1 டிசம்பர், 2009

சேவக லீலா!

பெரும்பாலான நண்பர்கள் என்னிடம் குறைபட்டுக் கொள்ளும் விஷயம் ஒன்று உண்டு. “சாரு எதை சொன்னாலும் அப்படியே ஏற்றுக்கொள்வாயா?” என்று அடிக்கடி கேட்டவர்களே கூட திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ”எனக்கு சாருவை பர்சனலாகவும் பிடிக்கும். அவரது எழுத்தையும் பிடிக்கும். அவர் கமல்ஹாசன் மாதிரி. பத்து/பதினைந்து ஆண்டுகள் கழித்து எழுத வேண்டியதை இன்றே எழுதிவிடுவார். அதற்காக அவர் எழுதுவதையும்/பேசுவதையும் அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை” என்று ஒவ்வொருமுறையும் கிளிப்பிள்ளை மாதிரி திரும்ப திரும்ப பதில் அளிப்பேன். முன்பு சாரு இணையத்தில் எழுதிய பதிவு ஒன்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து எழுதியிருந்தேன். அதை மீண்டும் இங்கே பதிகிறேன். திரும்பப் படித்துப் பார்க்கும்போதும் எனக்கு அப்போது இருந்த அதே மனநிலைதான் இப்போதும் இருக்கிறது என்று புலனாகிறது!

ஓவர் டூ அந்த பழைய எதிர்ப்பு :


அபத்தமாக பேசுபவர்களையும், எழுதுபவர்களையும் கண்டால் எல்லோருக்கும் எரிச்சல் மண்டுவது இயல்பு. ஆயினும் சில நேரங்களில் நம்முடைய ஆதர்சங்களே அபத்தமாக சிந்தித்து, அதையும் எழுதியோ, பேசியோ தொலைக்கும்போது எரிச்சலோடு, கோபமும் இணைந்துக் கொள்கிறது. அதுபோன்ற சீற்றமான, நிதானமற்ற மனநிலையில் இப்போது எழுதுகிறேன்.

சிறுவயதிலிருந்தே ஏதாவது பத்திரிகைகளில் சாரு நிவேதிதா என்ற பெயரை காணநேர்ந்தால் அக்கட்டுரையையோ, புனைவையோ தவறவிடாமல் வாசிப்பது என் வழக்கம். சாரு என்ற பெயர் எனக்குள் ஏற்படுத்திய மேஜிக்குகள் எண்ணிலடங்கா. ஒரு அறிவுஜீவியாக இருந்தும் மிக எளிமையாக, வாசகன் அஞ்சாமல் அணுகக்கூடிய மொழிநடை அவருடையது. பெரும்பாலும் சுயபுராணமாக இருந்தாலும் அவருடைய சுய எள்ளல், சுய பச்சாதாபம் போன்றவை வாசிக்க சுவாரஸ்யமானதாகவே இருக்கும். சரோஜாதேவிரக எழுத்தாளர்கள் தவிர்த்து கைமைதுனம் செய்வதை கூட வெளிப்படையாக ஒத்துக்கொள்ளும் பன்முகப்பார்வை கொண்ட தமிழ் எழுத்தாளர் அவர் ஒருவர் மட்டுமே.

அவர் எழுத்துக்களை வாசிப்பவர்களுக்கு அவர் ஒரு நாத்திகர் என்ற தோற்றம் மிகுந்திருக்கும். எனக்குள்ளும் மிகுந்திருந்தது. சுஜாதா மறைவுக்குப் பின்னர் திடீரென்று சுஜாதாவின் இடத்தை பிடிக்க வேண்டும் (எந்த கொம்பனாலும் பிடிக்கமுடியாது என்பது என் எண்ணம்) என்ற பேராசையாலோ என்னவோ திடீரென தன்னை ஆத்திகர் என்று சமீபத்தில் அறிவித்துக் கொண்டிருக்கிறார். அவர் நாத்திகரோ, ஆத்திகரோ அது யாருக்கும் பிரச்சினையில்லை. ஆனால் திடீரென புதியதாக ஏற்றுக்கொண்ட ஆத்திக வேடத்துக்காக இறைமறுப்பாளர்களையும், இறைமறுப்பு முற்போக்கு சிந்தனைகளையும் மிக கேவலமாக விமர்சிப்பது சாரு போன்ற (இதுவரை) முற்போக்கு வேடமணிந்த ஒரு எழுத்தாளருக்கு அழகல்ல.

'விபச்சாரம் ஏன் நடக்கிறது?' என்ற கேள்விக்கு இதுவரை விடை தெரியாமல் இருந்தது. சாரு கண்டுபிடித்து விட்டார். இறைமறுப்பு தான் விபச்சாரத்துக்கு காரணமாம். ரஷ்யா ஜார் மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் வறுமையால் பீடிக்கப்பட்டிருந்தபோதும் கூட மதநெறி தந்த ஆன்மபலத்தால் ரஷ்யர்கள் ஒழுக்கமாக இருந்தார்களாம். ஆனால் கம்யூனிஸம் ஆட்சிக் கட்டிலேறி கடவுள் மறுப்பு விவாதங்களும், சிந்தனைகளும் வந்த பின்னர் ரஷ்யாவில் விபச்சாரம் பெருகி விட்டதாம். எவ்வளவு அபத்தம் இது? கடவுள் மறுப்பு சிந்தனைகளை மட்டுமன்றி கம்யூனிஸத்தின் மீதும் போகிறபோக்கில் சாணி அடித்துவிட்டுப் போகிறார் சாரு. இவரது இந்த புதிய கண்டுபிடிப்புக்கு தோதாக அவரது இலங்கை நண்பர் ஒருவருக்கு ரஷ்யாவில் நிகழ்ந்த சில அனுபவங்களை வாதத்துக்கு வலுவாக சேர்த்துக் கொள்கிறார்.

அதே சாரு தாய்லாந்து நாட்டின் விபச்சாரம் பற்றியும், பத்து வயது குழந்தைகள் கூட மிகக்குறைவான (50 ரூபாய்) தொகைக்கு விபச்சாரத்துக்கு தயாராக இருப்பது பற்றியும் எழுதுகிறார். தாய்லாந்து நாட்டில் கம்யூனிஸ ஆட்சி நடக்கிறதா? கடவுள் மறுப்பு விவாதங்கள் விவாதிக்கப்படுகிறதா? என்பது பற்றி சாருவுக்கு தெரியாதா? கிட்டத்தட்ட தொண்ணூற்றி ஒன்பது சதவிகித தாய்லாந்து மக்கள் மதநம்பிக்கையும், இறைநம்பிக்கையும் கொண்டவர்கள் தானே?

தாய்லாந்துக்கு போவானேன்? இந்தியாவில் என்ன வாழுகிறது? இங்கே (இப்போது சாரு உட்பட) தொண்ணூற்றி ஐந்து சதவிகிதம் பேர் இறைநம்பிக்கை கொண்டவர்களாக தானே இருக்கிறார்கள்? இங்கே ஏன் சோனாகஞ்சும், மும்பை சிகப்பு விளக்கு பகுதியும் இருக்கிறது? ஐம்பது ரூபாய்க்கு உடலை அரை மணி நேரத்துக்கு விற்க சென்னையில் கூட விளிம்புநிலைக்கு தள்ளப்பட்ட பெண்கள் இருப்பது நமக்கு தெரியுமோ இல்லையோ.. சாருவுக்கு நிச்சயமாகத் தெரியும். இதற்கெல்லாம் கூட காரணம் இறைமறுப்பா?

இறைமறுப்பு சிந்தனைகளை உலகளவில் பரபரப்பாக விவாதித்த ஜெர்மன் சிந்தனையாளர்களையும்.. அந்நாட்டையும், ஐம்பது ஆண்டுகளாக இறைமறுப்பு கம்யூனிஸ ஆட்சி நடக்கும் கியூபா நாட்டையும் சாரு மறந்துவிட்டாரா? இல்லை அங்கும் விபச்சாரமும், சமூகக்குற்றங்களும் இன்னமும் தலைவிரித்து ஆடுகிறது என்று நம்பிக்கொண்டிருக்கிறாரா? மதநம்பிக்கையும், இறைநம்பிக்கையும் பெரிதும் கொண்டிருக்கும் அமெரிக்கா.. ஆத்திகர்களையே பெரும்பாலும் அதிபர்களாக ஏற்றுக்கொள்ளும் அமெரிக்கா, சர்வதேச அளவில் மனிதநேயத்துக்கு எதிராக செய்துவரும் மனிதகுல விரோத குற்றங்களுக்கு என்ன நியாயம் கற்பிக்கப் போகிறார் சாரு? இறைமறுப்பாளர்களால் உலகுக்கு விளைந்த கேடுகள் அதிகமா? மத அடிப்படைவாதிகளால் உலகுக்கு விளைந்த கேடுகள் அதிகமா? என்பதை சாரு மல்லாந்து படுத்துக் கொண்டு யோசிக்க வேண்டும்.

கடவுள் என்ற சொல்லாடல் புழக்கத்திற்கு வருவதற்கு முன்பே விபச்சாரம் என்ற தொழிலும், சமூகக்குற்றங்களும் உலகில் பெருகிவிட்டதை உலக வரலாறு வாசித்த யாருமே உணரமுடியும். இன்னமும் சொல்லப்போனால் சமூகக்குற்றங்கள் செய்வதிலிருந்து மனிதனை காக்க மனிதகுலம் கண்டுபிடித்த ஒரு முறையே மதமும், மதத்துக்கு மூலமான கடவுளும் என்றும் கூறலாம். இறைவன் குறித்த தர்க்கங்களில் வெற்றி காணமுடியாமல் கடைசியாக ஆத்திகர்கள் நாத்திகர்கள் மீது வைக்கும் பலகீனமான விமர்சனம் தான் இறைமறுப்பால் சமூகக்குற்றங்கள் பெருகும் என்பது. சாருவும் கூட அப்படிப்பட்ட விமர்சனத்தை எழுதுவதை காணும்போது “சாருவும் இவ்வளவுதானா?” என்ற ஆயாசமும், ஏமாற்றமும் தான் மிஞ்சுகிறது.

7 கருத்துகள்:

  1. என்ன பாஸ் அடிக்கடி சாரு பத்தி பதிவு வருது. ஹிட் கவுன்ட் கம்மியாருச்சா. பாத்து தலைவா, குமுதம் பண்ண பிரச்சனைக்கு யாரோட பாவாடைல்லாமோ கிழியுது. உங்க டவுசர் பத்திரம்.

    பதிலளிநீக்கு
  2. ஆயிரம் சொன்னாலும் என்னால் ஏனோ அவரை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஆனால் இந்த மாற்றம் ஓரிரு ஆண்டுகளுக்கு முன் அவரது வலையை தொடர்ந்து படித்ததனால்தான் வந்தது. அவரது புத்தகங்களை நான் குறை சொல்லவில்லை. கலகம் காதல் இசை, கடவுளும் நானும், அலைந்து திரிபவனின் அழகியல், ஃபேன்சி பனியன்.... இதைத் தவிர வேறு எதையும் முழுமையாய் படித்ததில்லை.ஆனால் இவையெல்லாம் எனக்கு பிடித்திருந்தது. ஆனால் அதன் பிறகு பிடிக்காமல் போனது. காரணம் சொல்லத் தேவையில்லை. பலரும் பல முறை சொன்னதுதான்.

    விடுங்க, எனக்கு பிடிக்கலைன்னா என்ன ஆகப் போது? :))

    பதிலளிநீக்கு
  3. கார்க்கி!

    உங்கள் பின்னூட்டத்தின் கடைசி வரிதான் நிதர்சனம். நீங்கள் ஒரு ஜென்னாக மாறிவருகிறீர்கள் :-)

    பதிலளிநீக்கு
  4. உங்கள் கடைசி பத்தியில் கூறிய கருத்து "சமூகக்குற்றங்கள் செய்வதிலிருந்து மனிதனை காக்க மனிதகுலம் கண்டுபிடித்த ஒரு முறையே மதமும், மதத்துக்கு மூலமான கடவுளும் என்றும் கூறலாம். " உங்கள் பதிவுக்கு எதிர்மறையா படுதே :)

    பதிலளிநீக்கு
  5. // சமூகக்குற்றங்கள் செய்வதிலிருந்து மனிதனை காக்க மனிதகுலம் கண்டுபிடித்த ஒரு முறையே மதமும், மதத்துக்கு மூலமான கடவுளும் என்றும் கூறலாம். இறைவன் குறித்த தர்க்கங்களில் வெற்றி காணமுடியாமல் கடைசியாக ஆத்திகர்கள் நாத்திகர்கள் மீது வைக்கும் பலகீனமான விமர்சனம் தான் இறைமறுப்பால் சமூகக்குற்றங்கள் பெருகும் என்பது.//

    இது ஒரு சமாளிப்பு பேச்சு.., கிட்டத்தட்ட அனைவருக்கும் தெரியும் இந்த உலகில் கொலைகளும் கற்பழிப்பும் எத்தன பேரால் நடக்கின்றன என்பது...,

    பதிலளிநீக்கு