13 மே, 2010

கரும்பு தின்ன கூலி! பொறியியல் படிக்க சம்பளம்!

“வேலைபார்க்கத்தான் சம்பளம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். எங்கள் நிறுவனத்தில் படிப்பதற்கே நாங்கள் சம்பளம் தருகிறோம்!” என்கிறார்கள் ஸோஹோ (Zoho) நிறுவனத்தினர். ஸோஹோ என்ற பெயர் மென்பொருள் வட்டாரங்களில் உலகப் பிரபலம். “இதென்ன கலாட்டா?” என்று யோசிக்கும்போதே, ஒரு வருடம் படித்து முடித்தவுடன் எங்கள் நிறுவனத்திலேயே தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியும் காத்திருக்கிறது என்று அடுத்த தவுசண்ட்வாலா சரவெடியையும் சரசரவென வெடித்துக் கொண்டே போகிறார்கள்.

விடு ஜூட். ஸோஹோ யுனிவர்சிட்டிக்கு...

சென்னையின் தெற்கு எல்லையான வேளச்சேரி விஜயநகரம் பேருந்து நிறுத்தத்துக்கு எதிரில் ஒடுங்கியிருக்கும் ஒரு சந்துக்குள் நுழைந்தால்.. பிரம்மாண்டமான வளாகத்தில் வீற்றிருக்கிறது ஸோஹோ கார்ப்பரேஷன். ஒரு கல்லூரிக்குள் நுழைந்தது மாதிரியான அனுபவம். வண்ண வண்ண உடைகளோடு ஊழியர்கள்.

“மைக்ரோசாஃப்டுக்கு நாங்கதான் நேரடி போட்டியாளர் தெரியுமில்லே?” வாசலிலேயே செக்யூரிட்டி கலாய்க்கிறார்.

உள்ளே நுழைந்தால் சாட்டிங், பிளாக்கிங் (Blogging) என்று ஊழியர்கள் பிஸியாக இருக்கிறார்கள். மற்ற ஐடி நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட விஷயங்கள் இவை.

“என்ன இதெல்லாம்?”

“இதெல்லாம் இல்லாம வேலை செய்யுறவங்களுக்கு எப்படிங்க கிரியேட்டிவிட்டி டெவலப் ஆகும்?” சீரியஸாக சொல்கிறார்கள் நிர்வாக ஊழியர்கள். கூகிள் நிறுவனத்தின் பணியாற்றும் பாணி இது என்பதை ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறோம். ஒரு இந்திய நிறுவனத்தில் இதுபோன்ற பணிக் கலாச்சாரத்தை பார்ப்பது இதுவே முதன்முறை.

நிஜமாகவே ஸோஹோ ஒரு வித்தியாசமான நிறுவனம்தான். மென்பொருள் என்பது விற்பனைக்கான தயாரிப்பு என்பது இன்றுவரை மென்பொருள் வட்டாரத்தில் சொல்லப்படும் கூற்று. ஸோஹோ நிறுவனத்தின் அடிப்படையே, “மென்பொருள் என்பது வெறுமனே தயாரித்து, விற்கும் பொருளல்ல. மின்சாரம், குடிநீர், கேஸ் போல இதுவும் சேவைசார்ந்த ஒரு தொழில்” (Service oriented profession) என்பதுதான்! அனேகமாக இந்த ஐடியாவோடு இத்துறையில் இருக்கும் ஒரே நிறுவனம் ஸோஹோ கார்ப்பரேஷன் மட்டுமே.

முதல் பாராவில் நாம் குறிப்பிட்ட ‘படிப்பதற்கு சம்பளம்!’ பற்றி கேட்டோம். நம் பின்னால் சாதாரணமாக கையைக் கட்டிக் கொண்டு நின்றிருந்த ஒருவர் சடசடவென்று அருவி மாதிரி பேசத் தொடங்கினார்.

“திறமையான பொறியியலாளர்கள் எங்களுக்கு தேவை. எங்கு போய் அவர்களை தேடுவது என்றே எங்களுக்கு தெரியவில்லை. பொறியியல் படித்தவர்களோ அயல்நாட்டுகளுக்கு பறந்துவிடுகிறார்கள். அல்லது மைக்ரோசாஃப்ட், கூகிள் மாதிரியான பெரிய நிறுவனங்கள் அவர்களை கொத்திக்கொண்டு போய்விடுகின்றன.

நாங்கள்தான் பில்கேட்ஸுக்கு போட்டி என்று சொல்லிக்கொண்டாலும், நாங்கள் சிறிய நிறுவனம்தான். என்ஜினியரிங் முடித்தவர்கள் எங்களிடம் வேலை செய்ய போட்டியெல்லாம் போடுவதில்லை என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்.

\அப்போது உருவானதுதான் இந்த ஐடியா. ஸோஹோ யுனிவர்சிட்டி!

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒரு விஷயம் சொல்லியிருக்கிறார். ‘ஏற்கனவே இருக்கும் பிரச்சினைகளை தீர்க்க வழக்கமான முறையிலேயே நாம் சிந்தித்துக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. அதுபோல சிந்தித்துதான் அந்தப் பிரச்சினையே நமக்கு உருவாகியிருக்கும்!’

எனவே மாற்றி யோசிக்க ஆரம்பித்தோம்.

எங்கள் நிறுவனத்துக்கு இருக்கும் ஆள் பற்றாக்குறையைப் போக்க வேண்டும். அதே நேரத்தில் பணிக்கு சேர்பவர்கள் எங்கள் நிறுவனத்தின் தேவைகளுக்கு சரியாக பொருந்தவேண்டும். பட்டப்படிப்பு படித்து வருபவர்களுக்கு பயிற்சியளித்து, எங்கள் நிறுவனத்தின் போக்குக்கு கொண்டு வருவதற்குள், இங்கு கிடைத்த அனுபவத்தை வைத்து வேறு பெரிய சம்பளத்துக்கு, பெரிய நிறுவனத்துக்கு பறந்துவிடுவார்கள்.

பொதுவாக பட்டம் படித்தவர்கள் அறிமுறை (theoretical) அறிந்தவர்களாக இருந்தாலும், பணிக்கு சேர்ந்து செயல்பட அவர்களுக்கும் பயிற்சியளிக்க வேண்டியதாக இருக்கிறது. இதனால் எங்களுக்கு பட்டங்கள் மீதே நம்பிக்கையில்லாமல் போய்விட்டது. பட்டம் படித்தவர்கள்தான் மென்பொருள் நிறுவனங்களில் சிறப்பாகப் பணியாற்றுவார்கள் என்றொரு கூற்று இருக்கிறது. அதுவும் தவறானது. ஏனெனில் இன்று உலகில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கும் மூன்று பெரிய மென்பொருள் நிறுவனங்களை நிறுவியவர்களைப் பார்த்தோமானால், அவர்கள் பட்டதாரிகள் அல்ல.

இப்படிப்பட்ட சூழலிலேயே பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு எங்களுக்கு வாகாக கல்லூரியில் போதிப்பது மாதிரியே பயிற்சியளித்து, எங்கள் நிறுவனத்திலேயே பொறியியலாளர்களாக பணிக்கு சேர்த்துக் கொள்கிறோம்” என்றார்.

இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்தவர்தான் ஸோஹோகார்ப் நிறுவனத்தின் தலைவராம். பெயர் ஸ்ரீதர் வேம்பு. வயது நாற்பத்தி ஒன்று. பட்டங்கள் மீது நம்பிக்கையில்லை என்று சொல்லும் இவர் சென்னை ஐ.ஐ.டி.யில் பி.டெக் பட்டம் பெற்றவர். பின்னர் அமெரிக்காவில் முனைவர் பட்டமும் பெற்றார்.

எப்படி இயங்குகிறது ஸோஹோ யுனிவர்சிட்டி?

பொதுவாக மேல்நிலைக் கல்வி படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களே இவர்களது குறி. கல்லூரிப் படிப்பை பாதியில் விட்டவர்களையும் விடுவதில்லை. கிராமப்புறப் பள்ளிகளுக்கு நேரில் சென்று பேசி, (கல்லூரிகளில் பெரிய நிறுவனங்கள் மாணவர்களை தேர்ந்தெடுப்பது போல) தங்களுக்கான மாணவர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். பொதுவாக பதினாறு வயதிலிருந்து இருபது வயதுக்குள் இருப்பவர்கள் ஸோஹோ யுனிவர்சிட்டியில் படிக்க தகுதியானவர்கள்.

தேர்ந்தெடுக்கப்பட என்ன தகுதி?

கணிதத்தில் நல்ல பரிச்சயமும், பேச்சுத் தொடர்பில் வல்லவராகவும் இருத்தல் முக்கியமான தகுதி. நுழைவுத் தேர்வு, மற்றும் நேர்முகம் மூலமாக இத்தகுதிகள் கண்டறியப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பின்?

தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஒன்பது முதல் பண்ணிரெண்டு மாதங்கள் வரை கல்லூரிகளில் வழங்கப்படுவதைப் போலவே பேராசிரியர்களை வைத்து கல்வி போதிக்கப்படுகிறது. எட்டு மாணவர்களுக்கு நான்கு பேராசிரியர்கள் என்ற விகிதத்தில் கற்பிக்கிறார்கள் என்றால், கல்வியின் தரத்தை நீங்கள் உணர்ந்துகொள்ளலாம். இங்கு படிப்பவர்களுக்கு மாதாமாதம் நான்காயிரம் ரூபாய் சம்பளம். மதிய உணவும், இரவு உணவும் இலவசம்.

பயிற்சியை முடித்தவர்கள் ஸோஹோகார்ப் நிறுவனத்தில் டெவலப்பர், டிசைனர், குவாலிட்டி அனலிஸ்ட், ப்ரீ-சேல் சப்போர்ட், கஸ்டமர் சப்போர்ட் என்றிருக்கும் பலதரப்பட்ட பிரிவுகளில் ஏதாவது ஒரு பிரிவில், அவரவர் தகுதிக்கேற்ற பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். சம்பளமும் மற்ற நிறுவனங்களில் கிடைப்பதற்கு இணையானதாகவே கிடைக்கும்.

மாணவர்களுக்கும், நிறுவனத்துக்கும் இடையே எந்தவிதமான ஒப்பந்தமும் கிடையாது. பயிற்சியை முடித்தவர்களுக்கு இங்கே பணிபுரிய விருப்பமில்லை எனில், வேறு நிறுவனத்துக்குப் போய்ச்சேர எந்தவித தடையுமில்லை. அஞ்சல் மூலமாகவோ, பகுதிநேரமாகவோ வேறு படிப்பு படிக்கவும் கட்டுப்பாடு எதுவுமில்லை.

ஒரு பொறியியல் மாணவர் பட்டம் படிக்கும்போது அவர் செலவு செய்கிறார். ஸோஹோ யுனிவர்சிட்டியிலோ படிக்கும் காலத்திலேயே சம்பாதிக்க முடியும். பணி உத்தரவாதமும் உண்டு என்பதே இத்திட்டத்தின் மிகப்பெரிய பலம்.

ஐந்து வருடங்களில் 18 பேட்ச்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களை ஸோகார்ப் பெற்றிருக்கிறது. ஸோஹோ யுனிவர்சிட்டியில் சேர்ந்துவிடுவது என்பது அத்தனை சுலபமானதல்ல. ஒவ்வொரு பேட்சுக்கும் கிட்டத்தட்ட மூன்றாயிரம் பேரிலிருந்து பதினைந்து பேரை மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

வித்தியாசமான இந்த பணியாளர் தேர்ந்தெடுப்பு முறைக்காக நாஸ்காம் நிறுவனத்தின் 2009ஆம் ஆண்டுக்கான புதுமை விருதினை ஸோஹோகார்ப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புக்கு :
ஸோஹோ யுனிவர்சிட்டி குறித்த மேலதிக விவரங்களுக்கு :
தொலைபேசி : 044-22431115
மின்னஞ்சல் : univ@zohocorp.com

14 கருத்துகள்:

  1. பெயரில்லா6:46 PM, மே 13, 2010

    Whether the university accept a man in his early fifties. I am ready to extend my expertise in my field.

    பதிலளிநீக்கு
  2. நன்றி கிருஷ்ணா!
    இந்நிறுவனத்தின் ஊழியன் என்கிற முறையில் கூடுதல் மகிழ்ச்சி! இம்மாதிரியான புதிய(தலை)முறை பெருமளவில் ஏற்றுகொள்ளப்பட இவ்விடுகை போன்ற அறிமுகங்கள் நிச்சயம் தேவை. தொடர்பான பத்ரியின் இரண்டு பதிவுகள்: Zoho பல்கலைக்கழகம் Zoho University - ஸ்ரீதரின் பதில் இரண்டும் முக்கியமானது! மறுமொழிகளும்!

    அன்புடன்
    வெங்கட்ரமணன்

    பதிலளிநீக்கு
  3. //Whether the university accept a man in his early fifties. I am ready to extend my expertise in my field.//

    Respectable Guest!
    Thanks for offering us your help. Kindly write us to univ@zohocorp.com. Or you can mail your contact details to the same id so that we can get back to you.

    Regards
    Venkatramanan

    பதிலளிநீக்கு
  4. ஐயா சாமி.. இத நான் இஞ்சினியரிங் சேருவதுக்கு முன்னாடியே சொல்லியிருந்தா உங்களுக்கு புண்ணியமா போயிருக்கும்.. ரொம்ப தாங்ஸ்னா.. சிறப்பான பதிவு.. எனக்கு பின்னாடி வரும் சங்கதிங்களுக்காவது உபயோகப்படட்டும்.. வெங்கட்ராமன் சாருக்கு ரொம்ப ஸ்பெஷலான வாழ்த்துக்கள்.. உங்க கம்பெனிக்கும் சேர்த்து.. இப்படிக்கு ஜோஹோ பல்கலையைப்போல் பட்டம் மீது நம்பிக்கையேயில்லாத மூன்றாமாண்டு கம்பியூட்டர் பட்டதாரிகள் சார்பாக, காந்த்... உலகத்துல எத்தனையோ படிப்பிருக்க நான் ஏன் சார் இன்ஞினியரிங் சேர்ந்தேன்?

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா8:41 AM, மே 14, 2010

    Very informative...I like ur writing style. Keep writing...Expecting a lot from u.

    -SweetVoice

    பதிலளிநீக்கு
  6. என்ன தான் அங்கு படிக்கும் மாணவர்களுக்கு (குழந்தைகளுக்கு) எந்த வித பணி ஒப்பந்தமும் இல்லாமல் பயிற்சி அளித்து வேலை கொடுத்தாலும், அவர்கள் அங்கேயே கதி என்று கிடக்க வேண்டிய நிலைமை தானே உள்ளது. குறைந்தபட்சம் பட்டய படிப்பு கூட இல்லாமல் வேறு எந்த மென்பொருள் கம்பெனிக்கும் இவர்கள் வேலைக்கு செல்ல முடியாதே !! படிப்பில் கெட்டியான மேல்படிப்பு படிக்க வழியில்லாத ஏழை மாணவர்களுக்கு இது ஒரு வரபிரசாதம்.

    குறைந்தபட்சம் டிப்ளமோ படிக்கும் மாணவர்களை தேர்தெடுத்து மென்பொருள் பயிற்சி அளித்து வேலைக்கு சேர்த்து கொண்டால் சமுதாயதிற்கு மிகவும் பணளிக்க கூடிய வகையில் அமையும்.

    பதிலளிநீக்கு
  7. //பட்டப்படிப்பு படித்து வருபவர்களுக்கு பயிற்சியளித்து, எங்கள் நிறுவனத்தின் போக்குக்கு கொண்டு வருவதற்குள், இங்கு கிடைத்த அனுபவத்தை வைத்து வேறு பெரிய சம்பளத்துக்கு, பெரிய நிறுவனத்துக்கு பறந்துவிடுவார்கள்.//
    //மாணவர்களுக்கும், நிறுவனத்துக்கும் இடையே எந்தவிதமான ஒப்பந்தமும் கிடையாது. பயிற்சியை முடித்தவர்களுக்கு இங்கே பணிபுரிய விருப்பமில்லை எனில், வேறு நிறுவனத்துக்குப் போய்ச்சேர எந்தவித தடையுமில்லை. //

    எங்கேயோ இடிக்குதே !! பட்ட படிப்பு முடித்தவர்கள் ஓடிவிடுகிறார்கள் என்று தானே பள்ளி மாணவர்களை வேலைக்கு சேர்கிறார்கள். பிறகு அவர்களுக்கும் ஒப்பந்தம் இல்லை, வேறு நிறுவனத்திற்கு செல்ல தடை இல்லை என்று சொன்னால் எப்படி ??

    பதிலளிநீக்கு
  8. There is no restriction in learning anything during education and job.

    In 35, still I am student and learning new and growing.

    Instead of encouraging and brining in the competitiveness, no one can be elevated by some one.

    I think this may be a good lession for Zohoo starters that we cannot elevate people and they may find multiple reason to live in comfort zone. Apart from providing job, need to put them in genune competitiveness to bring out the best from them.

    பதிலளிநீக்கு
  9. This is a wrong attitude! The basic need for education is to improve ones' knowledge. By recruiting High School students ZOHO is ruining their life to understand & handle the problems on thier own. By inducting knowledge about computers they tend to stuck in same system analyst jobs at very early stage. Their life never fulfilled with complete education or knowledge. Already our Indian system makes students to be compettitve rather than improving their knowledge.. thats the reason we get very less reasearchers marching out every year in India. By adopting a particular field at very early stage it would ruin the students' life.

    This way of recruiting helps students (between 16 to 20) to handle money at early age, which means surplus spending.. they are trying spread the baby boomers funda of US again here and unstabilize our economic system.

    What does ZOHO benefit out of this? In todays market a system analyst is sold for $25/hr.. whereas ZOHO candidate will do the same system analys job and earn less than a dollar for himself. ZOHO while acquiring talent in cheap way it also gets its operating margin in more sophisticated practice.

    Its not ZOHO who started this practice. Wipro recruits BSc and BCom grads for far less price and earn equivalent to a engineer's salary.. They are like parasite over the generation...

    Pls stop the practice of encouraging such articles.

    பதிலளிநீக்கு
  10. Yes Rajesh ! I standby your point. Students must have basic education first, then they need to Graduate to sustain themselves.If they get locked themselves like institutes like here, they will suffer a lot for their next transition in life !Initial offer may be attractive, but students must think of their career in the long run.

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா6:34 PM, ஜூலை 11, 2010

    சம்பளமும் மற்ற நிறுவனங்களில் கிடைப்பதற்கு இணையானதாகவே



    This is not true ,

    பதிலளிநீக்கு
  12. . அஞ்சல் மூலமாகவோ, பகுதிநேரமாகவோ வேறு படிப்பு படிக்கவும் கட்டுப்பாடு எதுவுமில்லை.

    This line is also not true

    பதிலளிநீக்கு