14 மே, 2010

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?


“சமீபத்தில் என்னுடைய சொந்த ஊருக்கு குடும்பத்தோடு சென்றிருந்தேன். மாடி அறையில் இரு பக்கங்களிலும் ஒரு அடி விட்ட்த்தில் ஒரு வட்டமான துளை. அதிலிருந்து ஒரு குருவி வெளியே ‘கிச் கிச்’ என சத்தமிட்டுக்கொண்டே பறந்துவந்தது. அதைக் கண்ட என்னுடைய பேத்தி ‘தாத்தா இது என்ன பறவை?’ என்று கேட்டாள்.

திகைத்துப் போனேன். சென்னையில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக நிறைய குருவிகளை கண்டிருக்கிறேன். ஆனால் இப்பொழுது எங்குமே காணப்படவில்லை. நகரில் வளர்ந்த என்னுடைய பேத்திக்கு, அந்தப் பறவையின் பெயர் கூட தெரியவில்லை. என் நினைவுக்கு தெரிந்தவரையில் பத்தாண்டுகளாக, குருவிகளை கண்டதாக நினைவில்லை. சிட்டுக்குருவிகள் எல்லாம் எங்கே போனது? ஏன் போனது? யாராவது எனக்கு பதில் கூறுவார்களா?” என்று புதிய தலைமுறைக்கு கடிதம் எழுதியிருந்தார் சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வாசகர் கே.திரவியம்.

கடிதத்தை கண்டதும் நமக்குள்ளும் ‘சிட்டுக்குருவிகள் எங்கே போச்சு?’ என்ற கேள்வியே எழுந்தது. சுற்றுச்சூழல் ஆர்வலரும், இயற்கை உலக நிதியகத்துக்கான (WWF-India) அறங்காவலருமான தியடோர் பாஸ்கரனிடம் வாசகரின் கடிதத்தைக் காட்டினோம். அவர் விரிவாகவும், வேதனையோடும் பேச ஆரம்பித்தார்.

“பறவைகளைப்பற்றி என்னிடம் பேசுபவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி 'சிட்டுக்குருவிகளை இப்போது ஏன் காண முடிவதில்லை? மனிதருக்கு மிக அருகில் உரிமையுடன் வாழும் பறவை. புள்ளினத்தைப்பற்றி ஒன்றும் அறியாதவரும் சிட்டுகுருவியை இனங் கண்டுகொள்ள முடியும்.

சிறிது எண்ணிப் பார்த்தோமானால் சிட்டுக்குருவிகள் மட்டுமல்ல.. முன்பு நாம் எளிதில் கண்ட பல பறவைகளையும் கூட இப்போது அரிதாகத்தான் பார்க்க முடிகின்றது. அறுபதுகளில் சென்னை மவுண்ட் ரோடில் இருந்த ஒரு அரசு விடுதியில் நான் தங்கும் போதெல்லாம் காலையில் மெரினாவிற்கு நடந்து போவதுண்டு. அப்போது வாலாஜா சாலையில், அரசு விருந்தினர் விடுதிக்கு அடுத்த ராஜதானி கல்லூரி மகளிர் விடுதியின் முன் ஒரு பெரிய புளிய மரம் இருந்தது. அதனடியில் பலர் நின்று கொண்டு கூப்பிய கைகளுடன் மரத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும் காட்சியை தினமும் பார்த்ததுண்டு. அந்த புளியமரத்தில் அடைந்திருந்த பல செம்பருந்துகள் காலையில் மரத்தை விட்டு பறந்து செல்லும் போது அவைகளைத் தரிசிக்கத்தான் அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.

இன்று சென்னையில் செம்பருந்தை யாராவது உங்களால் காண முடிகின்றதா? வெண்கொக்குகள் மாலையில் கூட்டம் கூட்டமாக வடதிசை நோக்கிப் பறப்பதை இன்று நாம் காணமுடிகின்றதா? கிளிகளின் கூட்டம் இன்று எங்கே போனது?

சுற்றுப்புற சூழலின் இயல்பு கெடாமலிருப்பதற்கு பறவைகள் ஒரு குறியீடு. ஒரு வயல்வெளியிலோ அல்லது ஏரியிலோ பறவைகளே இல்லாதிருந்தால் அங்கு சுற்றுச்சூழல் மாசுபட்டிருக்கிறது என்றும், அதனால் நீரில் வேதியல் பாதிப்பு இருக்கிறது என்றும் யூகிக்கலாம். ரசாயன பூச்சிமருந்துகளாலும் வேதியல் உரங்களாலும் நீரும் நிலமும் மாசுபடுத்தப்பட்டுவிட்டன. பறவைகளின் வாழ்விடங்கள் மாசுபடுவதற்கு முக்கிய காரணியான DDT என்ற நச்சு மருந்து 1942இல் பால் முல்லர் என்ற அறிவியலாளர் உருவாக்கி அதற்காக நோபல் பரிசும் பெற்றார்.

நமது நாட்டில் 1949இல் அறிமுகம் செய்யபட்ட DDT சார்ந்த இம்மருந்துகளை ஐம்பதுகளில் வேளாண்மையில் பெருமளவில் பயன்படுத்த ஆரம்பித்தனர். பறவைகளுக்கு பிடித்தது கேடுகாலம். பூச்சிக்கொல்லி மருந்துகள் பல அவதாரங்கள் எடுத்து பல பெயர்களுடன் வெளிவந்தன. இன்று நம்நாட்டில் பூச்சிக்கொல்லி மருந்துத் தொழிலில் மட்டும் 5000 கோடி ரூபாய் புரள்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு ஆண்டிற்கு 60,000 டன் நச்சுமருந்துகள் பயன்படுத்தப்படுகின்றது என்கிறது ஒரு கணிப்பு.

பயன்படுத்த ஆரம்பித்து இருபது வருடம் கழித்தே இதன் தீயவிளைவுகளை உணர முடிந்தது. இந்த நச்சு மருந்துகளின் - அவைகளில் பெயர்களை விட்டுவிடுவோம் - வேதியல் கூற்றின் அடிப்படை இயல்பு அவைகளின் அழியாத்தன்மை (persistence). எந்த இடத்திலும், எந்த உடலிலும் அது வீரியம் குறையாமல் இருக்கும். நீரிலிருந்து, தவளையில் உடலின் சென்று, பின் அதை இரையாகக்கொள்ளும் செம்பருந்துவின் உடலின் தங்கி அதை அழித்து விடுகின்றது. பருந்துகள் இடும் முட்டையிலிருந்து குஞ்சுகள் பொரிக்காது. சிட்டுகுருவிக்கும் இதே கதிதான். அது உண்ணும் சிறு தானியங்களிலிருக்கும் நச்சுப்பொருள் அதன் இனப்பெருக்கத்தை தடுக்கின்றது.

பூச்சிமருந்துகள் தீமை இழைக்கும் சிறு உயிரினங்களை மட்டுமல்லாமல் மருந்து தெளிக்கப்படும் இடத்திலுள்ள எல்லா பூச்சி புழுக்களையும் அழிக்கின்றன. மழைக்காலத்தில் இந்த மருந்துகள் நீரில் கரைந்து ஏரிகளையும் குளங்களையும் அடைந்து அங்கு வாழும் சிற்றுயிர்களையும் நாசம் செய்கின்றது. இந்த உயிரினங்களை இரையாகக்கொண்டு வாழும் புள்ளினங்கள் மறைய ஆரம்பிக்கின்றன.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன், எந்த சமயத்தில் வானத்தைப் பார்த்தாலும் ஏதாவது பறவைகளைக் காண முடியும். இப்போது நிலைமை வேறு. சில வாரங்களுக்கு முன், சித்தாலப்பாக்கம் அருகே ஒரு மாலையில், ஒரு பாறையின் மீது இருந்து சூரியன் மறைவதைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அரைமணி நேரம் இருந்திருப்போம். அந்தப் பரந்த வானத்தில் அந்த மாலையில் நாங்கள் எந்தப்பறவையையும் பார்க்கவில்லை. இரு வாலாட்டி குருவிகளைத்தவிர. புள்ளினம் எவ்வளவு அரிதாகிவிட்டது என்று புலப்பட்டது. சிட்டுக்குருவியும் இதுபோலத்தான் சுற்றுச்சூழல் மாசுவிற்கு பலியாகி விட்டது.

அதுமட்டுமல்ல. பழைய காலத்தில் ஓட்டு வீடுகள் அதிகம் இருந்த போது அந்த ஓட்டின் இடைவெளியில் கூடிகட்டி பல்கி பெருகிக் கொண்டிருந்தது. ஓட்டு வீடுகள் மறைந்து கான்கிரீட் கட்டடங்கள் வந்த பின் குருவிக்கு கூடு கட்ட இடமில்லை. மூன்றாவது காரணம் செல் தொலைபேசி டவர்கள் என்று சில அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த டவர்களிருந்து உருவாகும் கதிரியக்கம் பறவைகளை இனப்பெருக்கத்தை சீரழிக்கின்றது என்று சென்னையிலுள்ள உயிரியிலாளர் ரஞ்சித் டேனியல் கூறுகின்றார். சென்னை நகரிலிருந்த சிட்டுக்குருவிகள் மட்டுமல்ல, புல்புல், மணிப்புறா, செம்பருந்து போன்ற அன்றாடம் எளிதாகக் காணக்கூடிய புள்ளினங்களும் அரிதாகி விட்டன என்கிறார் டேனியல்.

கோவையிலுள்ள சலிம் அலி பறவையியல், இயற்கை வரலாறு மையத்திலுள்ள உயிரியலாளர்கள் ஒரு பரிசோதனை செய்து இதை அறிந்துள்ளனர். ஐம்பது முட்டைகளை செல் டவர் கதிரியக்கத்தின் தாக்கத்தில் முப்பது நிமடம் வைத்து பின் பரிசோதித்தில் எல்லா முட்டைகளில் கருக்களும் சிதைக்கப்பட்டிருந்ததை பதிவு செய்திருக்கின்றன.

சிட்டுக்குருவிகளில் ஆண்குருவிக்கும் பெண்குருவிக்கும் தோற்றத்தில் வித்தியாசம் உண்டு. ஆண்குருவியின் இறக்கைகளில் சிறிது செங்கல் நிறமிருக்கும். கூடுகட்டி இனப்பெருக்கம் செய்யும் காலத்தில் ஆணும் பெண்ணும் சேர்ந்தே கூடுகட்டும். குஞ்சுகள் பொரித்தவுடன் இரண்டும் இரைதேடிக்கொண்டு வந்து குஞ்சுகளுக்கு ஊட்டி விடும். சிட்டுக்குருவிகள் தானியங்களை உண்டு வாழ்ந்தாலும், குஞ்சுகளுக்கு புழு, பூச்சிகளைத்தான் இரையாகக் கொடுக்கின்றன.

இப்படி ஒன்றாக, ஆணும் பெண்ணும் சேர்ந்து குஞ்சுகளை பராமரிப்பதை சில பறவை இனங்களே செய்கின்றன. மயிலினத்தில் பெண்மயில் மட்டுமே குஞ்சுகளை பராமரிக்கும். மனிதருடன் மிக நெருக்கமாக இருந்த பறவை சிட்டுக்குருவி. வீடுகளிலும் பொது இடங்களிலும் அதன் குரல் கேட்டுக்கொண்டேயிருக்கும். இன்று நம்மை விட்டு விலகிப்போய் விட்டது. பறவை ஆர்வலர் யாரவது சிட்டுகுருவி ஒன்றைக் கண்டால் உடனே மின்னஞ்சலில் tamilbirds என்ற யாஹ¥ குழுவிற்கு செய்தி அனுப்பி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார்கள்!” என்று முடித்தார் தியோடர் பாஸ்கரன்.

மனித இனம் எது எதையோ தேடி, தம்மிடம் இருப்பதை இழந்து வருகிறது என்பது மட்டும் அவரது பேச்சில் புரிகிறது.

(நன்றி : புதிய தலைமுறை)

11 கருத்துகள்:

  1. அதே மாதிரி ‘மைனா’ என்றொரு பறவை..

    என் சின்ன வயதில் பார்த்ததாக ஞாபகம்....

    பதிலளிநீக்கு
  2. மிக வருத்தமாக இருக்கிறது இதை படிக்கையில்.

    ஆனால் செல் டவர் சிக்னல் இதற்கு காரணம் என்பதை ஒத்துக்கொள்ள முடியவில்லை.

    சிங்கையில் நம் ஊரைவிட அதிக சிக்னல் ஆனால் இங்கு பறவைகள், சிட்டுக்குருவிகள் ஓரளவு இருக்கிறது.

    பூச்சிக்கொல்லிகள் காரணமாக இருந்திருக்கலாம்

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா12:58 PM, மே 14, 2010

    மாடப்புறாக்கள் பெருநகரங்களில் இல்லையெனபது இல்லை. அவைகள் காணப்படுகின்றன.

    எடுத்துக்காட்டு: கேட்வேய் ஆஃப் இந்தியா, பம்பாய்.

    அவைகள் ஏன் இன்னும் வாழ்கின்றன? அவைகளும் தானியங்களை உண்டுதான் வாழ்கின்றன. அவைகள் ஏன் பாதிக்கப்படவில்லை?

    பதிலளிநீக்கு
  4. போன மாதம் காஷ்மீர் சென்ற போது அங்கு நாங்கள் சிட்டுக்குருவிகள் நிறைய பார்த்தோம். குழந்தைகளுக்கு அறிமுகம் செய்தோம்..

    பதிலளிநீக்கு
  5. அமுதா!

    இந்தியாவிலேயே குப்பைகள் அதிகமான நகரங்கள் பட்டியலில் ஸ்ரீநகர் நான்காவது இடம் பிடித்திருப்பதாக கடந்த வாரம் படித்தேன். உண்மையா? :-(

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா2:57 PM, மே 14, 2010

    There are a lot of chittu kuruvis in Bangalore and Hyderabad airports. Strange place for us to find them... so much of noise, people etc and still they are there .. lots and lots of them.. Paavai

    பதிலளிநீக்கு
  7. வருத்தமாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
  8. அமெரிக்காவின் தேசியப் பறவையான கழுகு இனமும் இதே DDT யால் அழிந்து வருவதைப் புரிந்து கொண்ட அரசு, DDT-based பூச்சிக் கொல்லிகள் அனைத்தையும் தடை செய்தது. நம் அரசுக்கு இது போல செய்ய மனம் வருமா?

    ஆமா கெமிக்கல் அண்ட் ஃபெர்டிலைசர் அமைச்சர் யாருங்க?

    பதிலளிநீக்கு
  9. நல்லதொரு பதிவு.வாழ்த்துக்கள் தியோடர்.

    பதிலளிநீக்கு
  10. இங்கு அமெரிக்காவில், எங்கள் வீடு வாசலில் ஒரு கூடை கட்டி வைத்துள்ளோம். அதில் அத்தனை குருவிகள் வந்து போகின்றன. இந்த கட்டுரையை காட்டி ஏன் பெண்களிடம் சொன்ன போது, அவர்கள், சரி, அடுத்த தடவை இந்திய போகும்போது, எடுத்து செல்வோம் என்றனர்.

    பதிலளிநீக்கு
  11. நிஜம் அறைகிறது !! நவீன தொழில் நுட்பம் தவிர்க்கப்படமுடியாதது .....அதனால் பறவைகளுக்கு பாதிப்பு என்பது மிகவும் வருத்தத்தை அளிக்கின்றது :((

    பதிலளிநீக்கு