3 டிசம்பர், 2009
பார்வை மட்டும் போதுமா?
சுமார் முன்னூறு மாணவ, மாணவிகள் இறுக்கமாக அந்த அறையில் உட்கார்ந்திருக்கிறார்கள். அனைவருமே இன்ஜினியரிங் முதலாமாண்டுக்கு சமீபத்தில் சேர்ந்தவர்கள். சில மாதங்களுக்கு முன்புதான் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் என்பதால் இதுபோன்ற கூட்டத்தில் எப்படி நடந்துகொள்வது, எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்ற குழப்பம் அவர்களது முகத்தில் பளிச்சிடுகிறது. முயல்களைப் போல மருண்டவிழிகளோடு, பக்கத்தில் இருப்பவர்களிடம் மெதுவாக கிசுகிசுத்துக் கொள்கிறார்கள்.
அவர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தவர் வருகிறார். அனைவரும் அவசர அவசரமாக, சலசலத்துக் கொண்டே எழுகிறார்கள். “வணக்கம் சார்ர்ர்ர்ர்ர்ர்ர்....”, “குட்மார்னிங் சார்ர்ர்ர்...” – அப்பட்டமான பள்ளிவாசனை.
வந்தவரோ, “என்னை சார்னு கூப்பிடக்கூடாது. உங்களை விட ரெண்டு வயசு சின்னப்பய நானு. இளங்கோன்னே கூப்பிடுங்க” என்று சின்னதாக ஜோக்கடித்து, சூழலை ரிலாக்ஸ் ஆக்குகிறார். அடுத்தடுத்து இளங்கோவன் பேசப்பேச மகுடிக்கு கட்டுப்படும் நாகங்களாகிறார்கள் மாணவர்கள். சில நேரங்களில் கூரையதிர கைத்தட்டுகிறார்கள். சில நேரங்களில் ‘ஹோ’வென்று ஆனந்தக் கூச்சல். திடீரென உருகுகிறார்கள். ஆவேசத்தோடு பேசுகிறார்கள். பணிவாக தங்களது சந்தேகங்களுக்கு விடைகளை கேட்டுப் பெறுகிறார்கள். நவரசங்களையும் இப்போது காணமுடிகிறது அவர்களது முகங்களில்.
அந்த இடம், பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம். சாஸ்தா இன்ஜினியரிங் கல்லூரி. கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்ததின் பேரில் முதலாமாண்டு மாணவர்களோடு பேச வந்திருப்பவர் ஏஸ் சாஃப்ட் ஸ்கில்ஸ். முதலாமாண்டு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பெருக இதுபோன்ற நெம்புகோல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது இப்போது கல்லூரிகளில் ஃபேஷன். சுமார் ஒன்றரை மணி நேர அமர்விற்குப் பிறகு ‘காம்ப்ளான் பாய்/கேர்ள்’ போல துள்ளிக்கொண்டு வகுப்பறைக்கு ஓடுகிறார்கள் மாணவ மணிகள்.
‘ப்ரின்ஸ் ஜீவல்லரி, பனகல் பார்க், சென்னை’ என்ற வசீகரமான குரலை டிவியிலோ, ரேடியோவிலோ விளம்பரங்களில் கட்டாயம் நீங்கள் கேட்டிருப்பீர்கள். அந்த குரலுக்கு சொந்தக்காரர்தான் இந்த இளங்கோ. இதுபோல நூற்றுக்கணக்கான விளம்பரங்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார். ‘அடையார் ஆனந்தபவன்’ என்ற கம்பீரக்குரலும் இவருடையதுதான். ‘ரேமண்ட்ஸ் – தி கம்ப்ளீட் மேன்!’ – அமெரிக்க குரல் அல்ல. நம் இந்திய இளங்கோவுடையது.
இவர் ஒரு சகலகலா வல்லவர். விளம்பரங்களுக்கு வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட். தொழில்முறை பாடகர். சாஸ்திரிய சங்கீதத்தில் பாண்டித்யம் உண்டு. தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என ஆயிரம் பாடல்களுக்கு எந்த நோட்ஸும் இல்லாமல் பாடுகிறார். சங்கீதம் கற்றிருக்கிறார். கீபோர்ட் வாசிக்கிறார். மிமிக்ரி செய்கிறார். ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் கற்றுத் தருகிறார். கார்ப்பரேட் நிறுவன பணியாளர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் சுயமுன்னேற்ற உரைகள் நிகழ்த்துகிறார். வளர்ந்து வரும் ஒரு மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர். இருநூறு பயிற்சியாளர்கள் இவரிடம் பணிபுரிகிறார்கள். ஒரு வருடத்துக்கு குறைந்தது பதினைந்தாயிரம் மாணவர்களை சந்தித்து, அவர்களின் முன்னேற்றத்துக்கு கிரியா ஊக்கியாக செயல்படுகிறார்.
சாதாரண குடும்பத்தில் பிறந்த இளங்கோவுக்கு கல்வி ஒன்றும் சுலபமானதாக இல்லை. கடும் சிரமங்களுக்கு இடையில் பத்தாம் வகுப்பில் ஐநூறுக்கு நானூற்றி எண்பத்தி இரண்டு மதிப்பெண்கள் வாங்கினார். சென்னை மாவட்டத்திலேயே அப்போது முதலிடம். +2வில் அக்கவுண்டன்ஸியில் செண்டம். பின்னர் லயோலாவில் ஆங்கிலம் இளங்கலை. பல்கலைக்கழகத்தில் தங்க மெடல் வாங்கினார். முதுகலையில் ஒலியியல் (Phoenetics) குறித்துப் படித்தார். தமிழ்நாடளவில் தங்க மெடல். 1994ல் கல்லூரியை விட்டு வெளிவந்தபோது சிறந்த மாணவராக லயோலா கல்லூரி நிர்வாகம் விருதளித்துப் பாராட்டியது. ‘ஆங்கிலத்தை எப்படி கற்றுத் தருவது?’ என்ற அரிதான தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு எம்.ஃபில். முடித்தார்.
பின்னர் சி.பி.எஸ்.இ. பள்ளி ஒன்றில் ஆசிரியப்பணி. வாரயிறுதிகளில் மற்ற ஆசிரியர்களுக்கு கற்றுத்தருவது குறித்து பட்டறைகள் நிகழ்த்துவார். சில கால ஆசிரியப் பணிக்குப் பிறகு குருநானக் கல்லூரியில் விரிவுரையாளர். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் பணி... இப்போது, ஏஸ் சாஃப்ட் ஸ்கில்ஸ் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், நிறுவன ஊழியர்களுக்கும் பயிற்சியளிக்கும் பணி...
இவ்வளவு அனுபவங்களும் முப்பத்தைந்து வயதுக்குள்ளாகவே இளங்கோவுக்கு சாத்தியமாகியிருக்கிறது. ‘நல்ல கல்வி கற்ற யார் வேண்டுமானாலும் இதையெல்லாம் செய்யமுடியுமே?’ என்ற கேள்வியை நீங்கள் கேட்க வருவது புரிகிறது. கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்ல மறந்துவிட்டோமே! இளங்கோவுக்கு பிறவியிலேயே பார்வை இல்லை.
“அதிர்ஷ்டவசமாக எனக்கு பிறவியிலேயே பார்வை இல்லை என்று சொல்லுங்கள்!” என்று திருத்துகிறார் இளங்கோ. பத்தாவது வகுப்பு வரை மட்டுமே பார்வையற்றவர்களுக்கான சிறப்புப் பள்ளியில் படித்தவர், மற்ற அனைத்து வெற்றிகளையும், நார்மலானவர்களுடனேயே போட்டியிட்டு வென்றிருக்கிறார். இப்போது யோசித்துப் பாருங்கள். பார்வை சவால் கொண்ட ஒருவர் +2வில் பார்வை அத்தியாவசியப்படும் பாடமான அக்கவுண்டன்ஸியில் நூற்றுக்கு நூறு வாங்குவது சாதனைதானே? அதுவும் பார்வையுள்ள மாணவர்களோடு படித்து...
பார்வை சவால் கொண்ட ஒருவர் வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட்டாக பணிபுரிவது, அனேகமாக உலகிலேயே இளங்கோ ஒருவராக மட்டுமே இருக்கமுடியும். இந்த நிமிடம் வரை வேறு யாரும் இந்தப் போட்டியில் இல்லை. இவ்வகையில் இளங்கோவின் பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்துக்கும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
“English is the secret of my Energy” என்று கபில்தேவ் பாணியில் கமெண்ட் அடிக்கிறார் இளங்கோ. அம்மொழியின் மீது கொண்ட காதலே அத்துறையில் இவரை சாதனையாளராக உருவாக்கியிருக்கிறது. பிரிட்டிஷ் பாணி, அமெரிக்க பாணி என்று ஆங்கில சரஸ்வதி அநாயசமாக இவரது நாவில் விளையாடுகிறாள். ஆங்கிலத்தில் பெரும்புலமை பெற்றவர் என்றாலும் தமிழ் மீது அசாத்தியப் பற்று கொண்டவராக இருக்கிறார். முதல்வர் கலைஞரின் மேடைப்பேச்சுக்கள் இவருக்கு மனப்பாடம். நடிகர் திலகம் சிவாஜியின் படங்களை, அவரது தமிழ் உச்சரிப்புக்காகவே திரும்ப திரும்ப பார்க்கிறார்/கேட்கிறார். இன்னொரு ஆச்சரியமான விஷயம். இளங்கோ தமிழ் மீடியத்தில் தனது பள்ளிக்கல்வியை கற்றவர். தந்தை பெரியாரின் சமூகக் கருத்துக்கள் மீது பெரும் ஆர்வம் கொண்டவர்.
உன்னிப்பான அவதானிப்புதான் இளங்கோவின் மிகப்பெரும் பலம். பொதுவாக பார்வையற்றவர்களின் பலவீனமாக உடல்மொழியை சொல்லலாம். தலையை மறுப்பாக ஆட்டுவது, ஆமோதிப்பது போன்ற சின்னஞ்சிறு விஷயங்களை இயல்பாக செய்கிறார். இவரோடு முதன்முறையாக பேசுபவர்களுக்கு இவர் பார்வை சவால் கொண்டவர் என்பது தெரியவே தெரியாது.
“பார்வையற்றவர்களுக்கு செவித்திறன் அதிகமாக இருக்கும் என்றொரு கருத்து நிலவுகிறது. அப்படியெல்லாம் இல்லை. கட்டாயத்தின் பேரிலேயே இத்திறன் கூடுதலாக வாய்த்தவர்களாக அவர்கள் உருவெடுக்கிறார்கள். ஆஸ்கர் விருதுபெற்ற ரசூல் பூக்குட்டிக்கு சின்ன சின்ன ஒலிகளின் வேறுபாடுகளை அறியும் திறன் உண்டு. ஒரு குண்டூசி தரையில் விழும் சத்தத்தையும், சேஃப்டி ஃபின் தரையில் விழும் சத்தத்தையும் நீங்கள் ஒன்றாகவே உணர்வீர்கள். ரசூல் பூக்குட்டிக்கு இரண்டு சத்தங்களுக்கும் வேறுபாடு தெரியும்! தொழில்நிமித்தமாக அவர் இத்திறனை வளர்த்துக் கொண்டார். எனக்கு பார்வை இல்லை என்ற நிலை இருப்பதால் என் செவியை என் தொழிலுக்கான மூலதனக் கருவியாக்கிக் கொண்டேன். எனக்கு ரோல்மாடல் நான்தான். நான் இன்னொருவரை விட சிறந்தவன். இன்னொருவரை அறிவால் வென்றேன், உடல்பலத்தால் வென்றேன் என்பது வெற்றியல்ல, என்னைப்போல இன்னொருவர் உலகிலேயே இல்லை (Unique) என்பதுதான் நிஜமான வெற்றி!” என்று தன் வெற்றி ரகசியத்தை தன்னடக்கமாக சொல்கிறார்.
இளைஞர்களுக்கு இவர் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான். அது ‘தன்னம்பிக்கை’.
“தன்னம்பிக்கை என்பது அவரவரிடமிருந்தே இயல்பாக எழவேண்டும். என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை. என்னால் மட்டும்தான் முடியும் என்பது அதீத தன்னம்பிக்கை. அதீத தன்னம்பிக்கை ஆபத்துக்கு உதவாது!” – நம்மிடம் பேசிக்கொண்டிருந்த இளங்கோ, சட்டென்று திரும்பி மாணவர்களுக்கு பஞ்ச் டயலாக்கோடு வகுப்பினை தொடர, நாமும் கொஞ்சம் தன்னம்பிக்கை குளூகோஸ் ஏற்றிக்கொண்டு தெம்புடன் விடைபெற்றோம்.
சவால் விடும் உடல்மொழி!
பார்வை சவால் கொண்டவராக இருந்தாலும், இளங்கோ கம்ப்யூட்டரையும், மொபைல் போனையும் கையாளும் வேகம் அதிரடியானது. அவரது அலுவலகப் பணிகளை யாருடைய உதவியையும் எதிர்பாராமல் அவரே முடித்துவிடுகிறார்.
“என் அளவுக்கு வேகமா யாராவது எஸ்.எம்.எஸ். டைப் பண்ண முடியுமா?” என்று சவால் விடுகிறார். கம்ப்யூட்டர் கீபோர்டுகளிலும் இவரது விரல் சுனாமியாய் சுழல்கிறது. பார்க்காமலேயே கம்ப்யூட்டரையும், மொபைல் போனையும் கையாள சிறப்பு மென்பொருள்களை (Special Softwares) பயன்படுத்துகிறார். இந்த மென்பொருள்கள் கொஞ்சம் விலை அதிகமானது என்றாலும், துல்லியமாக உதவுகிறது. எழுத்துக்களை ஒலிகளாக்கி இளங்கோவுக்கு உதவுகிறது.
சங்கடம் : “என்னால் சங்கீதத்தில் தேறவே முடியாது என்று என்னுடைய சங்கீத ஆசிரியர் ஒருவர் சவால் விட்ட தருணம்”
சவால் : சமூகப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறவர்களுக்கு அவரவர் குடும்ப வாழ்க்கை சவாலானதாக இருக்கக்கூடும். சமூகத்தில் நல்லபெயர் எடுக்க முடிபவர்களால், குடும்பத்திலும் நல்ல பெயர் எடுக்கமுடியும் என்று உறுதியாக சொல்லமுடியாது. (திருமணத்துக்கு சம்மதிக்க மறுக்கும் இளங்கோ, தன் தாயின் வற்புறுத்தலை பூடகமாக சொல்கிறார்)
மகிழ்ச்சி : ஒரு மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பதவியேற்ற நொடி. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல வருமானத்துக்கும் ஒரு தொழில், சமூகத்துக்கும் கண்ணுக்கு தெரியாத சேவை.
(நன்றி : புதிய தலைமுறை)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
என்ன சொல்வதென்றே தெரியவில்லை..
பதிலளிநீக்குஇளங்கோவிற்கும், அவரை எடுத்துகாட்டிய உங்களுக்கும் ஹாட்ஸ் ஆஃப்!!
அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me
பிரின்ஸ் ஜுவல்லரி (ரேமண்டும்) குரல் மே மாதம் படத்தில் ஃபிகருக்கு அப்பனாக வரும் வில்லன் என்றில்லை நினைத்திருந்தேன்... (கில்லி, தூள் உட்பட தற்போது வெளிவந்திருக்கும் ஆதவன் ப்ரோமோஷனல் ட்ரெய்லர்களுக்கு பிண்ணனி குரல் கொடுத்தவர்)இதில் அடையார் ஆனந்த பவன் வேறு குரலாச்சே! ஒரே குழப்பம். தெதசெவி!
பதிலளிநீக்குவெங்கிராஜா.
http://twitter.com/venkiraja
வெங்கி, வாய்ஸ் ஓவர் கார்டில் (அட்ரஸ் போடும்போது) வரும் குரல் இளங்கோவுடையது.
பதிலளிநீக்குஇந்த சகலகலா வல்லவரின் ஒரு closeup படத்தை போட்டிருந்தால் பிரிண்ட் எடுத்து frame பண்ணி வச்சிருப்பேன்.
பதிலளிநீக்குபுதிய தலைமுறையில் சிறப்பான கட்டுரைகள் - லக்கிக்கும் நன்றி
பதிலளிநீக்குசில நாட்களுக்கு முன் தூர்தர்ஷனில் இவருடய நேர்முகம் கண்டேன். இக்கட்டுரை அவரைப் பற்றிய மேலதிக தகவலை தருகிறது. நன்றி
பதிலளிநீக்குமிக அருமையான கட்டுரை. மிக அருமையான மனிதரைப் பற்றி கூறியமைக்கு மிக்க நன்றி. நம்பிக்கைக்கு அர்த்தமாக இவரைச் சொல்லலாம்.
பதிலளிநீக்குExcellent piece - one of the few times I think that there's hope of Tamil content on the web.
பதிலளிநீக்குnice article.
பதிலளிநீக்கு// prince jewellery voice over//
assuming it was pc ramakrishna.
xlent Yuva.
பதிலளிநீக்குThanx for sharing.
\\நம்மிடம் பேசிக்கொண்டிருந்த இளங்கோ, சட்டென்று திரும்பி மாணவர்களுக்கு பஞ்ச் டயலாக்கோடு வகுப்பினை தொடர, நாமும் கொஞ்சம் தன்னம்பிக்கை குளூகோஸ் ஏற்றிக்கொண்டு தெம்புடன் விடைபெற்றோம்.// உங்கள் பதிவைப் படித்ததுமே எனக்கும் தன்னம்பிக்கை குளுகோஸ் உடம்பில் ஏறின மாதிரி இருந்தது. அற்புதமான மனிதர்களைப் பற்றிய பதிவுகளை அற்புதமான மொழியில் போடும் யுவகிருஷ்ணா! ஹேட்ஸ் ஆஃப் யூ!
பதிலளிநீக்குலக்கிலுக் சூப்பர்!
பதிலளிநீக்குஓவ்வோரு வாரமும் புதிய புதிய தன்னம்பிக்கை தரும் மனிதர்களை அறிமுக படுத்துவதற்கு நன்றிகள் பல!
மயிலாடுதுறை சிவா...
ஆச்சரியமா இருக்கு லக்கி.
பதிலளிநீக்குi have read your article in "pudhiya thalaimurai" .. was inspiring.. hats off to ilango...
பதிலளிநீக்குநான் இளங்கோவை ஒரு முறை சந்தித்திருக்கிறேன். கிட்டத்தட்ட 2 மணிநேரம் உரையாடினேன்.
பதிலளிநீக்குஅவர் பார்வையற்றவர் என்பதை நீங்கள் 2 நிமிடங்களில் மறந்துவிடுவீர்கள்.
அபாரமான மனிதர்.
அவருடன் இணைந்து ஒரு ஆடியோ புராஜக்ட் செய்வதாக இருந்தது. ஆனால் நடக்கவில்லை. இன்னும் ஒரு சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கிறேன்.
இப்படி ஒரு அரிய மனிதரை பற்றி அறியச் செய்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குநல்ல கட்டுரை. ரசித்துப்படித்தேன்.
பதிலளிநீக்குபிரின்ஸ் ஜுவல்லரி குரல் பி.சி. ராமகிருஷ்ணா பேசியது என்று நினைத்திருந்தேன். நன்றி!
Raja Paarvai
பதிலளிநீக்குநல்ல கட்டுரையை பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்கு“English is the secret of my Energy” என்று கபில்தேவ் பாணியில் //
எங்கயோ உதைக்கிதே!!! சச்சினா இல்ல கபிலா???
கண் பார்வை நல்லா இருக்கும் நாம் என்ன செய்திருக்கிறோம் என்று எண்ணும்போது வெட்கமாக இருக்கிறது. நல்ல கட்டுரை.
பதிலளிநீக்கு