சில நாட்களுக்கு முன்பாக அந்த நண்பர் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். "எல்லோரும் சரோஜாதேவி, சரோஜாதேவி என்று பேசிக்கொள்கிறார்களே? அப்படியென்றால் என்ன?"
எனக்கு கடுமையான கோபம் ஏற்பட்டது. என்ன மாதிரியான ஒரு சமூகத்தில் வாழ்கிறோம் நாம்? நமக்கு முந்தைய ஒரு தலைமுறை பீடத்தில் ஏற்றிவைத்திருந்த உயர்ந்த மதிப்பீடுகளை, அதன் மதிப்பு புரியாமல் காலுக்கு கீழே போட்டு நசுக்குகிறோமே? எப்படிப்பட்ட சமூக வீழ்ச்சி இது? இருப்பினும் பொறுமையாக அவருக்கு விளக்கி பதில் அனுப்பினேன்.
நெஞ்சின் அடியாழத்தில் புதைந்துப்போன நினைவோடையை மீண்டும் ஒருமுறை சலசலக்க வைத்தேன். தொண்ணூறுகளுக்கு முன்பான தலைமுறை எவ்வளவு சீரும், சிறப்போடும் வாழ்ந்திருக்கிறது. 'தகவல் அறியும் உரிமைச் சட்டம்' வராத அக்காலத்திலேயே, அதற்கு மாற்றாக எவ்வளவு அச்சு ஊடகங்கள் அவர்களுக்கு தகவல்களை அள்ளித் தந்திருக்கிறது? விருந்து, மருதம், திரைச்சுவை, வெண்திரை, செக்ஸ் லைப், வாலிபம் என்று எத்தனை எத்தனை இதழ்கள்? எவ்வளவு கதைகள்? உயிர்ப்போடும், துடிப்போடும் வாழ்ந்த தமிழ் சமூகம், பாழாய்ப்போன உலகமயமாக்கலால் தனது பாரம்பரிய பாலியல் அடையாளங்களை இன்று இழந்துவருகிறது.
இன்றைய இளைஞன் பாலியல் புரிதலுக்காக இணையத்தை மேய்கிறான். பர்மாசந்தையில் குறுவட்டு வாங்குகிறான். இதைத்தவிர்த்து வேறென்ன வாய்ப்பு அவனுக்கு வழங்கப்படுகிறது? ஜோதி, பானு போன்ற திரையரங்குகளில் கூட இப்போது துண்டுப்படங்கள் போடப்படுவதில்லை. துண்டுக்குப் பேர் போன ஷகிலாவே, தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அண்ணாசாலை சுரங்கப்பாதைக்கு அருகே 'சரோஜாதேவி' கிடைப்பதில்லை.
இணையத்திலும், குறுவட்டிலும் அப்பட்டமாக அனைத்தும் கிடைக்கும். ஆனால் அவற்றுக்கு நம் மண்சார்ந்த தனித்தன்மை கிஞ்சித்தும் இல்லையே? கிளுகிளுப்புக்கு கூட அயல்நாடுகளை சார்ந்திருக்கும் அவலநிலை இன்றைய தமிழனுக்கு. அய்யகோ தமிழா. ஏனிப்படி தரம் தாழ்ந்தாய்? 'மண்சார்ந்த தனித்தன்மை' என்ற சொல், உங்களை குழப்பலாம். அது ஒன்றும் பெரிய காமசூத்திரமில்லை. "என் பெயர் ரமா. வயது 18. பார்ப்பதற்கு கடலோரக் கவிதைகள் ரேகா மாதிரி இருப்பேன்" என்று அந்தக் காலத்து 'மருதம்' கதைகள் தொடங்கும். இதற்கு நிகரான தமிழ்த்தன்மையை இன்றைய குறுவட்டுகளும், இணையமும் தருகிறதா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இன்று நாற்பதைத் தாண்டியவர்களுக்கு, அவர்களின் இளமைப் பருவத்தில் கிடைத்த வீரியம், அடுத்த தலைமுறைக்கு அப்படியே கொண்டு செல்லப்பட்டிருக்கிறதா? மாறாக எடுத்தவுடனேயே எல்லாவற்றையும் அப்பட்டமாக காட்டிவிடும் அயல் கலாச்சாரம், நம் இளைஞர்களுக்கு முழுமையாக, படிப்படியாக கிடைக்கவேண்டிய கிளுகிளுப்பின் கிறுகிறுப்பை கிஞ்சித்தும் கிட்டாமல் செய்துவிடுகிறது. சிட்டுக்குருவி புகழ் டாக்டர் கூட செத்துப்போய் விட்டாராமே?
எவ்வளவு சிரமங்களுக்கு இடையில் அக்காலத்தில் 'சரோஜா தேவி' தயார் ஆனது தெரியுமா?
'கர்னாடகா பதிப்பகம், பெங்களூர்' என்று அச்சிடப்பட்டிருந்தாலும் எல்டாம்ஸ் ரோடிலும், ராயப்பேட்டையிலும்தான் சரோஜாதேவி பெரும்பாலும் அச்சிடப்பட்டது. சரோஜாதேவி என்ற பெயர் ஒன்றே போதும், தரம் எளிதில் விளங்கும் என்பதால் ஒரு குறிப்பிட்ட பதிப்பாளர் என்றில்லாமல், இவ்வணிகத்தில் ஈடுபட்டிருந்த பல பதிப்பாளர்களும் 'சரோஜா தேவி' என்கிற பெயரை, அவரவர் படைப்புகளை தாங்கிவந்த புத்தகங்களுக்கு சூட்டினார்கள்.
ஏன் இந்த குறிப்பிட்ட பெயர்? பானுமதி என்றோ, டி.ஆர்.ராஜகுமாரி என்றோ இந்த செவ்விலக்கியப் பிரதிகளுக்கு ஏன் பெயர் சூட்டப்படவில்லை?
ஹரிதாஸ் காலத்தில் பாலியல் வறட்சியால் வறண்டுப்போன சமூகம் நம் சமூகம். படத்துக்கு 60 பாட்டுகள் இருந்தாலும், முதிர் கன்னிகளான கதாநாயகிகள் ஒரே ஒரு அங்குலம் இடுப்பை கூட காட்டாமல் (காட்டியிருந்தாலும் சகித்திருக்காது) சவுதிஅரேபியாத் தனத்தோடு திரைகளில் இயக்கப்பட்டார்கள். இந்த வரலாற்று பாலியல் சோகம் போக்கப்பட்ட காலத்தின் குறியீடுதான் 'சரோஜாதேவி'.
பழுப்பு வண்ண காகிதம். தேவைப்பட்டால் இடையிடையே படங்கள். கருப்பு வெள்ளையில் அச்சிடப்பட்ட அந்த நிழற்படங்களில் என்னென்ன சமாச்சாரங்கள் ஒழுங்காக தெரிகிறது என்று தெரிந்து கொள்வதற்காகவே, பல பாக்யராஜ்கள் அந்தக் காலத்தில் கண்ணாடி போட்டுக் கொண்டார்கள். 70களில் இருவண்ணத்தில் அச்சிடப்பட்ட அட்டைப்படங்கள். 80களின் இறுதியில் கவர்ச்சிகரமான வண்ண அட்டைகளும் மட்டமான வழுவழு கண்ணாடி லேமினேஷனில் போடப்பட்டது உண்டு.
கதைகளை எழுதியவர்கள் ஒரே ஆளா பலரா, யார் யாரென்பது 20ஆம் நூற்றாண்டின் விடைத்தெரியா கேள்விகளில் ஒன்று. நமக்குத் தெரிந்து பலரும் எழுதியிருக்கிறார்கள். அவ்வாறு எழுதியவர்களில் சிலர் பிற்காலத்தில் சினிமாவில் கதையாசிரியர்களாகவும், பத்திரிகையாளர்களாகவும், பிரபல எழுத்தாளர்களாகவும் பரிணமித்திருக்கிறார்கள். எல்டாம்ஸ் ரோடு அச்சகத்துக்குப் போய் விறுவிறுவென்று ஒரு நாற்பது பக்க நோட்டில் தோன்றியதை எல்லாம் எழுதிக் கொடுத்தால் 50 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரைக்கும் சரக்கின் கிளுகிளுப்புத் தன்மைக்கு ஏற்றவாறு சன்மானம் கிடைக்குமாம். சுஜாதாவோ, பாலகுமாரனோ கூட அந்த காலத்தில் சம்பாதிக்காத பெருந்தொகையை சில சரோஜாதேவி எழுத்தாளர்கள் சம்பாதித்திருக்கிறார்கள்.
கதை பெரும்பாலும் பெண் எழுதுவதைப் போன்ற மொழிநடையில் இருக்கும். ஏனெனில் ஆண்களின் அனுபவங்களை வாசக ஆண்மனம் சகித்துக் கொள்ளாது. கதைக்கு எதுகை மோனையோடு கூடிய 'நச்'சென்ற தலைப்பு அவசியம். உதாரணம் : பாலைக் குடிச்சுக்கோ, பழத்தை உட்டுக்கோ.
இந்தப் புத்தகங்களின் வினியோகம் எவ்வாறு நடந்தது என்பது ஒரு உலக ஆச்சரியம். மருதம், விருந்து போன்ற இடைபாலியல் நிலை இதழ்களை பேருந்துநிலைய பெட்டிக்கடைகளில் விற்கலாம். ஆனால் சரோஜாதேவி போன்ற நேரடி கலகப் புத்தகங்களை விற்பவர்கள் காவல்துறையால் கைதுசெய்யப்படுவார்கள். இப்படிப்பட்ட நிலையிருந்தும், கிட்டத்தட்ட தமிழகத்தின் எல்லா நகரங்களிலும் இவை விற்கப்பட்டிருக்கின்றன. வாசிக்கப்பட்டிருக்கின்றன. சரோஜாதேவி வாசகர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் இடையே ஏதோ ஒரு மர்ம வலைப்பின்னல் இருந்திருக்க வேண்டும்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக கூட அண்ணாசாலையில் பழைய சரோஜாதேவி புத்தகங்கள் கிடைத்துக் கொண்டிருந்தது. விலைதான் கொஞ்சம் அதிகம். 60 ரூபாய். அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு, "ஏதாவது காமிக்ஸ் புக் இருக்காண்ணா?" என்று கேட்டோமானால் கடைக்காரர் புரிந்துகொள்வார். "படம் போட்டு ஓணுமா இல்லைன்னா வெறும் கதையா?" என்பார். வெறும் கதை என்றால் சரோஜாதேவி. படம் போட்டவை ஃபாரின் கந்தாயங்கள். அவை விலை இன்னும் கொஞ்சம் கூடுதல்.
இப்போதும் அண்ணாசாலையில் கடைகள் இருக்கின்றன. வாலிப நிலா, சினிக்கூத்து, வண்ணத்திரைதான் விற்கிறார்கள். சரோஜாதேவி இலக்கிய உற்பத்தி தேக்கநிலை அடைந்து, இன்று கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது. சரோஜாதேவி என்றால் என்னவென்றே தெரியாத ஒரு தலைமுறையும் உருவாகிவிட்டது.
எது எப்படியோ. ஒன்று மட்டும் நிச்சயம். எந்தக் காலத்திலும் வாசக அனுபவ அடிப்படையில் சரோஜாதேவியை, சபீதாபாபி வென்றுவிடவே முடியாது.