11 மே, 2011

அழகர்சாமியின் குதிரை

எப்படிப்பட்ட ஜாம்பவான் எடுத்த படமென்றாலும், அடுத்தடுத்த காட்சிகளை ஒரு சினிமா ரசிகன் எளிமையாக யூகித்துவிட முடிவதாக இருப்பதுதான் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட். டைட்டிலிலேயே இதை அடித்து நொறுக்கியிருக்கிறார் சுசீந்திரன். உணவு உபசரிப்பாளர்களின் பெயர்தான் முதலில் வருகிறது. சூப்பர் ஸ்டார், யுனிவர்சல் ஸ்டார், யங் சூப்பர் ஸ்டார் என்று கந்தாயத்து கிராஃபிக்ஸில், காதை கிழிக்கும் சத்தத்தில் டைட்டில் தொடங்காதது பெரிய நிம்மதி.

தமிழில் கதை இல்லையென்று இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் ஹைதராபாத் மற்றும் மும்பையில் தெருத்தெருவாக அலைந்துக் கொண்டிருக்கிறார்கள். ரீமேக் அப்பாடக்கர்களே! பாஸ்கர் சக்தி என்றொரு எழுத்தாளர் சென்னை கே.கே.நகரில் குடியிருக்கிறார். தமிழின் அச்சு அசலான கவுச்சி வாசத்தோடு மண்ணின் மனிதர்களையும், கலாச்சாரத்தையும் எழுத்தில் செதுக்கிக் கொடுக்கிறார். இவரையும் கொஞ்சம் கவனிங்க. இந்தப் படத்தில் இணை இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறார். (இன்று காலை தினகரனில் இயக்குனர் தரணியின் பேட்டி “தெலுங்கு ஒக்கடுவின் ஒன்லைனரை மட்டும் வைத்துக்கொண்டு, தமிழுக்கு ஏற்றவாறு கில்லியை புதுசாக உருவாக்கினேன்” – இவருக்கு மனச்சாட்சியே இல்லையா?)

சினிமாவாசம் சிறிதுமில்லாத சிறுகதை ஒன்றினை, படத்துக்கு கதைக்களனாக தேர்ந்தெடுத்த இயக்குனர் ஒரு இமாலய ஆச்சரியம். எப்படியெல்லாம் ஒரு ஹீரோ இருக்கக்கூடாது என்று தமிழ் சினிமா வரையறுத்து வைத்திருக்கிறதோ, அப்படியெல்லாம் இருக்கிறார் அழகர்சாமியின் அப்புக்குட்டி. குண்டு, கறுப்பு, குள்ளம்.

வண்ணத்திரை பளபளப்பே சற்றும் தெரியாத இயற்கையான ஒளியமைப்பில் கேமிரா. தேனீ ஈஸ்வருக்கு இது முதல் படமென்று சொன்னால் தேனீ குஞ்சரம்மா கூட நம்பமாட்டார். பாஸ்கர் சக்தி போலவே விகடனில் இருந்து சினிமாவுக்கு வந்த இன்னொரு மாணிக்கம். (அதே விகடனில் இருந்து சினிமாவுக்கு வந்த இன்னுமொரு மாணிக்கம் வின்செண்ட் பால் – உதவி ஒளிப்பதிவாளர்)

வசனகர்த்தா நாத்திகராக இருக்கவேண்டும். சாமி சம்பந்தப்பட்ட காட்சிகளில் கேலியும், கிண்டலும் நுரைபொங்க காட்டாறாக ஓடுகிறது. இயக்குனர் அல்லது வசனகர்த்தா, ஒருவரில் ஒருவர் மிகப்பெரிய பரோட்டா ரசிகர். விசாரித்ததில், ஏழுமலை ஏழுகடல் தாண்டி கிளியின் கண்ணில் அரக்கனின் உயிர் இருந்ததைப்போல இயக்குனரின் உயிர் பரோட்டாவிலும், தண்ணி சால்னா மற்றும் டபுள் ஆம்லெட், ஹாஃப் பாயிலில் அடங்கியிருப்பதாக தெரியவருகிறது.

பிரெசிடெண்ட், எலெக்‌ஷனில் இவரிடம் தோற்றுப்போன அவரது சொந்தக்காரர், பிரெசிடெண்ட் மகன், மைனர், மைனரின் வப்பாட்டிகள், திருப்பூர் பனியன் ஃபேக்டரிக்கு மகளை அனுப்பிவைக்கும் அம்மா, தச்சுவேலைக்காரர், வாத்தியார், கோடங்கி, அவருடைய அழகான மகள், அராத்து பொண்டாட்டி, அழகர்சாமி, அழகர்சாமியின் குதிரை, அழகர்சாமியின் வருங்கால பொண்டாட்டி, வருங்கால மாமனார், போலிஸ் இன்ஸ்பெக்டர், சி.ஐ.டி. வேலை பார்க்கவரும் திக்குவாய் கான்ஸ்டபிள்.. என்று படம் நெடுக வரும் பாத்திரங்கள் அசலாய் மனதை கொள்ளை கொள்ளுகிறார்கள். பாத்திரத்தேர்வுக்கான ஆஸ்கர் விருது இருக்குமேயானால், சுசீந்திரனுக்கு தாராளமாக தரலாம்.

குறைகளும் இல்லாமல் இல்லை. முதல் குறை, இளையராஜாவின் பின்னணி இசை. இசையென்று பார்த்தால், வழக்கம்போல உலகத்தரம்தான். ஆனால் 1982ல் நடக்கும் கிராமியக் கதைக்கு நவீன இசையை ஏன்தான் இசைஞானி முயற்சித்தாரோ தெரியவில்லை. அலைகள் ஓய்வதில்லைக்கு எப்படி இசையமைத்தாரோ, அதேமாதிரி (அந்தகாலத்து கருவிகளை பயன்படுத்தி) இசையமைத்திருந்தால், கிளாசிக் ஆக இருந்திருக்கும். பாரதிராஜா படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை தாமரை இலை மீது ஒட்டாத தண்ணீர் மாதிரி இருக்குமல்லவா? பல காட்சிகளில் இசைஞானியின் இசையும் அப்படித்தான், அழகர்சாமியின் குதிரைக்கு பொருந்தவேயில்லை. இந்தக் குறையை பாடல்களில் போக்கியிருக்கிறார் இளையராஜா. குறிப்பாக ‘குதிக்கிற குதிக்கிற குதிரைக்குட்டி’. இளையராஜா பாத்திரத்தோடு ஒன்றிப்போய் பரவசமாக பாடியிருக்கிறார்.

படத்தின் ஆரம்பத்தில் வரும் ‘டூயட்’ ஒன்றும், கதையின் வேகத்துக்கு பெரிய ஸ்பீட் பிரேக்கர். தவறான இடத்தில் பொருத்தப்பட்ட பாடல். யதார்த்தமாக பயணிக்கும் படத்துக்கு க்ளைமேக்ஸ் மிகப்பெரிய பெரிய திருஷ்டிப் பொட்டு. ‘பதினாறு வயதினிலே’ பாரதிராஜா மாதிரி படத்தை இயக்கிவந்த சுசீந்திரன், உச்சக்கட்ட காட்சியில் இராம.நாராயணன் ஆகிவிட்டார். அந்தகாலத்து ‘செல்வி’ பட ஸ்டைலில், குதிரை ‘ஸ்டண்ட்’ எல்லாம் செய்து ஹீரோவின் உயிரைக் காப்பாற்றுகிறது.

இம்மாதிரி சிறுசிறு குறைகள் தென்பட்டாலும் அழகர்சாமியின் குதிரை ஒரு ஃபீல் குட் மூவி. படம் முடிந்து வெளியே வரும்போது ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டு, 420 பீடா போட்ட திருப்தி ஏற்படுகிறது.

அழகர்சாமியுடையது அழகான குதிரை. அம்சமாக ஓடும்.

16 கருத்துகள்:

  1. பெயரில்லா1:11 PM, மே 11, 2011

    great review, eager to watch the movie

    பதிலளிநீக்கு
  2. பாஸ்கர் சக்தியை போல மண் மணம் கமழும் வகையில் எழுதும் எழுத்தாளர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். குறிப்பாக நெல்லை மாவட்டத்துக்காரர்கள்.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா2:44 PM, மே 11, 2011

    Is it already released? I was definitely going to watch the movie. Your review has helped. Good one!
    amas32

    பதிலளிநீக்கு
  4. ஆழமான பார்வை...

    படத்தைப் பார்க்க சொல்கிறது உங்கள் விமர்சனம்...

    பதிலளிநீக்கு
  5. அருமையான இயக்குனர் !!! காத்திருக்கிறேன் படத்திற்கு !!!

    பதிலளிநீக்கு
  6. இது போல திரைப் படங்கள் வெற்றி பெற வேண்டும்.

    தமிழ் சினிமா மீது மேலும் நம்பிக்கை பிறக்கிறது...

    நன்றி யுவ கிருஷ்ணா

    மயிலாடுதுறை சிவா...

    பதிலளிநீக்கு
  7. படம் இன்றுதான் வருகிறது. ஆனால் நேற்றே வந்துவிட்ட விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை தூண்டிவிட்டது.

    பதிலளிநீக்கு
  8. //அழகர்சாமியுடையது அழகான குதிரை. அம்சமாக ஓடும்.//

    இதில் ஐயம் ஒன்றும் இல்லை !
    இசை..ஞானி ஆயிற்றே !

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா10:23 PM, மே 13, 2011

    எனக்கு ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டு, 420 பீடா போடும்போது குதிரை வந்து கவ்விக்கிட்டு போனமாதிரி ஒரு பீலிங்கு

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா10:42 PM, மே 13, 2011

    Kalaignar, kondaatathil kalandhu kondeergalaa? illai, ungal nakeeran mudivu eppodhume poithadhu illai endra ungal kanippu patri , ippozhu enna solgirergal?
    Enjoy, pesaamal, nakeran-la velaikku serndu vidungal.. unalukku, aayusukku, retirement kidaiyadhu.

    Ungal nalam virumbi

    பதிலளிநீக்கு
  11. லக்கி... நான் கேள்விப்பட்டது, மறைந்த திருப்பதிசாமியின் ஆசாத் படத்தின் லைன் மற்றும் சில காட்சிகளை சுட்டிதான் தூள் எடுக்கப்பட்டதாம்! ஆனால், கிரெடிட் கொடுக்கவில்லை!!

    அதே ஆசாத் படத்தை தான் டிங்கெரிங் செய்து வேலாயுதம் எடுக்கப்பட்டு வருகிறது! இங்கும் கிரெடிட் கொடுக்கவில்லை. ஆனால், திருப்பதிசாமி குடும்பத்திற்கு ஒரு தொகை கொடுத்திருக்கிறார்கள்.

    பிரகாஷ்ராஜிடம் (ஏற்கனவே ஆசாத்தில் இடம் பெற்றிருந்தார்) ராஜா வேலாயுதத்திற்காக கதை சொல்லும்போது அப்படியே டயலாக் முதற்கொண்டு சுட்டுக் காண்பித்திருக்கிறார். சொந்த சரக்கு போல கதையடித்திருக்கிறார். எதிக்ஸ் இல்லையெனத் தோன்றியதால் டேட்ஸ் இல்லையென டிப்ளோமேட்டிக்காக மறுத்தாராம். :-)

    பதிலளிநீக்கு
  12. நீட்டான விமர்சனம்..நல்ல படம் ஆனால் இந்தப்படம் ஓடும் என எனக்கு நம்பிக்கை இல்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்

    பதிலளிநீக்கு
  13. //ஆனால் 1982ல் நடக்கும் கிராமியக் கதைக்கு நவீன இசையை ஏன்தான் இசைஞானி முயற்சித்தாரோ தெரியவில்லை.//

    இது இய‌க்குன‌ரின் பிழை.

    பாஸ்க‌ர் ச‌க்தியின் மூல‌க்க‌தை 80க‌ளில் ந‌டைபெறுவ‌து அல்ல‌, அஜித்‍ - விஜ‌ய் கால‌த்தில் ந‌டைபெறுவ‌து.

    இள‌ம்ஜோடிக‌ள் அலைக‌ள் ஓய்வ‌தில்லை ப‌ட‌ம் பார்ப்ப‌த‌ற்கும், அந்த‌ கால‌ பின்னனி சுவ‌ர்விள‌ம்ப‌ர‌ங்க‌ளுக்கும், எம்.ஜி.ஆரை ஆங்காங்கு காட்டுவ‌த‌ற்கும் இய‌க்குன‌ர் முய‌ற்சித்த‌துதான் ஏனோ தெரிய‌வில்லை.

    ம‌ற்ற‌ப‌டி பெரும்பாலான‌ காட்சிய‌மைப்புக‌ள் இன்றைய‌ கிராம‌த்தை ஒட்டித்தான் இருக்கிற‌து.

    பதிலளிநீக்கு
  14. முதல்முறையாக உங்களுக்கு பிடித்து விமர்சனம் பாசிட்டிவ் ஆக எழுதிய ஒரு படம் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை! உங்க டச் சரியில்லை :-)

    பதிலளிநீக்கு
  15. பெயரில்லா12:45 PM, மே 19, 2011

    இந்த மாதிரி புதிய முயற்சிகளுக்கு வரவேற்ப்பு கொடுத்தல் தான் தமிழ் சினிமா உருப்படும்.கதைக்காக நடிகர் இருக்க வேண்டுமே ஒழிய நடிகருக்காக கதை பண்ணுவது வேஸ்ட்.குதிரைகரரின் நடிப்பு தூள்..சிறப்பான படம் . நல்ல விமர்சனம்.

    swami.

    பதிலளிநீக்கு
  16. பெயரில்லா7:00 PM, ஜூலை 10, 2011

    மொக்கை படத்துக்கு உலக தரம் கொஞ்சம் அல்ல நிறையவே ஓவர்.

    பதிலளிநீக்கு