12 நவம்பர், 2010

முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள்

நவம்பர் 12, 2010. பிற்பகல் 3.00.

நாடு படுக்கையில் உச்சா போய்க் கொண்டிருந்த காலத்தில் வெளியிடப்பட்ட அந்த பழையப் புத்தகத்தை கையில் எடுக்கிறேன். 1986 நவம்பரில் வெளியிடப்பட்டிருக்கிறது. 24 ஆண்டுகள் கழித்து ஒருவன் அவசர அவசரமாக இந்தப் புத்தகத்தை எடுத்து 2வது கதையை மட்டும் உடனே படிக்கப் போகிறான் என்று அப்போது வெளியீட்டாளர் நினைத்துப் பார்த்திருப்பாரா?

இப்போது என்னிடம் இருக்கும் இந்தப் பிரதிதான் அந்தப் புத்தகத்தின் கடைசிப்பிரதி. வேறு யாரிடமாவது சேகரிப்பில் இருக்கலாம். ஆனால் என் கையில் இருக்கும் பிரதி சிறப்புப் பிரதி. ஏனெனில் இது அந்த எழுத்தாளரின் சேகரிப்பில் இருக்கும் ஒரே ஒரு பிரதி. படித்துவிட்டு பத்திரமாக அவரிடம் திருப்பிச் சேர்க்க வேண்டும்.

18வது பக்கத்தில் ஆரம்பிக்கிறது நான் தேடிய கதை. கதையின் தலைப்பு : முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள்.

'மாம்பலத்தில் பழைய பேப்பர் மற்றும் முட்டை வியாபாரம் செய்கிற நாடார் எனக்குப் பழக்கம்' – கதை முதல் வரியிலேயே தொடங்கிவிட்டது.

இரண்டாவது பத்தியில் கொட்டாவி விடாதீர்கள் என்று வாசகனை வேண்டி கேட்டுக் கொள்கிறார் எழுத்தாளர். கதை சுவாரஸ்யமாகப் போகும் என்பதற்கு உத்தரவாதமும் அளிக்கிறார். ஆனால் ஏற்கனவே படித்த இரண்டு பத்தியும் சுவாரஸ்யமாக தான் இருக்கிறது.

இன்னும் இரண்டு பத்தி தாண்டினால் கதை இன்னும் ஆரம்பிக்கவில்லை என்கிறார். கதை என்றுதான் நம்பிப் படிக்கிறோம். இரண்டாவது பக்கத்தின் இரண்டாம் பத்தியில் இன்னும் ஆரம்பிக்கவில்லை என்று சொன்னால் என்ன அர்த்தம்? ஓ! இது கதைக்குள் கதையோ.. ஏதோ மேஜிக், ரியலிஸம் என்கிறார்களே? அதுமாதிரியாக ஏதாவது வகையா? கொஞ்சம் பொறுங்கள். மீதியைப் படிப்போம்.

கிழிஞ்சது கோவணம். வாசிக்கப் போகும் கதையை எழுதியது, கதையை எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர் இல்லையாம். அடச்சே! நம்ம எழுத்தாளர் ஒரு குமாஸ்தாங்க. அதுவும் பயந்தாங்கொள்ளி குமாஸ்தா. ஏதாவது அரசுக்கு எதிரா ஓரிரு வாக்கியம் வந்து, அதாலே பிரமோஷன் கிரமோஷன் கட் ஆயிடுமோன்னு பயப்படுறாரு.

அடுத்த பாரா கொஞ்சம் நீளமானது. கொஞ்சமென்றால் கிரவுன்சைஸ் புக்கில் மொத்தம் 56 வரிகள். போதுமா? 'கழிப்பறைக்கும் கம்யூனிஸத்திற்கும் அப்படி என்ன வினோதத் தொடர்போ?' என்று கேள்வி எழுப்புகிறார். எங்கே புரட்சி? வெடித்ததுமே இந்த எழுத்தாளரைப் பிடித்து தூக்கிலிடுங்கள்.

அடடே. ஆரம்பிச்சிட்டாரு, இலக்கிய நையாண்டியை. சிறு பத்திரிகை ஆட்களோட தகராறே இதுதான். இடையிடையே நான் குடிமகனா, குமாஸ்தாவா, எழுத்தாளான்னு அவருக்குள்ளேயே தத்துவ விசாரணை.

இப்படியே போவுது கதை(?). மன்னிக்கவும். இன்னமும் கதையைத் தொடங்கவில்லை என்கிறார் எழுத்தாளர். அடுத்த அத்தியாயத்தில் தொடங்கும் என்கிறார். நம்புவோம். ஆனால் இந்தக் கதையை எழுத்தாளர் எழுதவில்லை என்று என்னை நம்பச் சொல்கிறார். நீங்களும் நம்புங்கள்.

சும்மா சொல்லக்கூடாது எழுத்தாளர் நல்லா ரயில் ஓட்டுறாரு. அதுவும் எக்ஸ்பிரஸ் ரெயில். இந்த 7 பக்கங்களை வாசிக்க 10 நிமிடங்கள் ஆகியிருக்கிறது. நான் கொஞ்சம் வேகமான வாசகன்தான். இருந்தாலும் மூச்சிரைக்கிறது. கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டு ஒரு பத்து, பதினைந்து நிமிடம் கழித்து அடுத்த அத்தியாயத்தை வாசிக்கலாம் என்று நினைக்கிறேன். இந்த ஓய்வு இடைவெளியில்தான் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று நீங்கள் நம்பியாக வேண்டும்.

இதை எழுதி என்ன செய்ய? எழுத்தாளர் ஆன்லைனில்தான் இருக்கிறார். அவருக்கே அப்படியே அனுப்பிப் பார்க்கலாமா?

 
பிற்பகல் 3.39

நாடார் கடையின் பழைய குப்பையில் அகஸ்மாத்தாக கிடைத்த கதையை நம்மோடு பகிர்ந்துக் கொள்ளப் போகிறாராம் எழுத்தாளர். அகஸ்மாத்தாக கிடைத்த அந்த நோட்டுப் புக்கில் தெளிவான கையெழுத்தில் அடித்தல் திருத்தல் இல்லாமல் ரொம்ப அழகா எழுதியிருக்காம்.

கதைக்கு தலைப்பு வைக்க அந்த கதையை எழுதிய எழுத்தாளர் (இந்த கதையை எழுதும் எழுத்தாளர் வேற என்பதை நினைவுப் படுத்திக் கொள்ளவும்) தலைப்புக்கு குழம்பியிருக்க வேண்டும் என்று இவர் யூகிக்கிறார். எழுதப்பட்ட அந்த கதையை அப்படியே இவர் கையெழுத்தில் பிரதியெடுத்து நமக்கு தரப் போகிறாராம்.

அய்யோ. இந்த அத்தியாயத்திலும் கதை ஆரம்பிக்கப் போவதில்லையா? ஆமாம். படிப்பதை நிறுத்திவிட்டு ஒரு காபி குடியுங்கள் அல்லது ஒரு சிகரெட் பிடியுங்கள் என்று எழுத்தாளர் சொல்கிறார். நோட் திஸ் பாயிண்ட். இந்தக் கதை எழுதும்போது எழுத்தாளர் ஒரு செயின் ஸ்மோக்கர். மிகச்சரியாக 15 ஆண்டுகள் கழித்து ஒட்டுமொத்தமாக புகைபிடிப்பதை நிறுத்தியிருக்கிறார்.

எழுத்தாளரை மாதிரியே நானும் தேவையில்லாத விஷயங்களை பேசிக் கொண்டிருக்கிறேன். விடுங்கள். அவர் சொன்ன ஆலோசனையை ஏற்று ஒரு 'தம்' அடித்து விட்டு வந்து கதையை மீண்டும் தொடர்கிறேன்.

இரண்டாவது பகுதி கதை 2 பக்கம் + 3 லைன் கொண்ட சிறிய அத்தியாயம். 3.41 தொடங்குவதற்கு முன்பாகவே முடித்து விட்டேன்.
 

பிற்பகல் 4.02

ஒருமுறைதான் காதல் வருமென்பது தமிழர் பண்பாடு. அந்த ஒன்று எதுவென்பதுதான் கேள்வி இப்போது. தத்துவம் சொல்லும் நேரமல்ல இது. விமர்சனம் எழுதும் நேரமென்றாலும் நம் எழுத்தாளர் மாதிரி கொஞ்சம் சுற்றி வளைத்து எழுதலாம் என்று எண்ணம்.

மேற்கண்ட தத்துவத்தை இந்தவார விகடனில் படித்தேன். தம் அடிக்கும் பெட்டிக்கடையில் மாட்டியிருந்த விகடனைப் புரட்டியபோது கிடைத்தது. விகடனில் என்னுடைய ஹாட்கேக் இருவன் எழுதும் பரபரப்புத் தொடர்தான். அது தொடர்கதையா தொடர்கட்டுரையா என்று விளங்காவண்ணம் புதுமையாக எழுதப்படும் எழுத்துத் தொடர்ச்சி மலைகள் எனலாம்.

சரி. நம் கதைக்கு வருவோம். 3.41க்கு முந்தைய அத்தியாயத்தை வாசித்து முடித்து, 4.02க்கு அடுத்த அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்குகிறேன். ஒரு தம் அடிக்க கிட்டத்தட்ட 19 நிமிடங்களா என்றொரு சந்தேகம் உங்களுக்கு வரலாம். ஒரு தம் + ஒரு காஃபி. மேலும் லிஃப்டில், ஏறி இறங்க எடுத்துக் கொள்ளும் நேரம். 100 மீட்டர் தூரத்தில் இருக்கும் பெட்டிக் கடைக்கும், டீக்கடைக்கும் சென்றுவர எடுத்துக் கொண்ட நேரம் ஆகியவற்றையும் நீங்கள் கணக்கில் எடுத்துக் கொண்டு தயைகூர்ந்து மன்னிக்க வேண்டும்.

நேராக கதைக்கு வந்துவிடலாம்.

"ஆகாயம் வெளிர்நீலத்தில் அழகாக ஒளிர்ந்து கொண்டிருக்கிறது" என்று மூன்றாவது அத்தியாயம் தொடங்குகிறது. அணிசேரா நாடுகளின் தலைவராக இருக்கும் ஒரு நாட்டின் அதிபர், ஒரு விழாவில் பேசப் போகிறாராம். அந்த விழாவில் சில வெள்ளைப் புறாக்களை பறக்கவிடுவதும் அவர் திட்டம்.

புறாவுக்கு எங்கே போனார்கள்?

தலைமைச் செயலாளர் ஏற்பாடு செய்ய வேண்டிய விஷயமிது. தலைமைச் செயலாளர் தனக்கு தெரிந்த ஒரு ஆசிரியரிடம் புறாக்களை பிடித்து வரும் பொறுப்பை ஒப்படைக்கிறார். ஆசிரியரை செயலாளருக்கு எப்படி தெரியும்? செயலாளரின் மனைவிக்கு ஏற்கனவே ஆசிரியரை தெரியும். செயலாளரின் மனைவிக்கு எப்படி தெரியும்? ஏனெனில் அவர்கள் வசிக்கும் குடியிருப்பருகே ஆசிரியரும் வசிக்கிறார். வசித்தால் மட்டும் போதுமா? எப்படி பழகினார்கள்... இப்படியே சில பக்கங்கள். ஆசிரியரின் வினோதப் பழக்கம் ஒன்றும் விஸ்தாரமாக எழுத்தாளரால் (அதாவது குமாஸ்தா எழுதாளரால் அல்ல. பழைய நோட்டுப் புத்தகத்தில் எழுதிய எழுத்தாளரால்) விவரிக்கப் படுகிறது. 'பெரிய மனிதர்களை தெரிந்துகொள்வது அப்படி ஒன்றும் பெரிய காரியமில்லைதானே?' என்று போகிறபோக்கில் சொல்லப்பட்டாலும், பெரிய மனிதர்களை தெரிந்துகொள்வது தலைகீழாக தண்ணி குடிக்கும் செயல்தான் என்பதை ஆசிரியரின் அனுபவங்கள் உணர்த்துகிறது.

ஒரு முடவன் வீட்டில் சில வெள்ளைப் புறாக்கள் இருக்கிறது. ஆசிரியர் கேட்கிறார். முடவன் மறுக்கிறான். தனது வாழ்வு ஜீவனம் புறாக்களால்தான் என்கிறான். எப்படி? அவன் புறாக்களை விற்பதில்லை. ஆனால் புறாக்கள் முடவனுக்கு சோறு போடுகின்றன. இங்கேதான் கற்பனைக்கும் எட்டாத கற்பனை எழுத்தாளருக்கு கை கொடுக்கிறது.

ஒருவழியாக அதிகாரப் பயமுறுத்தலை பயன்படுத்தி புறாக்களை ஆசிரியர் கைப்பற்றுகிறார். அதிபர் பறக்க விடுகிறார். பறக்க விடப்பட்ட புறாக்கள் திரும்ப தன் வீட்டுக்கு வருமாவென்று முடவன் ஆகாயத்தை அண்ணாந்துப் பார்க்கிறான். ஆகாயம் வெளிர்நீலமாக இருந்ததாம்.

ஒரு நிமிடம். எனக்கும் ஆகாயத்தை இப்போது அண்ணாந்துப் பார்க்க ஆசையாக இருக்கிறது. சன்னலை திறந்து எட்டிப் பார்த்துக் கொள்கிறேனே? அடடே. நிஜமாகவே இந்த நொடியில் சென்னையின் ஆகாயம் வெளிர்நீலமாக தான் இருக்கிறது.

வெளிர்நீலத்தில் தொடங்கி அதே வெளிர்நீலத்தில் முடிகிறது மூன்றாவது அத்தியாயம். ஒருவேளையாக கதை மூன்றாவது அத்தியாயத்திலாவது தொடங்கியது. 9 பக்கங்கள் கொண்ட இந்த அத்தியாயத்தை வாசிக்க 9 நிமிடங்கள் எடுத்துக் கொண்டேன்.

பரபரப்பாக நாம் எதிர்ப்பார்க்கும் க்ளைமேக்ஸுக்கு போவோமா?


பிற்பகல் 4.30.

ஒன்று சொல்ல மறந்துவிட்டேன் அல்லது எனக்கு அப்போது தெரியவில்லை. கதைக்குள் கதை போன அத்தியாயத்திலேயே முடிந்துவிட்டது.

நான்காவது அத்தியாயம் முழுக்க எழுத்தாளரின் உள்ளொளி தரிசனம். இந்த அத்தியாயத்தில் உண்மையை ஒப்புக் கொள்கிறார். யாரோ எழுதிய கதை அல்ல இது. இவரே சில ஆண்டுகளுக்கு முன்பாக எழுதியிருக்கிறார். ஜனநாயக நாட்டில் ஜனநாயகத்தை கிண்டலடிக்கும் சுதந்திரம் இருந்ததை-இருப்பதை மெச்சிக் கொள்கிறார். 24 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே நிலை, இன்னமும் நீடிக்கிறது என்பதை ஒப்புக்கொண்டு நமக்கு நாமே முதுகில் தட்டிக் கொள்ளலாம்.

வாழ்க்கையை நாம் எப்படி எதிர்ப்பார்க்கிறோம். எதிர்ப்பார்ப்பில் நமக்கு எத்துணை மடங்கு தீவிரம் இருக்கிறதோ, அத்துணை மடங்கு பலமாக அடி விழும் என்று எச்சரிக்கிறார் எழுத்தாளர். அதே நேரத்தில் மனிதனுக்கு அத்தியாவசையமான தேவைகளில் ஒன்று நம்பிக்கை என்றும் குறிப்பிடுகிறார். கடவுள் அல்லது லட்சியத்தை நம்பலாம் என்பது அவர் சிபாரிசு. கடவுளை நம்பாதவன் லட்சியத்தை தீவிரமாக நம்புவான் என்று எழுத்தாளர் நம்புகிறார். ஏதேனும் ஒன்றை நம்புவதால்தான் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக தோன்றுகிறதாம்.

மூன்றாவது அத்தியாயத்தில் குறியீடுகளாக எழுதிய ரோஜா, ரத்தச் சிவப்பு ஆகிய புரட்சி (அ) அதிகாரத்துக்கு எதிரான எழுத்துகளை சிலாகிக்க இந்த அத்தியாயத்தில் எழுத்தாளருக்கு மனமில்லை. நிஜமாகவே ஜனநாயகத்தை கிழித்து தோரணம் கட்டுவது அவருக்கு சலிப்பைத் தருகிறது. இன்று யார் வேண்டுமானாலும் சுலபமாக முற்போக்காகி விடலாமே என்று அலுத்துக் கொள்கிறார்.

எழுத்தாளரின் சமூகக்கோபம் குமுறலாக வெடிக்கிறது. அது பலதளங்களிலும் பரவுகிறது. கதையின் கடைசி சில வரிகளில் எழுத்தோடையாய் குறுகி சலசலவென்று நீட்டமாய், ஒழுங்காய் பாய்கிறது.

7 நிமிடங்களில் கடைசி அத்தியாயத்தை (8 பக்கங்கள்) வாசித்து முடித்தேன். இந்த அத்தியாயத்தையும் எழுத்தாளருக்கு மெயில் அனுப்ப வேண்டும்.

-  விமலாதித்த மாமல்லன் எழுதிய முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் சிறுகதை (அ) குறுநாவலுக்கான விமர்சனம். அத்தியாயம், அத்தியாயமாக வாசித்து தனித்தனியாக தோன்றியதை விமர்சனம் போல எழுதுவது பைத்தியக்காரத்தனம். இந்தக் கட்டுரையை முழுக்க இப்போது படித்துப் பார்க்கும்போது, எதையாவது வாசிக்கும்போது நான் சிதைந்து பைத்தியக்காரனாக மாறிவிடுவதை அறியமுடிகிறது...

காமிக்ஸ்.. காமிக்ஸ்!


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை புத்தகக்காட்சியில் நடந்த சம்பவம் இது. இலக்கியப்பசி எடுத்த வாசகர்கள் கடை கடையாக ஏறி இறங்கி சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள், ஆன்மீகம், அறிவியல், குழந்தைகள் என்று வகை வகையாக புத்தகங்களை தேடி தேடி வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

இலக்கியவாதியான எஸ்.ராமகிருஷ்ணன் கைவலிக்க ஒரு பெரிய புத்தகப் பையோடு வளைய வந்துகொண்டிருந்தார். அவருடைய வாசகர் ஒருவர் அவரை சந்தித்து தான் வாங்கிய புத்தகங்களை எல்லாம் காட்டி பேசிக்கொண்டிருந்தார். "நீங்க என்னவெல்லாம் சார் புத்தகங்கள் வாங்கியிருக்கீங்க?" வாசகர் ஆவல் மேலிட, எழுத்தாளர் காட்டப்போகும் இலக்கியப் பொக்கிஷங்களை காண முற்பட்டார்.

எஸ்.ராமகிருஷ்ணன் அமைதியாக தனது பையை திறந்துகாட்டினார். பைமுழுக்க காமிக்ஸ் எனப்படும் சித்திரக்கதைப் புத்தகங்கள். முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ், காமிக்ஸ் கிளாசிக்ஸ் என்று கிட்டத்தட்ட அறுபது, எழுபது புத்தகங்கள்.

வாசகருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. "உங்க பையனுக்கா சார்?"

"ஏன்? நானே கூட விரும்பிப் படிப்பேனே?"

சமகாலத் தமிழின் மிகப்பெரிய எழுத்தாளுமையான எஸ்.ராமகிருஷ்ணன் சொன்னதை அந்த வாசகர் நம்பினாரா என்று தெரியவில்லை. ஆனாலும் அது உண்மைதான். எஸ்.ராமகிருஷ்ணன் மட்டுமல்ல. ஓவியர் டிராட்ஸ்கி மருது, நடிகர் பொன்வண்ணன், இயக்குனர்கள் மிஸ்கின், சிம்புதேவன் என்று நிறைய வி.ஐ.பி. காமிக்ஸ் ரசிகர்கள் உண்டு.

எழுபதுகளிலும், எண்பதுகளிலும் தமிழில் காமிக்ஸ் புத்தகங்கள் (தூயத்தமிழில் வரைக்கதை) சக்கைப்போடு போட்ட காலக்கட்டத்தில் இவர்களைப் போல லட்சக்கணக்கானவர்கள் குழந்தைகளாக இருந்தார்கள். சொல்லப்போனால் பலருடைய முதல் வாசிப்பே கூட ஒரு காமிக்ஸ் புத்தகமாகதான் இருக்கும். இரும்புக்கை மாயாவி, ஸ்பைடர், லாரன்ஸ் டேவிட், ஜேம்ஸ்பாண்ட், டெக்ஸ்வில்லர், இரும்பு மனிதன் ஆர்ச்சி, மாயாவி வேதாளன், சூப்பர்மேன், லக்கிலுக், ஸ்பைடர்மேன், சுட்டிக் குரங்கு கபீஷ் – இவர்களையெல்லாம் அவ்வளவு சீக்கிரமாக மறந்துவிட முடியுமா?

காமிக்ஸ் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்காக எளிமையாக சொல்கிறோம். தின, வார இதழ்களில் 'கார்ட்டூன்' பார்க்கிறீர்கள் இல்லையா? இது ஒரே ஒரு கட்டம். ஒரு நூல் முழுக்க ஒரு தொடர்ச்சியான கதையோடு இதுபோல நூற்றுக்கணக்கான படங்கள் வரையப்பட்டால் அதுதான் காமிக்ஸ். 1961ல் தொடங்கி, தினத்தந்தியில் அரைநூற்றாண்டு தாண்டியும் தொடர்ச்சியாக இன்றும் இரண்டாம் பக்கத்தில் வெளியாகும் 'கன்னித்தீவு' தொடர், காமிக்ஸ்களின் வெற்றிக்கு நல்ல அத்தாட்சி!

காமிக்ஸ் என்றதுமே பலரும் குழந்தைகளுக்கான விஷயம் என்று ஒதுக்கி விடுகிறார்கள். உங்களுக்கு ஒரு ரகசியம். இன்றைய தேதியில் தமிழில் காமிக்ஸ் படிப்பவர்களின் சராசரி வயது 25 என்பது தெரியுமா? நேற்றைய் குழந்தைகள்தான் காமிக்ஸ் படிப்பதில் அதிகமாக ஆர்வம் காட்டுகிறார்கள். இன்றைய குழந்தைகளில் சிலர் ஆங்கில காமிக்ஸ்களை படிக்கிறார்கள். தமிழில் படிப்பது மிகக்குறைவு. பலருக்கு பள்ளிப்புத்தகங்களைத் தவிர்த்து வேறெதையும் படிப்பதற்கு வாய்ப்பே வழங்கப்படுவதில்லை.

பலவகை தொழில்நுட்பங்களிலும் முன்னேறிய நாடான ஜப்பானில் இலக்கியங்கள் கூட காமிக்ஸ் வடிவங்களாகவே இன்றும் படிக்கப் படுகின்றன. நாவல்கள் கூட காமிக்ஸ்களாக வெளிவருகின்றன. ஏனெனில் வெறும் வரிகளை வாசிக்கும் அனுபவத்தினைக் காட்டிலும், படங்களோடு வரிகளை வாசிக்கும் அனுபவமென்பது அலாதியானது. எனவேதான் தமிழ்ச்சூழலில் நவீன ஓவியங்களின் முன்னோடிகளில் ஒருவரான டிராட்ஸ்கி மருது, "அடிப்படையில் அச்சு ஊடகமாக இருந்தாலும், ஒலி-ஒளி ஊடகங்களுக்கு ஒப்பான ஊடகம் காமிக்ஸ்" என்கிறார்.

குறிப்பாக திரைத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு காமிக்ஸ் வாசிப்பு ஒரு வரப்பிரசாதம். கேமிரா கோணங்கள், காட்சி வடிவமைப்பு, லொக்கேஷன் அமைத்தல் போன்ற தொழில்நுட்ப விஷயங்களுக்கு காமிக்ஸில் சித்தரிக்கப்படும் காட்சிகள் அடிப்படையான கருத்துருவாக்கத்தை உருவாக்கும். கமல்ஹாசன் கூட தன்னுடைய சில படங்களின் திரைக்கதை வடிவத்தை காமிக்ஸ் காட்சிகளாக (திரைத்துறையில் ஸ்டோரி போர்ட் என்பார்கள்) உருவாக்கிப் பார்த்து மெருகேற்றுவாராம். கமல் மட்டுமல்ல, பல இயக்குனர்கள் இந்த ஸ்டோரி போர்ட் தொழில்நுட்பத்தை இப்போது பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். ஹாலிவுட் படங்களில் ஸ்டோரி போர்ட் உருவாக்குவது அத்தியாவசியமான ஒன்றாகவே இருக்கிறது. தொலைக்காட்சி விளம்பரங்கள் கூட படப்பிடிப்புக்கு முன்பாக ஸ்டோரி போர்டுகளாகவே உருவாக்கப்பட்டு, வாடிக்கையாளர்களிடம் ஒப்புதல் பெறப்படும்.

சினிமா, விளம்பரத்துறை என்றில்லை. பல்வேறு துறைகளிலும் படம் காட்டும் விளையாட்டு கட்டாயம் உண்டு. நீங்கள் புதியதாக கனவு வீடு கட்ட விரும்புகிறீர்கள். இன்ஜினியர் உங்கள் கனவை படமாக வரைந்துதானே ஒப்புதல் பெறுகிறார்? வாஷிங் மெஷினோ, டிவியோ, வேறு ஏதேனும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க நினைத்தால் என்ன செய்கிறீர்கள்? பத்திரிகைகளிலோ, டிவியிலோ வாங்க விரும்பும் பொருளின் 'படம்' பார்த்துதானே முடிவு எடுக்கிறீர்கள்? இப்போது சொல்லுங்கள். காமிக்ஸ் சிறுபிள்ளை விளையாட்டா? நம்முடைய அன்றாட வாழ்வில் எவ்வளவோ சந்தர்ப்பங்களில் 'காமிக்ஸ்' என்று தெரியாமலேயே, அதை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் இல்லையா?

மேலைநாடுகளில் இன்றைக்கும் புதிய காமிக்ஸ் வெளியீடுகள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. நம்மூரில்தான் பிசினஸ் கொஞ்சகாலமாக 'டல்'. ஆனால் ஒரு காலத்தில் இங்கும் 'காமிக்ஸ் கோலாகலம்' திருவிழாவாக நடைபெற்றதுண்டு. அந்த பிளாஷ்பேக்கை கொஞ்சம் கொசுவர்த்தி சுற்றி திரும்பிப் பார்ப்போமா?

1955ல் தொடங்கி 1957 வரை தொடர்ச்சியாக 32 பக்க முழுநீள படக்கதைகளை குமுதம் இதழ் வெளியிட்டதுதான் தமிழ்காமிக்ஸின் அதிகாரப்பூர்வ தொடக்கம் எனலாம். இதற்கு முன்பே கூட பல முயற்சிகள் நடைபெற்றிருந்தாலும் இதுதான் பிரபலமான முதல் தொடக்கம். 1956ல் ஆனந்த விகடன், ஓவியர் மாயா உருவாக்கத்தில் 'ஜமீன்தார் மகன்' என்ற படக்கதை தொடரை வெளியிட்டது. 'தமிழ்ப்பத்திரிகை உலகில் முதன்முறையாக படக்கதை' என்று இச்சம்பவத்தை ஆனந்தவிகடனின் பொக்கிஷம் குறிப்பிடுகிறது.

வாசகர்களிடையே கிடைத்த பலமான வரவேற்பைத் தொடர்ந்து குமுதம், விகடன் இதழ்கள் தொடர்ச்சியாக காமிக்ஸ்களை வெளியிட்டு வந்தன. குழந்தைகளுக்கு என்றில்லாமல், பெரியவர்களுக்கான காமிக்ஸ்களை விகடன் பெருமளவில் உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

1964ஆம் ஆண்டு இந்திய புராண, வரலாற்று நிகழ்வுகளை காமிக்ஸ் வடிவில் 'அமர் சித்திரக்கதா' என்ற பெயரில் 117 புத்தகங்களை வெளியிட்டார்கள். இவை சிவகாசி பிரகாஷ் பப்ளிஷர் நிறுவனத்தால் அச்சடிக்கப்பட்டது. பின்னாளில் பிரபலமான முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ்களை வெளியிட்ட நிறுவனம் இதுதான்.

65ஆம் ஆண்டில் இந்திரஜால் காமிக்ஸ் (ஐநூறுக்கும் மேற்பட்ட இதழ்கள்), 68ல் ஃபால்கன் காமிக்ஸ் (22 இதழ்கள்), 69ல் பொன்னி காமிக்ஸ் (1992 வரை 192 இதழ்கள்) என்று ஏராளமான இதழ்கள் பிரத்யேகமாக காமிக்ஸ்களுக்கு என்றே தொடங்கப்பட்டன.

1972ஆம் ஆண்டு சவுந்தரபாண்டியன் என்பவரின் பிரகாஷ் பப்ளிஷர்ஸ் 'முத்து காமிக்ஸ்' வெளியிடத் தொடங்கியது. இன்றுவரை முத்துகாமிக்ஸ் 300க்கும் மேற்பட்ட இதழ்களோடு தொடர்ச்சியாக இயங்கி வருகிறது. இதே ஆண்டு குமுதம் நிறுவனம் 'மாலைமதி' என்ற பெயரில் தனிப்புத்தகமாக காமிக்ஸ் கொண்டுவந்தது. சுமார் 176 இதழ்கள் காமிக்ஸ்களாக வெளிவந்தபின்னர், மாலைமதி வார இதழாக்கப்பட்டு நாவல்களை வெளியிடத் தொடங்கியது.

1984ஆம் ஆண்டு 17 வயது எஸ்.விஜயனை ஆசிரியராகக் கொண்டு 'லயன் காமிக்ஸ்' தொடங்கப்பட்டது. தினத்தந்தி குழுமம் மாதமிருமுறை இதழாக 'ராணி காமிக்ஸ்' தொடங்கியது. தமிழ் காமிக்ஸ்களின் பொற்காலம் அதுதான். ஒரு லட்சம் பிரதிகள் வரை லயன் காமிக்ஸ் விற்ற காலம் அது. ராணி காமிக்ஸும் வாசகர்களிடையே பலமான வரவேற்பை பெற்றிருந்தது. பிரகாஷ் பப்ளிஷர்ஸ் நிறுவனத்தாலேயே திகில், ஜூனியர் லயன், மினி லயன் என்று ஏராளமான தனித்தனி காமிக்ஸ் இதழ்கள் கொண்டுவரப்பட்டன. இந்த பொற்காலம் 90களின் முற்பகுதி வரை நீடித்திருந்தது.

உலகமயமாக்கலின் விளைவாக யாருக்கு நஷ்டமோ இல்லையோ, தமிழ் காமிக்ஸுகளுக்கு பெருத்த நஷ்டம். இதன் விளைவாக மக்களின் வாழ்க்கைமுறை அடியோடு மாறியது. குழந்தைகள் பள்ளிப் புத்தகங்களைத் தவிர வேறெதையும் படிப்பதை பெற்றோர் விரும்புவதில்லை. போதாக்குறைக்கு புற்றீசல்களாய் படையெடுத்த சேட்டிலைட் சேனல்கள். குறிப்பாக குழந்தைகளை குறிவைத்து ஒளிபரபரப்பப்படும் கார்ட்டூன் சேனல்கள். மக்களுக்கு ஆங்கில மோகமும் சேர்ந்துகொள்ள, கருப்பு வெள்ளையில் படக்கதையாக தமிழை வாசிப்பது குறித்த ஆர்வம் குறைந்தது. பிரபலமான காமிக்ஸ்கள் மூடுவிழா காண முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் ஆகிய இரண்டு மட்டும் இன்னமும் ஒருகாலத்தில் மின்னிய நட்சத்திரத்தின் எஞ்சிய பழம்பெருமையாக தள்ளாட்டமாக நடந்து கொண்டிருக்கிறது.

ஆயினும் நேற்றைய குழந்தைகள் தங்கள் பால்யகாலத்து நினைவுகளை கிளறிப்பார்க்க இன்றும் காமிக்ஸ் வாசிக்கிறார்கள். அஞ்சல்தலை, நாணயங்கள் சேகரிப்பதைப் போல தேடித்தேடி பழைய காமிக்ஸ்களை சேகரிக்கிறார்கள். 1972ல் வெளிவந்த மாலைமதி காமிக்ஸின் ஒரு இதழின் விலை 75 காசு. இன்று அதை ரூ.4000 வரை கொடுத்து வாங்க தயாராக இருக்கிறார்கள் காமிக்ஸ் ரசிகர்கள். 1987 லயன் காமிக்ஸ் தீபாவளி மலராக வெளிவந்த சூப்பர் ஸ்பெஷலின் அன்றைய விலை ரூ.10. அதை இன்று 10,000 ரூபாய் வரை கொடுத்து வாங்கத் தயாராக இருக்கிறார்கள். உலகம் முழுக்க குறைந்தபட்சம் 3000 பேர் தமிழ் காமிக்ஸ் சேகரிப்பாளர்களாக இருக்கிறார்கள். தமிழ் காமிக்ஸ் வரலாற்றை ஆவணப்படமாக உருவாக்கி வருகிறார் காமிக்ஸ் ரசிகரான கிங் விஸ்வா. உலகமெங்கும் இருக்கும் வாசகர்களை ஒருங்கிணைக்கும் விதமாக தமிழ் காமிக்ஸ் உலகம் (tamilcomicsulagam.blogspot.com) என்றொரு வலைப்பதிவையும் நடத்தி வருகிறார். இந்த தளத்தில் காமிக்ஸ் தொடர்பான ஏராளமான தகவல்களையும், படங்களையும் தேடித்தேடி சேகரித்து பதிவேற்றுகிறார்.

இன்று குழந்தைகளிடம் போதிய வரவேற்பு இல்லையென்றாலும், அன்று காமிக்ஸ் படித்தவர்கள் இன்றும் புதிய காமிக்ஸ்களை நம்பிக்கையோடு வரவேற்கிறார்கள். எனவேதான் பிரகாஷ் பப்ளிஷர்ஸ் இந்த தீபாவளிக்கு ரூ.200/- விலையில் 854 பக்கங்கள் கொண்ட ஒரே மெகாகதையை லயன் காமிக்ஸில் வெளியிட்டிருக்கிறது. இந்திய அளவிலேயே இவ்வளவு பெரிய காமிக்ஸ் முயற்சி இதுவரை நடந்ததே இல்லை. சுமார் 800 இதழ்களை முன்பதிவிலேயே விற்றுத் தீர்த்து சாதனை புரிந்திருக்கிறது லயன் காமிக்ஸ்.

குழந்தைகளை கவரும் வகையில் காலத்துக்கேற்ற மாற்றங்களோடு, முழுவண்ணத்தில், அயல்நாட்டுத் தரத்தில், அடுத்தடுத்து காமிக்ஸ்களை கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் லயன் காமிக்ஸ் ஆசிரியர் எஸ்.விஜயன். கார்ட்டூன் சேனல் பார்க்கும் நேரத்தை குறைத்து, காமிக்ஸ் பக்கமாக கருணைப் பார்வையை குழந்தைகள் காட்டுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

எக்ஸ்ட்ரா மேட்டர் 1 :

வாண்டு மாமாவை மறக்க முடியுமா?

தமிழின் மிகச்சிறந்த கதைசொல்லிகளில் ஒருவரான வாண்டுமாமாவை ஒதுக்கிவிட்டு காமிக்ஸ் பற்றி பேசவே முடியாது. கெளசிகன் என்று இலக்கிய, பத்திரிகை உலகிலும் வாண்டுமாமா என்று தமிழ் குழந்தைகளாலும் அன்போடு அழைக்கப்பட்டவர். இவர் சுமார் 28 சித்திரக்கதைகளை எழுதியிருக்கிறார். பிரபல பத்திரிகைகளில் பணியாற்றி ஓய்வு பெற்று இனி குழந்தைகளுக்காகவே எழுதுவேன் என்று 'பூந்தளிர்' பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப்பேற்றவர். வாண்டுமாமாவுக்கு இப்போது 85 வயதாகிறது. முதுமை காரணமாக முன்புபோல எழுத முடிவதில்லை.

 

எக்ஸ்ட்ரா மேட்டர் 2 :

தமிழ் காமிக்ஸ்களின் தந்தை!

முல்லை தங்கராசனை தமிழ் காமிக்ஸ் உலகின் தந்தை என்றே குறிப்பிடலாம். அதிகம் படிக்காதவர். பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்தவர். லாரி, கார் டிரைவராக பணியாற்றியவர். நிறைய குழந்தைப் பத்திரிகைகளில் பணிபுரிந்து தன் எழுத்தாற்றலை பெருக்கிக் கொண்ட இவர் 60களில் காமிக்ஸ்களில் ஆர்வம் செலுத்தத் தொடங்கினார்.

இவர் வெளியிட்ட காமிக்ஸ் புத்தகமான 'ஸ்ரீ வெங்கடேஸ்வரர் புராண சித்திரங்கள்' தமிழ் காமிக்ஸின் மைல்கல். 5 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்று சாதனை படைத்தது. இன்றும் வெளிவரும் முத்து காமிக்ஸ் தொடங்கப்பட்ட போது, அதற்கு ஆசிரியராக இருந்தவர் முல்லை தங்கராசன்.

1976ல் மணிபாப்பா என்ற குழந்தைகள் இதழைத் தொடங்கினார். இதே நேரத்தில் மாயாவி காமிக்ஸ் என்ற ஒரு இதழையும் தொடங்கி சில இதழ்களை வெளியிட்டார். 79ல் பிரபலமான 'ரத்னபாலா' இதழுக்கு ஆசிரியராக பொறுப்பேற்றார். பின்னர் சிறுவர் ரத்தினக் குவியல் என்ற பெயரில் 16 பக்க சித்திரக்கதைகளை மதிநிலையம் பதிப்பகத்தோடு சேர்ந்து வெளியிட்டார். 84ல் மேத்தா காமிக்ஸ் தொடங்கினார். பின்னர் மதி காமிக்ஸில் பணியாற்றினார். இன்னும் ஏராளமான இதழ்களிலும் முல்லை தங்கராசனின் பங்களிப்பு இருந்தது. அவர் நிலையாக ஒரு நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியதாக தகவல் இல்லை.

சுமார் முப்பதாண்டு காலம் சிறுவர் இலக்கியத்தோடு இலக்கியமாக வாழ்ந்த முல்லைதங்கராசனின் நண்பர்கள் அனைவருமே இலக்கிய ஜாம்பவான்கள். சிற்பி, ஜெயகாந்தன், கண்ணதாசன் ஆகியோர் இவருடைய நெருங்கிய நண்பர்கள்.

80களின் இறுதியில் (86 என்று சிலரும் 89 என்றும் சிலரும் சொல்கிறார்கள்) காமிக்ஸ் உரிமை தொடர்பாக பேசுவதற்கு மும்பைக்கு சென்றிருந்தபோது, ஓட்டல் மாடியில் இருந்து விழுந்து இறந்துவிட்டார். அவர் ஒரு காமிக்ஸை திரைப்படமாக எடுக்கும் எண்ணத்தில் இருந்ததாகவும், அதற்காக மும்பையில் தயாரிப்பாளர் ஒருவரை சந்திக்க சென்றதாகவும் சிலர் சொல்கிறார்கள்.

(நன்றி : புதிய தலைமுறை)

9 நவம்பர், 2010

கொலை செய்ய விரும்பு!

இப்படி ஒரு பதிவெழுத வேண்டியது அவசியமே இல்லாதது. எழுதவும் கூடாதது. பொதுமக்கள் தீவிரமாக நம்பும், ஆதரிக்கும் ஒரு விஷயத்தை எதிர்த்து எதையுமே எழுதக்கூடாது என்பது வெகுமக்கள் இதழியலின் அடிப்படை பாடம். ஆனாலும் கை அரிக்கிறது. என்ன செய்ய?

கொலைகளை ரசிப்பது இந்திய மனோபாவமாக இருக்கிறது. இன்னமும் ஏன் கசாப்பை சிறையில் வைத்து சிக்கன் பிரியாணி போட்டுக் கொண்டிருக்கிறார்கள், போட்டுத் தள்ள வேண்டியதுதானே? அப்சல்குருவை தூக்கில் இன்னமும் போடலை பாருங்க சார். என்ன அநியாயம் என்று, ஜெயம்ரவியை பிரபுதேவா இயக்குகிறார் என்பதை பேசுவது போல் இயல்பாக நாட்டு நடப்பு பேசித் திரிகிறோம்.

கசாப்போ, குருவோ, மோகன்ராஜோ, ஆட்டோசங்கரோ.. யாராக வேண்டுமானால் இருக்கட்டுமே? அவர்களெல்லாம் கெட்டவர்கள் என்று போலிஸ் சொல்கிறது. டிவியில் காட்டுகிறார்கள். பேப்பரில் செய்தி போடுகிறார்கள். கோர்ட்டில் கேஸ் நடக்கிறது. நாய்களை தூக்கி தூக்கில் போட்டால் மகிழ்ச்சி. கேஸ் முடிவதற்கு முன்பாகவே போலிஸ் போட்டுத் தள்ளினால் அதைவிட மகிழ்ச்சி. போடாவிட்டாலும் பிரச்சினையில்லை. ஏன் போடவில்லை என்று காலையில் ஆபிஸுக்கு வரும்போது பஸ்ஸிலோ, டிரெய்னிலோ நாலு பேரிடம் நேரப்போக்குக்காக பேச ஏதோ விஷயம் கிடைக்கிறது. யார் கிட்டேயாவது எதையாவது பேச மேட்டர் கிடைக்குதே.. இதைவிட அவனுங்க உசுரு என்ன சார் பெருசு? என்ன சொல்றீங்க?

அடப்பாவிகளா.. 'தூக்குலே போடு' என்பதை நாயரிடம், 'டீ போடு' என்று சொல்வதைப் போல எவ்வளவு கேஷுவலாக உச்சரிக்கிறோம்? வர வர நாம் இந்தியாவில் வாழ்கிறோமா அல்லது சவுதி அரேபியாவில் வாழ்கிறோமா என்று சந்தேகம் வருகிறது. சன்னமாக யாராவது மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தவர்கள் "தூக்குலே போடுறதெல்லாம் பாவமுங்க..." என்று சொன்னால், அவர்களையும் சேர்த்து தூக்கி தூக்கில் போடுங்கள் என்று செய்தித்தாள்களின் இணையத் தளங்களில் கமெண்டு போட்டால் போயிற்று.

இந்திய சமூகம் நிஜமாகவே கொலைவெறியில் இருக்கிறது. கோர்ட்டுக்கு கேசு போனா பத்து, இருவது வருஷம் கழிச்சி தூக்குத்தண்டனை கொடுக்குறாங்க. அதை நிறைவேத்துறதுக்கு இன்னும் ஆறு, ஏழு வருஷம். இடையிலே கருணை மணு. யாருக்காவது நூற்றாண்டு விழா வந்தா மன்னிப்பு. எதுக்கு சார் வீணா அவனுங்களுக்கு சோறு போட்டு ஜெயில்ல வெச்சிருக்கணும். போட்டுத் தள்ளணும் சார் இவனுங்களை. நான் சிகப்பு மனிதன், நான் மகான் அல்லன்னு சினிமாவில் காட்டுறான் பாருங்க.

நியாயம்தான். நரகாசுரனை போட்டுத் தள்ளுனதையே தேசம் தீபாவளியாய் கொண்டாடுதே?

ஒரு தீபாவளிக்கு வீரப்பனை போலிஸ் போட்டுத் தள்ளுனாங்க பாருங்க. அதுதாங்க நிஜமான தீபாவளி. போட்டுத் தள்ளுனதா சொல்லுற ஆளு, ஸ்பாட்டுலேயே இல்லைன்னு சவுக்குலே எழுதறாங்க. எழுதிட்டுப் போவட்டுமே? அவரு ஸ்பாட்டுலே இருந்தா என்ன? இல்லாங்காட்டி என்ன? வீரப்பன் உடம்பை தோட்டா துளைச்சது உண்மைதானே? போலிஸ் கதை உண்மையோ, பொய்யோ. எவன் எக்கேடு கெட்டு செத்தா நமக்கென்ன? நமக்கு தேவை எவனோ சாவுறது. அது நடந்தா சரிதானே? ஆனா பாருங்க. இன்னொரு தீபாவளிக்கு போலிஸ் ஒரு மடாதிபதியை, இதே மாதிரி கொலை குற்றத்துக்கு அரெஸ்ட் பண்ணிச்சி. அவரை என்கவுண்டர் பண்ணனும்னு நாம யாருமே கேட்கலை. தூக்குலே போடச்சொல்லி டைம்பாஸுக்கு பேசலை. ஏன்னா அவர் ஜெகத்குரு. பாலியல் குற்றம் கூட செஞ்சிருக்குறதா நக்கீரனுலே எழுதனாங்க. பேப்பர்காரங்களும், போலிஸும் என்ன சொன்னாலும் நம்பிடமுடியுமா? ஒரு தராதரம் இல்லையா? எதை எதை நம்பணும்னு நமக்கு தெரியாதா?

எது எப்படியோ.. இந்த தீபாவளிக்கு மோகன்ராஜை போட்டாச்சி. கோயமுத்தூர் தெருக்களில் பட்டாசு வெடித்து 'நிஜமான தீபாவளி' கொண்டாடப்படுகிறது. எதுக்கு சார் இவனை எல்லாம் கோர்ட்டுக்கு கொண்டுபோகணும்? போற வழியிலே போட்டுத் தாளிச்சிட வேண்டியதுதான். போலிஸ் வாழ்க!

ஓக்கே. கொஞ்சம் சீரியஸாப் பேசுவோம் சார்.

போலிஸோட துப்பாக்கியை அவசரப்பட்டு பாராட்டிடாதீங்க. அதுக்கு நல்லவங்க கெட்டவங்க வித்தியாசம் தெரியாது. இன்னைக்கு மோகன்ராஜை போட்ட துப்பாக்கி, நாளைக்கு யாரை வேணும்னாலும் எந்த குற்றம் சாட்டியும் போடலாம். ஏன்னா வாழ்த்தறதுக்குதான் நாம இருக்கோமே? குஜராத்துலே போட்டாங்க இல்லை. போட்டாங்க இல்லை.

மோகன்ராஜை போட்ட சம்பவத்தில் போலிஸின் கதை நன்றாக இருக்கிறது. ஆனாலும் எந்த ஒரு என்கவுண்டராக இருந்தாலும், இதே கதை-வசனம்-காட்சிகள் என்பதுதான் எரிச்சலைக் கொடுக்கிறது. வாழ்வின் சகல விஷயங்களிலும் சட்டம், ஒழுங்கு, விளக்கெண்ணெய் என்று கோருபவர்கள், மோகன்ராஜு மாதிரியான குற்றவாளிகள் கொல்லப்பட்ட விஷயத்தில் மட்டும் எல்லா லொட்டு லொசுக்குகளையும் மறந்துவிட்டு, அப்பட்டமான கொலைக்கு கைத்தட்டி மகிழ்வது என்ன லாஜிக்கென்று புரியவில்லை. என்கவுண்டர்தான் நியாயமான தண்டனைன்னா, அப்புறம் எதுக்குங்க செஷன்ஸ் கோர்ட்டு, டிஸ்ட்ரிக்ட் கோர்டு, ஹைகோர்ட்டு, சுப்ரீம்கோர்ட்டு?

மோகன்ராஜு என்கவுண்டரில் தண்டிக்கப்பட்டது நமக்கு எந்தவிதத்திலும் வருத்தத்தையோ, மகிழ்ச்சியையோ, தாக்கத்தையோ ஏற்படுத்தவில்லை (அவனுக்கு ஒன்றரை வயதில் ஒரு குழந்தை இருந்ததாக படித்ததுதான் கொஞ்சம் வருத்தம் கொடுத்தது – இனிமேல் காலம் முழுக்க தண்டிக்கப்படப் போவது அக்குழந்தையின் எதிர்காலம்).

மோகன்ராஜூ வசமாக மாட்டிக் கொண்டான். வெளியில் இருக்கும் மோகன்ராஜூகள் பலருக்கும் மாட்டிக் கொள்ளும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. மாட்டிக் கொண்டவனால் – அதனால் ஜெயிலில் இருப்பவனால் - இனி புதிய குற்றம் செய்யமுடியாது, மாட்டிக் கொள்ளாதவர்களோ யாருக்கும் தெரியாமல் எண்ணற்ற குற்றங்களை செய்துக் கொண்டே போவார்கள். இந்த அடிப்படை வித்தியாசத்தை உணர்ந்தவர்கள் என்கவுண்டர், மரணதண்டனை என்று அடுத்தவன் சாவை கொண்டாட மாட்டார்கள்.

இறுதியாக வேண்டி கேட்டுக் கொள்கிறேன் தோழர்களே. தனிநபர்கள் ஒருவருக்கொருவர் போட்டுத் தள்ளிக் கொள்வதில் கூட ஏதோ ஒருசில நியாய அநியாய காரணங்களாவது இருக்கக்கூடும். போலிஸின் என்கவுண்டரை மட்டும் எந்த ரூபத்திலும் ஆதரிக்காதீர்கள். குற்றங்களுக்கும், குற்றவாளிகளுக்கும் எதிராக நிற்கிறோம் என்றபேரில், போலிஸின் (சட்ட அங்கீகாரம் பெற்ற) குற்றங்களுக்கு வக்காலத்து வாங்காதீர்கள். இந்தப் போக்கு நீடிப்பது மனித உரிமைகளுக்கு ஆபத்தானது. ஏனெனில் உங்களால் இன்று வரவேற்கப்படுவதால், என்கவுண்டர் கலாச்சாரம் எதிர்காலத்தில் பெருகும். என்றோ ஒருநாள் நடைபெறப்போகும் ஏதோ ஒரு என்கவுண்டரின் சீஸ்ஃபயரில் நீங்களோ, அப்பாவியான நானோ கூட கொல்லப்படலாம்.

8 நவம்பர், 2010

வ – குவார்ட்டர் கட்டிங்!

'குவார்ட்டர் கட்டிங்' – இலக்கியச்சுவையும், தமிழ் கவுச்சி வாடையும் மிகுந்த இந்த ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு என்னென்னவோ விளையாட்டு காட்டலாம். 90 மில்லிக்காக தமிழையே விற்றுத் தீர்க்கவும் கல்தோன்றி மண்தோன்றா காலத்துக்குடியின் இன்றைய வழித்தோன்றல் தயாராக இருக்கிறான். அன்பார்ச்சுனேட்லி டாஸ்மாக் பார்களில் இப்போது 'கட்டிங்' போடுவதில்லை. பார் வாசலிலேயே நாயாக காத்திருந்து, 'பார்ட்னரை' கண்டுபிடித்து 'ஷேர்' போட்டு 'கட்டிங்' அடிக்க வேண்டியிருக்கிறது.

வ என்று வரிவிலக்குகாகவும், குவார்ட்டர் கட்டிங் என்று கதைக்கு நியாயம் செய்யும் தலைப்பாகவும் வைக்கப்பட்டு தீபாவளிக்கு வந்திருக்கும் படம் பெரும் தலைவலியையும், அலுப்பையும் ஏற்படுத்துகிறது. இந்த களைப்பைப் போக்க 'கட்டிங்' விடலாமென்றால், நம்ம 'கட்டிங் பார்ட்னர்' தலைதீபாவளிக்காக ஊருக்குப் போயிருக்கிறார். சொந்தக்கதை, சோகக்கதை எதற்கு? படத்தின் கதையைப் பார்ப்போம்.

ஒரு சுபயோக சுபதினத்தில் ஹீரோ கோயம்பேட்டில் வந்து இறங்குகிறார். நாளை காலை 4 மணிக்கு அவர் சவுதிக்கு விமானம் ஏற வேண்டும். சவுதியில் ஃபிகர் வெட்ட முடியாது என்ற சட்டச் சிக்கல் கூட அவருக்கு பிரச்சினையில்லை. சரக்கடிக்க முடியாது என்ற யதார்த்தம்தான் சுடுகிறது. கடைசியாக ஒரு 'குவார்ட்டர்' விட முடிவெடுக்கிறார். துரதிருஷ்டவசமாக தேர்தல் விடுமுறையாக டாஸ்மாக் 3 நாட்களுக்கு மூடியிருக்கிறது. ஒரு கட்டிங்குக்காக நாக்கைத் தொங்கபோட்டுக்கொண்டு சிட்டி முழுக்க அலைகிறார். அந்த இரவில் நடைபெறும் சம்பவங்கள்தான் 'வ'

மேற்கண்ட பாராவைப் படிக்கும்போது சுவாரஸ்யமான கதையாகவே தோன்றும். பலகீனமான மொக்கைத் திரைக்கதையால் தண்ணீர் கலந்து பீர் அடிப்பதுபோல படம் பப்பாடக்கர் ஆகிறது. ஒருவேளை வெங்கட்பிரபுவுக்கு இந்த 'லைன்' கிடைத்திருந்தால், பக்காவான சைட்டிஷ் பரிமாறி மஜாவான பார்ட்டியாக மாற்றியிருப்பார்.

தமிழ்ப்படம் ஹேங்ஓவரிலேயே இன்னமும் ஹீரோ சிவா இருப்பது உறுதியாகிறது. சுத்தமாக நடிக்க வராவிட்டாலும், அசால்ட்டான பாடி லேங்குவேஜ், குடிகார டயலாக் டெலிவரி என்று அவருக்கான பிளஸ் பாயிண்ட்ஸ் நிறைய. எஸ்.பி.பி.சரணின் நடிப்பு ஆச்சரியம். மாட்டு டாக்டராக வருகிறார். நிஜமாகவே கார்ட்டூன் பசுமாடு மாதிரி முகத்தோற்றம் அவருக்கு. சரண் போட்டு வரும் டிரஸ் எங்கே கிடைக்குமென்று தெரியவில்லை. கலக்கல் காம்பினேஷன்.

லேகா வாஷிங்டனுக்கு ஹீரோயின் மாதிரி ஒரு கேரக்டர். ஆனால் ஹீரோயின் அல்ல. ஜரூராக ஸ்டார்ட் ஆகும் படம், அங்கங்கே கார்பரேட் அடைப்பு ஆகி திணறிக் கொண்டிருக்கிறது என்றால், லேகா வந்ததுமே பஞ்சர் வேறு ஆகித் தொலைக்கிறது. லேகாவுக்கான பாடல் சன் மியூசிக்கில் தனியாகப் பார்த்தால் ஒருவேளை நன்றாக இருக்கக்கூடும். மாணிக்க விநாயகம் வேறு உச்சஸ்தாயி தொண்டையில் பாடி பாடி கழுத்தறுக்கும் காட்சிகள் ஏன் தான் இடை இடையே வந்து தொலைக்கிறதோ என்று நொந்துப்போக வேண்டியிருக்கிறது. கதையோடு அவரது காட்சியை இணைக்கிறோம் என்று க்ளைமேக்ஸில் ஏனோதானோவென்று வாந்தியெடுத்து வைக்கிறார்கள்.

படமே மொக்கை என்றால் பாடல்கள் படுமொக்கை. இசை சக்கை. ஜான் விஜயின் ஒரு ஆக்‌ஷனே கொடுமை. இந்த அழகில் டபுள் ஆக்டிங் வேறு. துரத்துகிறார்கள். ஓடுகிறார்கள். துரத்துகிறார்கள். ஓடுகிறார்கள். பரபரவென்று ஓடியிருக்க வேண்டாமா படம்? ம்ஹூம். ஓபனிங் சீனில் இருந்து எண்ட் கார்ட் வரை செல்ஃப் எடுக்கும் என்று நம்பி நம்பி வெம்பிப் போகிறோம். 'ஓரம்போ' எடுத்த இயக்குனர்கள்தான் இவர்கள் என்று யாராவது முப்பாத்தம்மன் மீது கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்தால் கூட நம்பமுடியாது.

பாலியல் விடுதியைக் காட்டுகிறார்கள். ரசிகனுக்கு கொஞ்சம் கூட பாலியல் மூடு வரவில்லை. அதேபோல்தான் படமும். டைட்டிலில் மட்டுமே இருக்கும் போதை, படத்தின் உள்ளடக்கத்தில் துளியூண்டு கூட இல்லை. தனித்தனிக் காட்சியாக பார்த்தால் சிரிக்க முடிகிறது என்றாலும், ஒட்டுமொத்த படமென்றுப் பார்த்தால் குடிகாரன் எடுத்து வைத்த வாந்தியாகதான் இருக்கிறது. 4 மணிக்கு ஏர்போர்ட்டில் இருக்க வேண்டிய நாயகனுக்கு, குவார்ட்டர் கிடைக்காமல் வீணாகும் நேர நெருக்கடியை ரசிகனுக்கு சீன் பை சீனாக 'பாஸ்' செய்திருக்க வேண்டாமா? இதனாலேயே படம் ஃபெயில் ஆகுதுங்க சார்.

வ – வந்துடாதீங்க!

வலை வீசம்மா வலை வீசு!


ஜாக்கி சேகர், கேபிள் சங்கர், வால்பையன், ஆல்-இன்-ஆல் ராஜன், பன்னிக்குட்டி ராமசாமி, பலாபட்டறை ஷங்கர், ராம்ஜி யாஹூ, வெறும்பய, ரமேஷ்-ரொம்ப நல்லவன் (சத்தியமா), மங்குனி அமைச்சர், குசும்பன், கஞ்சா கருப்பு, குடுகுடுப்பை, எல் போர்ட் – பீ சிரியஸ், ராயல்ராஜ் (பெயரில் மட்டும்) – இவர்களெல்லாம் யார்?

வடசென்னை கேங்லீடர்கள் என்று அவசரப்பட்டு நினைத்துவிடாதீர்கள். இவர்களெல்லாம் வலைப்பூக்களில் எழுதும் எழுத்தாளர்கள். ஒவ்வொருவருக்கும் வேறு சொந்தப் பெயர் இருந்தாலும், பெரும்பான்மையானவர்கள் இதுபோல 'டெர்ரர்' புனைபெயர் வைத்துக் கொண்டு 'மிரட்டுகிறார்கள்'

இணையத்தில் இயங்கும் வலையுலகத்தை சுவாரஸ்யமாக்குவதில் இது போன்ற வித்தியாசமான புனைப்பெயர்களுக்கும் வித்தியாசமான கருத்துக்களுக்கும், கமெண்ட்களுக்கும் முக்கியப் பங்குண்டு.

சரி. அதென்ன வலையுலகம்?

முன்பெல்லாம் ஊரில் சிலர் எப்போது பார்த்தாலும் கதையோ, கவிதையோ எழுதிக் கொண்டிருப்பார்கள். வெளிவரும் எல்லாப் பத்திரிகைகளுக்கும் தங்களுடைய படைப்பை அனுப்பி, அவை திரும்பி, திரும்ப வேறொரு படைப்பை அனுப்பி, அதுவும் திரும்பி.. இப்படியே விக்கிரமாதித்தன் – வேதாளம் கதைதான் நடக்கும். நொந்துப்போன அந்த படைப்பாளி 'கையெழுத்துப் பத்திரிகை' தொடங்கி விடுவார். இதற்குப் பிறகாக தன் பத்திரிகையை படிக்கச் சொல்லி தன்னுடைய சுற்றுவட்ட நண்பர்களையும், உறவினர்களையும் அணுக அவர்கள் தலை தெறிக்க இட்த்தைக் காலி பண்ணிக் கொண்டு ஓடுவார்கள்

கொஞ்சம் 'பசை'யுள்ள படைப்பாளியாக இருக்கும் பட்சத்தில், லோக்கல் பிரிண்டிங் பிரஸ்ஸில் மாதாமாதம் கைக்காசைப் போட்டு அச்சடித்து, சொந்தமாக 'பத்திரிகை ஆசிரியர்' ஆகிவிடுவார். கடைகளில் யாரும் வாங்கமாட்டார்கள் என்பதால், செல்போன் எஸ்.எம்.எஸ். வியாபாரி போல கிடைக்கும் முகவரிக்கெல்லாம் அனுப்பிவைத்து 'கொசுக்கடி தாங்கமுடியலையடா நாராயணா' என்று நொந்து கொள்ளச் செய்வார். அந்தப் படைப்பாளியிடம் நம் முகவரி மாட்டிக் கொண்ட காரணத்தாலேயே மாதாமாதம், அவருடைய இலக்கிய அவஸ்தையை பொறுத்துக் கொண்டு போயாகவேண்டும். எங்கேயாவது நேரில் பார்த்துவிட்டால் "ஏப்ரல் மாசம் உங்களைப் பத்தி ஒரு பின்நவீனத்துவக் கவிதை எழுதியிருந்தேனே.. படிச்சீங்களா?" என்று கேட்டுத் வைப்பார். நாம் ஙே!

இதெல்லாம் அந்தக் காலம். டெக்னாலஜி ஈஸ் ஸ்..சோஓஓஓஓ... மச் இம்ப்ரூவ்ட். கையெழுத்துப் பத்திரிகையாகவும், லோக்கல் இலக்கியப் பத்திரிகையாகவும் படைப்பாளிகள் இலக்கியச் சேவை ஆற்றிய காலம் முடிந்துவிட்டது. தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் ஏதோ ஒரு பக்கவிளைவாக கையெழுத்துப் பத்திரிகைக் கவிஞர்கள் இப்போது உலகளவில் புகழ் பெற்ற கவிஞர்களாகவும், கவிதாயினிகளாகவும்  ஆகிவிட்டார்கள். இலக்கியத்தில் புரட்சி பூத்துவிட்டது!  இப்போது யாரும் கைவலிக்க எழுதி கையெழுத்துப் பத்திரிகை நடத்துவதில்லை. Blog  என்ற ஒரே சொல்லில் ஆங்கிலத்திலும், வலைப்பதிவு வலைப்பூ என்று இரண்டு சொற்களில் தமிழிலும் வழங்கப்படும் இலவச இணையங்கள் தோன்றிவிட்டன.

ஆமாம் இங்கு எல்லாமே இலவசம்தான். உங்களுக்குத் தேவையானது எல்லாம் ஒரே ஒரு மின்னஞ்சல் முகவரி. அதைக் கொண்டு நீங்கள் வலைப்பூவைத் துவக்கி விடலாம். www.blogger.com  என்ற வலைத்தளத்திற்குப் போனால், பாப்பாக்களுக்குக் கையைப் பிடித்து எழுதச் சொல்லிக் கொடுப்பதைப் போல வலைப்பூ ஆரம்பிக்கக் கற்றுக் கொடுப்பார்கள். இன்னொரு சுலப வழி உங்கள் நண்பர்கள் அல்லது அலுவலகத்தில் சதா சர்வ காலமும் கணினி முன்னாலேயே இருப்பவர்களின் பெயர்களை எல்லாம் எழுதி சீட்டுக் குலுக்கிப் போட்டுக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டு ஒரு பெயரை எடுங்கள். அவர் அநேகமாக ஒரு வலைப்பதிவராக இருப்பார்!   .

வலைப்பூ (அ) வலைப்பதிவுகளில் எழுதிவரும் ஆயிரக் கணக்கான  படைப்பாளிகள் இந்த இரண்டு வழிகளில் ஒன்றைப் பினபற்றித்தான் வலைப்பதிவுகளைத் துவக்கினார்கள் வலைப்பூவில் ஆரம்பத்தில் சுமாராக எழுதி, போக போக எழுத்தில் 'கில்லி'யாகி, பிரபல பத்திரிகைகளால் கவனிக்கப்பட்டு வாய்ப்பளிக்கப்பட்டவர்களும் உண்டு. நிறைய வலைப்பதிவர்கள் புத்தகங்கள் கூட எழுதியிருக்கிறார்கள்.

மூன்றாவது வலைப்பதிவிலேயே சரக்கு காலியாகி, டைரி லெவலுக்கு வந்து, பின் பத்திரிகைகளில் வந்ததை எடுத்துக் காப்பி & பேஸ்ட் செய்பவர்களும் உண்டு.  

ஜெயமோகன், சாருநிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், பா.ராகவன்,  போன்ற பிரபலமான எழுத்தாளர்கள் பலரும் தமிழில் வலைப்பூ எழுதுகிறார்கள். ஊடகங்களில் தங்களால் எழுதமுடியாத சில விஷயங்களுக்கு வலைப்பூவை பயன்படுத்திக் கொள்கிறார்கள். தங்கள் வாசகர்களோடு நேரடியாக தொடர்புகொண்ட உரையாட வலைப்பூக்கள் இவர்களுக்கு உதவுகிறது.

வலைப்பதிவர்கள் ஏன் எழுதுகிறார்கள்?

"வலைப்பதிவு இல்லையென்றாலும் காகிதத்தில் எதையாவது எழுதிக் கொண்டே இருப்பேன். எழுதுவது என்பது ஒரு அனுபவப் பகிர்வு. நம் கருத்துகள் சிலருக்காவது பிடிக்குமென்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்" என்கிறார் கவிஞர் சு. தணிகை (marubadiyumpookkum.wordpress.com). ஆனால் இவரைப் போல இல்லாமல் வெறுமனே பொழுதுபோக்குக்கு எழுதுபவர்கள் அதிகமாகி விட்டார்கள் என்பதுதான் பழைய வலைப்பதிவர்களின் விமர்சனம்.

எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை வலைப்பதிவுகளை விமர்சிக்கும்போது, "இதனால் பதினைந்து நிமிட பிரபலம் கிடைக்கிறது" என்று குறிப்பிட்டார்.

சரி. என்னதான் எழுதுகிறார்கள்?

இவர்களது மொழியில் சொன்னால் 'மொக்கை'தான் அதிகம். முதல் நாள் முதல் காட்சியே ஏதாவது ஒரு மொக்கைப் படத்தை பார்த்துவிட்டு, "அந்தப் படத்தைப் பார்க்காதீங்க!" என்று அதிரடியாக சொல்லுவார்கள். படத்தின் டைட்டிலில் தொடங்கி, எண்ட் கார்ட் வரை கதையை அப்படியே விமர்சனமென்ற பெயரில் எழுதுவார்கள். இயக்குனர் சேரனின் ஒரு படம் போதிய வரவேற்பை வணிகரீதியாக பெறாதபோது, ஒரு டிவி நிகழ்ச்சியில் இந்த வலைப்பதிவர்களை பற்றி நொந்துப்போய் பேசினார்.

அதே நேரத்தில் இந்த மொக்கை சினிமாக்களை தவிர்த்து மாற்று சினிமாக்கள் குறித்த அறிமுகத்தை தரும் வலைப்பதிவர்களும் நிறைய உண்டு. சுரேஷ்கண்ணன் (pitchaipathiram.blogspot.com) என்னும் பதிவர், தொடர்ச்சியாக மாற்று சினிமா குறித்த அறிமுகத்தை தந்து வருகிறார். வெகுஜன ரசனையின் அபத்தத்தை 'சுரீர்' வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார். ஆர்.வி. என்ற பதிவரின் 'அவார்டா கொடுக்குறாங்க?' (awardakodukkaranga.wordpress.com) என்ற வலைப்பூவில் பழைய, நல்ல சினிமாக்கள் குறித்த விரிவான அலசல்கள் படிக்க கிடைக்கிறது.

அரசியல் பதிவுகள் நிறைய எழுதுகிறார்கள். ஆயினும் ஆழமான அரசியல் விமர்சனங்கள் மிகக்குறைவான பதிவர்களிடமே காணக் கிடைக்கிறது. பெரும்பாலும் அன்றைய செய்தித்தாள்களில் வந்த செய்திகளை வாசித்து டென்ஷனாகி, "ஏய் மனிதனே!" டைப்பில் பக்கெட்டுக் கவிதைகள் எழுதுவார்கள். அல்லது வாசித்த செய்தியை அப்படியே 'டைப்' அடித்து வலையில் ஏற்றுவார்கள். செய்திகளை வாசித்து அவற்றை அலசி மாற்றுக்கருத்தை முன்வைப்பவர்கள் அரிதாகவே காணப்படுகிறார்கள்.

வினவு (vinavu.com), மருதன் (marudhang.blogspot.com), பைத்தியக்காரன் (naayakan.blogspot.com), ரோஸாவசந்த் (rozavasanth.blogspot.com), சுகுணாதிவாகர் (sugunadiwakar.blogspot.com), சுடலைமாடன், மாதவராஜ்(mathavaraj.blogspot.com), குழலி(kuzhali.blogspot.com), ப்ரூனோ (doctorbruno.net), ஓசை செல்லா (osaichella.blogspot.com) போன்ற சில பதிவர்களின் அரசியல் பதிவுகள் குறிப்பிடத்தக்கவை. பொதுப்புத்தியை எதிர்த்து எந்தவொரு பிரச்சினையிலும் மாற்றுப்பார்வையை முன்வைக்கும் அரசியல் பதிவுகளை பூதக்கண்ணாடி வைத்துத் தேடிப்பார்த்தால் படிக்கக் கிடைக்கும்.

'கிழக்கு பதிப்பகம்' பத்ரி (thoughtsintamil.blogspot.com) ஒரு கருத்து எந்திரன். அவரது வலைப்பூவில் நீங்கள் எதைவேண்டுமானாலும் எதிர்ப்பார்க்கலாம். உலகின் எல்லா விஷயங்களுக்கும் ஏதோ ஒரு கருத்தோ அல்லது தகவலோ வைத்திருக்கிறார். இவரைப் போன்றவர்கள் கொஞ்சம் சீரியஸாகவே வலைப்பதிவை பயன்படுத்துகிறார்கள்.

'இட்லி வடை' (idlyvadai.blogspot.com) என்றப் பெயரில் வித்தியாசமான வலைப்பூ ஒன்று உண்டு. ஊடகங்களில் வரும் அரசியல் செய்திகளை தொகுத்து 'நறுக்'கென்று வழங்குவதில் கில்லாடி இந்த இட்லிவடை. தேர்தல் சீஸனில் இட்லிவடை களைகட்டும். இந்த வலைப்பூவை எழுதி வருபவர் யாரென்று யாருக்குமே தெரியாது. "அவரா இவர்? இவரா அவர்?" என்று மற்ற வலைப்பதிவர்களை இந்தப் பதிவின் சொந்தக்காரராக யூகித்து விளையாடும் விளையாட்டு தமிழ் வலையுலகில் ரொம்பப் பிரபலம்.

சினிமா, அரசியலுக்கு அடுத்து பதிவுலகில் மவுசு இலக்கியத்துக்குதான். ஏனெனில் எப்படி எழுதினாலும் கவிதை, கதை என்கிற வடிவம் இலக்கியமென்று இங்கே நம்பப்படுகிறது. வலைப்பதிவர்களில் 95 சதவிகிதம் பேர் கவிஞர்களாகவும் இருக்கிறார்கள். சுனாமியா? பூகம்பமா? அயோத்தி தீர்ப்பா? ஈழமா? – இருக்கவே இருக்கிறது கீபோர்டு. தட்டு ஒரு கவிதையை அல்லது கட்டுரையை. அள்ளிக்கொள்ளு பின்னூட்டங்களை.

பின்னூட்டங்கள் என்றதும்  குழம்பி விடாதீர்கள். படைப்புக்கு வரும் வாசகர்களின் விமர்சனங்கள்தான் பின்னூட்டங்கள். அதாவது பத்திரிகைக்கு வரும் வாசகர் கடிதங்கள் மாதிரி. ஒரு பதிவைப் போட்டதுமே, அடுத்த ஐந்து ஆறு நிமிடங்களில் இருந்து பின்னூட்டங்கள் வர ஆரம்பித்துவிடும். அரசியல், இலக்கியப் பதிவுகளில் பின்னூட்டங்கள் விவாதத்துக்கு பயன்படுகிறது என்றாலும், வலையுலகில் இடப்படும் பின்னூட்டங்கள் 90 சதவிகிதம் மொக்கையானவை. வெட்டியானவை.

ஒரு பதிவர் இந்தியப் பொருளாதாரத்தின் எதிர்காலத்தை அவதானித்து, கடுமையாக உழைத்து ஒரு நல்லப் பதிவினை எழுதினாரென்றால், ஒரு பின்னூட்டக்காரர் 'மீ த பர்ஸ்ட்டு' என்று மட்டும் ஒரு வரி போட்டுவிட்டு மொண்ணை ஆக்கிவிடுவார். பதிவெழுதிய படைப்பாளியோ மெல்லவும், முடியாமல் விழுங்கவும் முடியாமல் அந்த விமர்சனத்தை(?) ஏற்றுக் கொண்டாக வேண்டும். இல்லையேல் அடுத்தப் பதிவுக்கு அந்த 'மீ த பர்ஸ்ட்டு' பின்னூட்டம் போட்டவர் வரமாட்டார்.

எழுதப்பட்ட கருத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லையா? பின்னூட்டங்களில் நடக்கும் கும்மி. நீ யோக்கியமா, நான் யோக்கியமா, அவன் யோக்கியமா? என்று நீளும் விவாதங்களில் தனிநபர் சண்டைகள் மலியும். ஒவ்வொரு வலைப்பதிவருக்கும் புனைப்பெயர் உண்டல்லவா? அதுதான் அவரது அடையாளம். ஆனால் புனைப்பெயரில் பின்னூட்டம் இட விரும்பாதவர் அடையாளம் தெரியாதவராகவும் (அனானிமஸ்) பின்னூட்டம் இட முடியும். அல்லது வேறொருவர் பெயரிலும் (அதர் ஆப்ஷன்) பின்னூட்டம் எழுதலாம்.

இந்த பின்னூட்டக் குழப்பங்களால் பல பதிவர்களது பெயர் 'ரிப்பேர்' ஆவதும் உண்டு. தேவையில்லாத சாதி, சமய, தேசிய அக்கப்போர்களும் விளைவதுண்டு. டோண்டு ராகவன் (dondu.blogspot.com) என்ற வலைப்பதிவர் இப்பின்னூட்டக் குழப்பங்களுக்கு 'எலிக்குட்டிச் சோதனை' என்ற புதிய முறையினை அறிமுகப்படுத்திய பெருமைக்குச் சொந்தக்காரர். வலைப்பதிவு சேவை வழங்கும் கூகிள், வேர்ட்பிரஸ் ஆகிய மென்பொருள் நிறுவனங்களுக்கே கூடத்தெரியாத டெக்னிக் இது. ஆயினும் எலிக்குட்டிகளை மென்று ஏப்பம் விடும் பூனைகள் வலையுலகில் ஏராளம்.

எந்தவிதமான தணிக்கையும் இல்லாத இடம் என்பதால் வலைப்பதிவுகளை இன்னவகையான 'ஊடகம்' என்று வகைப்படுத்துவது கொஞ்சம் கடினமானது. தீவிரவாதிகள் கூட வலைப்பதிவை தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதால் இந்திய அரசு சில நாட்களுக்கு வலைப்பதிவுகளை தடை செய்த சம்பவம் கூட நடந்தது.

ஜனரஞ்சகமாக எழுதும் பதிவர்களுக்குதான் இங்கே மவுசு அதிகம். நர்சிம் (narsim.in), பரிசல்காரன் (parisalkaaran.com), கார்த்திகைப் பாண்டியன் (ponniyinselvan-mkp.blogspot.com), செல்வேந்திரன் (selventhiran.blogspot.com), லதானந்த் (lathananthpakkam.blogspot.com), தாமிரா (www.aathi-thamira.com), ஈரோடு கதிர் (maaruthal.blogspot.com), கார்க்கி (karkibava.com), விசா (writervisa.blogspot.com) என்று சூப்பர் ஹிட்டான பதிவர்கள் நிறைய பேர். இவர்களுக்கு வாசகக்கூட்டமும் அபரிதமானது. சூப்பர்ஹிட் ஆனவர்களை 'பிரபல பதிவர்கள்' என்று வலைமொழியில் குறிப்பிடுகிறார்கள். தீவிர இலக்கிய வாசகரான ஜ்யோவ்ராம் சுந்தர் (jyovramsundar.blogspot.com) தன்னுடைய இலக்கிய வாசக அனுபவங்களை உயர்தரமான மொழியில் பகிர்ந்து கொள்கிறார்.

'பிரபல' போட்டியில் இப்போது பிரதானப் போட்டியாளர்களாக இருப்பவர்கள் ஜாக்கிசேகரும் (jackiesekar.com), கேபிள் சங்கரும் (cablesankar.blogspot.com). உலகளவில் இணையத் தளங்களின் பிரபலத்தை அளவிடும் 'அலெக்ஸா' தரவரிசையில் முதல் ஒரு லட்சம் இடங்களுக்குள் இருப்பவர்கள் இவ்விருவரும். இந்திய அளவில் முதல் பத்தாயிரம் இடங்களுக்குள்ளாக இருக்கிறார்கள்.

பாராளுமன்றத்தில் இருக்கிறதோ இல்லையோ? தமிழ் வலைப்பதிவுகளில் 33 சதவிகித இடம் பெண்களுக்கு நிச்சயமாக இல்லை. 3 சதவிகிதம் இருந்தாலே அதிகம். சர்வநிச்சயமாக ஆண்வாசனை அடிக்குமிடம் தமிழ் வலையுலகம். தமிழச்சி(tamizachi.com), சந்தனமுல்லை(sandanamullai.blogspot.com), அணில்குட்டி கவிதா(kavithavinpaarvaiyil.blogspot.com), துளசி கோபால்(thulasidhalam.blogspot.com), லஷ்மி பாலகிருஷ்ணன்(malarvanam.wordpress.com), மதிகந்தசாமி (mathykandasamy.blogspot.com), பத்மா அரவிந்த் (thenthuli.org), தமிழ்நதி (tamilnathy.blogspot.com) என்று குறிப்பிடத்தக்க சிலர் இருக்கிறார்கள். ஆண் பதிவர்களும், பெண் பதிவர்களும் வித்தியாசப்படுவது மொக்கைத் தன்மையில். தங்கள் பிரச்சினைகளை விலாவரியாக, நாகரிகமாக எழுதுவதில் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், நிறைவாக எழுதுகிறார்கள் பெண் பதிவர்கள்.

திருநங்கையான லிவிங் ஸ்மைல் வித்யாவின் (livingsmile.blogspot.com) வலைப்பூ எண்ணற்ற ஆச்சரியங்களையும், அதிர்ச்சிகளையும் உள்ளடக்கியது. திருநங்கைகளுக்கான உரிமைப் போருக்காகவும் இந்த வலைப்பூவை அவர் பயன்படுத்திக் கொள்கிறார்.

பெற்றோர் உதவியுடன் எழுதும் குழந்தைப் பதிவர்கள் கூட ஒரு சிலர் உண்டு.

திமுக – அதிமுக, ரஜினி – கமல், விஜய் – அஜித் என்று இரட்டை நேரெதிர் ஆளுமைகளுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கச்சை கட்டிக் கொள்ளும் தமிழ்ப்பண்பு தமிழ் வலையுலகில் மிகையாக காணக் கிடைக்கிறது. இந்த அடிதடி சண்டைகளால் ஏற்படும் விளைவுகள் மோசமானவை. சைபர் க்ரைம் போலிஸார் தலையிடும் அளவுக்கு கட்டுக்கடங்காமல் போன சில சம்பவங்களும் உண்டு. "சொந்தத் தகவல், புகைப்படங்கள் போன்றவற்றை எந்தக் காலத்திலும் பகிர்ந்துக் கொள்ள இயலாத அளவுக்கு வலையுலகம் பாதுகாப்பு அற்றதாக இருக்கிறது" என்கிறார் கவிதா.

தமிழில் வலைப்பதிவு எழுதுவதில் சில சவுகர்யமான விஷயங்களும் இருக்கிறது. வலைப்பதிவு எழுதும் அரசு மருத்துவரான ப்ரூனோ சொல்கிறார்.

"தாய்மொழியில் சொல்ல விரும்பிய கருத்தை உலகுக்கே வெளிப்படுத்த முடிகிறது. வார்த்தையோ, பக்க அளவோ வரையறையில்லை. கால அவகாசமும் இல்லை. விரும்பியபோது எழுதலாம். நம் கருத்து தவறானது என்று தெரிந்தால் யாராவது உடனே சுட்டிக் காட்டுகிறார்கள். திருத்திக் கொள்ள முடிகிறது"

சரி. எழுதும் விஷயத்தை எப்படி மற்றவர்கள் படிக்க வகை செய்கிறார்கள்?

எழுதியப் பதிவின் சுட்டியை (link) மின்னஞ்சல் மூலமாக நண்பர்களுக்கு அனுப்புகிறார்கள். ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்கிறார்கள். தமிழ் வலைப்பதிவுகளை திரட்டுவதற்கென்றே சில திரட்டிகளும் (aggregator) உண்டு. இந்த திரட்டிகளில் இணைந்துக் கொள்வதின் மூலமாக உலகெங்கும் நொடிகளில் நம் வலைப்பதிவினை உலகத்தின் எந்த மூலைக்கும் எடுத்துச் செல்ல முடியும். கூகிள் ரீடரிலும் நாம் வாசிக்க விரும்பும் வலைப்பூக்களை சேமித்து வைத்து வாசிக்க முடியும். பிறருக்கும் பகிர முடியும்.

www.thamizhmanam.com, www.tamilveli.com, http://ta.indli.com, www.thiratti.com ஆகியவை இப்போது பிரபலமாக இருக்கும் திரட்டிகளில் சில. இத்தளங்களை பாவித்து, எண்ணற்ற வலைப்பதிவுகளை நீங்கள் வாசிக்கலாம்.

தமிழ்ச்சூழலை விட்டு விலகி அன்னிய நாடுகளில் வேலை நிமித்தமாகவோ, வாழ்வியல் நிமித்தமாகவோ வாழ்பவர்களுக்கு நிச்சயமாக இந்த தமிழ்வலைப்பூக்களை வரப்பிரசாதம் என்று சொல்லலாம். "தமிழை முதன்முதலாக கணினியில் பார்க்கக் கிடைத்த பரவசத்தை என்னால் வாழ்நாளில் மறக்கவே முடியாது" என்று வளைகுடா நாடுகளில் பணிநிமித்தமாக வாழும் பதிவரான ஆசிப்மீரான் (asifmeeran.blogspot.com) தனது பதிவில் எழுதுகிறார்.

பேன நட்பு அருகிப்போன இக்காலத்தில், வலைப்பதிவுகள் மூலமாக உருவாகும் நட்புகள் மிக முக்கியமானவை. இணையங்களில் "முஸ்தபா முஸ்தபா" பாடிச்செல்லும் தோழர்கள் வலைப்பதிவுகளால் பெருகியிருக்கிறார்கள். இந்த நட்பு வட்டம் ஆரோக்கியமான சில சமூகப் பணிகளுக்கும் பயன்பட்டிருக்கிறது. வலைப்பதிவர்கள் இணைந்து பொதுப்பணிகளுக்கு நிதித்திரட்டுவது, உயிர்காக்கும் சேவைகளை செய்வது என்று ஈடுபடுகிறார்கள். சுனாமி நேரத்தில் இவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டதை இதில் முக்கியமாக குறிப்பிடலாம்.

சிங்கப்பூரில் பணிநிமித்தமாக வசிப்பவர் ஜோசப் பால்ராஜ் (maraneri.com). தமிழகத்தில் இருக்கும் இவரது தந்தை திடீரென காலமானார். என்ன ஏதுவென்று புரியாமல் கலங்கிய மனதோடு விமானம் பிடித்து சென்னைக்கு வந்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து ஊருக்குப் போய் தந்தையாரின் இறுதிக் காரியங்களை முடிக்கும் வரை கூட இருந்து உதவினார்கள் அப்துல்லா (mmabdulla.com) உள்ளிட்ட சக பதிவர்கள். இத்தனைக்கும் அப்துல்லா போன்றவர்கள் அதற்கு முன்பாக ஜோசப்பை நேரில் பார்த்தது கூட இல்லை. இதுபோல பதிவர்கள் ஒருவருக்கொருவர் சுக துக்கங்களில் பங்கு கொள்ளுமளவுக்கு தமிழ் வலையுலகத்தால் ஒரு உறவுப்பின்னல் ஏற்பட்டிருப்பது என்பது ஆரோக்கியமான விஷயம். இவர்கள் அடிக்கடி பதிவர் சந்திப்புகள் நடத்தி தங்களது நட்பினை புதுப்பித்துக் கொள்கிறார்கள். பதிவர்களுக்கு வலைப்பதிவு தொடர்பான தொழில்நுட்ப அறிவு மேம்படவும், புதிய பதிவர்களை வரவேற்கும் முகமாகவும் அவ்வப்போது பதிவர் பட்டறைகளும் நடைபெறுகிறது.

நட்பு மட்டுமல்ல. வலைப்பதிவுகளால் 'காதல் கோட்டை' கட்டப்பட்டு, கல்யாணத்தில் முடிந்த சுவையான சம்பவங்களும் சில உண்டு.

சரி. இதுவரை வாசித்ததில் வலையுலகம் என்பதைப் பற்றி உங்களுக்கு முழுமையாகவோ அல்லது அரைகுறையாகவோ ஒரு வடிவம் கிடைத்திருக்கும். ஒரு சராசரி வலைப்பதிவு எப்படி எழுதப்பட்டிருக்கும்? இந்தக் கட்டுரையை வாசிக்கிறீர்கள் இல்லையா.. இதே மொழிநடையில்தான் இருக்கும்!

 

நிமிடங்களில் தொடங்கலாம் வலைப்பூ!

நீங்களும் வலைப்பதிவு செய்து தமிழ்ச்சேவையில் குபீரென்று குதிக்கலாம். Blogger.com, wordpress.com போன்ற எண்ணற்ற தளங்களில் உங்கள் பெயரைப் பதிவு செய்து உங்களுக்கென்று ஒரு வலைப்பதிவைத் துவங்கலாம். இது முற்றிலும் இலவசம். உங்கள் கிரெடிட் கார்ட் பொருளாதார மேன்மை பெற்றதாக இருப்பின் காசு கொடுத்து, உங்கள் வலைப்பதிவை டாட் காமாகவும் மாற்றிக் கொள்ளலாம். ஒரு மின்னஞ்சல் முகவரி துவக்குவதைப் போலவே வலைப்பதிவு துவக்குவதும் ரொம்ப ஈஸி!

ஹேப்பி பிளாகிங் போக்ஸ்!


(நன்றி : புதிய தலைமுறை)