5 டிசம்பர், 2009

நீ காண விரும்பும் மாற்றமாய் நீயே மாறிவிடு!


எல்லா இந்திய மாணவர்களையும் போலவே பதினாறு வயது பாபர் அலிக்கும் ஒவ்வொரு நாளும் விடிகிறது. அதிகாலை முழிப்பு. பின்னர் கொஞ்சம் படிப்பு. வீட்டு வேலைகளில் கூடமாட ஒத்தாசை. வெள்ளை சட்டை, நீலநிற பேண்ட் அவருடைய பள்ளி சீருடை. இஸ்திரி செய்து அணிந்துவிட்டு, அவசர அவசரமாக காலை உணவைக் கொறித்துவிட்டு, ரிக்‌ஷாவுக்கு காத்திருக்கிறார்.

ராஜ்கோவிந்தா பள்ளி. மேற்கு வங்கத்தின் சிறந்த பள்ளிகளில் ஒன்று. பாபர் அலி வசிக்கும் பகுதியிலிருந்து பத்து கிலோ மீட்டர் தூரம். எட்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு ரிக்‌ஷா பயணம். கடைசி இரண்டு கிலோ மீட்டர்கள் நடந்தாக வேண்டும். நூற்றுக்கணக்கான மாணவர்களும், மாணவிகளும் பாபர் அலியோடு படிக்கிறார்கள்.

பெரிய பள்ளி என்பதால் மாணவர்களுக்கு எல்லா வசதிகளும் உண்டு. மேஜை, நாற்காலி, பெரிய கரும்பலகை, அபாரமாக பாடம் நடத்தக்கூடிய ஆசிரியர்கள். தரமான கல்வி பாபர் அலிக்கு கிடைக்கிறது. அவரது பரம்பரையிலேயே முறையான கல்வி பெறும் முதல் நபர் இவர்தான். பள்ளியிலேயே நன்றாக படிக்கக்கூடிய விரல்விட்டு எண்ணக்கூடிய மாணவர்களில் ஒருவர் பாபர் அலி.

“தனக்கு கிடைக்கும் தரமான கல்வி தான் வாழும் பகுதி குழந்தைகளுக்கு கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?” பாபர் அலியின் நீண்டநாள் ஏக்கம் இது.

ராஜ்கோவிந்தா பள்ளி, அரசுப்பள்ளி என்பதால் கல்விக்கட்டணம் இல்லை. சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் ரிக்‌ஷாவுக்கு மட்டும் அவர் செலவழிக்க வேண்டியிருக்கிறது. இதற்காக வருடத்துக்கு 1,800 ரூபாய் மட்டுமே செலவு. மிகக்குறைந்த இந்த தொகையைக் கூட செலுத்த முடியாமல் கல்வி வாசனையே அறியாத ஆயிரக்கணக்கானோர் வாழும் பகுதி பாபர் அலியின் முர்ஸிதாபாத் பகுதி.

பதினான்கு வயதான சும்கி ஹஜ்ரா பள்ளிக்கே சென்றதில்லை. தனது பாட்டியோடு ஒரு குடிசையில் வசித்து வருகிறாள். அக்கம் பக்கம் வீடுகளில் பாத்திரம் தேய்த்து தன் உணவுக்கான, உடைக்கான வருமானத்தை சம்பாதிக்கிறாள். இவளது மாத வருமானம் ரூபாய் இருநூறு. பள்ளியில் சேர்க்கப்பட வேண்டிய ஐந்தாவது வயதில் வீட்டு வேலை பார்க்க செல்கிறாள். சும்கியின் அப்பா உடல் ஊனமுற்றவர் என்பதால் பணிக்கு செல்லமுடியாது. “நான் வேலைக்கு போவதால் ஒருவேளை உணவாவது கிடைக்கிறது. இல்லாவிட்டால் இதுவும் கிடையாது” என்கிறாள் சும்கி.

சும்கியைப் போன்றே நூற்றுக் கணக்கான குழந்தைத் தொழிலாளர்கள் அப்பகுதியில் வசிக்கிறார்கள். ஆண் குழந்தைகள் கூலி வேலைக்கு செல்கிறார்கள். பெண் குழந்தைகள் வீட்டு வேலைக்கு செல்கிறார்கள். நல்ல வேளையாக இன்று இவர்கள் அனைவருமே கல்வி கற்கிறார்கள். பாபர் அலிக்கு நன்றி!

சரியாக நான்கு மணிக்கு பாபர் அலி வீட்டில் மணி அடிக்கிறது, பள்ளி அழைப்பு மணியைப் போன்றே. சும்கி போன்ற நூற்றுக்கணக்கானோர் அவசர அவசரமாக நோட்டுப் புத்தகங்களோடு ஓடி வருகிறார்கள். பள்ளியில் மைதானத்தில் அணிவகுப்பதைப் போல வரிசையாக நிற்கிறார்கள். தேசியகீதம் பாடுகிறார்கள். பின்னர் வகுப்புகள் தொடங்குகிறது.

காலையில் மாணவனாக இருந்த பாபர் அலி இப்போது ஆசிரியராக மாறிவிடுகிறார். பள்ளியில் தான் கற்றதை இங்கே சொல்லிக் கொடுக்கிறார். ஒன்பது வயதில் விளையாட்டாக தன் வயதையொத்த மாணவர்களுக்கு டீச்சர் விளையாட்டில் பாடம் சொல்லிக் கொடுத்த அனுபவம் பாபருக்கு இங்கேயும் கைகொடுக்கிறது.

நம்புங்கள் சார். இப்போது பாபர் அலியின் இந்த பிற்பகல் பள்ளியில் 800 மாணவர்கள் படிக்கிறார்கள். இவரது பள்ளி நண்பர்கள் பத்து பேர் ஆசிரியர்களாக பணிபுரிகிறார்கள். முறையான கட்டமைப்பு இல்லாத இந்தப் பள்ளிக்கு பதினாறு வயதான பாபர் அலிதான் தலைமை ஆசிரியர். எழுத்தறிவு இப்பகுதியில் உயர்ந்து வருவதால், உள்ளாட்சி அமைப்புகள் இந்தப் பள்ளியை அங்கீகரித்திருக்கிறது.

ஏராளமான தன்னார்வ தொண்டு அமைப்புகள் இந்த பிற்பகல் பள்ளிக்கு இப்போது நன்கொடைகள் தர முன்வந்திருக்கிறார்கள். எனவே புத்தகங்கள், உணவு என்று மாணவர்களுக்கு நிறைய விஷயங்களை இலவசமாக தரமுடிகிறது.

சும்கி ஹஜ்ராவுக்கு இப்பொழுது எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்கிறது. இந்த பிற்பகல் பள்ளி வகுப்பு ஏழு மணிக்கு முடியும். அதன் பிறகும் அவள் பாத்திரங்கள் தேய்க்க, தான் பணியாற்றும் வீடுகளுக்கு செல்லவேண்டும். “என் கனவு ஒரு நர்ஸாக வரவேண்டுமென்பது. அது நனவாகும் என்ற நம்பிக்கை இந்தப் பள்ளியால் ஏற்பட்டிருக்கிறது!” என்கிறாள்.

“பாடம் சொல்லிக் கொடுக்கும் விளையாட்டுதான் முதலில் விளையாடிக் கொண்டிருந்தேன். ஒருக் கட்டத்தில் இது விளையாட்டல்ல என்பது எனக்குப் புரிந்தது. ஏனெனில் என் வயதையொத்த எல்லோருக்குமே எழுதப் படிக்க கற்கவேண்டும் என்ற பசி இருப்பதை அறிந்துகொண்டேன். இந்தப் பள்ளி இல்லாவிட்டால் இப்பகுதியில் நிறைய பேர் எழுத்தறிவற்றவர்கள் ஆகிவிடுவார்கள். பள்ளி எனக்கு சொல்லிக் கொடுப்பதை, நான் இவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறேன். அவ்வளவுதான்!” என்று தன்னடக்கத்தோடு பேசுகிறார் பாபர் அலி.

முர்ஸிதாபாத்துக்கு ஒரு பாபர் அலி இருக்கிறார். நம் ஊர்களில் யார் யார்?

(நன்றி : புதிய தலைமுறை)

4 கருத்துகள்:

  1. //முர்ஸிதாபாத்துக்கு ஒரு பாபர் அலி இருக்கிறார். நம் ஊர்களில் யார் யார்?//

    விடை சொல்ல முடியாத கடினமான கேள்வி..தன்னலம் பாராமல் சேவை செய்வதற்கு ஒரு மனம் வேண்டும்..அது ஒரு சிலரிடம்தான் உண்டு

    அன்புடன்,
    சுவாசிகா
    http://ksaw.me

    பதிலளிநீக்கு
  2. இதுபற்றி தகவல்கள் ஏற்கனவே கண்டேன். சிறப்பானதொரு பதிவு யுவகிருஷ்ணா.!

    பதிலளிநீக்கு
  3. மிக நல்லா பதிவு . நன்றி

    பதிலளிநீக்கு
  4. who writtern this katturai on pudhiya thalayamurai? you va?
    now a days u updating only pudhiya thalai murai katturai kal.. that and all written by u or wat?

    பதிலளிநீக்கு