11 மே, 2010

லும்பினி!

சமூகநீதிக்கு குரல் கொடுக்கக்கூடிய இன்னொரு இணையத்தளம் தோழர்களால் தொடங்கப் பட்டிருக்கிறது : http://www.lumpini.in

நமக்கு உவப்பானதா, உவப்பற்றதா என்பது முக்கியமில்லை. ஆயினும் பொதுப்புத்திக்கு எதிரான மாற்று சிந்தனைகளுக்கு நல்ல களமாக லும்பினி அமையும் என்பதை எதிர்ப்பார்க்கலாம். வரும் காலத்தில் மிக முக்கியமான ஆக்கங்களை இத்தளத்தில் எதிர்ப்பார்க்கிறேன். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ஒரு இயக்கமாக இயங்கிய இலக்கியப் பத்திரிகையான நிறப்பிரிகையின் சில இதழ்கள் இந்த இணையத்தளத்தில் வாசிக்க கிடைக்கிறது.

பத்து நிமிடத்தில் பார்த்த பறவைப் பார்வையில் பார்த்ததில், தளத்தின் வடிவம் மிக சிறப்பாக, வாசிப்புக்கு ஏதுவாக இருப்பதை உணரமுடிகிறது. வழக்கமான இணையத்தள மரபுக்கு ஏற்ப இங்கும் திராவிடக்குரலுக்கு இதுவரை இடஒதுக்கீடு ஏதுமில்லை. அனேகமாக கீற்று மற்றும் வினவு தளங்களுக்கு மாற்றாக இத்தளம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. அடுத்தடுத்து இத்தளம் செயல்படும் விதத்தை வைத்தே எதையும் தீர்மானிக்க முடியும்.

லும்பினி ஆசிரியர் குழுவினருக்கு வாழ்த்துகள்!

மலைபோல நம்பலாம் மருந்தாய்வுத் துறையை!

நல்ல வேலையும், கைநிறைய சம்பளமும் வேண்டுமா? மென்பொருளோ, வன்பொருளோ, ஏதாவதாக இருந்தாலும் சரி. கம்ப்யூட்டர் படியுங்கள். நாளை உலகை ஆளப்போவது தகவல் தொழில்நுட்பத்துறைதான்.

கடந்த பத்தாண்டுகளாக நம் இளைய தலைமுறைக்கு இதைச் சொல்லி சொல்லியே ‘கம்ப்யூட்டர்தான் எதிர்காலம்’ என்ற கருத்தாக்கத்தை ஆழ விதைத்து விட்டிருக்கிறார்கள். இதனால் பெரியளவில் வளர்ந்து வரும் மற்ற துறைகளைப் பற்றியும், அதில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகளைப் பற்றியும் அறியும் ஆர்வம் மாணவர்களிடையே இல்லை. எல்லோருமே கம்ப்யூட்டரில் வேலை பார்க்கப் போய்விட்டால், மற்ற துறைகளில் பணியாற்றப் போவது யார்?

தகவல் தொழில்நுட்பத்துறையின் அசுரப் பாய்ச்சலை எட்டிப் பிடிக்கப் போகும் மற்றொரு துறை மருந்தாய்வு (Clinical Research). மெக்கன்சி ஆய்வறிக்கையின் படி அடுத்த நான்கைந்து ஆண்டுகளில் இந்தியாவில் மட்டுமே தோராயமாக ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற வாய்ப்பிருக்கும் துறை இது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இந்திய மருந்துத்துறை ஒவ்வொரு ஆண்டும், ஆண்டுக்கு 12.3 சதவிகித கூடுதல் வளர்ச்சியை பெற்று வருகிறது. உலகின் முதல் பத்து இடங்களுக்குள்ளாக இந்திய மருந்தாய்வுத் துறையும் இடம்பெறப் போகிறது.

பன்னாட்டு மருந்தாய்வு நிறுவனங்களின் கழுகுப்பார்வை ஏற்கனவே இந்திய சந்தையின் மீது அழுத்தமாக பதிந்திருக்கிறது. ஏனெனில் உலகளவில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது மக்கள் தொகை, மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களின் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகம். ஆய்வுகளுக்கு துணை செய்யும் தகவல் தொழில்நுட்பம் குறித்த போதுமான அறிவும் இந்தியர்களுக்கே அதிகம். உலகத் தொடர்புமொழியான ஆங்கிலத்திலும் நாம் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளோம். குறைந்த செலவில், தரமாக பணிகளை முடித்துத் தருபவர்கள் என்ற பெயரும் இந்தியர்களுக்கே உரித்தானது.

இன்றைய நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட மருந்தாய்வு நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றில் ஏழாயிரம் முதல் எட்டாயிரம் பேர் மட்டுமே இன்றைய தேதியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் மூன்று வருடங்களில் இத்துறையில் பணியாற்ற குறைந்தபட்சம் ஐம்பதாயிரம் பேர் தேவை. உலகளவில் லட்சக்கணக்கானோர் தேவைப்படுவார்கள். ஆட்களுக்கு பற்றாக்குறை இருக்கும் துறை என்பதால் சம்பளம் பற்றி சொல்லவேத் தேவையில்லை.

சமீபத்தில் உலகை தேக்கிய பொருளாதார மந்தத்தால் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றியவர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டது. எத்தகைய வீழ்ச்சியையும் தாக்குப்பிடித்து, முன்னேற்றம் கண்டு இயங்கும் துறைகள் மிக சிலவே. உணவு, உடை, கல்வி ஆகியத் துறைகளுடன் மருத்துவத்துறையும் இவற்றில் ஒன்று. எனவே மருந்தாய்வுத் துறையில் பணியாற்றுபவர்கள் Recession என்ற சொல்லுக்கு அஞ்சவேண்டிய நிலையே இருக்காது.

மருந்தாய்வு என்றால் என்ன?

உயிர்காக்கும் மருந்துகள் எப்படி உருவாகிறது தெரியுமா? அவற்றுக்கு செய்யப்படும் செலவு என்ன? ஒரு மருந்தைத் தயாரிக்க எவ்வளவு பேர் உழைக்க வேண்டும்? எவ்வளவு காலம் ஆகும்? யூகித்துச் சொல்லுங்கள், பார்ப்போம்.

நம்புங்கள். ஒரே ஒரு உயிர் காக்கும் மருந்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரை சுமார் ஐயாயிரம் கோடி ரூபாய் வரை செலவழிக்க வேண்டியிருக்கிறது. சராசரியாக ஐயாயிரம் பேரின் உழைப்பு இதற்கு பின்னணியில் அவசியமாகிறது. பத்து முதல் பண்ணிரண்டு ஆண்டுகள் தேவைப்படுகிறது. சில மருந்துகளுக்கு பதினைந்து ஆண்டுகள் கூட ஆகலாம்.

சோதனைச்சாலையில் ஒரு மருந்து கண்டறியப்பட்டு விட்டதுமே, அது நேரடியாக மக்களுக்கு சந்தையில் கிடைத்துவிடாது. அது முதலில் விலங்குகளுக்கு தரப்பட்டு பரிசோதிக்கப்படும். பின்னர் தன்னார்வலர்களாக வரும் மனிதர்களுக்கு (நல்ல உடல்நலத்தோடு இருப்பவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும்) தரப்பட்டு பரிசோதிக்கப்படும். எந்தவிதப் பக்கவிளைவுகளோ, எதிர்விளைவுகளோ ஏற்படாத பட்சத்தில் மட்டுமே பயன்பாட்டுக்கு கொண்டு வரமுடியும். பயன்பாட்டுக்கு முன்னதாக உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பிடம் (Food and Drug Administration) விண்ணப்பித்து சான்றிதழும் பெறவேண்டும்.

இந்த மொத்தப் பணிகளும் அடங்கியதே மருந்தாய்வுப் பணி. இதற்கு ஆகும் செலவு, பணியாளர் எண்ணிக்கை மற்றும் கால அவகாசமே நாம் இரண்டு பத்திகளுக்கு முன்பாக குறிப்பிட்டது.

யாரெல்லாம்?

உயிரியல், உயிர்தொழில்நுட்பம், வேதியியல், பல்மருத்துவம், மருந்தாக்கவியல், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த துணைப்பிரிவுகளில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டதாரிகள் அனைவருமே மருந்தாய்வுப் பயிற்சியை முடித்துவிட்டு, இப்பணிகளில் சேரமுடியும். உடல்நலத்துறை வல்லுனர்களுக்கு ஏற்ற சரியான துறை இது.

மருந்தாய்வுப் பயிற்சி

எம்.எஸ்சி., (க்ளினிக்கல் ரிசர்ச்) என்ற முழுநேர, இரண்டாண்டுகள் படிப்பு பல பல்கலைக் கழகங்களால் இந்தியாவில் வழங்கப் படுகிறது. மேலும் பல கல்வி நிறுவனங்கள் முழுநேர, பகுதிநேர, தொலைதூர மற்றும் இணையவழி மூலமாகவும் இப்பயிற்சியினை வழங்குகின்றன.

இதில் சில நிறுவனங்கள் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிலையங்களில் வெறும் செயல்முறை விளக்கங்களையும் (Practical), வேறு சில நிறுவனங்கள் கோட்பாட்டு வகுப்புகளையும் (Theory) மட்டுமே தருகின்றன. எனவே இந்த படிப்பிற்கு இரண்டையும் ஒன்றாக சேர்ந்து தரக்கூடிய செயல்முறைப் பயிற்சி மாணவர்களுக்கு தேவைப்படுகிறது.

இப்பயிற்சியை அண்ணா பல்கலைக் கழகம், சென்னையும் (AU-KBC Research Centre), அப்பல்லோ மருத்துவமனையின் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து அளிக்கிறது. தரமான பயிற்சியும், இந்திய மருந்தாய்வுத் தேவையினை பூர்த்தி செய்யும் அடிப்படையில், ஓராண்டு மற்றும் ஆறுமாதங்கள் படிக்கக்கூடிய இரண்டு விதமான மருத்துவ சான்றிதழ் படிப்புகள் இவர்களால் நடத்தப் படுகின்றன.


அண்ணா பல்கலைக்கழகமும், அப்போலோ மருத்துவக் குழுமமும் இணைந்து நடத்தும் பயிற்சி குறித்த விவரங்களை அறிய :

AU-KBC Research Centre, MIT வளாகம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை. போன் : 044-2223 2711 Extn : 156. கைப்பேசி : 96770/54411/9841744635. மின்னஞ்சல் : ctm@au-kbc.org / aherfcrcourse@gmail.com. இணையத்தளம் : www.au-kbc.org மற்றும் www.apollohospitals.com/research

முழுநேரப் பயிற்சிக்கட்டணம் – ரூ.1,75,000. பகுதிநேரப் பயிற்சிக் கட்டணம் – ரூ.80,000. நான்கு தவணைகளில் செலுத்தலாம். இதே படிப்பிற்கு வேறு சில நிறுவனங்களில் முழுநேரத்துக்கு சுமார் ரூ.3,00,000/- வரையும், பகுதி நேரத்துக்கு தோராயமாக ரூ.85,000/- முதல் ரூ.1,50,000 வரையும் செலவாகும்.

(நன்றி : புதிய தலைமுறை)

10 மே, 2010

அம்மா தின வாழ்த்துகள்!

நேற்று பாடவேண்டிய பாடலை இன்று பாடித் தொலைக்கிறேன்!

அம்மாவென் றழைக்காத உயிரில்லையே...
அம்மாவை வணங்காது உயர்வில்லையே!
நேரில் நின்று பேசும் தெய்வம்..
புரட்சித்தலைவியின்றி வேறிங்கு ஏது...

நேற்று ‘அம்மா' தினம்...

இடதுசாரிகளுக்கும், ம(ட்டை)திமுகவினருக்கும், ஈழத்தாயின் பதிவுலக ரசிகர்களுக்கும், இந்த வார தமிழ்மண நட்சத்திரத்துக்கும் எனது தாமதமான அம்மாதின வாழ்த்துகள்!


அம்மாதின சிறப்பு கோஷம் :

கும்தலக்கடி கும்மாவா..
அம்மான்னா சும்மாவா..?

8 மே, 2010

உடைஞ்சது மண்டை மட்டுமில்லே..

உங்களுக்கு காது கொஞ்சம் பெருசா? இரண்டு பக்கமும் வாழைப்பூவை சொருகினால் தாங்குமா? ஆமாவா? வாங்க சார். உங்களைத்தான் தேடிக்கிட்டிருக்கோம். இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்தோட டிக்கெட் உங்களுக்கு தமிழக அரசின் இலவச டிக்கெட் திட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

படத்தோட கதை என்ன? இருந்தாதானே சொல்றதுக்கு!

திரைக்கதை? அதை ஷூட்டிங் ஸ்பாட்லே பார்த்துக்கலாம்!

வசனம்? வெண்ணிற ஆடை மூர்த்தி இதைவிட நன்றாக எழுதியிருப்பார். படத்தோட நேர்த்தியான, கதைக்கு திருப்பத்தை தரக்கூடிய வசனமே இந்த விமர்சனத்தின் தலைப்பு.

இயக்கம்? சிம்புதேவன். இயக்குவதை காட்டிலும் நன்றாக கார்ட்டூன் போடுவார் என்று தெரிகிறது. படம் முழுக்க விரவியிருக்கும் ஷோலேபுரம், ஜெய்சங்கர்புரம், எம்.ஜி.ஆர் மணிக்கூண்டு, USA புரம், பஜனைக் கோயில் தெரு, பாஸ்மார்க், சப்பல்லோ ஹாஸ்பிட்டல் மாதிரியான நுணுக்கமான சித்தரிப்புகள் ஒரு கார்ட்டூனிஸ்ட்டால் மட்டுமே சிந்திக்க முடிகிற விஷயங்கள்.

ஹீரோ? ஸ்டார்ட்டிங்கில் ஜீரோ. பிக்கப் ஆக பிக்கப் ஆக யமஹா சைலன்ஸர் மாதிரி நல்ல சவுண்டு. நிழலைவிட வேகமாக சுடுவது போன்ற அடாவடிகளை லக்கிலூக் கேரக்டரில் இருந்து லவட்டியிருக்கிறார்கள். காமிக்ஸ்களில் கவுபாயை ரசித்தவர்கள் திருப்தியடைவது கொஞ்சம் கஷ்டம்தான்.

ஹீரோயின்? பத்மப்ரியா மெயின். சந்தியா சைட். லட்சுமிராய் மிடிள். மிடிள் ஹீரோயின் தான் மேட்டரே. லெக்பீஸ் நல்ல உயரம். தொப்புள் பீஸ் நல்ல அகலம். கொஞ்சம் மேலே வந்தால்.. லூஸ்ல விடுங்க. சென்சார்லே தட்டிடுவாங்க.

வில்லன்ஸ்? சாய்குமார் சகிக்கலை. நாசர் குயிக்கன் முருகன் ஷூட்டிங்கில் இருந்து அதே காஸ்ட்யூமில் கிளம்பி வந்திருக்கிறார். நத்திங் ஸ்பெஷல்! படத்தின் ஆகப்பெரிய மைனஸ் பாயிண்ட் மொக்கையான வில்லன்கள்!

இதுவரை இந்த விமர்சனத்தை வாசித்தவர்கள் படம் மொக்கை என்று அவசரப்பட்டு முடிவு கட்டிவிட வேண்டாம். யோசித்துப் பார்த்தால் ப்ளஸ் என்று சொல்ல பெரிய விஷயங்கள் எதுவும் படத்தில் இல்லைதான். ஆனாலும் இரண்டரை மணி நேரத்தில் குறைந்தபட்சம் ஒரு நிமிட இடைவெளிக்கு ஒருமுறையாவது வாய்விட்டு சிரித்துக் கொண்டே இருந்திருக்கிறேன் என்பதுதான் இரும்புக்கோட்டையின் அசலான வெற்றி!

மேஜிக் ஷோ என்பது வெங்காயம் உரிப்பது மாதிரி. காரியம் முடிந்தவுடன் வெறுமைதான் சூழும். ஆனாலும் ஷோவின் போது லைவ்லியான, ஜாலியான அனுபவம் கிடைக்குமில்லையா? இப்படம் தருவது அதே அனுபவத்தைதான்.

செவ்விந்தியத் தலைவனாக வரும் எம்.எஸ்.பாஸ்கரும், அவருடைய டிரான்ஸ்லேட்டரும் செய்யும் அலப்பறைகள் என்ன என்னவென்று வாயால் சொல்லியோ, எழுத்தால் எழுதியோ மாளாது. படத்தை பார்த்து தொலைத்தால் மட்டுமே அனுபவிக்க முடியும். பம்மல் கே. சம்பந்தம் சொன்னமாதிரி இந்தப் படத்தை ஆராயக்கூடாது. அனுபவிக்க வேண்டும்.

கதைநாயகனை வைத்து சிம்புதேவன் வெறுமனே காமெடி மட்டும் செய்ய விரும்பவில்லை. சமகால மாவீரனின் கதையையும் ஊடாக சீரியஸாக சொல்லிகிறார். வேண்டியவர்கள் எடுத்துக் கொள்ளலாம். வேண்டாதவர்கள் வெறும் படமாக பார்த்து சிரித்துவிட்டு வெளியே வரலாம்.

கடந்த படத்தில் கடவுளால் வீழ்ந்த சிம்புதேவன், இந்தப்படத்தில் கவுபாயாக கம்பீரமாக எழுந்து நிற்கிறார்!

4 மே, 2010

பள்ளிக்கல்வி கட்டணம் இனி?

தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பெற்றோர் மத்தியில் எப்போதும் புகைச்சல் இருந்துகொண்டேதான் இருக்கிறது. குறைபட்டுக் கொண்டே தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் கொண்டு சேர்ப்பது நடுத்தர மக்களின் வழக்கமாகவும் இருக்கிறது.

தொடர்ச்சியான இதுபோன்ற புகார்களை கருத்தில் கொண்டு தமிழக அரசு கடந்த ஆண்டு ஒரு சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்தின் மூலமாக கல்விக் கட்டணங்களை ஒழுங்கு படுத்த முடியும் என்றது அரசுத்தரப்பு. சட்டத்தை அமல்படுத்துவதற்கு வாகாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் மூலமாக, தனியார் பள்ளிகளில் கட்டண விகிதங்கள் சரியாக இருக்கிறதா என்று ஆராய ஒரு கமிட்டியும் உருவாக்கப்பட்டது.

தமிழக அரசு கொண்டு வந்திருந்த இந்த சட்டத்தினை எதிர்த்து சில தனியார் பள்ளிகளும், தமிழ்நாடு நர்சரி, மெட்ரிக்குலேஷன் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் சங்கமும் மனுக்கள் தாக்கல் செய்தன. இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் சட்டத்தில் இருந்த ஒரே ஒரு பிரிவினை மட்டும் ரத்துசெய்து சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு எந்த ஆட்சேபணையுமில்லை என்று தீர்ப்பு சொன்னது.

தமிழ்நாடு பள்ளிகள் கட்டண ஒழுங்குமுறை சட்டம் எவ்வகையில் செயல்படும் என்று சட்டத்தின் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.

• இந்த குழு பள்ளிகளுக்கு இவ்வளவுதான் கட்டணங்கள் வாங்க வேண்டும் என்று எந்த வரையறையையும் நிர்ணயிக்காது.

• ஆனால் ஏற்கனவே பெறப்படும் கட்டணங்கள் நியாயமான முறையில் வரையறுக்கப்பட்டு பெறப்படுகிறதா என்பதற்கான விளக்கங்களை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு கோரும்.


• கட்டண விவரங்களும், அந்த கட்டணங்கள் ஏன் நிர்ணயிக்கப்பட்டன என்பதற்கான விளக்கங்களும் பள்ளித் தரப்பிடமிருந்து குழுவுக்கு தரப்பட வேண்டும்.

• நன்கொடை என்ற பெயரில் தேவைக்கு அதிகமாக மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து கூடுதல் தொகையை பள்ளிகள் பெறக்கூடாது. அப்படி பெறப்படுவதாக தெரிந்தால் குழு தலையிடும்.


• பள்ளி நிர்வாகத்தின் கருத்துகள் பெறப்பட்டு, ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் சரியானதா, மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமா என்பதை குழு முடிவு செய்யும்.

• தனியார் பள்ளிகள் தங்களுக்கான கட்டணத்தை நிர்ணயிப்பதற்கும், ஒப்புதல் வாங்குவதற்கும் இச்சட்டத்தில் போதிய வழிமுறைகள் இருக்கின்றன.


• இலவச மற்றும் கட்டாயக் கல்வி குழந்தைகளுக்கான உரிமைச் சட்டம் அமலுக்கு வந்திருக்கிறது. எனவே தனியார் பள்ளிகளிலும் ஏழை குழந்தைகளுக்கு இருபத்தைந்து சதவிகித இடத்தை கட்டாயம் ஒதுக்க வேண்டும்.

• தனியார் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று குழு சோதனையிடவும், தேவைப்பட்டால் ஆவணங்களை சரிபார்க்கவும் அதிகாரத்தை இச்சட்டம் வழங்குகிறது. தேவைப்படும் ஆவணங்களை குழுவால் பறிமுதலும் செய்ய இயலும்.

கடைசியாக சொல்லப்பட்ட பிரிவினை தவிர்த்து இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த எந்த தடையுமில்லை என்றே இப்போது உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கல்வி வணிகமயமாவதை தடுக்கும் நடவடிக்கைகள் இச்சட்டத்தில் இருப்பதாகவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

தனியார் பள்ளிகளிடையே இச்சட்டம் குறித்த அச்சம் நிலவுவதும் தெரிகிறது.

“25 சதவிகிதம் ஏழைக்குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் இடம் அளிக்க சொல்லி சட்டம் சொல்கிறது. இதற்கான கட்டணத்தை அரசு பங்கிட்டுக் கொள்கிறது என்றாலும், அரசு பங்கிடும் தொகை மிகக்குறைவானதாக இருக்குமோ என்ற ஐயம் தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு இருக்கிறது.

சில பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறது என்பதால் எல்லாப் பள்ளிகளையும் சந்தேகக் கண்ணோட்டத்தோடு பார்ப்பது நியாயமில்லை. குழு நிர்ணயிக்கும் கட்டணத்தொகை மிக அதிகமானதாக இருந்தால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை எங்கள் பள்ளிகளில் சேர்ப்பது குறித்து பயப்படுவார்கள். மிகக்குறைவான கட்டணம் நிர்ணயிக்கப்படுமானால் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதும், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதும் கூட தனியார் பள்ளிகளுக்கு சிரமமானதாகிவிடும்” என்கிறார் ராமசுப்பிரமணியன். இவர் மண்ணிவாக்கம் நடேசன் வித்யாசாலா மெட்ரிக்குலேஷன் பள்ளியின் தலைமை பிரின்சிபாலாகவும், கரெஸ்பாண்டெண்ட் ஆகவும் இருக்கிறார்.

“தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டனம் வாங்குகிறார்கள் என்றால் அரசுப் பள்ளிகளை விட அங்கே கூடுதல் வசதிகள் இருப்பதாக பெற்றோர் நம்புகிறோம். ஆசிரியர்கள் அதிகமாக இருப்பார்கள். குழந்தைகளுக்கு கல்விச்சூழல் வசதியானதாக இருக்கும். இதுபோன்ற காரணங்களுக்காகவே பணம் செலவழித்து தனியார் கல்வி நிலையங்களை நாடுகிறோம்.

அரசு இப்பள்ளிகளுக்கு குறைவான கட்டண நிர்ணயம் செய்துவிட்டால், ஏற்கனவே இருக்கும் வசதிகளை பள்ளிகள் குறைத்துவிடுமோ என்று அஞ்சுகிறோம். அதே வேளையில் சில கட்டணங்களை கட்டும்போது இது அநியாயக் கொள்ளையாக இருக்கிறதே என்று நினைப்போம். அதுபோன்ற கூடுதல் கட்டணங்கள் இச்சட்டத்தால் கேள்விக்கு உள்ளாக்கப்படும் என்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று சென்னையை சேர்ந்த கமலக்கண்ணன் சொல்கிறார். இவரது இரண்டு மகள்களும் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வருகிறார்கள்.

“கிட்டத்தட்ட 11,000 தனியார் பள்ளிகள் நம் மாநிலத்தில் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு பள்ளிக்கும், அதன் வசதிகளைப் பொறுத்து தனித்தனியாக கட்டணம் நிர்ணயிப்பது என்பது மலையை உளியால் செதுக்கும் வேலை. 50 உறுப்பினர்கள் இதற்காக இரவும் பகலுமாக பணியாற்றி வருகிறார்கள்” என்று தனது குழுவைப் பற்றி சொல்கிறார் நீதிபதி கோவிந்தராஜ்.

இந்த சட்டம் மற்றும் குழுவின் செயற்பாடுகளால் கல்விக்கட்டணங்கள் குறித்த வெளிப்படையான ஒரு சூழல் உருவாக வேண்டுமென்பதே அனைத்துத் தரப்பினரின் எதிர்ப்பார்ப்பு.

(நன்றி : புதியதலைமுறை)