2 டிசம்பர், 2009
அய்யனார் கம்மா!
சிறுகதைகளுக்கான இடம் வெகுஜனப் பத்திரிகைகளில் வெகுவாக குறைந்துவரும் காலக்கட்டத்தில், இணையத்தில் முன்னணி எழுத்தாளராக விளங்கும் நர்சிம்மின் முதல் புத்தகமே சிறுகதைத் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. தமிழ் பதிப்பகங்களின் சமீபக்காலப் போக்கு புனைவுகளை குறைத்து புனைவல்லாத எழுத்துக்களுக்கு (Non-fiction) முக்கியத்துவம் தந்து வரும் நிலையில், தைரியமாக புதுமுக எழுத்தாளரின் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கும் அகநாழிகை பதிப்பகத்தின் பொன்.வாசுதேவன் நம்பிக்கையளிக்கிறார். மதிராஜின் அழகான முகப்போவியத்தோடு எழுபத்தி இரண்டு பக்கங்களில் தரமாக உருவாக்கப்பட்டிருக்கிறது தொகுப்பு.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். புத்தகத்தின் முதல் கதையே முத்தானது. அய்யனார் கம்மா. நூலுக்கு சூட்டப்பட்ட பெயரும் இதுதான்.
“யார் உள்ள”
“நாந்தாய்யா”
”மெட்ராஸ் போகணும், வேமா வாப்பா”
“நான் மெட்ராஸுக்கு வரலைய்யா”
“யோவ் நான் போகணும்ய்யா”
“அப்ப பஸ்ஸுக்குப் போய்யா இங்க எதுக்கு வந்த?”
பஸ் ஸ்டாண்ட் கழிப்பறையில் நடக்கும் கூத்து இது. எனக்கு என்னவோ எழுத்தாளரின் சொந்த அனுபவமோ என்று தோன்றுகிறது. முதல்முறையாக அவர் மெட்ராஸுக்கு வந்தபோது நடந்த சம்பவமாக இருக்கலாம். அல்லது யாருக்கோ நடந்ததை நர்சிம் அருகில் இருந்தும் பார்த்திருக்கலாம். அனுபவங்களின் வெளிப்பாடே தரமான இலக்கியமாக பரிணமிக்கும். இங்கே பரிணமித்திருக்கிறது.
மாட்டுக்கு லாடம் என்று ஒன்று இருப்பதே இன்றைய நகரத்து இளைஞனுக்கு தெரியுமா என்பது சந்தேகம். லாடம் அடிப்பது என்பது ராக்கெட் விடுவதைப் போல நுணுக்கமானது என்று ஆரம்பிக்கும் நர்சிம், அடுத்த பத்திகளில் சுவாரஸ்யமாக லாடம் அடிப்பதை வார்த்தைகளாலேயே படம் வரைந்து பாகம் குறிக்கிறார். ‘ஒரு சுத்து சின்ன லாடம்’ போன்ற சொல்லாடல்கள் வாசகனை சுளுவாக கதைக்களத்துக்கு அழைத்துச் செல்கிறது.
பதிமூன்று ராசியில்லாத எண் என்று யார் சொன்னது? இத்தொகுப்பில் மொத்தம் பதிமூன்று கதைகள். பெரும்பாலும் சம்பவங்களும், கதாபாத்திரங்களின் உரையாடல்களுமாக லேசான மொழியில் கனமான விஷயங்களை தொடருகிறது நர்சிம்மின் கதைகள். கடைசிக்கதையான ‘அன்பின்’ கதையா/கட்டுரையா என்று யூகிக்க முடியவில்லை.
இத்தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்தது ‘தந்தையுமானவன்’. வேலை நிமித்தமாக மொழி தெரியாத ஊரில் அவன் இருக்கிறான். அங்கிருந்த மருத்துவமனை ஒன்றில் அவனது மனைவிக்கு பிரசவம். பெண்குழந்தை. நீடித்த மகிழ்ச்சி சில நிமிடங்களில் அடங்குகிறது. குழந்தை ஏதோ பிரச்சினையால் உலகுக்கு வந்த முதல்நாளிலேயே தன் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறாள். மனைவியிடம் சொல்ல முடியாத நிலை. பொட்டலமாய் கட்டி கையில் கொடுக்கப்பட்ட மழலைச்செல்வம். இப்படிப் போகிறது கதை. தாய் செண்டிமெண்ட் கேட்டு வளர்ந்தவர்கள் தமிழர்கள். தந்தை செண்டிமெண்டையும் வாசிக்கட்டுமே!
விமர்சனம் என்றால் திருஷ்டிப்பொட்டு வைக்க வேண்டுமாமே? வைத்துவிட்டால் போயிற்று.
இந்தத் தொகுப்பில் குமுதம் ஒருபக்க கதையாக வரவேண்டிய இரண்டு, மூன்று கதைகள் நைசாக உள்ளே நுழைக்கப்பட்டு விட்டதாக தெரிகிறது. குறிப்பாக ‘தலைவர்கள்’ கதையை சொல்லலாம். கடைசி இரண்டு பத்தி மட்டுமே கதை. அதற்கான ஆயத்தம் மூன்று பக்கம். வாசகனுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பினை உண்டுசெய்து, சப்பென்று முடிப்பது குமுதம் பாணி. இக்கதையிலும் அப்பாணி கையாளப்பட்டிருக்கிறது. ஆனால், குமுதம் இதை ஒருபக்கக் கதைகளில் மட்டுமே செய்யும் என்பதும் கவனிக்கப்பட வேண்டியது.
அடுத்ததாக நர்சிம்மின் எழுத்தும், சம்பவ விஸ்தாரிப்புகளும் சுவாரஸ்யமளித்தாலும், கதைகளுக்கான வடிவங்கள் என்பது அரதப் பழசானது. எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் குமுதம்-விகடன்-தாய்-சாவி கிரைண்டர்களில் நூற்றுக்கணக்கான முறை அரைக்கப்பட்டது. வார்த்தைகளில் கவனம் காட்டும் நர்சிம், வடிவத்திலும் சிரத்தை எடுக்க வேண்டும். இல்லையேல் நர்சிம்முக்கான தனித்துவம் (Uniqueness) என்று எதுவுமிருக்காது. தனித்துவமிக்க தமிழ் எழுத்தாளர்களே இன்று காலம் கடந்தும் நினைவுகூறப்படுகிறார்கள்.
’வடிவம்’ என்ற விஷயம் இதை வாசிக்கும் சிலரை குழப்பலாம். ஓக்கே, ஒரு உதாரணக் கதையை சுட்டுகிறேன். இன்றைய வாசகன் ஃபாஸ்ட்புட் கலாச்சாரத்தில் வாழுகிறான். சமீபத்தில் மிகச்சரியாக இன்றைய வாசகனின் நாடிபிடித்து எழுதப்பட்ட சிறுகதை ஒன்றை ஆனந்த விகடனின் தீபாவளி இதழில் வாசித்தேன். ராஜூமுருகன் எழுதிய தீபாவலி. ஒரு சிறுகதையில் சினிமாவுக்குரிய அத்தனை இலக்கணங்களையும் கையாண்டிருக்கிறார். கட் ஷாட், ப்ளாஷ்பேக், ஏன் கேமிரா கோணங்கள் மாதிரியான இத்யாதிகள் கூட அச்சிறுகதைக்கு உண்டு. நடப்பில் இருக்கும் சிறுகதை எழுத்தாளர்களில் ராஜூமுருகனும் தலைசிறந்தவர் என்று சொல்லலாம். இதுபோன்ற வடிவரீதியிலான பரீட்சார்த்த முயற்சிகளே இன்றைய தேவை. நர்சிம் தன் எதிர்கால படைப்புகளில் இதுபோன்ற முயற்சிகளை கையாளுவார், பாலச்சந்தர் டச் என்பதைப்போல ‘நர்சிம் டச்’ என்று சொல்லக்கூடிய போக்கினை உருவாக்குவார் என்று நம்புகிறேன். நண்பனாக விரும்புகிறேன்.
வாழ்த்துகள் நர்சிம்!
நூல் : அய்யனார் கம்மா (சிறுகதைகள்)
ஆசிரியர் : நர்சிம்
பக்கங்கள் : 72
விலை : ரூ.40
வெளியீடு : அகநாழிகை,
33, மண்டபம் தெரு, மதுராந்தகம் - 603 306.
போன் : 9994541010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அட்டைப்படம் உதவி : ஆதிமூலகிருஷ்ணன்
பதிலளிநீக்குயுவகிருஷ்ணா,
பதிலளிநீக்கு‘அய்யனார் கம்மா‘ விமர்சனத்திற்கு நன்றி. நுட்பமான அவதானித்தலுக்கும் மிகவும் நன்றி. ஏன் இதைக் கூறுகிறேன் என்றால் தொகுப்பில் சேர்க்க வேண்டாம் என நான் கருதிய கதையில் ‘தலைவர்கள்‘ கதையும் ஒன்று. நர்சிம்மிடமும் இதைத் தெரிவித்தேன். மற்றபடி, தவழ்ந்துதானே எழுந்து நடக்க முடியும். நர்சிம்மிற்கு வளமான எதிர்காலம் எழுத்துலகில் இருக்கிறது என்று நம்புகிறேன்.
- பொன்.வாசுதேவன்
லக்கி எனக்கு ராஜு முருகனின் அந்த கதை பிடிக்கவில்லை அவர் இதை விட நலல் நகைச்சுவையாகவும், இண்ட்ரஸ்டிங்காகவும் எழுத தெரிந்தவர் என்பது என் எண்ணம்.
பதிலளிநீக்குலக்கி,
பதிலளிநீக்குமிக மகிழ்வாக உணர்கிறேன்.
நேர்மையான உடனடி விமர்சனத்திற்கும், மனம் திறந்து பாராட்டியதற்கும் மிக்க நன்றி லக்கி.
நன்றி அகநாழிகை. எனி இண்டியன்.காம் போன்ற தளங்கள் மூலமாக தங்கள் வெளியீடுகளை இணையத்தில் விற்கமுடியுமா என்று முயற்சியுங்கள்.
பதிலளிநீக்குகேபிள்!
வடிவரீதியாகவும், உள்ளடக்க ரீதியாகவும் தீபாவலி ஒரு புதுமையான முயற்சி. இன்னொரு முறை படித்துப் பாருங்கள். ஒரு குறும்படத்தை அச்சிறுகதையில் ராஜூ முயற்சித்தது உங்களுக்கு தெரியவரும்.
சாரு மட்டுமல்ல. எனக்கு ராஜூமுருகனையும் ரொம்பவே பிடிக்கும். :-)
ராஜூமுருகன் நகைச்சுவைக்குள் மட்டும் அடைபட்டுவிடக் கூடாது என்பது அவருடைய ஒரு வாசகனாக என்னுடைய விருப்பம்.
குட் கோயிங்......
பதிலளிநீக்குஷொட்டும்.,
பதிலளிநீக்குகுட்டும்....
ரைட்டு.
ஆரோக்கியமான விமர்சனம்! மகிழ்வாக உணர்கிறேன்!
பதிலளிநீக்குஹானஸ்ட்டான விமர்சனம் !!!!
பதிலளிநீக்குநம்ம நர்சிமிற்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநேர்மையான விமர்சனம்,நல்ல நண்பனுக்கு அடையாளம்.
நர்சிம்,உங்களின் நல்ல நண்பர் லக்கி!
நல்ல அவதானிப்பு லக்கி!
தலைவர்கள் கதை இத்தொகுப்பின் பலவீனம்.
பதிலளிநீக்குபலம்: செம்பட்டைக் கிழவி.
மிகப்பெரும் பலம்: செம்பட்டைக்கிழவின் கடைசி இரு வரிகள்.
நல்ல விமர்சனம் லக்கி.
வாழ்த்துகள் நர்சிம்.
நச் விமர்சனம் தோழர்.
பதிலளிநீக்குஎங்கடா நன்றியைக் காணோம்னு பார்த்தேன். பின்னூட்டத்தில் இருக்குதா? ஆங்.. அந்த பயம் இருக்கட்டும்.! ஹிஹி..
விலை நாற்பது ரூபாய் தானா? அது அய்யனார் கம்மா கதைக்கே சரியாப் போச்சே...
பதிலளிநீக்குநர்சிம்முக்கும், அகநாழிகைக்கும் வாழ்த்துக்கள்...
நச் சகா!!!
பதிலளிநீக்குதலைவர்கள்!! அதை ஒரு பதிவாக படித்தபோது நன்றாகவே ரசிக்க முடிந்தது. ஆனால் ஒரு சிறுகதை தொகுப்பில் ,பல நல்ல புனைவுகளுக்கு இடையே அதைப் படிக்கும் போது ஒவ்வாது நிற்கிறது. நானும் என் பதிவில் இதையே குறிப்பிட்டிருக்கிறேன்.
வாசு சார், அப்போ கதகளை நர்சிம்மே தேர்ந்தெடுத்தாரா? ”அன்பின்” போல் பிற்சேர்க்கையிலாவது “அக்காவை” சேர்த்திருக்கலாம் என ஆசைப்படுகிறேன். அடுத்த புத்தகத்தில் பார்த்துக்கலாம்.
லக்கி, விமர்சனம் மிகவும் நேர்த்தியாக இருக்கிறது. வாழ்த்துகள்.
லக்கி,
பதிலளிநீக்குமிகவும் நேர்த்தியான,நேர்மையான விமர்சனம்.
புக் எழுதுனவங்களைதான் வாழ்த்தணும். விமர்சனம் எழுதறவனுக்கும் வாழ்த்து கிடைப்பது பதிவுகளில் மட்டும்தான்.
பதிலளிநீக்குதமிழ் பதிவர்கள் ரொம்ப நல்லவங்க! :-)
நல்ல விமர்சனம் யுவகிருஷ்ணா.
பதிலளிநீக்குகதைகள் அடுத்தக்கட்டத்திற்கு வந்துவிட்டாலும் படிப்பவர்கள் அடுத்தக்
கட்டத்திற்கு வரவில்லை.இதை வலைகளிலேயே கண்கூடாகப் பார்க்கலாம்.
//ராஜூமுருகன் எழுதிய தீபாவலி. ஒரு சிறுகதையில் சினிமாவுக்குரிய அத்தனை இலக்கணங்களையும் கையாண்டிருக்கிறார். கட் ஷாட், ப்ளாஷ்பேக், ஏன் கேமிரா கோணங்கள்//
நானும் படித்தேன்.பிடிக்கவில்லை.
இந்த பிரபஞ்சமே தீபாவளி கொண்டாட்டத்தில் இருக்கும்போது இவன்தனித்திருப்பதை
மேல் சொன்ன உத்திகளில் சொன்னால்தான் இம்பாக்ட் இருக்கும்.கடைசிப் பாரா படு செயற்கை.அடுத்து அசட்டுத்தனமான வருணனைகள்.
நல்ல விமர்சனம். வாங்க முயற்சி செய்கிறேன். நன்றி! அகநாழிகை அண்ணன் இணையத்தில் விற்றால், அவசியம் வாங்குவேன்.
பதிலளிநீக்கு//இந்தத்தலைமுறை-லாடம்//
யுவகிருஷ்ணா டச். சகிக்கலை. (We want லக்கி Back!) எல்லோருக்கும் Horse-shoe பற்றி பரிச்சயம் இருக்கும் பாஸ்! செம்ம காமெடி சார் நீங்க
வாழ்த்துகள் நர்சிம்!
பதிலளிநீக்கு//யுவகிருஷ்ணா 11:07 AM, December 03, 2009
புக் எழுதுனவங்களைதான் வாழ்த்தணும். விமர்சனம் எழுதறவனுக்கும் வாழ்த்து கிடைப்பது பதிவுகளில் மட்டும்தான்.
தமிழ் பதிவர்கள் ரொம்ப நல்லவங்க! :-)
//
ரசிச்சேன் யுவா.