
கால்நடைகள் புல்லை அசைப்போடுவதை போல மனிதனுக்கு எதையாவது விமர்சித்துக் கொண்டோ அல்லது கிசுகிசுத்துக் கொண்டோ இல்லாவிட்டால் தலை வெடித்து விடும் என்று எந்த வேதாளமோ எந்த யுகத்திலோ சாபமிட்டிருக்க வேண்டும். அரசு, அரசியல்வாதிகளுக்கு அடுத்தபடியாக இப்போது அதிகமாக விமர்சிக்கப்படும் துறையாக திரைத்துறை மாறியிருக்கிறது. திரையில் மின்னும் நட்சத்திரங்களின் தொழில் திறமை மீதான விமர்சனம் மட்டுமல்லாது அவர்களின் அந்தரங்க கிசுகிசுகளை ஆவலோடு வாசித்து அதுகுறித்தும் விமர்சிக்காவிட்டால் நமக்கும் பொழுதுபோவதில்லை.
சமீபகாலமாக அறிவுஜீவிகள் என்று சொல்லிக்கொள்கிறவர்கள் சிலர் நடத்தும் திரைத்துறை மீதான கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு பின்னால் “சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்!” கதை மட்டுமே பின்னணியில் தெரிகிறது. திரையில் கதை எழுதவோ, வசனம் எழுதவோ வாய்ப்பு பெறும் அறிவுஜீவிகள் அவசர அவசரமாக தங்களது அறிவுஜீவி அரிதாரத்தை அழுந்தத் துடைத்து “பஞ்ச் டயலாக்” எழுதும் அழகையும் நாம் இருகண் திறந்து ரசிக்க முடிகிறது. ஆதலால் ‘வாய்ப்பு பெற்றவர்கள் வசனம் எழுதுகிறார்கள்', 'வாய்ப்பு கிடைக்காதவர்கள் விமர்சனம் எழுதுகிறார்கள்' என்று இருபிரிவுகளாக சினிமா குறித்த அறிவுஜீவிகளின் கருத்துக்களை மிக சுலபமாக பிரித்துக் கொள்ளலாம். முன்பு இதே அறிவுஜீவிகள் வெகுஜன இதழ்களில் கதை எழுத சான்ஸூ எதிர்பார்த்து, சான்ஸூ மறுக்கப்பட்டதும் அப்பத்திரிகைகளை ஆபாசப்பத்திரிகைகள் என்று விமர்சிப்பார்கள்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பாக மாற்று திரைப்படம் (Parrallel Cinema) என்ற பெயரில் அறிவுஜீவிகளுக்கான திரைப்படங்கள் பத்து பேர் மட்டுமே நிரம்பிய திரையரங்குகளில் திரையிடப்படும். படம் பார்த்த பத்து பேரும் தலா நூறு பேர் வாசிக்கக்கூடிய அவரவருக்கு தோதான சிற்றிதழ்களில் நாற்பது அல்லது ஐம்பது பக்கங்களுக்கு மிகாமல், அப்படம் குறித்த தங்களது பார்வையை பதிப்பார்கள். இதனால் பெரும்பான்மை மக்களுக்கு பாதிப்பு அதிகமாக இல்லாமல் இருந்தது.
’உலக சினிமா க்ரூப்’ இதே காலக்கட்டத்தில் தோன்றியது. இந்த க்ரூப்பால் பெரிய பிரச்சினையில்லை. ஏனென்றால் இவர்களில் பெரும்பாலானோர் இந்திய சினிமாக்களை பார்ப்பதில்லை. பார்த்தாலும் ரகசியமாக பார்த்துவிட்டு, கமுக்கமாக இருந்து விடுகிறார்கள். இவர்களில் ஒரு சில அரைகுறைகள் மட்டுமே, அவ்வப்பொது வில்லு ரேஞ்சு படங்களையும் பார்த்துவிட்டு “இந்த தமிழ் சினிமாவே இப்படித்தான்!” என்று விமர்சிக்க கிளம்பிவிடுகிறார்கள். பி.எச்.டி. முடித்தவர்கள், ஏன் எல்.கே.ஜி. பாடப்புத்தகத்தை புரட்டிவிட்டு, நொட்டை சொல்ல வேண்டும்? எல்.கே.ஜி. பையன் வேண்டுமானால் ஒரு குறுகுறுப்புக்கு அவ்வப்போது பி.எச்.டி. தீஸிஸை புரட்டிப் பார்த்துக் கொள்ளட்டும். உலக சினிமா ஆர்வலர்கள் தயவுசெய்து வெகுஜன தமிழ் சினிமாவோ, தெலுங்கு சினிமாவோ பார்த்து தொலைக்கவே வேண்டாம். பார்த்தால் உங்களுக்கெல்லாம் பேதியாகும் என்று எந்த முனிவராலோ, எந்த ஜென்மத்திலேயோ சாபம் இடப்பட்டிருக்கிறீர்கள்.
சமீபகாலமாக மாற்றுத் திரைப்படங்கள் படைத்தவர்களும் சில வணிகலாபங்களை முன்னிட்டோ அல்லது வயிற்றுப்பாட்டினை முன்னிட்டோ வெகுஜன சினிமாவை நெருங்கி வந்து, வெகுஜன சினிமாவுக்குள்ளே கிட்டத்தட்ட ஐக்கியமாகி விட்டார்கள். இன்றைய தேதியில் மாற்று திரைப்படம் என்பது புதியதாக திரைத்தொழிலை கற்கும் மாணவர்களுக்கும், வெகுஜன சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத ஒரு சில திறமையாளர்களுக்கும் மட்டுமே என்ற அளவில் குறுகிப்போய் கிடைக்கிறது. மாற்று திரைப்படம் எடுப்பவர்களும் கூட வெகுஜன பத்திரிகைகளின் ஆதரவில் தங்களுக்கு வேண்டிய விளம்பர வெளிச்சத்தை பெற தவமிருக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
இத்தகைய சூழலில் முன்பு மாற்றுப் படங்களுக்கு திரைப்பார்வை எழுதிக்கொண்டிருந்த அறிவுஜீவிப் பறவைகளுக்கு குளம் வற்றி விட்ட நிலையில், வேறுவழியில்லாமல் ‘வெகுஜன சினிமாவுக்கான விமர்சனம்' என்ற வேடந்தாங்கலை நாடிவரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. வந்தவர்கள் சும்மா இருந்தால் பரவாயில்லை. 'தமிழ் சினிமா அபத்தத்தின் உச்சம்', ‘சித்தாந்தங்களுக்கும் சினிமாக்களும் என்ன தொடர்பு?', ‘நடிகைகளின் தொப்புள்களிலா ஆம்லெட் போடுவது?' ‘பெண்மையை இழிவுப்படுத்துகிறார்கள்', ‘அதிகார ஆண்மய்யத் திமிர்' ‘விளிம்புநிலை' என்றெல்லாம் ஏதேதோ நமக்கு அறிமுகமில்லாத வார்த்தைகளாலும், வாக்கியங்களாலும் திரைப்பார்வை (அவர்கள் எழுதினால் மட்டுமே அது திரைப்பார்வை. மற்றவர்கள் எழுதுவது விமர்சனம்) எழுத ஆரம்பித்து விடுகிறார்கள். வெகுஜன சினிமா குறித்து இவர்கள் எழுதுவதால் வெகுஜன பத்திரிகைகளும், அவசரத்துக்கு அல்லது பரபரப்புக்கு பக்கத்தை நிரப்ப இவர்களது விமர்சனங்களை பிரசுரித்து விடுகின்றன. படிக்கும் வாசகர்களுக்கு தான் தாவூ தீருகிறது.
எழுபத்தைந்து ஆண்டுகால சினிமா வரலாற்றில் இப்போது தான் புதியதாக ஆண்மய்யத் திமிரையும், அபத்தங்களையும் சினிமா காட்டுவது போல இவர்கள் பேசுவது நல்ல நகைச்சுவை. ஹரிதாஸ் காலத்திலிருந்து இதைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருந்தோம் என்பது அவர்களுக்கு தெரியாது. பாவம். அப்போதெல்லாம் உலகப் படங்கள் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார்களாம். ”இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை!” என்று எம்.ஜி.ஆர் பாடியதெல்லாம் துயிலில் இருந்தவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. இப்போது “கைய வெச்சுக்கிட்டு சும்மா இருடா” என்று ரீமாசென் பாடும்போது தான் கொதித்தெழுந்து, மாய்ந்து மாய்ந்து ஐம்பது, அறுபது பக்கங்களில் பெண்ணுரிமை பேசுகிறார்கள். இவர்களது திரைப்பார்வையை படித்தபின்னர் தான் படத்தை இயக்கிய இயக்குனருக்கே அவரது படம் குறித்த பல பரிமாணங்கள் தெரிகிறதாம். ”இப்படி எல்லாம் கூட நாம எடுத்திருக்கோமா?” என்று இயக்குனர்கள் அதிசயிக்கிறார்களாம்.
வெகுஜனப் படங்கள் மக்களின் கொண்டாட்டத்துக்காக எடுக்கப்படுபவை. சராசரி பார்வையாளன் தான் எதையெல்லாம் அடையவில்லையோ அதையெல்லாம் திரைநாயகன் அடையும்போது அதை கண்டு மகிழ்கிறான். தனக்கு தான் காதலி கிடைக்கவில்லை தன் அபிமான நாயகனாவது படத்தில் இரண்டு பெண்களை காதலிக்கிறானே? என்று சிலிர்க்கிறான். மரத்தை சுற்றி டூயட் பாடுவதெல்லாம் நமக்கு நடக்கக்கூடிய காரியமா? திரையில் வண்ணமயமாக நடக்கும்போது அதை நம் மனது கொண்டாடுகிறது. சோனி உடம்பை வைத்து அவனால் ஒருத்தனை கூட அடிக்கமுடியாது. அவனை மாதிரியே சினிமா ஹீரோவும் ஒரே ஒருத்தனிடம் அடிவாங்குகிறான் என்றால் அந்த கருமத்தை அவன் ஏன் காசு கொடுத்துப் பார்க்க வேண்டும்? அவனுடைய ஹீரோ சூப்பர்மேனாக ஐம்பது பேரை பறந்து, பறந்து அடித்தால் தானே அவனுக்கு சுவாரஸ்யம்? அவனுடைய சூழலில் ஒரு பெண்ணின் தொப்புளையோ, Cleavageயோ பார்ப்பது அவனுக்கு சாத்தியமில்லாததாக இருக்கலாம். அது சினிமாவில் கிடைக்கும்போது அவனுக்கு மகிழ்ச்சி ஏற்படுவது இயல்புதானே?
வெகுஜன சினிமா என்பது வெறுமனே ஒரு கொண்டாட்டத்துக்கான ஊடகம். அதில் லாஜிக்கோ, மேஜிக்கோ பார்ப்பது அபத்தத்திலும் அபத்தம். வெகுஜன சினிமாவுக்கான விமர்சனங்களும் வெகுஜன பாணியிலேயே அமைவது தான் சரியானது. மாறாக ரஜினி படத்திலோ, விஜய் படத்திலோ யதார்த்தம், பின்நவீனத்துவம், சமூக அக்கறை இத்யாதிகளை எதிர்பார்த்து அறிவுஜீவிகள் யாராவது ஏமாந்து கொதித்தெழுவதில் எந்தப் பயனும் இல்லை. வணிக லாபத்துக்காக எடுக்கப்படும் சினிமா அதன் பார்வையாளர்கள் எதை கேட்டாலும் தர தயாராகவே இருக்கும். மாறவேண்டியது சினிமாக்காரர்கள் மட்டும் அல்ல, சமூகமும் சமூகத்தின் ரசனையும்! சமூகத்தை இந்த நிலையில் வைத்திருப்பது அச்சமூகத்தில் தோன்றிய அறிவுஜீவிகளின், சிந்தனையாளர்களின் குற்றமே தவிர சினிமாக்காரர்களின் குற்றமல்ல.