங்களை தொழிற்பேட்டைகள் ஆக்கிரமிக்கிறது.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அவர்கள் செய்துவந்த பரம்பரைத் தொழில்கள் அந்நிய சந்தையாளர்களால் அழிக்கப்படுகிறது. “நீ வாழவேண்டுமா? நகரவாசியாக மாறு. உன் கலாச்சாரத்தை, தொழிலை மாற்றிக்கொள்” என்று மறைமுகமான அச்சுறுத்தல் அவர்களுக்கு விடப்படுகிறது. நாகரிகமானவர்கள் என்று சொல்லிக்கொள்கிற நகரவாசிகளால் நாட்டிலிருந்து காட்டுக்கு துரத்தப்பட்டவர்கள் தங்கள் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும், வேரையும் விட்டுத்தர இயலாமல் நக்சல்பாரிகளாக மாறினார்கள். பழங்குடியின மக்கள் மத்தியில் நக்சல்பாரி இயக்கங்கள் செல்வாக்காக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். நக்சல்பாரி இயக்கங்களில் பணியாற்ற ஆதிவாசிகளும், தலித்துகளுமே அதிகமாக குறிவைக்கப் படுகிறார்கள் என்பதை இங்கே பொருத்திப் பார்க்கவும்.

ஒட்டுமொத்தமாக சொல்லப்போனால் ஏழ்மை, வர்க்க வேறுபாடு, நிலப்பங்கீடு குறித்த அரசுகளின் முரட்டுத்தனமான அணுகுமுறை, சாதிய அடக்குமுறை, நீதிமறுப்பு என்று பல காரணிகள் நக்சல் இயக்கங்கள் தோன்றுவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.

அரசு வழங்கும் நலத்திட்டங்கள் பரவலாக கடைக்கோடி இந்தியனுக்கும் சரியாக கிடைத்திருந்தால், இன்று ஏழைகள் அதிகமாக இருக்கும் இந்திய மாவட்டங்களில் அந்தந்த மாநில அரசுகளால் சரியான கட்டமைப்பும் - வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்பட்டிருந்தால், நீதி அனைவருக்கும் சமமாக காவல்துறையாலும் - நீதிமன்றங்களாலும் வழங்கப்பட்டிருந்தால், முதலாளிகள் - நிலப்பிரபுக்கள் மீது அரசுகள் காட்டும் முரட்டுத்தனமான பரிவை விவசாயிகள் - பாட்டாளிகள் மீது காட்டியிருந்தால்.. ஒருவேளை நக்சல்கள் உருவாகாமலேயே இருந்திருப்பார்கள்.

(அரசுத் தரப்பு நியாயங்கள் அடுத்த பாகத்தில்)

11 நவம்பர், 2009

நல்லசிவம் செத்துட்டான், சதாசிவம் பொழைச்சிட்டான்!


ரெண்டு ரவுண்டு உள்ளே போனதும் நீரஜூக்கு ‘அது’ தேவைப்பட்டது.

“டேய் சத்ரூ. சிந்தனைக்கு நெப்போலியன். சிற்றின்பத்துக்கு?”

“வேணும்னா சொல்லுங்க அண்ணே. உடனே ஏற்பாடு பண்ணிடலாம். கைவசம் ஒரு பச்சைக்கிளி காண்டாக்ட் இருக்கு!”

நீரஜூம், சந்த்ருவும் பிரபல இயக்குனர்கள். நீரஜ் சீனியர் என்பதால் சந்துருவுக்கு அவன் ‘அண்ணே’. தண்ணியைப் போட்டால் சந்துரு எப்போதுமே நீரஜூக்கு சத்ரூ. இடம் : பல்லவர்கள் ஆண்ட மாமல்லபுரம். குறிப்பான இடம் : ஹோட்டல் பல்லவாஸ், ரூம் நம்பர் 13. சூழல் : அடுத்த படத்துக்கான டிஸ்கஷன். இருவருமே ஒரே இயக்குனரிடம் பணிபுரிந்தவர்கள் என்பதால், ‘ஈகோ’ பார்க்காமல் ஒருவரின் படத்துக்கு, இன்னொருவர் அசோசியேட்டாக வேலை பார்ப்பது சகஜம். இரண்டு பேருமே சொல்லிவைத்தாற்போல அவரவர் முதல் படத்தில், தங்களின் குருவான டைரக்டரையே ஹீரோவாக்கி படமெடுத்து வென்றவர்கள். ஓக்கே அட்மாஸ்பியர் போதும், சீனுக்கு வருவோம்.

“சத்ரூ.. பச்சைக்கிளின்னு சொல்றப்பவே உடம்பெல்லாம் ஜிவு ஜிவுன்னு ஏறுதுடா. சீக்கிரமா போனை போடு!”

“ரொம்ப அவசரப் படாதீங்கண்ணே. நானே கிளியைப் பார்த்ததில்லை. நம்ம சவுண்டு கொடுத்த காண்டாக்ட்டு அது. ரெண்டு மூணு வாட்டி போனில் பேசினதோட சரி. அடையார்லே இருக்கா. எப்படி இங்கன இந்த நேரத்துலே அங்கிட்டுருந்து கொத்திக்கிட்டு வர்றது?” – சவுண்டு ஒரு குணச்சித்திர/காமெடி நடிகர். வாய்ப்புகளுக்காக அவ்வப்போது இயக்குனர்களுக்கு இதுபோல ‘காண்டாக்ட்’ ஏற்படுத்தித் தருவதுண்டு.

“அதெல்லாம் பார்த்துக்கலாம்டா. நம்ம சித்தன் கிட்டே சொல்லிட்டா கார்லே அள்ளிப் போட்டுக்கிட்டு வந்துடமாட்டானா? அதிருக்கட்டும் பார்ட்டி எப்படி? செம்ம கண்ட்ரி வுட்டா?” – சித்தன் பிரபலமான சீரியல் நடிகன். சினிமாவில் கிடைக்கும் ஓரிரு துண்டுக் காட்சிகளுக்காக இதுபோன்ற சேவைகளை செய்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது.

சந்துரு சித்தனுக்கு போனைப் போட்டான். கோட்டூர்புரத்தில் ஷெட்யூல் முடிந்து வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்த சித்தனின் செல்போன் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்!’ என்று சிணுங்கியது. சந்துருவின் எண்ணைப் பார்த்ததுமே சித்தனுக்கு குஷி. ‘படம் ஏதாச்சும் கமிட் ஆயிடிச்சோ!’ சில்வர் ஸ்க்ரீன் கனவில் ஆன்ஸரை அமுக்கினான். “சொல்லு பங்காளி!”

“எங்கேடா இருக்கே சித்தா?”

“கோட்டூர்புரம்”

“அப்படியே காரை எடுத்துக்கிட்டு அடையார் போ. நான் சொல்ற அட்ரஸை நோட் பண்ணிக்கோ” அட்ரஸ் சொன்னான்.

“அங்கே ஏதாவது ஷூட்டிங்கா பங்காளி? ஏதாவது முக்கியமான கேரக்டர்லே நடிக்கணுமா?”

“அதெல்லாம் இல்லேடா. டிஸ்கஷனுக்கு நீரஜ் அண்ணனோட வந்தேன். தண்ணியைப் போட்டுட்டு அண்ணன் ரவுஸ் உட்டுக்கிட்டிருக்காரு. நான் சொல்ற அட்ரஸ்லே ஒரு பச்சைக்கிளி இருக்கும். அப்படியே கொத்திக்கிட்டு பல்லவாஸுக்கு வந்துடு. ரூம் நம்பர் தர்ட்டீன்!”

பயங்கர கடுப்பானான் சித்தன். ஏதோ சொல்ல வாயெடுத்தான். அதற்குள் நீரஜ் அவசரம் தாங்காமல் சந்துருவிடம் போனை பறித்துப் பேசினான். “சித்தா. அடுத்த படத்துலே உனக்கு செகண்ட் ஹீரோ கேரக்டர் கிரியேட் பண்ணியிருக்கேண்டா. ஆனா நல்ல ‘சீன்’ மாட்ட மாட்டேங்குது. அதுக்குதான் இந்த டிஸ்கஷன். தம்பி சொன்ன கிளியை பிக்கப் பண்ணிட்டு வந்துடு. காரைக் கிளப்பினதுமே, கிளி நங்குனு இருந்தா ‘சதாசிவம் பொழைச்சிட்டான்’னு எஸ்.எம்.எஸ். பண்ணு. சுமாராவோ, சப்பையாவோ இருந்தா ‘நல்லசிவம் செத்துட்டான்’னு மேசேஜ் பண்ணு! செல்லம், நேரத்துக்கு வந்துர்றா... உனக்கு சீன் புடிக்க தாண்டா இவ்ளோ உழைக்கிறோம்!” போனை கட் செய்தான்.

“நம்ம பய முக்கா மணி நேரத்துலே அள்ளிட்டு வந்துடுவான் பாரு. ஆரோக்கியமான கோழியான்னு கேட்டுதான் நமக்கு பிரியாணி சாப்புடறதே வழக்கம். அதனாலேதான் மெசேஜ் அனுப்பச் சொன்னேன்” – வறுத்த முந்திரியை விண்டு வாயில் போட்டான்.

ஐந்து நிமிடத்தில் சித்தனிடமிருந்து மெசேஜ் வந்தது.

“நல்லசிவம் பொழைச்சிட்டான்!”



இது வெறும் கதையென்றால், இத்தோடு நிறுத்திவிட்டிருக்கலாம். நான் கதை என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்தாலும் நீங்கள் யாரும் நம்பப் போவதில்லை. இந்த கதையை எழுதிய கசுமாலம் க்ளூ கொடுக்காத போதிலும் நீரஜ், சந்துரு, சித்தன் எல்லோரையும் புத்திசாலித்தனமாக கண்டுபிடித்துவிடுவீர்கள். ஏற்கனவே கோடம்பாக்க ஆட்களின் போண்டா வாய்களுக்கு, சிலநாட்களாக இந்த ‘நல்லசிவம், சதாசிவம்’ கதை, அவலாக மெல்லப்பட்டு வருகிறது.

ஒன்று. கடுப்பில் வேண்டுமென்றே மெசேஜை மாற்றி அனுப்பி நீரஜை சித்தன் வெறுப்பேற்றியிருக்கலாம்.

இரண்டு. நிஜமாகவே சித்தனுக்கு கோர்ட் வேர்ட் குழப்பம் இருந்திருக்கலாம்.

மூன்று. சித்தனும் தண்ணியைப் போட்டு விட்டு மெசேஜ் செய்திருக்கலாம்.

எப்படியிருந்தாலும், நாம் யாரும் இதற்காக கவலைப்படுவதில் அர்த்தமில்லை. நீரஜூக்கும், சந்த்ருவுக்கு கொஞ்சநேர டென்ஷனை கொடுத்துவிட்டு, சித்தன் பத்திரமாக கிளியை இறக்கிவிட்டதாகவே தகவல். கிளி எப்படி இருந்தது என்றால் ‘நல்லசிவம் செத்துட்டான்’ – நீரஜ் ஃபுல் மூட் அவுட் - கிளியை தனக்கு காண்டாக்ட்டிய சவுண்டினை சபித்துக் கொண்டிருந்தானாம் சந்துரு ஆறாவது ரவுண்டு இறுதியில்.

“அப்பாலிக்கா இன்னா ஆச்சி? இஸ்த்துக்கீனே போரீயே. கதிய சீக்கிரமா முடி வாத்யாரே!” என்று யாரோ சொல்லுவது கேட்கிறது. முடிக்கிறேன், நீரஜின் பஞ்ச் டயலாக்கோடு.

“எது எப்படியிருந்தாலும் போடப்போறது நானில்லை. எனக்குள்ளே இருக்குற நெப்போலியன்!”

வேளாண்மை கற்றால் வேலை நிச்சயம்!


திருச்சி மாநகரிலிருந்து இருபத்தைந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளடங்கி இருக்கிறது போதாவூர். மலைப்பாம்பின் உடல்போல் வளைந்து நெளிந்து செல்லும் சாலை. வழியெல்லாம் கண்ணுக்கு தெரியும் எல்லை வரை அடர்பச்சையில் வாழைத்தோப்புகள். பிராதான சாலையிலேயே பிரம்மாண்டமாக வீற்றிருக்கிறது தேசிய வாழை ஆராய்ச்சி மையம். இந்தியாவிலேயே வாழை ஆராய்ச்சிக்காக இயங்கும் ஒரே தேசியமையம் இதுமட்டுமே.

வேளாண்மைத் துறையில் இந்தியாவின் சிறந்த பெண் விஞ்ஞானியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இங்கே வேலை பார்க்கிறார் என்பது அங்கே வசிப்பவர்களுக்கு கூட தெரியவில்லை. விஷயத்தைக் கேள்விப்பட்டு ஆச்சரியப் படுகிறார்கள்.

மெட்ரிக்குலேஷன் பள்ளி டீச்சர் மாதிரி சிம்பிளாக பாப் கட்டிங், காட்டன் சேலையோடு இருக்கிறார் எஸ்.உமா. 46 வயது. ஆசியாவின் மிகப்பெரிய வாழை மரபணு வங்கியை இந்த மையத்தில் உருவாக்கியிருக்கிறார். இதன் பொருட்டே இவரை ஊக்குவிக்கும் விதமாக ‘பஞ்சாபரோ தேஷ்முக் வேளாண்மைக்கான பெண் விஞ்ஞானி விருது’ கடந்த 2008ஆம் ஆண்டுக்காக இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இவ்விருது இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டும் கூட பயோவெர்ஸிடி, பிரான்ஸ் மற்றும் பனானா ஏசிய பசிஃபிக் நெட்வொர்க், பிலிப்பைன்ஸ் ஆகியோர் இணைந்து வழங்கும் ‘பிசாங் ராஜா’ சர்வதேச விருதினை வென்றெடுத்திருக்கிறார்.

மலைவாசஸ்தலங்களான வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் பயணித்து, பலவித ஆபத்துக்களை எதிர்கொண்டு வாழையின மரபுகளை தேடித்தேடி கண்டறிந்திருக்கிறார்கள் உமா தலைமையிலான குழுவினர். ஆயிரத்து அறுநூறுக்கும் மேலான வாழையினங்களை கண்டறிந்து, முன்னூற்றி அறுபது வகைகளை தொகுத்து மரபணு வங்கியை உருவாக்கியிருக்கிறார்கள். இவர்கள் புதியதாக கண்டறிந்த ‘உதயம்’ என்ற பெயரிலான கற்பூரவள்ளி வகை வாழைப்பழம் இன்று நாடு முழுவதும் விற்பனையில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் பிராண்ட்.

போதாவூரில் இருக்கும் அலுவலகத்தில் அவரைச் சந்தித்தோம். விருதுகளுக்கும், பாராட்டு மழைகளுக்கும் இடையே, திணறி நனைந்துக் கொண்டிருக்கும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து ‘மினி பேட்டி’ எடுத்தோம்.

“மரபணு மாற்ற வேளாண்பொருட்களால் பக்கவிளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கிறார்களே?”

“விஷயம் தெரியாதவர்கள் இதுபோல பேசுகிறார்கள். மரபணு மாற்றங்கள் மூலமாக புதிய, நல்ல விஷயங்கள் நிறைய கண்டுபிடிக்கலாம். மாற்றம் நல்லதாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளுவதுதான் முறை. இதுபோல மரபணுக்களை மாற்றி உருவாக்கப்படும் உணவுப் பொருட்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பலவித சோதனை நிலைகளை தாண்டியே மக்களின் பயன்பாட்டுக்கு எந்தவொரு பொருளும் வருகிறது. மக்களுக்கு கெடுதல் தரும் விஷயமென்றால் அரசு அனுமதித்து விடுமா என்ன?

“கடைகளில் விற்கப்படும் பச்சை வாழைப்பழம் இப்போதெல்லாம் மஞ்சளாகத் தெரிகிறதே? இதுவும் கூட மரபணு மாற்றத்தால் ஏற்பட்டிருக்கும் மாற்றமா?”

“ஒருசில வகைகளைத் தவிர்த்து, வாழைப்பழத்தின் அசல் நிறமே மஞ்சள்தான். நம் நாட்டு தட்பவெட்ப சூழலின் காரணமாக முழுமையாக மஞ்சள் நிறத்தை அடைவதற்குள் பழுத்து விடுகிறது. தோல் பச்சையாக இல்லை, மஞ்சளாக இருக்கிறது என்பதற்கெல்லாம் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை” (சிரிக்கிறார்)

பழம் தவிர்த்து, வாழையின் பயன்கள் என்ன?

வாழை மரத்தை கல்பதரு என்று சொல்லுவதே பொருத்தம். பழம், பூ, இலை, தண்டு, நார், வேர் என்று எல்லாமே பணம் தரக்கூடிய விஷயங்கள். உங்களுக்கே தெரியும். நம்மூரில் வாழை இலை மிகப்பெரிய வருவாயைத் தரக்கூடிய தொழில். பழமும் இப்படியே. மற்றப்பழங்கள் விற்கப்படாத பெட்டிக்கடைகளில் கூட வாழைப்பழங்கள் விற்கப்படுகின்றன.

வாழைப்பூவும், தண்டும் சமையலுக்கு பயன்படுகிறது. வாழைப்பழத் தண்டு சிறுநீரகக் கற்களை அகற்றக்கூடிய மருந்து என்பது மருத்துவமுறையில் நிரூபணமான ஒன்று. வாழைத்தண்டை ஜூஸ் வடிவிலும் குடிக்கலாம்.

வாழைநாரில் இருந்து ஃபைபரை பிரித்தெடுத்து கயிறு செய்யலாம். கப்பல்களில் பயன்படுத்தப்படும் கயிறு இவ்வகையானது. இந்தக் கயிறுக்கு மட்டும்தான் கடல்நீரின் உப்பால் அரிக்கப்படாத தன்மை இருக்கிறது. அதுபோலவே நாரில் பிரித்தெடுத்து உருவாக்கப்படும் கார்க் எண்ணெயை உறிஞ்சும் தன்மை கொண்டது. கப்பல்களில் எண்ணெய் கசிந்தால் இந்த கார்க் வைத்தே அடைக்கிறார்கள். இவ்வளவு ஏன்? நீங்களே பார்த்திருப்பீர்கள். எண்ணெய்க் கடைகளில் டின்னில் இருந்து எண்ணெய் வாய்வழியாக கசியாமல் இருக்க வாழைத்தாரின் ஒரு துண்டினை வைத்துதான் அடைத்திருப்பார்கள். அன்றாட வாழ்வில் எங்கெல்லாம் வாழைத் தொடர்பான பொருட்கள் பயன்படுத்தப் படுகிறது என்று சும்மா கணக்கெடுத்துப் பாருங்கள். உங்களுக்கு ஏராளமான ஆச்சரியங்கள் விளங்கும். விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை தரக்கூடியது வாழைசாகுபடி. இதை எப்படியெல்லாம் பணமாக்கலாம் என்பதையே அவர்களுக்கு சொல்லித்தந்து வருகிறோம்.

வேளாண்மைக்கு இங்கே என்ன எதிர்காலம் இருக்கிறது? மாணவர்கள் மேற்படிப்புக்கு வேளாண்மையைத் தேர்ந்தெடுப்பதில் தயக்கம் காட்டுவதாக தெரிகிறதே?

இதற்கு மாணவர்களை குறை சொல்லி என்ன பிரயோசனம்? பள்ளிக் கல்விப்பாடத் திட்டத்தில் இயற்பியல், வேதியியல், உயிரியல் என்று இருக்கிறது. வேளாண்மை இல்லையே? அவர்கள் பண்ணிரண்டு வகுப்பு வரை எது படிக்கிறார்களோ, அதையே மேற்படிப்பில் படிக்க அவர்களுக்கு வசதியாக இருக்கிறது. வேளாண்மை அடிப்படை நாடான இந்தியாவில், பள்ளியிலேயே வேளாண்மை தனிப்பாடமாக அமையவேண்டியது அவசியம்.

வேளாண்மைத் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. வேளாண்மை படித்தவருக்கு வேலை இல்லை என்ற நிலையே இங்கு இல்லை. ஆதியிலிருந்தே உலகில் ‘டல்’ அடிக்காத ஒரே துறை உணவுத்துறை மட்டுமே. மற்ற எந்தத் துறை வேண்டுமானாலும் எழலாம், வீழலாம். காற்று, நீர், உணவு இன்றி வாழமுடியுமா என்ன? உள்நாட்டில் அரசு அலுவலகங்களிலும், பல தனியார் நிறுவனங்களிலும் வேளாண்மை படித்தவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. வெளிநாடுகளிலும் கூட இவர்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. படித்து முடித்தால் வேலை நிச்சயம் என்ற உத்தரவாதம் இருக்கும்போது இதைவிட சிறந்த கேரியர் ஒரு மாணவனுக்கு வேறு எந்தப் படிப்பில் கிடைக்கும்?


ஆராய்ச்சிக்காக செலவழித்துக் கொண்டிருக்கும் அவரது பொன்னான நேரத்தை நமக்காக ஒதுக்கி, பேசியதற்காக நன்றி தெரிவித்து கிளம்பினோம். வாழைமரங்கள் வரிசையாக தலையசைத்து நமக்கு ‘டாட்டா’ காட்டுகிறது.