அன்றிலிருந்து இன்றுவரை மக்கள் கொஞ்சமாவது சீரியஸாக பரிசீலிப்பது திமு கழகத்தின் வாக்குறுதிகளைதான். அதற்கேற்ப திமுகவும் ஒவ்வொரு தேர்தலின்போது வாக்குறுதிகளை ரொம்பவும் மெனக்கெட்டே உருவாக்க வேண்டியிருக்கிறது.
நமக்கு ஓரளவு நினைவுதெரிந்த தேர்தல் 1989 சட்டமன்றத் தேர்தல். சென்னை நகரின் ஒவ்வொரு இல்ல முகப்பிலும் 'நாடு நலம்பெற, நல்லாட்சி மலர' என்கிற வாசகங்களோடு திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அச்சடிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட தேர்தல் அது. 'பெண்களுக்கு சம சொத்துரிமை' போன்ற வாக்குறுதிகளை திமுக தந்திருந்ததாக நினைவு.
அதிமுகவைப் பொறுத்தவரை தேர்தல் அறிக்கை என்பது ஒரு சம்பிரதாயம். எம்.ஜி.ஆர் காலத்திலும் கூட. தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வந்ததும் அந்த வாக்குறுதிகள் கூட அதிமுக தலைவர்களுக்கு நினைவில் இருக்குமா என்பது சந்தேகமே. அதே நேரம் 'சொல்லாததையும் செய்வோம்' என்கிற திமுகவின் பிரபலமான வசனம் அப்பட்டமாக பொருந்துவது அதிமுகவுக்குதான். சத்துணவுத் திட்டம் போன்ற சமூகநலத் திட்டங்களை அதிமுக வாக்குறுதியாக தரவில்லை. ஆட்சிக்கு வந்து சொல்லாமலே கொடுத்தது. 91 தேர்தலின் போதுகூட 69 சதவிகித இடஒதுக்கீட்டை தேர்தல் வாக்குறுதியாக அம்மா தந்ததாக நினைவில்லை. ஆயினும் பல்வேறு தடைகளை உடைத்து இதனை நடைமுறைக்கு கொண்டுவந்தார்.
2006 வரை திமுகவின் தேர்தல் அறிக்கை மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை முன்னிறுத்தி முன்மொழியப்பட்டுக் கொண்டிருந்தது. கலைஞரின் மனசாட்சியான மாறனின் சிந்தனைகள் பலவும் வாக்குறுதிகளாக இடம்பெறும். 'மாநில சுயாட்சி' என்கிற வாசகம் ஒரு ஒப்புக்காவது இன்றும், திமுக அறிக்கைகளில் இடம்பெறுவது மாறன் காலத்திய பாரம்பரியமே. மாறன் மறைந்தபிறகு கலைஞருக்கு கிடைத்த பொருளாதார ஆலோசகர் நாகநாதன். 2006 தேர்தல் அறிக்கையை கவர்ச்சிகரமான வகையில் உருவாக்கியதில் அவரது பங்கு அளப்பறியது. உலகமயமாக்கல் நுழைந்து பதினைந்து ஆண்டுகள் கழிந்த நிலையில் மக்கள் மனதில் ஏற்பட்ட மாற்றங்களை கணக்கில் கொண்டு உருவாக்கிய அறிக்கை அது. 'நான் உனக்கு ஓட்டு போட்டால், தனிப்பட்ட முறையில் எனக்கென்ன கிடைக்கும்?' என்று ஒவ்வொரு வாக்காளரும் அரசியல் கட்சிகளிடம் பலனை எதிர்ப்பார்க்கத் தொடங்கியிருந்தார்கள்.
அத்தேர்தலில் இலவச கலர் டிவி, அண்ணா பாணியில் ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு மாதிரியான அதிரடி வாக்குறுதிகள். ஆரம்பத்தில் இவையெல்லாம் சாத்தியமேயில்லை என்று சாதித்த ஜெயலலிதாவே பிற்பாடு பத்து கிலோ அரிசி இலவசமென்று அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மீதி பத்து கிலோ அரிசியை கிலோ ரூ.3.50/- விலையில் வாங்கிக் கொள்ளலாம். இதன்படி பார்க்கப்போனால் ஒரு கிலோ அரிசி ரூ.1.75/-க்கு வழங்கப்படுமென்பது ஜெ.வின் வாக்குறுதி. இது திமுகவின் வாக்குறுதியை காட்டிலும் 25 பைசா குறைவு.
2006 தேர்தல் பிரச்சார காலத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி பசுமையாக நினைவில் நிற்கிறது. அதிமுக கூட்டணியின் பிரச்சாரப் பீரங்கி வைகோ ஒரு மேடையிலே முழங்கிக் கொண்டிருக்கிறார். "தோல்வி நிச்சயம் என்பதால், சாத்தியமில்லாத வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார் கலைஞர். ஏற்கனவே மானியத்தில் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் அரிசியை இன்னும் எப்படி ஒண்ணரை ரூபாய் குறைத்து கொடுக்க முடியும்?" என்று கர்ஜித்தார். அவருக்கு ஒரு துண்டுச்சீட்டு வருகிறது. 'அம்மா இன்று மாலை ஆண்டிப்பட்டி பிரச்சாரத்தில் பத்து கிலோ அரிசி இலவசமென்று வாக்குறுதி தந்திருக்கிறார்'. அதுவரை பேசிய பேச்சை அப்படியே மாற்றிப்பேச வேண்டிய நெருக்கடி வைகோவுக்கு. தனது பேச்சாற்றலால் மாற்றியும் பேசினார். ஆனால், மதிமுகவினரே நொந்துப்போனார்கள். மக்கள் சிரிப்பாய் சிரித்தார்கள்.
வாக்குறுதிகளால் திமுக ஆட்சிக்கு வந்தது. தேர்தலுக்கு முன் ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் ப.சிதம்பரம்தான் முதன்முறையாக திமுக தேர்தல் அறிக்கையை 'கதாநாயகன்' என்கிற வார்த்தைகொண்டு Branding செய்தார் என்பதாக நினைவு.
2006ல் ஆட்சிக்கு வந்த திமுக தனது வாக்குறுதிகளை பெருமளவில் நிறைவேற்றியும் இருக்கிறது.
ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு என்று சொன்னது. ஆனால் ஒரு கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கே நியாய விலைக் கடைகளில் கொடுத்து வருகிறது.
ஏழைக்குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சி என்றது. ஏழை, பாழை மட்டுமில்லாமல் ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்குமே வண்ணத் தொலைக்காட்சி வழங்கப்பட்டு வருகிறது.
ஜெயலலிதா ஆட்சியில் நிறுத்தப்பட்டிருந்த பெண்களுக்கான திருமண உதவித்தொகை மீண்டும் அமல்படுத்தப்பட்டு, ரூபாய் பதினைந்து ஆயிரமாக உயர்த்தப்பட்டது.
கர்ப்பிணிப் பெண்களுக்கான உதவித்தொகை ரூ.6000/- வழங்கப்படுகிறது.
இலவச கலர் டிவி, இலவச கேஸ் அடுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு வாரம் ஒரு முட்டை.
கூட்டுறவுக் கடன் தள்ளுபடி.
வேலையிழந்த சாலைப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை.
அரசு ஊழியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் வழங்கப்பட்டது.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம்.
இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் இட ஒதுக்கீடு.
- இம்மாதிரி இன்னும் ஏராளமாக தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நிஜமாகவே திமுக ஆட்சி முனைப்பு காட்டியிருக்கிறது. அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு மாதிரி சொல்லாததையும் செய்துக் காட்டியிருக்கிறது. ஒரு அரசியல் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவது என்கிற அதிசயம் தமிழகத்தில்தான் கடந்த ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்திருக்கிறது.
இதோ அடுத்த தேர்தல். மீண்டும் ஒரு கவர்ச்சி அறிக்கை திமுகவிடமிருந்து. இம்முறை கலைஞர் 'கதாநாயகி' என்று தம் கழக அறிக்கையை branding செய்திருக்கிறார். ஊடகங்களோடு சேர்ந்து மக்களும் பரபரப்படைந்திருக்கிறார்கள். தேர்தல் அறிக்கைக்கு பின்பாக ஒரு சர்வே எடுக்கப்படுமாயின், திமுகவின் செல்வாக்கு ராக்கெட் வேகத்தில், கடந்துமுறையைப் போலவே உயர்ந்துக் கொண்டிருப்பதை இம்முறையும் அறிய முடியும்.
அம்மா ரொம்ப சிரமப்படவில்லை. திமுக தேர்தல் அறிக்கையை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து ஆங்காங்கே எண்களை உயர்த்தி, மானே தேனே போட்டு சம்பிரதாயமாக வாசித்துக் காட்டி விட்டார். மிக மிக நகைச்சுவையான தேர்தல் அறிக்கை இது. ஒருவேளை நகைச்சுவை நடிகர் வடிவேலு திமுகவுக்கு நகைச்சுவைப் பிரச்சாரம் செய்வதை ஈடுகட்ட, அம்மாவே நகைச்சுவை வேடம் பூண்டுவிட்டாரோ என்று தோன்றுகிறது. அம்மாவின் அறிக்கையை அவரது கட்சிக்காரர்கள் கூட சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான் பரிதாபம்.
கதாநாயகன் அறிவித்த அறிக்கை கதாநாயகியாகவும், கதாநாயகி அறிவித்த அறிக்கை காமெடியாகவும் அமைந்திருப்பது என்னமாதிரியான ஒரு சுவாரஸ்யமான முரண்!