சினிமாவில் எனக்கு ரொம்ப புடிச்சது புரட்சிக் கலைஞர்"
விருதகிரி பற்றி எழுதும்போது 'பஞ்ச்' இல்லாமல் ஆரம்பிக்கவே படாது. பெரிய பாவம். படம் பார்த்த பத்திரிகையாள நண்பர் ஒருவர் எச்சரித்திருந்தார். "படத்துலே பஞ்ச் பார்த்திருக்கேன். படமே பஞ்சா இருக்கிறதை இப்போதான் பார்க்குறேன்"
உண்மைதான். படத்தின் ஹீரோ-கம் டைரக்டரான டாக்டர் கேப்டன் மட்டுமல்ல. வில்லன், அடியாள், அப்பா, அம்மா, சைட் கேரக்டர், சப்பை கேரக்டர், அட்மாஸ்பியருக்கு சும்மா போகிறவர்கள் வருகிறவர்கள் என்று ஆளாளுக்கு பஞ்ச் டயலாக்குகளாக அள்ளித்தெளிக்க, விசில் கும்மாளம் கொண்டாட்டத்தோடு பொழுதைப் போக்க, அருமையான அக்மார்க் கேப்டன் படம்.
எந்திரனின் 'சிட்டி'யாவது ரோபோ. கேப்டனின் விருதகிரி ரத்தமும், சதையுமான மனிதன். ஆனால் ரோபோவை விட சிறந்த 'பைட்டிங்' ஆற்றலோடு, பவர்ஃபுல்லாக விருதகிரி பாத்திரத்தை வடிவமைத்த கேப்டனின் சிந்தனையை தலைகீழாக நின்று தண்ணி அடித்து பாராட்டினாலும் தகும்.
ஸ்காட்லாண்டுயார்டு போலிசார் செம்மொழியில் பேசுகிறார்கள் என்று ஆரம்பக் காட்சியை கண்டதுமே இனம்புரியாத திகில் ஏற்படுகிறது. பதிலுக்கு அவர்களிடம் கேப்டன் இங்கிலீஷில் விளாசும்போது திகிலின் மடங்கு எக்குத்தப்பாக எகிறுகிறது. படம் கொஞ்சநேரம் ஓடியபிறகே புரிகிறது. சப்-டைட்டில் போடாமல், வாய்ஸாகவே மொழியாக்கம் செய்யும் புதுமையான தொழில்நுட்ப முறையை உலக சினிமாவுக்கு டைரக்டர் கேப்டன் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
டிரைனிங்குக்காக ஸ்காட்லாண்டு யார்டுக்கு செல்லும் கேப்டன், அங்கே அவர்கள் நாட்டு பிரதமரின் உயிரைக் காப்பாற்றுகிறார். திக்கைத்தனமாக ஸ்காட்லாண்டு யார்டு போலிஸார் தீவிரவாதிகளை கோட்டைவிடும் நிலையில் இருக்கிறார்கள். ஏற்கனவே பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளின் தீவிரவாதிகளை தாயகம், உளவுத்துறை, நரசிம்மா போன்ற படங்களில் சமாளித்த அனுபவம் நம் கேப்டனுக்கு இருக்கிறது. அந்த அனுபவ ஆற்றலை கொண்டே ஸ்காட்லாண்டு தீவிரவாதிகளை நோண்டி நுங்கெடுக்கிறார். அடுத்த காட்சியே கேப்டன் டிவி செய்திகள். "ஸ்காட்லாண்டு யார்டு பிரதமரை காப்பாற்றி தமிழக ஏ.டி.ஜி.பி. விருதகிரி உலகசாதனை".
நாடு திரும்பி, சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசுகிறார். "வாழ்க்கை ஐஸ்க்ரீம் மாதிரி. உருகறதுக்குள்ளே சாப்பிட்டுடணும்"
அடுத்த கேமிராவைப் பார்த்து குளோஸப்பில் 'பாராட்டு விழா' குறித்து பஞ்ச்-பை-பஞ்சாக கலைஞருக்கு அட்வைஸ்.
இப்படியாகத் தான் இருக்கிறது விருதகிரி.
இண்டர்வெல் வரை எப்படி படத்தை நகர்த்துவது என்று இயக்குனருக்கு தெரியவில்லை. மன்சூர் அலிகான், சண்முகராஜ் என்று லோக்கல் லுச்சா வில்லன்களை துவம்சம் செய்கிறார். திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக சொல்லி, மன்சூர் அலிகான் வசனங்கள் மூலமாக அவர்களை கேவலப்படுத்தி இருக்கிறார் கேப்டன். உடல் உறுப்புகளை வெட்டி விற்கும் க்ரூப் ஏதோ கசாப்புக்கடை மெட்டீரியல்களை வைத்து இந்த வேலை செய்வது மாதிரி காட்டியிருப்பது கொடுமை. அதைவிட கொடுமை அந்த உடல்களை கருவாடு மாதிரி உப்புக்கண்டம் போட்டு அலமாரியில் வில்லன் அடுக்கி வைப்பது. கதைக்கு சம்பந்தமேயில்லாமல் வரும் இந்தக் காட்சிகளை கிளைமேக்ஸில் புத்திசாலித்தனமாக(?) இண்டர்நேஷனல் வில்லனுடன் 'கனெக்ட்' செய்வதில்தான் கேப்டனின் சாமர்த்தியம் அடங்கியிருக்கிறது.
இண்டர்வெல்லுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மாணவர்கள் தாக்கப்படுவதை தடுக்க கேப்டன் கிளம்புகிறார். தெரிந்தோ, தெரியாமலோ என்ன கருமமோ. அல்பேனிய அகதிகளை அசிங்கப்படுத்தி கதையில் சில காட்சிகளை நகர்த்திச் செல்கிறார். இந்தியா உலகின் நெ.1 நாடு ஆகிவிடக்கூடாது என்பதற்காகவே ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதை கண்டுபிடிக்கிறார். ஒட்டுமொத்தமாக அழிக்கிறார். உலகமே விருதகிரியைப் பார்த்து வியந்து நிற்கிறது. சுபம்.
இந்தியாவில் மட்டுமல்ல. வெளிநாடுகளிலும் தமிழக போலிஸின் ஏ.டி.ஜி.பி.யான விருதகிரியை படத்தில் எல்லாருக்குமே தெரிகிறது. நம்மூரு இண்டலிஜெண்ஸ் ஐ.ஜி. ஜாபர்சேட்டை மடிப்பாக்கத்தில் இருப்பவர்களுக்கு கூட தெரியமாட்டேன் என்கிறது ஏனென்று தெரியவில்லை. படத்தில் கேப்டன் சோலோவாகவே வருகிறார். அவருக்கு ஜோடி இருந்திருந்தால் டான்ஸ், ரொமான்ஸ் என்று ஆட்டம் அருமையாக களைகட்டியிருக்கும். இந்த வாய்ப்பினை ஏனோ கேப்டன் புறந்தள்ளியிருக்கிறார். குடும்ப அரசியலை வசனங்களில் கிட்டத்தட்ட எல்லா பாத்திரங்களுமே விளாசுகிறார்கள். டைட்டிலில் கேப்டன், கேப்டனின் மனைவி, கேப்டனின் மச்சான், கேப்டனின் மகன்கள் என்று எல்லோரது போட்டோக்களும் காட்டப்படுகிறது.
உங்களுக்கு கேப்டனை பிடித்தால், விருதகிரியையும் பிடிக்கும்.
கலைஞருக்கு பெண்சிங்கம். கேப்டனுக்கு விருதகிரி.
கேப்டன் இந்தப் படத்தை எடுத்துக் கொண்டிருப்பதை தெரிந்துகொண்டு, அவசர அவசரமாக ஹாலிவுட்டில் இதே கதையைப் படமாக்கியிருக்கிறார்கள். அந்தப் படம் குறித்த தகவல்கள் இங்கே.
விருதகிரி திரைக்கதை பாணியிலேயே கேப்டனின் வாழ்க்கை வரலாறு, புத்தகமாக ஒரு மொக்கைச்சாமியால் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு சின்ன டெர்ரர் சாம்பிள் இங்கே.