1 டிசம்பர், 2009

மனமுண்டு, மாற்றமுண்டு!


“அதிகாரிகளை குறைசொல்ல ஒண்ணுமே இல்லைங்க. ரொம்ப நல்லா பண்ணுறாங்க!”

“நாங்களே அவங்களை தேடி கண்டுபிடிச்சி போகுறது ரொம்ப கஷ்டம் சார். அவங்களே எங்களை தேடி வந்து சேவை பன்ணுறது என்பது எங்களுக்கு வரப்பிரசாதம்!”

“என்ன கேட்டாலும் முதல்லே பதில் வந்துடுதுங்க. இதுவே பெரிய விஷயம். அப்புறம் அவங்க பணிகளும் ரொம்ப நல்லாருக்கு!”

“ஊர்லே ஒவ்வொரு வீட்டிலேயும் அந்த அதிகாரி பேரைத்தாங்க சொல்லுறாங்க! இதுவரைக்கும் எந்த ஆபிஸரும் இவரை மாதிரி இருந்ததில்லை!”

நம் தமிழக அரசு அதிகாரிகள் சிலருக்கு கிராமப்புற விவசாய மக்கள் வழங்கும் பாராட்டுப் பத்திரம்தான் இது. சந்தேகமே வேண்டாம்.

பொதுவாக அரசு ஊழியர்கள் என்றாலே பொதுமக்களுக்கு வேப்பங்காயாய் கசப்பதைதான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, சலுகைகள், போனஸ் என்றதுமே மக்கள் வெறுப்படைகிறார்கள் என்பது அரசு ஊழியர்களுக்கே தெரிந்த ஒரு விஷயம்தான். அரசுத்துறைகள் என்றாலே மக்கள் மீது அக்கறையற்றவை. ஊழல் கறை படிந்தவை என்ற எண்ணம் மக்களுக்கு இருக்கிறது. இவற்றையெல்லாம் மாற்ற வேண்டாமா?

மாற்றுவதற்கு சில அரசு அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டார்கள்.

2003ல் மக்களை நோக்கிய நீர்மேலாண்மை தொடர்பான அதிகாரிகளின் பயணம் கிராமங்களுக்கு துவங்கியது. அரசுத்துறையை செம்மையாக, மக்களுக்கு உண்மையாகவே பயன் தரக்கூடியதானதாக மாற்ற அவர்கள் முற்பட்டார்கள். நகரங்களில் அமர்ந்துக்கொண்டு, திட்டங்களை மட்டுமே தீட்டி, கிராம மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்ற முடிவுக்கு வந்தார்கள். ஒவ்வொருவரும் களப்பணி மேற்கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

ஆகஸ்ட் 2004ல் சென்னைக்கு அருகில் மறைமலை நகரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் சில உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டார்கள் :

* ஏற்கனவே நடைமுறையிலிருக்கும் திட்டங்களுக்கு மறுமலர்ச்சி தருவோம். முன்பைவிட அதிமுனைப்பாக அவற்றை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டுவோம்.

* மக்களுக்கு உண்மையிலேயே உபயோகப்படக்கூடிய விஷயங்களை உறுதிசெய்வோம். தரமான சேவையை அளிப்போம்.

* பாரம்பரியமாக பயன்பட்டு வரும் விஷயங்களை பயன்படுத்திக் கொள்வோம்.

* திட்டமிட்டதை விட பத்து சதவிகிதமாவது கூடுதலானவற்றை, அதே நிதி ஒதுக்கீட்டில் சாதிப்போம்.

இந்த உறுதிமொழிகளின் அடிப்படையில் பணிகள் தொடங்கின. அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் ஊக்கம் தரும் வகையிலான ‘கூடம்’ பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டன

கூடம் என்ற சொல் தமிழர்களுக்கு நன்கு பரிச்சயமானதுதான். குடும்பம் ஒன்றுகூடி அளவளாவும் இடமாக, ஒவ்வொரு இல்லத்திலும் ஒரு காலத்தில் கூடம் இருந்ததுண்டு. கல்யாணம் நிச்சயம் செய்வது, பையனை வெளியூர் வேலைக்கு அனுப்புவது என்று குடும்பத்தின் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் இடமாக கூடம் தமிழர் வாழ்வில் முக்கியத்துவம் பெறுகிறது. குடும்பத்தில் உண்மையான ஜனநாயகம் நிலவும் இடம் கூடம்.

பொதுவாக ஒரு கிராமத்தில் திருவிழா நடக்கிறதென்றால், அக்கிராமத்தின் ஒவ்வொரு வீடும் வெள்ளை அடிக்கப்படும். தெருக்கள் சுத்தமாக்கப்படும். ஆனால் இந்த மாதிரியான விழாக்காலங்களில் கூட அரசுக்கு சொந்தமான மேல்நிலை தண்ணீர்த் தொட்டி, பஞ்சாயத்து அலுவலகம் போன்றவை எப்போதுமே பாழடைந்த நிலையில் இருக்கும். அரசுச் சொத்து நமதல்ல என்ற மனோபாவம் மக்களிடையே ஏற்பட்டுவிட்டதே இதற்கு காரணம். தெருவில் ஒரு குடிநீர்க்குழாயில் நீர் வீணாகிக் கொண்டிருந்தால் கண்டுகொள்ளாமல் செல்லும் எண்ணம், கிராமவாசிக்கு மட்டுமல்ல.. நகரவாசிக்கும் உண்டு. வீட்டில் இருக்கும் குழாயில் நீர் வீணாகினால் நாம் சும்மா இருப்போமா?

‘அரசுக்கு சொந்தமான ஒவ்வொன்றும் மக்கள் சொத்து’ என்ற விழிப்புணர்வை மக்களிடம் முதலில் ஏற்படுத்துவதே அதிகாரிகளுக்கு சவாலானதாக இருந்தது. அரசு அதிகாரிகள் கிராமங்களுக்கு வருவதையே மக்கள் சட்டை செய்யாத நிலையும் ஆரம்பத்தில் இருந்தது. ‘ஜீப்பைப் போட்டுக்கிட்டு வருவாங்க. எதையாவது செய்யுவாங்க. நமக்கு என்ன பிரயோசனம்?’ என்று நினைத்தார்கள்.

“வலிந்துப்போய் பழகி, பேசி அவர்களுக்குள் ஒருவனாக மாற எனக்கு ஆறுமாதம் பிடித்தது!” என்கிறார் உதவிப் பொறியாளராக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் (TWAD Board) பணிபுரியும் எஸ்.சேட்டு.

இவரைப் போலவே ஒவ்வொரு பொறியாளரும், அவர் பொறுப்பேற்றுக் கொண்ட கிராமத்து மக்களோடு நெருங்கிப் பழகி அவர்களில் ஒருவராக மாறினார்கள். பஞ்சாயத்து அலுவலகத்தில் மக்களுக்கு சினிமாப் படம் போட்டு காட்டினார்கள். ஊர்த் திருவிழாக்களில் பங்கு கொண்டார்கள். உங்களுக்காக வேலை செய்கிறேன், நானும் உங்களில் ஒருவன் என்பதை அழுத்தமாக அவர்களது மனங்களில் பதிய வைத்தார்கள்.

அவ்வப்போது மக்கள் பங்கேற்கும் கூட்டங்களை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதுபோன்ற கூட்டங்களில் இவர்கள் அதிகமாக பேசாமல், மக்களை பேசவைத்தார்கள். அந்த கிராமத்துப் பஞ்சாயத்து தலைவரை, வார்டு உறுப்பினர்களை, குடிநீர்த்தொட்டி பணியாளரை, நர்ஸை, ஊர்ப் பிரமுகர்களை பேசவைத்தார்கள். இவர்கள் செயல்படுத்தும் திட்டங்களில் அவர்களது ஈடுபாட்டையும் வலிய வாங்கிக் கொண்டார்கள்.

மக்களோடு மக்களாகி விட்டதால் நம் அரசு ஊழியர்களிடம் டீக்கடைகளிலும், டூரிங் கொட்டாய்களில் மனசுவிட்டு பேசத் தொடங்கினார்கள் கிராமவாசிகள். தங்களுடைய தேவை என்னவென்று காய்கறிக் கடைகளுக்கு வரும் பெண்கள் கூட அரசு அதிகாரியிடம் உரிமையாக கேட்டார்கள். மக்களின் தேவைகளை உணர்ந்து அதற்கேற்ப திட்டங்களை (Tailor made schemes) தீட்ட, இதனால் அதிகாரிகளுக்கு சுலபமாக இருந்தது.

உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அரசு ஒரு திட்டத்தை தீட்டிவிட்டால், அது தேவையா தேவையில்லையா என்பதையெல்லாம் பார்க்காமல் கடமைக்கு முடித்துக் கொடுப்பதே பொதுவாக அரசு ஊழியர்களின் பாணியாக இருக்கிறது. மாறாக மக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையானதை மட்டுமே செய்துக் கொடுக்கும் இந்தப் புதியப் பாணியால் பணமும், நேரமும் நிறைய மிச்சம்.

இந்த அணுகுமுறையின் வெற்றிக்கு, ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல மதுரை மாவட்டம் தும்பைப்பட்டி பஞ்சாயத்து ஒரு சான்று. மாரியப்பன் என்ற குடிநீர்வாரியப் பொறியாளர் இங்கு ஏற்படுத்தித் தந்த குடிநீர்க் கட்டமைப்புகளை, மக்களே இன்று செம்மையாகப் பராமரிக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கிறது. தெருக்குழாயில் ஏதாவது பழுது ஏற்பட்டால் நமக்கென்ன என்று கிராமவாசிகள் போய்விடுவதில்லை. அரசு அதிகாரிகளை எதிர்ப்பார்க்காமல் தங்கள் செலவிலேயே இப்போது அப்பழுதை சரிபார்க்கிறார்கள். ஏனெனில் அரசுச் சொத்து, நம் சொத்து என்ற விழிப்புணர்வை அவர்களிடையே மாரியப்பன் ஆழமாக விதைத்திருக்கிறார்.

“மாரியப்பன் சாருக்கு கொழந்தை பொறந்தப்போ, வந்து கிராமத்துக்கே இனிப்பு கொடுத்தாருங்க” என்கிறார் தும்பைப்பட்டி வாசியான மஜீத். ஒரு அரசு அதிகாரி மக்களிடையே எவ்வளவு நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணம் இதுவல்லவா?

இத்தனைக்கும் ஒரு ஆறுமாதக் காலம்தான் அக்கிராமத்தில் மாரியப்பன் பணிபுரிய வேண்டியிருந்தது. அப்போது அவர் செய்தப் பணிகள் ஐந்தாண்டுகள் கழிந்தும் இன்னமும் கிராமமக்களுக்கு மறக்க முடியாததாக இருக்கிறது. கொசுக்களால் அக்கிராம மக்கள் அவதியுறுவதைக் கண்டவர், தன் சொந்த செலவிலேயே கழிப்பறைகளையும், சாக்கடைகளும் சுத்தப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாரியப்பன் மட்டுமல்ல. மறைமலைநகர் உறுதிமொழியை எடுத்துக்கொண்ட ஏராளமான பொறியாளர்கள் அவரவர் பொறுப்பேற்றுக் கொண்ட கிராமங்களிலும் இதுபோலவே சாதனைகளை புரிந்தார்கள்.

குடிநீர் வாரிய பொறியாளர்கள் மட்டுமல்ல, வேளாண்மைத்துறை பொறியாளர்களும் கிராமங்களுக்கு சென்று விவசாயிகளை அணுகி அபிவிருத்தித் திட்டங்களை தீட்டினார்கள். சேலம் மாவட்டம் எல்லம்பாளையம்புதூரில் நடந்த விஷயங்களை இதற்கு உதாரணமாகப் பார்க்கலாம்.

வேளாண்மை அதிகாரிகளின் சீரிய பணிகளுக்குப் பிறகு, இங்கே ஆறுவருடங்களாக விவசாயத்தை மறந்துவிட்டவர்கள் கூட மீண்டும் விவசாயம் செய்ய முன்வந்திருக்கிறார்கள். மண்சோதனையில் தொடங்கி, என்ன உரம் இடுவது, எந்தக் காலத்தில் இடுவது, விளைப்பொருட்களை யாரிடம் விற்பது என்பது வரை ஆலோசனைகளை வழங்கி மீண்டும் விவசாய மறுமலர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

சில கிராமங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த திட்டங்கள் அந்தந்த துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலிலேயே நடந்திருக்கிறது. பெரியளவில் அரசால் விளம்பரப்படுத்தப்பட்டு நடத்தப்பட்டவை அல்ல. அதிகாரிகளின் முனைப்பும், செயல்பாடும் தீவிரமானதாக இருக்கும்பட்சத்தில் மாநிலம் முழுக்க அல்ல, நாடு முழுக்கவே எல்லா அரசுத் துறைகளும் சிறப்பானதாக பணியாற்ற முடியும். இக்கட்டுரையின் ஆரம்பத்தில் சில அதிகாரிகளுக்கு சூட்டப்பட்ட புகழாரத்தை, எல்லா அதிகாரிகளும் பெறமுடியும்.

(நன்றி : புதிய தலைமுறை)

5 கருத்துகள்:

  1. அருமையான கட்டுரைப் பகிர்வு லக்கி.

    பதிலளிநீக்கு
  2. நல்ல இடுகை..

    என் மனைவியின் சொந்த ஊர் ராமநாதபுரம் அருகே உள்ள உத்திரகோசமங்கை..

    அந்த ஊரில் பால்வாடி ஊழியர்கள் மற்றும் கிராம சுகாதார நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களின் சேவையை அந்த ஊரார் பாராட்டியது இந்த கணத்தில் ஞாபகம் வருகிறது..

    அவர்கள் அந்த கிராம மக்களிடம் வேலை பிணைப்பாக மட்டும் இல்லாமல் ஒரு சொந்த/நட்பு உரிமையோடு பழகுவதை சில தடவை நானே பார்த்திருக்கிறேன்..

    அவர்களும் பாராட்டுக்குறியவர்களே..

    அன்புடன்,
    சுவாசிகா
    http://ksaw.me

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் கூறியது போல் மிகச் சில அதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த எண்ணிக்கை கூட வேண்டும். அப்போது தான் நம் நாடு இன்னும் சிறப்பானதாகக் கருதப்படும். அதுவே நம் கனவும் கூட.

    பதிலளிநீக்கு