கடந்த அக்டோபர் மாதம் வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் அறிவிப்பினை கேட்டுவிட்டு ரெயின்கோட் போட்டு வந்து மழையே வராமல், கடுமையான வெயில் அடித்த ஒரு தினத்தில் எழுதிய பதிவு இது.
சென்னை வானிலை ஆய்வு நிலையத்தில் பணிபுரியும் அதிகாரியான திரு கே.வி.பாலசுப்பிரமணியம் அவர்கள் இப்பதிவினை வாசித்துவிட்டு, தனது விளக்கத்தினை நம்முடைய மின்மடல் முகவரிக்கு அனுப்பியிருக்கிறார்.
திரு. கே.வி.பி. அவர்களின் கடிதம் கீழே :
திரு யுவகிருஷ்ணா அவர்களுக்கு,
இது தங்களுடைய வானிலை ஆராய்ச்சிமையம் பற்றிய அக்டோபர் மாதம் பதிவு செய்துள்ள செய்தி பற்றிய மின்னஞ்சல், தாமதத்திற்கு மன்னிக்கவும், இடையில் நான் தங்களின் வலைப்பூவில் என்னுடைய கருத்துக்களைப் ஆங்கிலத்தில் பதிவு செய்தேன், ஆனால் அது உங்கள் வலைப்பூவில் பதிவாகவில்லை, எனவே இந்த மின்னஞ்சல்.
என் பெயர் கு,வை, பாலசுப்பிரமணியன், சென்னை நுங்கம்பாக்கம் மண்டல வானிலை ஆய்வு மையத்தில் உதவி வானிலையாளராகப் பணிபுரிகிறேன், முனைவர் எஸ்.ஆர்.இரமணன் வானிலை முன்னறிவிப்பு தொடர்பான பணிகளின் அதிகார பூர்வ ஊடகத் தொடர்பாளர். அவர் விடுமுறையில் சென்றாலோ அல்லது பணி நிமித்தம் வெளியில் சென்றாலோ அவருக்குப் பதிலாக முனைவர் எஸ், பாலச்சந்திரன் என்பவரும் திரு ஈ.குழந்தைவேலு என்பவரும் ஊடகத் தொடர்பாளர்களாகப் பணியாற்றுவர்.
வானிலை ஆய்வு மையம் பற்றிய தங்கள் கருத்துக்கள் தவறானவை. பல்வேறு விதமான தலைப்புக்கள் பற்றிய தங்களின் வலைப்பதிவுகளைப் பார்க்கும்போது தாங்கள் அறிவியல் படித்தவராக் இருப்பீர்கள் என எண்ணுகிறேன்.
வானிலை என்பது வளி மண்டலம் எவ்வாறு உள்ளது என்பதைத் தெரிவிக்கும் சொல்லாகும், அதாவது பூமியை ஓட்டியுள்ள காற்று அல்லது வளிமண்டலம் வெப்பமாக உள்ளதா? குளிராக உள்ளதா? ஈரமாக அல்லது உலர்ந்து உள்ளதா? காற்றே இல்லாமல் அமைதியாக உள்ளதா? அல்லது புயல் வீசுகிறதா? வானம் மேகமற்று உள்ளதா அல்லது மேகமூட்டமாக உள்ளதா? என்பதனையே வானிலை என்கிறோம்.
வெதர் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ‘வானிலை மாற்றம். புயல். லேசான மழை. பெருந்துளி மழை. துன்பங்களைச் சமாளித்தல். காற்றோடு கப்பலைச் செலுத்துதல்’ போன்ற பிற விளக்கங்களும் உள்ளன.
‘வானிலை. தனி இடத் தனிவேளை வளிமண்டல நிலை. ஈர்ம்பதக் குளிர்வாடை நிலை. காற்றின் திசை. காற்று விசையாலையின் பாய்த்திரையின் சாய்கோண அளவு’ என்று பல விதமான பொருள் அளிக்கப்பட்டுள்ளது,
எனவே வானிலை என்பதனை ஓரு குறிப்பிட்ட இடத்தின் ஓரு குறிப்பிட்ட நேரத்தில் உள்ள வானிலைக்கூறுகளின் தொகுப்பு எனலாம். எடுத்துக்காட்டாக சென்னையில் காலை எட்டு மணிக்கு நிலவும் வெப்பநிலை, ஈரப்பதம், காற்றழுத்தம், காற்றின் திசைவேகம், பார்வைத்தூரம், மேகங்களின் வகைகள், அளவு, உயரம் ஆகியவை பற்றிய தகவல்கள் மற்றும் அந்நேரத்தில் மழை, இடி, பனி ஆகியவை உள்ளனவா? போன்ற வானிலைக் கூறுகளின் தொகுப்பே சென்னையின் அப்போதைய வானிலையாகும்.
எனவே வானிலையை அளவீட்டு முறையில் [Quantitative method] சொல்வதானால் இதனை பத்திற்கும் மேற்பட்ட மாறிகளால் [Variables] குறிப்பிடவேண்டும். இந்தியா முழுவதும் 559 தரைநிலைக் கண்காணிப்புக்கூடங்களிலிருந்து பெறப்படும் வானிலைத் தகவல்களை non linear equationஆக மாற்றி, கணினியில் கொடுத்து அடுத்தநாள் வானிலையின் சில கூறுகள் எவ்வாறு இருக்கும் என்று விடைகாண முயன்றால் தற்போது வானிலை ஆய்வு மையத்திற்கு வழங்கப்பட்டுள்ள கணினி வகைகள் 3 முதல் 12 மணி நேரத்தில் விடையளிக்கும். இவ்வகை கணினி வழி வானிலை முன் எச்செரிக்கைகளும் தவறாக இருக்கக்கூடும்.
இது தங்களின் குற்றச்சாட்டிற்கு ஓரு சிறிய விளக்கமே. தாங்கள் சென்னையில் வசிப்பவராக இருந்தால் எங்கள் அலுவலகத்திற்கு ஓரு நாள் வாருங்கள், மேலும் அதிக விளக்கங்ளைப் பெறலாம்.
இப்படிக்கு தங்கள்
கே.வி.பாலசுப்பிரமணியன்
M.Sc (Physics), M.A (Tami), M.A(History,) M. Phil
Assistant Meteorologist,
Regional Meteorological Centre,
Chennai – 600006
கே.வி.பி. சார்!
நான் அறிவியல் படித்தவனல்ல. ஒரு சராசரி மனிதனுக்கு வானிலை ஆய்வு மையம் மீது இருக்கும் அசட்டு கோபமே அப்பதிவில் வெளிபட்டது. அது எவ்வளவு அபத்தமானது என்பதை தங்களது கடிதம் மூலமாக உணர்கிறேன். மத்திய அரசுப் பணிகளில் பணிபுரியும் அதிகாரிகள் இதுபோன்ற அசட்டுக் கோபங்களை கூட சீரியஸாக எடுத்துக் கொண்டு விளக்கம் அளிப்பது என்பது அரசுத்துறை மீதான என்னுடைய மதிப்பினையும், நம்பகத்தன்மையையும் மேலும் மேலும் கூட்டிக்கொண்டே செல்கிறது. தங்களைப் போன்ற அதிகாரிகளால் தேசம் பெருமையடையும். நன்றி!
சென்னையில்தான் வசிக்கிறேன். வாய்ப்பு கிடைக்கும்போது தங்களை அலுவலகத்தில் வந்து சந்திக்கிறேன்.
அன்புடன்
யுவகிருஷ்ணா