3 நவம்பர், 2010

ஒரு தோட்டா.. ஒரு உயிர்!

பூட்ஸ் கால் அந்த மண்ணை மிதித்தபோது அவரது உடல் சிலிர்த்து அடங்குகிறது.
உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்ளக்கூடாத பதவியில் இருப்பவர் அவர். ராணுவ
மிடுக்குக்குள் ஒளிந்திருக்கும் மனித உணர்ச்சி ஒரு நொடி தலைகாட்டி
மறுநொடியிலேயே அடங்குகிறது. புன்னகையோடு அந்த கிராமத்துக்குள் நுழைகிறார்
லெப்டிணெண்ட் கர்னல் டி.பி.கே.பிள்ளை.

அந்த கிராமம் லோங்டி பாப்ரம். மணிப்பூர் மாநிலத்தின் பின் தங்கிய
குக்கிராமங்களில் ஒன்று. பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ராணுவத்தின்
துடிப்பு மிக்க இளம் கேப்டனாக இருந்தபோது இதே கிராமத்துக்கு
வந்திருக்கிறார். பழைய சம்பவங்களை நினைத்துப் பார்க்கிறார்.

அப்போது மணிப்பூரில் என்.எஸ்.சி.என். (Nationalist Socialist Council of
Nagaland) என்கிற ஆயுதம் தாங்கிய தீவிரவாத அமைப்பு இந்தியாவை எதிர்த்து
போராடி வந்தது. நாகலாந்தை தனி நாடாக அறிவிக்கக் கோரி வடகிழக்கில்
இயங்கிவரும் அமைப்பு அது. தங்கள் வழி மாவோ வழி என்பது அவ்வமைப்பின்
கொள்கை.

வன்முறையாளர்களை ஒடுக்க இந்திய ராணுவம் மணிப்பூருக்குள் நுழைந்தது. ஜனவரி
25, 1994 அன்று, ஒரு படைப்பிரிவுக்கு கேப்டனாக இருந்த பிள்ளை தெருக்களில்
தனது படையோடு ரோந்து போய்க் கொண்டிருந்தார். கிராமத்தின் மத்தியில்
இருந்த ஒரு வீட்டில் நான்கு தீவிரவாதிகள் தங்கியிருப்பதாக தகவல்.

பிள்ளையின் படை அவ்வீடு நோக்கி விரைந்தது. தொடங்கியது ராணுவத்துக்கும்,
தீவிரவாதிகளுக்குமான உக்கிரமான துப்பாக்கிச் சண்டை. தீவிரவாதிகளுக்கு
தலைமை ஏற்றிருந்தவர் கைனேபோன். குறிவைப்பதில் கில்லாடி.

இருபுறமும் குண்டுகள் பாய, எதிர்பாராவிதமாய் தெருவில்
சென்றுக்கொண்டிருந்த ஒரு இளம் அப்பாவிப் பெண் தோட்டா ஒன்றினில்
சிக்கினாள். தோட்டா தீர்ந்து கிட்டத்தட்ட தீவிரவாதிகள் சண்டையில்
தோல்வியடையும் நிலை. கைனேபோனின் வெறி இராணுவப் படைத்தலைவர் பிள்ளையின்
மீது பாய்ந்தது. மிகச்சரியாக அவனது கடைசித் தோட்டா பிள்ளையை பதம்
பார்த்தது. மிக மோசமான காயம் அது. சண்டையின் முடிவில் ஒரு தீவிரவாதி
சுட்டுக் கொல்லப்பட்டு, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறி லோங்டி கிராமத்தினர் மீது
கடுப்பில் இருந்தார்கள் இராணுவத்தினர். தங்கள் கேப்டனின் உயிருக்கும்
ஆபத்து என்பதில் வெகுவாக கொதித்துப் போயிருந்தனர். தகவல் மற்ற
படைப்பிரிவினருக்கும் பரவியது. கிராமத்தை அடித்து நொறுக்கி விட்டுதான்
மறுவேலை என்று மொத்தமாக இராணுவத்தினர் குவிந்தனர்.

கேப்டனைப் காப்பாற்ற இராணுவ ஹெலிகாஃப்டர் ஒன்று வந்தது. தீவிரவாதிகளுக்கு
அடைக்கலம் கொடுத்த கிராமத்தைச் சேர்ந்த பெண் என்பதால் அவளை காப்பாற்ற
மற்ற வீரர்களுக்கு விருப்பமில்லை. "முதலில் அந்தப் பெண்ணின் உயிரைக்
காப்பாற்றுங்கள்" என்று காயமடைந்த நிலையிலும் பிள்ளை வற்புத்தினார்.
கிராமத்தை நொறுக்க தயாராக இருந்த இராணுவத்தினரிடம் "எந்தத் தாக்குதலும்
இக்கிராமம் மீது நடக்கக்கூடாது. கைதான மூன்று தீவிரவாதிகளையும் அடித்து
துன்புறுத்தக் கூடாது" என்பதை தனது கடைசி ஆசையாக தெரிவித்து சத்தியம்
வாங்கிக் கொண்டார்.

மரணத்தின் வாயிலில் நின்ற டி.பி.கே. பிள்ளையின் உயிர்மீது மரணதேவனுக்கு
ஆர்வமில்லை. பிழைக்கவே வாய்ப்பில்லை என்று மற்றவர்கள் நினைக்க, அதிசயமாக
பிழைத்தார். உடம்பு தேறிவர ஓராண்டுகள் பிடித்தது. பின்பும் இராணுவத்தில்
தீவிரமாகப் பணியாற்றி லெப்டிணெண்ட் கர்னல் பதவிக்கு உயர்ந்தார்.

பதினாறு ஆண்டுகள் கழிந்த நிலையில் முன்னுரிமை கொடுத்து தான் காப்பாற்றிய
பெண்ணை சந்தித்தார் பிள்ளை. மசேலிதாய்மே என்ற அப்பெண் இப்போது ஒரு
குழந்தைக்கு தாய். தாய்மேயின் சகோதரனும் அச்சந்திப்பில் உடனிருந்தார்.
இவரும் அன்றைய சண்டையில் மயிரிழையில் உயிர் தப்பியவர். தன்னைக்
காப்பாற்றியவரை கண்டதுமே பேச மசேலிக்கு நா எழவில்லை. அழுது கதறியவாறே
பிள்ளையின் கையைப் பிடித்து கண்ணீரால் நன்றி சொன்னாள்.

கிராமத்தவர்கள் இவர்களை சூழ்ந்து கொண்டார்கள். அன்று மட்டும் பிள்ளை ஒரு
வார்த்தை சொல்லியிருந்தால், கிராமம் இராணுவ வீரர்களால் சூறையாடப்
பட்டிருக்கும். "எங்கள் உயிரை அன்று காப்பாற்றியவர் பிள்ளைதான்"
என்கிறார் கிராமத் தலைவர்களில் ஒருவரான அடான்போ.

"காப்பாற்றுவதுதான் இராணுவத்தின் வேலை. கொல்வது அல்ல. என் வேலையைதான்
நான் அன்று செய்தேன்!" என்கிறார் லெப்டிணெண்ட் கர்னல்.

இந்த செண்டிமெண்டுகளுக்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போல இன்னொரு சம்பவமும்
அங்கு நடந்தது. பிள்ளையை சுட்ட கைனேபோனும் இன்னும் அதே கிராமத்தில்
வசிக்கிறார். இராணுவத்திடம் பிடிபட்ட பிறகு மனம் திருந்தி வாழ்ந்து
வருகிறார். இப்போது கைனோபோன் ஒரு திறமையான விவசாயி.

ஓடிவந்து பிள்ளையை ஆரத்தழுவுகிறார் கைனோ.

சுட்டவரும், சுடப்பட்டவரும் பதினாறு ஆண்டுகள் கழிந்து நட்போடு
ஆரத்தழுவிக் கொள்வது என்பது ஒரு அபூர்வமான காட்சிதான் இல்லையா? ஹாலிவுட்
படங்களில்தான் இப்படிப்பட்ட காட்சிகளை பார்த்திருக்கிறேன். இப்போது
இந்தியாவிலும் நடக்கிறது. நிஜமாகவே 2020ல் இந்தியா வல்லரசு ஆகிவிடுமோ?

14 கருத்துகள்:

  1. கட்டுரை மிக யதார்த்தமாக வரலாற்று நிகழ்வுகளை கண்முன் நிறுத்தும் வகையில் உள்ளது.
    //சுட்டவரும், சுடப்பட்டவரும் பதினாறு ஆண்டுகள் கழிந்து நட்போடு
    ஆரத்தழுவிக் கொள்வது என்பது ஒரு அபூர்வமான காட்சிதான் இல்லையா?//

    நிச்சயமாக அபூர்வமானக காட்சிதான்.

    //நிஜமாகவே 2020ல் இந்தியா வல்லரசு ஆகிவிடுமோ? //

    இதுபோன்ற ஒருசில நிகழ்வுகளை வைத்து மட்டும் வல்லரசாகுமா என்பது ஐயமே..?!!

    வல்லரசானால் மிக்க மகிழ்ச்சிதான்.

    தங்களுக்கு இனிய தீபஒளி நலவாழ்த்துகள்.. சார்.!

    பதிலளிநீக்கு
  2. You tubeல் அந்தக் காணொளி பார்த்தேன். பெருமையான, நெகிழ்ச்சியான ஒன்று.

    நன்றி

    பதிலளிநீக்கு
  3. நல்ல பதிவு
    நன்றி யுவகிருஷ்ட்ணா

    பதிலளிநீக்கு
  4. http://www.youtube.com/watch?v=LuFnIDx6OjQ&feature=player_embedded#!

    இது மேலே சொல்லப்பட்டுள நிகழ்வின் காணொளி .

    பதிலளிநீக்கு
  5. யுவா,

    உங்களுக்கு மட்டும் எப்படி இப்படி அருமையான செய்திகள் எழுத கிடைக்கின்றன.

    பதிலளிநீக்கு
  6. இராணுவம் தீவிரவாதிகள் எல்லாம் ஒக்கே...ஆனா ஆளும் கட்சி, எதிர்க்கட்சித் தலைவர்கள் எப்போ இப்பிடி? அதுக்கப்புறம் தான் வல்லரசு...அப்பிடின்னு நான் யோசிக்கிறேன்...தப்பா பாஸ்? :)

    பதிலளிநீக்கு
  7. சிறிதும் சந்தேகமிலாமல் இந்தியா வல்லரசு ஆகி விடும். நண்பருக்கு தீபாவளி நல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. //ஜமாகவே 2020ல் இந்தியா வல்லரசு ஆகிவிடுமோ?//

    He He He..... You sense of humor is amazing!

    பதிலளிநீக்கு
  9. இந்தியாவில் இன்னும் மழை பெய்ய இவர்களை போன்ற மனிதர்கள்தான் காரணம். நல்ல கருத்தான பதிவு.

    பதிலளிநீக்கு
  10. மிக நெகிழ்ச்சியான விஷயம்.அதை விட முக்கியம் இதைப்பற்றி சிலாகித்து எழுதும் அளவுக்கு மிக அரிதான விசயமும் கூட.அமெரிக்கர்களிடம் இது போன்ற ஈர உணர்வுகள் ஹாலிவுட் சினிமாக்களில்
    மட்டுமே சாத்தியம் என்று கருதுகிறேன்.ஈராக்கிலும் இன்னபிற நாடுகளிலும் அவர்களின் மிருகத்தனம்
    மிக மோசமாக வெளிப்பட்டிருக்கிறது.(ஒரு வேளை சொந்த நாட்டு மக்களிடம் வேறு விதமாக
    நடந்து கொள்வார்களோ என்னவோ?) 2020 ல் வல்லரசு? இப்போதே நாம் வல்லரசு தான்.ஆனால் அதன் அளவுகோல் என்னவென்பதுதான் பிடிபட மாட்டேன் என்கிறது தோழரே ?

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா11:04 PM, நவம்பர் 04, 2010

    மனிதநேயம் மிக்க ஒரு தமிழனை நினைத்து மனம் பெருமை கொள்கிறது.
    panaimaram.wordpress.com

    பதிலளிநீக்கு
  12. நல்ல பதிவு .

    தீபாவளி வாழ்த்துக்கள்

    மா.சேகர்
    nerkuppai.thumbi@gmail.com
    makaranthapezhai.blogspot.com

    பதிலளிநீக்கு
  13. அருமை! கேட்கவே(வாசிக்கவே) மெய்சிலிர்க்கின்றது.

    பதிலளிநீக்கு
  14. @ வல்லரசு 2020 என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டு இருக்க வேண்டாம் தலைவரே, சீனா அடைந்து வரும் வளர்ச்சி பார்த்தால் அந்த தகுதி மற்றும் சீன நாட்டின் தலைவர்களுக்கு இருக்கும் தெளிவு போன்றவைகளைல் வடை அந்த நாட்டிற்கு தான் என நினைக்க தோன்றுகிறது, ஆனாலும் மனதில் இந்தியா தான் வரும் என ஒரு ஆருடம் ஜெய் ஹோ

    பதிலளிநீக்கு