27 செப்டம்பர், 2010

தளபதி - பர்ஸ்ட் டே, பர்ஸ்ட் ஷோ!

அரைடவுசர் போட்டுக் கொண்டிருந்த காலமது. கமல் ரசிகன் என்று வெளிப்படையாக அறிவித்துக் கொண்டு, ரஜினி ரசிகர்களோடு மூர்க்கமாக மோதிக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த தீபாவளிக்கு என்னுடைய பர்ஸ்ட் சாய்ஸாக 'தளபதி' தானிருந்தது என்பதை பத்தொன்பது ஆண்டு கழித்து இப்போது வெளிப்படையாக லஜ்ஜையின்றி தெரிவிக்கிறேன். இப்போது எந்திரனுக்கு இருக்கும் ஹைப்பையும், அப்போதைய தளபதிக்கு இருந்த ஹைப்பையும் ஒப்பீடு செய்துப் பார்க்கும்போது, ஏனோ எந்திரனை 'தளபதி'யே வெல்கிறார்.

பி.பி.எல். சான்யோவில் 'ராக்கம்மா கையத் தட்டுவை' எத்தனைமுறை ரீவைண்ட் செய்து கேட்டிருப்பேன் என்பதற்கு கணக்கேயில்லை. தளபதியோடு வெளியான 'குணா'வில் துரதிருஷ்டவசமாக 'கண்மனி' மட்டும்தான் சூப்பர்ஹிட்டு. மாறாக தளபதியில் ஒவ்வொரு பாட்டும் மெகாஹிட்டு. இளையராஜா கமலுக்கு துரோகம் இழைத்துவிட்டார் என்று நொந்துகொண்டேன். அப்போதெல்லாம் தீபாவளிக்கு தீபாவளி ரஜினி-கமல் அட்டகாசம் நிச்சயம். நாயகன் - மனிதன், வெற்றிவிழா - மாப்பிள்ளை, தளபதி - குணா, பாண்டியன் - தேவர்மகன்,  குருதிப்புனல் - முத்து என்று சிலவருட போட்டிகள் நினைவில் நிற்கிறது. போதாதற்கு விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக் படங்களும் ரேஸூக்கு உண்டு.

அபூர்வசகோதரர்கள், மைக்கேல் மதனகாமராஜன் என்று காமெடி கமர்ஷியல் ரூட்டில் போய்க்கொண்டிருந்த கமலுக்கு, பழைய குருடி கதவைத் திறடியென, 91ஆம் ஆண்டு திடீரென்று 'வித்தியாச' மோகம் பொத்துக்கொண்டு வந்துவிட்டிருக்க வேண்டும். 'குணா' படத்தின் ஸ்டில்கள் அவ்வளவாக கவரவில்லை. மாறாக 'தளபதி' கலக்கிக் கொண்டிருந்தார். கேசட் கவரில் (லஹரி கேசட்?) அச்சடிக்கப்பட்டிருந்த ரஜினியின் 'சைட் போஸ்' ஸ்டில் இன்றும் மறக்க முடியாதது. கிளாஸ் ரூமில் செந்தில்தான் கமலை காரணம் காட்டி என்னை வெறுப்பேற்றிக் கொண்டிருப்பான். கமல் ஏன் தான் போயும் போயும் பைத்தியக்காரனாக நடிக்கிறாரோ என்று நொந்துப் போயிருந்தேன்.

எப்படியும் செந்தில் முதல்நாளே தளபதியை பார்த்துவிட்டு, கிளாஸுக்கு வந்து திரைக்கதை சொல்லிக் கொண்டிருப்பான். நாம் 'குணா'வைப் பார்க்காவிட்டால் தலைவருக்கு எவ்வளவு கேவலம் என்று மனச்சாட்சி உறுத்தியது. துரதிருஷ்டவசமாக அந்தக் காலத்தில் என்னைச் சுற்றி இருந்த எல்லோரும் ரஜினி ரசிகர்களாக இருந்து தொலைத்தார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 'ஒலியும், ஒளியும்' பார்க்கும்போது நான் பட்டபாடு இருக்கிறதே? உஸ்ஸப்பா...

பாடல்காட்சிகளில் கமல் கொஞ்சம் தாராளம், ஏதோ ஒரு பாட்டில் ஜட்டி போட்டுக் கொண்டு நீச்சல் குளத்தில் குளிப்பார். ரஜினியோ உடைவிஷயத்திலும் சரி, ஹீரோயினை காதலிக்கும் விஷயத்திலும் சரி. அநியாயத்துக்கு மிலிட்டரி கண்ணியம். இந்த 'பெண்' சகவாசத்தாலேயே கமலுக்கு கெட்டவன் என்ற இமேஜ் பெண்களிடமும் ஏறிவிட்டிருந்தது. இந்த இமேஜ் லாஜிக்படி பார்த்தால் கமலின் ரசிகனும் கெட்டவனாக, ஆம்பளை லோலாயியாக, இந்த எழவெடுத்த சமூகத்தில் பார்க்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. 

இந்த ரசிகமனோபாவ லாஜிக்கில் இன்னொரு குளறுபடி ஒன்றினையும் நான் அப்போது கண்டுபிடித்திருந்தேன். எம்.ஜி.ஆரை ரசித்தவர்கள் நிறையபேர் கமலை ரசித்தார்கள். சிவாஜியை ரசித்தவர்கள் ரஜினி ரசிகர்களாக இருந்தார்கள். ஆக்சுவலாக, இது உல்டாவாக இருந்திருக்க வேண்டும். ஆனால் ஏனோ தலைகீழாக இருந்ததை பெரும்பாலான ரசிகர்களிடம் அறிவியல்பூர்வமாக இல்லாமல் வாய்வழியாக எடுத்த ஒரு கணக்கெடுப்பில் உணரமுடிந்தது.

எங்கள் வீட்டிலேயே எனக்கு ஒரு ஜென்மவிரோதி இருந்தாள். என்னுடைய தங்கை. ஜோதி தியேட்டரில் வெளியான எல்லா ரஜினி படத்தையும் வெளியான ரெண்டு நாளிலேயே அப்பா அவளை அழைத்துப்போய் காட்டிவிடுவார். நான் மட்டும்தான் அனாதை. நானாகவே முயற்சி எடுத்துப் போய் கமலை திரையில் பார்த்தால்தான் உண்டு. (அப்பா எம்.ஜி.ஆர். வெறியர் என்றாலும், அரசியல் காரணங்களால் சிவாஜி ரசிகராக கன்வெர்ட் ஆகி பத்தாண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தது. எனவே சிவாஜி - ரஜினி என்ற தொடர்ச்சியான ரசிக மனோபாவம்). பிற்பாடு தளபதி பார்த்துவிட்டு அப்பா அடித்த கமெண்ட் "ஒவ்வொரு ஃபிரேமுக்கும் கலக்கியிருக்காண்டா. சிவாஜியை மிஞ்சிட்டான்!"

ஆன்லைன் புக்கிங்கெல்லாம் எதிர்காலத்தில் நடக்குமென்ற சாத்தியத்தையே திரையரங்குகள் அறியாத தீபாவளி அது. மூன்று நாட்களுக்கு முன்பாக ரிசர்வேஷன் தொடங்கும். என் பிரெண்டு (கம்) பங்காளி ஒருவனோடு உதயம் காம்ப்ளக்ஸுக்கு சைக்கிளில் போயிருந்தேன். அவனுக்கு தளபதி, எனக்கு குணாவென்று ஒப்பந்தம். கையில் தாராளமாக 50 ரூபாய் இருந்தது. பால்கனி டிக்கெட்டே பண்ணிரண்டோ, பதினைந்தோ என்பதாக நினைவு (உதயத்தில் அப்போது பால்கனி இருந்தது).

வளாகம் முழுக்க மனிதத்தலைகள். 'தளபதி' ஸ்டில் அச்சடிக்கப்பட்ட டி-ஷர்ட்டுகளில் ரஜினி ரசிகர்கள் வளைய வந்து கொண்டிருந்தார்கள். 'குணா' டிஷர்ட் எங்கேயாவது கிடைக்குமாவென்று விசாரிக்க வேண்டுமென முடிவெடுத்துக் கொண்டேன். இடதுபுறம் (பெட்ரோல் பங்கையொட்டி) ரஜினியின் கம்பீர மெகா கட்டவுட். வலதுபுறம் சன்னியாசி வேடத்தில் கமல் கட்டவுட், அய்யகோ. முகப்பில் ஆங்காங்கே கிடைத்த இடத்தில் சிறிய அளவுகளில் விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக்குக்கு எல்லாம் குட்டி குட்டி கட்டவுட். ரிலீஸ் தேதியன்று ரஜினி-கமல் கட்டவுட் இருதரப்பு ரசிகர்கள் மோதலால் இங்கேதான் எரிந்தது.

மடிப்பாக்கம் தவிர்த்த வெளியுலகில் ரஜினியின் நிஜமான மாஸை நான் நேரில் பார்த்த நாள் அதுதான். பத்து மணி ரிசர்வேஷனுக்கு எட்டு மணிக்கு போயிருந்தோம். எங்களுக்கு முன்பாக வரிசையில் குறைந்தபட்சம் 750 பேராவது நின்றிருந்தார்கள். ரிசர்வேஷன் கவுண்டரையே திறக்காமல், ரிசர்வேஷன் சார்ட்டில் முதல் நான்கு நாட்களுக்கு அனைத்து காட்சிகளும் 'ஹவுஸ்ஃபுல்' போட்டிருந்தார்கள். சந்திரனில் வெளியாகிய 'குணா'வுக்கு பெரிய வரவேற்பில்லை. அந்த கவுண்டர் ஓரளவுக்கு சொல்லிக் கொள்ளும்படியான கூட்டம்தான். தளபதி டிக்கெட் கிடைக்க வாய்ப்பேயில்லை என்று தெரிந்ததும் பங்காளி நொந்துப்போனான். இதனால் எனக்கும் 'குணா'வை ரிசர்வ் செய்யும் எண்ணம் போய்விட்டது. ஏற்கனவே பெரியதாக ஆர்வம் இல்லை என்பதும் வேறொரு காரணம்.

தீபாவளி அன்று காலையில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தேன். செந்தில் அண்ணா ப்ரெஷ்ஷாக சைக்கிளில் வந்தார். "குமாரு காலையில் 9 மணி ஷோ ஆல்பட்லே தளபதி இருக்கு. வர்றியா?" மனசுக்குள் சந்தோஷம். இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், "குணா இருந்தா சொல்லுண்ணா" என்று பிகு செய்தேன். செந்தில் அண்ணா கொஞ்சம் வித்தியாசமானவர். இன்றுவரை நான் பார்த்த மனிதர்களில் அவர் ஒருவர்தான் ஜெய்சங்கருக்கு தீவிர ரசிகராக இருந்தவர். "வர்றதுன்னா வா. வராங்காட்டிப் போய்க்கோ" என்று சட்டென்று அவர் சலித்துக்கொள்ள, 'பக்'கென்று ஆனது. ஓடிப்போய் அப்பாவிடம் பர்மிஷன் வாங்கிக்கொண்டு செந்தில் அண்ணாவின் சைக்கிளில் ஏறினேன்.

ஆல்பட்டில் ரசிகர்மன்ற சிறப்புக் காட்சி. திருவிழாக் கோலம் என்று சொல்லமுடியாது. உண்மையில் அங்கிருந்த ரசிகர்கள் பூண்டிருந்தது போர்க்கோலம். தினேஷை புரட்டியெடுத்துக் கொண்டு ரஜினி அறிமுகமாகும் காட்சியில்... நம்பினால் நம்புங்கள்... தியேட்டருக்குள் தவுசண்ட்வாலா சரம் நிஜமாகவே வெடிக்கப்பட்டது. ரஜினி பேசும் ஒவ்வொரு டயலாக்குக்கும் தொடர்ச்சியான விசில் சத்தம். படத்தின் 75 சதவிகித வசனங்கள் புரியாமலேயே படம் பார்க்க நேரிட்டது. படம் முடிந்ததும் "என் தலைவன் ஜெயிச்சிட்டாண்டோய்...!" என்று கத்திக்கொண்டே வெளியேறிய வெறிக்கூட்டம். எனக்கு 'குணா'வின் வெற்றி குறித்து பெருத்த கவலை உண்டாயிற்று. எதிர்ப்பார்த்தபடியே குணா பப்படமாக, தளபதி வெள்ளிவிழா.

தீபாவளி லீவெல்லாம் முடிந்து பள்ளிக்கு போனபோது, செந்தில் வழக்கம்போல கேப்பே விடாமல் தளபதி புகழ் ஓதிக் கொண்டிருந்தான். அவனும் முதல்நாள் முதல் காட்சி பார்த்திருக்கிறான். அடுத்த ஒரு மாதத்துக்கு தினமும் தளபதி கதையை திகட்டாமல், ஒவ்வொரு முறையும் புதியதாக சில காட்சிகள் சேர்த்து சொல்லிக்கொண்டேயிருந்தான். மாணவர்கள் மத்தியில் மட்டுமன்றி மாணவிகள் மத்தியிலும் அவனுக்கு ஹீரோ அந்தஸ்து. எல்லோர் மத்தியிலும் 'தோத்தாங்குளி' ஆகிவிட்ட அவமானம். (ஆனால் ஓராண்டு கழித்து வந்த அடுத்த தீபாவளியில் நல்லவேளையாக தேவர்மகன் வெளியாகி, அதே ஹீரோ அந்தஸ்தை வெற்றிகரமாக என்னால் கைப்பற்ற முடிந்தது என்பது தனி வரலாறு)

சுதாகர் என்னிடம் சோகமாக கேட்டான். அவன் பார்ட்-டைம் கமல் ரசிகன். "குணா பார்த்தியாடா"

"பார்த்துட்டேண்டா. பர்ஸ்ட் டே, பர்ஸ்ட் ஷோ. ஆக்டிங்குலே நம்ம தலைவருகிட்டே ரஜினியெல்லாம் வெறும் பச்சாடா!"

சுதாகரிடம் அப்பட்டமாக மனதறிந்தே பொய் சொன்னேன். அன்று மட்டுமில்லை. இன்றுவரை நான் முழுமையாக "குணா"வை பார்த்ததே இல்லை.

25 செப்டம்பர், 2010

எந்திரன் - திரை விமர்சனம்! (Endhiran Movie Review 5+)

சிவாஜி வெற்றிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், இயக்குனர் ஷங்கரும் இணையும் படம். சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் முதல்முறையாக பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கும் படம். இதனால் பெரிய எதிர்ப்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது. வழக்கமான காதல், சண்டை, மசாலா படம்தான். இண்டரெஸ்டிங்காக சொல்லியிருப்பதில்தான் இயக்குனர் ஷங்கரின் அனுபவம் வெளிப்படுகிறது.

நாட்டை காப்பாற்ற வேண்டும். கெட்டவர்களை ஒழிக்க வேண்டும் என்பது விஞ்ஞானி ரஜினியின் இலட்சியம். தனி மனிதனாக தன்னால் வில்லன்களை எதிர்கொள்ள முடியாது என்பதால் தன்னை போலவே உருவ அமைப்பு கொண்ட ஒரு ரோபோவை விஞ்ஞானி ரஜினி உருவாக்குகிறார். ஒரு எதிர்பாராத நேரத்தில் உலக அழகி ஐஸ்வர்யாராயை பார்த்து காதலிக்க தொடங்குகிறார். காதலிக்க தொடங்கிய ரஜினி கடமையை மறக்கிறார். இவருடைய ஆல்டர் ஈகோவான ரோபோவும் அதே ஐஸ்வர்யாராயை தான் உருவாக்கப்பட்டதற்கான காரணத்தை மறந்து காதலிக்கத் தொடங்குகிறது. இந்த காதலில் இருந்து வெளிவந்து விஞ்ஞானியும், ரோபோவும் எப்படி வில்லன்களை பழிவாங்குகிறார்கள் என்று சாதாரணமாக சொன்னாலும் ஷங்கரின் விஷூவல் ட்ரீட் என்னவென்பதை வெள்ளித்திரையில் காணுங்கள்.

குறுந்தாடியும், ஸ்பெக்ஸுமாக ஒரு விஞ்ஞானியை கண் முன்பாக நிறுத்துகிறார் ரஜினி. ஐஸ்வர்யாராயை பார்த்ததுமே காதலிப்பது, இவரைப்போலவே ரோபோவும் ஐஸ்வர்யாராயை ஜொள்ளுவிடுவது போன்ற காட்சிகளில் ரஜினியின் இளமை ஊஞ்சலாடுகிறது. இடைவேளைக்கு பிறகு காதலை மறந்து கடமையை செய்ய இரு ரஜினிகளும் கிளம்புவது என்று எந்திரன் மந்திரனாகி பட்டையை கிளப்புகிறார்.

ஐஸ்வர்யா ராய்க்கு பெரியதாக வேலை இல்லை. ரெண்டு ரஜினிகளையும் மாறி மாறி காதலிக்கிறார். கடைசியில் விஞ்ஞானியை கைப்பிடிக்கிறார். இவரை காதலுக்கும், பாடலுக்கும் மட்டுமே ஷங்கர் பயன்படுத்தி இருக்கிறார். உலக அழகி. ம்ம்ம்.. விஷுவலி ப்யூட்டிபுல். வில்லனாக டேனி டென்ஸோங்க்பா நடித்திருக்கிறார். இவர் இந்தியில் பல படங்களில் கலக்கியவர். கருணாஸ் சந்தானம் காமெடி பரவாயில்லை. முக்கியமாக ஹனீபா, கலாபவன் மணி நடிப்பு அட்டகாசம். மனிதபாம்புகளாய் மாறி ரஜினி கலக்கும் காட்சிகள் கிராபிக்ஸ் சூப்பர். படம் நெடுக நிறைய கேரக்டர்கள். ஆனால் எதுவுமே மனதில் பதியவில்லை. ரெண்டு ரஜினி மட்டுமே பதிகிறார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் ஆல்ரெடி ஹிட். சுட்டி சுட்டி ரோபோ, காதல் அணுக்கள் பாடல்களை ரசிகர்கள் மட்டுமன்றி, என்னுடைய திரையுலக நண்பர்களும் விரும்பி கேட்கிறார்கள். பின்னணி இசையிலும் ஆஸ்கார் நாயகன் பின்னி பெடலெடுத்திருக்கிறார். குறிப்பாக ரோபோவின் காதல் காட்சிகள், கிளைமேக்ஸ். சண்டை காட்சிகளை வடிவமைத்த பீட்டர் ஹெயினுக்கு பாராட்டுகள்.

படத்தின் பலத்திற்கு மிக முக்கியமான பலம் ரத்னவேலுவின் கேமிரா. முதல்பாதல் இளமைக்கு ஏற்ப லொக்கேஷன், லைட்டிங், கலர், ஷாட்ஸ் என்று அமைத்தவர், அடுத்த பாதி ஆக்‌ஷனுக்கு டெர்ரர் மூடை கேமிராவிலேயே கொண்டு வந்திருக்கிறார். எக்சலெண்ட். அதுவும் பெருங்குடியில் செட் போட்டு எடுக்கப்பட்ட சண்டைக்காட்சிகள் அதகளம்.

குசேலனின் படுதோல்விக்கு பிறகு ஒரு காதல் மசாலா கதையில் நடிக்க முன்வந்திருப்பதற்கு ரஜினிக்கு பாராட்டுக்கள். அதே நேரத்தில் பதினெட்டு ஆண்டுகளாக ஒரே கதையை இதுவரை பத்து படமாக எடுத்திருக்கும் இயக்குனர் ஷங்கரையும் நாம் பாராட்டிதான் ஆகவேண்டும். ரோபோ காதலிப்பது என்பதெல்லாம் ஹாலிவுட் உலகபடங்களில் வந்த கதைதான் என்றாலும் தமிழில் ப்ரெஷ்ஷாக கொடுத்திருப்பதால் வரவேற்றே ஆகவேண்டும். ஆனால் மனிதர்களை போலவே ரோபோவும் காதலை சொல்ல ரோஜாபூவைதான் கொடுக்க வேண்டியிருக்கிறது போன்ற வழக்கமான டெம்ப்ளேட் காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.

இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்காமல் இருந்திருந்தால் இன்னும் பாராட்டி விமர்சனம் எழுதியிருப்பேன். கலாநிதிமாறன் தயாரித்திருப்பதாலேயே அடக்கி வாசிக்க வேண்டியிருக்கிறது.  படம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே சன்பிக்சர்ஸ் லோகோ போடுவதாலேயே படத்தின் ஹைப் குறைகிறது. சைதை ராஜில் எனக்காக சிறப்புக் காட்சி போட்டார்கள். சவுண்ட் ஓக்கே. டிஜிட்டலில் திரையிடுகிறார்கள். ஆனால் பிலிம் தேய்ந்தது போல எபெக்ட். அந்த தியேட்டரில் இடைவேளையில் போடும் பாப்கார்ன் மட்டும்தான் நன்றாக இருக்கிறது. முட்டை பஜ்ஜியில் முட்டையே இல்லை.

எந்திரன் - கமர்சியல் மந்திரன்!

டிஸ்க்கி : நண்பர்களே / தோழர்களே / பிரெண்டுகளே! படம் பார்த்துதான் இணையத்தில் திரைவிமர்சனம் எழுதமுடியும் என்று நீங்கள் நினைத்தால்... உங்களைவிட பெரிய அறிவாளி வேறுயாரும் உலகத்தில் இருந்துவிட முடியாது.

24 செப்டம்பர், 2010

இரண்டாம் இறையன்பு!

அபிமான நடிகர் நடித்த திரைப்படத்தை சொந்த ஊர் டெண்டு கொட்டாயில் பார்த்துவிட்டு, சினிமா ஆசையால் சென்னைக்கு ஓடிவருபவர்கள் நிறைய பேரை நாம் கேள்விப்பட்டதுண்டு. இதுமாதிரியே அரசியல் தலைவர்கள் மீதான அபிமானத்தால், அவர்களை மாதிரியே தலைவர்களாய் வளரவேண்டும் என்று விருப்பப்பட்டு பட்டணத்துக்கு மூட்டை கட்டிக்கொண்டு வருபவர்களும் உண்டு. சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், எழுத்தாளர்கள் என்று பலருக்கும் இதுமாதிரி ரசிகர்கள் இருப்பது சகஜம்தான்.

முத்துவேல் கொஞ்சம் வித்தியாசமான இளைஞர். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இறையன்புவின் மீது அபிமானம் கொண்டு அவரைப்போலவே ஐ.ஏ.எஸ். ஆவேன் என்ற சபதத்தோடு சென்னைக்கு வந்திருப்பவர். சிறுவயதில் இருந்தே இறையன்பு குறித்த செய்திகளை ஊடகங்களில் ஆர்வமாக படிப்பாராம். தொலைக்காட்சிகளில் இறையன்பு பேசுகிறார் என்றால் முத்துவேலுக்கு கையும் ஓடாது, காலும் ஓடாது. இறையன்புவின் தமிழ் மீது முத்துவேலுக்கு அவ்வளவு காதல். சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு அருகே பாதரக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் இவர்.

இறையன்புவாக என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தவர், நல்ல தமிழைப் பேசிப்பழக ஆரம்பித்தார். 1330 திருக்குறளையும் மனனம் செய்து குன்றக்குடி அடிகளார் முன்பாக ஒப்புவித்து விருது பெற்றார். பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டியில் கலைஞர் கையால் பரிசு, தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்த விழிப்புணர்வுக்காக நேரு யுவகேந்திரா நடத்திய பேச்சுப்போட்டியில் ப.சிதம்பரமிடமிருந்து பரிசு, சமீபத்தில் செம்மொழி மாநாட்டில் துணைமுதல்வர் ஸ்டாலின் கையால் பரிசு என்று அடுத்தடுத்து ஏராளமான விருதுகளையும், பரிசுகளையும் தமிழால் வென்றிருக்கிறார். இறையன்புவாக மாறவேண்டுமென்ற அவருடைய ஆசை, அதுவாகவே தன்னை வளர்த்துக் கொண்டு ஒரு நல்ல தமிழ்ப் பேச்சாளரை இன்று சமூகத்துக்கு கொடுத்திருக்கிறது. இறையன்புவும் ஒரு பேச்சாளர் என்பதை இங்கே நினைவில் கொள்க.

"என்னுடைய எட்டு வயதில் தந்தை எங்களை விட்டு பிரிந்து போய் விட்டார். கடுமையான வறுமை. அம்மா கிடைத்த வேலைகளை செய்து என்னையும், தம்பியையும் காப்பாற்றினார். அம்மாவுக்கு கிடைத்த சொற்ப வருமானத்தில் வயிறு முழுமையாக நிறையாது.

ஒருமுறை மதியவேளையில் மோசமான பசி. பசியை வெல்ல என்ன செய்வதென்றே தெரியவில்லை. அருகிலிருந்து நூலகத்துக்குச் சென்று புத்தகங்களை புரட்டிப் படிக்க ஆரம்பித்தேன். வாசிப்பு பசியை மறக்கச் செய்தது. வறுமை தந்த பரிசு தமிழறிவு. இதனால் நூலகத்தில் கிடைக்கும் கிட்டத்தட்ட எல்லாப் புத்தகங்களையும் இலக்கணம், இலக்கியம் என்று பாரபட்சமில்லாமல் ஒருகட்டத்தில் என்னால் படிக்க முடிந்தது. இந்த காலக்கட்டத்தில்தான் இறையன்பு எழுதிய தன்னம்பிக்கை எழுத்துகளை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரை மானசீக வழிகாட்டியாக மனதுக்குள் வரிந்துகொண்டேன்.

எனக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியையாக அமைந்த செண்பகவள்ளி தெய்வம். முடங்கிப் போனபோதெல்லாம் என்னை தட்டிக் கொடுத்து ஊக்குவித்தவர். மாநிலம் முழுக்க நிறைய பேச்சுப்போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளாக வாங்கிக் குவித்தேன். கிடைத்த பரிசுப்பணம் எனக்கும், தம்பிக்கும் கல்விச்செலவுக்கு உதவியது. நிறைய நல்ல உள்ளங்கள் உதவின. எப்படியோ தட்டுத்தடுமாறி இளங்கலை கணினி முதல் வகுப்பில் தேறிவிட்டேன். தமிழ்வழியில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி, இறையன்பு போல அதிகாரியாக வேண்டும் என்பதுதான் என் இலட்சியம்" என்கிறார் முத்துவேல்.

இவரது இலட்சியத்துக்கு இப்போது சிறு தடங்கல்.

இதுவரை உழைத்து இவரையும், இவரது தம்பியையும் காப்பாற்றி வந்த இவரது தாய் இப்போது உடல்நலமின்றி பணிக்கு செல்ல முடியவில்லை. எனவே உடனடியாக ஏதாவது வேலையில் சேர்ந்து குடும்பத்துக்கு சம்பாதித்தே ஆகவேண்டிய கட்டாயம். இலட்சியத்தை தள்ளி வைத்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கிறார்.

"அது ஒண்ணும் பெரிய பிரச்சினை இல்லைங்க. ஒரு காலத்தில் பள்ளிக் கல்வியே கிடைக்க வாய்ப்பில்லைங்கிற நிலைமை. அதையெல்லாம் தாண்டி இன்று பட்டம் வரைக்கும் வந்துட்டேன். இன்னும் கொஞ்சம் காலம் அதே மாதிரி கஷ்டப்பட்டு எட்டிப் பிடிச்சேன்னா ஐ.ஏ.எஸ். அவ்வளவுதானே? நான் கற்ற தமிழ் என்னை காப்பாற்றும்" என்று கம்பீரமாக சொல்கிறார் முத்துவேல்.

நல்ல கனவுகள் தோற்பதில்லை. முத்துவேலின் கனவும் விரைவில் நனவாக வாழ்த்துவோம்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றின் செய்திப்பிரிவில் பணியாற்றும் இளங்கோவன் அண்ணன் மூலமாக முத்துவேல் எனக்கு அறிமுகமானார். ஒரு மதியப் பொழுதில் அவரோடு பேசிக்கொண்டிருந்தபோது, அவர் பேச்சில் ஒரு விஷயம் என்னை நெகிழச் செய்தது. அதாவது பசியை மறக்க நூல்களை வாசிப்பது. இதுநாள் வரை முத்துவேலையும், அவரது தம்பியையும் காப்பாற்றிக் கொண்டிருந்தவர் அவரது தாய். ஆண்டுக்கு நூறுநாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வரும் சொற்ப வருமானத்திலேயே ஒரு மகனை பட்டதாரி ஆக்கியிருக்கிறார். மறு மகனை கல்லூரியில் சேர்த்திருக்கிறார்.

இப்போது உடல்நலம் குன்றி அந்த தாய் பணிக்கு செல்ல இயலாத நிலை. உடனடியாக ஒரு பணியில் சேர்ந்து தாயையும், தம்பியையும் காப்பாற்றியாக வேண்டும். தனது கனவான ஐ.ஏ.எஸ். தேர்வுக்கும் தயாராக வேண்டும் என்ற நிலையில் முத்துவேல் இருக்கிறார். சென்னைக்கு வந்தால் நிச்சயம் வேலை கிடைக்கும் என்று வந்திருக்கிறார். இந்நகரின் பிரம்மாண்டமும், அலங்காரமுமான சூழல் அவருக்கு கொஞ்சம் அச்சத்தையும், கூச்சத்தையும் கொடுத்திருக்கிறது.

இதுபோன்ற ஏழை இளைஞர்கள் சிலருக்கு சமூகப்பார்வை கொண்ட பதிவர் ஒருவர் வேலைவாய்ப்புக்கு வழிகாட்டி வந்தார். முத்துவேலின் கெட்டநேரமோ என்னவோ தெரியவில்லை. அந்தப் பதிவர் இப்போது ஒரு நெருக்கடியான சூழலில் இருக்கிறார். இவருக்கு உடனடியாக உதவமுடியாத நிலை. இப்பதிவை வாசிப்பவர்கள் யாரேனும் முத்துவேலுக்கு உதவலாம். தங்கள் நிறுவனத்தில் ஏதாவது காலியிடம் இருந்தாலோ, அல்லது நண்பர்களிடம் சொல்லிவைத்தோ ஒரு ஏழை இளைஞரின் வாழ்வில் விளக்கேற்றலாம். நம்மாலும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி உருவாகிவிட்டு போகட்டுமே! நிச்சயமாக பண உதவி வேண்டாம். வேலைவாய்ப்பு மட்டும் போதும்.

முத்துவேலுக்கு உதவ நினைப்பவர்கள் எனக்கு மடல் அனுப்பலாம் : yuvakrishna@gmail.com

22 செப்டம்பர், 2010

தபாங் - பகுத் அச்சா மசாலா ஹை!

கொஞ்சம் இப்படி யோசித்துப் பாருங்கள். தமிழில் எடுக்கப்படும் படங்கள் எல்லாம் மும்பையில் தயாரிக்கப்படுகின்றன. படத்தின் கதாபாத்திரங்கள் எல்லாரும் மும்பையை சேர்ந்தவர்கள். அந்த ஊர் கலாச்சாரம், பண்பாட்டை அடிப்படையாக கொண்டவர்கள். நடை, உடை, பாவனை எல்லாமே அச்சு அசல் மும்பை. ஆனால் பேசுவது மட்டும் தமிழில். நம்மூர் மதுரைக்காரனுக்கு ஜூனூன் சீரியல் பார்ப்பது மாதிரி இருக்காதா? (இப்போது மட்டும் என்ன பெரியதாக வாழ்கிறது? தமிழ்ப்படங்களில் 85 சதவிகிதம் சென்னைதான் கதைக்களம்)

இதே பிரச்சினைதான் இந்தி படங்களில் கொஞ்சநாட்களாக. இந்தி பேசும் பிற மாநிலங்களான உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டு முழுக்க முழுக்க மும்பையையே கடந்த பதினைந்து/இருபது ஆண்டுகளாக இந்திப்படங்கள் சுற்றிவந்தன. போனால் போகிறதென்று அவ்வப்போது டெல்லி அல்லது பஞ்சாப்பை களமாக எடுத்துக் கொள்வார்கள். மற்ற மாநிலத்துக் காரர்கள் எல்லாம் இளிச்சவாயர்களா? தொண்ணூறுகளின் மத்தியில் என்.ஆர்.ஐ. இந்தியர்களை குறிவைத்து எடுக்கப்பட்ட சில ஷாருக்கான் படங்கள் தொடங்கிவைத்த ட்ரெண்டு இது.

இந்த ட்ரெண்டுக்கு தனது அசாத்தியமான வசூலால் சாவுமணி அடித்திருக்கிறது தபாங். இந்த இந்தி வார்த்தைக்கு 'அச்சமில்லை' என்பது பொருளாம். அறிவுஜீவி சினிமா விமர்சகர்கள் தபாங்கை மொக்கை என்று விமர்சிக்கிறார்கள். ஆனால் இந்தி சினிமாவின் நெ.1 வசூல்சாதனை படமான '3 இடியட்ஸ்' வசூலை அனாயசமாக ஒரே வாரத்தில் முறியடித்திருக்கிறது தபாங். ஓபனிங் வீக்கிலேயே வசூல் 80 கோடியை தாண்டிவிட்டது. பத்து நாட்களில் 100 கோடியை வாரி வாயில் போட்டுக் கொண்டது. படம் ஓடி முடிக்கும்போது 3 இடியட்ஸின் ஒட்டுமொத்த வசூலான 200 கோடியை தாண்டி எங்கேயோ போய் நிற்கும் என்பது பாலிவுட்டின் லேட்டஸ்ட் டாக். படத்தின் பட்ஜெட் வெறும் 42 கோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படியென்னதான் படத்தில் ஸ்பெஷல்?

'வித்தியாசமாக ஒன்றுமேயில்லை' என்பதுதான் ஸ்பெஷல். இந்தி சினிமா உலகத்தரத்துக்கு உயர்ந்துகொண்டிருக்கிறது என்றுகூறி சாமானிய வெகுஜன ரசிகர்களை சிலகாலமாக புறக்கணித்து வந்தது. அவர்களது ரசனைக்கு தீனிபோட மறுத்து வந்தது. எளிய மனிதர்களுக்கான சினிமாவாக, ஆபத்பாண்டவனாக 'தபாங்' வந்திருக்கிறது. அதாவது அவள் அப்படித்தான், முள்ளும் மலரும் மாதிரி படங்கள் வந்துகொண்டிருந்த தமிழ் சினிமாவில் புயலாக முரட்டுக்காளையும், சகலகலாவல்லவனும் வந்ததில்லையா? அதுமாதிரியான ஒரு மசாலா டிரான்ஸ்லிஷனை இந்தியில் 'தபாங்' சாத்தியப்படுத்தி இருக்கிறது. "எங்களுக்கான சினிமாவை எடுங்கள். நாங்கள் மீண்டும் மீண்டும் தியேட்டருக்கு வந்து பார்க்கிறோம்" என்று சாமானிய இந்தி சினிமா ரசிகன் இப்படத்தின் வெற்றியின் மூலமாக பாலிவுட் தயாரிப்பாளர்களுக்கு செய்தி சொல்லியிருக்கிறான்.

உத்தரப் பிரதேசத்தின் லால்கஞ்ச் தான் கதைக்களம். சுல்புல் பாண்டேவுக்கும், மகான்சந்துக்கும் ஒரே அம்மா. வேறு வேறு அப்பா. சுல்புலின் அப்பா ஏற்கனவே இறந்துவிட்டார். மகன்கள் மீது அம்மா ஒரே மாதிரியாக பாசம் காட்ட, அப்பா மட்டும் தன்னுடைய மகனான மகான்சந்தை மட்டும் பொத்தி பொத்தி வளர்க்கிறார். வளர்ந்து பெரியவனாகி சுல்புல் பாண்டே போலிஸ் அதிகாரி ஆகிறான். சகோதரனுடனும், (வளர்ப்பு) தகப்பனுடனும் உணர்ச்சிப்போர் புரிகிறான். இடையில் அப்பாவையும், தம்பியையும் தூண்டிவிட ஒரு வில்லன். அம்மா கொல்லப்படுகிறார். ஒரு காதல். நாலு சண்டை. குத்துப்பாட்டு. டூயட். மொத்தமே அவ்ளோதான்.

இந்தி சினிமாவென்று அல்ல. தமிழ், தெலுங்கு சினிமாக்கள் மறந்துவிட்ட பல 'க்ளிஷே'க்கள் தபாங்கில் உண்டு. ஒரு கட்டத்தில் பழைய மசாலா படங்களை நக்கலடிக்கிறார்களோ என்றுகூட நினைக்க வேண்டியிருக்கிறது. ஆனால் 'சீரியஸாகவே' இப்படம் இப்படித்தான் வேண்டுமென்று எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

அந்தக் காலத்து எம்.ஜி.ஆர். பாணி மீசையோடு சல்மானை பார்க்கவே குஷியாக இருக்கிறது. ஓபனிங் ஃபைட் அபாரம். அங்கே தொடங்கும் சல்மானின் எனர்ஜி கடைசிவரை குறையவேயில்லை. க்ளைமேக்ஸில் அவருடைய பாடி கண்டிஷன் தாங்காமல் சட்டையே அதுவாகவே கிழிந்துவிடுகிறது என்ற இயக்குனரின் அல்லது ஸ்டண்ட் மாஸ்டரின் கற்பனை அட்டகாசம். சத்ருகன் சின்காவின் மகள்தான் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார். பேரழகு. வேறு என்னத்தைச் சொல்ல? குறிப்பாக சொல்லவேண்டுமானால் லேசான மேடுகள் கொண்ட சந்தனநிறத்திலான அவரது இடையை சொல்லலாம். அந்தகாலத்து ஹேமமாலினி மாதிரி வித்தியாசமான ஹேர்ஸ்டைல். பார்த்துப் பேசிப்பழகி கல்யாண ஜோலியெல்லாம் முடிந்தபிறகு, முதலிரவில் சல்மானைப் பார்த்து கேட்கிறார். "உன்னோட பேரு என்ன?"

அநீதிகளுக்கு(?) எதிரான ஒரு போலிஸ் ஆஃபிஸரின் போராட்டம் என்ற சீரியஸான கதைக்களன் என்றாலும், படம் முழுக்க நிமிடத்துக்கு ஒருமுறையாவது பலமாக சிரித்துக்கொண்டே பார்க்க முடிகிறது என்பதில்தான் இயக்குனரின் லாவகம் இருக்கிறது.

தபாங் - கைத்தட்டி, விசிலடித்து, குத்துப்போட்டு வரவேற்கலாம்.

20 செப்டம்பர், 2010

மரம் காத்த மாணவர்கள்!

கோவை மாவட்ட ஆட்சியர் எத்தனையோ மனுக்களை கண்டிருக்கிறார். ஆனால் இப்படி ஒரு மனுவை, வாழ்வில் முதன்முறையாக வாசிக்கிறார். ஒரு அரசமரம் நேரடியாக வாய்திறந்துப் பேசுவதைப் போன்ற வார்த்தைகள். திரும்ப திரும்ப வாசிக்கிறார்.

"நான் உங்களுக்கு நிழல் தருகிறேன். சுவாசக்காற்று தருகிறேன். அப்படியிருந்தும் என்னை ஏன் அழிக்க நினைக்கிறீர்கள்? என்னை அழித்துவிட்டு வெயிலில் வாடி, வதங்கி நீங்கள் அழிந்துப் போகாதீர்கள். என்னை நீங்கள் சாய்த்துவிட்டால், என்னை நம்பி, கிளைகள் மீது கூடுகட்டி வாழும் புள்ளினங்களுக்கு என்ன 

பதில் சொல்வேன்? கார்பன்-டை-ஆக்ஸைடை நான் எடுத்துக்கொண்டு, சுத்தமான பிராணவாயுவை உங்களுக்கு தரும் என்னை அழித்திடாமல் மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் காத்திட வேண்டும்!"

பீளமேட்டைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவன் அருண்குமாரும், அவனது நண்பர்கள் குழாமும் சேர்ந்து எழுதியிருந்த மனுவில் இடம்பெற்றிருந்த வாசகங்கள் இவை.

என்ன பிரச்சினை?

கோவையைச் சேர்ந்த வின்சென்ட் விளக்குகிறார். சுற்றுப்புறச் சூழல் ஆர்வலரான இவர், இது பசுமை தொடர்பான விழிப்புணர்வுப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருக்கிறார். மர வளம் என்ற பெயரில் இணையத்தளம் ஒன்றையும் இதற்காக நடத்தி வருகிறார்.

"செம்மொழி மாநாடு கோவையில் நடந்ததை ஒட்டி, சமீபகாலமாக நகரத்தின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. சாலை விரிவாக்கத்துக்காக பல்லாயிரம் மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுவதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனையோடு பார்த்து நின்றோம்.
கோவை அவினாசி பிரதான சாலையிலிருந்து 200 மீட்டர் தூரத்தில், மசாக்காளிபாளையம் செல்லும் சாலையில் பிள்ளையார் கோயில் ஒன்றும், அம்மன் கோயில் ஒன்றும் இருந்தது. இக்கோயில்களை ஒட்டி பழமையான பிரம்மாண்டமான அரசமரம் ஒன்று, அப்பகுதி மக்களுக்கு பசுமையான நிழலையும், சுத்தமான காற்றையும் 55 வருடங்களாக தந்து வந்தது.

சாலை விரிவாக்கத்துக்காக இம்மரம் வெட்டப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். கோயில்கள் அகற்றப்பட்டுவிட்ட நிலையில், அப்பகுதி மாணவர் அருண்குமாரும், அவரது நண்பர்களும் குறைதீர்க்கும் நாளன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுவொன்று கொடுத்தார்கள்" என்று வின்சென்ட் பின்னணிக் கதையை சொல்லி முடித்தார்.

அரச மரத்தின் இன்றைய கதி என்ன? நேராக அங்கேயே சென்று பார்த்துவிடுவோமே?

எந்தவித சேதாரமுமின்றி மரம் தன்னுடைய கம்பீரத் தோற்றத்தோடு இன்னமும் அங்கேயே வீற்றிருக்கிறது. மரத்தைச் சுற்றியும் சாலைகள் போடப்பட்டிருக்கின்றன. மரத்தை நம்பி கூடுகட்டி வாழும் நூற்றுக்கணக்கான பறவைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அச்சாலையிலேயே இன்று 'நிழல்தரும் ஒரே குளிர்தரு' இதுமட்டும்தான்.

மரம் காத்த மாணவக் கூட்டம், மரத்தின் நிழலில் நின்று கூட்டாக வெற்றிப் புன்னகையோடு போஸ் கொடுக்கிறார்கள். "இது எங்கள் தாத்தா பாட்டி நட்ட மரம். எங்கள் அப்பாக்கள் ஓடி பிடித்து விளையாடிய இடம். எங்கள் முன்னோர் சொத்தை நாங்களும் அனுபவிக்க வேண்டாமா?" என்கிறார்கள். அருகிலிருக்கும் கடைக்காரர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், குழந்தைகளின் பெற்றோர் என்று அனைவருக்குமே ஆனந்தம்.

மாணவர்களின் மனுவில் இருந்த நியாயத்தைப் புரிந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் மரத்தை வெட்டக்கூடாது என்று நேரடியாக ஆணையிட்டு தடுத்திடுக்கிறார்.

"எங்கள் குழந்தைகளுக்கு தன்னிச்சையாகவே இம்மரத்தை காக்க வேண்டுமென்று ஆர்வம் இருந்தது. எப்படி காப்பது என்று நடைமுறைகளை மட்டுமே சொல்லிக் கொடுத்தோம். அருண்குமார் மனு தயாரிக்க, இப்பகுதி குழந்தைகள் அனைவரும் கையெழுத்திட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார்கள். மாவட்ட ஆட்சியரும் பெருந்தன்மையோடு நடவடிக்கை எடுத்திருக்கிறார்" என்றார் தண்டபாணி. இவர் அருண்குமாரின் தந்தை.
இயற்கையை காக்க வேண்டும் என்ற அக்கறையை இம்மாணவர்களுக்குள் விதைத்திருக்கும் அவர்களது பெற்றோரும், ஆசிரியருமே முதலில் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

மரத்தை காக்க மாணவர்கள் மனு கொடுக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் அதனை கனிவோடு பரிசீலிக்கிறார். மரம் தப்புகிறது. - அரசிடம் பிரச்சினைகளுக்காக சென்றால் தீர்வே கிடைக்காது என்று புலம்புபவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய நிகழ்வு இது.

(நன்றி : புதிய தலைமுறை)