19 நவம்பர், 2010

இடியுடன் கூடிய பலத்த மழை!


வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் என்னதான் செய்கிறார்கள்?
கொட்டும் மழையில் சொட்டச் சொட்ட ஒரு ரிப்போர்ட்...


"கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும். சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யலாம். காற்று மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். கடலுக்குச் செல்லும் மீனவர்கள்..." – இப்படியாக வானிலைச் செய்திகளை கேட்பதில் ஆர்வம் இல்லாதவர்கள் யாராவது இருக்கிறீர்களா? ஒருவர் கூட இல்லை இல்லையா?

ஜோசியம் கூட குத்துமதிப்பாக சொல்லிவிடலாம். கண்ணுக்கு தெரியாத ஈரக்காற்று மழைமேகமாக உருவெடுக்கும், புயலாக வீசும் என்பதை எப்படி கணிக்கிறார்கள்? வாருங்கள். வானிலை ஆராய்ச்சி நிலையத்துக்கு நேராகவேப் போய்ப் பார்க்கலாம்.

இந்திய வானிலைத் துறை

இந்திய வானிலைத் துறை மொத்தம் 6 மண்டலங்களாக பிரிக்கப் பட்டிருக்கிறது. இதற்கு ஒரு தலைவர் டெல்லியில் இருக்கிறார். பெயர் டாக்டர் ஏ.வி.எம்.அஜித்தியாகி. நாம் இருப்பது தெண்மண்டல எல்லையில். வானிலைத் துறையின் தென்மண்டல உபத்தலைவர் டாக்டர் ஒய்.ஈ.ஏ.ராஜ். ஊடகங்களில் நாம் அடிக்கடி வாசிக்கும், கேட்கும் பெயர் ரமணன். இவர் நம் வட்டாரப் புயல் எச்சரிக்கை மையத்தின் இயக்குனர்.

கிட்டத்தட்ட இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்துக்கும், ஒவ்வொரு வானிலை மையம் இருக்கிறது. இதற்கு கீழே புயல் கண்டறியும் ராடார் நிலையம் மற்றும் வானிலை அலுவலகங்கள் இயங்குகின்றன.

இந்தியாவில் தரைநிலை கண்காணிப்பு கூடங்களின் எண்ணிக்கை 559. தமிழகத்தில் மட்டும் 39. இந்திய அளவில் வளிமண்டல வானிலை கண்காணிப்பு 99 இடங்களிலும், தமிழகத்தில் சென்னை, திருச்சி, காரைக்கால் ஆகிய 3 இடங்களிலும் செயல்படுகிறது.

வானிலைத் துறையின் எல்லா அமைப்புகளும், உலக வானிலை ஆய்வுக் கழகத்தின் (WMO) தர அளவுகோலின்படியே தனது செயற்பாடுகளை அமைத்துக் கொள்கிறது. எனவே அயல்நாடுகளில் துல்லியமாகவும், நம் நாட்டில் குத்துமதிப்பாகவும் வானிலை கணிக்கப்படுகிறது என்ற ஒரு பரவலான எண்ணம் முழுக்க முழுக்க தவறானது. உண்மையைச் சொல்லப் போனால் நம்முடைய தொழில்நுட்பம் அதிசமீபத்திய சர்வதேசத் தரம் கொண்டது. நம் அறிவியலாளர்கள் தலைசிறந்த அறிவும், அனுபவமும் கொண்டவர்கள். உலக வானிலை ஆய்வுக் கழகத்தின் தொடக்கக்காலத்திலிருந்தே நாம் அதில் உறுப்பினராக இருக்கிறோம்.

வானவியல் ஆராய்ச்சிக்கான பிரத்யேக அமைப்பு இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில்தான் 1789ல் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு 1792ல் இருந்து வானிலைத் தகவல்களை ஆராய்ந்து வருகிறது. இந்திய வானிலைத் துறை எனும் அமைப்பே 1875ஆம் ஆண்டுதான் தொடங்கப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளுங்கள். இந்திய வானிலை ஆராய்ச்சிக்கே நாம்தான் முன்னோடிகள்.

வானிலையை ஆராய்வது எப்படி?

மண்டல வானிலை ஆராய்ச்சி மையத்தின் உதவி வானிலை விஞ்ஞானி கே.வி.பாலசுப்பிரமணியன் விளக்குகிறார் :

"வளிமண்டல வானிலையை கண்காணிக்க நாம் பலூனை பயன்படுத்துகிறோம். குழந்தைகள் விளையாடும் சிறிய பலூன்கள் அல்ல. ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட விசேஷ பலூன்கள். கண்காணிப்பு நிலையங்களில் இருந்து ஒரு நாளைக்கு 4 முறை இந்த பலூன்களை பறக்க விடுவோம். அவை பறக்கும் வேகம், திசை, உயரம் என்று பல அளவுகோல்களையும் தியோடலைட் டெலஸ்கோப் என்ற கருவி மூலமாக கண்காணிக்கிறோம்.

இதன் மூலமாக கிடைக்கும் தகவல்களை கணித அடிப்படையில் கணக்கிட்டு வளிமண்டல மாற்றங்களை வல்லுனர்கள் அறிகிறார்கள். இந்த பலூன்கள், தரையிலிருந்து 7 கி.மீ. வரையிலான வான்நிலவரங்களை அறிய உதவும்.

மற்றொரு 'பலூன்' முறையும் உண்டு. இந்த பலூனில் நிறைய மின்னணுப் பொருட்கள் இருக்கும். வெப்பநிலை, திசைவேகம், அழுத்தம் தொடர்பான தகவல்களை இந்த முறையில் துல்லியமாக பெறமுடிகிறது. தினமும் 2 முறை இந்த பலூன்கள் பறக்க விடப்படும். கொஞ்சம் செலவு அதிகம் பிடிக்கும் முறை இதுவென்பதால் இந்தியாவில் 35 இடங்களில் மட்டுமே சென்சார் பொருத்திய பலூன்கள் பறக்க விடப்படுகின்றன. தமிழகத்தில் சென்னை, காரைக்கால் நகரங்களில் இவ்வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

தினமும் இந்த இரண்டு முறைகளையுமே தவறாமல் கட்டாயம் கடைப்பிடிக்கிறோம். உலகம் முழுவதுமே குறிப்பிட்ட நேரங்களில்தான் இந்த வளிமண்டல மாற்ற கணக்கெடுப்பு நடத்தப்படும்"

இந்த பலூன் முறை மட்டுமல்ல. அதிநவீன ராடார், செயற்கைக்கோள், தானியங்கி வானிலை கண்காணிப்பு கூடங்கள் போன்ற பலவற்றின் தகவல்களையும் வானிலை வல்லுனர்கள் பயன்படுத்துகிறார்கள்.

புயல், மழை, எச்சரிக்கை

குறைந்த காற்றழுத்தம் இருக்குமேயானால் அது மழை, காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் புயலாக மாற்றம் பெறுகிறது. அதிக காற்றழுத்தம் தெளிவான வானம், வெப்பமான நிலைக்கு காரணியாக இருக்கிறது. 60 கி.மீ. முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று அனுமானிக்கப் பட்டால், அது புயல் எச்சரிக்கையாக வானிலை ஆராய்ச்சி நிலையத்தால் அறிவிக்கப்படுகிறது. புயல் வீச மழை பெய்ய வேண்டியது அவசியமேயில்லை. ஆனால் பெரும்பாலும் புயல் வீசும்போது மழையும் சேர்ந்தே வருகிறது.

வளிமண்டல சலனங்களை பலூன், செயற்கைக்கோள், ராடார் உள்ளிட்ட முறைகளில் அறிந்துகொள்வதால் மட்டுமே வானிலையை துல்லியமாகச் சொல்லிவிட முடியாது. மனித அறிவுக்குதான் இங்கே முதலிடம்.

அனுபவம், புவியியல் அறிவு, வானிலை அறிவு, காலநிலையியல் அறிவு ஆகிவற்றை ஒருங்கேப் பெற்ற வல்லுனர்களால் மட்டுமே, அடுத்த 48 மணிநேரத்துக்கு என்ன நடக்கும் என்பதை கணித்துச் சொல்ல முடியும். இவர்களுக்கு கடந்த கால இயற்கை மாற்றங்கள் குறித்த வரலாறும் தெளிவாக தெரிந்திருப்பது அவசியம்.

பொதுவாக வானிலைக்கு எல்லையே இல்லை. சர்வதேச நாடுகள் எந்த விஷயத்தில் ஒற்றுமையாக இருக்கிறதோ இல்லையோ வானிலை தகவல் பரிமாற்றத்தில் ஒற்றுமையாக இருக்கிறது. அக்கம் பக்கம் நாடுகளில் இருந்து கிடைக்கும் வானிலைத் தகவல்கள் புயல் மாதிரியான இயற்கைச் சீற்ற காலங்களில் நமக்கு பெரிதும் பயன்படுகிறது.

புயல் வரப்போகிறது என்று தெரிந்ததுமே நாட்டை எச்சரிக்கும் அதிமுக்கியமான பணி வானிலைப் பணியாளர்களுக்கு இருக்கிறது. என்ன நடக்கலாம் என்ற எச்சரிக்கையை புயல் தாக்கப் போகும் பகுதியில் இருக்கும் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், சில நேரங்களில் தாசில்தார்களுக்கும் கூட.. அந்தந்த வட்டார மொழிகளில் அனுப்புகிறார்கள். இதுபோன்ற நேரங்களில் மின் தடை ஏற்படலாம். கேபிள்கள் அறுந்து தொங்கலாம். எனவே தொலைபேசி, மின்னஞ்சல், ஃபேக்ஸ் போன்ற தொலைதொடர்பு சாதனங்களை பயன்படுத்துவது அவ்வளவு உசிதமானது அல்ல. எனவே செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலமாக வானிலைப் பணியாளர்கள் மேற்கண்டவர்களை தொடர்பு கொள்கிறார்கள்.

இவை மட்டும்தானா?

புயல், மழை, வெயில் இவற்றை கணிக்க மட்டும்தான் வானிலை ஆராய்ச்சி நிலையங்கள் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் நமக்குத் தெரியாமலேயே பலவகைகளில் நாம் வானிலைத் தகவல்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

உதாரணத்துக்கு, விமானப் போக்குவரத்தைச் சொல்லலாம். வானிலைத் தகவல்கள் இல்லாமல் ஒரு விமானம் பறப்பதோ, இறங்குவதோ கிடையாது. விமான நிலையங்களில் ஒரு வானிலை அலுவலகம் இருப்பது கட்டாயம். இல்லை. இவர்கள் தரும் தகவல்களை கொண்டுதான், எவ்வளவு எரிபொருள் விமானத்தில் எடுத்துச் செல்வது போன்ற விஷயங்கள் கூட தீர்மானிக்கப்படுகிறது. வானிலைத் தகவல்கள் இல்லாமல் வான்வழிப் போக்குவரத்து சாத்தியமே இல்லை.

வேளாண் விஞ்ஞானிகளுக்கும், விரிவாக்கப் பணியாளர்களுக்கும் பருவநிலை குறித்த கணிப்புகளை தருவதன் மூலமாக எந்தப் பருவத்தில், என்ன பயிரிடலாம் என்பதை தீர்மானிக்க முடிகிறது.

கடல்வழி போக்குவரத்துக்கும், மீனவர்களுக்கும் வானிலை ஆய்வுகள்தான் கலங்கரை விளக்கம். விண்ணில் ராக்கெட் பறக்க விடுவதற்கு கூட வானிலை ஆலோசனை கட்டாயம். குறிப்பிட்ட பகுதியில் தொழிற்சாலை அமைக்கலாமா என்பதற்கும் அரசுக்கு நீண்டகால பருவமாற்ற கணிப்பினை தருகிறார்கள். காற்றாலை மின்சாரம் தயாரிக்க, வானிலைத்துறையின் அறிவு பயன்படுகிறது. நில அதிர்வு தொடர்பான விஷயங்களையும் கண்காணிக்கிறார்கள். வறட்சி மாவட்டங்களை அரசுக்கு அடையாளம் காட்டுகிறார்கள்.

இவ்வளவெல்லாம் ஏன்? பஞ்சாங்கம் தயாரிப்பது கூட வானிலைத்துறையின் கொல்கத்தாவில் இருக்கும் ஒரு கிளை அமைப்புதான். அரசு காலண்டர்களில் இந்தப் பஞ்சாங்கம்தான் பயன்படுத்தப் படுகிறது.

இப்படியே நாம் உண்ணும் உணவில் தொடங்கி, இன்னும் எண்ணற்ற ஏராளமான தளங்களில் இந்திய வானிலைத் துறையின் சேவையினை பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாக இயற்கைச் சீற்றங்களின் போது நாட்டை எச்சரித்து காப்பாற்றும் மிகப்பெரிய பொறுப்பினை சுமந்தவர்கள் இவர்கள்.

வானிலை வேலைக்கு வர்றீங்களா?

இந்திய வானிலைத் துறையில் சுமார் 1800 பேர் நேரடியாகப் பணிபுரிகிறார்கள். கிட்டத்தட்ட 7000 பேருக்கு மறைமுகமாக வேலை வாய்ப்பு கிடைக்கிறது. இயற்பியல் இளங்கலை மற்றும் முதுகலை, பொறியியல் படித்தவர்களுக்கு இங்கே வேலை கிடைக்கும். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிந்தவர்களுக்கு நேர்முகத்துக்கு அழைப்பு விடுத்து ஆட்களை தேர்ந்தெடுக்கிறார்கள். கொஞ்சம் பெரிய பதவிகளுக்கு பணியாளர் தேர்வு எழுத வேண்டும்.

100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட, வெவ்வேறு விதமான புவியியல் அமைப்பு கொண்ட இந்த தேசத்தில் வானிலைத்துறையில் பணிபுரிவதற்கு திடமான மனதும், சுறுசுறுப்பான உடலும், கூர்மையான அறிவும், முன்னெச்சரிக்கை மனோபாவமும் அவசியம். பேரிடர் காலங்களில் ஒரு வாரத்துக்கு கூட தொடர்ச்சியாக பொட்டுத் தூக்கம் இல்லாமல், பசிமறந்து பணியாற்றிட தெம்பு வேண்டும்.

துரதிருஷ்டவசமாக மிகக்குறைந்த அளவு பணியாளர்களை வைத்தே வானிலைத்துறை சிறப்பாக செயல்பட வேண்டியிருக்கிறது. 1997ஆம் ஆண்டிலிருந்தே புதியதாக பணிநியமனம் இல்லாததால், ஒவ்வொருவரும் பல வேலைகளை இழுத்துப் போட்டு செய்துக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு மனதுவைத்து புதியதாக ஆட்களை நியமித்தால் வானிலைக் கணிப்புகளின் துல்லியமும், சேவையும் இன்னமும் பன்மடங்கு கைகூடும்.

 

எக்ஸ்ட்ரா மேட்டர் 1 :

கணிப்பு ஏன் பொய்க்கிறது?
- எஸ்.ஆர். ரமணன், இயக்குனர், வட்டாரப் புயல் எச்சரிக்கை மையம் –

பொய்க்கிறது என்ற சொல்லை கடுமையாக ஆட்சேபிக்கிறேன். எங்களது கணிப்பு பொய்ப்பதில்லை. கடல், நிலம் சார்ந்த நிகழ்வுகளையும், மாற்றங்களையும் உலகின் தலைசிறந்த தொழில்நுட்பங்களை கொண்டு கவனிக்கிறோம். அவை அடுத்த சில நாட்களில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்களை கணித்து நாட்டுக்கு சொல்கிறோம். 'மாற்றம்' என்றாலே மாறிவருவது தானே இயல்பு? நேற்றைய காற்றின் மாற்றத்தை கணித்து நாளைக்கு ஏற்படக்கூடிய மாற்றத்தை பல்வேறு காரணிகளை முன்வைத்து, அனுபவம் கொண்டு யூகிக்கிறோம். நாளை அது கொஞ்சம் வேறுமாதிரியாக மாறினால் அது இயற்கையின் மாற்றமே தவிர, எங்களது கணிப்பு தவறு என்பதாகாது.

மேலும் நாங்கள் ஒரு பொறுப்பான அரசு நிறுவனம். தேவையில்லாமல் மக்களையும், நாட்டையும் பயமுறுத்த முடியாது. அதே நேரத்தில் ஆபத்து இருக்குமாயின், அதைச் சொல்லி எச்சரிக்காமல் இருக்கவும் முடியாது. புயலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருந்தால், அதை சொல்லியே ஆகவேண்டும். உடமைகளையும், உயிர்களையும் காப்பது அவசியமில்லையா?

வானம் இருட்டிக் கொண்டிருந்தாலே நாங்கள் புயல் எச்சரிக்கை தந்துவிட முடியாது. சலனம் என்பதுதான் புயல். மேகம் புயல் அல்ல. நாங்கள் எடுக்கும் கணக்கீடுகள் மட்டுமல்ல, எல்லா நாடுகளிலிருந்தும் தினமும் கணிப்புகளைப் பெற்று, அலசி ஆராய்ந்து நம் பிரதேசத்துக்கான கணிப்புகளை வெளியிடுகிறோம். இது சாதாரண காரியமல்ல.

நாம் வெப்ப மண்டலத்தில் வசிக்கிறோம். இங்கே மாற்றங்கள் அடிக்கடி நடக்கும். எனவேதான் நம்முடைய கணிப்பு சிலமுறை மாறுகிறது. மிதவெப்ப மண்டலங்களில் மாற்றங்கள் குறைவு என்பதால் அங்கே கணிப்புகள் துல்லியமானதாக தெரியும். ஆயினும் உலகம் முழுக்க ஒரே தொழில்நுட்பத்தைதான் வானிலை நிலையங்கள் பயன்படுத்துகின்றன.

நம்முடைய கணிப்பு முழுமையாக அறிவியல் சார்ந்தது. அறிவியலால் இயற்கையை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது. கணிப்பு பொய்க்கிறது என்று மட்டும் இன்னொருமுறை சொல்லாதீர்கள். வேண்டுமானால், சில நேரங்களில் இயற்கை அறிவியலை வெல்கிறது என்று சொல்லிக் கொள்ளுங்கள்.

 

எக்ஸ்ட்ரா மேட்டர் 1 :

மழை தருமா இந்த மேகம்?
நீங்களும் கணிக்கலாம்!


இந்திய வானிலைத் துறையின் இணையத்தளம் மிகச்சிறப்பாக செயல்படுகிறது. பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை தகவல்களை புதுப்பிக்கிறது. வானிலை கணிப்புகள், எச்சரிக்கைகள் போன்றவற்றை நீங்கள் உடனுக்குடன் இதில் தெரிந்துகொள்ளலாம். செயற்கைக்கோள் படங்களை தொடர்ச்சியாக கவனித்து வந்தாலே, நீங்களே கூட அம்பாசமுத்திரத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் மழைபொழியும் என்று உள்ளூர் அமெச்சூர் வானிலைத் தகவலாளராக மாறிவிட முடியும்.

இந்திய வானிலைத் துறையின் இணையத்தளம் : www.imd.gov.in

மண்டல வானிலை நிலையம், சென்னை இணையத்தளம் : imdchennai.gov.in

(நன்றி : புதிய தலைமுறை)

5 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப நன்றாக இருக்கிறது. நிஜமாகவே நபநப சொல்லவேண்டிய கட்டுரை.

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப நன்றாக இருக்கிறது. இதை பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பயன்படும் வகையில் புத்தகமாக கொண்டுவந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு