8 ஜூன், 2010

பெண் சிங்கம்!

அரைடவுசர் போட்டுக் கொண்டிருந்த வயது அது. குடும்பத்தோடு கலைஞரின் ‘தென்றல் சுடும்’ போயிருந்தோம். நங்கநல்லூர் ரங்கா, இன்றைய வெற்றிவேல் ஏ/சி, டி.டி.எஸ். நல்ல கூட்டம். “டோரி டோரி டொமக்க டோரி” என்ற செம்மொழிப்பாடல் இடம்பெற்றிருந்த படமது. ஆர்வத்தோடு படம் பார்க்க வந்தவர்கள், படத்தின் மொக்கையான போக்கைக் கண்டு நெளிந்து கொண்டிருந்தார்கள். க்ளைமேக்ஸில் மனோகரா கண்ணாம்பா ஸ்டைலில் நீளமான வசனத்தை ராதிகா ஏற்ற இறக்கத்தோடு பேசி நடிக்க, அப்பா உள்ளிட்ட ஓரிருவர் மட்டும் சவுண்டாக கைத்தட்டினார்கள்.

அந்த வயதில் முடிவெடுத்தேன். இனி கலைஞர் எழுதும் எந்தப் படத்தையும் வாழ்க்கையில் பார்க்கவே கூடாது. துரதிருஷ்டவசமாக என்னுடைய இரு தசாப்த சபதம் நேற்று ஒரு சங்கடமான தருணத்தில், மறுக்கவே இயலாத சூழலில் கைவிடப்பட வேண்டியதாயிற்று.

ஒரு ஊர்லே ஒரு ஃபாரஸ்ட் ஆபிஸர். இவர்தான் ஹீரோவென்றால் வில்லன் காட்டில் திருட்டுத்தனமாக மரம் வெட்டும் கடத்தல்காரன் என்பதை யூகித்து விட்டிருப்பீர்கள். ஹீரோயின் ஹீரோவின் ஆபிஸில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர். ஐ.பி.எஸ். படிக்கிறார். வில்லனின் சூழ்ச்சியில் கொலைக்கைதியாக ஹீரோ மாற, ஐ.பி.எஸ். ஹீரோயின் அந்த வழக்கை கையில் எடுத்து உண்மையான குற்றவாளி யாரென்று கண்டறிந்து நிரூபிக்கிறார்.

அனேகமாக கலைஞர் கடந்த முப்பதாண்டுகளில் வந்த தமிழ் சினிமா எதையும் பார்த்திருக்க மாட்டாரென்றுதான் இந்த படத்தை கண்டதும் முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. சமகால தமிழ் சினிமாவென்ன, சமகால மெகாசீரியல்கள் கூட இதைவிட உள்ளடக்கத் தரத்தில் உயர்ந்தவை.

படா திராபையான கதை, திரைக்கதை, வசனத்தை கொண்டு பாவம் இயக்குனர் படாத பாடு பட்டிருக்கிறார். ’ட்ரெண்ட் கேப்’ தெரியக்கூடாது என்ற பதட்டம் அவருக்கு இருந்திருக்கும். எனவே பாடல் காட்சிகளை ஃபாரினில் படமாக்கியிருக்கிறார். ஆங்கிலம் கலக்காத தூயத்தமிழ் பாடல்களை ஃபாரின் லொக்கேஷன்களில் பார்க்கவே சகிக்கவில்லை. படத்தின் முதல் பாதியில் மட்டும் நான்கு பாடல்கள். படம் பார்க்கும் ரசிகன் கிழிந்த நாராகிறான்.

படத்துக்கு நடுவில் ‘நாடகம்’ காட்டும் பாணி எல்லாம் 70களிலேயே காலாவதியாகி விட்டது. கலைஞரின் வேலுநாச்சியார் நாடகம். பின்னணிக்குரல் வைரமுத்து, தமிழச்சி தங்கபாண்டியன். வேலுநாச்சியாராக மீராஜாஸ்மினை பார்க்கும்போது பாவமாக இருக்கிறது. ஹீரோ அவரைவிட பாவம். தெலுங்குக்காரரான அவரை அழைத்து வந்து அடுக்கடுக்காக செந்தமிழ் வசனங்கள் பேசவைத்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் “பொண்ணு பொறந்ததுன்னு கலங்கலாமா?” என்று ஆரம்பித்து, வரலாற்று கீர்த்தி மிக்க பெண்களின் பட்டியலை வாசித்து, கடைசியாக “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ஒரு பொண்ணுதானே?” என்று முடிக்கும்போது ஆலந்தூர் நகர எட்டாவது வார்டு அன்னை சோனியா மன்ற செயலாளர் மட்டும் தியேட்டரில் கைத்தட்டுகிறார்.

கலைஞரின் வசனம் எப்படியிருக்கிறது?

ஒரு காட்சி. வன அலுவலகத்தைச் சேர்ந்த ஓட்டுனரான விவேக் ஜீப்போடு டீக்கடையில் நிற்கிறார்.

அப்போது அங்கே வரும் ஒருவர், “அண்ணே கட்டையை தூக்கிட்டுப் போகணும். வண்டியிலே ஏத்திக்கிட்டு வர்றீங்களா?”

“டேய் இது ஜீப்புடா. கட்டைய எல்லாம் லாரிலேதான் கொண்டு போகணும். சைஸ் சின்னதா இருந்தா ஏத்திக்கலாம். கட்டைய கண்ணுலே காட்டு!”

அந்த நபர் ஒரு நாட்டுக்கட்டையை அழைத்து வருகிறார்.

“டேய். இதுவாடா கட்டை?”

“ஆமாண்ணே. வைரம் பாய்ஞ்ச நாட்டுக்கட்டை. எம்பேருதான் வைரம்!”

இப்படியாக இளைஞர்களுக்காக டபுள்மீனிங் சமகால டயலாக்குகளை எழுத கலைஞர் முயற்சித்திருக்கிறார். நல்ல வசனம். நன்றி பத்ரி. “மாடசாமி. உனக்கு கால் எடுத்துட்டா நீ மடசாமி ஆயிடுவே!” மாதிரியான ‘நர்சிம் டச்’ வசனங்களும் உண்டு.

ஜே.கே.ரித்தீஷ், எம்.பி., ரம்பா, லாரன்ஸ் ராகவேந்திரா, லட்சுமிராய் என்று கவுரவ நட்சத்திரப் பட்டாளம் ஏராளம். எல்லாம் இருந்து என்ன பிரயோசனம்?

ஐ.பி.எஸ். ஆபிஸரான பெண்சிங்கம் சண்டை போடுவார், இரண்டாம் பாதியை தலையில் தூக்கி சுமப்பார் என்று நினைத்தால்.. ம்ஹூம்.. ஒரு டூயட் பாடுகிறார். போலிஸ் யூனிபார்ம் போட்ட சோளக்கொல்லை பொம்மை மாதிரி அங்கும் இங்கும் நடக்கிறார். க்ளைமேக்ஸில் மட்டும் ஒப்புக்குச் சப்பாணியாய் எல்லாம் முடிந்தபிறகு வந்து வில்லனை சுடுகிறார். டைட்டிலுக்கு இருக்கும் முக்கியத்துவம் கொஞ்சம் கூட கேரக்டருக்கு இல்லையே? திமுக தொண்டனுக்கு அந்த காலத்து கலைஞரின் ‘பூ ஒன்று புயலானது’ எல்லாம் நினைவுக்கு வந்து கண்ணில் நீர் கசிகிறது.

படம் முழுக்க தேவையில்லாமல் அள்ளித் தெளிக்கப்பட்ட கவர்ச்சி. சமகாலத்து சண்டை போடும் ஹீரோயிஸம் என்று பல கூறுகள் இது பெண்ணுரிமைக்கான படமல்ல என்று கட்டியம் கூறுகிறது. எந்த காட்சியிலுமே பெண்ணினத்தின் தனித்துவம் எடுத்து காட்டப்படவில்லை. சும்மா வெட்கப்படாமல் நேரடியாகவே சொல்லிவிடுகிறேன்.

பெண்சிங்கம் - போலி பெண்ணியம் பேசும் அக்மார்க் ஆணாதிக்கவாதிகளின் இத்துப்போன பழைய ரீல்!

7 ஜூன், 2010

மனிதம் மிச்சமிருக்கிறது : ஹமீதே சாட்சி!

அவருக்கு சர்வநிச்சயமாக தெரியாது. இறந்தவர்கள் எந்த சாதி, மொழி, என்ன மதம், நம் மாநிலமா வெளிமாநிலமா? எதுவுமே தெரியாது. ஆனாலும் இரண்டு நாட்களாக இரவு பகல் பாராமல் வென்லாக் அரசு மருத்துவமனையின் பிணவறை அருகில் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் உழைத்துக் கொண்டிருந்தார். மங்களூர் விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் அங்குதான் ஆம்புலன்ஸில் கொண்டுவரப்பட்டுக் கொண்டிருந்தது.
தேசமே சோகத்தில் மூழ்கிக் கிடக்க, இறந்தவர்களின் உடல்களை உரியவர்களிடம் ஒப்படைக்கவும், அவர்களுக்கு ஆறுதல் கூறவும் செய்தியைக் கேள்விப்பட்டதுமே, தன்னார்வலராக ஓடிவந்த அவரின் பெயர் அப்துல் ஹமீத் அலி. வயது 60.
விபத்தில் இறந்தவர்களில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள். மொழி புரியாமல், என்ன செய்வதென்று அறியாமல் பிணவறை வாசலில் விக்கித்து நின்ற உறவினர்களை ஆசுவாசப்படுத்தி, குடிக்க நீர் கொடுத்து, தகவல்களை அவர்களிடம் பெற்று அதிகாரிகளுக்கு உதவினார் ஹமீத். மரணமடைந்தவர்களின் உடல் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுவதற்கு ஹமீதின் இந்த சேவை மிக்க உதவியாக இருந்திருக்கிறது.
ஊடகவியலாளர்கள் அவரை படம் எடுக்க முனைந்தபோது, “நிறைய வேலை இருக்குப்பாஎன்று அன்போடு மறுத்தார். மங்களூருக்கு அருகில் மஞ்சேஸ்வர் நகரைச் சேர்ந்த ஹமீதுக்கு ஆறு குழந்தைகள். “எல்லோருக்கும் ஆண்டவன் புண்ணியத்தில் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துவிட்டேன். சும்மாதானே இருக்கிறேன். ஒரு அவசர ஆபத்துக்கு உதவுவதில் என்ன குறைந்துவிடப் போகிறேன்!என்று படபடப்பாக பேசிக்கொண்டே, ஸ்ட்ரெச்சரோடு ஓடுகிறார். அடுத்த ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருக்கிறது.
இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட அறுபது உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க ஹமீது வேலை பார்த்ததாக பணியில் இருந்த மருத்துவர் ஒருவர் சொல்கிறார். அவராகவே வந்தார். யாரும் எதுவும் சொல்லாமல் அவராகவே புயல் மாதிரி எங்களோடு வேலை பார்க்கிறார் என்று மருத்துவமனை சிப்பந்திகள் ஆச்சரியப்படுகிறார்கள்.
ஊரே ஓலமிட்டுக் கொண்டிருக்க, வீட்டில் ஓய்வெடுக்க என் மனச்சாட்சி இடம் கொடுக்கவில்லை” – இந்த மீட்புப் பணிக்கு தாமாகவே முன்வந்த்தற்கு ஹமீத் சொல்லும் காரணம் இது.
சாதி சண்டைகள், மதக்கலவரங்கள், பிரிவினை கோஷங்கள் அவ்வப்போது அச்சமூட்டும்போது ஹமீத் போன்றவர்கள் நம்பிக்கை அளிக்கிறார்கள். இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்றால் என்னவென்று கேட்பவர்களுக்கு விடையாக, இவரை நோக்கி நாம் கைகாட்டலாம்.

(நன்றி : புதிய தலைமுறை)

சைக்கிள் மிதிக்க ரெடியா?

சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்கள் அடிக்கடி சந்திக்கும் பிரச்சினை இது. ஒரு கிலோ மீட்டர், இரண்டு கிலோ மீட்டர் தூரம் இருக்கும் ஒரு பகுதிக்கு செல்ல வேண்டும். இன்றைய போக்குவரத்து நடந்து செல்வதற்கு கூட வாகாக இல்லாத நிலை. ஆட்டோ ரிக்‌ஷாவைதான் நாடவேண்டும். அதற்கும் அநியாயக் கட்டணம்.

சைக்கிள் மட்டும் இருந்தால்.. ஒரு மிதி மிதித்து விடலாமே?என்று யோசிக்கத் தோன்றுமில்லையா?
மோட்டர் சைக்கிள், கார், பஸ், ஆட்டோ ரிக்‌ஷாவென்று போக்குவரத்துக்கு நிறைய வசதிகள் வந்துவிட்ட காலத்தில் சைக்கிளா.. ச்சே!என்றுகூட நினைப்பீர்கள். ஆம். சைக்கிள்தான் குறைந்ததூரப் போக்குவரத்துக்கு உகந்த சரியான வாகனமென்று ஐரோப்பாவிலும், சீனாவிலும் முடிவுகட்டி விட்டார்கள். பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக மிதிமிதியென்று சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்த நாம்தான் அதை ஒட்டுமொத்தமாக ஏறக்கட்டி வைத்துவிட்டோம்.
புவிவெப்பப் பிரச்சினை அதிகபட்ச சூட்டினை கிளப்பியிருக்கிறது. சுற்றுப்புறச்சூழல் தாறுமாறாக கெட்டு கிடக்கிறது. பெட்ரோல் விலை விண்ணைத் தாண்டி சென்றுக் கொண்டிருக்கிறது. எனவே கொஞ்சதூரம் சைக்கிளை மிதிப்பதால் என்ன குடியா மூழ்கிவிடப் போகிறது? சைக்கிள் ஓட்டுவது உடலுக்கும் நல்ல பயிற்சிதானே?
இன்றைய நிலையில் குறுகிய தூரப் பயணங்களில் நாம் சந்திக்கும் சிக்கல்கள் என்னென்ன?
வீட்டிலிருந்து சில கிலோ மீட்டர் தூரமே அருகிலிருக்கும் ரயில் நிலையத்துக்கோ அல்லது பஸ் நிலையத்துக்கோ செல்வதற்கு குறைந்தபட்சம் 30 ரூபாயிலிருந்து 40 ரூபாயாவது நாம் செலவழிக்க வேண்டியிருக்கிறது.
இந்த தூரத்தை கடக்க நாம் பயன்படுத்தும் வாகனங்கள் வெளியிடும் புகை சுற்றுப்புறச்சூழலை கடுமையாக மாசுபடுத்துகிறது.
பஸ்சுக்காகவும், ஆட்டோவுக்காகவும் காத்திருக்கும் நேரமும் வீண். காத்திருக்கும் நேரம் மட்டுமன்றி சிக்னல்களிலும், போக்குவரத்து சிக்கல்களிலும் கூடுதல் நேரத்தை செலவழித்து அலுவலகத்துக்கோ அல்லது செல்லவேண்டிய இடத்துக்கோ சரியான நேரத்தில் போய்ச்சேர முடியாத நிலை.
இத்தகைய சிக்கல்களுக்கு மாற்றாக மும்பையின் புறநகரான தானேவில் களமிறங்கியிருக்கும் நிறுவனம் ஃப்ரீ-மோ (Fre-mo – Freedom to move). ஒரு நாளைக்கு சுமார் ஏழு லட்சம் பேர் தானே ரயில் நிலையத்துக்கு அருகிலிருக்கும் பகுதிகளில் இருந்து வருகிறார்கள். இங்குவர அவர்கள் பயன்படுத்தும் போக்குவரத்து வாகனங்களால் நகரத்தின் போக்குவரத்து சிக்கல் இடியாப்பச் சிக்கலாகி விட்டது. பணமும், அதைவிட பொன் போன்ற நேரமும் தண்ணீராய் செலவழிகிறது. எனவேதான் சைக்கிளை இந்தப் பிரச்சினைக்கு மாற்றாக முன்வைக்கிறது ஃப்ரீ-மோ. இந்தியாவிலேயே முதன்முறையாக தானே நகருக்கு சமீபத்தில் வந்திருக்கும் திட்டம் இது.
ஃப்ரீ-மோ திட்டத்தில் உறுப்பினர்களாக சேர்பவர்கள் மேற்சொன்ன பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம். சுற்றுப்புறச்சூழலை காப்பதாகவும் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம். இதற்காக சொந்தமாக சைக்கிள் வாங்க வேண்டியதில்லை. எனவே அதை பராமரிக்கும் சிக்கலும் இல்லை. இதை ஃப்ரீ-மோ பார்த்துக் கொள்ளும்.
மேலும் ஒரு நாளைக்கு இரண்டு முறை சைக்கிள் ஓட்டுவதால் பயணத்தோடு சேர்ந்து உடற்பயிற்சியும் இலவசமாக கிடைக்கிறது. ஜிம்முக்கும், பயணத்துக்கும் மாதாமாதம் ஆயிரங்களை கொட்டி அழத் தேவையில்லை.
அலுவலகங்களுக்கு செல்பவர்கள், கல்லூரி மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள், குறைந்தபட்ச தூரத்துக்கு பயணிப்பவர்கள் என்று பலருக்கும் இதனால் விளையும் பயன்கள் ஏராளம்.
சரி. இந்த திட்டம் எப்படி செயல்படுகிறது?
நகரின் முக்கியமான பேருந்து நிறுத்தம், ரயில் நிலையம் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் ஃப்ரீ-மோ நிறுவனத்தின் சைக்கிள் நிலையங்கள் இருக்கும். ஓர் உறுப்பினர் தன்னுடைய வீட்டுக்கு அருகாமையிலிருக்கும் நிலையத்திலிருந்து சைக்கிளை எடுத்துக்கொண்டு ரயில் நிலையத்துக்கோ, பஸ் நிறுத்தத்துக்கோ அல்லது செல்லவேண்டிய இடத்துக்கு அருகிலிருக்கும் நிலையத்தில் சைக்கிளை விட்டு விட்டு ஹாயாக சென்றுகொண்டே இருக்கலாம். சைக்கிளை இரவு முழுக்க வைத்திருக்கவோ அல்லது தேவையில்லாமல் வீட்டிலோ, தியேட்டரிலோ, வேறு இடத்திலோ நிறுத்தி வைத்திருப்பதற்கு அனுமதியில்லை. பயணத்துக்கு மட்டுமே உறுப்பினர்கள் சைக்கிளை எடுத்துக் கொள்ளலாம்.
உறுப்பினராக பதிவு செய்துகொள்ள நிறுவனம் சில நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை விதித்திருக்கிறது. செல்ஃபோனுக்கு சிம்கார்ட் வாங்குவதைப் போல சுலபமான வழிமுறைகள்தான். நிறுவனம் கேட்கும் தகவல்கள், ஆவணங்கள் மற்றும் உறுப்பினர் கட்டணத்தை செலுத்திவிட்டால் உறுப்பினர் ஆகிவிடலாம்.
உறுப்பினருக்கு கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மாதிரி ஒரு அட்டை கொடுக்கிறார்கள். இந்த அட்டையை பயன்படுத்திதான் சைக்கிளை எடுக்க முடியும். ஐந்து லட்ச ரூபாய்க்கு பர்சனல் ஆக்சிடெண்ட் இன்சூரன்ஸ் பாலிசியும் உண்டு. ஆண்கள் – பெண்கள் இருவருமே ஓட்டக்கூடிய ‘யூனிசெக்ஸ் வகை சைக்கிள்களே இங்கு கிடைக்கிறது. ஹெல்மெட் கொடுக்கிறார்கள். மழைக்காலத்தில் ரெயின்கோட் கூட பயனாளிகளுக்கு உண்டு. வசதிகள் இவ்வளவு இருப்பதால் உறுப்பினர் கட்டணம் அதிகமாக இருக்குமே என்று நினைப்பீர்கள்.
அதிகமில்லை ஜெண்டில்மேன்! ஆண்டுக்கு ரூபாய் இருநூறு மட்டுமே. ஆயுள் பதிவுக்கட்டணம் ஐநூறு. திரும்பப் பெறத்தக்க டெபாசிட் ரூபாய் இரண்டாயிரம். இவ்வளவு மட்டுமே!


ஃப்ரீ-மோவை தொடங்கியிருப்பவர் 48 வயதான வி.ரமேஷ். ஒரு பைனான்ஸ் கம்பெனியில் தலைமை செயல் அலுவலராக பணியாற்றியவர். சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர் தனது பணியை எழுதிகொடுத்து விட்டு இத்திட்டத்தை தொடங்கியிருக்கிறார்.
“2008ஆம் ஆண்டு பார்சிலோனாவுக்கு சென்றுவிட்டு இந்தியா திரும்பியபோது பெட்ரோல் விலை உயர்வை கண்டு அதிர்ச்சியடைந்தேன். பெட்ரோல் பயன்படுத்துவதை குறைப்பது தொடர்பாக நிறைய பேர் மண்டையை பிய்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த அடிப்படையிலேயே எனக்கு சைக்கிளை போக்குவரத்துக்கு மாற்றாக பயன்படுத்துவது குறித்த யோசனை வந்தது.
சைக்கிளா? என்று ஆரம்பத்தில் கார், மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி சுகம் கண்டவர்களுக்கு தயக்கம் இருந்தது. ஆனால் ஒருமுறை எங்களிடம் உறுப்பினராக சேர்ந்துவிட்டவர்கள் சைக்கிள் கொடுக்கும் பரம சுதந்திரத்தை விரும்ப ஆரம்பித்து விடுகிறார்கள்!என்று தான் ஃப்ரீ-மோ தொடங்கிய கதையை சொல்கிறார் ரமேஷ்.
ஒரு பைனான்ஸ் நிறுவனத்தின் பெரிய பொறுப்பில் இருப்பவர் சைக்கிள் கடை வைக்க போகலாமா என்று முதுகிற்குப் பின்னால் நிறைய பேர் ஆரம்பத்தில் கேலி பேசியிருக்கிறார்கள். நிறுவனத்தை தொடங்க இரண்டு கோடி ரூபாய் பணத்துக்காக பேயாய் அலைந்திருக்கிறார். தொழிலில் முதலீடு செய்வதில் ஆர்வமிருப்பவர்கள் கூட ஒரு சுற்றுச்சூழலுக்கு ஏதுவான திட்டத்தால் லாபம் என்ன இருக்கப் போகிறது என்று முதலீடு செய்ய மறுத்துவிட்டார்களாம். கடைசியாக பேங்க் ஆஃப் பரோடா கைகொடுக்க ஃப்ரீ-மோ ரெடி.
இத்திட்டம் ஏற்படுத்தப் போகும் சமூக மாற்றங்களை முன்வைத்து பொதுமக்கள் எங்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்று கோருகிறார் ரமேஷ். என்னென்ன மாற்றங்களை விளைவிக்க முடியும் என்று ஒரு பெரிய கனவுப் பட்டியலையும் போடுகிறார்.
  1. நகரப் போக்குவரத்துச் சிக்கலை குறைக்கலாம். பெரும்பாலானவர்கள் சைக்கிளை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால் சிக்கல் ஏது? காற்று மற்றும் ஒலியில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பும் குறைந்துவிடுமில்லையா?
  2. சுற்றுச்சூழல் சீரடைவதால் அனைவரும் சுத்தமான காற்றை சைக்கிள் மிதிக்கும்போது சுவாசிப்பார்கள். சைக்கிள் மிதிப்பது உடற்பயிற்சிக்கு ஒப்பானது என்று மருத்துவர்களே பரிந்துரைக்கிறார்கள்.
  3. சிறுதூரப் போக்குவரத்துக்கு ஆகும் செலவு கட்டுப்பாட்டுக்குள் வருவதால் மக்கள் இந்த பணத்தை வேறு வகையில் உபயோகமாக செலவழித்து தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள முடியும்.
  4. இன்று நகரங்களில் இருக்கும் பெரிய பிரச்சினை ‘பார்க்கிங் இத்திட்டத்தால் பார்க்கிங் பிரச்சினையை முற்றாக களையமுடியும். இது நகரக் கட்டமைப்புக்கும் வசதியானது.
  5. கார், பஸ் போன்ற வாகனங்களால் சாலை சீக்கிரம் பாதிப்படைகிறது. சைக்கிள்கள் அதிகம் செல்லும் சாலை நீண்டகாலத்துக்கு பாதிப்படையாமல் இருக்கும்.
  6. இதனால் சேமிக்கப்படும் நேரத்தை மக்கள் பயனுள்ள வகையில் செலவழிக்க முடியும். கூடுதலாக வருவாய் ஈட்டவோ அல்லது குடும்பத்தோடோ மகிழ்ச்சியாக இருக்கவோ நேரம் நிறைய கிடைக்கும்.
  7. கடைசியாக எந்திரம் போல இயங்கும் நம் வாழ்க்கையை சைக்கிள் பயணம் மாற்றும்.
எல்லாம் சரி. இதுவெல்லாம் ‘தானேவுக்குதானே? நம்ம ஊருக்கு எப்போ வரும் என்று நீங்கள் ஏக்கத்தோடு நினைப்பது புரிகிறது.
மிகவிரைவில் புதுடெல்லி, புனே, பெங்களூர், சென்னைக்கு ஃப்ரீ-மோ திட்டத்தை விரைவுபடுத்த இருக்கிறார் ரமேஷ். இதையடுத்து இந்தியாவின் எல்லா முக்கிய நகரங்களையும் சைக்கிள்மயமாக்குவதுதான் அவரது லட்சியம்.
சைக்கிள் மிதித்துக்கொண்டு தோழனோடு ‘பசுமை நிறைந்த நினைவுகளே என்று நாம் பாடிச்செல்லும் காலம் வெகுவிரைவில் வந்துவிடும்.

4 ஜூன், 2010

நாளை.. நாளை மறுநாள்..


நாளை..

ஜூன் 5, சனிக்கிழமை, மாலை 5 மணியளவில், சென்னை மெரீனா கடற்கரை, காந்தி சிலைக்கு பின்புறம்.

மூத்தப் பதிவரும், ஜெமோ ரசிகருமான சிரில் அலெக்ஸ் சென்னையில் இருக்கும் சாரு ரசிகர்களையும், மற்ற பதிவர்களையும் சந்தித்து உரையாட வருகிறார்.

சந்திப்பு காந்திய அறவழியிலேயே நடைபெறும் என்பதால் அனைவரும் அச்சமேதுமின்றி, கூச்ச நாச்சம் பார்க்காமல் வந்து சேரலாம்.



நாளை மறுநாள்..

ஜூன் 6, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.30 மணியளவில், கிழக்கு டூரிங் டாக்கிஸில் உலகத் திரைப்பட திரையிடல்.

Paradise Now – பாலஸ்தீனியத் திரைப்படம் திரையிடப்படுகிறது. அனைவரும் வரலாம்.

இயக்கம் : Hany Abu-Assad
எழுத்து : Hany Abu-Assad – Bero Beyer
ஒளிப்பதிவு : Antoine Heberle

2005ம் ஆண்டு வெளியான இந்தப் படம் கோல்டன் க்ளோப் விருது பெற்றது. உணர்ச்சிகரமான, அற்புதமான திரைக்கதையைக் கொண்டது. உள் அரசியல்களால் ஆஸ்கர் விருது பெறாமல் போன படம் இது.

மனித வெடிகுண்டுகளாக டெல் அவிவுக்குள் நுழையும் இரண்டு பாலஸ்தீனிய இளைஞர்களைச் சுற்றி நிகழும் கதை என்று மேலோட்டமாக ஒரு வரியில் இப்படத்தைப் பற்றிச் சொல்வது அபத்தமாக இருக்கும். இடமும் இருப்பும் லட்சியங்களும் மயக்கங்களும் உறவும் உணர்வுகளும் முட்டிமோதும் அற்புதத்தை சொற்களில் விவரிக்க இயலாது. பார்க்கத்தான் வேண்டும்.

அனைவரும் வருக.

இனி ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை மாலை சரியாக 5 மணிக்கு கிழக்கு மொட்டை மாடியில் ‘கிழக்கு உலக சினிமா திரையிடல்’ நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

05-06-10 பிற்சேர்க்கை : காப்புரிமை பிரச்சினை தொடர்பாக இந்நிகழ்வு ரத்து செய்யப்பட்டிருப்பதாக இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் விவரங்களுக்கு பத்ரி!

ஞாயிறு அன்று காலை 8.30 மணியலவில் இந்திராபார்த்தசாரதியின் சிறுகதை தொகுதிகள் வெளியீடும் நடைபெற இருக்கிறது. இதுகுறித்த பத்ரியின் எச்சரிக்கைப்பதிவு இங்கே! இந்நிகழ்ச்சிக்கும் அனைவரும் வரலாம் என்று அழைக்கப்படுகிறார்கள்.

3 ஜூன், 2010

அட, சற்று சும்மா இருங்களேன்!

அண்மைக்காலமாய் தமிழ் சினிமா குழந்தைகளைக் குறிவைக்கத் துவங்கியிருக்கிறது. ஆனால் பிஞ்சு மனங்களில் நஞ்சைக் கலக்கவும் அவை தயங்குவதில்லை

‘நீ செத்துப்போ தாத்தா!’

உங்கள் வீட்டில் உள்ள ஐந்து வயதுக் குழந்தை உங்களையோ உங்கள் அப்பாவையோ பார்த்து இப்படிச் சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்? ஒரு ஐந்து வயதுக் குழந்தை இப்படிப் பேசுமா என எதிர்க் கேள்வி கேட்காதீர்கள். கேட்கும். அது சினிமாவில் வருகிற குழந்தையாக இருந்தால்.

அண்மையில் வெளியான ரெட்டச் சுழி என்ற திரைப்படத்தில் ஒரு ஐந்து வயது குழந்தைதன் தாத்தாவைப் பார்த்துப் பேசுகிற வசனம் இது. சரி, தாத்தா ஏன் செத்துப் போக வேண்டும்? நாட்டின் சுதந்திரத்திற்காகவா? மொழி உரிமை கோரியா? லஞ்சத்தை எதிர்த்துப் போராடியா?

இல்லை இதற்காகவெல்லாம் இல்லை. உறவுக்கார சிறுசுகளின் காதலை ஏற்க மறுக்கிறார் அவர். அதனால் அவர் சாக வேண்டும்.

காதல் என்பது ஏதோ வளர்ந்தவர்களின் விஷயம் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் தமிழ் சினிமாவின் பக்கம் தலைவைத்துப் படுக்காத ஓர் பழங்கால ஆசாமி. தமிழ் சினிமா காதலை குழந்தைகள் வேடிக்கை பார்க்கும் ஒரு பொருளாகப் பலகாலமாக சித்தரித்துக் கொண்டிருக்கிறது.

காதல் ஜோடிகள் அந்தரங்கமாகப் பேசிக் கொண்டிருப்பதாக நினைத்து காதல் ரசம் சொட்ட்ச் சொட்டப் பேசிக் கொண்டிருப்பார்கள். அல்லது சில்மிஷம் செய்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்குத் தெரியாமல் மரத்திற்குப் பின்னால் இருந்தோ, கிணற்றடியிலோ அதைக் கவனித்துக் கொண்டிருப்பார்கள்.இப்படி ஒரு காட்சியை அந்த காலத்து முந்தானை முடிச்சிலிருந்து எத்தனை படங்களில் பார்த்தாயிற்று?

சமீபத்தில் வந்த ‘குட்டி’ திரைப்படத்தில் கூட கதாநாயகன், கதாநாயகியை காதலிக்க நிறைய குட்டீஸ் ஐடியா தருகிறார்கள். உதவுகிறார்கள்.

மணிரத்தினம் குழந்தைகள் அதிகம் விரும்பிப் பார்த்த ’அஞ்சலி’யில் மொட்டைமாடி மொட்டைமாடி என்று ஒரு பாடல் காட்சியே வைத்திருந்தார்.

குழந்தைகள் காதலுக்கு உதவுவது இருக்கட்டும். குழந்தைகளே காதலிப்பது என்று விபரீதக் கட்டத்துக்கும் தமிழ் சினிமா என்றோ இடம்பெயர்ந்து விட்டது.

பெரும் வெற்றியடைந்த பருத்திவீரன் படத்தில் ஒரு பெண் குழந்தை கிணற்றில் விழுந்து விடுகிறாள். இன்னொரு ஆண் குழந்தை குதித்து காப்பாற்றுகிறான். காப்பாற்றியவனே தன் கணவன் என்று பெண்குழந்தை மனதுக்குள் அவனோடு குடும்பம் நடத்த ஆரம்பித்து விடுகிறாள்.

ரேணிகுண்டா என்றொரு படம். ஹீரோவுக்கு பதினேழு, பதினெட்டு வயது இருக்கலாம். பதிமூன்று வயது மதிக்கத்தக்க குழந்தையை காதலிக்கிறான். இவர்கள் காதலை சேர்த்து வைப்பது இன்னொரு பதிமூன்று வயதுள்ள குழந்தை.

‘காதல்’ என்பதை கதாநாயக/நாயகி சாகஸமாக தமிழ் சினிமா முன்னிறுத்துவது கூட பெரிய பிரச்சினையில்லை. ஆனால் குழந்தைப் பருவக் காதலையும் சாகஸமாக சித்தரிக்கும்போது, படம் பார்க்கும் குழந்தைகளுக்குள் ஏற்படும் மனோபாவ மாற்றம் அவர்களது கல்வி மற்றும் வாழ்க்கைமுறையை தவறான முறையில் திசைதிருப்பக் கூடும் அல்லவா?

குழந்தைகள் முழு சினிமாவையும் பார்ப்பதில் ஆர்வம் காட்டுகிறார்களோ இல்லையோ, அதில் இடம் பெறும் காமெடிக் காட்சிகளை ஆவலுடன் பார்க்கிறார்கள். அவர்கள்தான் இப்போது வெற்றிக் கொடி நாட்டியிருக்கும் காமெடிச் சானல்களின் பலமே.

ஆனால் நம் சினிமாவின் காமெடிக் காட்சிகளும் குழந்தைகளைப் பதம் பார்ப்பதாகவே அமைந்திருக்கின்றன. குழந்தை ஒன்று வடிவேலுவை ஏமாற்றி, பிளாக் மெயில் செய்து தனக்கு வேண்டியவற்றையெல்லாம் வாங்கிக் கொள்வதாக முருகா படத்தில் ஒரு காட்சி. இன்னொரு படத்தில் கண்ணாமூச்சி விளையாடும் குழந்தை ஒன்று காட்டிக் கொடுத்ததற்காக வடிவேலுவைப் போட்டு மொத்தும் காட்சியும் உண்டு.

கடந்த ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய ‘பசங்க’ கூட குழந்தைகள் பெரிய மனுஷத்தனமாய் நடந்து கொள்வதைப் போன்ற காட்சி அமைப்பைக் கொண்டதுதானே?

குழந்தைகள் பெரிய்வர்களைப் போல நடந்து கொள்வதாக சித்தரிக்கும் காட்சிகள்-குறிப்பாக காதலுக்காகச் செத்துப் போகச் சொல்வது (emotional blackmail), காதலை ’வேடிக்கை’ பார்ப்பவர்களாக (Voyerism) தந்திரமாக ஏமாற்றுபவர்களாகக் காட்டுவது(con), பெரியவர்களை அடிப்பதாகக் காட்டுவது (violence) - படம் பார்க்கும் குழந்தைகள் மனதை எந்த அளவு பாதிக்கும்?

“மனித மூளையின் வேலை என்ன? பார்ப்பதை கேட்பதை சம்பவங்களை அப்படியே தன்னுள் பதிய வைத்துக் கொள்வது. தொடர்ந்து சினிமா, டிவியில் காதல், வன்முறை காட்சிகளை பார்க்கும் குழந்தைகள் இதுதான் நிஜம் யதார்த்தம் என்று நம்ப தொடங்கிவிடும். பிற்காலத்தில் காதல், வன்முறை உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வேறு எதுவும் உருப்படியாக செய்யாமல் போவதற்கு வாய்ப்புகள் அதிகம்” என்கிறார் குழந்தைகள் மன நல மருத்துவர் டாக்டர் அர்ஜூன்.

சினிமா விஷயம் தெரிந்ததுதானே? அதனால்தான் நாங்கள் எங்கள் வீட்டுக் குழந்தைகளை சினிமாவிற்குக் கூட்டிச் செல்வதில்லை. டி.வி.தான். அதிலும் குழந்தைகளுக்கான சானல்தான் பார்க்க அனுமதிக்கிறோம் என்று சில பெற்றோர்கள் பெருமைப்பட்டுக் கொள்வதும் உண்டு.

ஆனால் இந்த விஷயத்தில் சினிமாவிற்குச் சற்றும் சளைத்தது அல்ல தொலைக்காட்சி. குழந்தைகளுக்கென்றே இருக்கும் தனிசானல்களில் கூட என்ன காட்டப்படுகின்றன. அதீத சக்தி கொண்ட சூப்பர் மேன் அல்லது ஸ்பைடர் மேன், அவர்களிடத்தில் அதிக வலிமை கொண்ட லேசர் துப்பாக்கிகள், பாய்ந்து பாய்ந்து தாக்கும் காட்சிகள், பறந்து பறந்து மோதும் சண்டைகள் இப்படி அமானுஷ்யமான காட்சிகள் ஃபான்டசி என்ற பெயரில் பரிமாறப்படுகின்றன.

“குழந்தைகளுக்கான டிவி சேனல்களை அதிகம் பார்த்தால் எந்த தவறும் இல்லை என்று பெற்றோர்கள் நினைக்கிறார்கள். இதுவும் தவறு” என்கிறார் டாக்டர் அர்ஜூன்.

நாம் சினிமாவிற்கோ தொலைக்காட்சிக்கோ எதிரானவர்கள் அல்ல. அவை சக்தி வாய்ந்த ஊடகம் என்பதிலும் சந்தேகமில்லை. அண்மையில் பல இளைஞர்களின் திறமைகள் மலர அவை கணிசமான பங்களிப்பைச் செய்திருக்கிறது என்பதையும் மறுப்பதற்கு இல்லை. ஆனால் அதே சமயம்,அது நம்முடைய குழந்தைகள் –நாட்டின் நாளைய குடிமக்கள்- ஆரோக்கியமான மன நலத்துடன் வளர்வதற்கு அவை உதவுவதில்லை என்பது நம் ஆதங்கம்.

இந்த விஷயத்தில் சினிமா தொலைக்காட்சி மீது ஆதங்கப்பட்டுக் கொள்வதைவிட குழந்தைகளின் பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் குறைப்பட்டுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக்கூடங்களின் ஆண்டு விழாவில் நடனக்காட்சி என்றால் “மன்னவன் வந்தானடி” அல்லது மறைந்திருக்கும் பார்க்கும் மர்மமென்ன?” ரக ‘பரத நாட்டியம்’தான். இப்போது அது ”அத்தாடி அம்மாடி” அல்லது ”மன்மத ராசா” ரக குத்துப்பாட்டுதான். ஐந்து ஆறு வயதுச் சிறுமிகள் பள்ளிக்கூட அரங்குகளில் “சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்” என்று நாட்டியம் ஆடுவதைப் பார்க்கும் போது அவர்கள் மீது பரிதாபமும், என்ன ஆயிற்று இந்தப் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் என்ற சினமும் ஒரு சேர எழுகிறது.

கடந்த இரண்டு மூன்றாண்டுகளாக தொலைக்காட்சிகளில் வெற்றி நடை போடும் நடனப் போட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக ஆரம்பித்த பின், இது போன்ற குத்துப்பாட்டு நிகழ்ச்சிகளுக்குக் குழந்தைகளைத் தயார் செய்வதி பெற்றோர்களிடையே பெரும் போட்டியே நிகழ்கிறது.

பெற்றோர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு ஒரே லட்சியம்தான். தங்கள் குழந்தைகள் அவையத்து முந்தியிருக்க வேண்டும். சிறிய வயதிலேயே புகழ் பெற்றவர்களாக, சாதனையாளர்களாக ஆகி விட வேண்டும். அதற்காக் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார். ஐந்து வயதில் குழந்தையைக் கார் ஓட்டப் பழக்க வேண்டுமா, ரெடி. எட்டு வயதில் மராத்தான் ஓட வேண்டுமா, ம்,தயார். 10 வயதில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா? இந்தா பிடி கத்தி! பத்திரிகை.டி.வி.யில் பேட்டி வரும் என்றால் 10 வயதில் சாமியாராகக் கூடத் தயார்.

இது குழந்தைகள் இடத்தில் என்னவிதமான தாக்கங்களை ஏற்படுத்தும் என அவர்கள் சிறிதும் நினைத்துப் பார்ப்பதில்லை. இது சாதனையாளர்களாக ஆக வேண்டும் என்ற ஆசையை அல்ல வெறியை அவர்களுக்குள் விதைக்கும். அதை குறுக்கு வழியில் அடைந்துவிட முடியுமா என்று யோசிக்கும். எப்போதும் விளம்பர வெளிச்சத்திலேயே இருக்க வேண்டும் என மனம் தவிக்கும். அதற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம், என்ன சமரசம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தை சிறு வயதிலே ஏற்படுத்தும். ஏதோ ஒரு காரணத்தால் தனது எண்ணம் நிறைவேறாமல் தடைப்படுமானால் மன முறிவு ஏற்படும். அந்த மனமுறிவு எப்படி வெளிப்படும் என ஊகிப்பது கடினம். ஆனால் அது ஏதோ ஒரு விதத்தில் வெளிப்படும். தாழ்வு மனப்பான்மை (inferiority complex) அல்லது தன்னைப் பற்றிய மிகையான பிம்பததை நம்புபவராக (megalomaniac), விரக்தியுற்றவராக (frustrated), எதிலும் நம்பிக்கையற்ற எதிர்மறைச் சிந்தனையாளராக (cynic), வன்முறையில் நம்பிக்கை வைப்பவராக , சுயபரிதாபம் (self pity) கொண்டவராக ஏதோ ஒரு வழியில் அது வெளிப்படும்.

10 வயதுச் சிறுவனாக இருந்த போது வெளிப்பட்ட ஹிட்லரின் ஓவியத் திறமையைக் கண்டு பெருமிதம் கொண்ட அவனது தந்தை அவரை உற்சாகப்படுத்த மிகையான வார்த்தைகளைப் பொழிந்து அவரை வளர்த்தார்.பள்ளி இறுதி வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்த 16 வயது ஹிட்லருக்கு தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது.ஆனால் அவரது தந்தை அவரை ஓவியம் படிக்க அனுப்பி வைத்தார், அங்கு ஹிட்லரால் சோபிக்க முடியவில்லை. படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு முறிந்த மனத்தோடு வெளியேறினார் ஹிட்லர். அவரது மனமுறிவுக்கு உலகம் கொடுத்த விலை என்ன என்பதை வரலாறு பதிந்து வைத்திருக்கிறது.

அண்மைக்காலமாகத் தமிழ் சினிமா குழந்தைகளைக் குறிவைக்கத் துவங்கி இருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் குழந்தைகளை குறிவைத்து தமிழில் மூன்று படங்கள் வெளியாகியிருக்கின்றன. (ரெட்டச்சுழி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், குட்டிப்பிசாசு) இன்னும் சில படங்கள் தயாரிப்பிலும் இருக்கின்றன. பள்ளிக் குழந்தைகளின் விடுமுறைக் காலமான கோடையில் இந்தப் படங்கள் வெளி வந்துள்ளன. தமிழ் சினிமா தனக்கான நுகர்வோராய் குழந்தைகளை அடையாளம் காணத் தொடங்கியிருக்கிறது என்பதின் ஆரம்ப அடையாளங்கள் இவை.

ஆனால் இவை குழந்தைக்களுக்கான படங்கள்தானா? இல்லை என்பது அவற்றின் கதை அம்சங்களையும் காட்சி அமைப்புக்களையும் பார்க்கும் போது தெரிகிறது.இவை பெரியவர்களையும் கவரும் நோக்கம் கொண்ட வணிக ரீதியான படங்கள்தான்.

தமிழில் இது வரை 4000 படங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாகக் கணக்குச் சொல்கிறார்கள். இவற்றில் எத்தனை படங்கள் குழந்தைக்களுக்கான படங்கள்? நிதானமாக யோசித்துப் பார்த்தால் ஒரு ஏழு எட்டுப் படங்களுக்கு மேல் நீங்கள் விரல் விட முடியாது. ஏன் தமிழில் குழந்தைகளுக்கான படங்கள் தயாரிக்கப்படுவதில்லை?

“தமிழ் சினிமாவில் யதார்த்தம் கையை விட்டு போய்க் கொண்டிருக்கிறது. குழந்தைகள் படம் வராமல் இருப்பதற்கு பார்வையாளர்கள்தான் காரணம். எந்தமாதிரியான சினிமா வரவேண்டும் என்பதை பார்வையாளர்கள்தான் வரையறுக்க வேண்டும்” என்று ‘பசங்க’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசினார் கமல்ஹாசன்.

பார்வையாளர்கள்தான் காரணம் என்பது முழு உண்மையல்ல. எண்பதுகளில் ஏன் படங்களில் ஆபாசக் காட்சிகள் இருக்கின்றன என்று இயக்குநர்களைக் கேட்டால் என்ன செய்வது பார்வையாளர்கள் கேட்கிறார்கள் என்று சொல்வார்கள். ஏன் இரட்டை அர்த்தப் பாடல்கள் எழுதுகிறீர்கள் என்று கேட்டால் ரசிகர்கள் விரும்புகிறார்களே என்பார்கள்.

ஏன் சிறுகதை தொடர்கதைகளுக்கு வரையப்படும் படங்கள் இவ்வளவு ஆபாசமாக இருக்கின்றன என்று ஓவியர்களைக் கேட்டால் வாசகர்கள் அதைத்தான் விரும்புகிறார்கள் என்பார்கள். இன்று எங்கே போயின அந்தப் படங்கள், காட்சிகள், பாடல்கள்? வாசகர்களும் ரசிகர்களும்தான் காரணம் என்றால் எப்படி மாற்றங்கள் நேர்ந்தன? பெரிய கதாநாயகர்களின் படங்கள்தான் ஓடும் என்ற ’ஸ்டார் சிஸ்டம்’ நிலையிலிருந்து டைரக்டர்கள் முக்கியம் என்ற நிலைக்கு மாறியது எப்படி? டைரக்டரும் பிரபலமானவராக இருக்க வேண்டியதில்லை, புதுமுகமாகக் கூட இருக்கலாம் என்று மாறியது எப்படி? கவர்ச்சியான கதாநாயகிகள் மும்பையிலிருந்து வர வேண்டியதில்லை, நம்மூர் கிராமத்து முகமாக இருக்கலாம் என்று மாறியது எப்படி? யாரோ ஒருவர் துணிந்து முன் முயற்சி எடுத்தார், முதலடி வைத்தார் மாற்றம் நேர்ந்தது. ஆனால் அப்படி குழந்தைகளுக்கான படங்கள் எடுக்க ஏன் யாரும் முன்வருவதில்லை?

“பெரியவர்களும் ரசிக்கும் வகையில் படமெடுக்க வேண்டிய தேவை தமிழில் இருக்கிறது. அவற்றை குழந்தைகளும் ரசித்தால் கூடுதல் லாபம்.. இன்றைய குழந்தைகளை கவர அனிமேஷன் மாதிரியான தொழில்நுட்பங்களை முழுமையாக பயன்படுத்த வேண்டியிருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியில் நாம் பெறும் வெற்றி இதையெல்லாம் சாத்தியப்படுத்தும்” என்று இயக்குநர் சிம்புதேவன் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

ஆனால் 2009ல் வெளியான ‘வண்ணத்துப்பூச்சி’ என்ற குழந்தைகள் திரைப்படத்துக்கு ‘அளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளை பிரதிபலிக்கின்ற படம்’ என்கிற வரிசையில் தமிழக அரசின் இரண்டாம் பரிசைப் பெற்ற (கவனிக்கவும் சிறந்த குழந்தைகள் படவரிசையில் அவருக்கு இந்த பரிசு கிடைக்கவில்லை. ஏனெனில் தமிழக அரசு குழந்தைகள் படத்துக்கான விருதுகளை வழங்குவதில்லை. காரணம் குழந்தைகள் படம் இங்கே வருவதில்லை என்று நியாயம் கற்பிக்கப்படுகிறது) ராசி அழகப்பன் சற்று கிண்டலாக பதிலளிக்கிறார்: “தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக குழந்தைகளுக்கான சினிமா உருவாவதற்கான வாய்ப்புகளே இல்லை. குழந்தைகள் சினிமாவில் குத்துப்பாட்டு வைக்க முடியாது. ஆக்ரோஷமான சண்டைக்காட்சிகளுக்கு வாய்ப்பில்லை. டூயட் கிடையாது. இதெல்லாம் இல்லாமல் தமிழில் ஒரு திரைப்படம் வணிக வெற்றியை அடைந்துவிடுமா?” அழகப்பனின் கிண்டலுக்குப் பின், புதுமைப் பித்தனின் கதைகளைப் போல யதார்த்தம் ஒளிந்து கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமாக்காரர்களிடம் பேசும்போது நாம் உணர்வது இதைதான். லாபம் வருமென்றால் குழந்தைகளுக்கான படங்களை எடுக்க அவர்களுக்கு மனத்தடை ஏதுமில்லை. வணிகத்துக்கு முதலிடம், மற்ற விஷயங்களுக்கெல்லாம் அடுத்தடுத்த இடம் என்பது சினிமாக்காரர்களின் எண்ணமாக இருக்கிறது. குழந்தைக்களுக்கான படங்கள் வர வேண்டுமானால் பெற்றோர்கள் குழந்தைகளை தியேட்டருக்கு அழைத்து வரவேண்டும். படம் குழந்தைகளை திருப்தி படுத்தும் முன்னர் அவர்களது பெற்றோர்களை திருப்தி படுத்த வேண்டும்.

ஆனால் பெற்றோர்கள்குழந்தைகளை சினிமாவுக்கு அழைத்துவருவது குறித்த அச்சத்தில் இருக்கிறார்கள். ‘படம் பார்த்து கெட்டுப்போய்விடக் கூடாது’என்பது அவர்கள் எண்ணம். ‘குழந்தைகளுக்கு படமெடுத்துவிட்டு குழந்தைகளை பெற்றோர் அழைத்துவரவில்லை என்றால் நாங்கள் எப்படி படமெடுக்க முடியும்?’ என்பது சினிமாக்காரர்களின் ஆதங்கம். ‘படம் பார்த்தால் கெட்டுப்போகும் வகையில் சினிமா வந்தால் எப்படி குழந்தைகளோடு பார்க்கமுடியும்?’என்று பெற்றோர்கள் பதிலுக்கு எகிற.. கோழி முதலில் வந்ததா முட்டை முதலில் வந்ததா மாதிரியான விவாதம்தான் நடக்கிறது.

இந்த விவாதத்தில் நமக்கு அக்கறை இல்லை. நாம் விரும்புவது எல்லாம் நல்ல விழுமியங்களை (Values) சினிமா குழந்தைகளுக்குக் கற்றுத் தராவிட்டாலும் பரவாயில்லை. ஆரோக்கியமற்ற எண்ணங்களை அவர்களிடத்தில் விதைக்காமல் இருந்தால் போதும்.

குழந்தைகள் ஆரோக்கியமாக வளர பெரிதாக எதுவும் மெனக்கெட தேவையில்லை. குழந்தையை யாரும் வளர்க்க முடியாது. அவர்களாகத்தான் வளர்கிறார்கள். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கி தருவது மட்டுமே.

அதற்கு நாம் தயாரா?

(நன்றி : புதிய தலைமுறை : அமெரிக்காவிலிருந்து மாலன் - யுவகிருஷ்ணா உதவியுடன்)