16 பிப்ரவரி, 2010

பசலை நோய்!

தலைவன் போருக்கு போகும்போது தனிமையில் தலைவிக்கு ஏற்படும் நோய் பசலையாம். பத்தாம் வகுப்பின் போது அறிந்துகொண்ட விஷயம். அதற்கு முன்பு பசலை என்பதை ஒரு கீரையாகதான் தெரியும். இது ஒரு காதல்நோய் என்றுதான் இத்துணை காலமும் நினைத்தேன். காதலுக்கு மட்டுமல்ல, நட்புக்கும் இதே நோய் வரக்கூடும் என்பதை இப்போது அனுபவப்பூர்வமாக உணர்கிறேன்.

கடந்த இரண்டு ஆண்டுகாலமாக மிக நெருக்கமாக நட்பு பாராட்டிய தோழனை கடந்த இரண்டு நாட்களாக ‘மிஸ்’ செய்கிறேன். இன்னும் குறைந்தது இரண்டு வார காலத்துக்காவது இந்த இடைவெளி தற்காலிகமாக இருக்குமென்று சென்னை மற்றும் கோவை வானிலை ஆராய்ச்சி நிலையங்களால் கணிக்கப்படுகிறது. தோழன் தலைவியை தேடி கோவைக்குப் போயிருக்கிறான். நானோ சென்னையில் இடது உள்ளங்கையை சொறிந்து கொண்டிருக்கிறேன். ஒருவேளை இதுதான் பசலைநோயின் அறிகுறியோ என்னவோ தெரியவில்லை. லேபில் பசலைநோய்க்கு டெஸ்ட் எடுப்பார்களா என்பதும் உறுதியாக அறியமுடியவில்லை.

2008ஆம் ஆண்டில், ஏதோ ஒரு பொன்மாலைப் பொழுதில் மெரீனா பீச்சில் அதிஷாவை முதன்முறையாகப் பார்த்தேன். பார்த்ததுமே பச்சக்கென்று கவருகிற தோற்றமில்லை. ஹலோ, ஹாய் என்ற ஓரிரு வார்த்தைகளோடு கைப்பேசி எண்ணை பரிமாறிக் கொண்டதோடு சரி. பின்னர் தொலைபேசியில் சிலமுறை பேசிக்கொண்டிருக்கிறோம்.

எங்கள் இருவரையும் நெருக்கமான நண்பர்களாக்கிய பெருமை, இன்னொரு நெருங்கிய நண்பரான செந்தழல்ரவியையே சேரும். அவரது இல்லவிழா பெங்களூரில் நடந்தபோது, என்னையும் அதிஷாவையும் அழைத்திருந்தார். இரவுநேரப் பேருந்து பயணத்தின் போதுதான் இருவரும் மனந்திறந்து பல விஷயங்களையும் பேசிக்கொண்டோம். ‘ஐஸ்பிரேக்’ நிகழ்ந்த இரவு அது. கிட்டத்தட்ட என்னுடைய ஆல்டர் ஈகோ அதிஷா என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.

இருவருமே மிக மோசமான நிலையிலிருந்து நடுத்தர உயரத்துக்கு வந்தவர்கள். உரிய வயதுக்கு முன்பாகவே - பதினாறு வயதில் - குடும்பச்சூழலால் வருமானம் நிமித்தம் வேலை செய்ய தள்ளப்பட்டோம். இருவருமே குருவி தலையில் பனங்காய் என்பதுபோல இருபத்திரண்டு, இருபத்தி மூன்று வயதுகளில் உயிரை அடகு வைத்து, பணத்தைப் புரட்டி, வியர்வை சிந்தி அவரவர் சகோதரிக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறோம். இதுமாதிரி ஒப்பிட்டுப் பார்க்க ஏராளமான கோ-இண்சிடெண்டுகள். ‘இவனும் நம்மளை மாதிரியே’ என்ற எண்ணமே எங்கள் நட்பை ஃபெவிகால் போட்டு ஒட்டவைக்க போதுமானதாக இருந்தது.

ரசனைகளில் நேரெதிர் என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். நான் தமிழ் சினிமாவின் அத்தனை மொக்கைகளையும் பார்த்தாகவேண்டும் என்று சபதம் பூண்டவன். அவரோ அல்பசினோ, குவாண்டின் டொரண்டினோ, ரோஸாமான் என்று உளறிக் கொண்டிருப்பவர். எனக்கு கலைஞரை பிடிக்கும். அவருக்கு புரட்சித்தலைவி.

இருவரும் நட்பானதின் விளைவு. எனக்காக ‘மேகம்’ என்று சூப்பர்பெஸ்ட் மொக்கையை அவர் உதயம் தியேட்டரில் பார்க்க வேண்டியிருந்தது. அவருக்காக தேவி தியேட்டரில் ‘இன்க்ளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்’ பார்த்தேன். நட்புக்காக இதுவரை யாரிடமும் காம்ப்ரமைஸ் ஆகாத நான், முதன்முறையாக அதிஷாவோடு காம்ப்ரமைஸ் ஆகவேண்டியிருந்தது.

இருவருமே இப்போது ஒரே அலுவலகத்தில் பணியாற்றுகிறோம். வெளியிடங்களில் ‘இரட்டையர்களாக’வே அறியப்படுகிறோம். என்னை தனியாக எங்காவது யாராவது பார்த்தால், “அதிஷா வரலையா?” என்று கேட்பது சகஜமாகிவிட்டது. அவருக்கும் அப்படியே.

இப்போது இதையெல்லாம் இங்கே செண்டிமெண்டு தடவி, வேண்டாவெறுப்பாக எழுதித் தொலைப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அந்த அதிஷாவுக்கு கல்யாணம். எல்லோரும் அவசியம் வந்துடுங்க.



திருமணம் கோவையில் நடைபெற உள்ளதால்  வெளியூரிலிருந்து வரும் நண்பர்கள் அதிஷாவை தொடர்புகொள்ள   : 9884881824

15 பிப்ரவரி, 2010

தேவதைகள் மீதான வன்முறை!

பட்டர்ஃபிளை எஃபெக்ட்

எனக்கு இரண்டு நண்பிகள் உண்டு. அண்ணன் மகள்கள் மீரா, மேகா. இருவருமே தேவதைகள். மீரா ஏழாம் வகுப்பு. மேகா நான்காம் வகுப்பு. முன்னவள் கொஞ்சம் மூடி டைப். அளந்து அளந்து அறிவுபூர்வமாகப் பேசுவாள். அம்மா சாடை. பின்னவள் வாயாடி. லொடலொடவென்று சுவாரஸ்ய எக்ஸ்பிரஸ். அப்பா மாதிரி.

இருவரும் படிப்பில் சுட்டி. பத்து ரேங்குக்குள் கேரண்டி. மீராவை அம்மா அடிப்பதுண்டு. மேகா, ராஜேந்திரகுமாரின் வால்களுக்கு இணையான வால். இருந்தாலும் அம்மாவிடம் சாலாக்கு. அதனால் அடிவாங்காமல் அவ்வப்போது எஸ்கேப். அப்பா-அம்மா இருவருமே வேலைக்கு போவதால் மீரா வீட்டுவேலைகளில் அக்கறையாக பொறுப்பு எடுத்துக் கொள்கிறாள். அம்மா-அப்பா எதிரில் மட்டும் அக்காவுக்கு உதவுவதாக மேகா ’ஆக்டிங்’ கொடுப்பாள்.

இருவரோடும் ஐந்து நிமிடங்கள் விளையாடினால் போதும். இவர்களது உலகுக்குள் நுழைந்துவிடலாம். குழந்தைகளின் உலகத்தில் அன்புக்கு மட்டுமே இடம் உண்டு. அதுவும் அராஜகமான அன்பு. கண்களால் சாடைகாட்டி மேகா பேசும் ஒலியில்லாத மொழியின் இனிப்புக்கு எல்லையே இல்லை.

இந்த விஸ்தாரமான அறிமுகத்துக்கு காரணம் உண்டு. இவர்கள் இருவரும்தான் ’டைரிக்குறிப்பும், காதல் மறுப்பும்’ தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ’பட்டர்ஃப்ளை எஃபெக்ட்’ சிறுகதையின் நாயகிகள். இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பதினேழு கதைகளில் ஆகச்சிறந்த படைப்பாக இதை மதிப்பிடுகிறேன். வாழ்வின் சுவாரஸ்ய தருணங்கள் பெரும்பாலானவை சுவாரஸ்யமற்ற பொழுதிலேயே நடந்தேறுகிறது. ஒரு டயரியில் குறித்து வைத்து விட்டு, சிலகாலம் கழித்து அசைபோடும்போது கிடைக்கும் சுவாரஸ்ய அனுபவம் வரம். அத்தகைய வரம் பரிசல்கிருஷ்ணாவுக்கும், அவரது திருமதிக்கும் இக்கதை மூலமாக சாத்தியமாகியிருக்கிறது.

இனி மீராவோ, மேகாவோ அம்மாவால் திட்டப்படவோ, அடிக்கப்படவோ கூடாது. அப்படி நிகழ்ந்தால் அப்பாவின் மொபைலில் இருந்து சித்தப்பாவுக்கு மெசேஜ் அனுப்பலாம். அண்ணி மீது தேவதைகள் மீதான வன்முறை தடுப்புச் சட்டத்தின் படி வழக்கு போடுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.


Writer's block

தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் ஏற்படும் நோய் இது. அதிலும் புனைவு, கட்டுரை, விமர்சனம் என்று கலந்துகட்டி எழுதுபவர்கள் அடிக்கடி சந்திக்க வேண்டிய விஷயம். தொடர்ச்சியாக நான்கு அபுனைவில்லாத எழுத்தை எழுதிவிட்டு, புனைவுக்கு திரும்பினால் தாவூ தீர்ந்துவிடுவதை தவிர்க்கவே இயலாது.

ரைட்டர்ஸ் பிலாக்கெல்லாம் அண்டவே முடியாத எழுத்தாளர்களும் அரிதாக உண்டு. புனைவின் உச்சத்தை தொட்டவர்கள் அவர்கள். தினமும் தூங்குவதைப் போல, தினமும் எதை வேண்டுமானாலும், எவ்வளவு பக்கங்க்ள் வேண்டுமானாலும் எழுதித் தள்ளுவது அவர்களுக்கு இயல்பிலேயே அமைந்துவிடும். இவர்களது மூளைகளில் ஏதேனும் விசேஷ செல்கள் இருக்கக்கூடும். நமக்கு தெரிந்த நல்ல உதாரணம் : ஜெயமோகன்.

அடிக்கடி வரும் இந்தப் பிரச்சினை குறித்து, என் ரோல்மாடல்களில் ஒருவரான ஒரு எழுத்தாளருக்கு மடல் இட்டிருந்தேன். அவர் எனக்கு கொடுத்த அட்வைஸ் : இதுமாதிரி நேரங்களில் பயோ-பிக்‌ஷன் முயற்சியுங்கள். பரிசல்கிருஷ்ணாவின் புனைவுகள் தொண்ணூறு சதவிகிதம் பயோ-பிக்‌ஷன் முறையிலேயே அமைந்திருக்கிறது. இவருக்கு எழுத்து Block விபத்து நேர வாய்ப்பேயில்லை.


சுஜாதா

எழுத்தாளர் சுஜாதாவின் பாதிப்பின்றி எழுதுபவர்கள் இந்த தலைமுறையில் குறைவு. அவரது அத்தகைய வெற்றிக்கு என்னென்னவோ காரணங்களை பட்டியலிடுகிறார்கள். என் வாசிப்பின் வாயிலாக நான் உணர்வது என்னவென்றால், சுஜாதாவின் எழுத்துகளில் தேவையற்ற வர்ணனைகள் இருக்காது. சொல்லவேண்டிய விஷயங்களை கதைமாந்தர்களின் உரையாடல்களிலேயே ‘நறுக்’கென்று சொல்லிவிடுவார்.

பரிசலின் பாணியும் இதுதான். இத்தொகுப்பு முழுக்க இடம்பெற்றிருக்கும் எல்லா கதைகளுமே நச்சென்று உரையாடுகின்றன. உரையாடல்கள் குறைவாக இருக்கும் கதைகளிலும் கூட எழுத்தாளரின் தன்னிலை உரையாடலாகவே அமைந்துவிடுகிறது. இதனுடைய பயன் என்னவென்றால் ஒவ்வொரு வாக்கியத்தையும், வார்த்தையையும் வாசிப்பவனுக்கு சுவாரஸ்யமாக்கி தரமுடியும்.

உள்ளடக்க அடர்த்தி குறைவான சில கதைகளிலும்கூட சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் வைக்கவில்லை பரிசல். கடைசிவாக்கிய திருப்புமுனை பாணி சுஜாதா காலத்திலேயே காலாவதி ஆகிவிட்டது. கடைசிக்காலத்தில் அவரேகூட அவரது பாணியை மாற்றிக் கொண்டார். சிறுகதைக்கு சாத்தியமான மற்ற வடிவங்களையும் முயற்சித்துப் பார்த்தார்.

இடையில் சிறுகதைகளுக்கான வெளி வெகுஜன இதழ்களில் குறைந்துவிட்டதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரேமாதிரியான நடையில், கடைசி பஞ்ச்லைன் வாசகத்தோடு முடியும் கதைகளை மக்கள் நிராகரிக்க முன்வந்ததாகதான் முடிவுக்கு வரமுடிகிறது.

இது நூலாசிரியருக்கு முதல் புத்தகம். பரிசலின் அடுத்த புத்தகத்தில் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வடிவில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கலாம்.


கிண்டல்

இசையோடு கூடிய வாழ்த்து அட்டைகளை நீங்கள் பார்த்திருக்கலாம். ‘நான் உன்னை காதலிக்கிறேன்’ என்று பேசக்கூடிய அட்டையை உங்கள் காதலிக்கு பரிசாக கூட கொடுத்திருக்கலாம். பரிசலிடம் இதே பேஜாராகப் போகிறது. முன்னட்டையை புரட்டியவுடனேயே காதில் ரீங்காரமடிக்கிறது எஸ்.ஏ.ராஜ்குமார் - விக்கிரமன் கூட்டணியின் பிரபலமான ‘லால்லா’ மியூசிக். பின்னட்டையை மூடிவைத்தவுடன்தான் ரீங்காரம் நிற்கிறது.

கதைகளை எழுதிய எழுத்தாளர் நல்லவரென்று நான் தனிப்பட்ட முறையிலேயே அறிவேன். அதற்காக நல்லவர் ‘நல்ல’ மாதிரியான விஷயங்களை, ’நல்ல’ மாதிரியான நடையிலேயேதான் எழுதவேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை. கொஞ்சம் ஜில்பான்ஸ் விஷயங்களையும் தொடலாம், தவறில்லை. பரிசலின் ஆதர்சம் சுஜாதாகூட தொட்டிருக்கிறார்.


பாராட்டு

புத்தகத்தின் கடைசி கதை சமூகக்கடமை. இடஒதுக்கீட்டுக்காக ஊடகங்களிலும், இணையத்திலும், இப்போது சினிமாவிலும் மார்வலிக்க கத்திக் கொண்டிருக்கிறோம். ‘இடஒதுக்கீடு’ என்ற பிராண்டிங் இல்லாமல், அந்தச் சொல்லை பயன்படுத்தாமலேயே, ஜனரஞ்சகமான நடையில் அதன் அவசியத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறார் பரிசல். எதிர்ப்பாளர்களை கூட ‘அட, ஆமாம்லே!’ என்று ஒத்துக்கொள்ள வைக்கும் லாவகம்.


குட்டு

பரிசலுக்கு அல்ல. பதிப்பாளருக்கு. அதாவது குகனுக்கு. ஒல்லியான எழுபத்தியிரண்டு பக்க நூலுக்கு ஐம்பது ரூபாய் விலை என்பது அநியாயமில்லையா? இன்றைய விலைவாசி நிலையில் ஒரு பக்கத்துக்கு ஐம்பது பைசாவை தருவதே கஷ்டம். இந்தப் புத்தகத்துக்கான நியாயமான விலை முப்பத்தைந்து ரூபாய். நாற்பது என்று நிர்ணயித்திருந்தால்கூட மோசமில்லை.

அடுத்ததாக லே-அவுட். எழுத்துரு வாசிக்க வாகாக இல்லை. சில இடங்களில் தேவையில்லாமல் ஐட்டலிக் டைப். பாயிண்ட் சைஸும் கூட பக்கத்துக்கு பக்கம் சீராக இருப்பதாக தெரியவில்லை. வரிகளுக்கு இடையேயான இடைவெளி எல்லாப் பக்கங்களிலும் ஒரேமாதிரியாக இல்லை. சில கதைகளில் இந்த இடைவெளி மிக அதிகமாக இருக்கிறது. ஆயினும் முன்னட்டை என்னை கவர்ந்திருந்தது. பின்னட்டையில் எழுத்துகளின் அளவு மிகப்பெரியது.

அடுத்தடுத்த வெளியீடுகளில் இக்குறைகளை நாகரத்னா பதிப்பகம் களையும் என்று எதிர்ப்பார்க்கிறேன்.


கொஞ்சம் ஜால்ரா

இந்நூலாசிரியருக்கும், எனக்கும் ஏதோ ஸ்நானபிராப்தி இருக்கவேண்டும். எங்களை அண்ணன் - தம்பி என்று சொன்னால், கேள்வி கேட்காமல் யாரும் ஒப்புக்கொள்ளும் தோற்ற ஒற்றுமை. ரசனைகளில் பெரிய மாறுபாடு இருவருக்குள்ளும் இல்லை. எனக்குப் பிடித்த சினிமா அவருக்கும் பிடிக்கிறது. அவருக்கு பிடிக்காத எழுத்தாளரை எனக்கும் பிடிப்பதில்லை. இருவரின் இயற்பெயரும் கூட ஒன்றேதான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படியே பெரிய பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். ஆயினும், அது புத்தக விமர்சனத்துக்கான நியாயமில்லை என்பதால் டப்பென்று ஊசிப்பட்டாசு வெடித்து முடித்துக் கொள்கிறேன்.



நூல் : டைரிக்குறிப்பும், காதல்மறுப்பும்

ஆசிரியர் : பரிசல் கிருஷ்ணா

விலை : ரூ.50/-

பக்கங்கள் : 72

வெளியீடு : நாகரத்னா பதிப்பகம்,
3ஏ, டாக்டர் ராம் தெரு, நெல்வயல் நகர்,
பெரம்பூர், சென்னை - 600 011.

இணையத்தில் நூலினை வாங்க : http://ezeebookshop.com/eshop/product_info.php?products_id=121

13 பிப்ரவரி, 2010

நேரு - கண்ணதாசன் - இளையராஜா!

சீரிய நெற்றி எங்கே
சிவந்தநல் இதழ்கள் எங்கே
கூரிய விழிகள் எங்கே
குறுநகை போன தெங்கே
நேரிய பார்வை எங்கே
நிமிர்ந்தநன் நடைதான் எங்கே?
நிலமெலாம் வணங்கும் தோற்றம்
நெருப்பினில் வீழ்ந்த திங்கே!

அம்மம்மா என்ன சொல்வேன்
அண்ணலைத் தீயிலிட்டார்
அன்னையைத் தீயிலிட்டார்
பிள்ளையைத் தீயிலிட்டார்
தீயவை நினையா நெஞ்சைத்
தீயிலே எரியவிட்டார்
தீயசொல் சொல்லா வாயைத்
தீயிலே கருகவிட்டார்!

வேறு

பச்சைக் குழந்தை
பாலுக்குத் தவித்திருக்க
பெற்றவளை அந்தப்
பெருமான் அழைத்துவிட்டான்
வானத்தில் வல்லூறு
வட்டமிடும் வேளையிலே
சேய்கிளியைக் கலங்கவிட்டுத்
தாய்க்கிளியைக் கொன்றுவிட்டான்

சாவே உனக்குகொருநாள்
சாவு வந்து சேராதோ!
சஞ்சலமே நீயுமொரு
சஞ்சலத்தைக் காணாயோ!
தீயே உனக்கொருநாள்
தீமூட்டிப் பாரோமோ!

தெய்வமே உன்னையும் நாம்
தேம்பி அழ வையோமோ!
யாரிடத்துப் போயுரைப்போம்!
யார்மொழியில் அமைதிகொள்வோம்?
யார்துணையில் வாழ்ந்திருப்போம்?
யார்நிழலில் குடியிருப்போம்?

வேரோடு மரம்பறித்த
வேதனே எம்மையும் நீ
ஊரோடு கொண்டுசென்றால்
உயிர்வாதை எமகில்லையே…
நீரோடும் கண்களுக்கு

நிம்மதியை யார்தருவார்?
நேருஇல்லா பாரதத்தை
நினைவில் யார் வைத்திருப்பார்?
ஐயையோ! காலமே!
ஆண்டவனே! எங்கள்துயர்
ஆறாதே ஆறாதே
அழுதாலும் தீராதே!

கைகொடுத்த நாயகனைக்
கண்மூட வைத்தாயே
கண்கொடுத்த காவலனைக்
கண்மூட வைத்தாயே
கண்டதெல்லாம் உண்மையா
கேட்டதெல்லாம் நிஜம்தானா
கனவா கதையா
கற்பனையா அம்மம்மா…

நேருவா மறைந்தார்; இல்லை!
நேர்மைக்குச் சாவே இல்லை!
அழிவில்லை முடிவுமில்லை
அன்புக்கு மரணம் இல்லை!
இருக்கின்றார் நேரு
இங்கேதான் இங்கேதான்
எம்முயிரில், இரத்தத்தில்,
இதயத்தில், நரம்புகளில்,
கண்ணில், செவியில்,
கைத்தலத்தில் இருக்கின்றார்
எங்கள் தலைவர்
எமைவிட்டுச் செல்வதில்லை!
என்றும் அவர் பெயரை
எம்முடணே வைத்திருப்போம்

அம்மா…அம்மா….அம்மா…..!

- பண்டிதர் நேரு மறைந்தபோது கவியரசர் கண்ணதாசன் செலுத்திய கண்ணீர் அஞ்சலி.

இளையராஜாவின் குரலில் கீழே கேட்கலாம் :

12 பிப்ரவரி, 2010

பார்த்ததில் பிடித்தது!

கலையும், கல்வியும் சங்கமம்!


‘தத்தை தாம் தித்தைதாம்’ என்று அலங்காரமாய் அடவுச் சொல் கட்டுகள் முழங்கிக் கொண்டிருக்கின்றன. சலங்கையணிந்த பல ஜோடி கால்களின் ‘ஜல் ஜல்’ சத்தம் ஏற்படுத்தும் ஜூகல்பந்தி ஒருபுறம். ‘தட் தட்’டென தட்டுக்கழியின் தாளச்சத்தம் சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக ஒலிக்கிறது. வீணையின் நாதம், வயலின் இசை, மிருதங்க ராஜாங்கம், தபதபவென முழங்கும் தபேலா, ‘ங்கொய்’யென காதில் ரீங்காரமிடும் ஹார்மோனியம் – நம் பாரம்பரியக் கலைகள் மொத்தமாக சங்கமிக்கிறது கலைக்காவிரியில்.

கலைக்காவிரி என்று சொன்னால் பலருக்கும் தெரியாது. கண்ணதாசனின் ‘இயேசு காவியம்’ என்று சொன்னால் தெரியுமில்லையா? 1982ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் வெளியிடப்பட்ட இந்த இலக்கியத்தை தமிழ் கூறும் நல்லுலக்த்துக்கு வழங்கிய கலை நிறுவனம் இந்த கலைக்காவிரி.

ஆரம்பத்தில் கலைக்குழுவாக செயல்பட்ட கலைக்காவிரி இசையிலும், நடனத்திலும் நவீன வடிவங்களை முயற்சித்துப் பார்த்த முன்னோடி நிறுவனம். ஆயிரத்து ஐநூறு மேடைகள் கண்ட பெருமை கலைக்காவிரிக்கு உண்டு. போப்பாண்டவர் முன்பாக கூட இந்திய பாரம்பரிய கலையை நடத்திக்காட்டி நாட்டுக்கு பெருமை சேர்த்த குழு இது. கடந்த 2000ஆம் ஆண்டு தமிழக அரசால் சிறந்த கலைநிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது.

“நாங்கள் வெறும் கலைக்குழு மட்டுமல்ல. கலைக்கல்லூரியும் கூட. தமிழ்நாட்டிலேயே நடனம், இசை இரண்டிற்கும் இணைந்து இளங்கலை பட்டப்பட்டிப்பு வழங்கும் முதல் நுண்கலைக் கல்லூரி நாங்கள் மட்டுமே. இக்கல்லூரியில் +2 படித்தவர்களுக்கு மூன்று ஆண்டுகள் பட்டப்பயிற்சியும், பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பட்டப்பயிற்சியும் அளிக்கிறோம்” என்கிறார் கல்லூரியின் முதல்வர் டாக்டர் மார்கரெட் பாஸ்டின்.

“நடனத்துக்குப் பட்டமா?” ஆச்சரியத்தோடு கலைக்காவிரிக்குள் நுழைந்தோம். ஆச்சரியங்கள் தொடர்ந்தது. திருச்சி பென்வெல்ஸ் சாலையில் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைதியாக வீற்றிருக்கிறது கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி. 1977ல் கலைக்கல்லூரி தொடங்கியதிலிருந்தே அங்கே பணியாற்றும் தபேலா கலைஞரான திரவியம் நம்மை அழைத்துச் சென்று கல்லூரியை சுட்டிக் காட்டுகிறார். படிக்கட்டுகளில் தாவித்தாவி ஏறும் இந்த இளைஞருக்கும், தமிழக முதல்வருக்கும் ஒரே வயதாம்.

“மனிதனுக்கும், கடவுளுக்கும் பொதுவான ஒரே விஷயம் கலைதான். அதனால்தான் மதம் கூட இசை, நடனமென்று கலைவடிவிலான வழிபாட்டை கொண்டிருக்கிறது. வாழ்க்கையை சோர்வின்றி வாழ கொண்டாட்டம் தேவை. கலையை தவிர வேறு எதை நாம் பெரியதாக கொண்டாடிவிட முடியும்? அதனால்தான் எங்கள் நிறுவனர் ஜார்ஜ் அடிகளார் கலைகளுக்கு முக்கியத்துவம் அளித்தார்” - திரவியம் இடையிடையே தத்துவமழை பொழிகிறார். எதிர்ப்படும் மாணவியர்கள் “குட்மார்னிங் டாடி” என்று அவரைப் பார்த்து வணக்கம் வைக்கிறார்கள். “இங்கே படிக்குற எல்லாருமே என் குழந்தைங்க. என்னை டாடின்னு தான் கூப்பிடுவாங்க” என்கிறார்.

பரதநாட்டியம், வயலின் என்று வகுப்புகள் நடக்கும் ஒவ்வொரு வகுப்பறையாக அவர் சுற்றிக் காட்டிக் கொண்டே வர, ஒரு வகுப்பறையில் கல்லூரி முதல்வரே வாய்ப்பாட்டு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். இக்கல்லூரியின் வகுப்புச்சூழல் அலாதியானது. தலையணை சைஸ் புத்தகங்களும், நோட்டுக்களுமாகதான் இதுவரை நாம் கல்லூரியை பார்த்திருக்கிறோம். நாட்டிய உடை, வேட்டி, சட்டை, சலங்கைகள், வயலின், ஹார்மோனியம், வீணை என்று பார்ப்பது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. கண்டிப்பு என்கிற விஷயம் நிர்வாகத்திடம் கிஞ்சித்தும் இல்லை. “நாங்கள் கண்டிக்கக்கூடிய வாய்ப்பை எங்கள் மாணவர்கள் எங்களுக்கு வழங்குவதில்லை!” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் முதல்வர்.

மாணவ மாணவியர்களில் பெரும்பாலானவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். நிறைய பேர் பொருளாதார நலிவுற்ற குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். கல்வி, வேலைக்கும், சம்பாதியத்துக்கும் கருவியாக பார்க்கப்படும் இன்றைய சமூகத்தில், கலையார்வத்தோடு இங்கே பயில வருபவர்கள் நம்மை நிரம்பவே ஆச்சரியப்படுத்துகிறார்கள். வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் கூட கலைக்கல்வி பயில தாகத்துடன் கலைக்காவிரிக்கு படையெடுப்பவர்கள் ஏராளம்.

கல்லூரியின் சூழல் இருக்கட்டும், மற்ற விஷயங்கள் என்னென்ன? விளக்க முன்வருகிறார் நிர்வாகப் பணியாளரான விண்சென்ட் தனராஜ்.

பயிற்சித் திட்டம் : பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் கூட இந்த கல்லூரியில் பயிலலாம். ஐந்து ஆண்டுகள் படிப்பு முடிந்ததும், ஒருங்கிணைந்த நுண்கலைப் பட்டம் (Integrated Bachelor of Fine Arts) வழங்கப்படுகிறது. நடனம், இசை என்று கலந்துகட்டி வழங்கப்படும் கல்வி இது.
+2 முடித்தவர்கள் பரதத்திலும், இசையிலும் (வாய்ப்பாட்டு, வயலின், வீணை, மிருதங்கம்) இளநுண்கலைப் பட்டம் (Bachelor of Fine Arts) பயிலலாம். இப்பட்டப் படிப்பு மூன்று ஆண்டுகள் பயில வேண்டும்.

பட்டதாரி மாணவர்கள் நேரடியாக பரதம், இசை துறைகளில் முதுகலைப் பட்டத்துக்கு (Master of Fine Arts) படிக்கலாம். முதுநுண்கலைப் பட்டத்துக்கு இரண்டு ஆண்டுகள் பயில வேண்டும். முதுநுண்கலை முடித்த மாணவர்கள் பரதத்தில் முனைவர் ஆய்வும் (P.hd) இங்கேயே செய்யலாம்.

மேற்கண்ட பட்டங்களை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் வழங்குகிறது.


நாட்டியத்துக்கு தொலைதூரக் கல்வி : நாட்டியத்தை தொலைதூரத்தில் கற்பிக்க முடியுமா என்று கேட்டால் ‘ஆம்’ என்று தைரியமாக சொல்லலாம். உலகிலேயே பரதநாட்டியத்துக்கு தொலைதூரக் கல்வி மையம் அமைத்த முதல் கல்லூரி கலைக்காவிரி. திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் வணிக மேம்பாட்டு மையத்தோடு இணைந்து இக்கல்வி நடத்தப்படுகிறது.
வேறு படிப்பு படிப்பவர்களும் பரதத்தை படிக்க இந்த வளாகம் கடந்த பரதநாட்டிய பட்டப்படிப்புத் திட்டம் உதவுகிறது. நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது ஜெர்மனி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, இங்கிலாந்து, கனடா, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்தும் ஏராளமான பேர் இக்கல்வியை கற்கிறார்கள்.

நேரிடையாக ஒரு ஆசிரியர் இருந்து சொல்லிக் கொடுக்க வேண்டிய பரதத்தை எப்படி தொலைதூரக்கல்வியாக கற்பிக்க முடியும்?

இங்கேதான் தொழில்நுட்பம் கலைக்காவிரிக்கு கைகொடுக்கிறது. பாடங்கள் டி.வி.டி.யில் பதிவு செய்யப்பட்டு மாணவர்களுக்கு அனுப்பப்படுகிறது. அதன் மூலம் பயிற்சி பெறுபவர்கள், தாங்கள் பெற்ற பயிற்சிகளை வாரயிறுதிகளில் நேரடியாக அந்தந்த நகரங்களிலும், நாடுகளிலும் அமைந்திருக்கும் கலைக்காவிரி பயிற்சி மையங்களில் நேரடியாக சரிசெய்துக் கொள்ளலாம்.
ஏற்கனவே பரதம் பயின்றவர்கள் பலரும் கூட அங்கீகாரச் சான்றிதழுக்காக இக்கல்வியை கற்கிறார்கள். இதுவரை இம்முறையில் 85 பேர் டிப்ளமோவும், 25 பேர் இளநுண்கலைப் பட்டமும், 65 பேர் முதுநுண்கலைப் பட்டமும் வாங்கியிருக்கிறார்கள்.

எப்படி சேருவது?

வழக்கமான கல்லூரிகளைப் போலவே ஜூன்மாதம் தான் இங்கேயும் கல்வியாண்டு தொடங்குகிறது. நுண்கலை போதிக்கும் கல்லூரி என்பதால் ஒரு வகுப்புக்கு அதிகபட்சமாக 20 பேர் மட்டுமே சேர்த்துக் கொள்ளப் படுவார்கள். இப்போது சுமார் 150 மாணவர்கள் பயில்கிறார்கள். நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும், வேறு கல்லூரிகளில் படிப்பவர்களும் நுண்கலை பயில வசதியாக மாலை வகுப்புகளும் உண்டு.

மிகக்குறைந்த அளவிலான மாணவர்களே சேர்த்துக் கொள்ளப்படுவதால் இக்கல்லூரி, மாணவர் நுழைவு அழைப்புக்கான விளம்பரங்கள் எதையும் நாளிதழ்களில் வெளியிடுவதில்லை. கல்வியாண்டு தொடங்கப் படுவதற்கு முன்பே கல்லூரியை அணுகுவதுதான் ஒரேவழி. www.kalaikavirifineart.com என்ற இணையத்தள முகவரியில் மேலதிக விவரங்கள் கிடைக்கும். அல்லது 0431-2460678 / 2412340 எண்களை தொடர்புகொண்டு பேசலாம்.

வேலைவாய்ப்புகள் என்னென்ன?

நாட்டியமும், இசையும் படித்தால் என்ன வேலை கிடைத்துவிடப் போகிறது என்று நினைக்கிறீர்களா? உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

பள்ளிகளில் இசை, நடனத்துக்கு இப்போதெல்லாம் ஆசிரியர்கள் நியமிக்கப் படுகிறார்கள். நல்ல சம்பளமும் கொடுக்கிறார்கள். நுண்கலைப் பட்டம் பெற்றவர்களுக்கு இங்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது.

சுயவேலைவாய்ப்பு அதிகம். சொந்தமாக நடனப்பள்ளிகளோ, இசைப்பள்ளிகளோ அமைக்கலாம். மாலைநேர வகுப்புகள் நடத்தினாலே ஆயிரங்களை சுலபமாக அள்ளலாம்.
வெளிநாடுகளில் நம் கலைகளுக்கு பெருத்த மரியாதை வழங்கப்படுவதால், இங்கே பயில்பவர்கள் நிறைய பேர் வெளிநாடுகளுக்கும் பறக்கிறார்கள். நுண்கலை பயில்பவர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

சென்னைப் போன்ற நகரங்களில் நடத்தப்படும் நிறுவனங்களில் கூட நாட்டியத்துக்கும், இசைக்கும் ஒருங்கிணைந்த பட்டம் இல்லை. அதிலும் பார்க்கப்போனால் மற்ற இடங்களில் பட்டயம் (Diploma) தான் வழங்கப்படுகிறது. கலைக்காவிரியில் மட்டுமே நுண்கலைகளுக்கு பட்டம் வழங்கப்படுகிறது என்பதில் இக்கல்லூரி தனித்து சிறப்படைகிறது.

“எங்களது நோக்கம், லட்சியம், குறிக்கோள் அனைத்துமே இக்கல்லூரியை வெகுவிரைவில் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக தகுதி உயர்த்துவதுதான்!” என்கிறார்கள் கலைக்காவிரியினர்.
‘தமிழகத்தில் பாரம்பரியக் கலைகளுக்கு மட்டுமேயான ஒரு பல்கலைக்கழகம்!’ – நினைத்துப் பார்க்கவே இனிப்பாக இருக்கிறது இல்லையா?

(நன்றி : புதியதலைமுறை)