பேசல் மிஷன் (Basel Mission) மருத்துவமனை. 1834ல் சுவிட்சர்லாந்து நாட்டின் பேசல் நகரில் நிறுவப்பட்ட சேவை அமைப்பின் ஒரு கிளை. 1901ஆம் ஆண்டு வாக்கில் வடக்கு கர்நாடகப் பகுதிகளில் மிஷனரி அமைப்புகள் பரவலாகப் பணியாற்றியது. ஏனெனில் அப்போது அப்பகுதி மக்கள் பிளேக், மலேரியா போன்ற தொற்றுநோய்களால் கடுமையான உயிரிழப்பை சந்தித்துக் கொண்டிருந்தார்கள்.
நிரந்தரமான மருத்துவ உதவி தேவைப்பட்ட அப்பகுதியில், பேட்கேரி என்ற ஊரில் 1902ஆம் ஆண்டு பேசல் மிஷன் அமைப்பினரால் இம்மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஏழை மக்களுக்கு தொடர்ச்சியான மருத்துவச் சேவையை வழங்கி வருகிறது. உள்ளூர் மக்களால் இன்றும் ‘ஜெர்மன் ஆஸ்பத்திரி’ என்றே அழைக்கப்படுகிறது. ஏனெனில் ஒரு காலக்கட்டத்தில் இங்கே பணிபுரிந்த பெரும்பாலான மருத்துவர்கள் ஜெர்மானியர்கள். மருத்துவமனையோடு ஒரு ஆதரவற்றோர் இல்லமும், போலியோவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான விடுதியும் இயங்குகிறது.
1970 வரை இங்கு பணிபுரிந்த மருத்துவர்கள் ஐரோப்பாவில் இருந்து வந்தவர்கள். மிஷனரி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். ஒரு கட்டத்தில் ஐரோப்பாவிலிருந்து வந்துகொண்டிருந்த பொருளாதார உதவிகள் நாளடைவில் நின்றுவிட்டன. மருத்துவமனை தொடர்ச்சியாக இயங்க, சிரமப்பட்டது. 1970களின் இறுதியில் மூடக்கூடிய நிலையும் ஏற்பட்டது.
1980லிருந்து 85 வரை தொடர்ச்சியாக இங்கே பணிபுரிந்த இந்தியப் பெண் மருத்துவர் ஒருவரின் தன்னலமில்லாத உழைப்பால் மீண்டும் புத்துயிர் பெற்றது. இவர் பணிபுரிந்த காலக்கட்டத்தில் நிறைய மருத்துவர்கள் தங்கள் பங்களிப்பை இப்பகுதி மக்களுக்கு தர தாமாகவே முன்வந்தார்கள். முழுநேர மருத்துவர்களாக சிலரும், பகுதிநேர மருத்துவர்களாக பலரும் பணிக்கு வந்தார்கள்.
1980-83 வருடங்களில்தான் டாக்டர் சாலமன் செல்லையா இங்கே மருத்துவ அதிகாரியாக பணியாற்ற ஆரம்பித்தார். பின்னர் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் பொது மருத்துவம் முடித்து 1986ல் மருத்துவ சூபரிண்டெண்ட் ஆக இங்கே மீண்டும் பணிக்கு சேர்ந்தார். சுற்றுப்பகுதிகளில் சுகாதாரக்கேட்டால் பரவும் நோய்கள், போதிய ஊட்டச்சத்து இல்லாமை, பாம்புக்கடி, தற்கொலை என்று கிராமப்புற மக்கள் இன்னமும் இறந்துகொண்டே இருந்தது அவருக்கு தாங்கமுடியாத வேதனையை தந்தது.
டாக்டர் சாலமன் தலைமையில் இளம் மருத்துவப்படை திரண்டது. மருத்துவமனையை தரம் உயர்த்தி மக்களுக்கு மகத்தான சேவையை வழங்கிட உறுதிபூண்டது.
உடனடியாக செய்யவேண்டிய பணிகளை பட்டியல் இட்டார்கள். அவசரச்சிகிச்சைப் பிரிவு அவசியம். எக்ஸ்ரே எடுக்கும் வசதி வேண்டும். நோயாளியின் இரத்தத்தை சுத்திகரிக்கக் கூடிய வசதியை ஏற்படுத்த வேண்டும். தங்கி சிகிச்சை பெற நோயாளிகளுக்கு படுக்கை வசதி ஏற்படுத்த வேண்டும். அறுவைச் சிகிச்சைக்கான கூடம் தேவை. நவீன லேப், மருந்தகம் முக்கியம். நகர்ப்புற மக்களுக்கு என்னென்ன மருத்துவ வசதிகள் கிடைக்கிறதோ, அவை எல்லாவற்றையும் இங்கேயே ஏற்படுத்த வேண்டும்.
பட்டியலிட நன்றாகதானிருக்கிறது. கிராமப்புறத்தில் எல்லா வசதிகளோடும் ஒரு நவீன மருத்துவமனை. ஏற்படுத்த வேண்டுமே? எப்படி?
டாக்டர் சாலமன் கனவு கண்டார். கனவினை நனவாக்க இரவுபகலாக உழைத்தார். முப்பது வருடங்களாக இங்கேயே தங்கியிருக்கிறார். தன்னிடம் வரும் நோயாளிகளிடம் மிகக்குறைந்த கட்டணத்தையே வாங்கினார். சிறுதுளி, பெருவெள்ளம். ஒரு நாளைக்கு குறைந்தது 250 பேர் சிகிச்சைக்காக வர ஆரம்பிக்க, சொல்லிக் கொள்ளும்படி வருமானம் வந்தது. மருத்துவமனை வெளியே எந்த உதவியையும் பெறாமல் தன்னைத்தானே உருவாக்கிக் கொள்ள ஆரம்பித்தது. நல்ல கனவு தன்னைத்தானே நனவாக்கிக் கொள்ளும்.
இன்று அம்மருத்துவமனையில் எல்லா வசதிகளும் இருக்கிறது. எப்படி இயங்குகிறது?
• சிறப்பு மருத்துவரிடம் சிகிச்சைப் பெற ரூ.25/- மட்டுமே கட்டணம். இருபது வருடங்களாக இது மட்டுமே கட்டணம்.
• மருத்துவர்கள் எட்டு மணி நேரத்துக்கும் மேலாக உழைக்கிறார்கள். தேவைப்படும் பட்சத்தில் இரவுப்பணியையும் சேர்த்து தொடருகிறார்கள்.
• அவசரச் சிகிச்சைப் பிரிவில் தங்கி சிகிச்சைப் பெற கட்டணம் ஒரு நாளைக்கு ரூ.100/- மட்டுமே பெறப்படுகிறது.
• மருத்துவமனையில் பணிபுரிபவர்கள் தங்கள் பணிகளை மட்டுமே பார்க்காமல் மற்றப் பணிகளையும் இழுத்துப் போட்டு செய்கிறார்கள். உதாரணமாக எக்ஸ்ரே எடுப்பவர், அவசரத்துக்கு கவுண்டரில் அமர்ந்து பணம் கூட வசூலிக்கிறார்.
• மருந்தகம் மற்றும் நவீன லேப் ஆகியவற்றின் மூலமாக வரும் வருமானத்தை வைத்து, மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் குறைந்தக் கட்டண சிகிச்சை செலவை ஈடு கட்டுகிறார்கள்.
• குறைந்த கட்டணம்தான் நோயாளிகளிடம் பெறப்படுகிறது என்றாலும், மருத்துவமனையில் பணிபுரியும் எல்லோருக்கும் நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது.
நகர்ப்புற மருத்துவக் கூடங்களில் நல்ல வருமானம் வருகிறது. அதனால் நல்ல கட்டமைப்பை ஏற்படுத்த முடிகிறது. நகர்ப்புற மருத்துவமனைகள் நவீன வசதிகளோடு இருப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை. பெசல் மருத்துவமனையைப் போல கிராமப்புறங்களில், குறைந்த கட்டணம் வாங்கி இயங்கும் ஒரு மருத்துவமனை நவீனமாக செயல்படுவதுதான் ஆச்சரியமானதும், பாராட்டத்தக்கதும் ஆகும். கலாமின் பாராட்டுகளைப் பெற டாக்டர் சாலமனும், அவரது குழுவினரும் இதனாலேயே தகுதி உடையவர்கள் ஆகிறார்கள்.
மருத்துவம் என்பது சேவை. பணம் சம்பாதிக்கும் தொழில் அல்ல. இதை உணர்ந்ததால் தான் இன்று டாக்டர் சாலமன் குன்றிலிட்ட விளக்காக பிரகாசிக்கிறார். ஆயிரக்கணக்கான கிராமவாசிகள் அவரை தினம் தினம் வாழ்த்திக் கொண்டாடுகிறார்கள்.
ஒரு மருத்துவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு டாக்டர் சாலமன் இன்று ஒரு உதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஒரு மருத்துவமனை எப்படி செயல்படவேண்டும் என்பதற்கு மாதிரியாக பேசல் மருத்துவமனை தனது சேவைகளை வழங்கிக் கொண்டிருக்கிறது.
ஒரு மருத்துவர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கும் யாரோ முன்மாதிரியா இருக்காராமே...? எங்கூருல பேசிட்டாங்க..
பதிலளிநீக்குஉமது பதிவை யாரோ ஆட்டய போட்டுட்டாங்க லக்கி! அப்படியே தலைப்பை கூட மாத்தாம ஜெராக்ஸ் எடுத்துருக்காஙக!
பதிலளிநீக்குhttp://nidurseasons.blogspot.com/2010/05/blog-post_20.html
பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குநல்ல தகவல் நன்றி.
பதிலளிநீக்குvisit my blog
www.vaalpaiyyan.blogspot.com
Lucky and கார்மேகராஜா: I opened the link provided by கார்மேகராஜா and at the end of article it is mentioned that :
பதிலளிநீக்குஎழுதியவர் யுவகிருஷ்ணா
along with Lucky's photo.
I think it would have been good if prior permission from Lucky was obtained.
தகவலுக்கு நன்றி லக்கி
பதிலளிநீக்கு