4 மே, 2011

ஆட்டுக்குட்டி முட்டையிட்டு..

கலர்டிவி, கம்ப்யூட்டர் என்று நவீனசாதன இலவசங்களை அறிவித்து அலுத்துப்போயிருக்கின்றன அரசியல் கட்சிகள். வித்தியாசமாக சிந்தித்து, சிந்தித்து கட்சிகளின் பொருளாதார ஆலோசகர்களின் மூளை சூடேறிப் போயிருக்கிறது. வேறு வழியின்றி இப்போது பாரம்பரிய முறையிலான சில இலவசங்களை அறிவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த தேர்தலில் கொடுக்கப்பட்டிருக்கும் புதுமையான வாக்குறுதிகளில் ஒன்று ‘வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்கு நாலு ஆடு இலவசம்’.

கான்க்ரீட் காடுகளான ஃப்ளாட்களில் சுதந்திரமாக நாய்க்குட்டி கூட வளர்க்கும் சூழல் இல்லாத நகர்ப்புறங்களில் இது எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் கிராமப்புறங்களில் மக்களிடையே கணிசமான வரவேற்பினை பெற்றிருக்கிறதை நாம் பார்க்க முடிகிறது. விவசாயத்தோடு தொடர்புடைய மக்களுக்கு உபத்தொழிலாக ஆடு, கோழி, மாடு வளர்ப்பு தொன்று தொட்டே இங்கு நடந்து வருகிறது.

திருப்பூரில் வசிக்கும் இளைஞர் ஜெயக்குமார் ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார். ராமநாதபுரத்தை பூர்விகமாக கொண்ட இவரது குடும்பமே பரம்பரை பரம்பரையாக இதே தொழிலில் ஈடுபட்டிருக்கிறது. அரசாங்கம், கிராமப்புற ஏழைமக்களுக்கு ஆடு இலவசமாக தருவதென்றால், அது மிக நல்ல திட்டம், வரவேற்கத்தக்கது என்கிறார்.

“ஆடுவளர்ப்பு என்பது நல்ல லாபகரமான தொழில். வளர்த்தெடுத்த ஆட்டை இறைச்சிக்காக நல்ல விலைக்கு விற்கலாம். தோல் விற்பனை கூடுதல் லாபம். ஒரு ஆட்டுக்குட்டியின் தற்போதைய விலை ஆயிரத்து ஐநூறு ரூபாயிலிருந்து இரண்டாயிரம் ரூபாய் வரை வரும். இரண்டு வருடம் வளர்த்தால் போதும். ஏழாயிரம் ரூபாயிலிருந்து எட்டாயிரம் ரூபாய் வரைக்கும் விற்கலாம். பராமரிப்புச் செலவு அதிகபட்சம் ஆயிரம் ரூபாய்தான் ஒரு ஆட்டுக்கு வரும். இரண்டு ஆண்டில் நான்கைந்து மடங்கு லாபம் தரக்கூடிய தொழில் இது.

அரசு நான்கு ஆட்டுக்குட்டிகள் தந்தாலே போதும். சில வருடங்களில் ஒரு மந்தையையே உருவாக்கிவிட முடியும். ஏனெனில் ஒரு பெண் ஆடு, வருடத்துக்கு இரண்டு குட்டிகள் போடும்” என்கிறார் ஜெயக்குமார்.

டெல்டா மாவட்டங்களில் ‘ஆடு’ என்பது முதலீடு. கையில் கொஞ்சம் காசு இருந்தால் போதும். ஆட்டுக் குட்டிகளாக வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். வங்கி சேமிப்புக் கணக்கில் வரும் வட்டியெல்லாம், இதில் கிடைக்கும் லாபத்துக்கு முன்பாக தூசு. வளர்க்க இயலாதவர்கள் ’வாரத்திற்கு’ விட்டு விடுகிறார்கள். ‘வாரம்’ என்பது என்னவென்றால், ஒருவர் தனது ஆட்டை, வளர்க்க விரும்பும் மற்றொருவரிடம் பராமரிப்புக்கு கொடுத்துவிடுவார். அந்த ஆடு, அது போடும் குட்டி, மற்ற லாப-நஷ்டங்கள் இருவருக்கும் சரிபாதி. அதாவது வாரத்திற்கு எடுப்பவர் தொழிலின் ஒர்க்கிங் பார்ட்னர் மாதிரி. இம்மாவட்டங்களில் திருமணத்தின் போது பெண்களுக்கு ஆடுகளை பிறந்தவீட்டு சீராகவே கொடுப்பதுண்டு. மியூச்சுவல் ஃபண்ட் மாதிரியான விஷயங்கள் கிராமத்தவர்களுக்குப் பொதுவாக தெரியாது. ஆனால் அதில் கிடைக்கும் லாபத்தை இதுபோன்ற விஷயங்களில் அனுபவிக்கிறார்கள்.

சரி, அரசு ஆடுகள் கொடுக்கிறது. அந்த ஆடுகளுக்கு சீக்கு வந்தால் எங்கே போவது? அரசு கால்நடை மருத்துவ கட்டமைப்புகள் எந்த நிலையில் உள்ளது?

139 கால்நடை மருத்துவமனைகள், 1207 கால்நடை மருத்துவ சிறுமையங்கள் (dispensaries), 22 தனி மருத்துவர் மையங்கள் (2008-09 நிலவரப்படி) இருப்பதாக தமிழக அரசு இணையத்தளத்தில் தகவல் கிடைக்கிறது. கால்நடை மருத்துவர்கள் எவ்வளவு பேர் என்கிற தகவல் இல்லை. லட்சக்கணக்கில் ஆடுகளை ஏழைகளுக்கு இலவசமாக அரசு வழங்கும் பட்சத்தில் இந்த கட்டமைப்பை வைத்துக்கொண்டு, என்ன நோக்கத்துக்காக வழங்கப்படுகிறதோ, அந்த நோக்கத்தை நிறைவேற்ற வாய்ப்பேயில்லை. எனவே ஆடுகள் வழங்கப்படுவதற்கு முன்பாக நிறைய கால்நடை மருத்துவர்களை பணிக்கு சேர்த்து, ஏராளமான புதிய மருத்துவ நிலையங்களை அரசு உருவாக்கித்தர வேண்டும். சில நூறு கோடிகளை, திட்டம் தொடங்குவதற்கு முன்பாக, இதற்காகவே செலவழித்தாக வேண்டும்.

“ஆடுவளர்ப்பினை தமிழகத்தின் எல்லாப் பகுதிகளில் செய்யமுடியாது என்பதுதான் யதார்த்தம். வனப்பகுதிகளில் மேய்ச்சலுக்காக ஆடுகள் விடுவதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்க்கிறார்கள். அரசு ஏழைகளுக்கு ஆடுகள் வழங்குமானால், அதை நிச்சயம் ஆதரிக்கிறேன். கிராமப் பொருளாதாரம் வலுப்படும் என்றும் நம்புகிறேன். அதே நேரம் மிகத்துல்லியமான பெரியளவிலான திட்டம் தீட்டப்படாமல் இது சாத்தியப்படாது” என்கிறார் தேசிய வேளாண்மை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரிகேடியர் ரகுநாதன்.

மக்களுக்கு வாக்கு கொடுப்பதற்கு முன்பாக அரசியல் கட்சிகள் இதையெல்லாம் யோசித்திருப்பார்களா என்று தெரியவில்லை. எது எப்படியாயினும் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சு வந்த கதையாக இந்த வாக்குறுதி மாறிவிடக்கூடாது. வாக்குறுதி கொடுத்த கட்சி ஆட்சிக்கு வருமேயானால், இத்திட்டத்தை நிஜமாகவே பயனுள்ள திட்டமாய் உருவாக்கிட முதல் நாளிலிருந்தே வாக்காளர்கள் குரல் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.


ஆடு வளர்ப்பு – சில டிப்ஸ்

• தினமும் காலையில் எட்டரை, ஒன்பது மணியளவில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பிவிட்டு, அவை தங்கியிருந்த கொட்டகைகளை துப்புரவாக சுத்தம் செய்து வைத்து விட வேண்டும்.

• பின்னர் பத்தரை, பதினோரு மணியளவில் அடர்தீவனம் வழங்கவேண்டும். கடலைப்புண்ணாக்கு ஊறவைத்த நீரை குடிக்க தரவேண்டும்.

• உச்சி வெயில் நேரத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது. பிற்பகல் மூன்று, மூன்றரை மணியளவில் தொடங்கி ஐந்து, ஐந்தரை வரை மேய்ச்சலுக்கு மீண்டும் அனுப்பலாம்.

• ஆடு பட்டியில் அடைந்திருக்கும் நேரத்தில் நொறுக்குத்தீனியாக பசுந்தீவனங்களை துண்டு துண்டாக்கி கொடுக்கலாம்.

• மூன்று மாதங்களுக்கு ஒருமுறை குடற்புழு நீக்கம் தொடர்ச்சியாக செய்துவரவேண்டும்.

• மருத்துவரின் ஆலோசனைபடி, தகுந்த இடைவெளிகளில் கட்டாயம் தடுப்பூசி போடவேண்டும்.


ஆடு வளர்ப்பு தொடர்பாக தமிழில் விலாவரியாக வாசிக்க நிறைய புத்தகங்கள் கிடைக்கிறது.

ஆட்டையே வாழ்க்கையில் நேரில் பார்த்திராத ஒருவர்கூட ஆடுவளர்ப்பில் கில்லாடியாக ஆகிவிடக்கூடிய அளவுக்கு அ முதல் ஃ வரை சொல்லிக்கொடுக்கிறது ஊரோடு வீரக்குமார் எழுதிய ‘ஆடு வளர்ப்பு – லாபம் நிரந்தரம்’ புத்தகம்.

எத்தனை வகை ஆடுகள் உள்ளன, கறிக்கு எந்த ஆட்டை வளர்க்கலாம், மிகுதியாகப் பால் கொடுக்கும் ஆடு எது, ஆடுகளுக்கு என்ன சாப்பிட கொடுக்கலாம், ஆட்டுக்கு என்ன நோய் வரும், என்ன மருந்து மாதிரியான அடிப்படைத் தகவல்களை கொண்ட நூல் இது. வெளியீடு : கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி : 044-42009601/03/04

(நன்றி : புதிய தலைமுறை)

8 கருத்துகள்:

  1. Am working in a software company in Mumbai but my ambition is to run a farm with fish goat and high breed dogs this article boosted up my confidence

    பதிலளிநீக்கு
  2. ANY PRE(PARED)ELECTION RESULT ANALYSIS........OR JUST COMMENT ON THE BOOK?

    பதிலளிநீக்கு
  3. பாபு அவர்களே!

    இலை நிச்சயம் மலராது. ஏனெனில் துளிர்க்கும்போதே ஆடு மேய்ந்துவிடும். கவலை வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா3:41 AM, மே 05, 2011

    Ilai = Illai

    வேலூர் மாவட்டத்தில் பட்டுவாடா பட்டியல் : வேலூர் மாவட்டத்தில், 13 தொகுதிகளில் வாக்காளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது?

    வேலூர்: காங்கிரஸ் ஓட்டுக்கு, 200 ரூபாயும், சத்துவாச்சாரியில் மட்டும், 400 ரூபாயும் வழங்கியுள்ளது. அ.தி. மு.க., 100 ரூபாயும், காங்., போட்டி வேட்பாளர் அசேன், சில பகுதிளில் மட்டும், 500 ரூபாயும் கொடுத்துள்ளனர்.

    ஆற்காடு: பா.ம.க., 200, அ.தி.மு.க., 50 ரூபாய்.

    ராணிப்பேட்டை: தி.மு.க., 500, அ.தி.மு.க., 50 ரூபாய்.

    சோளிங்கர்: காங்கிரஸ் 500 ரூபாய், காங்கிரஸ் போட்டி வேட்பாளர் முனிரத்தினம், 1,000 மற்றும் தையல் மிஷின், வாஷிங்மிஷின் போன்ற பரிசுப் பொருட்களும், தே.மு.தி.க., கிராமப்புறங்களில் மட்டும் 100 ரூபாய் பட்டுவாடா செய்துள்ளது.

    அரக்கோணம்: விடுதலைச் சிறுத்தைகள் 200, அ.தி.மு.க., 100 ரூபாய்.

    காட்பாடி: தி.மு.க., 500 முதல் 1,000 ரூபாய் வரை, அ.தி.மு.க., 200 ரூபாய் கொடுத்துள்ளது. இங்கு, அமைச்சர் துரைமுருகன் போட்டியிட்டுள்ளார்.

    கே.வி.குப்பம்: தி.மு.க., 200 ரூபாய் மற்றும் ஒரு வீட்டுக்கு, ஒரு வெள்ளிக் கொலுசு.

    குடியாத்தம்: தி.மு.க., 100 முதல் 200 ரூபாய் வரை கொடுத்துள்ளது.

    அணைக்கட்டு: பா.ம.க., 300 முதல் 500 ரூபாய், தே.மு.தி.க., சில இடங்களில் மட்டும் 100 ரூபாய் கொடுத்துள்ளது.

    ஆம்பூர்: காங்கிரஸ், 200, காங்கிரஸ் போட்டி வேட்பாளர் பாலூர் சம்பத், சில இடங்களில் மட்டும் 500 ரூபாய் கொடுத்துள்ளார்.

    வாணியம்பாடி: இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், 500 ரூபாய் கொடுத்துள்ளது.

    ஜோலார்பேட்டை: பா.ம.க., 1,000 முதல் 2,000 ரூபாய். அ.தி.மு.க., 500 முதல், 1,000 ரூபாய் வரை கொடுத்துள்ளது.

    திருப்பத்தூர்: தி.மு.க., 200, அ.தி.மு.க., 100 ரூபாய் கொடுத்துள்ளது. இது தவிர, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு, தி.மு.க., கூட்டணியினர் மட்டும், ஒரு குழுவுக்கு, 5,000 முதல், 20 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்துள்ளனர்.

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா9:51 AM, மே 05, 2011

    கிராமப்புறங்களை பற்றி தெரியவில்லை. சென்னையில் என் நண்பன் வீட்டில் நாய் உள்ளது. மனிதனுக்கு சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவமனையை விட அரசு மாட்டு ஆஸ்பத்திரி நல்லாவே நாய கவனிக்கிறாங்க.

    பதிலளிநீக்கு
  6. நன்றி யுவ கிருஷ்ணா...ஊரோடி வீரக்குமார்

    பதிலளிநீக்கு
  7. நன்றி..! நன்றி..! நன்றி..! நானும் ஆடு வளர்க்கப் போறேன்..

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி யுவா..!

    பதிலளிநீக்கு
  8. யுவி ... ஹெட் லைன்ஸ் டுடே பாக்கலையா ..

    அப்புறம் ஏன் ஆடு வளர்ப்பு பத்தியெல்லாம் ..

    வரப்போவது நம்ப ஆட்சி தான் தோழர்!

    :) :) :)

    ஆனாலும்.. நல்ல அறிமுகம்!

    பதிலளிநீக்கு