நல்ல வேலையும், கைநிறைய சம்பளமும் வேண்டுமா? மென்பொருளோ, வன்பொருளோ, ஏதாவதாக இருந்தாலும் சரி. கம்ப்யூட்டர் படியுங்கள். நாளை உலகை ஆளப்போவது தகவல் தொழில்நுட்பத்துறைதான்.
கடந்த பத்தாண்டுகளாக நம் இளைய தலைமுறைக்கு இதைச் சொல்லி சொல்லியே ‘கம்ப்யூட்டர்தான் எதிர்காலம்’ என்ற கருத்தாக்கத்தை ஆழ விதைத்து விட்டிருக்கிறார்கள். இதனால் பெரியளவில் வளர்ந்து வரும் மற்ற துறைகளைப் பற்றியும், அதில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகளைப் பற்றியும் அறியும் ஆர்வம் மாணவர்களிடையே இல்லை. எல்லோருமே கம்ப்யூட்டரில் வேலை பார்க்கப் போய்விட்டால், மற்ற துறைகளில் பணியாற்றப் போவது யார்?
தகவல் தொழில்நுட்பத்துறையின் அசுரப் பாய்ச்சலை எட்டிப் பிடிக்கப் போகும் மற்றொரு துறை மருந்தாய்வு (Clinical Research). மெக்கன்சி ஆய்வறிக்கையின் படி அடுத்த நான்கைந்து ஆண்டுகளில் இந்தியாவில் மட்டுமே தோராயமாக ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற வாய்ப்பிருக்கும் துறை இது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இந்திய மருந்துத்துறை ஒவ்வொரு ஆண்டும், ஆண்டுக்கு 12.3 சதவிகித கூடுதல் வளர்ச்சியை பெற்று வருகிறது. உலகின் முதல் பத்து இடங்களுக்குள்ளாக இந்திய மருந்தாய்வுத் துறையும் இடம்பெறப் போகிறது.
பன்னாட்டு மருந்தாய்வு நிறுவனங்களின் கழுகுப்பார்வை ஏற்கனவே இந்திய சந்தையின் மீது அழுத்தமாக பதிந்திருக்கிறது. ஏனெனில் உலகளவில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது மக்கள் தொகை, மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களின் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகம். ஆய்வுகளுக்கு துணை செய்யும் தகவல் தொழில்நுட்பம் குறித்த போதுமான அறிவும் இந்தியர்களுக்கே அதிகம். உலகத் தொடர்புமொழியான ஆங்கிலத்திலும் நாம் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளோம். குறைந்த செலவில், தரமாக பணிகளை முடித்துத் தருபவர்கள் என்ற பெயரும் இந்தியர்களுக்கே உரித்தானது.
இன்றைய நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட மருந்தாய்வு நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றில் ஏழாயிரம் முதல் எட்டாயிரம் பேர் மட்டுமே இன்றைய தேதியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் மூன்று வருடங்களில் இத்துறையில் பணியாற்ற குறைந்தபட்சம் ஐம்பதாயிரம் பேர் தேவை. உலகளவில் லட்சக்கணக்கானோர் தேவைப்படுவார்கள். ஆட்களுக்கு பற்றாக்குறை இருக்கும் துறை என்பதால் சம்பளம் பற்றி சொல்லவேத் தேவையில்லை.
சமீபத்தில் உலகை தேக்கிய பொருளாதார மந்தத்தால் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றியவர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டது. எத்தகைய வீழ்ச்சியையும் தாக்குப்பிடித்து, முன்னேற்றம் கண்டு இயங்கும் துறைகள் மிக சிலவே. உணவு, உடை, கல்வி ஆகியத் துறைகளுடன் மருத்துவத்துறையும் இவற்றில் ஒன்று. எனவே மருந்தாய்வுத் துறையில் பணியாற்றுபவர்கள் Recession என்ற சொல்லுக்கு அஞ்சவேண்டிய நிலையே இருக்காது.
மருந்தாய்வு என்றால் என்ன?
உயிர்காக்கும் மருந்துகள் எப்படி உருவாகிறது தெரியுமா? அவற்றுக்கு செய்யப்படும் செலவு என்ன? ஒரு மருந்தைத் தயாரிக்க எவ்வளவு பேர் உழைக்க வேண்டும்? எவ்வளவு காலம் ஆகும்? யூகித்துச் சொல்லுங்கள், பார்ப்போம்.
நம்புங்கள். ஒரே ஒரு உயிர் காக்கும் மருந்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரை சுமார் ஐயாயிரம் கோடி ரூபாய் வரை செலவழிக்க வேண்டியிருக்கிறது. சராசரியாக ஐயாயிரம் பேரின் உழைப்பு இதற்கு பின்னணியில் அவசியமாகிறது. பத்து முதல் பண்ணிரண்டு ஆண்டுகள் தேவைப்படுகிறது. சில மருந்துகளுக்கு பதினைந்து ஆண்டுகள் கூட ஆகலாம்.
சோதனைச்சாலையில் ஒரு மருந்து கண்டறியப்பட்டு விட்டதுமே, அது நேரடியாக மக்களுக்கு சந்தையில் கிடைத்துவிடாது. அது முதலில் விலங்குகளுக்கு தரப்பட்டு பரிசோதிக்கப்படும். பின்னர் தன்னார்வலர்களாக வரும் மனிதர்களுக்கு (நல்ல உடல்நலத்தோடு இருப்பவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும்) தரப்பட்டு பரிசோதிக்கப்படும். எந்தவிதப் பக்கவிளைவுகளோ, எதிர்விளைவுகளோ ஏற்படாத பட்சத்தில் மட்டுமே பயன்பாட்டுக்கு கொண்டு வரமுடியும். பயன்பாட்டுக்கு முன்னதாக உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பிடம் (Food and Drug Administration) விண்ணப்பித்து சான்றிதழும் பெறவேண்டும்.
இந்த மொத்தப் பணிகளும் அடங்கியதே மருந்தாய்வுப் பணி. இதற்கு ஆகும் செலவு, பணியாளர் எண்ணிக்கை மற்றும் கால அவகாசமே நாம் இரண்டு பத்திகளுக்கு முன்பாக குறிப்பிட்டது.
யாரெல்லாம்?
உயிரியல், உயிர்தொழில்நுட்பம், வேதியியல், பல்மருத்துவம், மருந்தாக்கவியல், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த துணைப்பிரிவுகளில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டதாரிகள் அனைவருமே மருந்தாய்வுப் பயிற்சியை முடித்துவிட்டு, இப்பணிகளில் சேரமுடியும். உடல்நலத்துறை வல்லுனர்களுக்கு ஏற்ற சரியான துறை இது.
மருந்தாய்வுப் பயிற்சி
எம்.எஸ்சி., (க்ளினிக்கல் ரிசர்ச்) என்ற முழுநேர, இரண்டாண்டுகள் படிப்பு பல பல்கலைக் கழகங்களால் இந்தியாவில் வழங்கப் படுகிறது. மேலும் பல கல்வி நிறுவனங்கள் முழுநேர, பகுதிநேர, தொலைதூர மற்றும் இணையவழி மூலமாகவும் இப்பயிற்சியினை வழங்குகின்றன.
இதில் சில நிறுவனங்கள் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிலையங்களில் வெறும் செயல்முறை விளக்கங்களையும் (Practical), வேறு சில நிறுவனங்கள் கோட்பாட்டு வகுப்புகளையும் (Theory) மட்டுமே தருகின்றன. எனவே இந்த படிப்பிற்கு இரண்டையும் ஒன்றாக சேர்ந்து தரக்கூடிய செயல்முறைப் பயிற்சி மாணவர்களுக்கு தேவைப்படுகிறது.
இப்பயிற்சியை அண்ணா பல்கலைக் கழகம், சென்னையும் (AU-KBC Research Centre), அப்பல்லோ மருத்துவமனையின் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து அளிக்கிறது. தரமான பயிற்சியும், இந்திய மருந்தாய்வுத் தேவையினை பூர்த்தி செய்யும் அடிப்படையில், ஓராண்டு மற்றும் ஆறுமாதங்கள் படிக்கக்கூடிய இரண்டு விதமான மருத்துவ சான்றிதழ் படிப்புகள் இவர்களால் நடத்தப் படுகின்றன.
அண்ணா பல்கலைக்கழகமும், அப்போலோ மருத்துவக் குழுமமும் இணைந்து நடத்தும் பயிற்சி குறித்த விவரங்களை அறிய :
AU-KBC Research Centre, MIT வளாகம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை. போன் : 044-2223 2711 Extn : 156. கைப்பேசி : 96770/54411/9841744635. மின்னஞ்சல் : ctm@au-kbc.org / aherfcrcourse@gmail.com. இணையத்தளம் : www.au-kbc.org மற்றும் www.apollohospitals.com/research
முழுநேரப் பயிற்சிக்கட்டணம் – ரூ.1,75,000. பகுதிநேரப் பயிற்சிக் கட்டணம் – ரூ.80,000. நான்கு தவணைகளில் செலுத்தலாம். இதே படிப்பிற்கு வேறு சில நிறுவனங்களில் முழுநேரத்துக்கு சுமார் ரூ.3,00,000/- வரையும், பகுதி நேரத்துக்கு தோராயமாக ரூ.85,000/- முதல் ரூ.1,50,000 வரையும் செலவாகும்.
(நன்றி : புதிய தலைமுறை)
அனைவருக்கும் மிகவும் பயனுள்ள பதிவு .
பதிலளிநீக்குஎதிர்காலத்தின் ஏற்படப்போகும் மாற்றங்களில்
இப்போதைய கம்ப்யூட்டர்கள் மோகம் காணாமல் போகலாம்
YUVA, APPRECIATE YOU FOR THIS WONDERFUL POST ! IT WILL BE REALLY USEFUL FOR CARRER SELECTION TO MOST YOUNGSTERS WHO READ UR BLOG ! KEEP UP THE GOOD WORK !
பதிலளிநீக்கு