20 ஏப்ரல், 2011

உன்னதம் உங்கள் இலக்கா?

நீங்கள் உன்னதங்களை நேசிப்பவரா? உன்னத நிலையை கனவு காண்பவரா? அடைய முயற்சித்துக் கொண்டிருப்பவரா? தயவுசெய்து நம்புங்கள். உங்கள் இலக்கான உன்னத நிலையை மனப்பயிற்சி மூலமே அடைந்துவிடலாம். எதிலும் உன்னதம் என்ற மகத்தான நிலையை அடைய உங்களை தயார்படுத்துகிறது ‘எக்ஸலண்ட்’ என்ற புத்தகம்.

நெய்வேலி நகரில் ஒரு பாடாவதி தியேட்டரில் அந்த பத்திரிகையாளர் ஒரு படம் பார்க்கிறார். படம் பார்த்து முடித்ததும் அவரிடம் நம் நூலாசிரியர் கேட்கிறார். “எப்படி இருந்தது படம்?”. வந்த பதில் வித்தியாசமானதாக இருந்தது. “இந்த வருஷத்துக்கு இதுதான் படம்!” அந்தப் படம் ‘சுப்பிரமணியபுரம்’. “இதுதான் படம்!” என்று தமிழகமே கொண்டாடியது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

அந்தப் படம் இயக்குனர் சசிகுமாருக்கு முதல் படம். கிட்டத்தட்ட அந்தப் படத்தில் பங்கேற்ற பலருக்கும் அதுதான் முதல் படம். தமிழ் சினிமாவில் நிகழ்த்தப்பட்ட ‘முதல் முயற்சிகளில்’ தலைசிறந்ததாக இம்முயற்சி திரைப்பட வல்லுனர்களால் போற்றப்படுகிறது. எப்படி இது சசிகுமாருக்கு மட்டும் சாத்தியமானது?

ஏனெனில் அவர் உன்னதமானவற்றை மட்டுமே முயற்சித்தார். அதனால் அவரால் நல்ல ஒரு விஷயத்தை பெறவும், மக்களுக்கு தரவும் முடிந்தது. ஒரு ‘சுமாரான’ சரக்கை உத்தேசிக்கும்போது அது நீங்கள் உத்தேசித்த சுமாரான அல்லது மோசமான தரத்திலேயே உற்பத்தியாகும். எப்போதும் சிறந்தவற்றை மட்டுமே இலக்காக வைப்பது ஒரு மனப்பயிற்சி. அது ஒரு கட்டாயமும் கூட.

சிறந்தவற்றை மட்டுமே இலக்காக வைப்பது எப்படி?

கொலம்பியாவை சேர்ந்த எழுத்தாளர் காபிரியேல் கார்ஸியா மார்க்குவேஸை துணைக்கு அழைத்துக் கொள்கிறார் நூலாசிரியர். ரொம்ப நாளாக எழுத உத்தேசித்திருந்த ஒரு நாவலின் மொழி அந்த எழுத்தாளருக்கு பிடிபடவேயில்லை. குடும்பத்தோடு காரில் சுற்றுலாவுக்கு போய்க்கொண்டிருந்தபோது திடீரென தட்டுகிறது ஒரு பொறி. பாட்டி கதை சொல்லும் தொனிதான் அந்நாவலுக்கான மொழி.

காரை வீட்டுக்கு திருப்புகிறார். ஓர் அறைக்குள் புகுகிறார். எழுத ஆரம்பிக்கிறார். எப்போதாவது பசித்தால் சாப்பாடு. வீடு, மனைவி, குழந்தைகள் எல்லாமே மார்க்குவேஸுக்கு மறந்துபோகிறது. எத்தனை நாட்களுக்கு? கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு. குளிக்காமல், சாப்பிடாமல், தூங்காமல், சவரம் செய்யாமல், மனநிலை குன்றியவரைப் போல எழுதிக்கொண்டே இருப்பது அத்தனை அவசியமா என்ன? இந்த கேள்விக்கு 1967ல் வெளியான அந்த நாவல் பதில் கொடுத்தது.

நூற்றாண்டு கால தனிமை (One Hundred Years of Solitude) என்கிற அந்நாவல் இன்றுவரை விற்பனையில் சாதனை படைக்கும் மாபெரும் இலக்கியம். நவீன படைப்பிலக்கத்துறையில் இன்றுவரை தோன்றிய உன்னத படைப்புகளின் சிகரம். மார்க்குவேஸை படைப்பாளிகளும், வாசகர்களும் தலைமீது தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள்.

உன்னத இலக்கை அடைய எளிய குறுக்குவழி உழைப்புதான் என்பதை இப்போது புரிந்துகொண்டிருப்பீர்கள். சரி. கடுமையான உழைப்பாளி உன்னதநிலையை அடைந்துவிட முடியுமென்றால் நாற்பது, ஐம்பது ஆண்டுகளாக மூட்டை தூக்கிக் கொண்டிருப்பவர்கள் இன்னமும் மூட்டை மட்டுமே தூக்கிக் கொண்டிருப்பார்களா என்றொரு கேள்வி உங்களுக்கு எழுமே?

உன்னதமான நிலையை அடைவதற்கு உழைப்பு மட்டுமே ஒரே ஒரு பாதையல்ல. ஏராளமான வழிகள் உண்டு. வழிகளை அறிய இப்புத்தகத்தை வாசிப்பதுதான் உங்களுக்கு நாம் சொல்லக்கூடிய எளியவழி. வழுக்கும் மொழி நடையில், வாழ்வியல் உதாரணங்களோடு, நேர்மறை எண்ணங்களோடு ஒவ்வொரு பக்கமும் சிலையை செதுக்கும் நேர்த்தியோடு எழுதப்பட்டிருக்கிறது.

இளையராஜா, கிராண்ட்மாஸ்டர் ஆனந்த், இசைக்கலைஞர் யானி, இயக்குனர் ஜி.வி.ஐயர், ஒசாமா பின்லேடன், பாரதிராஜா, மகாத்மா காந்தி என்று பலரும், இதுவரை நாம் கண்டிராத பல்வேறு பரிமாணங்களில் நமக்கு அறிமுகமாகிறார்கள்.

இந்த புத்தகம் உருவான பின்னணிக்கதை சுவாரஸ்யமானது. தன் மனதுக்கு உகந்த சிந்தனைகளை நண்பர்களுக்கும், அலுவலக சகாக்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அவ்வப்போது எழுத்தாளர் பா.ராகவன் பகிர்ந்துகொள்வார். ஒரு சில ஆண்டுகளில் அவர் அனுப்பிய மின்னஞ்சல்களை, மீள்பார்வை செய்துபார்த்தபோது அவருக்கே அவை உன்னதமானவையாக தோன்றியிருக்கின்றன. உன்னதத்தை போதிக்கும் ஒரு உன்னதப் புத்தகம் தயாரான கதை இதுதான்.

நூல் வெளியீடு : கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை-600 018. விலை ரூ.70. நூலாசிரியர் : பா.ராகவன்.

இணையத்தில் நூலை வாங்க...

19 ஏப்ரல், 2011

நன்றியோ நன்றி!





ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மனுஷ்யபுத்திரன் தொலைபேசி சொன்னபோது நம்பவே இயலவில்லை. “சொக்கா, சொக்கா... பத்தாயிரம் எனக்கா?” என்று மகிழ்ச்சியில் குதித்தேன்.

ஆம் நண்பர்களே. விருது, பாராட்டுப் பத்திரம், இதனால் கிடைக்கப்போகும் பெயர் இதையெல்லாம் விட ‘பத்தாயிரம்’தான் எனக்கு முக்கியமாகப் படுகிறது. ஏனெனில் கடனட்டை நிலுவைத்தொகை கழுத்தை நெரிக்கிறது. இதுதான் சார் யதார்த்தம். மத்ததெல்லாம் சும்மா பதார்த்தம்.

‘நாட்டாமை’ கவுண்டமணியின் பிரச்சினை அப்போதுதான் எனக்கு புரிய நேரிட்டது. விஷயம் தெரிந்ததிலிருந்தே “டீச்சரை நாட்டாமை தம்பி வெச்சிருக்காரு டோய்” என்கிற டைப்பில் விஷயத்தை யாரிடமும் சொல்லவும் முடியாமல், மென்று விழுங்கவும் முடியாமல்.. நேற்று மாலை ஆறு மணி வரை நான் தவித்த தவிப்பை எழுதிட தமிழில்/இங்கிலீஷில்/ஸ்பானிஷ் உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க மொழிகளிலும் வார்த்தைகள் இல்லை. எகிறிக்குதித்து, தலையால் வானத்தை இடித்துப் பார்த்துவிடும் வண்ணம் சூப்பர்மேனாக பிறந்துத் தொலைக்கவில்லையே என்கிற ஆற்றாமை ஏற்பட்டது.

விருது பெற்றவர்கள் அடக்கமாக இருக்கவேண்டும் என்பது பொதுவிதி. சைக்கிள் கிடைத்தாலே மிதிமிதியென மிதிக்கும் அடங்காப்பிடாரியான எனக்கு புல்லட்டு கிடைத்திருக்கிறது. டபடபவென ஒலி எழுப்பி, ஒரு ஓட்டு ஓட்டிப்பார்த்துவிட மாட்டோமா?

குருநாதர் கெளதம்
காட்ஃபாதர் பா.ராகவன்
ஆசிரியர் மாலன்
அண்ணன்கள் யெஸ்.பாலபாரதி, சிவராமன்
பின் தொடரும் நிழலின் குரலான தோழர் அதிஷா

ஆகியோரே இவ்விருதுக்கான பெருமைக்கும், இனி எனக்கு எழுத்து அடிப்படையில் ஏதேனும் சிறப்புகள் நேர வாய்ப்பிருந்தால் அதற்கும் உரித்தானவர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் நான் இயங்கிக் கொண்டிருக்க காரணமாக இருப்பவர்கள்.

பிறந்தவீடான கிழக்கையும், புகுந்த வீடான புதிய தலைமுறையையும் இவ்வேளையில் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். எனது எழுத்துகளை பிரசுரித்த குமுதம் ரிப்போர்ட்டர், ஆனந்தவிகடன், அகநாழிகை, பில்டர்ஸ் வேர்ல்டு, பெண்ணே நீ, குங்குமம், தினகரன் வசந்தம், கீற்று, 4தமிழ்மீடியா, யூத்ஃபுல் விகடன் உள்ளிட்ட அச்சு மற்றும் இணைய இதழ்களுக்கும் நன்றியோ நன்றி.

குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன், விகடன் ஆசிரியர் ரா.கண்ணன், எழுத்தாளர் சாருநிவேதிதா, தினமலர் வாரமலர் ஆபிஸ்பாய் அந்துமணி, எழுத்தாளர் ராஜூமுருகன், க.சீ.சிவக்குமார் ஆகியோரின் எழுத்துக்களை பிட் அடிப்பதைத் தவிர்த்து வேறெதையும் இதுவரை புதியதாக செய்துப் பார்த்ததில்லை. கிடைத்திருக்கும் அங்கீகாரம் எனக்கான தனித்துவம் ஒன்றினை தேடிக்கண்டிட ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது.

குறைந்தபட்சம் 50 வயதுவரை இலக்கியவாதி ஆகும் எண்ணம் இல்லை என்பதைக்கூறி எனது வலைப்பூவை வாசிக்கும் தோழர்கள் வயிற்றில் இவ்வேளையில் பாலை வார்க்கிறேன்.

மேலும், இந்த வலைப்பூவை எழுத ஆரம்பித்த காலத்திலிருந்தே ஆதரவும், ஊக்கமும் அளித்த தோழர்கள் முத்து (தமிழினி), முத்துக்குமரன், குழலி, பொட்டீக்கடை சத்யா, வரவனையான் செந்தில், செந்தழல் ரவி, சுகுணாதிவாகர், கோவி.கண்ணன், கேபிள்சங்கர், அகநாழிகை, பொன் வாசுதேவன், கார்க்கி, முரளி கண்ணன், பரிசல்காரன், அப்துல்லா, தமிழ்குரல், பகுத்தறிவு, லெனின், மதன் செந்தில், அருண், சுத்தத்தமிழ், வேக்கப்கால் உள்ளிட்ட ஏராளமான இணையத் தோழர்களும் எனது நன்றிக்குரியவர்கள். (விடுபட்ட பெயர்கள் மறதிப்பிழையால் நேர்ந்தது என்பதால் சம்பந்தப்பட்டவர்கள் மன்னிக்கவும்)

வலைப்பூ எழுதுவதற்கு முன்பாக நான் எழுதிப் பழகிய கருத்துக் களங்களான சிஸ் இந்தியா, தட்ஸ் தமிழ் மற்றும் தமிழ்நாடுடாக் ஆகிய தளங்களுக்கும் நன்றி.

எனது குடும்பத்தார் யாரும் எனது இணையத் தளத்தையோ, புத்தகங்களையோ வாசிப்பதில்லை என்பதால் அவர்களுக்கு எனது நன்றிகளில் எந்தப் பங்குமில்லை.

எனது வலைப்பூவை 2011ஆம் ஆண்டுக்கான சுஜாதா விருதுகளுக்கு தேர்ந்தெடுத்த நடுவர்கள் சாருநிவேதிதா, தமிழ்மகன் மற்றும் ஷாஜி ஆகியோருக்கு 100 மடங்கு நன்றிகள். உயிர்மை பதிப்பகத்துக்கும், அதன் ஆசிரியர் மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கும், சுஜாதா அறக்கட்டளைக்கும் கோடி நன்றிகள்.

பி.கு : என்னுடைய தனித்துவ அடையாளமாக (?) நான் திரும்பிப் பார்க்கும் திமுக கொடி கலர் சர்ட்டு போட்ட படம் சமீப ஆண்டுகளாக உருவெடுத்திருக்கிறது. நான் எழுதும் புத்தகங்களின் பின்னட்டையிலும், விக்கிப்பீடியா பக்கத்திலும், இன்னும் ஏராளமான இடங்களிலும் இந்தப் படமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை 2007ஆம் ஆண்டு எடுத்த தோழர் மோகன்தாஸ். லக்கிலுக் (எ) யுவகிருஷ்ணாவுக்கு முகம் கொடுத்த அத்தோழருக்கும் இவ்வேளையில் ஸ்பெஷல் நன்றி.

18 ஏப்ரல், 2011

ஐந்து குட்டிக் கதைகள்!

மொத்தம் ஐந்து குட்டிக் கதைகள். இந்த ஐந்தையும் தனித்தனியாக வாசித்தால் தனித்தனி குட்டிக் கதைகளாகத் தெரியும். அதையே ஒன்றாகப் படித்தால் ஒரே கதையாகவும் விளங்கும்.



மாப்பிள்ளையும், பொண்ணும்!

"பொண்ணு உன் தங்கச்சி மவனுக்குதானே?"

"ம்ம்... சும்மா கொடுத்துடுவேனா? என் அண்ணன் புள்ளைக்கு அவ பொண்ணை தந்தாவணும். பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்குறது தான் எங்க குடும்பத்து வழக்கம்"

“சொந்தத்துலே கொடுத்தா அதுகளுக்கு பொறக்குற புள்ளைகளுக்கு ஊனம் வரும்னு சொல்றாங்களே?

“சொல்றவங்க ஆயிரம் சொல்லட்டும். அதுக்கோசரம் உறவை வுட்டுத் தந்துட முடியுமா?

பிறந்து ஒரு நாள் கூட ஆகாத ‘பொண்ணுதூங்கிக் கொண்டிருந்தாள். அப்பா, அம்மாவோடு ஹாஸ்பிடலுக்கு வந்திருந்த ‘மாப்பிள்ளைகுச்சி மிட்டாய் சப்பிக் கொண்டிருந்தான்.


யாரைடி கட்டிப்பே?

"தோ.. குமாரு வந்துட்டான். இன்னொரு வாட்டி சத்தமா சொல்லு!"

"கொமாருமாமாவைத்தான் பெரியவளானா கல்யாணம் கட்டிப்பேன்!"

கொமாருமாமா வெட்கத்தோடும், வெறுப்போடும் அடிக்கத் துரத்தினான். அத்தைகள் பாதுகாப்பில் ஒளிந்துகொண்டவளை பிடிக்கவியலாத இயலாமையில் அழுதுகொண்டே, "நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்.. அதுமாதிரி பேசவேணாம்ணு சொல்லு!"

அவனது அழுகை சிரிப்பையும், குதூகலத்தையும் சொந்தங்களுக்கு தந்தது. திரும்ப கேட்டார்கள். "ஏய் நீ பெரியவளானா யாரைடி கட்டிப்பே?"

ம்.......இம்முறை அவள் யோசித்துக் கொண்டேயிருக்க...

அரண்டுபோன அவன் மனசுக்குள் கத்தினான். கொமாரு மாமாவைத் தான் கட்டிப்பேன்னு சொல்லுடி சனியனே!


கொருக்கலிக்கா, முந்திரிக்கா!

தென்னை ஓலைகளுக்கு இடையே பார்த்தபோது புத்தம் புதுசாய் தெரிந்தாள். ஓலை பின்னிக் கொண்டிருந்தான் முறைமாமன்.

முதன்முறையாய் அழகாய் தெரிந்தாள். கன்னங்கள் சிகப்பிட்டிருந்தது. போனவாரம் விளையாடும் போதுகூட, கொருக்கலிக்கா முந்திரிக்கா நிறைய நிறைய கொண்டுவா!ராகத்தில், கொமாரு மாமா கொமாரு மாமா என்னை கல்யாணம் கட்டிக்கோ! என்று பாடி, செமஅடி வாங்கினாள். பெண் உடனே பெரியவள் ஆகிவிடுகிறாள். ஆண் அப்படியேதான் இருக்கிறான். இப்போது அவள் கட்டிக்கச் சொல்லி கேட்கமாட்டாளா என்று ஏங்கினான்.

“மாமாமெல்லிசாக கூப்பிட்டாள்.

‘என்ன?

“என்னைக் கட்டிக்கிறியா மாமா?

 "போடி மூக்குச்சளி. உன்னை எவன் கட்டிப்பான்?"


செருப்பால அடிப்பேன்!

"ம்ம்ம்.. எவ்ளோ நேரம் சும்மா இருப்ப? ஏதாவது பேசேன்?"

"
என்ன பேசுறது?" சொல்லியாக வேண்டும் என்று தோன்றினாலும், எப்படி சொல்லுவது என்கிற தயக்கத்தில் இருந்தான்.

"
சும்மா ஏதாவது பேசேன்" அவளே தூண்டினாள்.

"
உங்கிட்டே திடீர்னு 'ஐ லவ் யூ' சொன்னா என்ன பண்ணுவே?" நூல்விட்டான்.

"
செருப்பால அடிப்பேன்" மிரண்டுப்போய் எழுந்து விட்டான்.

"சொன்னது என் அத்தைப்பையனாயிருந்தா செருப்படிக்குப் பதிலா கிஸ் அடிப்பேன்" சத்தமின்றி, முணுமுணுப்பாய் தலைகுனிந்து சொன்னாள்.

அத்தைப்பையனான அவனுக்கு கடற்காற்றின் சத்தத்தில் அவள் சொன்னது கேட்கவேயில்லை.


பஜாரியான தேவதை!

"நீ பார்க்க எப்படி இருப்பே?"

"
ஜோதிகா மாதிரி இருப்பேன்"

"
நானும் சூர்யா மாதிரி இருப்பேன்"

"
அப்படியா? ரொம்ப பொய் பேசுவியா?"

"
ஆமாம். சூர்யா மாதிரி இருப்பேன்னு சொன்னது பொய்"

"
அதானே பார்த்தேன்?"

"
சூர்யாவை விட சூப்பரா இருப்பேன்"

"
அட்றா.... அட்றா.... நேருல பார்க்கலேன்னு சொல்லிட்டு இஷ்டத்துக்கு அள்ளி விடறியா?"

"
நேர்ல வேணா பாப்போமே?"

"
பார்க்கலாம் சார். நேரா உங்க வீட்டுக்கு வாங்க"
“அய்யய்யோ பொண்டாட்டி. நீயாடி? இது என்ன புது நம்பர்?

“என் பிரெண்டோட நம்பர். முதல்லே வீட்டுக்கு வாடா. வெச்சுக்கறேன்

தேவதைகள் வானத்திலிருந்து குதிப்பதில்லை. மாமன்களுக்கு மகள்களாக பிறக்கிறார்கள். என்ன? கல்யாணம் கட்டிக் கொண்டதற்குப் பிறகுதான் பஜாரிகளாக மாறிவிடுகிறார்கள்.

(நன்றி : தினகரன் வசந்தம் 17-4-2011)

14 ஏப்ரல், 2011

சிலுக்கலூர்பேட்டை!


”சிலுக்கலூர்பேட்டை!”

பேரைக் கேட்டதுமே சும்மா கிர்ர்னுன்னு இருக்குல்லே?

முதன்முதலாக இப்பேட்டை குறித்த அறிதலை பகவதி என்ற தோழர் வாயிலாக அறிந்துகொண்டேன். அவர் ஒரு அச்சக முதலாளி. எங்களது டிசைனிங் சென்டருக்கு கஸ்டமராக வருவார். அச்சகத் தொழிலில் நேரம் காலமோ, ஓய்வோ கிடைப்பதரிது. ஆனால் இவரோ எப்போதுமே ப்ரெஷ்ஷாக இருப்பார். அவரது ப்ரெஷ்ஷுக்கான காரணத்தை ஒருமுறை கேட்டபோது அவர் சொன்ன பதில்...

”சிலுக்கலூர்பேட்டை!”

“அது எங்கே இருக்கு? அங்கே என்ன ஸ்பெஷல்?”

”ரோஜா, நக்மா ரேஞ்சு குஜிலிங்க கூட ரொம்ப சீப்பா ஐம்பது, நூறுக்கு கிடைக்கும்”

ஒருமுறை பீர் அடிக்க ஆகும் செலவு தான் அது என்பதால் ஆர்வம் கூடியது. என்னைவிட சேகருக்கும், சுரேஷுக்கும் சிலுக்கலூர்பேட்டை குறித்த செய்திகளை அறிந்துகொள்வதில் அதீத ஆர்வம் இருந்தது.

மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தியதில் சிலுக்கலூர்பேட்டை சூலூர்பேட்டையை விட பலவிஷயங்களில் விஸ்தாரமாணதும், வீரியமிக்கதும் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. இந்த ஊரில் நிறைய அஜால் குஜால் வீடுகள் உண்டாம். ஊருக்கு வரும் விருதினர்களை தலைதீபாவளிக்கு வரும் மாப்பிள்ளை மாதிரி வரவேற்று உபசரித்து, ‘திருப்தி’ படுத்தி அனுப்புவார்களாம். ஆயில் மசாஜ் தான் ஸ்பெஷலிலும் ஸ்பெஷல். மற்ற இடங்கள் மாதிரியின்றி இங்கே கோழிக்கறி அடித்து விருந்தும் உண்டாம். ஒரு ஆளுக்கு ஐநூறு தான் செலவாகும் என்றார்கள். இது வதந்தியா நிஜமா என்பதை உடனே முடிவுசெய்ய முடியவில்லை. சில வருடங்கள் கழித்து வெளிவந்த காட்ஃபாதர் படத்தில் இந்த விஷயத்தை கே.எஸ்.ரவிக்குமார் தொட்டிருந்தது இப்போது நினைவுக்கு வருகிறது.

இந்த மேட்டர் தெரிந்ததுமே சேகரும், சுரேஷும் ரொம்ப இம்ப்ரஸ் ஆகிவிட்டார்கள். நானும் தான். சிலுக்கலூர்பேட்டை எங்கே இருக்கிறது என்று தென்னிந்திய மேப்பை வைத்து தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. அது விஜயவாடாவுக்கு பக்கத்தில் இருப்பதாக சேகர் விசாரித்து சொன்னார். கிராமமாகவும் இல்லாமல், நகரமாகவும் இல்லாமல் நடுத்தரமாக இருக்குமாம். சென்னையிலிருந்து போய்வர இரண்டு, மூன்று நாள் ஆகிவிடும் என்றார்.

சேகருக்கு அஜால் குஜால் மேட்டரில் ஏற்கனவே கொஞ்சம் அனுபவம் இருந்தது. சுரேஷும், நானும் தான் ஞானஸ்தானம் பெறாதவர்கள். எனவே இயல்பாகவே எங்கள் இருவருக்கும் சிலுக்கலூர்பேட்டை மீது பிடிப்பு கொஞ்சம் அதிகமாக இருந்தது. சுரேஷுக்கு என்னைவிட ஆறு வயது அதிகம். சேகர் அவரைவிட இரண்டு வயது பெரியவர். நான் அப்போது தான் டீனேஜின் கடைசி ஏஜில் இருந்தேன்.

சிலுக்கலூர்பேட்டை விஜயத்துக்கு ஒரு பொங்கல் விடுமுறை குறிக்கப்பட்டது. என்ன ஒரு துரதிருஷ்டம் பாருங்கள். சுரேஷும், சேகரும் மட்டுமே போவதாக முடிவெடுக்கப்பட்டு பணிகள் தொடர்ந்தது. மூஞ்சியில்லாத முருகனுக்கு பலமுறை ‘ஞானஸ்தானம்’ நடந்திருந்ததாலும், பணநெருக்கடி காரணமாகவும் அவனால் ஜோதியில் ஐக்கியமாக முடியவில்லை. நொந்துப்போய் “என்னையும் ஆட்டையிலே சேர்த்துக்கங்கப்பா. நானென்ன பாவம் பண்ணேன்?” என்று கேட்டேன்.

“வயசுக்கு வராத பசங்க வர்ற இடமில்லை அது!” சேகர் கொஞ்சம் காட்டமாகவே சொன்னார். எனக்கு மீசை சாஸ்திரத்துக்கு கூட கொஞ்சமும் முளைக்காத அவலமான காலக்கட்டம் அது.

சமீபத்தில் ஜோதி தியேட்டரில் படம் பார்த்ததற்கான அத்தாட்சியாக நுழைவுச்சீட்டினை காண்பித்தேன். நான் வயசுக்கு வந்ததற்கான ஆதாரமாக அதை சேகர் எடுத்துக்கொள்வார் என்றும் நம்பினேன். அதுவுமில்லாமல் பொதுவாக வீக்கெண்டு பீர் பார்ட்டிகளின் ஸ்பான்ஸர் நானாகவும் இருந்ததால் என்னுடைய கோரிக்கையை உடனடியாக சேகராலும், சுரேஷாலும் நிராகரிக்க முடியவில்லை. என்னை அழைத்துக்கொண்டு செல்வதாக இருந்தால் பானு தியேட்டரில் ஒரு ஸ்பெஷல் ஷோ ஸ்பான்சர் செய்வதாகவும் வாக்குறுதி தந்தேன்.

இருவரும் கொஞ்சம் குழம்பிப் போனார்கள். என்னை அழைத்துக் கொண்டு செல்லும் முடிவு குறித்து ஆலோசனை செய்து இருநாட்களில் நல்ல செய்தி சொல்வதாக வாக்களித்தார்கள். அன்று மாலை அவர்களை பானு தியேட்டருக்கு அழைத்துச் சென்றேன். படம் ஆரம்பிப்பதற்கு முன்பாக போரூர் முருகன் ஒயின்ஸில் ஜலக்கிரீடையும் என் செலவிலேயே நடந்தது. ’பொங்கல் டைமில் அனேகமாக திருப்பதிக்கு போகவேண்டியிருக்கும், வெங்கடாஜலபதியை தரிசிக்க வேண்டியிருக்கும், ரெண்டு மூணு நாள் வீட்டுக்கு வரமாட்டேன்’ என்று வீட்டில் முன்னெச்சரிக்கையாக நோட்டிஸும் கொடுத்து வைத்திருந்தேன்.

ரெண்டு நாள் கழித்து இப்போதைக்கு திட்டத்தை ஒத்திவைத்திருப்பதாக சேகர் சொன்னார். ஊரில் ஆயா சீரியஸ் என்பதால் எப்போது வேண்டுமானாலும் புட்டுக்கலாம் என்று அதற்கு பொருத்தமான ஒரு காரணத்தையும் அவர் சொன்னதால் அப்போதைக்கு எனது தீவிரம் சற்று தணிந்தது. ’ஆயாவுக்கு சீரியஸுன்னா என்ன பண்ணமுடியும்?’ என்று சுரேஷும் ஒதுங்கிவிட்டார்.

பொங்கல் இனிதே முடிந்தது. அலுவலகத்துக்கு வந்தபோது எனக்கு பெருத்த அதிர்ச்சி. சுரேஷும், சேகரும் ஏதோ ஒரு ஞானம் பெற்றிருப்பது போன்ற மலர்ச்சியோடு தெரிந்தார்கள். அவர்களது தலைக்குப் பின்னே தலா ஒரு ஒளிவட்டம் இருந்ததுபோல எனக்கு பிரமை. இருவரும் ஒருவரையொருவர் பார்த்து வெட்கத்தோடு நமட்டுச் சிரிப்பும் சிரித்துக் கொண்டார்கள். எனக்கு வானமே தலைமீது இடிந்து விழுந்தது போல பெருத்த மனக்குழப்பம்.

உருட்டி, மிரட்டி, அழுது, புரண்டு, ஆர்ப்பாட்டம் செய்து கேட்டபோது உண்மையை ஒத்துக்கொண்டார்கள். தான் கன்னித்தன்மையை இழந்துவிட்டது குறித்து மகிழ்ச்சியோடு தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார் சுரேஷ். ‘எவ்வளவோ பார்த்திருக்கேன். இதுமாதிரி எங்கேயும் பார்த்ததில்லை’ என்று சாவகாசமாக ஆனால் விரிவாக பேசினார் சேகர். விருந்து, மருதம் படிப்பது மாதிரியே இருந்தது. என்னை தந்திரமாக தள்ளிவிட்டு இருவரும் சென்று வந்தது குறித்து நினைத்தபோது கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்தது.

“நீங்க போய்ட்டு வந்ததுக்கு என்ன ஆதாரம்?” வக்கீல் மாதிரி கேட்டேன்.

சடக்கென்று பஸ் டிக்கெட், ரயில் டிக்கெட் என்று நிறைய ஆதாரங்களை சேகர் காட்டியதுமே ரொம்பவும் நொந்துவிட்டேன். எனக்கு மீசை நல்லா கத்தையா முளைச்சதுக்கப்புறம், பெரியவன் ஆனதுக்கு அப்புறமா தனியாவே சிலுக்கலூர்பேட்டை போயிட்டு வருவேன் என்று மனதுக்குள் வீரசபதம் செய்தேன். “நான் தரிசிக்க வேண்டிய தலம் என் தம்பி கருணாநிதி குடியிருக்கும் பாளையங்கோட்டை சிறைச்சாலை” என்று அண்ணா சொன்ன அதே தீவிரம் என்னுடைய சிலுக்கலூர்பேட்டை சபதத்தில் நிறைந்திருந்தது.

அன்று மட்டுமல்ல. அதையடுத்து சில மாதங்களுக்கு அவர்கள் இருவரும் சிலுக்கலூர்பேட்டை புராணமே பாடிக்கொண்டிருந்தார்கள். எனவே அவர்களுக்கு வீக்கெண்டு பார்ட்டி ஸ்பான்ஸர் தருவதை நிறுத்தினேன். பதிலுக்கு அவர்கள் எனக்கு பார்ட்டி தந்து, பார்ட்டியில் சிலுக்கலூர் அனுபவங்களை புட்டு புட்டு வைக்க பல இரவுகள் தூக்கமில்லாமல் எனக்கு கழிந்தது.

ப்போது கத்தையாக இல்லாவிட்டாலும் கண்ணுக்கு தெரிவது போல மீசையென்று சொல்லிக்கொள்ளும் அளவில் ஏதோ முளைத்துவிட்டது. பணம் ஒரு பிரச்சினையில்லை. பெரியவனாகவும் ஆகிவிட்டேன். ஆனால் இடையில் சந்திரபாபு நாயுடு அதிரடிவேட்டை ஆடி சிலுக்கலூர்பேட்டையை அயோத்தி ரேஞ்சுக்கு புனிதநகரம் ஆக்கிவிட்டார் என்று கேள்விப்பட்டேன். அது அது அந்தந்த காலத்தில் நடந்து தொலைத்திருக்க வேண்டும். இப்போது அவலை நினைச்சு உரலை இடிச்ச கதை தான். வேறு என்னத்தைச் சொல்வது? :-(

இந்த இடைப்பட்ட வருடங்களில் சுரேஷும், சேகரும் என்ன ஆனார்கள் என்று விசாரித்துப் பார்த்ததில் தகவல்கள் மெச்சிக்கொள்ளத்தக்க வகையில் இல்லை. சுரேஷுக்கு இன்னமும் கல்யாணம் ஆகவில்லை. லே-அவுட் ஆர்ட்டிஸ்டாக இருந்த அவர் இப்போது தி.நகரில் ஒரு ஜவுளிக்கடையில் சேல்ஸ் சூபர்வைசராக வேலை பார்க்கிறாராம். சேகருக்கு காதல் திருமணம் முடிந்து விவாகரத்தும் ஆகிவிட்டதாம். எந்த வேலையிலும் நிலையாக நீடித்திருக்க முடியாமல் பலமுறை தற்கொலைக்கும் முயன்றாராம். அனேகமாக அவர் ஜிகாலோவாக கூட ஆகியிருக்கலாம்.

12 ஏப்ரல், 2011

பொன்னர் சங்கர்


கடைசியாக கலைஞருடைய ரசிகர்களின் இருபதாண்டுகால சோகம் நிறைவு பெறுகிறது. கடந்த இரு தசாப்தங்களாக கலைஞர் மொக்கையாக மட்டுமே வசனம் எழுதுவார் என்கிற தமிழ் சினிமா செண்டிமெண்டை தூள் தூளாக்கியிருக்கும் திரைப்படம் பொன்னர் சங்கர்.

ஆனாலும் கலைஞரின் அசலான நாவலும், பாத்திரங்களும் பாஸ்பரஸ் குண்டு போட்டு இயக்குனரால் சூறையாடப்பட்டிருக்கிறது என்பது சற்றே கவலையான விஷயம். குறிப்பாக ‘அருக்காணி’ பாத்திரம். படத்தில் ஏதோ ஒப்புக்குச் சப்பாணியாக வந்துபோகிறது. நாவலை வாசித்தவர்கள், படத்தைப் பார்த்தால் நிச்சயம் நொந்துவிடுவார்கள். அவ்வளவு அபாரமான கதைக்கு, எவ்வளவு மொன்னையான திரைக்கதை.

மகன் ஹீரோ என்பதால், அப்பாவான இயக்குனர் நிறைய ஹீரோயிஸ காட்சிகளை ஹாலிவுட்டிலிருந்து சுட்டு ‘பில்டப்’ கொடுப்பதற்கே முழு உழைப்பையும் செலவழித்திருக்கிறார். ஹீரோவுக்கு நடிக்க ஓரிரு காட்சிகளையாவது கொஞ்சம் வலிவாக, சிரத்தையெடுத்து அமைத்திருக்கலாம்.

ஆனாலும் எல்லா மைனஸ் பாயிண்டுகளையும் சுனாமியாக சுருட்டித் தள்ளுகிறது தயாரிப்புத் தரம். இவ்வளவு கலர்ஃபுல்லான படத்தை சமீபவருடங்களில் கண்டதாக நினைவேயில்லை. எல்லா காட்சியிலுமே குறைந்தது இருபது பேர் நிரம்பியிருக்கும் பிரம்மாண்டம். அட்டகாசமான ஆர்ட் டைரக்‌ஷன். தைரியமாக தமிழில் சரித்திரக் கதைகளை சிந்திக்கலாம் என்கிற நம்பிக்கையை இளம் இயக்குனர்களுக்கு விதைத்திருக்கிறார் தியாகராஜன்.

செக்கச் செவேலேன ஹாலிவுட் நடிகைகளைப் போல இரட்டை ஹீரோயின்கள் எப்போதும் பாக்கெட் மற்றும் பெல்ட் போர்ஷனை தாராளமாக காட்டியவாறே அலைகிறார்கள். தப்பித்தவறி டிக்கெட் வாங்கி தியேட்டருக்குள் நுழைந்துவிட்ட இளசுகளுக்கு பெரும் ஆறுதலான சமாச்சாரம் இதுதான்.

சரித்திரப் படத்துக்கு இளையராஜா இசை. வூடு கட்டி அடித்திருக்க வேண்டாமா? பாடல்கள் பரவாயில்லை. ஒரு டூயட் மட்டும் காதில் தேனாய் பாய்ந்தது. பின்னணி ஓவர் இரைச்சல்.

சமகால சமூகப்படம் இல்லை என்பதாலேயோ என்னமோ, கலைஞர் ரெக்கை கட்டி பறந்திருக்கிறார்.

வெண்தாடிக் கிழவர் ஒருவர் பேசும் வசனம், “என்னை அடையாளம் தெரியலையா? ஈரோட்டுக்குப் பக்கத்துலே இருக்குறதாலே ‘அவர்’னு நெனைச்சுக்கிட்டியா?”

“வளைபூட்டிய கரங்களால் வாளேந்தவும் முடியும்”

“ஆண்டவனுக்கு படைக்க வேண்டிய அமுதத்தை அர்ச்சகர் சுவைக்கலாமா?”

இப்படியாக நிறைய இடங்களில், பழைய கலைஞர் மீள்வருகை செய்திருப்பது தமிழ் சினிமாவுக்கு மகிழ்ச்சியான செய்தி.

கொங்கு மண்டலத்தையும், கொ.மு.க.வையும் ‘குஜால்’ செய்யும் விதமாக, தேர்தலுக்கு முன்பே படத்தை வெளியிட்டிருக்கிறார் கலைஞர். நிச்சயமாக பாதகமாக அமைந்துவிடாது என்பதே உடன்பிறப்புகளுக்கு மிகப்பெரிய ஆறுதல்.

இறுதிக் காட்சியில் உறையூர் சோழ அரசுக்கு, பொன்னிவள நாடு பணிந்துவிடாது என்று அமைக்கப்பட்ட காட்சியில், சோனியா காந்திக்கு மறைமுக செய்தியையும் தலைவர் சொல்லியிருக்கிறார். ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ எனும் திமுக கொள்கையை வாழைப்பழத்தில் ஊசியாக ஏற்றியிருக்கிறார். விடுங்க தலைவரே. அதுதான் அறுவத்தி மூணை அள்ளிக் கொடுத்திட்டீங்களே, அப்புறமென்ன பேச்சு?

பொன்னர் சங்கர் – கொள்கை முழக்கம்!