18 நவம்பர், 2009

சூரிய(க்) கதிர்!

சில காலமாக தமிழில் பத்திரிகைகள் அதிகம் விற்கப்படுகிறது. அல்லது விற்கப்படுவது மாதிரியான ஒரு மாயையாவது இருக்கிறது. ஆனந்த விகடன் புதிய அளவுக்கு மாறியதற்குப் பிறகாக புதிய பத்திரிகைகளின் படையெடுப்பு அதிகமாகியிருப்பதை உணரமுடிகிறது. பழைய வாசகர்களை விகடன் இழந்துவிட்டது, அவர்களை கைப்பற்றிவிடலாம் என்றொரு நம்பிக்கை நிறைய பேருக்கு ஏற்பட்டிருப்பதாக ஒரு பத்திரிகையாளரோடு பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார்.

எனக்கென்னவோ, புதிய வாசகர்கள் சொல்லிக்கொள்ளும்படி பெருகாவிட்டாலும், விகடன் தன் பழைய வாசகர்களை இழந்ததாக தெரியவில்லை. என்னைப் போன்ற ஓரிருவர் புத்தகத்தின் விலையேற்றம் காரணமாக வாங்குவதை நிறுத்திவிட்டு ஓசியில் படித்துக் கொண்டிருக்கலாம். வடக்கு வாசல் என்றொரு பத்திரிகையை பார்த்தேன். தொண்ணூறுகளில் வந்த விகடன், குமுதம் கலவை. பத்து ரூபாய் விலையென்று நினைக்கிறேன். வாசிக்க நன்றாகவே இருக்கிறது. காலச்சுவடு, உயிர்மை போன்றவை இடைநிலை அந்தஸ்தை எட்டிவிட அகநாழிகை மாதிரி சிற்றிதழ்களும் கூட கொஞ்சம் தெம்பாக களத்தில் குதித்திருக்கிறார்கள்.

ஐந்து ரூபாய்க்கு அதிரடியாக களமிறங்கியிருக்கும் புதிய தலைமுறையும் ஆரம்பத்திலேயே ஒரு லட்சத்தை தாண்டிய பிரதிகளை விற்றுக் கொண்டிருக்கிறது. விலை, விளம்பர வெளிச்சத்தின் அடிப்படையில் பார்த்தாலும் கூட, தமிழகத்தில் சன் குழுமத்தைத் தவிர வேறெவரும் எட்டமுடியாத சாதனையை புதிய தலைமுறை எட்டியிருக்கிறது. “சினிமா இல்லை. நடப்புச் செய்திகள் இல்லை, தகவல் களஞ்சியமாக இருக்கிறது” என்று சிலர் விமர்சிக்கிறார்கள். இது விமர்சனம் அல்ல பாராட்டு. ரீடர்ஸ் டைஜஸ்ட் மாதிரியான ஜாம்பவான்கள் மற்றுமே பெற்ற பாராட்டு இது. “இளைஞர் மலர் மாதிரியிருக்கிறது” என்பது இன்னொரு விமர்சனம். ‘இளைஞர் இதழ்’ என்று விளம்பரங்களில் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் இதழ் இளைஞர் மலர் மாதிரி தானிருக்கும். எப்படியிருப்பினும், பத்திரிகையுலகத்தின் இவ்வருட வரவுகளில் தவிர்க்க முடியாத சக்தியாக ‘புதிய தலைமுறை’ மலர்ந்திருக்கிறது.

குழந்தைகள் தினமன்று ஒரு குஜாலான புதியப் பத்திரிகையை வாங்க முடிந்தது. ‘சூரிய கதிர்’ (க்-கன்னா மிஸ்ஸிங்) என்று பெயருக்காகவே, பதினைந்து ரூபாய் கொடுத்து வாங்கினேன். இன்று பல பத்திரிகைகளில் பணிபுரியும் பல்வேறு பத்திரிகையாளர்களும் எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் மூத்த பத்திரிகையாளர் ராவ் அவர்களால் பட்டை தீட்டப்பட்டவர்களே. ஒரு பத்திரிகையாளத் தலைமுறையை உருவாக்கிய பெருமைக்கு சொந்தக்காரர். ‘ஆசிரியர் : ராவ்’ என்பதே சூரிய கதிரின் மிகப்பெரிய பலம்.

ஆசிரியர் குழுவில் வாசுதேவின் பெயரை பார்த்ததும் இரட்டிப்பு மகிழ்ச்சி. குமுதத்தில் அவர் கலாட்டா அடித்த பக்கங்கள் என்னுடைய பள்ளிநாட்களை சுவாரஸ்யமாக்கிய விஷயங்கள். குறும்புக்காக பெண் வேடத்தில் ஆண்களை அணுகி, அவரது கற்பு ஜஸ்ட்டில் தப்பியதெல்லாம் நினைவுக்கு வருகிறது. நீண்ட வருடங்கள் கழித்து ஒரு பத்திரிகையின் இம்ப்ரிண்டில் எனக்குப் பிடித்த வாசுதேவ். நமீதா, இலீயானா என்று ஜொள்ளு எழுத்துகளால் விகடன் பக்கங்களை ஈரமாக்கிய தோழர் மை.பாரதிராஜா, கோவக்காரப் பொண்ணு மு.வி.நந்தினி, சென்னைத் தமிழில் கொஞ்சும் பாண்டிச்சேரி நண்பர் மரக்காணம் பாலா என்று என்னுடைய நண்பர்களும் ஆசிரியர் குழுவில் இருப்பது பத்திரிகையை கொஞ்சம் மனசுக்கு நெருக்கமாக்கியது.

2004 தீபாவளிக்குப் பிறகு முதன்முறையாக ஜெயேந்திரரின் பிரத்யேகப் பேட்டி, எழுத்தாளர் ரங்கராஜனின் மனைவி சுஜாதாவின் நினைவுகள், அரசியல் குறைவான வைகோவின் அதிரடி, சின்னக்குத்தூசியின் கட்டுரை, இச்சுக்கு இலியானா, லொள்ளுக்கு விவேக் என்று உள்ளடக்க அளவில் முதல் இதழிலேயே சிகரம் தொட்டிருக்கிறது சூரிய கதிர். பாலகுமாரனின் தொடர் ஒன்று கூடுதல் அட்ராக்‌ஷன். எல்லா அம்சங்களும் சரிவிகிதத்தில் கலந்திருக்கும் இப்பத்திரிகையில் ஒரு சிறுகதை கூட இல்லை என்பது சற்றே நெருடல். பார்த்திபனும் கடைசிப் பக்கத்தில் ஒருபக்கத் தொடர் ஒன்றை தொடங்கியிருப்பதாக தெரிகிறது. வழக்கம்போல என்ன எழுதியிருக்கிறார் என்பது நான்குமுறை வாசித்தும் புரியவில்லை. கடைசிப் பக்கம் கச்சிதமாக இருக்க வேண்டியது தற்கால பத்திரிகைச் சூழலில் அவசியம்.

வெகுஜன இதழாக மலர்ந்துவிட்டப் பிறகு விகடன், குமுதம், குங்குமம் மட்டுமன்றி வாரமலர், ராணி ஆகியவற்றிலும் இருந்தும் கூட மாறுபட்டு தெரியவேண்டிய சவால் சூரிய கதிருக்கு இருக்கிறது. முதல் இதழ் தீபாவளி சிறப்பிதழ் போல ஜூகல்பந்தியாக அமைந்துவிட்டது. அடுத்தடுத்த இதழ்கள் முதல் இதழைவிட சிறப்பாக அமையவேண்டியது கட்டாயம். அரசியல் – சினிமா – சமூகம் – கலை என்று சூரிய கதிருக்கான வெளி பரந்ததாக இருப்பதால், சிறந்தவர்களை கொண்ட ஆசிரியர் குழு சிறப்பாகவே இயங்கும் என்று நம்புகிறேன்.

லே-அவுட் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பது பெரியக்குறை. ராவ் சார் ஜூ.வி. ஆரம்பித்தபோது ஏதாவது க்ரிட்டிகலான டாபிக்கல் மேட்டர்களுக்கு கம்பிவேலி கட்டி லே-அவுட் போட்டிருக்கலாம். கம்ப்யூட்டரில் லே-அவுட் செய்யும் இந்தக் காலத்திலும் அந்த கம்பிகளையே பிடித்து வாசகன் தொங்கிக் கொண்டிருக்க முடியாது இல்லையா? அட்டைப்படமும் ரொம்ப சுமார், இலியானா அழகாகவே இல்லை. ஆர்ட் பேப்பரில் இல்லாமல் சாதாரண நியூஸ் பிரிண்டில் 80 பக்கங்கள். பதினைந்து ரூபாய் என்பது கொஞ்சம் அதிகம் என்று வாசகர்கள் அணுக அஞ்சுவார்கள். எனினும் மாதமிருமுறை இதழ் என்பதால் விலை ரெகுலர் வாசகர்களுக்கு பெரிய பொருட்டாக இருக்காது என்று நினைக்கிறேன்.

பத்திரிகை தொடக்கத்துக்கான விளம்பரங்கள் போதுமானவையாக இல்லை என்பது என் அவதானிப்பு. சென்னை நகரில் சொற்ப இடங்களிலேயே சூரிய கதிர் சுவரொட்டிகளை கண்டேன். டிவி விளம்பரங்களும் போதுமானவையாக இல்லை. சன் நியூஸ், கலைஞர் நியூஸ் போன்ற உப்புமா சேனல்களில் விளம்பரம் செய்தால் மட்டும் பத்தவே பத்தாது. அதுபோலவே வினியோகமும் சரியாக இருப்பதாக தெரியவில்லை. லயன் காமிக்ஸ் கூட கிடைக்கும் தி.நகர் ஏரியாவிலேயே கூட சூரிய கதிர் சரிவர கிடைக்கவில்லை.

சூரிய கதிர் – எனக்குப் பிடித்திருக்கிறது, வாசித்துப் பார்த்தால் எல்லோருக்குமே பிடிக்கும் என்று நம்புகிறேன்.

16 நவம்பர், 2009

நக்சல்கள் - அரசுத் தரப்பு நிலை!

முதல் பாகம் : துப்பாக்கிக் குழாயில் அரசியல் அதிகாரம்!
இரண்டாம் பாகம் : வசந்தத்தின் இடிமுழக்கம்!
மூன்றாம் பாகம் : இடியுடன் கூடிய மழை!
நான்காம் பாகம் : மழைக்குப் பின் புயல்!
ஐந்தாம் பாகம் : பீகார் ஜெயில் தகர்ப்பு!
ஆறாம் பாகம் : அழித்தொழிப்பு!
ஏழாவது பாகம் : தமிழ் நக்சலைட்டுகள்!
எட்டாவது பாகம் : நக்சல் தரப்பு நியாயங்கள்!

நக்சல்களை ஒரேயடியாக அரசாங்கம் குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை. நக்சல்பாரிகளும் மக்களுக்காக தான் போராடுகிறார்கள். ஆனால் அவர்களது அழித்தொழிப்பு வகையிலான வன்முறைகளை சட்டத்தின் பேரில் நாட்டை ஆளும் அரசாங்கத்தால் எந்நாளும் ஏற்றுக் கொள்ள இயலாது. மக்களின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே தான் நக்சல்கள் மீது அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்க முடிகிறது. நக்சல் பிரச்சினையை முள் மீது விழுந்த சேலையாக அரசாங்கம் பார்க்கிறது.

நக்சல் குழுக்கள் குறிப்பாக நிலம் மற்றும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை கையில் எடுத்துக்கொண்டே தங்கள் வழியில் போராடுவதாக சொல்லிக் கொள்கிறார்கள். நக்சல்களின் கோரிக்கையான ஒரு திட்டத்தை நாங்கள் செயல்படுத்தினாலும் கூட நக்சல்கள் அதை எதிர்பார்ப்பார்கள் என்று அரசு சொல்கிறது. அதாவது அரசு எதை செய்தாலும் அதை எதிர்ப்பதே நக்சல்பாரிகளின் கொள்கையாக மாறிவிட்டது என்பது அரசு தரப்பு பேசும் நியாயம்.

சமத்துவம், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி, சுதந்திரம், வேலைவாய்ப்பு, மக்களின் தனிப்பட்ட மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பு என்று அரசு தினம் தினம் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகம். இத்துறைகளில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களால் ஒட்டுமொத்த நூற்றி இருபது கோடி இந்தியர்களையும் திருப்தி படுத்துவது மிகக்கடினம். இப்படிப்பட்ட நிலையில் நக்சல்களையும் சமாளிப்பது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்துகிறது.

மக்கள் பணத்தை மக்களுக்காக செல்வழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் வரியாக பெறப்படும் பகுதியை ஏழைமக்களுக்கான திட்டங்களுக்காக தான் அரசு பெரும்பாலும் செலவழித்து வருகிறது. உதாரணத்துக்கு சமீபத்தில் கூட மத்திய அரசு ரூபாய் 2,475 கோடியை நக்சல்கள் ஆதிக்கத்திலிருக்கும் பின் தங்கிய 55 மாவட்டங்களுக்கு ஒதுக்கியிருக்கிறது. இப்பணம் ராஷ்டிரிய சாம்விகாஸ் யோஜனா திட்டத்தின் மூலமாக இம்மாவட்டங்களுக்கு ஆண்டுக்கு 15 கோடி என்ற அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ந்து வழங்கப்படும்.

இது போன்ற திட்டங்கள் மூலமாக பின் தங்கிவிட்ட பகுதிகளில் வாழும் மக்களிடையே சமூகரீதியான வளர்ச்சியை ஏற்படுத்த அரசு தொடர்ந்து பணியாற்றிக் கொண்டுதானிருக்கிறது. நக்சல்களின் வன்முறைப் போராட்டங்கள் இல்லாவிட்டால் எந்த இடையூறுமின்றி மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி வளர்ச்சியடையச் செய்ய முடியும். நக்சல்கள் மக்களுக்காக போராடுபவர்கள் என்று சொல்லிக்கொண்டாலும் வன்முறை தான் ஆயுதம் என்று சட்டத்தை அவரவர் வசதிக்கு கையில் எடுத்துக்கொண்டால் பாதிக்கப்படப்போவது மக்கள் தான்.

இந்தியாவில் 9 மாநிலங்களில் ஏறத்தாழ 76 மாவட்டங்களில் நக்சல்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. இம்மாநிலங்களில் ஏழை மற்றும் பழங்குடி மக்களை மூளைச்சலவை செய்து ஆயுதமேந்த வைக்கிறார்கள். எந்த தொடர்பும் இல்லாவிட்டாலும் கூட நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் மாவோயிஸ்டுகளை சொந்தம் கொண்டாடுகிறார்கள். அரசு மற்றும் சட்டங்களை மதிக்காமல் எதற்கெடுத்தாலும் ஆயுதங்களை தூக்குகிறார்கள். ஆயினும் அவர்களிடம் நவீனரக ஆயுதங்கள் இல்லை. நக்சல்பாரிகளின் தாக்குதல் பொதுவாக காவல்துறை மீதே அதிகமாக இருக்கிறது.

நக்சல்பாரிகளின் பிரச்சினைகளை அந்தந்த பிராந்திய சூழலுக்கேற்பவே கையாள வேண்டியிருக்கிறது. மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான சரியான புரிந்துணர்வு இப்பிரச்சினையை வென்றெடுக்க அவசியமாகிறது. பல பிராந்தியங்களின் கூட்டமைப்பு ஒரே அமைப்பாக இயங்கிவரும் நம் நாட்டில் சட்டத்தை காப்பது இன்றியமையாததாக இருக்கிறது. தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரனாகி சட்டமீறல்கள் ஆங்காங்கே நடைபெறுமென்றால் இந்தியாவின் ஒற்றுமை, நிலைத்தன்மை, ஜனநாயகம் ஆகியவை கேலிக்கூத்தாகி விடும். நக்சல்பாரிகளை அடக்க இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

1) மாநில காவல்துறையை நவீனமயமாக்க வேண்டியது நக்சல்களை ஒடுக்க அவசியமாகிறது. கட்டமைப்பு, தொலைத்தொடர்பு, நவீனரக ஆயுதங்கள் என்று காவல்துறைக்கு அரசு வழங்கி வருகிறது.

2) உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான திட்டங்களை அவ்வப்போது கலந்தாலோசித்து நடைமுறைப்படுத்தி வருகிறது.

3) மத்திய பாரா ராணுவவீரர்களை நக்சல் பாதிப்பு பகுதிகளில் ரோந்து சுற்ற வைக்கிறது.

4) மத்திய ரிசர்வ் போலிசார் பணிக்கு நிறைய ஆட்களை தேர்ந்தெடுத்து அவர்களை நவீன ஆயுதங்களோடு நக்சல் பாதிப்பு பகுதிகளுக்கு பணிக்கு அனுப்புகிறது.

இவையெல்லாம் பாதுகாப்புரீதியாக மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகள். சமூகநீதி, சமூக பொருளாதார வளர்ச்சி போன்ற ரீதியில் பார்க்கப் போனால் கீழ்க்கண்ட சில நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கிறார்கள்.

1) நிலச்சீர்த்திருத்தங்களை கண்டிப்பான முறையில் அமல்படுத்துதல்

2) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை நிறுவுதல்

3) உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக ஊழலற்ற, மக்கள்நல நிர்வாகம்

4) மத்திய - மாநில அரசின் நலத்திட்டங்கள் நேரடியாக அடித்தட்டு மக்களை சென்றடைவதை உறுதிப்படுத்துதல்

மக்களை மட்டுமன்றி இல்லாமல் நக்சல்பாரிகளையும் கருணைப்பார்வையோடு தான் அரசுகள் பார்க்கின்றன. மத்திய உள்துறை அமைச்சகம் நக்சல்பாரி போராளிகளுக்காக அறிவித்திருக்கும் ‘சரணடைதல் மற்றும் மறுவாழ்வு’ திட்டம் மூலமாக போராளிகளும் திருந்தி சராசரி குடிமகன்களாக வாழும் வாய்ப்பிருக்கிறது. இத்திட்டம் மாநில அரசுகள் மூலமாக நக்சல்பாரி குழுக்களில் இருந்து வெளிவருபவர்களுக்காக செயல்படுத்தப்படுகிறது.

சமீபத்தில் கூட ஜார்க்கண்ட் மாநில அரசாங்கம் இத்திட்டத்தின் மூலமாக சில சலுகைகளை முன்னாள் நக்சல்பாரிகளுக்கு வழங்கியது. மாத உதவித்தொகை ரூ.2000, ரூ.10 லட்சத்துக்கான ஆயுள் காப்பீடு, இரண்டாண்டு தொழிற்கல்வி, ஒரு ஏக்கர் விவசாய நிலம், போராளிகளின் குடும்ப குழந்தைகளுக்கு இலவசக்கல்வி என்று ஏராளமான சலுகைகள் குழுக்களில் இருந்து வெளிபவர்களுக்கு அள்ளித் தெளித்தது.

இதுபோன்ற திட்டங்கள் மூலமாக நக்சல் பிரச்சினையை அடக்கிவிட முடியும் என்று அரசு நம்புகிறது. நக்சல்களின் தீவிரம் குறைந்திருப்பதாகவே அரசு தெரிவிக்கிறது. கடந்த காலங்களில் நாடெங்கும் 510 காவல் நிலையங்கள் நக்சல் அபாயத்தில் இருந்ததாகவும், கடந்தாண்டு அது 372 ஆக குறைந்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. சரணடைய விரும்பும் நக்சல்பாரி போராளிகளை கருணையோடு நடத்துவதால் நக்சல் குழுக்கள் பலவீனமடைந்து போராளிகள் சராசரி வாழ்வுக்கு திரும்புவார்கள் என்று அரசு நம்புகிறது.

(அடுத்த பாகத்தோடு முடிகிறது)

13 நவம்பர், 2009

அடிக்கடி தொலையும் ‘அந்த’ மேட்டர்!


கந்தனுக்கு ரயிலுக்கு நேரம் ஆகிக்கொண்டே போகிறது. தேடிக்கொண்டேயிருக்கிறான். எங்கேதான் போயிருக்கும்? ச்சே.. தம்மாத்தூண்டு மேட்டரு, இதைப் போயி அடிக்கடி தொலைக்கிறோமே என்று அவனை அவனே நொந்துகொண்டான். அவன் குட்டிப்பையனாக இருந்தபோது அடிக்கடி இதை தொலைத்துவிட்டு அம்மாவிடம் அடிவாங்குவானாம். இன்னும் கூட வீட்டுக்கு வரும் சொந்தக்காரர்களிடம் சொல்லி சிரித்து மானத்தை வாங்குகிறார் அம்மா.

”போனமாசம் தான் வாங்கியது. புத்தம்புதுசு. அதைப் போய் தொலைத்துவிட்டேனே? எனக்கு பொறுப்பேயில்லை” மனதுக்குள் பேசியவாறே தேட ஆரம்பித்தான். இது அடிக்கடி தொலைந்து போகிறது என்று நண்பர்களிடம் சொன்னால் வாய்விட்டு சிரிப்பார்கள். “இதைப்போயி ஏண்டா கழட்டுறே? அப்படியே போட்டுக்கிட்டிருக்க வேண்டியது தானே?” என்பார்கள். அவர்களுக்கென்ன தெரியும்?

24 மணி நேரமும் அதை போட்டுக் கொண்டிருந்தால் அரிக்காதா? சொறிந்து சொறிந்து சிவந்து விடுகிறது. சில நேரங்களில் புண்ணும் ஆகிவிடுகிறது. சூரிய வெளிச்சம் படாமல் அந்தப் பகுதியின் நிறமே வெளிர்நிறமாய் மாறிவிடுகிறது. காற்றாவது படட்டும் என்றுதான் இரவுவேளைகளில் மட்டும் கழட்டிவிடுகிறான் கந்தன். அதுபோல கழட்டுவது பிரச்சினையில்லை, காலையில் எழுந்ததுமே அதை எங்கே கழட்டி வைத்தோம் என்பதை மறந்துவிடுவது தான் அவனது பிரச்சினை.

அய்யோ. ரயிலுக்கு நேரம் ஆகிறது. இன்னும் ஐந்து நிமிடத்தில் கிளம்பிவிட வேண்டும். அதற்குள் கிடைத்துவிடாதா?

நேற்று இரவு 12 மணிக்கு அறைக்கு வந்தேன். லைட்டுக்கு ஸ்விட்ச் போட்டேன். சட்டையை கழட்டினேன். பேண்டை கழட்டினேன். லுங்கி எடுத்து மாட்டிக் கொண்டேன். அதன்பிறகு தான் ‘அதை' கழட்டி இருக்க வேண்டும். வழக்கமாக அதுதான் நடக்கும். கழட்டி பொதுவாக எங்கே வைப்பேன்? டேபிள் மேல் வைப்பேன்? இல்லை தம் அடிக்க அந்த வேளையில் பாத்ரூமுக்கு போனால் பாத்ரூமில் சோப்பு பெட்டி வைக்கும் இடத்துக்கு அருகில் ஓரமாக வைத்திருப்பேன். அங்கேயும் காணோமே? எங்குதான் போயிருக்கும். சரி நேரம் ஆகிவிட்டது. ஊருக்கு போகவேண்டியதுதான். ஒரு வாரம் கழித்து வந்து ஓய்வாக தேடிக்கொள்ளலாம். பையை எடுத்துக் கொண்டு கந்தன் கதவை சாத்திக் கொண்டு அவசர அவசரமாக கிளம்பினான்.

கந்தன் தேடிக்கொண்டிருந்த அந்த சிகப்புக்கல் மோதிரம் கட்டிலுக்கு கீழே கிடந்தது.

12 நவம்பர், 2009

ஓட்டம்னா ஓட்டம், அப்படி ஒரு ஓட்டம்!

எச்சரிக்கை : இப்பதிவின் தலைப்பை யாரும் எம்.ஜி.ஆர் பாணியில் படித்துத் தொலைத்துவிட வேண்டாம்.

பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. அப்போது +2 படித்துக் கொண்டிருந்ததாக நினைவு. எங்கள் வீடு மெயின்ரோட்டில் இருந்து சிறிய சந்துக்குள் அமைந்திருந்தது. மெயின்ரோட்டில் எங்கள் வீட்டுக்கு முன்பாக ஒரு கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் அலுவலகம். அதற்கு பக்கத்தில் பூசாரிவீடு. பூசாரி வீட்டுக்கு அடுத்ததாக மிஷின்காரம்மா வீடு. அவர்கள் வீட்டுக்கு முன்பாக கடையில் வாடகைக்கு ஒரு ஒயின்ஷாப்பும், பாரும் இருந்தது.

அவ்வப்போது குடிகாரர்கள் குடித்துவிட்டு கலாட்டா செய்வது சுவாரஸ்யமாக இருக்கும். சில குடிகாரர்கள் போதையில் விசில் அடித்துக்கொண்டே வீட்டுக்கு செல்வார்கள். சிலபேர் உரத்தக் குரலில் பழைய பாடல்களை பாடியபடியே தள்ளாடியபடியே நடப்பார்கள். இன்னும் சிலரோ போதையில் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு தெருவில் புரள்வார்கள். சில பேர் பச்சை பச்சையாக எதிரில் இல்லாத எதிரி எவனையாவது திட்டியபடியே நடப்பார்கள். என் பெரியப்பாவும் அந்த பாரில் அவ்வப்போது 'கட்டிங்' விட்டு திராவிட இனமான வரலாறு சொல்ல ஆரம்பிப்பார். தினம் தினம் ஜாலியான கண்காட்சி தான். தெருப்பெண்கள் இரவு ஏழுமணிக்கு மேல் அந்தப்பக்கமாக செல்லமாட்டார்கள். குடிகாரர்கள் யாரும் பெண்களிடம் தவறாக நடந்துகொள்வதில்லை என்றாலும் பெண்களுக்கு குடிகாரர்களை பார்த்தாலே வெறுப்பு.

ராதிகா நடித்த சித்தி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அப்பா சித்தி ரசிகர். எம்.ஆர்.ராதா எங்களுக்கு தூரத்து உறவினர் என்பதால் ராதிகா நடித்த படம், சீரியல் எதையும் வீட்டில் விட்டு வைப்பதில்லை. எங்கள் வீடே 'சித்தி'யை பார்த்துக் கொண்டிருக்க, நான் குமுதத்தின் நடுப்பக்கத்தை அரைமணி நேரமாக ரசித்துக் கொண்டிருந்தேன். பிற்பாடு +2 பெயிலான பிறகு நடுப்பக்கத்தை மட்டும் அப்பா 'சென்சார்' செய்து கிழித்து தந்ததுண்டு :-(

ஒயின்ஷாப்பில் பாட்டில்கள் உடையும் சத்தமும், 'ஆய்.. ஊய்' என்று பலமான சத்தமும் கேட்டது. சித்தியில் மூழ்கியிருந்ததாலும், ஒயின்ஷாப்பில் வழக்கமாக கலாட்டாக்கள் நடந்தவண்ணம் இருந்ததாலும் யாருக்கும் அதில் ஆர்வமில்லை. நான் மட்டும் கதவைத் திறந்துகொண்டு சென்று பார்த்தேன். பக்கத்து பூசாரிவீட்டு காம்பவுண்டை எகிறிக் குதித்து இரண்டு பேர் எங்கள் வீட்டை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தார்கள். இருவர் கையிலும் உடைக்கப்பட்ட பீர் பாட்டில் முனைகள் கூர்மையாக பளபளத்தது. ஒருவனின் சட்டை முழுக்க இரத்தம். அவர்கள் ஓடிவருவதை கண்டதுமே யாரோ துரத்தி வருகிறார்கள் என்பது புலப்பட்டது. எப்படியும் எங்கள் வீட்டில் தான் பாட்டில்முனையில் கட்டாய அடைக்கலம் அடையப் போகிறார்கள் என்று தெரிந்தது. துரத்துவது போலிசாக இருந்தால் எங்களுக்கு தேவையில்லாத பிரச்சினை வரும்.

வேகமாக ஓடிவந்து கதவை மூடி தாளிட்டேன். அப்பாவும், அம்மாவும் வித்தியாசமாக பார்த்தார்கள். உள்ளறைக்கு ஓடி, மரம் வெட்டும் இரண்டு அடி நீள கத்தியை (சாணை பிடிக்காமல் மொக்கையாக இருந்தது) எடுத்துக் கொண்டு கதவுக்கு அருகில் ஓடிவந்து நின்றேன். எங்கள் வீட்டு காம்பவுண்டை அவர்கள் எகிறிக் குதிக்கும் சத்தம் கேட்டது. நான்கைந்து நொடிகளில் கதவை நெருங்கி விடுவார்கள். "த்தா.. ங்கொம்மா.. வெட்டிடுவேன்.. குத்திடுவேன்" என்று பீதியில் வெறிக்கூச்சல் இட்டவாறே கத்தியை தரையில் சரக் சரக்கென இழுத்து பயங்கர சத்தம் எழுப்பினேன். கதவுக்கு அருகில் வந்தவர்கள் உள்ளே ஒரு 'பெரிய ரவுடி' இருக்கக்கூடும் என்று நினைத்திருக்கலாம். அல்லது பதட்டத்தில் உள்ளே எழுந்த கூச்சல் அவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம். குழம்பிப் போனவர்கள் எங்களது பின்வாசல் கேட்டை எகிறிக் குதித்து ஓட ஆரம்பித்தார்கள்.

அவர்கள் ஓட ஆரம்பித்ததுமே எனக்கு தெம்புவந்துவிட்டது. கதவை திறந்துகொண்டு அவர்களை கத்தியோடு துரத்த ஆரம்பித்தேன். வெற்றுடம்பு. வீட்டில் இருக்கும்போது சட்டையோ, உள்பனியனோ போடுவதில்லை. கேட்டை தாண்டி ஓட ஆரம்பிக்கும்போது 'லுங்கி' தடையாக இருந்தது. அதை அவிழ்த்து தூக்கியெறிந்துவிட்டு 'டாண்டெக்ஸ்' ஜட்டியோடு அவர்களை வெறியோடு துரத்தினேன். மூன்று பெரியப்பா வீடுகளும் எங்கள் வீட்டுக்கு அருகருகே இருந்தது. எங்கள் வீட்டிலிருந்து வந்த வினோத சத்தத்தை கேட்டவர்களும் துணுக்கிட்டிருக்கிறார்கள். பெரிய பெரியப்பாவின் மகன் என்னவென்று பார்க்க சாலைக்கு வந்தபோது தம்பி ஜட்டியோடு கத்தியை எடுத்துக்கொண்டு இருவரை துரத்துவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். என்ன ஏதுவென்று தெரியாத அவரும் அந்த 'இருவரை' துரத்த ஆரம்பித்தார். உண்மையில் அவர்களை ஏன் கத்தியோடு துரத்தினேன் என்று எனக்கும் அப்போது தெரியாது.

குடிகாரர்கள் இருவர் மூச்சுவாங்க முன்னால் ஓட.. அவர்களை துரத்தியவாறே நாங்கள் இருவரும் பின்னால் ஓட.. ஒன்றும் புரியாமல் எங்கள் குடும்பத்தார் ஒட்டுமொத்தமாக ரோட்டுக்கு வந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். என் அண்ணனாவது சைலண்டாக ஓடிவந்தார். நானோ அபோகலிப்டோ வேட்டை ஸ்டைலிலும், அப்பாச்சே செவ்விந்தியர்கள் ஸ்டைலிலும் ஆய்.. ஊய்.. என்று கொடூர சத்தம் எழுப்பியவாறே துரத்தினேன். துரத்தப்பட்டவர்கள் மடிப்பாக்கம் பஸ் நிலையத்துக்கு அருகிலிருக்கும் குளத்துக்குள் நுழைந்து ஓட ஆரம்பித்தார்கள். குளத்தை தாண்டினால் அவர்கள் ஊருக்குள் தப்பி ஒளிவது எளிது. ஓட்டம்.. ஓட்டம்.. மரண ஓட்டம்.. அந்த அளவுக்கு வேகமாக வெறிநாய்கள் துரத்தியபோது கூட நான் ஓடியதில்லை. என்னைவிட என் அண்ணன் வேகமாக ஓடினார். முன்னால் ஓடிக்கொண்டிருந்தவர்களை கிட்டத்தட்ட அவர் நெருங்கிய வேளையில், அவர்களில் ஒருவன் சடன் பிரேக் போட்டு திரும்பி உடைந்த பாட்டிலை காட்ட இருவரும் திகிலடித்துப் போனோம். நோஞ்சான்களாக இருவர் இவ்வளவு தூரம் அவர்களை துரத்திவந்தது குறித்து அவன் கருடகர்வ பங்கம் பட்டிருக்க வேண்டும். "அப்படியே திரும்பி ஓடுங்கடா... முன்னாடி ஸ்டெப் வச்சா இறக்கிடுவேன்" என்று பாட்டிலை குத்துவது போல காட்ட..

முன்னால் ஓடிய வேகத்திலேயே அப்படியே அபவுட் டர்ன் போட்டு திரும்பி பின்னால் ஓட ஆரம்பித்தோம். அந்த குடிகாரர்கள் காரிய மண்டபம் பக்கமாக ஓடி ஒளிந்து எஸ்கேப் ஆனார்கள். திரும்பி ஓடிவரும்போது அண்ணன் கேட்டார். "எதுக்குடா அவனுங்களை கையில கத்தியோட துரத்துனே?". என்ன பதில் சொல்லுவதென்றே தெரியவில்லை. அவர்களை துரத்த வேண்ட அவசியம் எதுவுமில்லாமலேயே துரத்திக்கொண்டு ஓடியிருக்கிறேன். "தெரியலையே!" என்று சொன்னபோது மண்டையில் நங்கென்று குட்டினார். மேலதிக விசாரணைகளுக்கு அப்புறம் தான் தெரிந்தது. அந்த ரெண்டு பேரும் குடிபோதையில் ஒயின்ஷாப் மாடியில் இருந்து தெருவில் பாட்டில் விட்டிருக்கிறார்கள். அவர்களது போதாதநேரம் ரோந்துவந்த போலிஸ் ஜீப் ஒன்றின் மீதே பாட்டில் விழுந்து உடைந்திருக்கிறது. போலிஸ் துரத்த, இந்த அப்பாவிகள் தப்புவதற்காக எங்கள் வீட்டுப் பக்கமாக ஓடிவந்திருக்கிறார்கள்.

வீட்டு வாசலில் நின்றிருந்த அப்பா சொன்னார். "நல்லா சவுண்டு உடறே. அரசியலுக்கு போனா அசத்திடுவே!". அதுவரை ஓ.வில் ஆரம்பிக்கும் ஸ்லோகத்தையெல்லாம் என் வாய் உச்சரிக்கும் என்பது என் வீட்டுக்கு தெரியவே தெரியாது. என்னோடு அந்த குடிகாரர்களை துரத்தி வந்த எனது அண்ணன் இப்போது அரசியல்வாதி.

நக்சல் தரப்பு நியாயங்கள்!

முதல் பாகம் : துப்பாக்கிக் குழாயில் அரசியல் அதிகாரம்!
இரண்டாம் பாகம் : வசந்தத்தின் இடிமுழக்கம்!
மூன்றாம் பாகம் : இடியுடன் கூடிய மழை!
நான்காம் பாகம் : மழைக்குப் பின் புயல்!
ஐந்தாம் பாகம் : பீகார் ஜெயில் தகர்ப்பு!
ஆறாம் பாகம் : அழித்தொழிப்பு!
ஏழாவது பாகம் : தமிழ் நக்சலைட்டுகள்!


ஒரு இயக்கம் திடீரென்று ஒரே நாளில் நேற்று பெய்த மழையில் இன்று முளைக்கும் காளானைப் போல தோன்றிவிடுவதில்லை. நக்சல்பாரிகளின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் 1960 காலக்கட்ட நாட்டு நடப்போடு பொருத்திப் பார்த்தோமானால் அந்த இயக்கம் தோன்றியிருக்க வேண்டியதின் அவசியத்தையும் உணரமுடியும்.

எந்த ஒரு நாட்டிலுமே அரசினை எதிர்க்கக் கூடிய மக்கள் இருக்கவே செய்கிறார்கள். அம்மக்களது அன்றாடத் தேவைகள் கூட அவர்களை ஆளும் அரசாங்கங்களால் நிறைவேற்றி வைக்கப்படாத நேரங்களில் அரசினை எதிர்த்து கலகக்குரல் எழுப்புகிறார்கள். முன்னேறிய பல நாடுகளில் கூட இதுபோன்ற புரட்சியாளர்களை காணமுடியும். எல்லாத் தரப்பு மக்களையுமே அரசாங்கங்களால் திருப்திபடுத்திவிடக் கூடிய சாத்தியம் இருக்கிறதா என்பது ஆராயக்கூடிய கேள்வி. வளர்ந்த நாடாக மாறிக்கொண்டிருக்கும் இந்தியாவில் சில தரப்பு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது நமக்கு கண்கூடாகவே தெரிகிறது. எனவே இங்கே புரட்சிக்குரல் எழுந்ததில் எந்த ஆச்சரியமுமில்லை.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்கா கண்டங்களில் புரட்சிகர சிந்தனைகளை வழிதொடர்பவர்கள் அதிகரிக்கிறார்கள். காரல் மார்க்ஸின் சிந்தனைகளை தேடி, தேடி வாசிக்கிறார்கள். சமுதாய நலனுக்காக தங்கள் உயிரையும் தியாகம் செய்ய மனதளவில் தயாராகிறார்கள். கம்யூனிஸம் மக்கள் மனங்களில் ஒரு மதமாகிறது. இந்த மனப்பான்மை வியட்நாமில் எதிரொலித்து புரட்சி மலர்கிறது, அமெரிக்காவை வியட்நாமிய கொரில்லாக்கள் ஓட ஓட விரட்டுகிறார்கள்.

ஐரோப்பாவில் மாணவர்களின் அடக்குமுறைகளுக்கு எதிரான தொடர்போராட்டங்கள், பொலிவியக் காடுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போர் தொடுத்து உயிரிழந்த சேகுவேரா, சீனாவில் மாசேதுங்கின் கலாச்சாரப் புரட்சி என்று உலகளாவிய செய்திகளாலும், 1940களின் இறுதியில் ஆந்திராவில் நடந்த தெலுங்கானா போராட்டங்களாலும் தாக்கத்துக்கு உள்ளானவர்கள் மனதில் ‘புரட்சி' நீறுபூத்த நெருப்பாக உறங்கிக் கிடந்தது. இவையெல்லாம் மனரீதியாக இந்திய விவசாயிகளையும், பாட்டாளிகளையும் புரட்சிக்கு தயார் செய்துவந்தன.

இமயம் முதல் குமரி வரை இந்தியாவில் சுரண்டப்பட்ட விவசாயிகளும், பாட்டாளிகளும் தங்களை காக்க ஒரு தேவமைந்தன் வரமாட்டானா என்று ஏங்கிக் கொண்டிருந்தார்கள். சினிமாக்களில் கதாநாயகன் விவசாயியாக, தொழிலாளியாக நடித்து வில்லன்களான பண்ணையார்களையும், தொழில் அதிபர்களையும் தட்டிக்கேட்டு, அடித்து உதைத்தபோது சந்தோஷமாக கைத்தட்டி ரசித்தார்கள். அதே வேலையை ஒரு அமைப்பு செய்கிறது என்றபோது ஒவ்வொருவரும் ஆயுதம் ஏந்தி அந்த அமைப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். தனிமனிதனாக அதிகார வர்க்கத்தை யாரும் எதிர்க்க முடியாது என்பதை உணர்ந்தவர்கள் நக்சல்பாரியாக மாறி அமைப்புரீதியாக இயங்கத் தொடங்கினார்கள்.

மார்க்சிஸம் - லெனினிஸம் - மாவோயிஸம், இந்த மூன்று முப்பெரும் சிந்தனைகளின் அடிப்படையிலேயே நக்சல்பாரிகளின் கொள்கைகள் கட்டமைக்கப்படுகிறது. காரல்மார்க்ஸின் சிகப்புச் சிந்தனைகளை செயலாக்கிக் காட்டியவர் ரஷ்யாவின் லெனின். லெனினுக்கு பின்பாக இச்சிந்தனைகளை ஆயுதவழியிலும், ஏனைய வழிகளிலும் சீனாவில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியவர் மாவோ என்று கம்யூனிஸ்ட்களால் அழைக்கப்படுகிற மாசேதுங்க்.

மாவோயிஸ்ட்டுகள் என்று சொல்லப்படும் நக்சல்பாரிகள் பின்பற்ற விரும்புவது மாசேதுங்கையே. மாசேதுங் சீனாவில் வெற்றிகரமாக செயல்படுத்திய ‘மக்கள் போர்' தான் மாவோயிஸ்டுகளின் குறிக்கோள். மக்களுக்கான உரிமைகளை மக்களே ஆயுதம் தாங்கி, கொரில்லா போர் முறையில் வென்றெடுப்பது தான் மாவோயிஸ்டுகள் வரையறுக்கும் புரட்சி. இந்திய நக்சல்பாரிகளின் நதிமூலமாக போற்றப்படும் சாருமஜூம்தாரின் மொழியில் சொன்னால், “துப்பாக்கி முனையில் மக்களுக்கான அதிகாரம்!”

“ஓட்டுப் போடாதே, புரட்சி செய்!” என்பது நக்சல்பாரிகளின் இன்னொரு கோஷம். இது ஜனநாயகமுறையில் தேர்தல் நடக்கும் உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான இந்தியாவுக்கு அச்சுறுத்தல் தரும் கோஷம். தேர்தல் புறக்கணிப்பை நீண்டகாலமாக நக்சல்பாரிகள் பல மாநிலங்களிலும் செய்து வருகிறார்கள். தேர்தல் முறையால் நாட்டில் புரட்சி ஏற்படுவது தாமதமாகிறது என்பது அவர்களது குற்றச்சாட்டு.

ஏழ்மை தான் ஒருவனை நக்சல்பாரியாக, புரட்சியாளனாக மாற்றியது, மாற்றுகிறது. இந்தியாவில் இன்றும் செல்வாக்கோடு நக்சல்பாரிகள் இருக்கும் மாவட்டங்களை சற்று கவனத்தோடு நோக்கினோமானால் ஒரு விஷயம் புரியும். எங்கெல்லாம் ஏழ்மை தலைவிரித்தாடுகிறதோ, அங்கெல்லாம் நக்சல்பாரிகள் வலுவாக காலூன்றியிருக்கிறார்கள். இந்தியாவின் சாபம் ஏழ்மை. இந்தியர்களின் ஏழ்மைக்கு ஆட்சியாளர்கள் காரணமா, அரசு அதிகாரிகள் காரணமா, நிலப்பிரபுக்கள் காரணமா, முதலாளிகள் காரணமா என்பதெல்லாம் ஆய்வுக்குரிய, விவாதத்துக்குரிய விஷயம். ஆனால் ஏழ்மை ஆயுதம் தூக்கவும் செய்யும் என்பது மட்டுமே நிரூபிக்கப்பட்ட உண்மை.

இன்றைய நிலையைப் பாருங்கள். பழங்குடி கிராமத்தவர் அதிகம் வசிக்கும் சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் செல்வாக்காக இருக்கிறார்கள். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் உடல்ரீதியாக அதிகம் சுரண்டப்படும் வடகிழக்கு மாநிலங்களில் வலுவாக இருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் ஏழைகளாக மட்டுமே பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும் ஒரிஸ்ஸாவில் அசுரத்தனமாக காலூன்றி வருகிறார்கள்.

அடுத்ததாக கலாச்சாரத் திணிப்பும் கூட ஆயுதமேந்த செய்கிறது என்று சொல்லலாம். இந்தியா யாருக்கு சொந்தமோ இல்லையோ, இந்தியாவின் பூர்வகுடி மக்களாக வாழ்ந்துவரும் பழங்குடியினருக்கு சொந்தம் என்பதை நாம் எல்லோருமே ஒப்புக்கொண்டாக வேண்டும். உலகமயமாக்கல், நகரமயமாக்கல் மற்றும் நவீன பொருளாதாரத் திட்டங்களால் பழங்குடி மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள், சுரண்டப்படுகிறார்கள், அவர்களது சொந்த நிலமான கிராமங்களையும், காடுகளையும் விட்டு துரத்தப்படுகிறார்கள். காடுகளை நகரமயமாக்கல் விழுங்குகிறது. கிராமங்களை தொழிற்பேட்டைகள் ஆக்கிரமிக்கிறது.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அவர்கள் செய்துவந்த பரம்பரைத் தொழில்கள் அந்நிய சந்தையாளர்களால் அழிக்கப்படுகிறது. “நீ வாழவேண்டுமா? நகரவாசியாக மாறு. உன் கலாச்சாரத்தை, தொழிலை மாற்றிக்கொள்” என்று மறைமுகமான அச்சுறுத்தல் அவர்களுக்கு விடப்படுகிறது. நாகரிகமானவர்கள் என்று சொல்லிக்கொள்கிற நகரவாசிகளால் நாட்டிலிருந்து காட்டுக்கு துரத்தப்பட்டவர்கள் தங்கள் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும், வேரையும் விட்டுத்தர இயலாமல் நக்சல்பாரிகளாக மாறினார்கள். பழங்குடியின மக்கள் மத்தியில் நக்சல்பாரி இயக்கங்கள் செல்வாக்காக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். நக்சல்பாரி இயக்கங்களில் பணியாற்ற ஆதிவாசிகளும், தலித்துகளுமே அதிகமாக குறிவைக்கப் படுகிறார்கள் என்பதை இங்கே பொருத்திப் பார்க்கவும்.

ஒட்டுமொத்தமாக சொல்லப்போனால் ஏழ்மை, வர்க்க வேறுபாடு, நிலப்பங்கீடு குறித்த அரசுகளின் முரட்டுத்தனமான அணுகுமுறை, சாதிய அடக்குமுறை, நீதிமறுப்பு என்று பல காரணிகள் நக்சல் இயக்கங்கள் தோன்றுவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.

அரசு வழங்கும் நலத்திட்டங்கள் பரவலாக கடைக்கோடி இந்தியனுக்கும் சரியாக கிடைத்திருந்தால், இன்று ஏழைகள் அதிகமாக இருக்கும் இந்திய மாவட்டங்களில் அந்தந்த மாநில அரசுகளால் சரியான கட்டமைப்பும் - வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்பட்டிருந்தால், நீதி அனைவருக்கும் சமமாக காவல்துறையாலும் - நீதிமன்றங்களாலும் வழங்கப்பட்டிருந்தால், முதலாளிகள் - நிலப்பிரபுக்கள் மீது அரசுகள் காட்டும் முரட்டுத்தனமான பரிவை விவசாயிகள் - பாட்டாளிகள் மீது காட்டியிருந்தால்.. ஒருவேளை நக்சல்கள் உருவாகாமலேயே இருந்திருப்பார்கள்.

(அரசுத் தரப்பு நியாயங்கள் அடுத்த பாகத்தில்)