17 மே, 2011

ஏலகிரி

கோடைக்காலம் வந்தாலே கசகசவென வெம்மை. எரிச்சலில் இரத்த அழுத்தம் எக்குத்தப்பாக எகிறுகிறது. யாரைப் பார்த்தாலும் சீறிவிழத் தோன்றுகிறது. வாண்டுகளுக்கு வேறு விடுமுறை. சொல்லவும் வேண்டுமா வீடு ரெண்டு ஆவதை. போதாக்குறைக்கு பாழாய்ப்போன மின்வெட்டு. விசிறி விசிறி விரல்களில் வீக்கம்.

இந்தமாதிரியான உளவியல்-உடலியல் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டுமானால், ‘சில்’லென்று நாலு நாளைக்கு குடும்பத்தோடு ஊட்டிக்குப் போய்வந்தால் நன்றாகதான் இருக்கும். உடலையும், மனதையும் ஃப்ரெஷ்ஷாக ரீ-சார்ஜ் செய்துக் கொள்ளலாம். ஆனால் செலவு எக்குத்தப்பாக எகிறுமே என்று கவலை கொள்கிற மிடில்க்ளாஸ் பட்ஜெட் பத்மநாபன் நீங்கள் என்றால்..?

கவலைப்படாதீர்கள் சார். உங்களை வரவேற்க மலைகளின் இளவரசி காத்திருக்கிறாள். பொன்னை வைக்கிற இடத்தில் பூவை வைப்பது மாதிரி, ஊட்டிக்குப் பதிலாக ஏலகிரி. செலவும் குறைவு. குடும்பத்துக்கும் குதூகலம். உங்களுக்கும் வழக்கமான வேலைகளிலிருந்து தற்காலிக விடுமுறை.

வேலூரில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில், திருப்பத்தூர் நெடுஞ்சாலை வழியாக பயணித்தால் பொன்னேரி என்று ஒரு ஊர் வரும். இங்கிருந்து இடதுப்புறமாக பிரிந்துச் செல்லும் சாலையில் பதினைந்து கிலோ மீட்டர் மலைப்பாதையில் பயணித்தால் ‘குட்டி ஊட்டி’க்கு போய்ச்சேரலாம். திருப்பத்தூரில் இருந்து பொன்னேரிக்கு பத்து கிலோ மீட்டர் தூரம்தான். ரயில் மார்க்கமாக வருபவர்கள் ஜோலார்பேட்டையில் இருந்து ஏலகிரிக்கு பயணிக்கலாம். சென்னை கோயம்பேடு பேருந்துநிலையத்தில் இருந்து தினமும் காலை 6.10 மணிக்கு ஒரு பேருந்து ஏலகிரிக்கு நேரிடையாக கிளம்புகிறது.

பொன்னேரியில் இருந்து ஏலகிரிக்கு செல்லும் மலைப்பாதை, மலைப்பாம்பின் உடலை ஒத்தது. வளைந்து நெளிந்து செல்லும் பாதையில் மொத்தம் பதினான்கு கொண்டை ஊசி வளவுகள். ஒவ்வொரு வளைவுக்கும் சூட்டப்பட்டிருக்கும் பெயர்களில் தமிழ் கமகமக்கிறது. பாவேந்தர், பாரதியார், திருவள்ளுவர், இளங்கோ, கம்பர் என்று தமிழ் கவிஞர்களின் பெயரும், கடையேழு வள்ளல்களின் பெயரும் ஒவ்வொரு கொண்டையூசி வளைவையும் சிறப்பு செய்கிறது.

வளைவுகளில் வாகனம் திரும்பும்போதெல்லாம் த்ரில்லிங்கான உணர்வு நிச்சயம். சன்னல் வழியாக கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும்போது லேசாக வயிற்றையே கலக்கவே செய்கிறது. 1960ஆம் ஆண்டில் தொடங்கி 64ஆம் ஆண்டு வரையிலான நான்கு ஆண்டுகளில் இந்த 15 கி.மீ சாலை போடப்பட்டிருக்கிறது. இந்த மலைச்சாலையை நெடுஞ்சாலைத்துறை நன்றாகவே பராமரிக்கிறது என்பதால் கார், பைக் வாகனங்களிலும் அச்சமின்றி செல்லலாம்.

மலைச்சரிவுகளை கண்டுகளிக்க ஆங்காங்கே பாதையில், தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் பார்வை மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த பார்வை மையங்களில் இருந்து அந்திநேரத்தில் கதிரவன் மறைவதை காண்பது அலாதியான அனுபவம். இடையிடையே குரங்குக் கூட்டங்களின் சேஷ்டைகள் வேறு ஆனந்தத் தொல்லை.

பதிமூன்றாவது வளைவில் திருப்பத்தூர் வனச்சரகத்தால் ஒரு தொலைநோக்கி மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கே இயங்குவது ஒரு சக்திவாய்ந்த தொலைநோக்கி. பல கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இடங்களை சுற்றுலாப் பயணிகள் காண இதில் வசதி இருக்கிறது. ஏலகிரியில் சுற்றுலாப் பயணிகளுக்காக கோடைவிழா மற்றும் வசந்தவிழா நடக்கும். அச்சமயங்களில் இந்த தொலைநோக்கியை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தொலைநோக்கி என்றதுமே நினைவுக்கு வருகிறது. இந்தியாவிலேயே மிகப்பெரிய தொலைநோக்கி காவலூரில் அமைந்திருக்கிறது என்று பாடப்புத்தகத்தில் படித்திருப்பீர்களே? இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால் நிறுவப்பட்ட இந்த தொலைநோக்கி மையம் ஏலகிரியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில்தான் இருக்கிறது. இதுபோன்ற தொலைநோக்கிகள் நிறுவப்படும் இடம் சிறிது உயரமாகவும், வருடத்தில் பல நாட்கள் மேகமூட்டமின்றியும், நகர வெளிச்சம் பாதிக்கப்படாத தூரத்திலும் இருந்தாக வேண்டும் என்பதாலேயே காவலூர் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.

பதினான்காவது வளைவு தாண்டியதுமே விண்ணை முட்டி நிற்கும் யூகலிப்டஸ் மரக்காடுகளை காணலாம். சினிமாக்காரர்களின் கண்களில் இந்த அடர்த்தியான காடுகள் இன்னமும் படாதது ஆச்சரியமே. மலை எற, ஏற நீங்கள் உணர்ந்துக் கொண்டிருக்கும் மெல்லிய சில்லிப்பின் தன்மைமாறி, இங்கே குளிர்காற்று சரேலென முகத்தில் அறையத் தொடங்குகிறது. காற்றில் ரம்மியமான தைல வாசனையும் கலந்து பயணச்சோர்வு முற்றிலுமாக நீங்குகிறது.

ஏலகிரியின் சமதளப் பகுதிக்கு நீங்கள் வந்து சேர்ந்திருப்பீர்கள். சாலையின் இருமங்கிலும் பலாமரங்களையும், அவற்றில் பழங்கள் காய்த்துத் தொங்குவதையும் பார்க்கலாம்.

உறைவிடப் பள்ளிகள், தங்கும் விடுதிகள் என்று ஓரளவு நாகரிக வாசனை அடித்தாலும், முழுக்க முழுக்க ஏலகிரி மலைவாழ் மக்களின் பூர்விக பூமி. முத்தனூர், கொட்டையூர், புங்கனூர், அத்தனாவூர், கோட்டூர், பள்ளக்கனியூர், மேட்டுக்கனியூர், நிலாவூர், இராயனேரி, பாடுவானூர், புத்தூர், தாயலூர், மங்களம், மஞ்சங்கொல்லிபுதூர் ஆகிய பதினான்கு மலைவாழ்விட மக்கள் வசிக்கும் கிராமங்கள் அடங்கியதுதான் ஏலகிரி. கடைகளிலும், சாலைகளிலும் எதிர்ப்படும் வெள்ளந்தி மக்கள் அனைவருமே பழங்குடியினர்தான்.

நானூறு ரூபாயில் தொடங்கி தங்கும் அறைகள் வாடகைக்கு கிடைக்கிறது. ஏராளமான தனியார் தங்கும் விடுதிகளோடு, அரசு பயணியர் மாளிகை, வனத்துறையினரின் விருந்தினர் மாளிகை, ஒய்.எம்.சி.ஏ அமைப்பினரிடம் இடவசதி என்று தங்குவதற்கு பிரச்சினையே இல்லை. அரசு நடத்தும் யாத்திரை நிவாஸ் விடுதியில் தங்குவதற்கான கட்டணம் 250 ரூபாயிலிருந்து 700 வரைதான்.

ஏலகிரி மலை 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது. கடல் மட்டத்தில் இருந்து 1048.5 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. கோடைக்காலத்தில் 34 டிகிரி, குளிர்காலத்தில் 11 டிகிரி என்பதுதான் வெப்பநிலை.

இங்கே பசுமை, பசுமையைத் தவிர கண்ணுக்கு எட்டிய தூரம் வேறெதுவுமில்லை. ஊட்டிக்கு ஒரு பொட்டானிக்கல் கார்டன் என்றால், ஏலகிரிக்கு இயற்கைப் பூங்கா. இரவுகளில் வண்ணமய மின்னொளி வெளிச்சத்தில் இங்கே காட்டப்படும் இசை நீருற்று கண்காட்சி ரொம்ப பிரபலம். பூங்காவில் செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கும் அருவியில் கொட்டு கொட்டுவென்று நீர் கொட்டித் தீர்க்கிறது. வெறுமனே பார்ப்பதோடு மட்டுமல்லாமல், பொதுமக்கள் குளிக்கவும் கூட செய்யலாம். குழந்தைகள் விளையாடி மகிழ, சிறப்பாக பராமரிக்கப்பட்டுவரும் குழந்தைகள் பூங்கா ஒன்று. காலாற பூங்காவை சுற்றி வருவது ஒரு ரம்மியமான அனுபவம். ஊட்டி குளிரைப்போல ஏலகிரியின் குளிர் உங்கள் உடலை அச்சுறுத்தாது. அளவான, உடலுக்கு இதமான குளிர்தான் இங்கே வீசுகிறது.

இயற்கைப் பூங்காவுக்கு எதிரே ஒரு செயற்கை ஏரிப்பூங்கா நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. இங்கேயும் குழந்தைகள் விளையாட தனியாக வசதி செய்துத் தரப்பட்டிருக்கிறது. 6 ஏக்கருக்கும் மேலான பரப்பளவில் சிறுவர் பூங்கா அமைந்திருக்கிறது.

ஏரியைச் சுற்றி ஒரு கிலோ மீட்டருக்கும் கூடுதலான நீளத்தில் கான்க்ரீட் கரை அமைக்கப்பட்டிருக்கிறது. ஏரியில் படகுச்சவாரி செய்பவர்களை இந்த கரையில் வாக்கிங் செய்துக்கொண்டே பார்ப்பது குதூகலமான அனுபவம். இந்த ஏரியில் நீங்களே ‘பெடல்’ செய்து படகு ஓட்டலாம். இல்லையேல் துடுப்பு போடும் படகுகளும் வாடகைக்கு கிடைக்கின்றன. உங்களோடு, படகோட்டி துடுப்பு போட்டு வருவார். 56,706 சதுர மீட்டர் இந்த ஏரியின் பரப்பளவு. பரவசப்படுத்தும் படகுச்சவாரிதான் ஏலகிரியின் ஹைலைட். ஏரியை ஒட்டி வனத்துறை சார்பில் மூலிகைப் பண்ணை ஒன்றும் நடத்தப்பட்டு வருகிறது. ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்துக்குப் பயன்படும் அரிய மூலிகைகள் இங்கே பயிரிடப்படுகிறது.

மலையும் மலையை சார்ந்த இடமும் குறிஞ்சி என்ற பெயரால் தமிழ்ப் பாரம்பரியத்தில் அடையாளப் படுத்தப்படுகிறது. குறிஞ்சியின் தெய்வம் முருகன் என்பதும் மரபு. எனவேதான் ஏலகிரி மலையை சுப்பிரமணிய சாமியின் திருக்கோயில் காத்துவருவதாக ஆன்மீக அன்பர்கள் கருதுகிறார்கள். சுற்றுலாவுக்கு வருபவர்கள் இக்கோயிலை தரிசிக்க தவறுவதேயில்லை.

மங்களம் கிராமத்திலிருந்து இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் சுவாமி மலை அமைந்திருக்கிறது. இங்கே பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே மக்கள் வசித்து வந்ததற்கான அடையாளச் சின்னங்கள் காணக் கிடைக்கிறது. நவீன இந்தியாவின் பழமையான பாரம்பரியம் கொண்ட கிராமங்களில் ஒன்றாக இங்கிருக்கும் நிலாவூர் விளங்குகிறது. சிலைவழிபாடு இங்கே காலம் காலமாக நடந்து வருகிறது. மலைவாழ் மக்களின் குலதெய்வமான கதவநாச்சியம்மன் கோயில் இங்கேதான் அமைந்திருக்கிறது.

யூகலிப்டஸ், மா, கொய்யா, மாதுளை, சப்போட்டா, நாவல், ரோஸ் ஆப்பிள், காப்பிச்செடி, புளியமரம், கூந்தமரம், ரம்போட்டா, ஆலமரம் மற்றும் பிரிஞ்சி இலைமரங்கள் என்று இயற்கை ஏலகிரிக்கு அள்ளிக் கொடுத்த செல்வங்கள் ஏராளம். நிலாவூர் கிராமத்தில் அரசு பழத்தோட்டம் ஒன்றும் அமைந்திருக்கிறது.

உயிரினங்கள் வாழ ஏற்ற சீதோஷணம் இங்கே நிலவுவதால் பாம்பு வகைகள், கரடி, சிறுத்தை, மான், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் இம்மலை காடுகளில் வாழ்வதாக சொல்கிறார்கள். யானைகள் கூட வருடத்தின் சில மாதங்களில் இங்கே இருக்குமாம். சிட்டுக்குருவி வகைகள், புறா வகைகள், கவுதாரி, காடை, காட்டுக்கோழி என்று மலைப்பிரதேசத்தில் வாழும் பறவையினங்களும் இங்கே ஏராளம். ஆனால் நம்மூரில் அனாயசமாக காணப்படும் காகம் மட்டும் இங்கே இல்லை (செந்நிற காகம் மட்டும் இருப்பதாக ஊர்க்காரர் ஒருவர் சொல்கிறார்). எனவே ‘கா.. கா’ என்கிற குரலை மட்டும் நீங்கள் ஏலகிரியில் கேட்கவே முடியாது.

மலை, மரம், செடி, கொடி, பறவைகள், விலங்குகள் தவிர்த்து ஏலகிரியில் வேறு என்ன ஸ்பெஷல்? அருவி. ஏலகிரியிலிருந்து 40 கி.மீ. தூரத்தில் ஜலகாம்பாறை அருவி இருக்கிறது. மலைவழியாக பாயும் ‘அட்டாறு’ என்கிற ஆறு பள்ளத்தாக்கினை அடைந்து, மலையின் வடகிழக்குப் பகுதியில் ஜடையனூர் என்கிற குக்கிராமத்தில் வீழ்ச்சி அடைகிறது. இதுவே ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி. மழைக்காலத்தில் – ஆண்டின் சில மாதங்களில் மட்டுமே – இங்கே குளிர்ந்த நீர் கொட்டும். கோடைக்காலத்தில் செல்லும் பயணிகளுக்கு இங்கே குளிக்கும் வாய்ப்பு கிடைக்காது.

ஏலகிரியில் சுற்றுலா தொடர்பான பணிகள் அனைத்தும் மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. நுழைவுக்கட்டணம் வாங்குவதில் தொடங்கி, கடைகள் நடத்துவது வரை அவர்கள் பொறுப்பு. அரசின் அசத்தலான ஐடியா இது. மலைவாழ் மக்களின் பெண்களும் பொருளாதார வலிவு பெற இது உதவுகிறது.

சுற்றுலா தவிர்த்துப் பார்க்கப் போனால் சாகச விளையாட்டுப் பிரியர்களின் சொர்க்கமாகவும் இம்மலை விளங்குகிறது. தென்னிந்தியாவிலேயே பாரா-கிளைடிங் எனப்படும் ‘ரெக்கை’ கட்டி மனிதன் பறக்கும் விளையாட்டு இங்கேதான் நடத்தப்படுகிறது. ஏலகிரி சாகச விளையாட்டு கழகம் (YASA – Yelagiri Adventure Sports Association) இந்த விளையாட்டுக்கு பொறுப்பேற்கிறது. ஆகஸ்ட்டு அல்லது செப்டம்பர் மாத வாக்கில் பாரா-கிளைடிங் திருவிழா இங்கே நடக்கும். இது மட்டுமன்றி மலையேற்றம், பாறையேற்றம், இருசக்கர சாகச விளையாட்டு (Biking) என்று பல விளையாட்டுகள் யாசா-வால் நடத்தப்படுகிறது.

ஒரு நடை குடும்பத்தோடு போய் பார்த்துவிட்டுதான் வாருங்களேன்!


ஏலகிரி சுற்றுலாவுக்கு சில தொடர்புகள்..

ஒய்.எம்.சி.ஏ. கேம்ப் சென்டர்
போன் : 04179-245226, 295144, 295146

ஏலகிரிக்கான வனச்சரகர் (ஜோலார்ப்பேட்டை)
போன் : 04179-220185

ஏலகிரி அட்வென்சர் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் (யாசா)
போன் : 9840593194, 9442357711, 9444449591, 9444033307

(நன்றி : புதிய தலைமுறை)

9 கருத்துகள்:

  1. தல,
    இந்தியாவிலேயே பேரா க்ளைடிங் இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே இருக்கிறது. அதில் ஏலகிரியும் ஒன்று. ஏலகிரியில் அங்குள்ள லோக்கல் உணவு மிகவும் பிரசித்தம். குறிப்பாக பலாப்பழத்தை கொண்டு செய்யப்படும் ஒரு வகை பலாப்பழ கறி செம டேஸ்ட். அந்த கொண்டாய் ஊசி வளைவுகள் த்ரில்லிங் ஆக இருக்கும். அவற்றிற்கு தமிழ் கலைஞர்களின் பெயர்களை சூடியது இன்னமும் அழகு (அதியமான் கொண்டாய் ஊசி வளைவு, அவ்வையார் கொண்டாய் ஊசி வளைவு.

    கிங் விஸ்வா

    கலைஞரின் பொன்னர் சங்கர் காமிக்ஸ்

    பதிலளிநீக்கு
  2. ஸ்பெல்லிங் மிஸ்டேக்.

    கொண்டை ஊசி வளைவு என்று படிக்கவும்.

    கிங் விஸ்வா

    கலைஞரின் பொன்னர் சங்கர் காமிக்ஸ்

    பதிலளிநீக்கு
  3. திருப்பத்தூர் எனது சொந்த ஊர்.இந்த கோடையையும் சேர்த்து இது வரை இருபது முறைக்கு மேல் ஏலகிரிக்கு சென்றிருப்பேன்... பாதி வளைவுகளை கால் நடையாகவும் பயணித்திருக்கின்றோம். ஆனால் எனக்கு தெரியாத பல தகவல்களை உங்கள் பதிவின் மூலம் தெரிந்துக்கொண்டேன்...
    நன்றி...

    பதிலளிநீக்கு
  4. கொண்டை ஊசி வளைவுகளுக்கு‍ தமிழ் அறிஞர்களின் பெயரை வைக்கலாம் என பரிந்துரைத்த அந்த நல்ல உள்ளம் யாருடையதோ?

    பதிலளிநீக்கு
  5. ஏலக்காய் வாசனை போல் ஏலகிரி பதிவு அருமை. படங்களுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  6. உங்கள் படைப்பை வாசிக்கும் போதே யில் என்று இருக்கிறது நண்பா --

    பதிலளிநீக்கு
  7. PLEASE PUBLISH ALL ACCOMADATION PH.LIST. T.S.SRDIDHAR.

    பதிலளிநீக்கு
  8. HI FRIENDS HIT LIKE THIS PAGE ON FACEBOOK,
    http://www.facebook.com/TirupatturDistrict

    பதிலளிநீக்கு