4 மே, 2011

ஆட்டுக்குட்டி முட்டையிட்டு..

கலர்டிவி, கம்ப்யூட்டர் என்று நவீனசாதன இலவசங்களை அறிவித்து அலுத்துப்போயிருக்கின்றன அரசியல் கட்சிகள். வித்தியாசமாக சிந்தித்து, சிந்தித்து கட்சிகளின் பொருளாதார ஆலோசகர்களின் மூளை சூடேறிப் போயிருக்கிறது. வேறு வழியின்றி இப்போது பாரம்பரிய முறையிலான சில இலவசங்களை அறிவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த தேர்தலில் கொடுக்கப்பட்டிருக்கும் புதுமையான வாக்குறுதிகளில் ஒன்று ‘வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்கு நாலு ஆடு இலவசம்’.

கான்க்ரீட் காடுகளான ஃப்ளாட்களில் சுதந்திரமாக நாய்க்குட்டி கூட வளர்க்கும் சூழல் இல்லாத நகர்ப்புறங்களில் இது எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் கிராமப்புறங்களில் மக்களிடையே கணிசமான வரவேற்பினை பெற்றிருக்கிறதை நாம் பார்க்க முடிகிறது. விவசாயத்தோடு தொடர்புடைய மக்களுக்கு உபத்தொழிலாக ஆடு, கோழி, மாடு வளர்ப்பு தொன்று தொட்டே இங்கு நடந்து வருகிறது.

திருப்பூரில் வசிக்கும் இளைஞர் ஜெயக்குமார் ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார். ராமநாதபுரத்தை பூர்விகமாக கொண்ட இவரது குடும்பமே பரம்பரை பரம்பரையாக இதே தொழிலில் ஈடுபட்டிருக்கிறது. அரசாங்கம், கிராமப்புற ஏழைமக்களுக்கு ஆடு இலவசமாக தருவதென்றால், அது மிக நல்ல திட்டம், வரவேற்கத்தக்கது என்கிறார்.

“ஆடுவளர்ப்பு என்பது நல்ல லாபகரமான தொழில். வளர்த்தெடுத்த ஆட்டை இறைச்சிக்காக நல்ல விலைக்கு விற்கலாம். தோல் விற்பனை கூடுதல் லாபம். ஒரு ஆட்டுக்குட்டியின் தற்போதைய விலை ஆயிரத்து ஐநூறு ரூபாயிலிருந்து இரண்டாயிரம் ரூபாய் வரை வரும். இரண்டு வருடம் வளர்த்தால் போதும். ஏழாயிரம் ரூபாயிலிருந்து எட்டாயிரம் ரூபாய் வரைக்கும் விற்கலாம். பராமரிப்புச் செலவு அதிகபட்சம் ஆயிரம் ரூபாய்தான் ஒரு ஆட்டுக்கு வரும். இரண்டு ஆண்டில் நான்கைந்து மடங்கு லாபம் தரக்கூடிய தொழில் இது.

அரசு நான்கு ஆட்டுக்குட்டிகள் தந்தாலே போதும். சில வருடங்களில் ஒரு மந்தையையே உருவாக்கிவிட முடியும். ஏனெனில் ஒரு பெண் ஆடு, வருடத்துக்கு இரண்டு குட்டிகள் போடும்” என்கிறார் ஜெயக்குமார்.

டெல்டா மாவட்டங்களில் ‘ஆடு’ என்பது முதலீடு. கையில் கொஞ்சம் காசு இருந்தால் போதும். ஆட்டுக் குட்டிகளாக வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். வங்கி சேமிப்புக் கணக்கில் வரும் வட்டியெல்லாம், இதில் கிடைக்கும் லாபத்துக்கு முன்பாக தூசு. வளர்க்க இயலாதவர்கள் ’வாரத்திற்கு’ விட்டு விடுகிறார்கள். ‘வாரம்’ என்பது என்னவென்றால், ஒருவர் தனது ஆட்டை, வளர்க்க விரும்பும் மற்றொருவரிடம் பராமரிப்புக்கு கொடுத்துவிடுவார். அந்த ஆடு, அது போடும் குட்டி, மற்ற லாப-நஷ்டங்கள் இருவருக்கும் சரிபாதி. அதாவது வாரத்திற்கு எடுப்பவர் தொழிலின் ஒர்க்கிங் பார்ட்னர் மாதிரி. இம்மாவட்டங்களில் திருமணத்தின் போது பெண்களுக்கு ஆடுகளை பிறந்தவீட்டு சீராகவே கொடுப்பதுண்டு. மியூச்சுவல் ஃபண்ட் மாதிரியான விஷயங்கள் கிராமத்தவர்களுக்குப் பொதுவாக தெரியாது. ஆனால் அதில் கிடைக்கும் லாபத்தை இதுபோன்ற விஷயங்களில் அனுபவிக்கிறார்கள்.

சரி, அரசு ஆடுகள் கொடுக்கிறது. அந்த ஆடுகளுக்கு சீக்கு வந்தால் எங்கே போவது? அரசு கால்நடை மருத்துவ கட்டமைப்புகள் எந்த நிலையில் உள்ளது?

139 கால்நடை மருத்துவமனைகள், 1207 கால்நடை மருத்துவ சிறுமையங்கள் (dispensaries), 22 தனி மருத்துவர் மையங்கள் (2008-09 நிலவரப்படி) இருப்பதாக தமிழக அரசு இணையத்தளத்தில் தகவல் கிடைக்கிறது. கால்நடை மருத்துவர்கள் எவ்வளவு பேர் என்கிற தகவல் இல்லை. லட்சக்கணக்கில் ஆடுகளை ஏழைகளுக்கு இலவசமாக அரசு வழங்கும் பட்சத்தில் இந்த கட்டமைப்பை வைத்துக்கொண்டு, என்ன நோக்கத்துக்காக வழங்கப்படுகிறதோ, அந்த நோக்கத்தை நிறைவேற்ற வாய்ப்பேயில்லை. எனவே ஆடுகள் வழங்கப்படுவதற்கு முன்பாக நிறைய கால்நடை மருத்துவர்களை பணிக்கு சேர்த்து, ஏராளமான புதிய மருத்துவ நிலையங்களை அரசு உருவாக்கித்தர வேண்டும். சில நூறு கோடிகளை, திட்டம் தொடங்குவதற்கு முன்பாக, இதற்காகவே செலவழித்தாக வேண்டும்.

“ஆடுவளர்ப்பினை தமிழகத்தின் எல்லாப் பகுதிகளில் செய்யமுடியாது என்பதுதான் யதார்த்தம். வனப்பகுதிகளில் மேய்ச்சலுக்காக ஆடுகள் விடுவதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்க்கிறார்கள். அரசு ஏழைகளுக்கு ஆடுகள் வழங்குமானால், அதை நிச்சயம் ஆதரிக்கிறேன். கிராமப் பொருளாதாரம் வலுப்படும் என்றும் நம்புகிறேன். அதே நேரம் மிகத்துல்லியமான பெரியளவிலான திட்டம் தீட்டப்படாமல் இது சாத்தியப்படாது” என்கிறார் தேசிய வேளாண்மை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரிகேடியர் ரகுநாதன்.

மக்களுக்கு வாக்கு கொடுப்பதற்கு முன்பாக அரசியல் கட்சிகள் இதையெல்லாம் யோசித்திருப்பார்களா என்று தெரியவில்லை. எது எப்படியாயினும் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சு வந்த கதையாக இந்த வாக்குறுதி மாறிவிடக்கூடாது. வாக்குறுதி கொடுத்த கட்சி ஆட்சிக்கு வருமேயானால், இத்திட்டத்தை நிஜமாகவே பயனுள்ள திட்டமாய் உருவாக்கிட முதல் நாளிலிருந்தே வாக்காளர்கள் குரல் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.


ஆடு வளர்ப்பு – சில டிப்ஸ்

• தினமும் காலையில் எட்டரை, ஒன்பது மணியளவில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பிவிட்டு, அவை தங்கியிருந்த கொட்டகைகளை துப்புரவாக சுத்தம் செய்து வைத்து விட வேண்டும்.

• பின்னர் பத்தரை, பதினோரு மணியளவில் அடர்தீவனம் வழங்கவேண்டும். கடலைப்புண்ணாக்கு ஊறவைத்த நீரை குடிக்க தரவேண்டும்.

• உச்சி வெயில் நேரத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது. பிற்பகல் மூன்று, மூன்றரை மணியளவில் தொடங்கி ஐந்து, ஐந்தரை வரை மேய்ச்சலுக்கு மீண்டும் அனுப்பலாம்.

• ஆடு பட்டியில் அடைந்திருக்கும் நேரத்தில் நொறுக்குத்தீனியாக பசுந்தீவனங்களை துண்டு துண்டாக்கி கொடுக்கலாம்.

• மூன்று மாதங்களுக்கு ஒருமுறை குடற்புழு நீக்கம் தொடர்ச்சியாக செய்துவரவேண்டும்.

• மருத்துவரின் ஆலோசனைபடி, தகுந்த இடைவெளிகளில் கட்டாயம் தடுப்பூசி போடவேண்டும்.


ஆடு வளர்ப்பு தொடர்பாக தமிழில் விலாவரியாக வாசிக்க நிறைய புத்தகங்கள் கிடைக்கிறது.

ஆட்டையே வாழ்க்கையில் நேரில் பார்த்திராத ஒருவர்கூட ஆடுவளர்ப்பில் கில்லாடியாக ஆகிவிடக்கூடிய அளவுக்கு அ முதல் ஃ வரை சொல்லிக்கொடுக்கிறது ஊரோடு வீரக்குமார் எழுதிய ‘ஆடு வளர்ப்பு – லாபம் நிரந்தரம்’ புத்தகம்.

எத்தனை வகை ஆடுகள் உள்ளன, கறிக்கு எந்த ஆட்டை வளர்க்கலாம், மிகுதியாகப் பால் கொடுக்கும் ஆடு எது, ஆடுகளுக்கு என்ன சாப்பிட கொடுக்கலாம், ஆட்டுக்கு என்ன நோய் வரும், என்ன மருந்து மாதிரியான அடிப்படைத் தகவல்களை கொண்ட நூல் இது. வெளியீடு : கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி : 044-42009601/03/04

(நன்றி : புதிய தலைமுறை)

3 மே, 2011

வானம்



படத்தைப் பற்றி பெரியதாக சொல்ல எதுவுமில்லை. ‘வேதம்’ என்கிற அற்புதமான தெலுங்கு காவியத்தை, முடிந்துப்போன தம்மை காலில் போட்டு நசுக்குவது மாதிரி நசுக்கியிருக்கிறார்கள். குறிப்பாக பரத் கதாபாத்திரம் மகா அகோரம். வேகாவின் மூக்குத்தி கொடூரம். சிம்பு அண்டா சைஸ் சொம்பு. பிரகாஷ்ராஜின் அழுகையை கண்டிருந்தால், நாயகன் கமல் தூக்குமாட்டி செத்துவிடுவார். சோனியா அகர்வாலின் முதல் குளோசப்பை கண்ட குழந்தைகளுக்கு இரவுக்காய்ச்சல் வரும் (பன்மடங்கு உப்பிப்போய் ‘பத்து பத்து’ பிட்டுபட சோனா மாதிரி இருக்கிறார்). ‘எவண்டி உன்னை பெத்தான்?’ பாட்டை பார்ப்பதற்கு/கேட்பதற்கு பதில், பட்டையடித்து மட்டையாகலாம்.

இன்னும் ஆயிரம் அடாசுகள் படத்தில் இருந்தாலும், இது ஒரு முக்கியமான படம். இந்துத்துவ தீவிரவாதத்தையும், இஸ்லாமிய தீவிரவாதத்தையும் ஒரே தட்டில் நிறுத்திவைத்து தமிழில் நேர்மையாக பேசியிருக்கும் முதல் படம். இதற்காகவே இந்த திராபையான படத்தை மெச்ச வேண்டியிருக்கிறது. ஆதரிக்க வேண்டியிருக்கிறது.

மும்பை பாணியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள், தமிழகத்தில் என்று நடைபெற ஆரம்பித்ததோ, அன்று சொருகப்பட்டது நம் மத நல்லிணக்கத்துக்கான ஆப்பு. இதுபோன்ற வெறிபிடித்த ஊர்வலங்களின் இருண்ட மறுபக்கத்தை ஒரு சிறுகாட்சி மூலமாக சிறப்பாக சித்தரித்திருக்கிறார் இயக்குனர். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் மதபோதை இருக்கும்பட்சத்தில் அது எவ்வளவு பெரிய ஆபத்தில் கொண்டுபோய் விடுமென்று பிரகாஷ்ராஜின் தம்பியை தீவிரவாதத்திற்கு தள்ளிவிடும் அந்த இந்து எஸ்.பி கதாபாத்திரம் மூலமாக கச்சிதமாக வெளிப்படுத்துகிறார்.

பலமுறை நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டிய விஷயம்தான். இஸ்லாமியன் இங்கே இந்திய நாட்டுப்பற்றை நெற்றியில் பெரிய ஸ்டிக்கராக ஒட்டிவைத்துக் கொண்டே திரிய வேண்டியிருக்கிறது. நாட்டுப்பற்றே சற்றுமில்லாத, இந்த நாடு மீது எந்த மரியாதையுமில்லாத என்னைப் போன்றவர்கள், இந்துவாக பிறந்து தொலைத்துவிட்டதால் எந்தப் பிரச்சினையுமின்றி வாழமுடிகிறது. இந்துவாக பிறந்துவிட்டவன் இந்த நாட்டை, தலைவர்களை, அரசியலை என்னமாதிரியாக வேண்டுமானாலும் பேசமுடியும். ஓர் இஸ்லாமியன் கொஞ்சம் சுருதி தவறி பேசிவிட்டால் போதும். அவன் அல்-உம்மாவா, சிமியா என்று ஆராயத் தொடங்கிவிடுகிறோம்.

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளின் போதும் கூட, “துலுக்கனுங்க பாகிஸ்தானைதான் சப்போர்ட் பண்ணுவானுங்க” என்று சிண்டு, வண்டுகள்கூட அனாயசமாக ஸ்வீப்பிங் ஸ்டேட்மெண்ட் அடித்துவிடும் வகையில் இந்திய பொதுப்புத்தி ஆழமாக கட்டமைக்கப்பட்டு விட்டிருக்கிறது. “நாங்கள் இந்தியர்கள்” என்று சொல்லிக்கொண்டே, இஸ்லாமியர்கள் சீதை மாதிரி சிதையில் இறங்கி தங்களது நாட்டுப்பற்று கற்பினை நிரூபித்தாக வேண்டுமா என்று தெரியவில்லை.

பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்தின் மூலமாக மிகச்சரியாக இந்த அசாதாரண நிலையினை படமாக்கியிருக்கிறார் இயக்குனர் க்ரீஷ். இந்த வாரம் யாருக்கு பூங்கொத்து தருவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் ஞாநியிடமிருந்து பிடுங்கி, வானம் பட இயக்குனருக்கு கொடுத்துவிடலாம்.

2 மே, 2011

’சுஜாதா விருதுகள் 2011’ - விருது வழங்கும் விழா

தோழர்களே!

இந்த விருது அறிவிக்கும்போது விளையாட்டுத்தனமாகவே இருந்தேன். இது எவ்வளவு முக்கியமான அங்கீகாரம் என்பதை எதிர்பாராத இடங்களில்/மனிதர்கள் மூலமாக வந்து விழுந்த பாராட்டுச் சுனாமியின் பின்னரே அறியமுடிகிறது. நான் பணிபுரியும் பத்திரிகை, என்னுடைய போட்டோவெல்லாம் போட்டு வாழ்த்தியிருக்கிறது. இவ்விருதினை வழங்கும் அமைப்பினரின் செயல்பாடுகளின் மூலமாக உருவாகியிருக்கும் கவுரவம் இது.

விருது கிடைத்துவிட்டது என்பதற்காக நண்பர்கள் ‘பார்ட்டி’ கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பட்டியல் தயார் செய்து, பட்ஜெட் எவ்வளவு ஆகும் என்று (டாஸ்மாக் விலை நிலவரப்படி) மதிப்பீடு போட்டுப் பார்த்தேன். குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் ஆகிறது. கிடைக்கப் போகும் பணத்தை விட இது பத்து மடங்கு அதிகம் என்பதால், இப்போதைக்கு ‘பார்ட்டி’ விஷயத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவருவதைத் தவிர்த்து வேறு வழியில்லை. அதுவுமில்லாமல் இன்னமும் பத்து நாள் கழித்து, மே 13 அன்று தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் , இந்த எளிய தொண்டனின் சார்பாக தமிழ்நாட்டுக்கே பார்ட்டி தரவிருக்கிறார் என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்த்திய/வாழ்த்தவிருக்கும் பெருந்தன்மையான உள்ளங்களுக்கு மீண்டும் நன்றி. எல்லோரும் அவரவர் அன்பை கடனாகவும் / ‘மொய்’யாகவும் அளித்து உதவியிருக்கிறீர்கள். வாய்ப்பு வரும்போது அசலும், வட்டியுமாக நிச்சயம் திருப்பி செலுத்துவேன்.

30 ஏப்ரல், 2011

போராட்டங்கள் - சாண்டில்யன்

ஏழாம் வகுப்பு கோடை விடுமுறையின் போதுதான் ‘பொன்னியின் செல்வன்’ வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னை நானே ராஜராஜ சோழனாக நினைத்துக்கொண்டு வானதிகளை தேட ஆரம்பித்த காலம் அது (பி செக்‌ஷன் குமுதா வானதி கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தினாள்). அடுத்தடுத்து பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் என்று கல்கியை கரைத்துக் குடிக்க ஆரம்பித்தேன்.

கல்கி தாகம் தீர்ந்தபோதுதான் சாண்டில்யனை நாடினேன். கடல்புறா, ராஜதிலகம், கன்னிமாடம், யவனராணி, இளையராணி, ராணா ஹமீர் என்று அடுத்தடுத்து வாசித்த அவரது நாவல்களால் கிறங்கிப் போனேன். பதலக்கூர் சீனிவாசலுவை துரோணராக ஏற்றுக்கொண்ட ஏகலைவன் என்பதால் எனக்கு சாண்டில்யனை இயல்பாகவே பிடித்துப் போனது. அந்த காலத்தில் குமுதத்தில் தொடர்கதை எழுதுவதற்காகவே, இவருக்கு மாதசம்பளம் வழங்கப்பட்டு வந்ததாக அப்பா சொல்லியிருக்கிறார். தமிழ் சரித்திரப் புதினங்களின் சாதனை மன்ன்ன் சாண்டில்யன் என்று சொல்வதில் தவறேதுமில்லை. அவர் எழுதுவது இலக்கியமா, வெறும் செக்ஸ் கதைகளா என்று அந்த காலத்தில் பெரிய விவாதங்கள் நடந்து கொண்டிருந்ததாம்.

யவனராணியின் முல்லைக்கொடி போன்ற இடை, மைவிழிச்செல்வியின் பரந்து விரிந்த மார்புகள், வாழைத்தொடைகள், அம்சமான தொப்புள்கள் என்று ஜில்பான்ஸாக எழுதும் சரித்திர எழுத்தாளர் அவர் என்பதாகவே எனது மனதில் பதிந்துப்போனார். சாண்டில்யனின் சுயசரிதையான ‘போராட்டங்கள்’ நூலினை கடந்த இரவில் வாசிக்கும் வரை.

இவ்வளவு எளிமையான மொழியில் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு தனது வாழ்க்கையை குமுதம் இதழில் இவர் தொடராக எழுதியிருக்கிறார் என்பதை நினைக்கவே ஆச்சரியமாக இருக்கிறது. இந்நூலில் கையாளப்பட்டிருக்கும் எளிய, அசத்தலான தமிழ் இந்த இண்டர்நெட் யுகத்தில் கூட எனக்கு கைவரவில்லையே என்று பொறாமைப்படுகிறேன். வரிக்கு வரி இழையோடும் நகைச்சுவை, சுய எள்ளல், எதிர்க்கருத்து கொண்டோர் மீது மெல்லிய வன்மத்தோடு கூடிய நையாண்டி. சந்தேகமேயில்லை. சாண்டில்யன் ஒரு மன்னன்தான்.

சாண்டில்யன் என்றதுமே உங்கள் மனதுக்குள் எப்படியான ஒரு தோற்றம் கற்பனைக்கு வருகிறது?

கருத்த உயரமான கம்பீரத் தமிழ் தோற்றம். வெட்டறுவா மீசை. எதிரில் பேசுபவர்கள் பெண்களாக இருந்தால், அவர்களது கழுத்துக்கு கீழேயே அலைபாயும் குறும்புக் கண்கள். இப்படித்தான் நான் கற்பனை செய்து வைத்திருந்தேன். அவரை அந்தக்காலத்தில் சந்திக்க வந்த சில கல்லூரி மாணவிகளும் இப்படியான கற்பனையிலேயே அவரை சந்திக்க வந்திருக்கலாம். அவர்கள் சந்தித்தது ஒரு அறுபத்தைந்து வயது கிழவரை. நெற்றியில் நாமம். வைணவப் பாரம்பரிய குடுமி. கீழே எட்டுமுழ வேட்டி. மேலே மூன்று முழத்துண்டு.

மாணவிகளில் ஒருவர் கேட்கிறார். “நீங்கள்தானா?”

சாண்டில்யன் சொல்கிறார். “ஆமாம். நானேதான்!”

திருக்கோயிலூரில் 1910ஆம் ஆண்டு, ராமானுஜம் அய்யங்கார் – பூங்கோவில்வல்லி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்த பாஷ்யம் அய்யங்காரை உங்களுக்கு தெரிந்திருக்காது. எனக்கும்தான். பிற்பாடு அவரைதான் சாண்டில்யனாக தமிழகமே தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடியது.

சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்த பாஷ்யம், திருச்சி செயிண்ட் ஜோசப்பில் கல்லூரிப்படிப்பை முடித்தார். கல்லூரிக் காலத்தில்தான் ராஜாஜியின் மூலமாக தேசிய எழுச்சி பெற்று, சுதந்திரப் போராட்டத்தில் குதித்தார். 1929ல் இவருக்கும், ரங்கநாயகிக்கும் கல்யாணம் நடந்தது. கல்யாணத்துக்குப் பிறகு அப்பா காசிலேயே கும்மியடித்ததை, சாண்டில்யன் பெருமையாகவும், நகைச்சுவையாகவும் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

சோற்றுக்குப் பிரச்சினை இல்லை என்பதால் அவருக்கு இலக்கிய ஆர்வம் ஏற்பட்டதாக எடுத்துக் கொள்ளலாம். 1930ல் சென்னை தி.நகரில் குடியேறுகிறார். விகடனில் பின்னி, பெடலெடுத்துக் கொண்டிருந்த கல்கி இவரது தெருக்காரர். திரு வி.க.வின் நவசக்தியில் பணிபுரிந்த சாமிநாத சர்மா இவரது இலக்கிய வெறிக்கு சோளப்பொறி ஆன நண்பர். இடையில் சும்மா இருந்த காலத்தில் இவரது அப்பா தமிழ்பயில, திருக்கண்ணபுரம் ஸ்ரீனிவாசாச்சாரியார் என்கிற தமிழறிஞரிடம் சேர்த்து விட்டதாகவும் தெரிகிறது.

சாண்டில்யனின் முதல் கதையை வெளியிட்டவர் தந்தை பெரியாரின் நண்பரான தோழர் சுப்பிரமணியம். பார்ப்பனர்களோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்த நீதிக்கட்சியின் பத்திரிகையான ‘திராவிடன்’ இதழில்தான் இவரது முதல்கதை ‘சாந்த சீலன்’ வெளியானது. காங்கிரசுக்கு ஆதரவான கதை. இந்த கதையை வெளியிட்டதால் தோழர் சுப்பிரமணியத்துக்கு வேலைபோனது தனி கிளைக்கதை.

பின்னர் சிறுகதைகள் தொடர்ந்து எழுத ஆரம்பித்தார். ஆனந்த விகடனில் அடுத்தடுத்து இவரது சிறுகதைகளை கல்கி வெளியிட, பாஷ்யம் அய்யங்கார் சாண்டில்யன் ஆனார். நவசக்தியில் சாமிநாத சர்மா மூலமாக கட்டுரைகளும் எழுதினார்.

இந்த கட்டத்தில் சுதேசமித்திரன் ஆசிரியர் ஸ்ரீநிவாசனை ஒருநாள் சந்திக்கிறார்.

“என்ன செய்கிறாய்?”

“கதை எழுதுகிறேன். உங்கள் பேப்பரில் கூட எழுதியிருக்கிறேன்”

“அதில் எப்படி பிழைக்க முடியும்?”

“முடியாதுதான்”

“நீ கிராஜூவேட்டா?”

“இல்லை” (கல்லூரிப் படிப்பை சுதந்திரப் போராட்ட வெறியில் – ஐ மீன் உணர்வில் - முழுமையாக முடிக்கவில்லை என்று தெரிகிறது)

“உனக்கு வேலை தருகிறேன். குமாஸ்தா வேலை என்றால் 35 ரூபாய் சம்பளம். பத்திரிகையாளன் ஆக வேண்டுமானால் ஆறு மாதங்கள் சம்பளமின்றி பயிற்சியாளனாக வேலை பார்க்க வேண்டும். எது வேண்டும்?”

“பத்திரிகையாளனாக எடுத்துக் கொள்ளுங்கள்”

சாண்டில்யனின் ‘போராட்டம்’ தொடங்கிய நொடி அதுதான்.

அந்த காலத்தில் ஆங்கிலப் பத்திரிகைகளில் நிருபர்களின் சம்பளம் இருநூற்றி ஐம்பது ரூபாயிலிருந்து தொடங்குகிறது. தினமணியில் கூட அறுபது ரூபாய். ஆறு மாதம் அல்லாடியபிறகே சாண்டில்யனுக்கு முப்பத்தைந்து ரூபாய் சம்பளம் கிடைக்கிறது.

ஆனால் ஒரு பத்திரிகையாளன் சம்பாதிப்பதை, உலகில் வேறு தொழில்களில் ஈடுபட்டிருக்கும் வேறு எவருமே சம்பாதிக்க முடியாது. துரதிருஷ்டவசமாக அவன் சம்பாதிப்பது பணமல்ல. அனுபவம். நூறாண்டுகள் வாழும் சாதாரண ஒரு மனிதர் பெறும் அனுபவங்களை ஒரு பத்திரிகையாளன் நான்கைந்து ஆண்டுகளிலேயே பெற்றுவிட முடியும் என்பதுதான் இந்தப் பணியின் சிறப்பு (ஒழுங்காக வேலை பார்த்தால்).

சாண்டில்யனும் அனுபவங்களை சம்பாதிக்கிறார். மகாத்மா காந்தியை கூட சந்தித்து பேட்டி கண்ட புண்ணியம் அவருக்கு வாய்க்கிறது. யாரால் ஈர்க்கப்பட்டு, அரசியல் ஆர்வம் கொண்டாரோ, அதே ராஜாஜியை கட்டுரை எழுதி விளாசவும் அவர் தயாராகவே இருந்தார். கல்கியோடு கூட மோதியிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

1952ஆம் ஆண்டு சென்னை பொதுக்கூட்டம் ஒன்றில் ராஜாஜி பேசுகிறார்.

“சினிமா பார்ப்பது அபாயகரமான படிப்பு. அதனால் புத்தி கெடுகிறது. உண்மை மறைகிறது. கொலை, கொள்ளை அதிகரிக்கிறது. அவ்வளவு ஏன்? ‘கம்யூனிஸம்’ கூட உண்டாகிறது”

இந்தக் கருத்துக்கு எதிராக சுதேசமித்திரன் வார இதழில் சாண்டில்யன் ‘சினிமா பார்ப்பது கெடுதலா?’ என்று எழுதுகிறார். கிட்டத்தட்ட கமல்ஹாசன் பாணி சிந்தனைகள் இவருடையது. சினிமா ஒரு தொழில்நுட்பம் அதை தவிர்க்க இயலாது. அதை நல்ல முறையில் மாற்ற வேண்டியதுதான் நமது கடமை என்று சாண்டில்யன் குறிப்பிடுகிறார்.

ராஜாஜியையே எதிர்த்துவிட்டார் என்று சாண்டில்யன் மீது பலரும் பாய்ந்தார்கள். பிற்பாடு சாண்டில்யன்தான் வெல்கிறார். ஏனெனில் ராஜாஜியின் ‘திக்கற்ற பார்வதி’ கூட சினிமா ஆனது.

அதேநேரம் சாண்டில்யனும் சினிமா விமர்சனங்களில் ரொம்பவும் கறாராகவே இருந்திருக்கிறார். திராவிட கருத்தாக்கங்களை தாங்கி வந்த படங்களை இவரால் தாங்கிக்கொள்ளவே இயலவில்லை. கல்கி, அறிஞர் அண்ணாவை ‘தென்னாட்டு பெர்னாட்ஷா’ என்று அடைமொழியிட்டு அழைத்ததை எதிர்த்தும் எழுதியிருக்கிறார். ‘நாத்திகம்’ என்கிற சிந்தனையை சாண்டில்யனால் ஜீரணிக்கவே முடியவில்லை. குறிப்பாக ‘கற்பு’ குறித்தான கற்பிதங்களை திராவிட எழுத்தாளர்கள் பத்திரிகைகளிலும், சினிமாவிலும் உடைத்தெறிந்ததை எதிர்த்து பெரும் போராட்டத்தையே சாண்டில்யன் நிகழ்த்த வேண்டியதாக இருக்கிறது. டி.கே.எஸ். சகோதர்களின் ‘மனிதன்’ நாடகமாகவும், பிற்பாடு திரைப்படமாகவும் வந்தபோது ‘விபச்சாரக்கதை’ என்று கடுமையான விமர்சனத்தை முன்வைக்கிறார். நவகாளி யாத்திரையின் போது நாட்டில் ஏற்பட்ட வல்லுறவுகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு என்கிற உயரிய நோக்கத்தில் ‘மனிதன்’ உருவானாலும், பிறப்பிலேயே பிற்போக்காளராக பிறந்துவிட்ட சாண்டில்யனால் அதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இவரது போராட்டங்களை வாசிக்கும்போது, சாண்டில்யன் ஒரு கண்டிப்பான பார்ப்பன பிற்போக்காளராகவே வாழ்ந்திருக்கிறார் என்கிற எண்ணம் ஏற்படுகிறது.

சினிமா மீது சாண்டில்யனுக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்?

காரணம் இருக்கிறது. பத்திரிகைத்துறையில் பணியாற்றிக்கொண்டே திரைத்துறையிலும் ஈடுபட்டிருக்கிறார் சாண்டில்யன். நிறைய டிஸ்கஷனில் கலந்துகொண்டிருக்கிறார். சுவர்க்க சீமா, என் வீடு ஆகிய படங்களில் திரைக்கதைப் பிரிவில் இவரது பங்களிப்பு நேரடியாகவே இருந்திருக்கிறது. தனது சினிமா அனுபவங்களை பிற்பாடு (1985) ‘சினிமா வளர்ந்த கதை’ என்கிற நூலில் பகிர்ந்துகொண்டும் இருக்கிறார்.

சுதேசமித்திரனில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பாதி சம்பளத்துக்கு ஹிந்துஸ்தான் டைமில் பணிக்கு சேர்ந்தது, பின்னர் மீண்டும் சுதேசமித்திரனுக்கே வந்தது என்று பத்திரிகை அலுவலக அரசியல், சாண்டில்யனின் வாழ்க்கையை ஏற்றமும், இறக்கமும் ஆனதாக மாற்றியமைத்தது. இன்றைய தினப்பத்திரிகைகளின் வார இதழ்களுக்கான வடிவமைப்பை தமிழில் முதலில் உருவாக்கியவர் சாண்டில்யன்தான் என்று சொன்னால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். ஆம். மகா த்ராபையாக வந்துக்கொண்டிருந்த ‘அனுபந்தம்’ என்று சொல்லக்கூடிய இதழுடன் இணைப்புகளை வாரமலராக்கி, மணம் வீச செய்த சாதனையாளர் சாண்டில்யன்தான்.

ஒரு பத்திரிகையாளராக மட்டுமல்ல. பத்திரிகையாளர் சங்கம், எழுத்தாளர் சங்கம் உருவாக்கம் என்று பலவிதங்களிலும் சாண்டில்யன் முன்னோடியாகவே இருந்திருக்கிறார். கிருஷ்ணகான சபா கூட இவரது வீட்டு வராந்தாவில்தான் தொடங்கப்பட்டது என்று குறிப்பிடுகிறார். உழைக்கும் பத்திரிகையாளருக்காக கடுமையாகப் போராடி பல சலுகைகளை வாங்கித்தந்த இவரால், எந்த சங்கத்திலும் கடைசிவரை நீடிக்கவே முடியவில்லை. நிறுவனர்களில் ஒருவராக பல சங்கங்களிலும் இவர் இருந்திருந்தாலும், பிற்பாடு வந்து இணைந்தவர்களோடு மோதி பாதியிலேயே வெளியேறிவிடுவது சாண்டில்யனின் ராசி. இவர் யாரிடமெல்லாம் மோதுகிறாரோ, அவர்களெல்லாம் சாண்டில்யனை மிகவும் மதித்தவர்கள், அன்பு பாராட்டியவர்கள் (மோதல்களுக்குப் பிறகும்) என்பதுதான் இங்கே குறிப்பிடத்தகுந்தது. கொள்கை வேறு, நட்பு வேறு, அபிமானம் வேறு என்று வாழ்ந்த கண்டிப்பான மனிதராகவே சாண்டில்யனை பார்க்க முடிகிறது.

விருதுகள் குறித்த கேலியான பார்வை சாண்டில்யனுக்கு உண்டு. விருது தகுதியானவர்களுக்கு போய் சேருகிறது என்றாலும், அவர்களது தகுதியற்ற படைப்புகளுக்குதான் கிடைக்கிறது என்று நொந்துக் கொள்கிறார். ‘ஆளுக்குதான் பரிசே தவிர, நூலுக்கு பரிசில்லை’ என்று அழகான சொற்றொடரை இங்கே பயன்படுத்துகிறார். சாகித்ய அகாடமி தமிழ்நாட்டுக்கு தேவைதானா என்கிற கேள்வியையும் முன்வைக்கிறார்.

எழுபதுகளில் மலர்ந்த நவீன இலக்கியப் போக்கையும் சாண்டில்யனால் புரிந்துகொள்ள இயலவில்லை அல்லது அவருக்கு பிடிக்கவில்லை. விமர்சனம் என்கிற சொல்லையே திறனாய்வு என்று மாற்றியதை கூட குறைபட்டுக் கொள்கிறார்.

இந்நூல் குறிப்பாக பத்திரிகைத்துறையில் பணிபுரிபவர்கள் நிச்சயம் வாசித்தே ஆகவேண்டியது. எழுத்து மற்றும் அலுவலகப் பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது என்று இலகுவாக எடுக்கப்பட்ட பாடமாக இந்நூலை கருதலாம். பத்திரிகையாளர்கள் மட்டுமன்றி அனைவரும் கூட ஒரு சுயமுன்னேற்ற நூலாக இந்நூலை வாசிக்கலாம். தவறேதுமில்லை. நல்லதொரு மனவெழுச்சியை ஏற்படுத்தக்கூடிய கதைதான் சாண்டில்யனின் கதை.

சாண்டில்யன் உள்ளிட்ட 28 எழுத்தாளர்களின் எழுத்துகளை நாட்டுடமையாக்க 2009ல் கலைஞர் ஆணையிட்டார். அப்போது சுந்தரராமசாமி மற்றும் கண்ணதாசனின் வாரிசுகள் இந்த ஆணையை கடுமையாக எதிர்த்தார்கள். நாட்டுடமைக்கு ஒத்துக்கொள்வது அவரவர் வாரிசுகளின் விருப்பம் என்று அரசு பல்டியடிக்க வேண்டியதாயிற்று. எனவே சாண்டில்யனின் வாரிசுகளும் அவரது எழுத்தை நாட்டுடமை ஆக்கவேண்டாமென்று மறுத்துவிட்டார்கள்.

போராட்டங்கள் என்கிற தலைப்பில் குமுதத்தில், 70களின் மத்தியில் இத்தொடர் எழுதும்போதே சாண்டில்யனுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியிருக்கிறது. குறிப்பாக கல்கி தரப்பிலிருந்தும், டி.கே.எஸ். வாரிசுகளின் தரப்பிலிருந்தும் கிளம்பிய எதிர்ப்புகளை நூலிலேயே கொஞ்சம் குசும்போடு பதிவு செய்திருக்கிறார் சாண்டில்யன். இத்தொடர் திடீரென முடிந்ததும் ஏராளமான வாசகர்கள் “ஏன் முடித்து விட்டீர்கள்?” என்று சாண்டில்யனுக்கு கடிதம் எழுதினார்கள். “இது முடியவில்லை. எழுதுவதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கிறது. அவகாசம் கிடைக்கும்போது மீண்டும் எழுதுவேன்” என்று பிற்சேர்க்கையில் சாண்டில்யன் குறிப்பிட்டிருக்கிறார். எழுதினாரா என்றுதான் தெரியவில்லை.

நூலின் பெயர் : போராட்டங்கள்.
ஆசிரியர் : சாண்டில்யன்
வெளியீடு : வானதி பதிப்பகம்,
13, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017.
விலை ரூ.32.

26 ஏப்ரல், 2011

ஜான் பாண்டியனும், ஜான் டேவிட்டும்!

ஜான் பாண்டியனுக்கு அறிமுகம் தேவையில்லை.

18 ஆண்டுகளுக்கு முன்பாக கோவை ஆர்.எஸ்.புரத்தில் ஊத்துக்குளி ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த விவேக் கொடூரமாக வெட்டி சாய்க்கப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஜான் பாண்டியன் உள்ளிட்ட பதினோரு பேர் மீது கொலைவழக்கு தொடரப்பட்டது.

நீண்ட விசாரணைக்குப் பிறகு இவ்வழக்கில் ஜான் பாண்டியன் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. திருச்சி, வேலூர், கடலூர் சிறைகளில் அடைக்கப்பட்டு பின்னர் சேலம் மத்தியச் சிறையில் தண்டனைக் காலத்தை கழித்தார்.

இது ஒரு சாம்பிள்தான். ஜான் பாண்டியன் மீது ஏகப்பட்ட கொலை, கொள்ளை வழக்குகள் உண்டு. திருநெல்வேலி மாவட்டத்துக்குள்ளேயே இவர் நுழையக்கூடாது என்று நீதிமன்றம் ஆணையிட்ட ஒரு காலமெல்லாம் உண்டு.

கொலைவழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே, புரட்சித்தலைவியால் 2001ஆம் ஆண்டு எழும்பூர் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, எதிர்த்து நின்ற திமுக வேட்பாளர் பரிதி இளம்வழுதியை அரிவாள் கொண்டு துரத்திய சாதனைக்கும் இவர் சொந்தக்காரர். சேலம் மத்தியச் சிறையில் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனை கொலைசெய்ய முயற்சித்த சம்பவமும் கூட நடந்தது.

கடந்தாண்டு ஐகோர்ட் இவருக்கு உறுதி செய்திருந்த ஆயுள்தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்து, இவர் உள்ளிட்ட ஐந்துபேரை விடுதலை செய்தது.

தமிழக முன்னேற்றக் கழகம் என்கிற அரசியல் கட்சியை நடத்திவரும் ஜான் பாண்டியன் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் முதுகுளத்தூர், நிலக்கோட்டை ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு, தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கிறார்.


ஜான் டேவிட்டுக்கும் அறிமுகம் தேவையே இல்லை.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பொன்னுச்சாமி. இவரது மகன் நாவரசினை, சிதம்பரம் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொன்ற சக மாணவர் ஜான் டேவிட். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த சம்பவம் இது.

கடலூர் செஷன்ஸ் கோர்ட் வழக்கை விசாரித்து ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள்தண்டனை விதித்தது. மேல்முறையீட்டில் சென்னை உயர்நீதிமன்றம், குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று கூறி 2001ல் விடுதலை செய்தது. கடலூர் சிறையில் இருந்து ஜான் டேவிட் விடுதலை ஆனார்.

தமிழக அரசு இந்த வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு கொண்டு சென்றது. ஒன்பது ஆண்டுகள் தீவிர விசாரணை நடந்து கடந்த 20ஆம் தேதி தீர்ப்பு வந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்தும், கடலூர் செஷன்ஸ் நீதிமன்றத்தின் இரட்டை ஆயுள் தீர்ப்பினை உறுதி செய்தும் இத்தீர்ப்பு அமைந்தது.

இடையில் ஜான் டேவிட் பாதிரியாராக மாறிவிட்டார். ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்டார் என்றெல்லாம் புலனாய்வு பத்திரிகைகளில் செய்தி காணக்கிடைத்தது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்தபிறகு, ஜான் டேவிட் ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல (?) உதவிய வி.ஐ.பி. யாரென்று கூட சில ஊடகங்கள் கேள்வி எழுப்பின.

மாறாக ஜான் டேவிட் கடந்த ஏழு ஆண்டுகளாக சென்னையில் வசித்ததாக இப்போது தெரியவந்திருக்கிறது. கொலைவழக்கில் ‘உள்ளே’ போய், பிரேமானந்தா சாமியாரின் ஜெயில்மேட்டாக இருந்த ஜான் டேவிட், ஆன்மீகம் பக்கமாக தனது முழுக்கவனத்தையும் செலுத்தியிருக்கிறார். வெளியே வந்த பின்னர் திருந்தி வாழ நினைத்த அவர், சென்னைக்கு வந்து தனது பெயரை ஜான் மாரிமுத்து என்று மாற்றிக் கொண்டிருக்கிறார்.

சென்னை வேளச்சேரியில் ஒரு கணினி நிறுவனத்தில் பணிக்கும் சேர்ந்திருக்கிறார். கடுமையான உழைப்பின் மூலமாக அதே நிறுவனத்தில் மேலாளராகவும் உயர்ந்து, கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். ‘அந்த’ கொலைக்குப் பிறகு வேறேதும் வம்பு, தும்புகளில் ஜான் டேவிட் ஈடுபட்டதாக சாட்சியங்கள் ஏதுமில்லை.

உச்சநீதிமன்றம் இப்போது பழைய தீர்ப்பை உறுதி செய்ததை அடுத்து, கடலூர் நீதிமன்றத்தில் ஜான் டேவிட் சரணடைந்திருக்கிறார். இனி அவரது வாழ்க்கை நான்கு சுவர்களுக்குள் முடிந்துவிடும்.


இந்த இருவரின் வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஏதோ ஒரு முரண் தட்டுப்படுகிறது. நம்முடைய இந்திய சட்டத்தில் ஏதோ மிகப்பெரிய - அதே நேரம் கண்ணுக்கும் தெரியாத - ஒரு பெரிய ஓட்டை இருப்பதாகப் படுகிறது. உங்களுக்குப் படுகிறதா? நமது இந்தியச் சட்டத்தில் ஒரு குற்றவாளி திருந்திவாழ இடமிருக்கிறதா இல்லையாவென்று சட்டமேதைகள்தான் விளக்க வேண்டும்.