ஒரு பத்திரிகை வேலைக்காக நேர்முகத்தேர்வுக்குப் போயிருந்தேன்.
வழக்கமான கேள்விகளோடு கேட்கப்பட்ட கூடுதல் கேள்வி அது. "உங்க லட்சியம் என்ன?"
+2 ஃபெயில் ஆனவன் அப்துல்கலாம் மாதிரி ராக்கெட் விஞ்ஞானி ஆகணும்னா சொல்ல முடியும்? உண்மையில் சொல்லப் போனால் இதற்கு என்ன விடை சொல்லுவதென்றே தெரியவில்லை. ஆக்சுவலி எனக்கு லட்சியம், கிட்சியம் என்பதெல்லாம் இன்றுவரை இல்லை.
தான்தோன்றித்தனமாக என் உள்மனது சட்டென்று ஒரு பதிலை வாய்வழியாகச் சொன்னது. "ப்ரியா கல்யாணராமன் ஆகணும்"
கேள்வி கேட்டவருக்கு வியப்பு. அதைவிட வியப்பு பதில் சொன்ன எனக்கு. உள்மனதில் இப்படியொரு ஆசை இருப்பது அன்றுதான் எனக்கே தெரியும்.
ப்ரியா கல்யாணராமன் ஆகணும் என்கிற லட்சியம் என்னைத்தவிர வேறு யாருக்காவது இருக்குமா என்பதே கொஞ்சம் சந்தேகம்தான். பத்திரிகை / எழுத்துத்துறையின் லட்சியமாக கல்கி, ராவ், எஸ்.ஏ.பி., என்று யார் யாரோ இருக்கலாம். ஏன் பர்ட்டிகுலராக ப்ரியா கல்யாணராமன்?
ஒரு பெரிய ஃப்ளாஷ்பேக்.
+2 பெயில் ஆகிவிட்டு தண்டச்சோறாக கிடந்த கொடூரகாலக்கட்டம் அது. காலை 5 மணிக்கு இங்க்லீஷ் ஹைஸ்பீட் டைப்பிங், 6 மணிக்கு மேத்ஸ் டியூஷன், 7 மணிக்கு ஷார்ட் ஹேண்ட், 8 மணிக்கு தமிழ் டைப்பிங், 11 மணிக்கு விவேகானந்தாவில் இங்கிலீஷ் என்று அப்பா என்னை நொங்கெடுத்துக் கொண்டிருந்த நேரம். இப்படியே விட்டால், இந்தாளு சாகடித்துவிடுவாரு என்ற பீதியில், நானே அப்ளிகேஷன் போட்டு ஒரு நாளிதழில் பணிக்கு சேர்ந்திருந்தேன். அக்டோபர் எக்ஸாமை எதிர்நோக்கியிருந்த சூழலில் பத்திரிகைகளோ, கதைப்புத்தகங்களோ படிக்க அப்பா 'தடா' விதித்திருந்தார்.
குமுதம் மட்டும் விதிவிலக்கு. ஏனெனில் என்னைப் போலவே அப்பாவும் குமுதத்தை காதலித்தார். புத்தகத்தை எடுத்ததுமே அவரும் என்னைப்போலவே 'நடுப்பக்கத்தை'தான் புரட்டுவார் என்பது தலைமுறை இடைவெளி என்ற வார்த்தையையே அர்த்தமற்று போகச்செய்த விஷயம். எஸ்.ஏ.பி., காலமாகியிருந்த சூழலில் கதைகளுக்கான மவுசு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துக் கொண்டிருந்தது. எளிதில் யூகித்துவிடக்கூடிய முடிச்சுகளோடு கதைகள் வழக்கமான டெம்ப்ளேட்களில் வந்துகொண்டிருந்தது வாசகர்களை கொஞ்சம் சலிப்புறச் செய்திருந்தது.
96ஆ, 97ஆ என்று சரியாக நினைவில்லை. அந்தத் தொடரின் மூலமாக திடீர் புதுப்பாய்ச்சல் குமுதத்தில். தலைப்பே இளமையாக மிரட்டியது. 'ஜாக்கிரதை வயது 16'. கதையின் தொடக்கம் இப்படி இருந்ததாக நினைவு. "ஊர்மிளாவுக்கு தொப்பையோடு கூடிய ஆண்களைப் பிடிக்காது, பிள்ளையாரைத் தவிர". ரங்கீலா வெளியாகி சக்கைப்போடு போட்ட காலக்கட்டம் என்பதால் 'ஊர்மிளா' என்ற பெயரை இந்திய இளைய சமூகம் கிறக்கமாக உச்சரித்துக் கொண்டிருந்தது. தமிழக இளைஞர்கள் மட்டும் விதிவிலக்கா?
கதை இப்படியாக இருந்தது. ஊர்மிளா 16 வயது பெண். +2 படித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு பிள்ளையார் பிடிக்கும். தாத்தாவைப் பிடிக்கும். அர்ஜூன் என்ற ஸ்மார்ட்டான பையனின் காதலை ஊதித்தள்ளினாள். அவனுக்கு ஒருமுறை ராக்கி கூட கட்டிவிட்டாள். அபு என்ற பையனிடம் வாலண்டியராக அவள் சோரம் போனாள். பின்னர் இளமை மயக்கங்களில் தெளிந்து டாக்டரானாள். இந்த நான்கைந்து வரிகளில் கதையைப் படித்தால் கொஞ்சம் மொக்கையாகவே தோன்றும்.
ஆனால் வாராவாரம் ப்ரியா கல்யாணராமனின் ட்ரீட்மெண்ட்களில் இளமை கொப்பளித்தது. ஒரே ஒரு சிறுகதையயாவது அந்த எனர்ஜி லெவலில் எழுதிவிட வேண்டும் என்று நூற்றுக்கணக்கான முறை முயற்சித்து தோற்றிருக்கிறேன். இன்றுவரை எனக்கு திருப்தியாக (ஐ மீன் 16 வயது லெவலுக்கு) எதையும் எழுதி கிழித்துவிட முடியவில்லை. அங்கேதான் நிற்கிறார் ப்ரியா கல்யாணராமன். அவருடைய பெயரே மாடர்ன் + விண்டேஜாக, வித்தியாசமாக இருக்கிறது இல்லையா? கமல்ஹாசன் படங்களில் எனக்குப் பிடித்தது கல்யாணராமன். ப்ரியா என்ற பெயரை பிடிக்காதவர்கள் யாராவது உண்டா?
வயது 16க்குப் பிறகு அவர் என்ன எழுதினாலும் (எந்தப் பெயரில் எழுதினாலும்) விரும்பிப் படிக்க ஆரம்பித்தேன். பதலக்கூர் சீனிவாசுலுவாக காமம் கொப்பளிக்க எழுதினாலும் சரி, ஆன்மீக வாசனையோடு கோயில் சொல்லும் கதைகள் எழுதினாலும் சரி. ஒவ்வொரு வெரைட்டிக்கும், ஒரு யூனிக் ஸ்டைல். ப்ரியா கல்யாணராமன் என்னை ஆக்கிரமித்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.
அப்போது நான் 2ஜி. ஐ மீன் செகண்ட் ஜெனரேஷன். 90களின் மத்தியில் வெகுஜன இதழ்களில் ஏற்படுத்தப்பட்ட அப்படியொரு நடை/மொழித்தாக்க அலை, பின்னாளில் தொடராக வெளிப்பட்டதாக ஏற்பட்டதாக நான் நினைக்கவில்லை (என்னுடைய வாசிப்பளவில்). ஜூ.வி.யின் ஆதிமங்கலத்து விசேஷங்களையும் தவிர்க்க முடியாததாக சொல்லலாம். ஆனால் இது வேற Genre. அவ்வப்போது இதே மாதிரியான ஃபீலிங்ஸ் ஒன்றிரண்டு இடங்களில் கிடைக்கும். உதாரணத்துக்கு சென்ற ஆண்டு தீபாவளி ஆ.வி. இதழில் ராஜூமுருகன் எழுதிய 'தீபாவலி' சிறுகதை.
இப்போது நடைபெறுவது 3ஜி. இடைப்பட்ட காலத்தில் சாஃப்ட்வேர் பீட்டர்கள் பெருகிவிட்ட காலக்கட்டம். இந்த தலைமுறைக்கான மொழி எதுவென்பதில் பெருத்த குழப்பத்தில் இருந்தேன். விடையாக ஆனந்தவிகடனில் ஒரு தொடர் வந்து கொண்டிருக்கிறது. 'இருவன்' எழுதும் 'ஒன்று'.
'ஒன்று' முதல் அத்தியாயத்திலேயே ஆச்சரியப்படுத்தியது. தலைப்புக்கு ஒரு நீண்ட உபத்தலைப்பு. "ஒருமுறைதான் காதல் வரும். தமிழர் பண்பாடு. அந்த 'ஒன்று' எது என்பதுதான் கேள்வி இப்போது. கதை இப்படி தொடங்குகிறது. ஜெஸ்ஸி என்ற இளம்பெண்ணின் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் மெசேஜ் "முதல் காதலை மறக்கவே முடியாது. கடைசிக் காதலை மறுக்கவே முடியாது". வரிசையாக காய்ந்துப்போன தமிழ் இளைய சமூகத்தின் 'மொக்கை டெம்ப்ளேட்' பின்னூட்டங்கள். இதை வார்த்தைகளில் நீங்கள் வாசிக்க அசுவாரஸ்யமாய் இருக்கலாம். ஆ.வி.யின் லே-அவுட் டீம் கலக்கியிருப்பதை இதழில்தான் பார்க்க முடியும்.
சரி. தொடர் எதைப்பற்றி? குறிப்பாக இதைப்பற்றி என்று சொல்ல முடியவில்லை. எதைப்பற்றி வேண்டுமானாலும், அது பாட்டுக்கு அசால்ட்டாக ஓடுகிறது. ஆண்கள், பெண்கள், காதல், காமம்... குட்டிக் கதைகளாய், நீண்ட கதைகளாய், சம்பவங்களாய், பிரசங்கமாய்... 'ஒன்று' ஒரு காட்டாறு. ஆனால் அடித்துச்செல்லவில்லை. அணைத்துச் செல்கிறது.
முதல் அத்தியாயத்தில் ஒரு காட்சி.
மொட்டை மாடி இரவு...
"நச்சுன்னு ஒரு கேள்வி.. ஃபர்ஸ்ட் எக்ஸ்பீரியன்ஸ் எப்போ... யாரோட? தோடா... சும்மா சொல்லுங்கப்பா!" நள்ளிரவில் நண்பனின் கண்களில் நட்சத்திரங்கள்.
- இப்படியாகத்தான் பயணிக்கிறது 'ஒன்று'.
தமிழ் மசாலா சினிமாவின் அதிரடி பஞ்ச் டயலாக்குகள் மாதிரி தொடர்முழுக்க ஆங்காங்கே கலக்கல் ஒன்லைனர்கள் தூவப்படுகிறது. உதாரணத்துக்கு "பிரபஞ்சம் பிரியத்தால் நிரம்பட்டும்!". இப்படியான கவித்துவம் ஒரு தொடரில் மழையாகப் பொழிந்து எத்தனை வருஷங்கள்?
கணேஷ் என்றொரு கேரக்டரை 'இருவன்' அறிமுகப்படுத்துகிறார். ஒரே ஒரு வாசகத்தில் அவனது தன்மையை உணரலாம். 'எட்டாங் கிளாஸ் படிக்கும்போதே, "ஆமாடா... எங்க அம்மாவும் எங்க அப்பாவும் அப்பிடிப் பண்ணதாலதேன் நான் பொறந்தேன். சும்மா, சாமி குடுத்துச்சு, சந்தையில வாங்கினேன்னு ஆளாளுக்கு டூப் விடுறாய்ங்கடா!" - ஆதி ரகசியத்தை அரை டிராயர் காலத்தில் போட்டு உடைத்தவன். கணேஷ் அப்படித்தான் எப்போதும்.'
இன்னொரு பத்தியில் இப்படி ஒரு வர்ணனை. 'நிச்சயம் கேரளக் குட்டி. அந்தக் கணத்தில் அவளை ஈன்றெடுத்த மலையாளிகளின் கால்களில் விழுந்து கரகரவென அழ சித்தமாக இருந்தேன்.' இளமைப் பிரவாகம் போதுமா?
1000 பக்கங்களில் நாவல் கூட எழுதிவிடலாம். 'ஒன்று' ஒரே ஒரு அத்தியாயம் எழுதுவதென்பது பத்தாயிரம் பக்கங்கள் எழுதுவதற்கு இணையானது. வாசிக்க எவ்வளவு எளிமையாக இருக்கிறதோ, அதைவிட பன்மடங்கு இதுபோன்ற தொடரை எழுதுவது கடினமோ கடினம். நீங்கள் வேண்டுமானால் இந்த மொழியில் எழுதிப் பாருங்கள், புரியும்.
தொடர் என்றாலும் வாரம் ஒரு கதை. சிறுகதைத் தொடர் என்று சொல்லலாம். வெறும் எழுத்து என்றில்லாமல் வடிவமைப்பு, ஓவியங்களிலும் 3ஜி ஆடியன்ஸை கச்சிதமாக குறிவைத்துத் தாக்குகிறது ஆ.வி., தொடரை எழுதும் 'இருவன்' யாரென்பதுதான் கேள்வி இப்போது. நடையை வைத்து யூகிக்க முடிகிறது என்றாலும், ஆதாரமின்றி 'இருவர்' பெயரை வெளிப்படையாக சொல்லலாமா என்று தெரியவில்லை. ஸ்பெக்ட்ரம் பிரச்சினை மாதிரி குன்ஸாக லூசுப்பையன் மற்றும் இயக்குனர் சேரன், இயக்குனர் பாலா ஆகியவர்களில் ஒருவரோ அல்லது இருவரோ எழுதுகிறார்கள் என்று கிசுகிசுக்க வேண்டுமானால் முடியும்.
இனி, வேறு ஏதாவது இண்டர்வியூவில் "என்ன லட்சியம்?" என்று கேட்கப்பட்டால், ப்ரியா கல்யாராமனை சொல்வதா இருவனை சொல்வதா என்று எனக்கு குழப்பம் ஏற்படலாம்.
காதலும், காமமும் இளமையின் அடையாளம். முதுமைக்கு ஸ்வீட் மெமரீஸ். வடிவத்திலும், வரிகளிலும் 'ஒன்று' அள்ள அள்ள குறையாமல் எடுத்துத் தருவது இதைத்தான். இதுவரை 'மிஸ்' பண்ணியிருந்தாலும், இனிமேல் 'மிஸ்' பண்ணிடாதீங்க. ஏன்னா இத்தொடரில் ஏகப்பட்ட 'மிஸ்'ஸுங்க வர்றாங்க. 3ஜி ஜோதியில் நீங்களும் 'மிக்ஸ்' ஆகுங்க பாஸூ.