வாசிக்கும்போதும், பேசும்போதும் நாம் அடிக்கடி எதிர்கொள்ளும் ஒரு சொல் ‘தர்மசங்கடம்’. சங்கடம் என்கிற சொல்லுக்கான பொருள் நமக்கு புரிந்தாலும், இங்கே prefix ஆக வரும் ‘தர்ம’ என்பதின் அர்த்தம் பலருக்கும் புரிவதில்லை.
எழுத்தாளர் ஒருவரிடம் தர்மசங்கடத்துக்கு விளக்கம் கேட்டேன்.
“நாம் ஒன்றை சரியென்று நினைப்போம். சந்தர்ப்பச் சூழலால் அதையே தப்பு என்று சொல்ல வேண்டிய நிலை சில நேரங்களில் வரும். நம்மளவில் ‘தர்மம்’ என்று நினைப்பதை, நாமே மீறவேண்டிய சூழல் ஏற்படுவதைதான் ‘தர்மசங்கடம்’ என்று சொல்லுகிறோம்” என்று விளக்கம் அளித்தார். இவ்விளக்கம் ஒப்புக்கொள்ளக் கூடியதாகவே இருக்கிறது.
தர்மசங்கடத்தைப் பற்றி இப்போது ஏன் இவ்வளவு விளக்கமாக நான் ஆராய வேண்டியிருக்கிறது என்பதே எனக்கும், தலைவர் கலைஞருக்கும் கொஞ்சம் தர்மசங்கடமான விஷயம்தான். ஸ்பெக்ட்ரம்தான். வேறென்ன?
சமீபத்தில் (கனிமொழிக்காக) கூட்டப்பட்ட திமுக உயர்நிலைக் கூட்டம் முடிந்ததும் கலைஞர் செய்தியாளர்களிடம் பேசினார்.
செய்தியாளர் : சி.பி.ஐ நடத்திவரும் ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய அரசின் செயல்பாடுகள் உங்களுக்கு திருப்தியாக இருக்கிறதா, இந்தப் பிரச்சினை உங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறதா?
கலைஞர் : தர்மருக்கு பாரதத்தில் ஏற்பட்ட தர்மசங்கடம் எங்களுக்கு ஏற்படாது. அது என்ன சங்கடம் என்பதை விவரிக்க விரும்பவில்லை.
அச்சு அசலான திராவிட மணம் கலைஞரின் பதிலில் கமழ்கிறது. தமிழ்ச்சூழலில் நாத்திகராக இருக்கும் ஒருவர், எத்தகைய சூழலிலும் இதிகாசக் கிண்டல்களை கைவிட மாட்டார் என்பதற்கு கலைஞர் மிகச்சரியான எடுத்துக்காட்டு.
கலைஞர் விவரிக்க விரும்பாத ‘சங்கடம்’ என்னவென்பதை விவரிப்பதில் நமக்கு தர்மசங்கடம் எதுவுமில்லை.
பதினைந்து, பதினாறு வயதுவரை தீவிரமான என்று சொல்ல முடியாவிட்டாலும் நானும் ஆத்திகனாகவே இருந்தேன். கேரக்டர் அடிப்படையில் கிருஷ்ணனை பிடிக்கும் என்றாலும், சிவமதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் முருகர் இஷ்ட தெய்வம் (இதற்குப் பின்னால் தமிழ்க்கடவுள் என்கிற அரசியல் காரணமும் உண்டு). கல்யாண கந்தசாமி கோயிலுக்கு ரெகுலராக சென்றிருக்கிறேன். திருப்போரூர் முருகனை காண பயபக்தியோடு சைக்கிள் மிதித்திருக்கிறேன். நாத்திகனாக மனமாற்றம் அடைந்தபிறகும் கூட, யாராவது கோயிலுக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று சொன்னால் பெசண்ட் நகர் அறுபடைவீடுதான் இன்றும் பர்ஸ்ட் சாய்ஸ். செகண்ட் சாய்ஸ் வடபழனி முருகன்.
காதல் தோல்வி, +2 தோல்வியென்று அடுத்தடுத்து அடைந்த தோல்விகள் கடவுள் மீதான நம்பிக்கையை சிதைத்தது. இவ்வேளையில் தேடிப்பிடித்து வாசித்த திராவிட இயக்க இனமான வரலாறு கடவுள் எதிர்ப்பாளனாய் கட்டமைத்தது. பெரியாரின் சிந்தனைகள் மீது மையல் கொண்டு, திராவிடர் கழகத் தோழர்களோடு திரிய ஆரம்பித்தேன். தோழர்களுடனான வாதங்கள், தெருமுனைக் கூட்டங்கள் என்று வாழ்க்கை சுவாரஸ்யம் கூடி, அர்த்தம் மிகுந்ததாக மாறியது. இந்த காலக்கட்டங்களில் கேட்ட பல கதைகளில் ஒன்றுதான் ‘தர்மசங்கட’ கதை.
திராவிட இயக்கப் பெருசுகள் பலரும் ஒருமாதிரியான ’கும்ப கோணத்து குசும்பு’ பார்ட்டிகள். கேலியும், கிண்டலுமாக இதிகாசங்களையும், புராணங்களையும் அணுகுவார்கள். “அவ்ளோ இந்திரியம் கொட்டறதுக்கு, இந்திரனோட ‘அது’ என்ன மெட்ரோ வாட்டர் பைப்பா?” என்று கேள்வி எழுப்புவார்கள். இதுமாதிரி தெருமுனைக் கூட்டங்களை கோயில் வாசலில்தான் பெரும்பாலும் நடத்துவோம். எங்கள் தெருமுனை சித்தி-புத்தி வினாயகர் கோயில் வாசலில் (கோயில் அனுமதி பெற்று) சில கூட்டங்களை நடத்தியிருக்கிறோம்.
திரளாக மக்கள் கூடாவிட்டாலும், ‘என் பணி கடன் செய்து கிடப்பதே’ என்று ஃபுல் சார்ஜோடு பேசுவதுதான் திராவிடர் கழகப் பேச்சாளர்களின் ஸ்பெஷாலிட்டி. பெரியார் மாதிரியே கெட்டப்பில் இருந்த தாம்பரத்துக்காரர் ஒருவர்தான் எங்களது வழக்கமான பேச்சாளர். அவர் அப்போது சொன்ன கதைதான் தர்மசங்கட கதை.
தர்மரின் மனைவி பாஞ்சாலிக்கு, தர்மரோடு சேர்த்து ஐந்து கணவர்கள். ஏன் ஐந்து கணவர்கள் என்பதற்கு ஆபாசமான இன்னொரு கிளைக்கதை உண்டு. ஐந்து கணவர்கள் என்றாலும், கணவர்களுக்கு செய்தாகவேண்டிய ‘அந்தரங்க’ கடமைகளை செய்வதில் பாஞ்சாலி எந்தக் குறையும் வைக்கவில்லை. நாளுக்கு ஒருவர் என்கிற அடிப்படையில் இந்த விஷயத்தை பிரித்துக் கொண்டார்கள்.
அதாவது அர்ஜூனன் உள்ளே இருந்தால், அறைவாசலில் அவனுடைய செருப்பு இருக்கும். நகுலனோ, சகாதேவனோ ‘அதற்காக’ வந்தால், வாசலில் செருப்பைப் பார்த்துவிட்டு, ‘அண்ணன் உள்ளே இருக்கிறார்’ என்பதை புரிந்துகொண்டு கிளம்பிவிடுவார்கள்.
அன்றைக்கு என்ன அவசரமோ தெரியவில்லை. தர்மர் செருப்பு போடாமல் வந்துவிட்டார். ரூமுக்குள்ளும் நுழைந்துவிட்டார். கொஞ்சநேரம் கழித்து ஆசையோடு பீமரும் வந்திருக்கிறார். வாசலில் செருப்பு எதுவும் இல்லாததால், அவரும் உள்ளே நுழைந்துவிட.. அங்கே தர்மரோடு பாஞ்சாலியை எசகுபிசகான கோலத்தில் பார்த்துவிட்டாராம். ‘அம்மாதிரியான கோலத்தில் தம்பி நம்மை பார்த்துவிட்டானே’ என்று தர்மருக்கு ஏற்பட்ட சங்கடம்தான் ‘தர்ம சங்கடம்’ என்று ஆனதாம்.
தாம்பரத்துப் பேச்சாளரின் வெர்ஷன் இது. இதே வடிவில் மகாபாரதத்தில் இருக்கிறதா என்று தெரியாது. நான் வாசித்த பைகோ பிரசுரத்தின் அமர்சித்ரக் கதாவில் இந்தக் கதை இல்லை.
கலைஞர் விவரித்து சொல்ல விரும்பாத ‘தர்ம சங்கட’ கதை இதுதான்.
திராவிட இயக்கத்தாரின் கடவுள் மறுப்பு இதுமாதிரியான ஆபாசக் கதைகளாலும் கட்டமைக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இதனாலேயே கூட எதிர்த்தரப்பு வன்மமாக ஆத்திகத்தை வளர்க்க ஒரு நியாயமும் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. “அவர்கள் ஆபாசமானவர்கள்” என்கிற ஆத்திகப் பிரச்சாரம், பிராமணரல்லாத மற்ற சாதியினரிடமும் பரவலாக எடுபட்டது. தடாலடியான திராவிட கடவுள் மறுப்புப் பிரச்சாரம் 60களிலும், 70களிலும் எடுபட்டமாதிரி.. 80களிலும், 90களிலும் ஏனோ எடுபடவில்லை. மாறிவிட்ட பிரச்சார அணுகுமுறைகளை திராவிட இயக்கத்தார் கருத்தில் கொள்ளத் தவறிவிட்டது காரணமாக இருக்கலாம்.
அவர்கள் ஆரம்பத்தில் சினிமாவில் கடவுளை பரப்பினார்கள். திராவிட இயக்கத்தவர்கள் அதே சினிமாவில் கடவுளை மறுத்தார்கள். பின்னர் அவர்கள் சினிமாப் பிரச்சாரத்தை நிறுத்திக் கொண்டபோதும், இவர்கள் மட்டும் தொடர்ச்சியாக எதிர்ப்புப் பிரச்சாரத்தை நடத்திக் கொண்டே இருந்திருக்கிறார்கள். இரு கை தட்டப்படாமல் ஓசையே எழாமல் போய்விட்டது. தினமலர் மாதிரியான அச்சு ஊடகங்கள் நவீன முறையில் மதப்பிரச்சாரத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கும்போது, விடுதலை, முரசொலி வகை திராவிடப் பத்திரிகைகள் பழைய மரபு சார்ந்த பகுத்தறிவு பிரச்சார முறைகளையே தொடர்ந்துக் கொண்டிருந்தன. இப்போதுதான் விடுதலை முழித்துக்கொண்டு, சில காலமாக இணையத்துக்கே வந்திருக்கிறது.
தனிப்பட்ட முறையில் சொன்னால், இந்து மதத்தின் ஆபாசக் கதைகளை கைத்தட்டி, விசிலடித்து ரசிக்கிறேன். இதே மனநிலையில் இன்றைய வெகுஜனம் இல்லையென்று தோன்றுகிறது. கடவுளை எதிர்க்க, மதத்தை மறுக்க அவர்களுக்கு வேறு புதிய காரணங்கள், நவீனப் பிரச்சாரங்கள் தேவைப்படுகிறது.
அதுவும் இந்தியச் சூழலில் நாத்திகப் பிரச்சாரம் என்பது கத்தி மேல் நடப்பதற்கு ஒப்பானதாகும். இங்கே சிறுபான்மையினருக்கு அணுசரனையாக இருந்தாக வேண்டிய கட்டாயத்தில், பெரும்பான்மை மதத்தை குறிவைத்து அடிக்க வேண்டிய நிலை இருக்கிறது. துரதிருஷ்டவசமாக பகுத்தறிவாளர்கள் அணுசரனையாக நடந்து கொள்ளும் சிறுபான்மை மதங்கள் கட்டுப்பெட்டித் தனத்தோடும், பெரும்பான்மை மதமான இந்துமதம் ஓரளவு ஜனநாயகப் பூர்வமானதாகவும் இருந்துத் தொலைக்கிறது. எந்த ஒரு மாற்றத்தையும் உடனே ஏற்றுக்கொள்ளும் பகாசுரத் தன்மையோடு இந்துமதம் வாழுகிறது. இந்த கருத்தை எனக்கு சொல்லப் பிடிக்காவிட்டாலும், இது உண்மை என்பதை ஜீரணித்தே ஆகவேண்டும்.
இந்தியாவின் சுமார் 56 மதங்களின் கூட்டமைப்புதான் இந்து மதம். இந்த 56 மதங்களில் நாத்திக மதமும் கூட உண்டு. கடவுளை மறுக்கும் முனிவர்கள் கூட இந்த மதத்தில் இருந்திருக்கிறார்கள். சார்வாஹ மஹரிஷி என்று மகாபாரதத்தில் ஒரு பாத்திரம் உண்டு. இந்தியாவில் நாத்திக மதத்தை ஸ்தாபித்தவர் இவர். சாமியார்களிடம் தொடர்ச்சியாக பகுத்தறிக் கேள்விகளை ஆபிரகாம் கோவூர் எழுப்பி வந்த மாதிரி, கிருஷ்ணனை நிற்கவைத்து கேள்வி கேட்டவர் சார்வாஹ மஹரிஷி.
‘யாவே த்வயக்ஷகம் ஜீவேத் ருணம் க்ருத்வா | க்ருதனி பேதஹ: பஸ்மி பூதஸ்ய தேஹ | புனராஹமன் குதஹ’ என்றொரு சுலோகம் கூட உண்டு. ‘மரணித்த உடம்பு பஸ்பமான பின்பு, சொர்க்கம் ஏது? மேலுலகம் எல்லாம் ஏமாற்று வேலை. வாழும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்’ என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.
இவ்வாறாக நாத்திகத்தையும் அனுமதிக்கும் மதமாக இந்து மதம் இருக்கிறது (பவுத்தமும் இப்படியான ஒரு சலுகையை வழங்குகிறது என்று நினைக்கிறேன்). மற்ற மதங்களில் நாத்திகர்களுக்கு இடமிருப்பதாக தெரியவில்லை. மதத்தை/கடவுளை மறுப்பவனை இந்து மதம் மதவிலக்கு செய்வதில்லை. சீர்த்திருத்தவாதிகளோடு உரையாட இம்மதம் எப்போதும் தயாரானதாகவே இருந்திருக்கிறது. மதமற்றவனையும் தன் மதமாக அறிவித்துக் கொள்கிறது. மதமற்ற இந்திய பழங்குடிகள் அனைவரும் ‘இந்து’க்கள் என்கிற அயோக்கியத்தமான பிரிவு இந்திய சட்டத்திலேயே இருக்கிறது.
பத்திரிகைகளில் கட்டுரை எழுதுதல், பொதுக்கூட்டங்களில் இதிகாசங்களில் இருந்து ஆபாசக் கதைகளை எடுத்துச் சொல்லுதல், பேட்டிகளில் கலைஞர் செய்வது மாதிரியான நையாண்டி போன்ற அந்தக்கால பகுத்தறிவுப் பிரச்சாரங்கள் தற்காலத்தில் எந்த அளவுக்கு எடுபடும் என்று தெரியவில்லை. தூர்தர்ஷன் காலத்திலேயே இராமாயணம்/மகாபாரதம் ஒளிபரப்பானபோது ஒரு மறுமலர்ச்சியை இந்து மதம் இந்தியா முழுவதும் பெற்றதை, நானே கண்கூடாக உணர்ந்திருக்கிறேன்.
துரதிருஷ்டவசமாக இதுமாதிரியான நேர்மறை நவீனப் பிரச்சாரத்தை இன்னமும் பகுத்தறிவாளர்கள் கைகொண்டதாக தெரியவில்லை. கலைஞரின் குடும்பத்தார் நடத்தும் தொலைக்காட்சிகளில் கூட இராமாயணம் ஒளிபரப்பாகிறது. மூடநம்பிக்கையை தூண்டும் தொடர்கள் இடம்பெறுகின்றன. கலைஞர் ஸ்பெக்ட்ரம் பிரச்சினைக்காக சங்கடப்படுகிறாரோ இல்லையோ, திராவிடப் பகுத்தறிவுச் சிந்தனைகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு சரியாக கொண்டு சேர்க்க முடியாத இந்த சூழ்நிலைக்காக, பகுத்தறிவு இயக்கங்களுக்கு தலைமை தாங்குபவர் என்கிற அடிப்படையில் நிச்சயம் தர்மசங்கடப்பட்டே ஆகவேண்டும். சன் தொலைக்காட்சி வகையறாக்களில் இடம்பெறும் அபத்தமான மூடநம்பிக்கை நிகழ்ச்சிகளுக்கு தர்மசங்கடம் கொண்டாக வேண்டும்.
பகுத்தறிவாளர்கள் என்று அறிவித்துக் கொண்டோரும் அவரோடு சேர்த்து தர்மசங்கடப்பட்டு தொலைவோம். வேறென்ன செய்வது?