2 ஜூன், 2010

டாக்டர் பிரகாஷ்


டிசம்பர் 2001, அகமதாபாத்தில் நடந்து முடிந்த ஆர்த்தோபீடிக் கான்பரன்ஸில் கலந்துகொண்டு திரும்பி இருந்தேன். முந்தின நாள் இரவு அங்கு ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கினேன். இந்தப் பக்கம் என் மனைவி, அந்தப் பக்கம் நான், நடுவில் என் ஏழு வயது மகள்.

காலை 8.30 மணிக்கு என்னுடைய விமானம் சென்னையில் தரையிறங்கியது. முந்தின நாள் இரவு தான் நான் என் குடும்பத்தோடு கழிக்கும் கடைசி இரவு என்பது அப்போது எனக்கு தெரியாது.

ஆஸ்பத்திரியை நோக்கி காரை ஓட்டிக் கொண்டிருந்தேன். இன்று தான் என்னுடைய க்ளினிக்கில் கடைசியாக பேஷண்டுகளை பார்க்கப் போகிறேன் என்பதையும் உணரவில்லை. போன வாரம் செய்து முடித்த இடுப்பு எலும்பு மாற்று ஆபரேஷன் தான் நான் இறுதியாக ஆபரேஷன் தியேட்டரில் செய்த சிகிச்சை என்பதையும் அறியவில்லை. அதற்கு நான் எவ்வளவு பாடுபட்டு உரு கொடுத்திருந்தேன் தெரியுமா?

மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தபோது இனிமேல் அதற்கு வாய்ப்பே வராது என்று கனவிலாவது நினைத்துப் பார்த்திருப்பேனா? அடுத்த சில வருடங்களுக்கு காரின் ஸ்டீயரிங் வீலை பிடிக்கப் போவதில்லை என்பது தெரியுமா?

போலிஸ் அவிழ்த்துவிட்ட கதைகளை கேட்ட என் மனைவி என்னோடு எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று முடிவெடுத்து விட்டார். விவாகரத்துக்கு விண்ணப்பித்தார். சம்மதித்தேன். கடந்த ஐந்தாண்டுகளில் என் மகளை ஒரு முறை கூட பார்க்கவே இல்லை. நீண்ட தலைமுடியோடு அழகான பெண்ணாக வளர்ந்து விட்டாள் என்று சொல்லக் கேள்வி.

எப்போதும் வேலை, வேலை என்று அலையும் என்னைப் போன்ற ஒருவனால் ஜெயிலில் எப்படிப் பொழுது போக்க முடியும்? கிடைத்த நேரத்தை எல்லாம் எழுதுவதில் செலவிட்டேன். 37 ஆயிரம் பக்கங்களில் 80 புத்தகங்களை எழுதிவிட்டேன்...

- டாக்டர் பிரகாஷ், 12.04.2006

* - * - * - * - * - * - * - *

டாக்டர் பிரகாஷை தெரியாதவர்கள் யாரும் தமிழ்நாட்டில் இருக்க முடியாது. உலகளவில் புகழ்பெற்ற முடநீக்கியல் (ஆர்த்தோபீடிக்) நிபுணர். தமிழ் பத்திரிகைகளுக்கோ செக்ஸ் டாக்டர். 2001 டிசம்பரில் இவர் தான் டாக் ஆஃப் தமிழ்நாடு. சென்னை அண்ணாநகரில் மருத்துவமனை வைத்திருந்த டாக்டர் பிரகாஷ் தன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த பெண்களை மயக்கி ஆபாச படம் எடுத்து இணையத்தளங்களுக்கு விற்றார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. அப்போது கூகிளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக டாக்டர் பிரகாஷ் என்பது இருந்திருக்கும். இப்போதும் Dr. Prakash என்று டைப் செய்து தேடிப்பாருங்கள், அஜால் குஜால் படங்களாக வருகிறது. அவரது காலாஞ்சிக்குப்பம் கடற்கரை உல்லாச மாளிகை பற்றியெல்லாம் இஷ்டத்துக்கும் கட்டுக்கதைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

2001ல் கைதானவர் ஆறு ஆண்டுகள் சிறையில் இருந்தார். 2008 பிப்ரவரியில் அவர் வழக்கில் தீர்ப்பு வந்தது. டாக்டர் பிரகாஷுக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. ஆறரை ஆண்டுகள் கைதியாக இருந்தவர் என்ன செய்தார்? புத்தகங்கள் எழுதினார். அவர் எழுதிய க்ரைம் நாவல் ஒன்று கோடம்பாக்கத்துக் காரர்களால் சுடப்பட்டு கமல் நடித்து படமாக வெளிவந்தது என்று கூட ஒரு முறை பகீர் பேட்டி கொடுத்தார்.

இவரது எழுத்துக்களை இப்போது 'பாக்கெட் நாவல்' ஜி.ஏ.அசோகன் தொடர்ந்து பாக்கெட் புக்ஸ் என்ற மாதமிருமுறை நாவலில் வெளியிட்டு வருகிறார். முதலில் ‘சிறையின் மறுபக்கம்' என்ற பெயரில் சிறுகதைத் தொகுதி ஒன்று வெளிவந்திருக்கிறது. அடுத்து ‘கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்' என்ற பெயரில் 480 பக்க மெகாநாவல் ஒன்று வெளிவந்தது. தொடர்ந்து வேறு சில நாவல்களும் வெளிவந்து கொண்டிருக்கிறது.

‘க.பா.பொ, கா.கே.பொ' நாவலை 576 பக்கங்களில் டாக்டர் எழுதியிருந்தாராம். அனேகமாக தமிழில் மாத, வார நாவல் பார்மட்டில் வெளிவந்திருக்கும் நாவல்களிலேயே மிகப்பெரிய முதல் நாவலாக இது இருக்கலாம். அதை கஷ்டப்பட்டு எடிட் செய்து 480 பக்கங்களுக்கு சுருக்கியிருக்கிறார் அசோகன். ஒரு லட்சத்து நாற்பதாயிரம் வார்த்தைகள் இந்த நாவலில் இருக்கிறதாம், வாவ்..! இருபதாயிரம் வார்த்தைகள் எழுதுவதற்குள்ளாகவே என் டவுசர் கிழிந்தது. இத்தனைக்கும் இதையெல்லாம் எழுதுவதற்கு முன்பாக தமிழில் எதையுமே டாக்டர் படித்ததில்லையாம்.

மொத்தமாக 175 அத்தியாயங்கள். அத்தியாயங்களுக்கு டாக்டர் வைத்திருக்கும் தலைப்புகள் மட்டுமே மொக்கை. ஜெட் வேகத்தில் ஆரம்பிக்கும் நாவல் ஒளி வேகத்தில் தொடர்கிறது. ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் டாக்டர் வைக்கும் சஸ்பென்ஸில் 'நந்தினி 440 வோல்ட்ஸ்' காலத்து ராஜேஷ்குமார் தெரிகிறார். வெள்ளைச்சாமி என்ற பைனான்ஸியர் கொலை செய்யப்படுகிறார், முல்லை என்ற பெண்ணை காவல்துறை சந்தேகிக்கிறது. முல்லைக்கு ஆதரவாக அல்தாப் என்ற வக்கீல் நிஜம் பத்திரிகையின் உதவியை நாடுகிறார். நிஜம் பத்திரிகையின் ஆசிரியர் கணேஷ், துணையாசிரியர் சிவசங்கர், அல்தாப் மூவரும் இந்த கொலைவழக்கை புலனாய்வு செய்கிறார்கள். திடுக்கிடும் திருப்பங்களோடு நகரும் கதையில் எதிர்பாராத அதிரடி க்ளைமேக்ஸ்.

வர்ணனைகளில் டாக்டர் அசத்துகிறார். அடிக்கடி சோஃபியா லாரனையும், கேட் வின்ஸ்லட்டையும் துணைக்கு சேர்த்துக் கொள்கிறார். செக்ஸ் வர்ணனைகள் அருமை, டாக்டருக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்? கிட்டத்தட்ட நாவலில் வரும் எல்லா பெண் கேரக்டர்களின் மார்பகங்களையும் டாக்டர் மறக்காமல் வர்ணிக்கிறார். லைட்டான செக்ஸ் வர்ணனைகள் ‘ஙே' புகழ் ராஜேந்திரகுமாரை நினைவூட்டுகிறது. ஒரு ஐரனி தெரியுமா? தமிழில் அதிகமாக செக்ஸ் எழுதிய ‘ஙே' ராஜேந்திரகுமாரும், புஷ்பாதங்கதுரையும் கட்டை பிரம்மச்சாரிகள்.

நாவலில் ஆச்சரியப்படுத்தும் விஷயம் இயல்பான நகைச்சுவை. திணிக்கப்படாத தரமான நகைச்சுவையை, கதையை கெடுக்காமல் புகுத்துவது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. நகைச்சுவை அத்தியாயங்களில் பட்டுக்கோட்டை பிரபாகரின் ‘பிருந்தாவனமும், நொந்தகுமாரனும்' நினைவுக்கு வருகிறது (அந்த புத்தகத்தை தொலைத்துவிட்டேன், யாரிடமாவது இருந்தால் கொடுங்கள். ப்ரீமியம் ரேட்டில் வாங்கிக் கொள்கிறேன்)

ஒவ்வொரு கதாபாத்திரத்தையும், பாத்திரங்களுக்கான தன்மைகளையும் மிக விரிவாக சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார். கணேஷ் பாத்திரம் சுஜாதாவின் கணேஷை நினைவுபடுத்துகிறது என்று முன்னுரையில் எடிட்டர் ஜி.ஏ. அசோகன் சொல்கிறார். எனக்கோ தசாவதாரம் பல்ராம் நாயுடுவை நினைவுறுத்துகிறது. சிவசங்கர் பாத்திரம் செம கலாட்டா, அவன் ஒரு டமாரு குமாரு. அல்தாப் ரொம்ப சீரியஸ். ஒரு கெட்ட போலிஸ் கேரக்டரும் உண்டு. முல்லை, பச்சை சேலை பாலியல் தொழிலாளி, புஷ்பா, பிபாஷா என்று பெண் கதாபாத்திரங்களை விவரிப்பதில் டாக்டரின் கற்பனை விண்ணைத் தொட்டிருக்கிறது.

மிக மிக சுவாரஸ்யமான நாவல், டாக்டரின் மற்ற எழுத்துக்களை மவுண்ட்ரோட் பிளாட்பாரங்களில் தேடிக்கண்டுபிடித்து வாசிக்க வேண்டும்.

1 ஜூன், 2010

தமிழ் இணைய அறிமுகப் பட்டறை: தன்னார்வலர்கள் தேவை!

சூன் 23-27, 2010 நடக்கும் உலகத் தமிழ் இணைய மாநாட்டின் ஒரு பகுதியாக தமிழ்க் கணினி, இணைய நுட்பம் குறித்த கண்காட்சி நடைபெறுகிறது. இதில் தமிழ் இணையம் குறித்த அறிமுகம், பயிற்சி அளிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

தமிழ்த் தட்டச்சுப் பயிற்சி, தமிழ் இணைய அறிமுகம், தமிழில் இணைய அறிமுகம், வலைப்பதிவுகள், விக்கிப்பீடியா, கட்டற்ற மென்பொருள் இயக்கம் போன்ற அடிப்படைக் கருக்களில் பயிற்சி அளிக்கலாம். தமிழ் இணையத்தில் பால் ஆர்வமுள்ள நண்பர்களாக இந்த நிகழ்ச்சியைக் கூடிச் செய்து கலைவோம். எந்த அமைப்பின் பேரிலும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படவில்லை. 2007 சென்னை வலைப்பதிவர் பட்டறை போன்ற முயற்சியின் தொடர்ச்சியாக இதனைக் கருதலாம்.

இந்நிகழ்வைத் திட்டமிட்டு நடத்த, உறுதி செய்ய தன்னார்வலர்கள் தேவை.

ஒரு நாளுக்கு குறைந்தது 6 பேராவது முழு நேரம் பயிற்சி அரங்கில் இருப்பது நல்லது. எனவே, 5 நாட்களுக்கும் 30 தலைகள் தேவை. ஒருவர் அனைத்து நாட்களும் இருக்கலாம். அல்லது, ஓரிரு நாட்கள் மட்டும் கலந்து கொள்ள இயன்றாலும் சரி. ஒருவர் குறைந்தது ஒரு நாள் முழுக்கவாவது இருக்க இயலும் என்றால் ஒருங்கிணைக்க இலகு.

நேரடியாக நிகழ்வில் பங்கு பெறுவது போக, நிகழ்வுக்குத் தேவையான கணினிகள், projectorகள் ஏற்பாடு, உதவிக் கையேடுகள், இறுவட்டுகள் தயாரிப்பு போன்றவற்றில் உதவி தேவை. எனவே, நேரில் வர இயலாதவர்களும் இம்முயற்சியில் உதவலாம்.

உங்களால் உதவ இயலும் என்றால் உங்கள் பெயர், கலந்து கொள்ளும் நாள், செய்யக்கூடிய வேறு உதவிகள் குறித்த விவரங்களை மறுமொழியில் குறிப்பிடுங்கள்.

நன்றி.

31 மே, 2010

வருது.. வருது.. விலகு.. விலகு..

மாஞ்சா வேலு!

அந்த இயக்குனரை வைத்து தொடர்ச்சியாக இரண்டு ஹிட் படங்களை கொடுத்த தயாரிப்பாளர் அவர். மூன்றாவது படத்துக்கு திட்டமிடும்போது ஈகோ மோதல். படங்களின் வெற்றி இயக்குனருடையதா, தயாரிப்பாளருடையதா என்பது குறித்த சர்ச்சை. புது இயக்குனரை உருவாக்கி ஹிட் அடித்து காட்டுகிறேன் என்று தயாரிப்பாளர் விரலை சொடுக்குகிறார். வேறு தயாரிப்பாளரின் படத்தை இயக்கி நான் தலைநிமிர்ந்துக் கொள்கிறேன் என்று இயக்குனர் பதிலுக்கு பஞ்ச் டயலாக் அடிக்கிறார்.

அடுத்த தயாரிப்புக்கு மும்முரமாக கதை கேட்க ஆரம்பிக்கிறார் தயாரிப்பாளர். முந்தைய இயக்குனரின் அசிஸ்டெண்டாக இருந்த ஒருவர் கதை சொல்ல வருகிறார். கதையை கேட்ட தயாரிப்பாளருக்கு கடுமையான எரிச்சல். இதையெல்லாம் படமா எடுத்தா வேலைக்கு ஆகுமா?

மறுநாள் இரண்டாவதாக இன்னொரு இளைஞர் கதை சொல்ல வருகிறார். கதை பிரமாதம். உடனே ஆரம்பிச்சுடலாமா? ஹீரோவா சரத்குமாரை போடலாமா? பட்ஜெட்டை பத்தி கவலையே இல்லை! தயாரிப்பாளர் உற்சாகமடைகிறார்.

இளைஞர் மென்மையாக புன்னகைத்தவாறே சொல்கிறார். “நேத்து ஒருத்தரு சொன்னாரில்லை. அதே கதைதான் சார் இது. அவரு என்னோட நண்பர்தான். நல்லா படமெடுப்பாரு. ஆனா சரியா கதை சொல்ல தெரியாது. அவரை நம்பி வாய்ப்பு கொடுங்க!”

தயாரிப்பாளர் இவரை நம்பி அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்!

படத்தின் பெயர் ‘ஜெண்டில்மேன்!’

முதலில் கதை சொன்ன இளைஞரின் பெயர் இன்னேரம் உங்களுக்கு தெரிந்திருக்கும். இரண்டாவதாக அதே கதையை தன் பாணியில் சொல்லி வாய்ப்பு வாங்கியவர் வெங்கடேஷ். வாய்வழியாக சினிமாவில் வேலை பார்ப்பவர்கள் மூலமாக சொல்லப்படும் கதை இது. நிஜமாவென்று தெரியாது.

வெங்கடேஷுக்கு மசாலா படம் மட்டும்தான் எடுக்கத் தெரியும் என்று இதுவரை அவர் எடுத்த எல்லா படங்களையும் பார்த்தால் தெரிகிறது. கொடுத்த பட்ஜெட்டில் கனகச்சிதமாக யார் கால்ஷீட்டையும் வீணாக்காமல் நறுக்கென்று படமெடுப்பவர் என்று கடந்த பதினைந்து ஆண்டுகளில் பெயரெடுத்திருக்கிறார். இவரை வைத்து படமெடுத்தால் லாபம் கொட்டுகிறதோ இல்லையோ, நஷ்டம் நிச்சயமாக இருக்காது என்று தயாரிப்பாளர்கள் நம்புகிறார்கள். அங்காடித்தெரு மூலமாக நல்ல நடிகராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.

எனவேதான் அருண்விஜய்யின் எதிர்காலத்தை வெங்கடேஷிடம் தந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அருண்விஜய் திறமையான நடிகர். புத்தன், பாண்டவர் பூமி போன்ற படங்களில் அவரது நடிப்பாற்றல் நன்றாக வெளிபட்டிருந்தது. நடனமும் அருமையாக ஆடுவாரென்று ப்ரியம் போன்ற படங்களில் தெரிந்தது. சுந்தர் சி இயக்கிய முதல் படத்தின் ஹீரோ இவர். ஏனோ செண்டிமெண்டலாக பதினைந்து ஆண்டுகளாகியும் மேலே வரமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். தவம் படத்தின் விளம்பரப் பணிகளின் போது இவரது கமிட்மெண்டான உழைப்பை நேரிலேயே கண்டிருக்கிறேன்.

வெங்கடேஷ் - அருண் விஜய்யின் முந்தைய கூட்டணி படைப்பான ’மலை மலை’ ஒரு குறைமசாலா பிரசவம். ஆனாலும் பி அண்ட் சியில் நன்றாகவே ரீச் ஆனது. வெங்கடேஷ் மேஜிக். இதே கூட்டணியின் மாஞ்சாவேலு ஒரு முழுமையான மசாலாவாக வந்திருக்கிறது. இன்னும் ஓரிரண்டு படங்கள் இதே டெம்போவில் வருமானால் அருண் விஜய்யும் மிகச்சுலபமாக முன்னணிக்கு வந்துவிடலாம். மினிமம் கேரண்டி வசூல் நாயகனாகி விடலாம்.

கருப்பழகிகளை தமிழர்கள் சீண்டமாட்டார்கள், மும்பையின் சிகப்பு இறக்குமதிகளுக்குதான் கோயில் கட்டுவார்கள் என்றொரு தவறான கருத்தாக்கம் நிலவுகிறது. சரோஜாதேவி, சரிதா, நதியா, ரஞ்சிதா, ரோஜா, சிம்ரன்-னென்று ஏராளமான கிளியோபாட்ராக்களை கண்மூடித்தனமாக ஆதரித்து இந்த கருத்தாக்கத்தை ஏற்கனவே தமிழர்கள் கட்டுடைத்திருக்கிறார்கள். ஹன்சிகாவும் இந்த லிஸ்டில் சேரலாம் (இவர் கருப்பு என்றுதான் மாஞ்சாவேலுவை கண்டு யூகிக்க முடிகிறது)

சுடிதாரிலும், தாவணியிலும் சுமாராக இருப்பவர், திடீரென்று ட்ரீம்ஸ் சாங் டூபீஸ்ஸில் ஜெனிபர் லோஃபஸ், நவோமி கேம்பல் ரேஞ்சுக்கு பளபளவென ஃப்லிம் காட்டுகிறார். வெய்யிலில் டேனிங் ஆகாத அவரது நெஞ்சுப்பகுதி ரசிகர்களை அசரடிக்கிறது. இடையும் அமோகம். விஜய் அல்லது அஜித்தோடு ஒரே ஒரு படத்தில் புக் ஆனாலும் சடாரென ஓவர் நைட்டில் முன்னணிக்கு வந்துவிடலாம்.

படத்தைப் பற்றி..

ம்ம்...

மசாலா வேலு!

29 மே, 2010

மு.க. ஸ்டாலின் - ஒரு பார்வை!


தமிழகத்தின்  துணை முதல்வராக மு.க.ஸ்டாலின்  பொறுப்பேற்று இன்று ஒரு வருடமாகிறது. இந்த நிறைவினையொட்டி இன்று காலை முதல்வர் கலைஞரைச் சந்தித்து, துணை முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துப் பெற்றார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழக அரசியலின் அடுத்த  தலைமுறையினர் மத்தியில் சற்று வித்தியாசமான தலைவராகத் தென்படுபவர்  மு.க. ஸ்டாலின். துணைமுதல்வராக அவர் பொறுப் பேற்றுக் கொண்ட இந்த ஒரு வருடகாலப் பகுதிகளில், நிர்வாகத் திறன்மிக்கத் தலைவராக அவர் தன்னை நிலைநிறுத்தி வருகின்றார் என்றே சொல்லப்படுகிறது.
அவர் குறித்த ஒரு பார்வையாக இக் கட்டுரை அமைகிறது.

1976.. கோவையில் திமுக மாநில மாநாடு பரபரப்பான சூழ்நிலையில் நடந்துகொண்டிருக்கிறது. பரபரப்புக்கு காரணம் மிசா, ஜனநாயகத்தின் கோரமான இன்னொரு முகம். இந்தியா முழுவதும் மக்களும், பத்திரிகைகளும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க அன்றைய கொடுங்கோல் பிரதமரால் தடை விதிக்கப்பட்டு அடக்குமுறை தாராளமாக கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த நேரம். திமுக ஆண்ட தமிழகத்திலும், காமராஜரின் பழைய காங்கிரஸ் ஆண்ட குஜராத்திலும் மட்டுமே மக்களுக்கும், பத்திரிகைகளுக்கும் அடக்குமுறை இல்லை. 

அம்மாநில மாநாட்டிலே இருபதுகளின் ஆரம்பத்தில் இருக்கும் ஒரு இளைஞர் இந்திரா அம்மையாரை தாக்கி தைரியமாக முழங்கிக் கொண்டிருக்கிறார். அவரது பேச்சு அவர் தந்தையின் பேச்சை போல மடைதிறந்த வெள்ளமாக கொட்டவில்லை. தமிழ்நடை படுமோசம். இருப்பினும் அவர் பேசிய விஷயங்கள் நேரடியாக மக்களின் நெஞ்சை தொட்டது. அவர் யார் என்று மாநாட்டுக்கு வந்த திமுக தொண்டர்கள் தங்களுக்கிடையே ஒருவருக்கொருவர் கிசுகிசுத்துக் கொள்கிறார்கள். அவர்தான் தற்போதைய தமிழகத்தின் துணைமுதல்வர்.
நான்கு முறை சட்டமன்ற உறுப்பினர், இரண்டு முறை சென்னை மாநகர மேயர், திமுகவின் நிரந்தர இளைஞர் அணிச் செயலாளர், திமுக துணைப் பொதுச்செயலாளர், எதிர்கால முதலமைச்சர் என்றும், தளபதி என்றும், சிலரால் மகிழ்ச்சியோடும், பலரால் எரிச்சலோடும் பார்க்கப் படுபவர், எல்லாவற்றிற்கும் மேலாக தமிழக முதல்வர் கலைஞரின் மகன் ஸ்டாலின்!

கலைஞர் தனது அரசியல் மற்றும் கலையுலக  வாரிசாக அடையாளம் காட்ட நினைத்தது தனது மூத்த தாரத்தின் மகன் மு.க. முத்துவையே. சிறந்த நடிகர், அருமையான குரல்வளம் மிக்க பாடகர். ஏனோ தனிப்பட்ட வாழ்க்கையிலும் வெற்றியின் சிகரத்தை அவரால் எட்டமுடியவில்லை. கலையுலக வாழ்க்கையிலும் பெரியதாக எதையும் சாதிக்கவில்லை. துவண்டுப் போயிருந்த கலைஞருக்கு கை கொடுத்தவர் இரண்டாம் தாரத்தின் இளைய மகன்   மு.க. ஸ்டாலின்.

தி.மு.க. ஆட்சி  கலைக்கப்பட்டு, 'மிசா' சட்டத்தில் திமுக முன்னணியினர் கைது செய்யப்படுகிறார்கள். கலைஞரின் மகன் என்பதால் ஸ்டாலினும் கைது செய்யப்படுகிறார். சிறைக்காவலர்களிடம் ஒரு ஹிட்லிஸ்ட் இருக்கிறது, யார் யாரை 'ஸ்பெஷலாக' கவனிக்க வேண்டுமென்று. அந்த ஹிட் லிஸ்டில் அவர் பெயரும் இருந்தது. இருட்டில் நிகழ்த்தப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலில் ஸ்டாலின் துவண்டார். தலைவர் மகனின் உயிரை காக்க வேண்டுமென்று 'மிசா' சிட்டிபாபு குறுக்கே புகுந்து, அவர் மீது விழுந்த தடியடிகளை தாங்கினார். சிறைச்சாலை கொடுமைகளுக்கு சாட்சியாக தன் இன்னுயிரை நீத்தார். இன்றும் ஸ்டாலினும், கலைஞரும் 'மிசா' சிட்டிபாபுவை நன்றியோடு நினைவு கூர்வதை காணலாம்.
சிறைச்சாலை அனுபவங்கள் ஸ்டாலினை அரசியல் பொறுப்புக்கு நேரடியாக வந்தே தீரவேண்டுமென்ற நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. மிசா கைதியாக இருந்தவர் வெளிவந்ததும் , திமுகவின் மாநில இளைஞரணி உருவாக்கப்பட்டு அதன் செயலாளராக நியமிக்கப்பட்டார். கலைஞரின் அடுத்த அரசியல் வாரிசு என்று தொண்டர்களால் முடிவெடுக்கப்பட்டார்.

அரசியல் ஒரு  சதுரங்க களம். நல்லவர்கள் தோற்பதும், வல்லவர்கள் வெற்றி காண்பதும் இங்கே அதிசயமல்ல. ஒருவருடைய உண்மையான சுபாவத்துக்கும், அவர்களுக்கு மக்களின் மத்தியில் இருக்கும் தோற்றத்துக்கும் துளிகூட சம்பந்தம் இருக்காது. இதற்கு சரியான உதாரணங்களாக ஸ்டாலினையும், அதிமுகவின் ஜெயலலிதாவையும் சொல்லலாம்.

ஸ்டாலினோடு நெருங்கிப் பழகியவர்களுக்கு மட்டுமே  அவரது வெள்ளை மனம் தெரியும். அவரது அண்ணன் அழகிரி மாதிரி அடாவடியான ஆசாமி அல்ல இவர். இன்னொரு அண்ணன் முத்து போல  அப்பாவுக்கு அடங்காத பிள்ளையும் இல்லை. அவருடைய உண்மையான சுபாவத்துக்கு நேரெதிரான ஒரு தோற்றம் தான் மக்கள் மத்தியில் ஸடாலின்  குறித்து நிலவுகிறது. இந்த தோற்றத்தை மாற்ற ஸ்டாலினும், துளிகூட முயற்சி எடுத்ததில்லை என்பது தான் சோகம்.

ஸ்டாலினோடு ஒரு செய்தி வாசிப்பாளரை இணைத்து கிசுகிசு வந்தபோது அதை மறுத்து இவர் எதுவும் சொல்லாமல் மவுனம் காத்தார். இந்த வதந்தி ஊடகங்கள் மூலமாக பரப்பப்படாமல் வாய்மொழியாக மக்கள் மத்தியில் வேகமாக பரவி வந்தது. தொலைக்காட்சி தொடர் ஒன்றில் ஸ்டாலினோடு, அந்த செய்தி வாசிப்பாளர் இணைந்து நடித்துக் கொண்டிருந்ததே அதற்கு காரணம். அப்பொதெல்லாம் தொலைக்காட்சி நாடகங்களில் நடிப்பவர்கள் நாடகம் முடியும் வரை செய்தி வாசிக்கக் கூடாது என்பது விதி. உடனே ஸ்டாலின் செய்தி வாசிப்பாளரை ஏதோ செய்துவிட்டார் என்றொரு பொய்யான பரப்புரை மக்கள் மத்தியில் பரப்பப்பட்டது. ஒரு அறிக்கை மூலமாக கூட இதை பொய்யென்று அவர் சொல்லியிருக்கலாம். ஏனோ மவுனமாகவே இருந்துவிட்டார்.

ஸ்டாலினுக்கு ஊடகத் தொடர்பு என்று ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. இன்று லைம்லைட்டில் இருந்தாலும் கூட பத்திரிகைகளில் இவரைப் பற்றிய பாசிட்டிவ்வான செய்திகளை காண்பது அரிது. ஸ்டாலின் தந்தை கலைஞர் எண்பதைக் கடந்த நிலையிலும் கூட தினமும் பத்திரிகையாளர்களை சந்தித்து அளவளாவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். ஊடகத் தொடர்பு விஷயத்தில் தந்தைக்கு நேர்மாறாக ஸ்டாலின்  இருப்பது அவரது வளர்ச்ச்சிக்கு பெரிய தடைக்கல் தான். துணை முதல்வராக பொறுப்பேற்றதற்குப் பிறகு இந்த ஊடகத் தொடர்பில் கொஞ்சம் பரவாயில்லை.

வாழைமரத்துக்கு  கீழே வளர்ந்த கன்றாக இருந்திருந்தால் ஸ்டாலின்  இன்னேரம் இன்னொரு  மரமாகியிருப்பார். இவரோ கலைஞர் என்ற ஆலமரத்தில் விழுதாக  கட்சியில் இன்னமும் பத்தோடு  பதினொன்றாக இருக்கிறார். கலைஞரை மீறி கலைஞரை தவிர்த்து யாராலும் திமுகவில் வளரமுடியாது  என்பதும் ஒரு காரணம். எதிர்க்கட்சிகளோடு, தன் கட்சியினரே கூட சில சமயம் பேசும் 'குடும்ப அரசியல்' குற்றச்சாட்டுக்கு பயந்து கலைஞரே ஸ்டாலினின் வளர்ச்சி வேகத்தை மட்டுப்படுத்தியிருக்கிறார் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

1989ல் திமுக ஆட்சிக்கு வந்தபோதும், 1996ல் திரும்ப ஆட்சிக்கு வந்தபோதும் ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி தராமல் பொறுமை காத்தார் கலைஞர். அப்போதே அமைச்சர் பதவி கொடுத்திருந்தால் இன்று திடீரென்று 'குடும்ப ஆட்சி' என்று யாரும் முணுமுணுத்துவிட முடியாது. அப்பா தான் தரவில்லை, நாமே கேட்டு வாங்கிவிடுவோம் என்று ஸ்டாலின் முயற்சிக்கவேயில்லை. வாய்ப்பு கிடைத்ததுமே அழகிரி, தயாநிதி போன்றோர் முண்டியடித்து தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டதைப் போன்ற தந்திரங்கள், மென்மையான குணம் கொண்டஸ்டாலினுக்கு கைவரவில்லை.

ஆனால் நிர்வாகம்  என்பதில் ஸ்டாலின்  கில்லி. சென்னை மாநகர மேயராக பொறுப்பேற்ற  போதும் சரி. பின்னாளில் உள்ளாட்சித்துறை அமைச்சராக, துணைமுதல்வராகவும் எதிர்தரப்பினரும் பாராட்டும் வண்ணமே சிறந்த நிர்வாகியாக பெயரெடுத்திருக்கிறார். ஆட்சி நிர்வாகத்துக்கு வந்த பின்னர் ‘ஊழல்’ என்பதின் நிழல் படியாத, குற்றச்சாட்டுகள் கூட இல்லாத ஒரே இந்திய அரசியல் தலைவர் இவராக மட்டும்தான் இன்றைய தேதியில் இருக்க முடியும் என எதிரணியில் சிலரே சொல்கின்றனர்.
1989 மார்ச் மாதம் கலைஞர் சட்டமன்றத்திலே தாக்கப்பட்ட போதும் சரி, 2001 சட்டமன்றத் தொடரின் போது அவரை சட்டமன்றத்திலே கீழ்த்தரமாக விமர்சித்தபோதும் சரி.. ஒரு மூலையில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரே திமுக உறுப்பினர் ஸ்டாலின்  மட்டுமே. இதுபோன்ற நிதானமான இவரது அணுகுமுறை ஒரு எதிர்க்கால ஆட்சியாளருக்கு தேவையான அணுகுமுறையாக இருக்கலாம். ஆனால் இன்றைய அடாவடி அரசியல் சூழலுக்கு சரிபடுமா என்று தெரியவில்லை. 'ஜால்ரா' அடித்து நெருக்கமாகுபவர்களுக்கு உடனே கட்சிப் பதவியோ, தேர்தல் சீட்டோ வாங்கித் தந்துவிடுவது ஸ்டாலினின் இன்னொரு பலகீனம். இதனால் அனுபவசாலிகள் பலரை அவருக்கு தெரியாமலேயே அவர் ஓரம் கட்டி வருகிறார்.

கோபம், பழிவாங்கும் குணம், நம்ப வைத்து கழுத்தறுக்கும் வஞ்சம் - இந்த குணங்கள் எல்லாம் இல்லாத தற்போதைய தமிழகத்தின் ஒரே அரசியல்வாதி துணைமுதல்வர் ஸ்டாலின் .  தன்னை அவமானப்படுத்திய எதிரியை கூட மன்னித்து ஏற்றுக்கொள்ளும் சுபாவம் படைத்தவர் அவர். கராத்தே தியாகராஜன் மூலமாக கடுமையான அவமானங்களை சந்தித்த ஸ்டாலின், பின்னாளில் அவரையே நண்பராக ஏற்றுக் கொண்டார்.

எப்படியும்  வென்றாக வேண்டும் என்ற வெறி ஒரு வெற்றிகரமான அரசியல்வாதிக்கு தேவை. கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களிடம் இந்த வெறி இருந்ததால் தான் அவர்கள் வெற்றிகாண முடிந்தது. இப்படிப்பட்ட உணர்வு எதுவும் ஸ்டாலினிடம் இன்று இருப்பதாக தெரியவில்லை. கலைஞருக்கு பிறகு ஸ்டாலினுக்கு அரசியல் களத்தில் எதிரிகளாக இருக்கப்போவதில் முக்கியமான இருவர் செல்வி ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த். வெற்றிக்காக எதையுமே ஏற்றுக்கொள்ளும் குணம் கொண்டவர்கள் இவர்கள் இருவரும். மென்மையான அரசியல் நடத்தும் ஸ்டாலின் இவர்களை எப்படி சமாளிப்பார் என்பது கேள்விக்குறியே.

ஸ்டாலின் இவ்வளவு  பலகீனமாக இருக்கிறாரே? கலைஞரைப் போல திறமையான தலைவராக இவரால் ஆக முடியாதா என்ற ஐயம் இதுவரை வாசித்தவர்களுக்கு தோன்றலாம். இதற்கு விடை காலத்தின் கையில் தானிருக்கிறது.

ஸ்டாலினையும், இந்திராவையும் பல வகைகளில் ஒப்பிட முடியும். இருவருமே ராஜா வீட்டு கன்னுக்குட்டிகள். மிசா சட்டத்தில் சிறைக்கு சென்றதை தவிர்த்து ஸ்டாலின் அடிமட்ட வாழ்க்கையை அனுபவித்ததில்லை. சந்தர்ப்பச் சூழ்நிலை எப்படி இந்திராவை அரசியலில் ஈடுபட வைத்ததோ, அதுபோலவே தான் ஸ்டாலின் திடீரென கட்சிப் பொறுப்புக்கு வரவேண்டியதாகியது. 1964ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு மறையும்போது இந்திரா காந்தி காங்கிரஸ் இயக்கத்தில் சாதாரணத் தொண்டராக தானிருந்தார். 1964 முதல் 1969 வரை லால்பகதூர் சாஸ்திரியின் அமைச்சரவையில் இருந்தபோதும் இன்றைய ஸ்டாலின் போல அரசியல் பதுங்கிதான் கிடந்தார். 1969ல் காங்கிரஸை பிளந்து அவர் எடுத்த விஸ்வரூபம் யாருமே எதிர்பாராதது. இந்திராவுக்குள் அப்படியொரு ஆளுமைத்திறன் இருந்ததை காமராஜர் கூட கணிக்கத் தவறி விட்டார்

ஒரு தலைவன் உருவாக அவனது திறமையும், அனுபவமும் மட்டுமே முக்கியமல்ல. சந்தர்ப்பமும், சூழ்நிலையும் தான் தலைவர்களை உருவாக்குகிறது. தமிழகத்தின் துணை முதல்வர் ஸ்டாலினுக்கும் அத்தகைய சந்தர்ப்பமும், சூழ்நிலையும் வாய்க்குமா..?
(நன்றி : 4tamilmedia.com)