
நீங்கள் வழக்கமாக செய்தித்தாள் படிக்கிறவராக இருந்தால்.. இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பாக இந்தப் பெயரை வாசித்திருப்பீர்கள். 'புரட்சி பாரதம்'. "திமுக கூட்டணியிலிருந்து புரட்சி பாரதம் விலகல்!" என்று சிங்கிள் காலத்திலோ, டபுள் காலத்திலோ நிச்சயம் வாசித்திருப்பீர்கள். தேர்தல் பரபரப்பு மிகுந்த இந்த சூழலில் கூட்டணியிலிருந்து ஒரு கட்சி விலகுவது என்பது மக்களுக்கு ஆச்சரியத்தையோ, அதிர்ச்சியையோ, மகிழ்ச்சியையோ, வருத்தத்தையோ தந்திருக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக 'புரட்சி பாரதம்' விவகாரத்தில் இதில் ஓர் உணர்ச்சி கூட யாருக்குமே ஏற்படவில்லை. இக்கட்சி தங்கள் கூட்டணியில் இருந்து விலகி, தனித்துப் போட்டியிடுவது குறித்து கலைஞருக்காவது தெரிந்திருக்குமா என்றுகூட தெரியவில்லை.
1991ல் அம்மா ஆட்சிக்கு வந்த காலக்கட்டத்தில் அரக்கோணம் பக்கமாக போய்வந்தவர்களுக்கு தெரிந்திருக்கும். வாழப்பாடியார், வீரப்பாண்டியார் ஸ்டைலில் "மூர்த்தியார்" என்ற பெயர் சுவர்களில் மெகா சைஸில் எழுதப்பட்டிருக்கும். இந்த 'யார்' என முடியும் பெயர்களுக்கு ஓர் ஒற்றுமை உண்டு. ஊர் பெயரை மையப்படுத்தி பெயர் வைத்திருப்பர்களுக்குதான் இந்த 'யார்' அந்தஸ்து கிடைக்கும். உதாரணம் மதுராந்தகத்தார். முதன் முதலாக தனது பெயருக்குப் பின்னால் 'யார்' சேர்த்து கூடுதல் மரியாதையை ஏற்படுத்திக் கொண்டவர் பூவை மூர்த்தியார்தான். இவர் ஏன் பூவையார் என்று போட்டுக் கொள்ளாமல், மூர்த்தியார் என்று போட்டுக் கொள்கிறார் என்று அப்போது ஆச்சரியப்பட்டிருக்கிறேன். இப்போது சுவரொட்டிகளில் 'ராசாத்தியார்' லெவலுக்கு வந்துவிட்டதால், அது ஒன்றும் பெரிய பிரச்சினையாக தெரியவில்லை.
பா.ம.க. அரசியல் கட்சியாக உருவெடுத்து விஸ்வரூபமாக வடமாவட்டங்களில் வளர்ந்து வந்த காலக்கட்டம் அது. 'அந்த' சாதிக்காரர்கள் ஒன்று சேருகிறார்கள் என்றதுமே, அப்பகுதியில் பெரும்பான்மையானவர்களாக வசித்து வந்த தலித் மக்கள், தங்களுக்கும் ஒரு அமைப்பினை எதிர்நோக்கி இருந்தார்கள். தங்களுக்குள் ஒரு தலைவன் தோன்ற மாட்டானா என்று ஏங்கிப் போய் கிடந்தார்கள். அம்மக்களது விருப்பத்தைப் புரிந்துகொண்டு திடீரென்ற களத்தில் குதித்தவர் பூவை மூர்த்தியார். புரட்சியாளர் அம்பேத்கர் பாணியில் இவரும் வக்கீல். எப்போதும் கோட்டு, சூட்டு போட்டு ஜம்மென்றிருப்பார். அரசியலுக்கு வாகான, களையான கருப்பு முகம்.
94 அல்லது 95 என்று நினைவு. புரட்சியாளர் பூவை மூர்த்தியார் தனது 'புரட்சி பாரதம்' கட்சியினை பெரும் கூட்டம் கூட்டி, அரக்கோணத்தில் துவக்கினார். துவக்கி வைத்தவர் புண்ணியவதி புரட்சித்தலைவி என்று சொன்னால் நீங்கள் இப்போது நம்பித்தான் ஆகவேண்டும். பா.ம.க.வுக்கு 'செக்' வைக்க அம்மாவுக்கு கிடைத்த ஆயுதம் புரட்சி பாரதம். பொதுவாகவே இன்றுவரை தலித் மக்களின் விருப்பத்துக்குரிய கட்சியாக அதிமுகதான் இருக்கிறது. எனவே புரட்சி பாரதத்தை, புரட்சித்தலைவி ஆதரவோடு மூர்த்தியார் தொடங்கியது பொருத்தமானதுதான். திமுக, அதிமுக கட்சிகளே இங்கில்லையோ என்று நினைக்குமளவுக்கு அரக்கோணம் சுற்று வட்டார கிராமங்களில் புரட்சி பாரதத்தின் நீலக்கொடி பறந்தது.
96 தேர்தலில் புரட்சி பாரதம் ஆதரித்த அதிமுக படுதோல்வி அடைந்தது. ஏனெனில் அப்பகுதியில் பா.ம.க.வுக்கு இணையான செல்வாக்கு பெற்றிருந்த ஜெகத்ரட்சகன் திமுக அணியில் நின்றார். மாநில அளவில் வீசிய அதிமுக எதிர்ப்பலையும் முக்கியமான காரணம். இந்த தோல்விக்குப் பிறகு புரட்சி பாரதத்தின் 'மவுசு' கொஞ்சம் ஸ்ருதி குறைந்தே காணப்பட்டது. இடையில் 98-99 பாராளுமன்றத் தேர்தல்களில் பா.ம.க.வின் செல்வாக்கும் அசுரபலம் பெற்றது. ஜெகத்ரட்சகனும் திமுகவில் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தார்.
இதற்கிடையே பூவை மூர்த்தியாரின் தொழில்கள் குறித்து வெவ்வேறு விதமான பேச்சுகளும் கெட்டவிதமாக நிலவ ஆரம்பித்தன. குறிப்பாக சென்னையின் ஒரு பிரபலமான 'சாதி' பிரமுகரோடு இணைந்து, பெட்ரோல் கலப்படத் தொழிலில் அவர் கொடிகட்டிப் பறந்ததாக செய்திகள். 'கட்டைப் பஞ்சாயத்து' இன்னொரு முக்கியத் தொழில். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி புள்ளிகளே பூவையாருக்கு அஞ்சும் காலமும் இருந்தது.
இதெல்லாம் மூர்த்தியாரின் திடீர் மரணம் வரை நீடித்தது. ஒரு நாள் காலை செய்தித்தாளை திறந்துப் பார்த்தபோது, மூர்த்தியார் மாரடைப்பில் காலமாகி விட்டதாக அறிந்துகொள்ள முடிந்தது. புரட்சி பாரதத்தின் அடுத்தத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவரது தம்பி ஜெகன். தனது பெயரை ஜெகன் மூர்த்தியார் என்று மாற்றிக்கொண்டு, அண்ணன் பாணியில் அரசியல் நடத்த தொடங்கினார். ஒரே ஒரு வித்தியாசம், அண்ணன் அதிமுக ஆதரவாளர். தம்பி, திமுக ஆதரவாளர்.
கடந்த 2006 தேர்தலில், அரக்கோணம் தொகுதி, திமுக கூட்டணியில் புரட்சி பாரதத்துக்கு ஒதுக்கப்பட்டது. உதயசூரியன் சின்னத்தில் நின்று ஜெகன் மூர்த்தியார், சட்டமன்ற உறுப்பினர் ஆனார். கலைஞர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அடையார் டெலிபோன் எக்சேஞ்ச் கூட்டத்தில், புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த அப்பகுதி புள்ளி (வயது 21 அல்லது 22 இருக்கும்) கொச்சையான முறையில் ஜெ.வைத் திட்டியதை (அது பேயி, பிசாசு, யாருக்கும் அடங்காது. ஓட்டு போட்டீங்கன்னா செத்தீங்க) கலைஞர் மேடையில் பலமாக சிரித்தவாறே பார்த்துக் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது.
ஐந்து ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றக் கூடிய வாய்ப்பு கிடைத்தும், அதை சரியாக ஜெகன் மூர்த்தியார் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டார் என்றே சொல்லவேண்டும். இடையில் இப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய பா.ம.க.வின் வேலு, தன் பெயரை வலுவாக தொகுதியில் நிலைநாட்டி இருக்கிறார். குறிப்பிடத்தகுந்த பணிகளை செய்திருக்கிறார். உண்மையை சொல்ல வேண்டுமானால் இன்று புரட்சி பாரதம், ஒரு காலி பெருங்காய டப்பா.
இந்த தேர்தலிலும் தனக்கு திமுக கூட்டணியில் சீட்டு கிடைக்குமென்று ஜெகன் நம்பிக் கொண்டிருந்தார். அத்தொகுதியை பா.ம.க.வுக்கு கொடுக்கும் எண்ணம் திமுகவுக்கு இருப்பதாக தெரிகிறது. அல்லது ஜெகனை நிறுத்தினால் வெல்ல வாய்ப்பில்லை என்றும் திமுக தலைமை உணர்ந்திருக்கலாம். திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவிடம் பேசிவிட்டு வெளியே வந்த ஜெகன் இறுக்கமாகவே இருந்திருக்கிறார்.
இப்போது தெளிவாக அறிவித்து விட்டார். "புரட்சி பாரதம், சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும்"
எனக்குத் தெரிந்து, இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் கட்சிகள் இரண்டுதான். ஒன்று பா.ஜ.க. மற்றொன்று புரட்சி பாரதம். டெபாசிட் தேறுவதே கடினம் என்று தெரிந்தும், சுயமரியாதையோடு தனித்து நின்று அக்னிப்பரிட்சை மேற்கொள்ளவிருக்கும் இக்கட்சிகளை ஒரு வகையில் பாராட்டலாம். மற்றொரு வகையில் பரிதாபப் படலாம்.