12 நவம்பர், 2010

முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள்

நவம்பர் 12, 2010. பிற்பகல் 3.00.

நாடு படுக்கையில் உச்சா போய்க் கொண்டிருந்த காலத்தில் வெளியிடப்பட்ட அந்த பழையப் புத்தகத்தை கையில் எடுக்கிறேன். 1986 நவம்பரில் வெளியிடப்பட்டிருக்கிறது. 24 ஆண்டுகள் கழித்து ஒருவன் அவசர அவசரமாக இந்தப் புத்தகத்தை எடுத்து 2வது கதையை மட்டும் உடனே படிக்கப் போகிறான் என்று அப்போது வெளியீட்டாளர் நினைத்துப் பார்த்திருப்பாரா?

இப்போது என்னிடம் இருக்கும் இந்தப் பிரதிதான் அந்தப் புத்தகத்தின் கடைசிப்பிரதி. வேறு யாரிடமாவது சேகரிப்பில் இருக்கலாம். ஆனால் என் கையில் இருக்கும் பிரதி சிறப்புப் பிரதி. ஏனெனில் இது அந்த எழுத்தாளரின் சேகரிப்பில் இருக்கும் ஒரே ஒரு பிரதி. படித்துவிட்டு பத்திரமாக அவரிடம் திருப்பிச் சேர்க்க வேண்டும்.

18வது பக்கத்தில் ஆரம்பிக்கிறது நான் தேடிய கதை. கதையின் தலைப்பு : முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள்.

'மாம்பலத்தில் பழைய பேப்பர் மற்றும் முட்டை வியாபாரம் செய்கிற நாடார் எனக்குப் பழக்கம்' – கதை முதல் வரியிலேயே தொடங்கிவிட்டது.

இரண்டாவது பத்தியில் கொட்டாவி விடாதீர்கள் என்று வாசகனை வேண்டி கேட்டுக் கொள்கிறார் எழுத்தாளர். கதை சுவாரஸ்யமாகப் போகும் என்பதற்கு உத்தரவாதமும் அளிக்கிறார். ஆனால் ஏற்கனவே படித்த இரண்டு பத்தியும் சுவாரஸ்யமாக தான் இருக்கிறது.

இன்னும் இரண்டு பத்தி தாண்டினால் கதை இன்னும் ஆரம்பிக்கவில்லை என்கிறார். கதை என்றுதான் நம்பிப் படிக்கிறோம். இரண்டாவது பக்கத்தின் இரண்டாம் பத்தியில் இன்னும் ஆரம்பிக்கவில்லை என்று சொன்னால் என்ன அர்த்தம்? ஓ! இது கதைக்குள் கதையோ.. ஏதோ மேஜிக், ரியலிஸம் என்கிறார்களே? அதுமாதிரியாக ஏதாவது வகையா? கொஞ்சம் பொறுங்கள். மீதியைப் படிப்போம்.

கிழிஞ்சது கோவணம். வாசிக்கப் போகும் கதையை எழுதியது, கதையை எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர் இல்லையாம். அடச்சே! நம்ம எழுத்தாளர் ஒரு குமாஸ்தாங்க. அதுவும் பயந்தாங்கொள்ளி குமாஸ்தா. ஏதாவது அரசுக்கு எதிரா ஓரிரு வாக்கியம் வந்து, அதாலே பிரமோஷன் கிரமோஷன் கட் ஆயிடுமோன்னு பயப்படுறாரு.

அடுத்த பாரா கொஞ்சம் நீளமானது. கொஞ்சமென்றால் கிரவுன்சைஸ் புக்கில் மொத்தம் 56 வரிகள். போதுமா? 'கழிப்பறைக்கும் கம்யூனிஸத்திற்கும் அப்படி என்ன வினோதத் தொடர்போ?' என்று கேள்வி எழுப்புகிறார். எங்கே புரட்சி? வெடித்ததுமே இந்த எழுத்தாளரைப் பிடித்து தூக்கிலிடுங்கள்.

அடடே. ஆரம்பிச்சிட்டாரு, இலக்கிய நையாண்டியை. சிறு பத்திரிகை ஆட்களோட தகராறே இதுதான். இடையிடையே நான் குடிமகனா, குமாஸ்தாவா, எழுத்தாளான்னு அவருக்குள்ளேயே தத்துவ விசாரணை.

இப்படியே போவுது கதை(?). மன்னிக்கவும். இன்னமும் கதையைத் தொடங்கவில்லை என்கிறார் எழுத்தாளர். அடுத்த அத்தியாயத்தில் தொடங்கும் என்கிறார். நம்புவோம். ஆனால் இந்தக் கதையை எழுத்தாளர் எழுதவில்லை என்று என்னை நம்பச் சொல்கிறார். நீங்களும் நம்புங்கள்.

சும்மா சொல்லக்கூடாது எழுத்தாளர் நல்லா ரயில் ஓட்டுறாரு. அதுவும் எக்ஸ்பிரஸ் ரெயில். இந்த 7 பக்கங்களை வாசிக்க 10 நிமிடங்கள் ஆகியிருக்கிறது. நான் கொஞ்சம் வேகமான வாசகன்தான். இருந்தாலும் மூச்சிரைக்கிறது. கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டு ஒரு பத்து, பதினைந்து நிமிடம் கழித்து அடுத்த அத்தியாயத்தை வாசிக்கலாம் என்று நினைக்கிறேன். இந்த ஓய்வு இடைவெளியில்தான் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று நீங்கள் நம்பியாக வேண்டும்.

இதை எழுதி என்ன செய்ய? எழுத்தாளர் ஆன்லைனில்தான் இருக்கிறார். அவருக்கே அப்படியே அனுப்பிப் பார்க்கலாமா?

 
பிற்பகல் 3.39

நாடார் கடையின் பழைய குப்பையில் அகஸ்மாத்தாக கிடைத்த கதையை நம்மோடு பகிர்ந்துக் கொள்ளப் போகிறாராம் எழுத்தாளர். அகஸ்மாத்தாக கிடைத்த அந்த நோட்டுப் புக்கில் தெளிவான கையெழுத்தில் அடித்தல் திருத்தல் இல்லாமல் ரொம்ப அழகா எழுதியிருக்காம்.

கதைக்கு தலைப்பு வைக்க அந்த கதையை எழுதிய எழுத்தாளர் (இந்த கதையை எழுதும் எழுத்தாளர் வேற என்பதை நினைவுப் படுத்திக் கொள்ளவும்) தலைப்புக்கு குழம்பியிருக்க வேண்டும் என்று இவர் யூகிக்கிறார். எழுதப்பட்ட அந்த கதையை அப்படியே இவர் கையெழுத்தில் பிரதியெடுத்து நமக்கு தரப் போகிறாராம்.

அய்யோ. இந்த அத்தியாயத்திலும் கதை ஆரம்பிக்கப் போவதில்லையா? ஆமாம். படிப்பதை நிறுத்திவிட்டு ஒரு காபி குடியுங்கள் அல்லது ஒரு சிகரெட் பிடியுங்கள் என்று எழுத்தாளர் சொல்கிறார். நோட் திஸ் பாயிண்ட். இந்தக் கதை எழுதும்போது எழுத்தாளர் ஒரு செயின் ஸ்மோக்கர். மிகச்சரியாக 15 ஆண்டுகள் கழித்து ஒட்டுமொத்தமாக புகைபிடிப்பதை நிறுத்தியிருக்கிறார்.

எழுத்தாளரை மாதிரியே நானும் தேவையில்லாத விஷயங்களை பேசிக் கொண்டிருக்கிறேன். விடுங்கள். அவர் சொன்ன ஆலோசனையை ஏற்று ஒரு 'தம்' அடித்து விட்டு வந்து கதையை மீண்டும் தொடர்கிறேன்.

இரண்டாவது பகுதி கதை 2 பக்கம் + 3 லைன் கொண்ட சிறிய அத்தியாயம். 3.41 தொடங்குவதற்கு முன்பாகவே முடித்து விட்டேன்.
 

பிற்பகல் 4.02

ஒருமுறைதான் காதல் வருமென்பது தமிழர் பண்பாடு. அந்த ஒன்று எதுவென்பதுதான் கேள்வி இப்போது. தத்துவம் சொல்லும் நேரமல்ல இது. விமர்சனம் எழுதும் நேரமென்றாலும் நம் எழுத்தாளர் மாதிரி கொஞ்சம் சுற்றி வளைத்து எழுதலாம் என்று எண்ணம்.

மேற்கண்ட தத்துவத்தை இந்தவார விகடனில் படித்தேன். தம் அடிக்கும் பெட்டிக்கடையில் மாட்டியிருந்த விகடனைப் புரட்டியபோது கிடைத்தது. விகடனில் என்னுடைய ஹாட்கேக் இருவன் எழுதும் பரபரப்புத் தொடர்தான். அது தொடர்கதையா தொடர்கட்டுரையா என்று விளங்காவண்ணம் புதுமையாக எழுதப்படும் எழுத்துத் தொடர்ச்சி மலைகள் எனலாம்.

சரி. நம் கதைக்கு வருவோம். 3.41க்கு முந்தைய அத்தியாயத்தை வாசித்து முடித்து, 4.02க்கு அடுத்த அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்குகிறேன். ஒரு தம் அடிக்க கிட்டத்தட்ட 19 நிமிடங்களா என்றொரு சந்தேகம் உங்களுக்கு வரலாம். ஒரு தம் + ஒரு காஃபி. மேலும் லிஃப்டில், ஏறி இறங்க எடுத்துக் கொள்ளும் நேரம். 100 மீட்டர் தூரத்தில் இருக்கும் பெட்டிக் கடைக்கும், டீக்கடைக்கும் சென்றுவர எடுத்துக் கொண்ட நேரம் ஆகியவற்றையும் நீங்கள் கணக்கில் எடுத்துக் கொண்டு தயைகூர்ந்து மன்னிக்க வேண்டும்.

நேராக கதைக்கு வந்துவிடலாம்.

"ஆகாயம் வெளிர்நீலத்தில் அழகாக ஒளிர்ந்து கொண்டிருக்கிறது" என்று மூன்றாவது அத்தியாயம் தொடங்குகிறது. அணிசேரா நாடுகளின் தலைவராக இருக்கும் ஒரு நாட்டின் அதிபர், ஒரு விழாவில் பேசப் போகிறாராம். அந்த விழாவில் சில வெள்ளைப் புறாக்களை பறக்கவிடுவதும் அவர் திட்டம்.

புறாவுக்கு எங்கே போனார்கள்?

தலைமைச் செயலாளர் ஏற்பாடு செய்ய வேண்டிய விஷயமிது. தலைமைச் செயலாளர் தனக்கு தெரிந்த ஒரு ஆசிரியரிடம் புறாக்களை பிடித்து வரும் பொறுப்பை ஒப்படைக்கிறார். ஆசிரியரை செயலாளருக்கு எப்படி தெரியும்? செயலாளரின் மனைவிக்கு ஏற்கனவே ஆசிரியரை தெரியும். செயலாளரின் மனைவிக்கு எப்படி தெரியும்? ஏனெனில் அவர்கள் வசிக்கும் குடியிருப்பருகே ஆசிரியரும் வசிக்கிறார். வசித்தால் மட்டும் போதுமா? எப்படி பழகினார்கள்... இப்படியே சில பக்கங்கள். ஆசிரியரின் வினோதப் பழக்கம் ஒன்றும் விஸ்தாரமாக எழுத்தாளரால் (அதாவது குமாஸ்தா எழுதாளரால் அல்ல. பழைய நோட்டுப் புத்தகத்தில் எழுதிய எழுத்தாளரால்) விவரிக்கப் படுகிறது. 'பெரிய மனிதர்களை தெரிந்துகொள்வது அப்படி ஒன்றும் பெரிய காரியமில்லைதானே?' என்று போகிறபோக்கில் சொல்லப்பட்டாலும், பெரிய மனிதர்களை தெரிந்துகொள்வது தலைகீழாக தண்ணி குடிக்கும் செயல்தான் என்பதை ஆசிரியரின் அனுபவங்கள் உணர்த்துகிறது.

ஒரு முடவன் வீட்டில் சில வெள்ளைப் புறாக்கள் இருக்கிறது. ஆசிரியர் கேட்கிறார். முடவன் மறுக்கிறான். தனது வாழ்வு ஜீவனம் புறாக்களால்தான் என்கிறான். எப்படி? அவன் புறாக்களை விற்பதில்லை. ஆனால் புறாக்கள் முடவனுக்கு சோறு போடுகின்றன. இங்கேதான் கற்பனைக்கும் எட்டாத கற்பனை எழுத்தாளருக்கு கை கொடுக்கிறது.

ஒருவழியாக அதிகாரப் பயமுறுத்தலை பயன்படுத்தி புறாக்களை ஆசிரியர் கைப்பற்றுகிறார். அதிபர் பறக்க விடுகிறார். பறக்க விடப்பட்ட புறாக்கள் திரும்ப தன் வீட்டுக்கு வருமாவென்று முடவன் ஆகாயத்தை அண்ணாந்துப் பார்க்கிறான். ஆகாயம் வெளிர்நீலமாக இருந்ததாம்.

ஒரு நிமிடம். எனக்கும் ஆகாயத்தை இப்போது அண்ணாந்துப் பார்க்க ஆசையாக இருக்கிறது. சன்னலை திறந்து எட்டிப் பார்த்துக் கொள்கிறேனே? அடடே. நிஜமாகவே இந்த நொடியில் சென்னையின் ஆகாயம் வெளிர்நீலமாக தான் இருக்கிறது.

வெளிர்நீலத்தில் தொடங்கி அதே வெளிர்நீலத்தில் முடிகிறது மூன்றாவது அத்தியாயம். ஒருவேளையாக கதை மூன்றாவது அத்தியாயத்திலாவது தொடங்கியது. 9 பக்கங்கள் கொண்ட இந்த அத்தியாயத்தை வாசிக்க 9 நிமிடங்கள் எடுத்துக் கொண்டேன்.

பரபரப்பாக நாம் எதிர்ப்பார்க்கும் க்ளைமேக்ஸுக்கு போவோமா?


பிற்பகல் 4.30.

ஒன்று சொல்ல மறந்துவிட்டேன் அல்லது எனக்கு அப்போது தெரியவில்லை. கதைக்குள் கதை போன அத்தியாயத்திலேயே முடிந்துவிட்டது.

நான்காவது அத்தியாயம் முழுக்க எழுத்தாளரின் உள்ளொளி தரிசனம். இந்த அத்தியாயத்தில் உண்மையை ஒப்புக் கொள்கிறார். யாரோ எழுதிய கதை அல்ல இது. இவரே சில ஆண்டுகளுக்கு முன்பாக எழுதியிருக்கிறார். ஜனநாயக நாட்டில் ஜனநாயகத்தை கிண்டலடிக்கும் சுதந்திரம் இருந்ததை-இருப்பதை மெச்சிக் கொள்கிறார். 24 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே நிலை, இன்னமும் நீடிக்கிறது என்பதை ஒப்புக்கொண்டு நமக்கு நாமே முதுகில் தட்டிக் கொள்ளலாம்.

வாழ்க்கையை நாம் எப்படி எதிர்ப்பார்க்கிறோம். எதிர்ப்பார்ப்பில் நமக்கு எத்துணை மடங்கு தீவிரம் இருக்கிறதோ, அத்துணை மடங்கு பலமாக அடி விழும் என்று எச்சரிக்கிறார் எழுத்தாளர். அதே நேரத்தில் மனிதனுக்கு அத்தியாவசையமான தேவைகளில் ஒன்று நம்பிக்கை என்றும் குறிப்பிடுகிறார். கடவுள் அல்லது லட்சியத்தை நம்பலாம் என்பது அவர் சிபாரிசு. கடவுளை நம்பாதவன் லட்சியத்தை தீவிரமாக நம்புவான் என்று எழுத்தாளர் நம்புகிறார். ஏதேனும் ஒன்றை நம்புவதால்தான் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக தோன்றுகிறதாம்.

மூன்றாவது அத்தியாயத்தில் குறியீடுகளாக எழுதிய ரோஜா, ரத்தச் சிவப்பு ஆகிய புரட்சி (அ) அதிகாரத்துக்கு எதிரான எழுத்துகளை சிலாகிக்க இந்த அத்தியாயத்தில் எழுத்தாளருக்கு மனமில்லை. நிஜமாகவே ஜனநாயகத்தை கிழித்து தோரணம் கட்டுவது அவருக்கு சலிப்பைத் தருகிறது. இன்று யார் வேண்டுமானாலும் சுலபமாக முற்போக்காகி விடலாமே என்று அலுத்துக் கொள்கிறார்.

எழுத்தாளரின் சமூகக்கோபம் குமுறலாக வெடிக்கிறது. அது பலதளங்களிலும் பரவுகிறது. கதையின் கடைசி சில வரிகளில் எழுத்தோடையாய் குறுகி சலசலவென்று நீட்டமாய், ஒழுங்காய் பாய்கிறது.

7 நிமிடங்களில் கடைசி அத்தியாயத்தை (8 பக்கங்கள்) வாசித்து முடித்தேன். இந்த அத்தியாயத்தையும் எழுத்தாளருக்கு மெயில் அனுப்ப வேண்டும்.

-  விமலாதித்த மாமல்லன் எழுதிய முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் சிறுகதை (அ) குறுநாவலுக்கான விமர்சனம். அத்தியாயம், அத்தியாயமாக வாசித்து தனித்தனியாக தோன்றியதை விமர்சனம் போல எழுதுவது பைத்தியக்காரத்தனம். இந்தக் கட்டுரையை முழுக்க இப்போது படித்துப் பார்க்கும்போது, எதையாவது வாசிக்கும்போது நான் சிதைந்து பைத்தியக்காரனாக மாறிவிடுவதை அறியமுடிகிறது...

10 கருத்துகள்:

  1. தொரை எலக்கியமெல்லாம் பேசுது!! :)
    யாரு..ஒருவேளை சாருவோ?

    பதிலளிநீக்கு
  2. இட்லி- தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார் எல்லாம் எனக்கே எனக்கு

    பதிலளிநீக்கு
  3. அதிரடி கவிதை போட்டி

    குழந்தைகள் தினம் அல்ல அல்ல...
    சின்னஞ்சிறு மனிதர்களின் தின விழாவினை மனதில் கொண்டு இந்த கவிதை போட்டிக்கு வலையுலக அன்பர்களை ஆவலுடன் அழைக்கிறோம்.


    எரிதழல் கொண்டு வா...

    பாதகம் செய்பவரைக் கண்டால்...

    பயம் கொள்ளல் ஆகாது பாப்பா..

    ரௌத்ரம் பழகு...

    என்ற ரீதியில் இருக்கட்டும் கவிதைகள்.

    இன்றைய குழந்தைகளும் எல்லாம் தெரியும் என்பதால்,
    அறிவுரைகள் நெடி குறைவாக இருந்தால் நல்லது.

    உள்ளங்கையில் வைத்து குழந்தைகளை வைத்து தாங்குவது சரி தான் ஆனால் அதுவே அவர்களின்
    துன்ப எதிர்ப்புச்சக்தியை குறைத்துவிட கூடாது என்பது கருவாக இருக்கட்டும்.

    கவிதைகளை bharathphysics2010@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவேண்டுகிறோம்.
    எங்கள் தளத்தில் வெளியிட்ட பின் , உங்கள் வலைப்பூவில் வெளியிட்டால் மிக்க உதவியாக இருக்கும்..

    பழம் பெருமை பேசுவதால் காப்பாற்றபடுவதை விட, பலம் மிக்க இளைய சமுகம் மட்டுமே, வலிமைமிக்க உலகை உருவாக்கி
    காப்பாற்றும்என்பது எம் நம்பிக்கை.

    http://bharathbharathi.blogspot.com/2010/11/blog-post_12.html

    பதிலளிநீக்கு
  4. === எதையாவது வாசிக்கும்போது நான் சிதைந்து பைத்தியக்காரனாக மாறிவிடுவதை
    அறியமுடிகிறது... ===
    நீங்கள் மட்டுமா ?

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா10:54 AM, நவம்பர் 13, 2010

    அன்புள்ள லக்கி,

    மாமல்லன் சொல்வது உண்மையா? பிதொநிகு படித்திருக்கிறேன். மாமல்லன் கதை படிக்கவில்லை.நான் ஜெமோ விரும்பி தான். ஆனால் உண்மை அறிய விரும்புகிறேன்.

    - சாமி.

    பதிலளிநீக்கு
  6. என்ன இது!!! கடை நல்லாதானே போயிடு இருந்துச்சு..ஆனாலும் நல்லாத்தான் இருக்கு விமர்சனம்... ஹாட்ஸ் ஆப் லக்கி. பலவருடங்களுக்கு பின் நான் படித சுவையான பத்தி எழுத்துகள். மேலும் மலர வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  7. //நாடு படுக்கையில் //

    நான் படுக்கையில்
    இது தானே சரி

    பதிலளிநீக்கு
  8. வித்தியாசமான விமர்சனம். அறிமுகத்துக்கு நன்றி லக்கி. இவருடைய சோழிகள் குறு நாவல் படித்தேன். அருமை. அடுத்து "முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள்" படித்து பார்க்கிறேன்

    பதிலளிநீக்கு
  9. இது நாள் வரை விமர்சனம் என்றால் படைப்பைப் பற்றி தன்னுடைய கருத்தைக் கூறுவது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அது கதைச் சுருக்கத்தின் மறுபெயர் என்பது லக்கியின் விமர்சனத்தைப் படித்த பிறகு தான் புரிகிறது.

    பதிலளிநீக்கு