1 டிசம்பர், 2009

சேவக லீலா!

பெரும்பாலான நண்பர்கள் என்னிடம் குறைபட்டுக் கொள்ளும் விஷயம் ஒன்று உண்டு. “சாரு எதை சொன்னாலும் அப்படியே ஏற்றுக்கொள்வாயா?” என்று அடிக்கடி கேட்டவர்களே கூட திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ”எனக்கு சாருவை பர்சனலாகவும் பிடிக்கும். அவரது எழுத்தையும் பிடிக்கும். அவர் கமல்ஹாசன் மாதிரி. பத்து/பதினைந்து ஆண்டுகள் கழித்து எழுத வேண்டியதை இன்றே எழுதிவிடுவார். அதற்காக அவர் எழுதுவதையும்/பேசுவதையும் அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை” என்று ஒவ்வொருமுறையும் கிளிப்பிள்ளை மாதிரி திரும்ப திரும்ப பதில் அளிப்பேன். முன்பு சாரு இணையத்தில் எழுதிய பதிவு ஒன்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து எழுதியிருந்தேன். அதை மீண்டும் இங்கே பதிகிறேன். திரும்பப் படித்துப் பார்க்கும்போதும் எனக்கு அப்போது இருந்த அதே மனநிலைதான் இப்போதும் இருக்கிறது என்று புலனாகிறது!

ஓவர் டூ அந்த பழைய எதிர்ப்பு :


அபத்தமாக பேசுபவர்களையும், எழுதுபவர்களையும் கண்டால் எல்லோருக்கும் எரிச்சல் மண்டுவது இயல்பு. ஆயினும் சில நேரங்களில் நம்முடைய ஆதர்சங்களே அபத்தமாக சிந்தித்து, அதையும் எழுதியோ, பேசியோ தொலைக்கும்போது எரிச்சலோடு, கோபமும் இணைந்துக் கொள்கிறது. அதுபோன்ற சீற்றமான, நிதானமற்ற மனநிலையில் இப்போது எழுதுகிறேன்.

சிறுவயதிலிருந்தே ஏதாவது பத்திரிகைகளில் சாரு நிவேதிதா என்ற பெயரை காணநேர்ந்தால் அக்கட்டுரையையோ, புனைவையோ தவறவிடாமல் வாசிப்பது என் வழக்கம். சாரு என்ற பெயர் எனக்குள் ஏற்படுத்திய மேஜிக்குகள் எண்ணிலடங்கா. ஒரு அறிவுஜீவியாக இருந்தும் மிக எளிமையாக, வாசகன் அஞ்சாமல் அணுகக்கூடிய மொழிநடை அவருடையது. பெரும்பாலும் சுயபுராணமாக இருந்தாலும் அவருடைய சுய எள்ளல், சுய பச்சாதாபம் போன்றவை வாசிக்க சுவாரஸ்யமானதாகவே இருக்கும். சரோஜாதேவிரக எழுத்தாளர்கள் தவிர்த்து கைமைதுனம் செய்வதை கூட வெளிப்படையாக ஒத்துக்கொள்ளும் பன்முகப்பார்வை கொண்ட தமிழ் எழுத்தாளர் அவர் ஒருவர் மட்டுமே.

அவர் எழுத்துக்களை வாசிப்பவர்களுக்கு அவர் ஒரு நாத்திகர் என்ற தோற்றம் மிகுந்திருக்கும். எனக்குள்ளும் மிகுந்திருந்தது. சுஜாதா மறைவுக்குப் பின்னர் திடீரென்று சுஜாதாவின் இடத்தை பிடிக்க வேண்டும் (எந்த கொம்பனாலும் பிடிக்கமுடியாது என்பது என் எண்ணம்) என்ற பேராசையாலோ என்னவோ திடீரென தன்னை ஆத்திகர் என்று சமீபத்தில் அறிவித்துக் கொண்டிருக்கிறார். அவர் நாத்திகரோ, ஆத்திகரோ அது யாருக்கும் பிரச்சினையில்லை. ஆனால் திடீரென புதியதாக ஏற்றுக்கொண்ட ஆத்திக வேடத்துக்காக இறைமறுப்பாளர்களையும், இறைமறுப்பு முற்போக்கு சிந்தனைகளையும் மிக கேவலமாக விமர்சிப்பது சாரு போன்ற (இதுவரை) முற்போக்கு வேடமணிந்த ஒரு எழுத்தாளருக்கு அழகல்ல.

'விபச்சாரம் ஏன் நடக்கிறது?' என்ற கேள்விக்கு இதுவரை விடை தெரியாமல் இருந்தது. சாரு கண்டுபிடித்து விட்டார். இறைமறுப்பு தான் விபச்சாரத்துக்கு காரணமாம். ரஷ்யா ஜார் மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் வறுமையால் பீடிக்கப்பட்டிருந்தபோதும் கூட மதநெறி தந்த ஆன்மபலத்தால் ரஷ்யர்கள் ஒழுக்கமாக இருந்தார்களாம். ஆனால் கம்யூனிஸம் ஆட்சிக் கட்டிலேறி கடவுள் மறுப்பு விவாதங்களும், சிந்தனைகளும் வந்த பின்னர் ரஷ்யாவில் விபச்சாரம் பெருகி விட்டதாம். எவ்வளவு அபத்தம் இது? கடவுள் மறுப்பு சிந்தனைகளை மட்டுமன்றி கம்யூனிஸத்தின் மீதும் போகிறபோக்கில் சாணி அடித்துவிட்டுப் போகிறார் சாரு. இவரது இந்த புதிய கண்டுபிடிப்புக்கு தோதாக அவரது இலங்கை நண்பர் ஒருவருக்கு ரஷ்யாவில் நிகழ்ந்த சில அனுபவங்களை வாதத்துக்கு வலுவாக சேர்த்துக் கொள்கிறார்.

அதே சாரு தாய்லாந்து நாட்டின் விபச்சாரம் பற்றியும், பத்து வயது குழந்தைகள் கூட மிகக்குறைவான (50 ரூபாய்) தொகைக்கு விபச்சாரத்துக்கு தயாராக இருப்பது பற்றியும் எழுதுகிறார். தாய்லாந்து நாட்டில் கம்யூனிஸ ஆட்சி நடக்கிறதா? கடவுள் மறுப்பு விவாதங்கள் விவாதிக்கப்படுகிறதா? என்பது பற்றி சாருவுக்கு தெரியாதா? கிட்டத்தட்ட தொண்ணூற்றி ஒன்பது சதவிகித தாய்லாந்து மக்கள் மதநம்பிக்கையும், இறைநம்பிக்கையும் கொண்டவர்கள் தானே?

தாய்லாந்துக்கு போவானேன்? இந்தியாவில் என்ன வாழுகிறது? இங்கே (இப்போது சாரு உட்பட) தொண்ணூற்றி ஐந்து சதவிகிதம் பேர் இறைநம்பிக்கை கொண்டவர்களாக தானே இருக்கிறார்கள்? இங்கே ஏன் சோனாகஞ்சும், மும்பை சிகப்பு விளக்கு பகுதியும் இருக்கிறது? ஐம்பது ரூபாய்க்கு உடலை அரை மணி நேரத்துக்கு விற்க சென்னையில் கூட விளிம்புநிலைக்கு தள்ளப்பட்ட பெண்கள் இருப்பது நமக்கு தெரியுமோ இல்லையோ.. சாருவுக்கு நிச்சயமாகத் தெரியும். இதற்கெல்லாம் கூட காரணம் இறைமறுப்பா?

இறைமறுப்பு சிந்தனைகளை உலகளவில் பரபரப்பாக விவாதித்த ஜெர்மன் சிந்தனையாளர்களையும்.. அந்நாட்டையும், ஐம்பது ஆண்டுகளாக இறைமறுப்பு கம்யூனிஸ ஆட்சி நடக்கும் கியூபா நாட்டையும் சாரு மறந்துவிட்டாரா? இல்லை அங்கும் விபச்சாரமும், சமூகக்குற்றங்களும் இன்னமும் தலைவிரித்து ஆடுகிறது என்று நம்பிக்கொண்டிருக்கிறாரா? மதநம்பிக்கையும், இறைநம்பிக்கையும் பெரிதும் கொண்டிருக்கும் அமெரிக்கா.. ஆத்திகர்களையே பெரும்பாலும் அதிபர்களாக ஏற்றுக்கொள்ளும் அமெரிக்கா, சர்வதேச அளவில் மனிதநேயத்துக்கு எதிராக செய்துவரும் மனிதகுல விரோத குற்றங்களுக்கு என்ன நியாயம் கற்பிக்கப் போகிறார் சாரு? இறைமறுப்பாளர்களால் உலகுக்கு விளைந்த கேடுகள் அதிகமா? மத அடிப்படைவாதிகளால் உலகுக்கு விளைந்த கேடுகள் அதிகமா? என்பதை சாரு மல்லாந்து படுத்துக் கொண்டு யோசிக்க வேண்டும்.

கடவுள் என்ற சொல்லாடல் புழக்கத்திற்கு வருவதற்கு முன்பே விபச்சாரம் என்ற தொழிலும், சமூகக்குற்றங்களும் உலகில் பெருகிவிட்டதை உலக வரலாறு வாசித்த யாருமே உணரமுடியும். இன்னமும் சொல்லப்போனால் சமூகக்குற்றங்கள் செய்வதிலிருந்து மனிதனை காக்க மனிதகுலம் கண்டுபிடித்த ஒரு முறையே மதமும், மதத்துக்கு மூலமான கடவுளும் என்றும் கூறலாம். இறைவன் குறித்த தர்க்கங்களில் வெற்றி காணமுடியாமல் கடைசியாக ஆத்திகர்கள் நாத்திகர்கள் மீது வைக்கும் பலகீனமான விமர்சனம் தான் இறைமறுப்பால் சமூகக்குற்றங்கள் பெருகும் என்பது. சாருவும் கூட அப்படிப்பட்ட விமர்சனத்தை எழுதுவதை காணும்போது “சாருவும் இவ்வளவுதானா?” என்ற ஆயாசமும், ஏமாற்றமும் தான் மிஞ்சுகிறது.

மனமுண்டு, மாற்றமுண்டு!


“அதிகாரிகளை குறைசொல்ல ஒண்ணுமே இல்லைங்க. ரொம்ப நல்லா பண்ணுறாங்க!”

“நாங்களே அவங்களை தேடி கண்டுபிடிச்சி போகுறது ரொம்ப கஷ்டம் சார். அவங்களே எங்களை தேடி வந்து சேவை பன்ணுறது என்பது எங்களுக்கு வரப்பிரசாதம்!”

“என்ன கேட்டாலும் முதல்லே பதில் வந்துடுதுங்க. இதுவே பெரிய விஷயம். அப்புறம் அவங்க பணிகளும் ரொம்ப நல்லாருக்கு!”

“ஊர்லே ஒவ்வொரு வீட்டிலேயும் அந்த அதிகாரி பேரைத்தாங்க சொல்லுறாங்க! இதுவரைக்கும் எந்த ஆபிஸரும் இவரை மாதிரி இருந்ததில்லை!”

நம் தமிழக அரசு அதிகாரிகள் சிலருக்கு கிராமப்புற விவசாய மக்கள் வழங்கும் பாராட்டுப் பத்திரம்தான் இது. சந்தேகமே வேண்டாம்.

பொதுவாக அரசு ஊழியர்கள் என்றாலே பொதுமக்களுக்கு வேப்பங்காயாய் கசப்பதைதான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, சலுகைகள், போனஸ் என்றதுமே மக்கள் வெறுப்படைகிறார்கள் என்பது அரசு ஊழியர்களுக்கே தெரிந்த ஒரு விஷயம்தான். அரசுத்துறைகள் என்றாலே மக்கள் மீது அக்கறையற்றவை. ஊழல் கறை படிந்தவை என்ற எண்ணம் மக்களுக்கு இருக்கிறது. இவற்றையெல்லாம் மாற்ற வேண்டாமா?

மாற்றுவதற்கு சில அரசு அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டார்கள்.

2003ல் மக்களை நோக்கிய நீர்மேலாண்மை தொடர்பான அதிகாரிகளின் பயணம் கிராமங்களுக்கு துவங்கியது. அரசுத்துறையை செம்மையாக, மக்களுக்கு உண்மையாகவே பயன் தரக்கூடியதானதாக மாற்ற அவர்கள் முற்பட்டார்கள். நகரங்களில் அமர்ந்துக்கொண்டு, திட்டங்களை மட்டுமே தீட்டி, கிராம மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்ற முடிவுக்கு வந்தார்கள். ஒவ்வொருவரும் களப்பணி மேற்கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

ஆகஸ்ட் 2004ல் சென்னைக்கு அருகில் மறைமலை நகரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் சில உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டார்கள் :

* ஏற்கனவே நடைமுறையிலிருக்கும் திட்டங்களுக்கு மறுமலர்ச்சி தருவோம். முன்பைவிட அதிமுனைப்பாக அவற்றை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டுவோம்.

* மக்களுக்கு உண்மையிலேயே உபயோகப்படக்கூடிய விஷயங்களை உறுதிசெய்வோம். தரமான சேவையை அளிப்போம்.

* பாரம்பரியமாக பயன்பட்டு வரும் விஷயங்களை பயன்படுத்திக் கொள்வோம்.

* திட்டமிட்டதை விட பத்து சதவிகிதமாவது கூடுதலானவற்றை, அதே நிதி ஒதுக்கீட்டில் சாதிப்போம்.

இந்த உறுதிமொழிகளின் அடிப்படையில் பணிகள் தொடங்கின. அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் ஊக்கம் தரும் வகையிலான ‘கூடம்’ பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டன

கூடம் என்ற சொல் தமிழர்களுக்கு நன்கு பரிச்சயமானதுதான். குடும்பம் ஒன்றுகூடி அளவளாவும் இடமாக, ஒவ்வொரு இல்லத்திலும் ஒரு காலத்தில் கூடம் இருந்ததுண்டு. கல்யாணம் நிச்சயம் செய்வது, பையனை வெளியூர் வேலைக்கு அனுப்புவது என்று குடும்பத்தின் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் இடமாக கூடம் தமிழர் வாழ்வில் முக்கியத்துவம் பெறுகிறது. குடும்பத்தில் உண்மையான ஜனநாயகம் நிலவும் இடம் கூடம்.

பொதுவாக ஒரு கிராமத்தில் திருவிழா நடக்கிறதென்றால், அக்கிராமத்தின் ஒவ்வொரு வீடும் வெள்ளை அடிக்கப்படும். தெருக்கள் சுத்தமாக்கப்படும். ஆனால் இந்த மாதிரியான விழாக்காலங்களில் கூட அரசுக்கு சொந்தமான மேல்நிலை தண்ணீர்த் தொட்டி, பஞ்சாயத்து அலுவலகம் போன்றவை எப்போதுமே பாழடைந்த நிலையில் இருக்கும். அரசுச் சொத்து நமதல்ல என்ற மனோபாவம் மக்களிடையே ஏற்பட்டுவிட்டதே இதற்கு காரணம். தெருவில் ஒரு குடிநீர்க்குழாயில் நீர் வீணாகிக் கொண்டிருந்தால் கண்டுகொள்ளாமல் செல்லும் எண்ணம், கிராமவாசிக்கு மட்டுமல்ல.. நகரவாசிக்கும் உண்டு. வீட்டில் இருக்கும் குழாயில் நீர் வீணாகினால் நாம் சும்மா இருப்போமா?

‘அரசுக்கு சொந்தமான ஒவ்வொன்றும் மக்கள் சொத்து’ என்ற விழிப்புணர்வை மக்களிடம் முதலில் ஏற்படுத்துவதே அதிகாரிகளுக்கு சவாலானதாக இருந்தது. அரசு அதிகாரிகள் கிராமங்களுக்கு வருவதையே மக்கள் சட்டை செய்யாத நிலையும் ஆரம்பத்தில் இருந்தது. ‘ஜீப்பைப் போட்டுக்கிட்டு வருவாங்க. எதையாவது செய்யுவாங்க. நமக்கு என்ன பிரயோசனம்?’ என்று நினைத்தார்கள்.

“வலிந்துப்போய் பழகி, பேசி அவர்களுக்குள் ஒருவனாக மாற எனக்கு ஆறுமாதம் பிடித்தது!” என்கிறார் உதவிப் பொறியாளராக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் (TWAD Board) பணிபுரியும் எஸ்.சேட்டு.

இவரைப் போலவே ஒவ்வொரு பொறியாளரும், அவர் பொறுப்பேற்றுக் கொண்ட கிராமத்து மக்களோடு நெருங்கிப் பழகி அவர்களில் ஒருவராக மாறினார்கள். பஞ்சாயத்து அலுவலகத்தில் மக்களுக்கு சினிமாப் படம் போட்டு காட்டினார்கள். ஊர்த் திருவிழாக்களில் பங்கு கொண்டார்கள். உங்களுக்காக வேலை செய்கிறேன், நானும் உங்களில் ஒருவன் என்பதை அழுத்தமாக அவர்களது மனங்களில் பதிய வைத்தார்கள்.

அவ்வப்போது மக்கள் பங்கேற்கும் கூட்டங்களை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதுபோன்ற கூட்டங்களில் இவர்கள் அதிகமாக பேசாமல், மக்களை பேசவைத்தார்கள். அந்த கிராமத்துப் பஞ்சாயத்து தலைவரை, வார்டு உறுப்பினர்களை, குடிநீர்த்தொட்டி பணியாளரை, நர்ஸை, ஊர்ப் பிரமுகர்களை பேசவைத்தார்கள். இவர்கள் செயல்படுத்தும் திட்டங்களில் அவர்களது ஈடுபாட்டையும் வலிய வாங்கிக் கொண்டார்கள்.

மக்களோடு மக்களாகி விட்டதால் நம் அரசு ஊழியர்களிடம் டீக்கடைகளிலும், டூரிங் கொட்டாய்களில் மனசுவிட்டு பேசத் தொடங்கினார்கள் கிராமவாசிகள். தங்களுடைய தேவை என்னவென்று காய்கறிக் கடைகளுக்கு வரும் பெண்கள் கூட அரசு அதிகாரியிடம் உரிமையாக கேட்டார்கள். மக்களின் தேவைகளை உணர்ந்து அதற்கேற்ப திட்டங்களை (Tailor made schemes) தீட்ட, இதனால் அதிகாரிகளுக்கு சுலபமாக இருந்தது.

உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அரசு ஒரு திட்டத்தை தீட்டிவிட்டால், அது தேவையா தேவையில்லையா என்பதையெல்லாம் பார்க்காமல் கடமைக்கு முடித்துக் கொடுப்பதே பொதுவாக அரசு ஊழியர்களின் பாணியாக இருக்கிறது. மாறாக மக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையானதை மட்டுமே செய்துக் கொடுக்கும் இந்தப் புதியப் பாணியால் பணமும், நேரமும் நிறைய மிச்சம்.

இந்த அணுகுமுறையின் வெற்றிக்கு, ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல மதுரை மாவட்டம் தும்பைப்பட்டி பஞ்சாயத்து ஒரு சான்று. மாரியப்பன் என்ற குடிநீர்வாரியப் பொறியாளர் இங்கு ஏற்படுத்தித் தந்த குடிநீர்க் கட்டமைப்புகளை, மக்களே இன்று செம்மையாகப் பராமரிக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கிறது. தெருக்குழாயில் ஏதாவது பழுது ஏற்பட்டால் நமக்கென்ன என்று கிராமவாசிகள் போய்விடுவதில்லை. அரசு அதிகாரிகளை எதிர்ப்பார்க்காமல் தங்கள் செலவிலேயே இப்போது அப்பழுதை சரிபார்க்கிறார்கள். ஏனெனில் அரசுச் சொத்து, நம் சொத்து என்ற விழிப்புணர்வை அவர்களிடையே மாரியப்பன் ஆழமாக விதைத்திருக்கிறார்.

“மாரியப்பன் சாருக்கு கொழந்தை பொறந்தப்போ, வந்து கிராமத்துக்கே இனிப்பு கொடுத்தாருங்க” என்கிறார் தும்பைப்பட்டி வாசியான மஜீத். ஒரு அரசு அதிகாரி மக்களிடையே எவ்வளவு நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணம் இதுவல்லவா?

இத்தனைக்கும் ஒரு ஆறுமாதக் காலம்தான் அக்கிராமத்தில் மாரியப்பன் பணிபுரிய வேண்டியிருந்தது. அப்போது அவர் செய்தப் பணிகள் ஐந்தாண்டுகள் கழிந்தும் இன்னமும் கிராமமக்களுக்கு மறக்க முடியாததாக இருக்கிறது. கொசுக்களால் அக்கிராம மக்கள் அவதியுறுவதைக் கண்டவர், தன் சொந்த செலவிலேயே கழிப்பறைகளையும், சாக்கடைகளும் சுத்தப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாரியப்பன் மட்டுமல்ல. மறைமலைநகர் உறுதிமொழியை எடுத்துக்கொண்ட ஏராளமான பொறியாளர்கள் அவரவர் பொறுப்பேற்றுக் கொண்ட கிராமங்களிலும் இதுபோலவே சாதனைகளை புரிந்தார்கள்.

குடிநீர் வாரிய பொறியாளர்கள் மட்டுமல்ல, வேளாண்மைத்துறை பொறியாளர்களும் கிராமங்களுக்கு சென்று விவசாயிகளை அணுகி அபிவிருத்தித் திட்டங்களை தீட்டினார்கள். சேலம் மாவட்டம் எல்லம்பாளையம்புதூரில் நடந்த விஷயங்களை இதற்கு உதாரணமாகப் பார்க்கலாம்.

வேளாண்மை அதிகாரிகளின் சீரிய பணிகளுக்குப் பிறகு, இங்கே ஆறுவருடங்களாக விவசாயத்தை மறந்துவிட்டவர்கள் கூட மீண்டும் விவசாயம் செய்ய முன்வந்திருக்கிறார்கள். மண்சோதனையில் தொடங்கி, என்ன உரம் இடுவது, எந்தக் காலத்தில் இடுவது, விளைப்பொருட்களை யாரிடம் விற்பது என்பது வரை ஆலோசனைகளை வழங்கி மீண்டும் விவசாய மறுமலர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

சில கிராமங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த திட்டங்கள் அந்தந்த துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலிலேயே நடந்திருக்கிறது. பெரியளவில் அரசால் விளம்பரப்படுத்தப்பட்டு நடத்தப்பட்டவை அல்ல. அதிகாரிகளின் முனைப்பும், செயல்பாடும் தீவிரமானதாக இருக்கும்பட்சத்தில் மாநிலம் முழுக்க அல்ல, நாடு முழுக்கவே எல்லா அரசுத் துறைகளும் சிறப்பானதாக பணியாற்ற முடியும். இக்கட்டுரையின் ஆரம்பத்தில் சில அதிகாரிகளுக்கு சூட்டப்பட்ட புகழாரத்தை, எல்லா அதிகாரிகளும் பெறமுடியும்.

(நன்றி : புதிய தலைமுறை)

30 நவம்பர், 2009

யோகி!


உங்களுக்கு குழந்தைகளைப் பிடிக்குமா?

அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளை ரொம்பப் பிடிக்குமா?

குழந்தையின் சில்லென்ற பாதத்தை எடுத்து உங்கள் கண்களில் ஒற்றிக்கொள்ளப் பிடிக்குமா?

உங்கள் புதுச்சட்டையின் மீது உச்சா போனாலும், கோபித்துக் கொள்ளாமல் குழந்தையை ‘அம்முக்குட்டி, தாச்சிக்குட்டி’ என்று கொஞ்சக் கூடியவரா?

குழந்தைக்கு கொஞ்சமே வளர்ந்த லேசான முடியை உச்சிமுகர்வீர்களா?

எங்கோ தூரத்தில் ஏதோ ஒரு குழந்தையின் அழுகைக்குரலை கேட்டாலே உங்கள் இதயவீணையின் நரம்புகள் அறுந்துவிடுமா?

நீங்கள் ஐந்தரை மாத பெண் குழந்தைக்கு அப்பாவாகவோ / அம்மாவாகவோ இருக்கக் கூடும். இல்லையா?

உங்களுக்கு இன்னமும் குழந்தையில்லை. ‘அட இன்னும் கண்ணாலமே ஆகலைப்பா’ என்றும் சொல்லக்கூடும். பரவாயில்லை. ஆனாலும் உங்களுக்கு உங்கள் அக்காள் மகளோ, எதிர்த்த வீட்டு குழந்தையையோ, பக்கத்து வீட்டு குழந்தையையோ அல்லது டிராஃபிக் சிக்னல்களில் பிச்சையெடுக்கும் தாயின் மடியிலுள்ள குழந்தையையோ பிடிக்கும் இல்லையா?

- மேற்கண்ட கேள்விகளில் ஏதேனும் ஒன்றுக்காவது ‘யெஸ்’ என்று நீங்கள் பதில் சொல்லக் கூடுமானால், தயவுசெய்து ‘யோகி’ பார்க்காதீர்கள்.

இந்த எச்சரிக்கையை மீறி ஆவல்மேலிட நீங்கள் படம் பார்க்கலாம். பிரச்சினையில்லை. ஆயினும் நீங்கள் மனநோயாளி ஆகிவிடக்கூடிய சாத்தியம் அதிகம். பரவாயில்லையா?

”இந்தப் படத்தை பார்க்காதீர்கள்!” என்ற என்னுடைய பரிந்துரையே படத்தை இயக்கிய இயக்குனருக்கும், அமீருக்குமான உண்மையான பாராட்டு. எந்தத் தமிழ் படத்துக்கும் இல்லாத Uniqueness இப்படத்துக்கு உண்டு. மிகத்தரமான உருவாக்கத்தில் உருவாக்கப்பட்ட மிகச்சிறந்த திரைப்படம். சந்தேகமேயில்லை. அமீர் நடிகராகவும் வெற்றி கண்டிருக்கிறார்.

இருந்தாலும் ’இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ படத்தில் ராஜா குதிரை ஓட்டினார் என்று தடை செய்ய முன்வந்த தணிக்கைக்குழு, ‘யோகி’யை எப்படி U/A சான்றிதழோடு அனுமதித்தது என்று புரியவில்லை.

மீண்டும் என்னுடைய வேண்டுகோள் : தயவுசெய்து இப்படத்தை பார்க்காதீர்கள். இப்படம் வசூல்ரீதியாக வெற்றியடையும் பட்சத்தில், திரைத்தொழிலில் ஈடுபட்டுள்ள குழந்தைகளை மேலும் கொடுமை செய்யும் கொடுமையான ட்ரெண்ட் தொடரக்கூடும்.

26 நவம்பர், 2009

விமர்சனம் எனும் அரிப்பு!


கால்நடைகள் புல்லை அசைப்போடுவதை போல மனிதனுக்கு எதையாவது விமர்சித்துக் கொண்டோ அல்லது கிசுகிசுத்துக் கொண்டோ இல்லாவிட்டால் தலை வெடித்து விடும் என்று எந்த வேதாளமோ எந்த யுகத்திலோ சாபமிட்டிருக்க வேண்டும். அரசு, அரசியல்வாதிகளுக்கு அடுத்தபடியாக இப்போது அதிகமாக விமர்சிக்கப்படும் துறையாக திரைத்துறை மாறியிருக்கிறது. திரையில் மின்னும் நட்சத்திரங்களின் தொழில் திறமை மீதான விமர்சனம் மட்டுமல்லாது அவர்களின் அந்தரங்க கிசுகிசுகளை ஆவலோடு வாசித்து அதுகுறித்தும் விமர்சிக்காவிட்டால் நமக்கும் பொழுதுபோவதில்லை.

சமீபகாலமாக அறிவுஜீவிகள் என்று சொல்லிக்கொள்கிறவர்கள் சிலர் நடத்தும் திரைத்துறை மீதான கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு பின்னால் “சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்!” கதை மட்டுமே பின்னணியில் தெரிகிறது. திரையில் கதை எழுதவோ, வசனம் எழுதவோ வாய்ப்பு பெறும் அறிவுஜீவிகள் அவசர அவசரமாக தங்களது அறிவுஜீவி அரிதாரத்தை அழுந்தத் துடைத்து “பஞ்ச் டயலாக்” எழுதும் அழகையும் நாம் இருகண் திறந்து ரசிக்க முடிகிறது. ஆதலால் ‘வாய்ப்பு பெற்றவர்கள் வசனம் எழுதுகிறார்கள்', 'வாய்ப்பு கிடைக்காதவர்கள் விமர்சனம் எழுதுகிறார்கள்' என்று இருபிரிவுகளாக சினிமா குறித்த அறிவுஜீவிகளின் கருத்துக்களை மிக சுலபமாக பிரித்துக் கொள்ளலாம். முன்பு இதே அறிவுஜீவிகள் வெகுஜன இதழ்களில் கதை எழுத சான்ஸூ எதிர்பார்த்து, சான்ஸூ மறுக்கப்பட்டதும் அப்பத்திரிகைகளை ஆபாசப்பத்திரிகைகள் என்று விமர்சிப்பார்கள்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பாக மாற்று திரைப்படம் (Parrallel Cinema) என்ற பெயரில் அறிவுஜீவிகளுக்கான திரைப்படங்கள் பத்து பேர் மட்டுமே நிரம்பிய திரையரங்குகளில் திரையிடப்படும். படம் பார்த்த பத்து பேரும் தலா நூறு பேர் வாசிக்கக்கூடிய அவரவருக்கு தோதான சிற்றிதழ்களில் நாற்பது அல்லது ஐம்பது பக்கங்களுக்கு மிகாமல், அப்படம் குறித்த தங்களது பார்வையை பதிப்பார்கள். இதனால் பெரும்பான்மை மக்களுக்கு பாதிப்பு அதிகமாக இல்லாமல் இருந்தது.

’உலக சினிமா க்ரூப்’ இதே காலக்கட்டத்தில் தோன்றியது. இந்த க்ரூப்பால் பெரிய பிரச்சினையில்லை. ஏனென்றால் இவர்களில் பெரும்பாலானோர் இந்திய சினிமாக்களை பார்ப்பதில்லை. பார்த்தாலும் ரகசியமாக பார்த்துவிட்டு, கமுக்கமாக இருந்து விடுகிறார்கள். இவர்களில் ஒரு சில அரைகுறைகள் மட்டுமே, அவ்வப்பொது வில்லு ரேஞ்சு படங்களையும் பார்த்துவிட்டு “இந்த தமிழ் சினிமாவே இப்படித்தான்!” என்று விமர்சிக்க கிளம்பிவிடுகிறார்கள். பி.எச்.டி. முடித்தவர்கள், ஏன் எல்.கே.ஜி. பாடப்புத்தகத்தை புரட்டிவிட்டு, நொட்டை சொல்ல வேண்டும்? எல்.கே.ஜி. பையன் வேண்டுமானால் ஒரு குறுகுறுப்புக்கு அவ்வப்போது பி.எச்.டி. தீஸிஸை புரட்டிப் பார்த்துக் கொள்ளட்டும். உலக சினிமா ஆர்வலர்கள் தயவுசெய்து வெகுஜன தமிழ் சினிமாவோ, தெலுங்கு சினிமாவோ பார்த்து தொலைக்கவே வேண்டாம். பார்த்தால் உங்களுக்கெல்லாம் பேதியாகும் என்று எந்த முனிவராலோ, எந்த ஜென்மத்திலேயோ சாபம் இடப்பட்டிருக்கிறீர்கள்.

சமீபகாலமாக மாற்றுத் திரைப்படங்கள் படைத்தவர்களும் சில வணிகலாபங்களை முன்னிட்டோ அல்லது வயிற்றுப்பாட்டினை முன்னிட்டோ வெகுஜன சினிமாவை நெருங்கி வந்து, வெகுஜன சினிமாவுக்குள்ளே கிட்டத்தட்ட ஐக்கியமாகி விட்டார்கள். இன்றைய தேதியில் மாற்று திரைப்படம் என்பது புதியதாக திரைத்தொழிலை கற்கும் மாணவர்களுக்கும், வெகுஜன சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத ஒரு சில திறமையாளர்களுக்கும் மட்டுமே என்ற அளவில் குறுகிப்போய் கிடைக்கிறது. மாற்று திரைப்படம் எடுப்பவர்களும் கூட வெகுஜன பத்திரிகைகளின் ஆதரவில் தங்களுக்கு வேண்டிய விளம்பர வெளிச்சத்தை பெற தவமிருக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

இத்தகைய சூழலில் முன்பு மாற்றுப் படங்களுக்கு திரைப்பார்வை எழுதிக்கொண்டிருந்த அறிவுஜீவிப் பறவைகளுக்கு குளம் வற்றி விட்ட நிலையில், வேறுவழியில்லாமல் ‘வெகுஜன சினிமாவுக்கான விமர்சனம்' என்ற வேடந்தாங்கலை நாடிவரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. வந்தவர்கள் சும்மா இருந்தால் பரவாயில்லை. 'தமிழ் சினிமா அபத்தத்தின் உச்சம்', ‘சித்தாந்தங்களுக்கும் சினிமாக்களும் என்ன தொடர்பு?', ‘நடிகைகளின் தொப்புள்களிலா ஆம்லெட் போடுவது?' ‘பெண்மையை இழிவுப்படுத்துகிறார்கள்', ‘அதிகார ஆண்மய்யத் திமிர்' ‘விளிம்புநிலை' என்றெல்லாம் ஏதேதோ நமக்கு அறிமுகமில்லாத வார்த்தைகளாலும், வாக்கியங்களாலும் திரைப்பார்வை (அவர்கள் எழுதினால் மட்டுமே அது திரைப்பார்வை. மற்றவர்கள் எழுதுவது விமர்சனம்) எழுத ஆரம்பித்து விடுகிறார்கள். வெகுஜன சினிமா குறித்து இவர்கள் எழுதுவதால் வெகுஜன பத்திரிகைகளும், அவசரத்துக்கு அல்லது பரபரப்புக்கு பக்கத்தை நிரப்ப இவர்களது விமர்சனங்களை பிரசுரித்து விடுகின்றன. படிக்கும் வாசகர்களுக்கு தான் தாவூ தீருகிறது.

எழுபத்தைந்து ஆண்டுகால சினிமா வரலாற்றில் இப்போது தான் புதியதாக ஆண்மய்யத் திமிரையும், அபத்தங்களையும் சினிமா காட்டுவது போல இவர்கள் பேசுவது நல்ல நகைச்சுவை. ஹரிதாஸ் காலத்திலிருந்து இதைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருந்தோம் என்பது அவர்களுக்கு தெரியாது. பாவம். அப்போதெல்லாம் உலகப் படங்கள் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார்களாம். ”இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை!” என்று எம்.ஜி.ஆர் பாடியதெல்லாம் துயிலில் இருந்தவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. இப்போது “கைய வெச்சுக்கிட்டு சும்மா இருடா” என்று ரீமாசென் பாடும்போது தான் கொதித்தெழுந்து, மாய்ந்து மாய்ந்து ஐம்பது, அறுபது பக்கங்களில் பெண்ணுரிமை பேசுகிறார்கள். இவர்களது திரைப்பார்வையை படித்தபின்னர் தான் படத்தை இயக்கிய இயக்குனருக்கே அவரது படம் குறித்த பல பரிமாணங்கள் தெரிகிறதாம். ”இப்படி எல்லாம் கூட நாம எடுத்திருக்கோமா?” என்று இயக்குனர்கள் அதிசயிக்கிறார்களாம்.

வெகுஜனப் படங்கள் மக்களின் கொண்டாட்டத்துக்காக எடுக்கப்படுபவை. சராசரி பார்வையாளன் தான் எதையெல்லாம் அடையவில்லையோ அதையெல்லாம் திரைநாயகன் அடையும்போது அதை கண்டு மகிழ்கிறான். தனக்கு தான் காதலி கிடைக்கவில்லை தன் அபிமான நாயகனாவது படத்தில் இரண்டு பெண்களை காதலிக்கிறானே? என்று சிலிர்க்கிறான். மரத்தை சுற்றி டூயட் பாடுவதெல்லாம் நமக்கு நடக்கக்கூடிய காரியமா? திரையில் வண்ணமயமாக நடக்கும்போது அதை நம் மனது கொண்டாடுகிறது. சோனி உடம்பை வைத்து அவனால் ஒருத்தனை கூட அடிக்கமுடியாது. அவனை மாதிரியே சினிமா ஹீரோவும் ஒரே ஒருத்தனிடம் அடிவாங்குகிறான் என்றால் அந்த கருமத்தை அவன் ஏன் காசு கொடுத்துப் பார்க்க வேண்டும்? அவனுடைய ஹீரோ சூப்பர்மேனாக ஐம்பது பேரை பறந்து, பறந்து அடித்தால் தானே அவனுக்கு சுவாரஸ்யம்? அவனுடைய சூழலில் ஒரு பெண்ணின் தொப்புளையோ, Cleavageயோ பார்ப்பது அவனுக்கு சாத்தியமில்லாததாக இருக்கலாம். அது சினிமாவில் கிடைக்கும்போது அவனுக்கு மகிழ்ச்சி ஏற்படுவது இயல்புதானே?

வெகுஜன சினிமா என்பது வெறுமனே ஒரு கொண்டாட்டத்துக்கான ஊடகம். அதில் லாஜிக்கோ, மேஜிக்கோ பார்ப்பது அபத்தத்திலும் அபத்தம். வெகுஜன சினிமாவுக்கான விமர்சனங்களும் வெகுஜன பாணியிலேயே அமைவது தான் சரியானது. மாறாக ரஜினி படத்திலோ, விஜய் படத்திலோ யதார்த்தம், பின்நவீனத்துவம், சமூக அக்கறை இத்யாதிகளை எதிர்பார்த்து அறிவுஜீவிகள் யாராவது ஏமாந்து கொதித்தெழுவதில் எந்தப் பயனும் இல்லை. வணிக லாபத்துக்காக எடுக்கப்படும் சினிமா அதன் பார்வையாளர்கள் எதை கேட்டாலும் தர தயாராகவே இருக்கும். மாறவேண்டியது சினிமாக்காரர்கள் மட்டும் அல்ல, சமூகமும் சமூகத்தின் ரசனையும்! சமூகத்தை இந்த நிலையில் வைத்திருப்பது அச்சமூகத்தில் தோன்றிய அறிவுஜீவிகளின், சிந்தனையாளர்களின் குற்றமே தவிர சினிமாக்காரர்களின் குற்றமல்ல.

25 நவம்பர், 2009

நீங்க நல்லவரா? கெட்டவரா?

நீங்க நல்லவரா? கெட்டவரா? என்று கேட்டால் ‘தெரியலியேப்பா!’ என்று நாயகன் கமல் மாதிரி பதில் சொல்லக்கூடும். சென்னை கோடம்பாக்கத்துக்குப் போய் தெருமுக்கில் நின்றுகொண்டு, இதே கேள்வியைக் கேட்டால் ‘நாங்கள்லாம் ரொம்ப நல்லவங்க!’ என்று நெஞ்சை நிமிர்த்தி, பெருமிதமாய் பதில் சொல்கிறார்கள். இவர்கள் எல்லோரும் ‘நல்லோர் வட்டத்தை’ சேர்ந்தவர்கள்.

தெற்கு சிவன் கோயில் பகுதிக்கு சென்றபோது நமக்கே ஆச்சரியம். சென்னையிலா இருக்கிறோம்? ஒவ்வொரு வீட்டு வாசலும் சுத்தமாக, கோலம் போடப்பட்டு, ‘பளிச்’சென்று இருக்கிறது. சுவர்களில் சுவரொட்டிகளும், ‘கோடம்பாக்கத்தார் அழைக்கிறார்’ பாணி அரசியல் சுவர் விளம்பரங்களும் அறவே இல்லை. பொன்மொழிகளும், தத்துவங்களும் எழுதப்பட்டிருக்கின்றன. சாலையோரங்களில் மரங்கள் வளர்க்கப்பட்டு கண்களுக்கு பசுமையையும், உடலுக்கு சில்லிப்பையும் ஏற்படுத்துகின்றன. கீழ்நடுத்தர வர்க்கத்தினர் அதிகமாக வசிக்கும் ஒரு பகுதியில் இதெல்லாம் எப்படி சாத்தியம்? என்று கேட்டால் ‘நல்லோர் வட்டத்தை’ கைகாட்டுகிறார்கள்.

அதென்ன நல்லோர் வட்டம்?

கோடம்பாக்கம் சிவன் கோயில் அருகே டீக்கடை நடத்திவரும் பாலசுப்பிரமணியன் சொல்கிறார். “இந்தப் பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறேன். என் கடையில் பாரதியார், மகாத்மா என்று தேசத்தலைவர்களின் படங்களை வைத்திருப்பேன். பொன்மொழிகளை எழுதி வைத்திருப்பேன். கடைக்கு வரும் இளைஞர்கள் பலரும் அரசியல், உலக நடப்பு என்று பேசுவார்கள். ஏதோ ஒரு மாற்றத்தை கொண்டு வரும் அக்கறை அவர்களின் பேச்சில் தொக்கி நிற்கும். ஆனால் வெறுமனே தங்களது ஆதங்கங்களை கொட்டிவிட்டு செல்வதில் என்ன பலன் இருக்க முடியும்?

அந்த இளைஞர்களோடு பேசி, அவர்களை ஒருங்கிணைத்து செயல்பட ஒரு அமைப்பை ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கினோம். அதற்கு நல்லோர் வட்டம் என்று பெயரும் இட்டோம். ‘நல்லது நடக்க வேண்டும்’ என்று விரும்புகிறவர்கள் அனைவருமே இந்த அமைப்பின் உறுப்பினர்கள். இந்த அமைப்புக்கு சந்தா கிடையாது. காசு என்று வந்தாலே அதை நிர்வகிக்க ஏராளமான மனித உழைப்பும், நேரமும் தேவைப்படுகிறது. அந்த உழைப்பையும், நேரத்தையும் உபயோகமாக பயன்படுத்த சந்தா என்ற ஒரு விஷயத்தையே நீக்கிவிட்டோம். நிர்வாகச் செலவுகளை இந்தப் பகுதியில் இருப்பவர்களே பார்த்துக் கொள்கிறார்கள். நல்லது நடக்குதுன்னா எல்லோருக்குமே பிடிக்குது. அதனால கேட்காமலே செலவு பண்ணுறாங்க.

ஆரம்பத்தில் ஏழெட்டு பேர்களாக இருந்த நாங்கள் எங்களது செயல்பாடுகள் மூலமாக நிறைய பேரை கவர்ந்தோம். இன்று பார்த்தீர்களென்றால் கிட்டத்தட்ட நூறு பேர் தீவிரமாக செயல்படுகிறோம். ஆயிரம் பேர் எங்கள் நல்லோர் வட்டத்தின் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த அமைப்புக்கு உறுப்பினராக விதிமுறைகள் எதுவும் கிடையாது. அமைப்பை பதிவும் செய்யவில்லை. ஒரு மாதிரியான அன்கான்ஃபரன்ஸ் வடிவில் இருப்பதாலேயே மக்கள் பலரும் அச்சம் ஏதுமின்றி எங்கள் அமைப்பில் உறுப்பினர்களாகி வருகிறார்கள்”

அப்படி என்னதான் செய்கிறார்கள் நல்லோர் வட்டத்தினர்?

அப்துல் கலாமிற்கு ‘இந்தியா 2020’ என்று கனவு இருப்பதைப் போல, இவர்களுக்கு ‘கோடம்பாக்கம் 2020’ என்றொரு கனவு உண்டு. தாங்கள் வசிக்கும் பகுதி, நகரத்தின் மற்ற பகுதிகளுக்கு ‘மாதிரிப் பகுதி’ ஆக இருக்க வேண்டும் என்பது இவர்களது கனவு. உதாரணத்துக்கு திருவள்ளூர் மாவட்ட குத்தம்பாக்கத்தை காட்டுகிறார்கள். தங்கள் கனவு மெய்ப்பட சிறியளவிலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இரத்ததானம், உடல்தானம், கண்தானம், அன்னதானம், மரம் வளர்த்தல் போன்ற வழக்கமான செயல்பாடுகளோடு சில குறிப்பிடத்தக்க செயல்பாடுகள் மூலமாக இவர்கள் மற்ற அமைப்புகளிடமிருந்து வேறுபடுகிறார்கள்.

‘அதிரடிச்சேவை’ என்ற பெயரில் நடைபெறும் செயல்பாடு குறிப்பிடத்தக்கது. அமைப்பினர் நூறு பேர் இச்சேவைக்கு தயாராகிறார்கள். ஒரு பகுதியில் இருக்கும் குப்பைகள் மொத்தத்தையும் அகற்றி தூய்மைப் படுத்த வேண்டுமா? மூன்றே மணி நேரத்தில் அதிரடி வேகத்தில் அகற்றி விடுகிறார்கள். ‘ஒரு பகுதியை சீர்ப்படுத்த மூன்று மணி நேரத்துலே முடியலேன்னா, நிச்சயமா முன்னூறு மணி நேரம் ஆனாலும் முடியாது! அதனாலே தான் இந்த மூன்று மணி நேரத்தை எங்களுக்கு அடையாளமா எடுத்துக்கிட்டிருக்கோம்!’ என்கிறார் பொறுப்பாளர்களில் ஒருவரான வெங்கடேசன். இந்த அமைப்புக்கு தலைவர், செயலாளர், பொருளாளர் என்று பதவிகளே இல்லை. பணிகளின் தன்மைக்கேற்ப பொறுப்பாளர்கள் மட்டும் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட இருபத்தைந்து வகை செயல்பாடுகளை இவ்வமைப்பினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

‘ஒரு ரூபாய் திட்டம்’ மற்றொரு குறிப்பிடத்தக்க திட்டம். இப்பகுதியில் இருப்பவர்களிடம் மாதம் ஒரு முறை ஒரு ரூபாய் மட்டுமே வசூலிக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக வசூலிக்கும் பணத்தை பகுதியில் இருக்கும் அன்பு இல்லம் எதற்காவது (அனாதை இல்லம் என்ற சொல்லை நல்லோர் வட்டத்தினர் உபயோகிப்பதில்லை) தருகிறார்கள். ஒரு ரூபாய் என்பது மிகக்குறைந்த தொகை என்பதால் ஏராளமானோர் இத்திட்டத்துக்கு உதவி வருகிறார்கள். குறிப்பாக பள்ளிக் குழந்தைகளிடம் பலமான வரவேற்பு இருக்கிறது.

மாநகராட்சி, காவல்துறை என்று அதிகார அமைப்புகளோடு நல்லோர் வட்டத்தினருக்கு நல்ல தொடர்பு இருப்பதால், இவர்களது கோரிக்கைகள் பெரும்பாலும் எந்த சிக்கலுமின்றி நிறைவேறி விடுகிறது. “எங்களுக்கு இதுவரை எதிர்மறையான அனுபவம் எதுவுமே இல்லை!” என்று சொல்லி ஆச்சரியப்படுத்துகிறார்கள்.

சமீபத்தில் இந்த அமைப்பின் செயல்பாடுகளை கேட்டறிந்த டாக்டர் கலாம், இவ்வமைப்பினரை நேரில் சந்தித்துப் பாராட்டியிருக்கிறார். நல்லோர் வட்டத்தினரின் செயல்பாடுகள் சிலவற்றைக் கேட்கிறபோது விக்கிரமன் படக்காட்சிகளைப் போல எல்லாமே பாசிட்டிவ்வாக இருக்கிறது. “2020ல் நிச்சயமா கோடம்பாக்கம் வளர்ச்சி அடைந்தப் பகுதியா இருக்கும். இங்கே வசிப்பவர்கள் மகிழ்ச்சியாகவும், நல்ல சிந்தனைகளோடும் வாழ்வாங்க என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு” என்று நம்பிக்கையோடு சொல்கிறார்கள் நல்லோர் வட்டத்தினர்.

மாற்றம், மாற்றம் என்று வறட்டுத்தவளையாக கத்திக் கொண்டிருப்பதை விட, நல்லோர் வட்டத்தினரைப் போல செயல்படுவதின் மூலமாக நாம் நினைக்கும் மாற்றங்களை நிறைவேற்றிவிட முடியும். ஊருக்கு ஒரு நல்லோர் வட்டம் உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். ஒவ்வொரு ஊரும் 2020-ஐ இலக்காக கொண்டு செயல்படுமேயானால் ‘இந்தியா 2020 கனவு', 2020க்கு முன்பே நிறைவேறிவிடும் என்பது உறுதி.