23 மே, 2011

திராவிட இயக்கத்தின் என்சைக்ளோபீடியா

தந்தை பெரியாரின் அணுக்கமான தொண்டராக இருந்தவர் குத்தூசி குருசாமி. இவரது அந்நாளைய கட்டுரைகளுக்கு அரசு அபராதம் விதிக்கும். விதிக்கப்பட்ட அபராதங்களை வாசகர்களிடமே வசூலித்து கட்டுவார். அபராதம் விதிக்கப்படும் கட்டுரைகளையே குத்தூசியார் தரவேண்டுமென்று மேலும், மேலும் வாசகர்கள் வசூல் மழை பொழிவார்கள்.

அவரது எழுத்துப் பாணி அச்சுஅசலாக நாத்திகச் செம்மல் இரா.தியாகராசன் அவர்களுக்கும் இருந்ததால், சின்னக்குத்தூசியார் என்கிற பெயரே இவருக்கு நிலைபெற்றது. படிக்கும் காலத்திலேயே திராவிட இயக்க சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டவர். ஆசிரியராக தனது வாழ்வினை தொடங்கியவர், பின்னர் பத்திரிகைத்துறையிலும் முத்திரை பதித்தார்.

கலைஞரை எதிர்த்து கட்சி கண்ட ஈ.வெ.கி.சம்பத்தின் நெருங்கிய நண்பர் இவர் என்றால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். தமிழ் தேசியக்கட்சி காங்கிரஸில் ஐக்கியமானபோது, காமராசரின் நவசக்தியில் சின்னக்குத்தூசியார் காரசாரமான தலையங்கங்கங்களை தீட்டிவந்தார். எத்தனையோ பத்திரிகைகளை இவரது எழுத்து அலங்கரித்து வந்தாலும், என்றுமே எதிலுமே கொள்கை சமரசம் செய்துக் கொண்டதேயில்லை.

திராவிட இயக்கத்தின் என்சைக்ளோபீடியாவாக வாழ்ந்துவந்த சின்னக்குத்தூசியார் நேற்றுடன் அழியாப்புகழ் பெற்று இயற்கையோடு கலந்திருக்கிறார். தமிழ் பத்திரிகையாளர்களுக்கு திராவிட இயக்கம் குறித்த எந்த ஐயம் ஏற்பட்டாலும், சின்னக்குத்தூசியாரை தொடர்பு கொள்ளலாம். இதைப்பற்றி அவருக்கு தெரியாததே இல்லை எனலாம். பகுத்தறிவு, சுயமரியாதை ஆகிய கொள்கைகளுக்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்தார். காலமெல்லாம் பார்ப்பனீயத்தை தீரத்தோடு எதிர்த்து வாழ்ந்த சின்னக்குத்தூசியார் பிறப்பால் பார்ப்பனர் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம்.

அவரது இறுதிக்கால வாழ்வு பெரும்பாலும் நக்கீரன் ஆசிரியர் அண்ணாச்சியையே சார்ந்திருந்திருக்கிறது. தனக்கென குடும்பம் ஏற்படுத்திக் கொள்ளாத சின்னக்குத்தூசியாருக்கு சொந்த மகனாகவே அண்ணாச்சி செயல்பட்டிருக்கிறார். அவரது பூவுடல் கூட பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது அண்ணாச்சியின் நக்கீரன் அலுவலகத்தில்தான். அந்திமக் காரியங்களையும் அண்ணாச்சியே முன்நின்று செய்திருக்கிறார்.

“கலைஞர் என்ன செய்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்துப் பேசுவார்” என்று பா.ராகவன் அவரது அஞ்சலிக்குறிப்பில் எழுதியிருக்கிறார். முழுக்க முழுக்க இக்கருத்தில் இருந்து முரண்படுகிறேன்.

1992 பாபர் மசூடி இடிப்புக்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக முரசொலியில் எதிர்த்து எழுதிவந்தார் சின்னக்குத்தூசியார். 1998 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க., நான்கு எம்.பி.க்களோடு தமிழகத்தில் வலுவாக காலூன்றியது. அப்போதைய அரசியல் சூழலில் திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய அரசியலுக்காக பா.ஜ.க.வோடு சமரசம் செய்து, கூட்டணி வைத்துக்கொள்ளும் நிலையிலும் இருந்தது.

சின்னக்குத்தூசியாரை அழைத்த கலைஞர், இனி பா.ஜ.க. எதிர்ப்பு விஷயத்தில் கொஞ்சம் அடக்கி வாசிக்கும்படி கேட்டுக் கொண்டார். அரசியல் கூட்டணிக்காக கொள்கைக்கு எதிராக செயல்படுவதில் தனக்கு விருப்பமில்லை என்று இவர் மறுப்பு தெரிவிக்க, கலைஞரின் குரலில் கடுமை கூடியது.

“உங்களுக்கு மட்டும்தான் தலையங்கம் எழுத வரும்னு இல்லே. நானே நல்லா எழுதுவேன். தெரியுமில்லே?”

“நான் எழுதறதைவிட நீங்க நல்லா எழுதுவீங்க, நிறைய பேர் படிப்பாங்கன்னும் எனக்கு தெரியும்” என்று சொல்லிவிட்டு, முரசொலியில் இருந்து மூட்டை கட்டியவர் சின்னக்குத்தூசியார். கழகம், பாஜகவோடு கூட்டணியில் இருந்தவரை திமுகவோடு, தனக்கு பெரிய இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டார்.

கொள்கைக்காக வாழ்வை தியாகம் செய்த இந்த மகத்தானவரை, திராவிட இயக்கத்தவன் ஒவ்வொருவனும் தன் நெஞ்சில் ஏற்றி வைத்து சுமக்க வேண்டும்.

21 மே, 2011

துரோகிகளும், தியாகிகளும்

1991 மே 22. அதிகாலை. ராஜீவ் கொல்லப்பட்ட செய்தி கிடைத்தது. பள்ளி விடுமுறை. குட்டிப்பையன் நான். மேல்சட்டையுடன், ஜட்டியை விட மேலான ஒரு டவுசர் மட்டுமே அணிந்திருந்த நான் ’ஆபத்து’ புரியாமல் குதூகலித்தேன். தேர்தல் நேரம். டீக்கடை வாசலில் அதிமுக-காங்கிரஸார் குவிந்து சோகமாகவும், விஷமமாகவும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களை கண்டதுமே எனக்கு ஒருமாதிரியான வெறி. தூரத்தில் அவர்களைப் பார்த்து மோதிர விரலை நீட்டி, “போட்டுட்டோம் பார்த்தீங்கள்லே” என்று வெறுப்பேற்றி விட்டு வீட்டுக்கு ஓடினேன்.

பின் தொடர்ந்து ஓடி வந்த தொண்டர்களும், குண்டர்களும் வீட்டை சூறையாடி விட்டார்கள். எனது பெரியப்பாவின் மண்டை உடைந்தது. நல்ல வேளையாக எவருடைய உயிருக்கும் சேதாரமில்லை. தொடர்ந்த கலவரத்தால் எங்கள் ஊரிலிருந்த திமுகவினர் உடைமைகள் பறிபோயின. உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல். திமுகவினர் அதிகம் பேர் இருந்த பெரிய காய்கறி மார்க்கெட் ஒன்று எரிக்கப்பட்டது. பிரச்சாரத்துக்கு வைத்திருந்த அலங்கார வளைவுகள் தீவைக்கப்பட்டன. சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன.

இது என்னுடைய சொந்த அனுபவம். தமிழகம் முழுக்க இதுதான் நிலைமை.

வட மாவட்டம் ஒன்றில் கட்சிக்கொடி கம்பத்தை வெட்ட வந்தவர்களிடம் இருந்து, கம்பத்தை காப்பாற்ற கட்டிப்பிடித்த தொண்டரின் கை வெட்டப்பட்டது. இதுமாதிரி நிறைய. எம்.ஜி.ஆர் மரணத்தின் போது ஏற்பட்ட வன்முறையை விடவும், மிக அதிகமான கொடூரமான வன்முறையை திமுகவினர் சந்தித்த தருணம் அது.

ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் என்பதாலேயே ஒரே நாளில் கொலைகாரர்கள் ஆனோம். கொலைப்பழியின் காரணமாக எங்கள் இயக்கம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு அடுத்து வந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. திரும்பவும் ஐந்து ஆண்டுகள் கழிந்து ஆட்சிக்கு வந்தும் கொலைப்பழி தீரவில்லை. ஜெயின் கமிஷன் நெருப்பாற்றில் நீந்தி சமீபத்தில்தான் கரை சேர்ந்தோம்.

ஆனாலும் நாங்கள் துரோகிகள். 2009 மே மாதத்துக்குப் பிறகு அரசியல் பேச வந்து விட்டவர்கள் எல்லாம் தியாகிகள்.

இருபதாண்டுகளுக்கு முன்பு இதே நாளில், அதிமுக மற்றும் காங்கிரஸ் குண்டர்களால் வெறித்தனமாக தாக்கப்பட்டு உயிரையும், உடமையையும் இழந்த கழகத் தோழர்களுக்கு வீரவணக்கம்!

20 மே, 2011

ஸ்ரீராமருக்கே ஜெயம்!

புண்ணிய பூமியாம் பாரதத்தின் 110 கோடி ஹிந்து மகாஜனங்களுக்கு இருக்கும் மத அபிமானமும், சூடு, சொரணையும், அம்மாவின் தேசமாம் ஸ்ரீ தமிழகத்தின் ஏழு கோடி ஹிந்துக்களும் கூட இருக்கிறது என்பதை தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகிறது. குஜராத்தில் நடந்து வரும் நல்லாட்சியைப் போன்றே தமிழகத்திலும் உலகின் ஒரே ஒப்பற்ற தங்கத் தாரகை அம்மாவின் ஆட்சி மலர்ந்திருக்கிறது. ராவணன் ஆட்சி ஒழிந்திருக்கிறது. ராமர் ஆட்சி விடிந்திருக்கிறது.

நடந்தது தேர்தல் அல்ல, இராமாயணம். புரட்சித்தலைவி அம்மா ஸ்ரீராமர். சின்னம்மா ஸ்ரீலட்சுமணர். துக்ளக் ஸ்ரீமான் ராமசாமி ஆஞ்சநேயர். திருக்குவளை தீயசக்தி ராவணன். அண்டோமேனியா சூர்ப்பனகை. இருட்டுக்கடை அல்வா புகழ் ஆற்காடு கும்பகர்ணன். இப்படியாக ஏகப்பட்ட ஒப்புமைகளை இராமாயணத்துக்கும், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கும் நாம் ஒப்பிட்டு பார்க்க இயலும்.

தர்மத்தின் வாழ்வுதனை 2006ல் சூது வென்றாலும், 2011ல் தர்மமே வெல்லும் என்பது உறுதியாயிற்று. குடிகார திம்மியாக ஆரம்பத்தில் அறியப்பட்டு, அம்மாவால் மனம் மாற்றமடைந்த முற்போக்கு திராவிட திம்மியும் கூட, இராமர் பாலம் கட்ட ஸ்ரீ அணில் உதவியது போல அம்மாவுக்கு கொஞ்சமாக உதவியது குறிப்பிடத்தக்கது. அதற்கு பிரதிபலனாக அந்த குடிகார கட்சிக்கு ஊருக்கு ஒரு டாஸ்மாக் பார் லைசென்ஸை அம்மா கொடுத்திருக்கலாம். அதுவே அதிகம். ஆனாலும் பரந்த மனதோடு, அருள்பாலித்து 29 எம்.எல்.ஏ.க்களை வழங்கி கவுரவித்திருக்கிறார். இனியாவது இவர்கள் திராவிடம், முற்போக்கு போன்ற பழம் பஞ்சாங்க வார்த்தைகளை மூட்டை கட்டிவிட்டு அ ஃபார் அம்மா, சி ஃபார் சின்னம்மா, மோ ஃபார் மோடி, ஹி ஃபார் ஹிந்து என்று புது பாடம் படித்து, வழி தவறிய ஆடுகளாய் அலையாமல் வாழ முற்பட வேண்டும்.

அம்மாவின் புனித பதவியேற்பு விழாவுக்கு ஸ்ரீமான் மோடி, ஸ்ரீமான் ராமசாமி, ஸ்ரீமான் பொன்.ராதாகிருஷ்ணன் என்று நம்மவாளாக திரளானோர் வந்திருந்து வாழ்த்து தெரிவித்தது கண்கொள்ளாக் காட்சி. அம்மா பதவியேற்க இருக்கிறார் என்பதை அறிந்து சங்கிலித் திருடர்கள், அண்டோமேனியா கட்சியினரின் அராஜக ஆட்சி நடக்கும் ஆந்திராவுக்கு ஓடிப் போய்விட்டார்கள் என்கிற பேருண்மையை அம்மாவே பத்திரிகை நண்பர்களிடம் வெளிப்படுத்தினார். அம்மாவுக்கே தெரியாத இன்னொரு உண்மையையும் நாம் இங்கே சொல்லியாக வேண்டியிருக்கிறது. தகதகக்கும் ஆதிபராசக்தியாம் அம்மாவின் அருளாட்சி தரும் வெப்பம் சங்கிலித் திருடர்களுக்கு மட்டுமல்ல, சட்னித் திருடர்களையும் ஓட ஓட விரட்டும். அண்டோமேனியாவின் ஆட்சி அண்டை மாநிலமான கேரளாவிலும் ஏற்பட்டிருப்பதால், இனி தமிழகத்தின் தீயசக்திகள் ஆந்திரா மட்டுமின்றி, கேரளாவுக்கும் ஓட்டம் பிடிக்கும்.

ஆயிரத்து இருநூறு கோடி ரூபாயை அனாவசியமாக கொட்டி திருக்குவளை தீயசக்தி கம்பெனியினர், மவுண்ட்ரோட்டில் கட்டிய இண்டியன் ஆயில் எண்ணெய் டேங்கை அம்மா புறக்கணித்திருக்கிறார். பாராட்டுகிறோம். அம்மா, கோட்டையே என் கோயில் என்று முழங்கியிருக்கிறார். சிலிர்த்துக் கொள்கிறோம். அகிலம் ஆளும் கருமாரியான அம்மாவுக்கு இங்கே ஓர் கோரிக்கையை முன்வைக்க கடமைப்பட்டிருக்கிறோம். மிஷினரிகள் செய்த சதி காரணமாக நமது அ.இ.அ.தி.மு.கழகத்துக்கு சொந்தமான கோட்டைக்கு புனித ஜார்ஜ்என்று அண்டோமேனியா வகையறாக்களின் மதப்பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. அப்பெயரை நீக்கி ஸ்ரீராமர் பெயரையோ, அல்லது ஸ்ரீராமருக்கு ஒப்பான சக்தியை பெற்றிருக்கும் புரட்சித்தலைவி அம்மா பெயரையோ கோட்டைக்கு சூட்ட வேண்டும். புனித புரட்சித்தலைவி அம்மா கோட்டைஎன்று பெயர் வைக்கப் படுமேயானால், நம் சந்ததி மட்டுமின்றி, நம் ஈரேழு சந்ததியும் அம்மா புகழ் பாடும். தீயசக்திக்கு இகழ் கூடும்.

திருக்குவளை தீயசக்தி மட்டுமே தீயது என்று தமிழகத்தின் ஹிந்துக்கள் இதுவரை தவறாக நினைத்திருந்தோம். பாண்டிச்சேரியில் ஒரு புதிய தீயசக்தி உருவாகி, அது நம் அம்மாவையே ஏமாற்றி ஆட்சியையும் பிடித்திருக்கிறது என்பதை அம்மா நேற்றைய அறிக்கையில் சுட்டிக் காட்டியிருக்கிறார். தமிழகத்து தீயசக்தியை அம்மா எப்படி வதம் செய்தாரோ, அதுபோலவே 2016 தேர்தலில் பாண்டிச்சேரி தீயசக்தியையும் வதம் செய்வார். அதற்காக தமிழகத்தின் ஏழு கோடி ஹிந்து பெருமக்களும் அம்மா பின் அணிவகுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

எது எப்படியோ, வாழும் ஸ்ரீராமராய் தமிழகத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் அம்மாவுக்கே இறுதி ஜெயம் என்பது உறுதியாகி இருக்கிறது. இந்த ஜெயத்துக்கு பின்னால் ஜே ஜே என்று ஜால்ரா அடித்து பஜனை பாடிய தேர்தல் கமிஷனுக்கும், இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்த நேர்மையான அதிகாரிகளான பிரவீண்குமார், சகாயம் போன்றவர்களுக்கும் நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

வாழ்க அம்மா. வீழ்க திராவிட திம்மிகள்.


பின்குறிப்பு : இந்த பதிவுக்காக அம்மா பெயரிட்டு கூகிளில் படம் தேடினோம். கடந்த ஆட்சிக்கால தீய்சக்திகள் கூகிளில் ஏதோ தில்லுமுல்லு செய்து, அம்மா பெயரையிட்டு படம் தேடினால் ஆபாசப் படங்கள் நிறைய வருவதைப் போல செட்டிங்க்ஸ் செய்திருக்கிறார்கள். இதற்காக அமெரிக்க கணினி வல்லுனர்கள் மதுரை ரவுடிகளால் தொலைபேசியில் மிரட்டப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். ஹிந்து தர்மத்தில் நம்பிக்கை கொண்ட மென்பொருள் வல்லுனர்கள் இதற்கு ஏதேனும் பரிகாரம் செய்தால் தேவலை. அம்மா பெயரிட்டு படங்களை தேடினால் 1991க்குப் பின்னான அம்மா படங்கள் மட்டுமே கிடைக்குமாறு செய்யவேண்டும் என்று கூகிள், யாஹூ நிறுவனங்களை கேட்டுக் கொள்கிறேன்.

18 மே, 2011

ஹீரோ!

இந்த கட்டுரையை எழுதி மிகச்சரியாக இன்றோடு ஈராண்டு ஆகிறது. வெட்டுக்காயத்தோடு தொலைக்காட்சிகளில் அன்று காட்டப்பட்ட முகம் பிரபாகரனாக இருக்காது என்று திடமாக நம்பினேன். இப்போதும் நம்புகிறேன். ஆனால் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஈராண்டில் சிதைந்தே வந்திருக்கிறது. குறிப்பாக கடந்த 2009 நவம்பர் 27 வரை அவர் உயிரோடிருப்பதாக பெருத்த நம்பிக்கையிலேயே இருந்தேன். அவர் மீதும், அவர் கட்டமைத்த இயக்கத்தின் மீதும் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். அவற்றில் பலவும் ஏற்றுக்கொள்ளத்தக்கவையும் கூட. ஆயினும் அவர்மீதான 'ஹீரோ ஒர்ஷிப்' எனக்கு எப்போதும் குறைந்ததேயில்லை. அவர் உயிரோடு இருந்தாலும், இல்லாவிட்டாலும் என்றும் வீரவணக்கத்துக்கு உரித்தானவரே. இதுவரை உலகம் காணா ஒப்பற்ற மாவீரன் எங்கள் பிரபாகரனுக்கு வீரவணக்கம்!


எம்.ஜி.ஆரை என்றிலிருந்து பிடித்தது, கமல்ஹாசனை எப்போதிலிருந்துப் பிடித்தது என்பதெல்லாம் நினைவில் இல்லாததைப் போலவே பிரபாகரனை எப்போதிலிருந்து பிடித்தது என்பதும் நினைவில்லை. நினைவு தெரிந்தபோது என் வீட்டு வரவேற்பரையில் இருந்தது மூவரின் படங்கள். அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன். ஒருமுறை கூட்டுறவு வங்கி ஒன்றில் அப்பா கடனுக்கு முயற்சித்திருந்தார். வீட்டுக்கு வெரிஃபிகேஷனுக்கு வந்த வங்கி அதிகாரி பிரபாகரன் படமெல்லாம் இருக்கிறது என்று கூறி கடன் தர மறுத்த நகைச்சுவையும் நடந்தது.

மூன்றாவதோ, நான்காவதோ படித்துக் கொண்டிருந்தபோது கோடை விடுமுறைக்குப் பாட்டி வீட்டுக்குப் போயிருந்தேன். நாளிதழ்களை சத்தம் போட்டு படித்து தமிழ் கற்றுக் கொண்டிருந்த காலம் அது. ஒரு தேசியத் தமிழ் நாளிதழ் செய்திகளை உரக்கப் படித்துக் கொண்டிருந்தேன். அந்த வழியாக நடந்து வந்த மாமா பளாரென்று அறைந்தார். அந்த மாமா தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். ஏன் அடித்தார் என்று தெரியாமலேயே அழுதுக் கொண்டிருந்தபோது தாத்தாவிடம் சொன்னார். “பிரபாகரனைப் பத்தி தப்புத்தப்பா நியூஸ் போட்டிருக்கான். அதையும் இவன் சத்தம் போட்டு படிச்சுக்கிட்டிருக்கான்”. எண்பதுகளின் இறுதியில் தமிழகம் இப்படித்தான் இருந்தது. பிரபாகரன் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர்.

நேருமாமா மாதிரி எங்கள் குடும்பத்தில் ‘பிரபாகரன் மாமா’. ஆந்திர நண்பன் ஒருவன் எனக்கு அப்போது உண்டு. சிரஞ்சீவி படம் போட்ட தெலுங்குப் பத்திரிகைகளை காட்டி, எங்க மாமா போட்டோ வந்திருக்கு பாரு என்று காட்டுவான். தெலுங்குக் குடும்பங்களில் பெண்களுக்கு சிரஞ்சீவி ’அண்ணகாரு’. எனவே குழந்தைகளுக்கு ‘மாமகாரு’ என்று சொல்லி வளர்ப்பார்கள். நானும் பெருமையாக பிரபாகரன் படங்கள் வந்தப் பத்திரிகைகளை காட்டி, “எங்க மாமா போட்டோ உங்க மாமா போட்டோவை விட நிறைய புக்லே, பேப்பருலே வந்திருக்கு. உங்க மாமா சினிமாவில் தான் சண்டை போடுவாரு. எங்க மாமா நெஜமாவே சண்டை போடுவாரு” என்று சொல்லி வெறுப்பேற்றி இருக்கிறேன். உண்மையில் பிரபாகரன் எனக்கு மாமன்முறை உறவினர் என்றே அப்போது தீவிரமாக நம்பிவந்தேன்.

தீபாவளிக்கு வாங்கித்தரப்படும் துப்பாக்கிக்கு பெயர் பிரபாகரன் துப்பாக்கி. போலிஸ் - திருடன் விளையாட்டு மாதிரி பிரபாகரன் - ஜெயவர்த்தனே விளையாட்டு. ரோல் கேப் ஃப்ரீ என்று ஆஃபர் கொடுத்தால் ஜெயவர்த்தனேவாக விளையாட எவனாவது விஷயம் தெரியாத பயல் மாட்டுவான். நாம் சுட்டுக்கிட்டே இருக்கலாம், அவன் செத்துக்கிட்டே இருப்பான்.

சென்னையின் கானா பாடகர்கள் பிரபாகரனை பாட்டுடைத் தலைவனாக்கி பாடுவார்கள். பிரபாகரனின் வீரதீர சாகசங்கள் போற்றப்பட்டும், ஈழத்தமிழர் அவலமும் உருக்கமாகப் பாடப்படும். பிரபாகரன் பெயர் பாடகரால் உச்சரிக்கப்படும் போதெல்லாம் விசில் சத்தம் வானத்தை எட்டும்.

குழந்தைப் பருவத்தில் இருந்து வளர்ந்து நன்கு விவரம் தெரியும் வயதுக்குள் நுழைந்தபோது துன்பியல் சம்பவமெல்லாம் நடந்து முடிந்து விட்டிருந்தது. சூழலே வேறுமாதிரியாகி விட்டது. பள்ளியிலோ, பொதுவிடங்களிலோ பிரபாகரன் பெயரை சொன்னாலே ஒருமாதிரி பார்க்க ஆரம்பித்தார்கள். உள்ளுக்குள் பதிந்துவிட்ட அந்த கதாநாயகப் பிம்பத்தை யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைக்க வேண்டியதாயிற்று.

அந்தக் காலத்திலேயே பத்திரிகைகளில் எழுதுவார்கள். பிரபாகரன் மரணம், பிரபாகரன் ஆப்பிரிக்காவுக்கு தப்பித்து ஓட்டம், என்று விதவிதமாக யோசித்து எழுதுவான்கள் மடப்பயல்கள். இப்போது போலெல்லாம் உடனடியாக அது உண்மையா, பொய்யாவென்றெல்லாம் தெரியாது. உண்மை ஒருநாளில் வெளிவரலாம். ஒருவாரம் கூட ஆகலாம். அதுவரை மனம் படபடவென்று அடித்துக் கொள்ளும். தமிழ்நாட்டில் கலைஞருக்குப் பிறகு வதந்திகளால் அதிகமுறை சாகடிக்கப்பட்டவர் பிரபாகரன் ஒருவராகத்தான் இருக்கும். என் தனிப்பட்ட விருப்பம் என்னவென்றால் நேதாஜி மாதிரி நம் மாவீரனின் முடிவும் உலகுக்கு தெரியாததாக அமையவேண்டும்.

தலைவர் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். கொலைப்பழி இருக்கலாம். குற்றச்சாட்டுகள் இருக்கலாம். அதையெல்லாம் தாண்டிதான் அவரை நேசிக்கிறேன். அவரை நேசிக்க எந்த சித்தாந்தமோ, இன உணர்வோ, மொழிப்பாசமோ எனக்குத் தேவைப்படவில்லை. அவர் ஒரு ஹீரோ என்பது எனக்கு பசுமரத்தாணியாய் சிந்தனையில் ஓங்கி அறையப்பட்டுவிட்ட விஷயம். அவர் ஹீரோவாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது, வீரத்தைக் கொடுக்கிறது.

இந்த நேசத்துக்கெல்லாம் அவர் உரியவர்தான். இதுவரை உலகில் தோன்றிய மாவீரர்களில் மிகச்சிறந்தவராய் ராஜேந்திரச் சோழனை நினைத்திருந்தேன். மாவீரன் பிரபாகரன் ராஜேந்திரச்சோழனை மிஞ்சிவிட்டார். நெப்போலியன், அலெக்சாண்டர், செங்கிஸ்கான் என்று இதுவரை உலகம் கண்ட எந்த மாவீரனுக்கும் சளைத்தவரல்ல எங்கள் பிரபாகரன். மற்றவர்கள் எல்லாம் ஓரிரு நாடுகளையோ, நான்கைந்து மன்னர்களையோ வென்றவர்கள். இலங்கை மட்டுமன்றி அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரிட்டன் என்று உலகையே எதிர்த்து கால்நூற்றாண்டுக்கும் மேலாக தினவோடு, திடமோடு போராடிய வரலாறு உலகிலேயே மாவீரன் பிரபாகரனுக்கு மட்டும் தான் உண்டு. இதுவரை உலகம் காணாத ஒப்பற்ற மாவீரன் எங்கள் பிரபாகரன் தானென்று தமிழினம் மார்நிமிர்த்து சொல்லிக் கொள்ளலாம்.

வதந்திகள் சாகடிக்கலாம். வரலாறு வாழவைக்கும்!

17 மே, 2011

ஏலகிரி

கோடைக்காலம் வந்தாலே கசகசவென வெம்மை. எரிச்சலில் இரத்த அழுத்தம் எக்குத்தப்பாக எகிறுகிறது. யாரைப் பார்த்தாலும் சீறிவிழத் தோன்றுகிறது. வாண்டுகளுக்கு வேறு விடுமுறை. சொல்லவும் வேண்டுமா வீடு ரெண்டு ஆவதை. போதாக்குறைக்கு பாழாய்ப்போன மின்வெட்டு. விசிறி விசிறி விரல்களில் வீக்கம்.

இந்தமாதிரியான உளவியல்-உடலியல் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டுமானால், ‘சில்’லென்று நாலு நாளைக்கு குடும்பத்தோடு ஊட்டிக்குப் போய்வந்தால் நன்றாகதான் இருக்கும். உடலையும், மனதையும் ஃப்ரெஷ்ஷாக ரீ-சார்ஜ் செய்துக் கொள்ளலாம். ஆனால் செலவு எக்குத்தப்பாக எகிறுமே என்று கவலை கொள்கிற மிடில்க்ளாஸ் பட்ஜெட் பத்மநாபன் நீங்கள் என்றால்..?

கவலைப்படாதீர்கள் சார். உங்களை வரவேற்க மலைகளின் இளவரசி காத்திருக்கிறாள். பொன்னை வைக்கிற இடத்தில் பூவை வைப்பது மாதிரி, ஊட்டிக்குப் பதிலாக ஏலகிரி. செலவும் குறைவு. குடும்பத்துக்கும் குதூகலம். உங்களுக்கும் வழக்கமான வேலைகளிலிருந்து தற்காலிக விடுமுறை.

வேலூரில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில், திருப்பத்தூர் நெடுஞ்சாலை வழியாக பயணித்தால் பொன்னேரி என்று ஒரு ஊர் வரும். இங்கிருந்து இடதுப்புறமாக பிரிந்துச் செல்லும் சாலையில் பதினைந்து கிலோ மீட்டர் மலைப்பாதையில் பயணித்தால் ‘குட்டி ஊட்டி’க்கு போய்ச்சேரலாம். திருப்பத்தூரில் இருந்து பொன்னேரிக்கு பத்து கிலோ மீட்டர் தூரம்தான். ரயில் மார்க்கமாக வருபவர்கள் ஜோலார்பேட்டையில் இருந்து ஏலகிரிக்கு பயணிக்கலாம். சென்னை கோயம்பேடு பேருந்துநிலையத்தில் இருந்து தினமும் காலை 6.10 மணிக்கு ஒரு பேருந்து ஏலகிரிக்கு நேரிடையாக கிளம்புகிறது.

பொன்னேரியில் இருந்து ஏலகிரிக்கு செல்லும் மலைப்பாதை, மலைப்பாம்பின் உடலை ஒத்தது. வளைந்து நெளிந்து செல்லும் பாதையில் மொத்தம் பதினான்கு கொண்டை ஊசி வளவுகள். ஒவ்வொரு வளைவுக்கும் சூட்டப்பட்டிருக்கும் பெயர்களில் தமிழ் கமகமக்கிறது. பாவேந்தர், பாரதியார், திருவள்ளுவர், இளங்கோ, கம்பர் என்று தமிழ் கவிஞர்களின் பெயரும், கடையேழு வள்ளல்களின் பெயரும் ஒவ்வொரு கொண்டையூசி வளைவையும் சிறப்பு செய்கிறது.

வளைவுகளில் வாகனம் திரும்பும்போதெல்லாம் த்ரில்லிங்கான உணர்வு நிச்சயம். சன்னல் வழியாக கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும்போது லேசாக வயிற்றையே கலக்கவே செய்கிறது. 1960ஆம் ஆண்டில் தொடங்கி 64ஆம் ஆண்டு வரையிலான நான்கு ஆண்டுகளில் இந்த 15 கி.மீ சாலை போடப்பட்டிருக்கிறது. இந்த மலைச்சாலையை நெடுஞ்சாலைத்துறை நன்றாகவே பராமரிக்கிறது என்பதால் கார், பைக் வாகனங்களிலும் அச்சமின்றி செல்லலாம்.

மலைச்சரிவுகளை கண்டுகளிக்க ஆங்காங்கே பாதையில், தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் பார்வை மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த பார்வை மையங்களில் இருந்து அந்திநேரத்தில் கதிரவன் மறைவதை காண்பது அலாதியான அனுபவம். இடையிடையே குரங்குக் கூட்டங்களின் சேஷ்டைகள் வேறு ஆனந்தத் தொல்லை.

பதிமூன்றாவது வளைவில் திருப்பத்தூர் வனச்சரகத்தால் ஒரு தொலைநோக்கி மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கே இயங்குவது ஒரு சக்திவாய்ந்த தொலைநோக்கி. பல கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இடங்களை சுற்றுலாப் பயணிகள் காண இதில் வசதி இருக்கிறது. ஏலகிரியில் சுற்றுலாப் பயணிகளுக்காக கோடைவிழா மற்றும் வசந்தவிழா நடக்கும். அச்சமயங்களில் இந்த தொலைநோக்கியை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தொலைநோக்கி என்றதுமே நினைவுக்கு வருகிறது. இந்தியாவிலேயே மிகப்பெரிய தொலைநோக்கி காவலூரில் அமைந்திருக்கிறது என்று பாடப்புத்தகத்தில் படித்திருப்பீர்களே? இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால் நிறுவப்பட்ட இந்த தொலைநோக்கி மையம் ஏலகிரியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில்தான் இருக்கிறது. இதுபோன்ற தொலைநோக்கிகள் நிறுவப்படும் இடம் சிறிது உயரமாகவும், வருடத்தில் பல நாட்கள் மேகமூட்டமின்றியும், நகர வெளிச்சம் பாதிக்கப்படாத தூரத்திலும் இருந்தாக வேண்டும் என்பதாலேயே காவலூர் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.

பதினான்காவது வளைவு தாண்டியதுமே விண்ணை முட்டி நிற்கும் யூகலிப்டஸ் மரக்காடுகளை காணலாம். சினிமாக்காரர்களின் கண்களில் இந்த அடர்த்தியான காடுகள் இன்னமும் படாதது ஆச்சரியமே. மலை எற, ஏற நீங்கள் உணர்ந்துக் கொண்டிருக்கும் மெல்லிய சில்லிப்பின் தன்மைமாறி, இங்கே குளிர்காற்று சரேலென முகத்தில் அறையத் தொடங்குகிறது. காற்றில் ரம்மியமான தைல வாசனையும் கலந்து பயணச்சோர்வு முற்றிலுமாக நீங்குகிறது.

ஏலகிரியின் சமதளப் பகுதிக்கு நீங்கள் வந்து சேர்ந்திருப்பீர்கள். சாலையின் இருமங்கிலும் பலாமரங்களையும், அவற்றில் பழங்கள் காய்த்துத் தொங்குவதையும் பார்க்கலாம்.

உறைவிடப் பள்ளிகள், தங்கும் விடுதிகள் என்று ஓரளவு நாகரிக வாசனை அடித்தாலும், முழுக்க முழுக்க ஏலகிரி மலைவாழ் மக்களின் பூர்விக பூமி. முத்தனூர், கொட்டையூர், புங்கனூர், அத்தனாவூர், கோட்டூர், பள்ளக்கனியூர், மேட்டுக்கனியூர், நிலாவூர், இராயனேரி, பாடுவானூர், புத்தூர், தாயலூர், மங்களம், மஞ்சங்கொல்லிபுதூர் ஆகிய பதினான்கு மலைவாழ்விட மக்கள் வசிக்கும் கிராமங்கள் அடங்கியதுதான் ஏலகிரி. கடைகளிலும், சாலைகளிலும் எதிர்ப்படும் வெள்ளந்தி மக்கள் அனைவருமே பழங்குடியினர்தான்.

நானூறு ரூபாயில் தொடங்கி தங்கும் அறைகள் வாடகைக்கு கிடைக்கிறது. ஏராளமான தனியார் தங்கும் விடுதிகளோடு, அரசு பயணியர் மாளிகை, வனத்துறையினரின் விருந்தினர் மாளிகை, ஒய்.எம்.சி.ஏ அமைப்பினரிடம் இடவசதி என்று தங்குவதற்கு பிரச்சினையே இல்லை. அரசு நடத்தும் யாத்திரை நிவாஸ் விடுதியில் தங்குவதற்கான கட்டணம் 250 ரூபாயிலிருந்து 700 வரைதான்.

ஏலகிரி மலை 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது. கடல் மட்டத்தில் இருந்து 1048.5 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. கோடைக்காலத்தில் 34 டிகிரி, குளிர்காலத்தில் 11 டிகிரி என்பதுதான் வெப்பநிலை.

இங்கே பசுமை, பசுமையைத் தவிர கண்ணுக்கு எட்டிய தூரம் வேறெதுவுமில்லை. ஊட்டிக்கு ஒரு பொட்டானிக்கல் கார்டன் என்றால், ஏலகிரிக்கு இயற்கைப் பூங்கா. இரவுகளில் வண்ணமய மின்னொளி வெளிச்சத்தில் இங்கே காட்டப்படும் இசை நீருற்று கண்காட்சி ரொம்ப பிரபலம். பூங்காவில் செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கும் அருவியில் கொட்டு கொட்டுவென்று நீர் கொட்டித் தீர்க்கிறது. வெறுமனே பார்ப்பதோடு மட்டுமல்லாமல், பொதுமக்கள் குளிக்கவும் கூட செய்யலாம். குழந்தைகள் விளையாடி மகிழ, சிறப்பாக பராமரிக்கப்பட்டுவரும் குழந்தைகள் பூங்கா ஒன்று. காலாற பூங்காவை சுற்றி வருவது ஒரு ரம்மியமான அனுபவம். ஊட்டி குளிரைப்போல ஏலகிரியின் குளிர் உங்கள் உடலை அச்சுறுத்தாது. அளவான, உடலுக்கு இதமான குளிர்தான் இங்கே வீசுகிறது.

இயற்கைப் பூங்காவுக்கு எதிரே ஒரு செயற்கை ஏரிப்பூங்கா நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. இங்கேயும் குழந்தைகள் விளையாட தனியாக வசதி செய்துத் தரப்பட்டிருக்கிறது. 6 ஏக்கருக்கும் மேலான பரப்பளவில் சிறுவர் பூங்கா அமைந்திருக்கிறது.

ஏரியைச் சுற்றி ஒரு கிலோ மீட்டருக்கும் கூடுதலான நீளத்தில் கான்க்ரீட் கரை அமைக்கப்பட்டிருக்கிறது. ஏரியில் படகுச்சவாரி செய்பவர்களை இந்த கரையில் வாக்கிங் செய்துக்கொண்டே பார்ப்பது குதூகலமான அனுபவம். இந்த ஏரியில் நீங்களே ‘பெடல்’ செய்து படகு ஓட்டலாம். இல்லையேல் துடுப்பு போடும் படகுகளும் வாடகைக்கு கிடைக்கின்றன. உங்களோடு, படகோட்டி துடுப்பு போட்டு வருவார். 56,706 சதுர மீட்டர் இந்த ஏரியின் பரப்பளவு. பரவசப்படுத்தும் படகுச்சவாரிதான் ஏலகிரியின் ஹைலைட். ஏரியை ஒட்டி வனத்துறை சார்பில் மூலிகைப் பண்ணை ஒன்றும் நடத்தப்பட்டு வருகிறது. ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்துக்குப் பயன்படும் அரிய மூலிகைகள் இங்கே பயிரிடப்படுகிறது.

மலையும் மலையை சார்ந்த இடமும் குறிஞ்சி என்ற பெயரால் தமிழ்ப் பாரம்பரியத்தில் அடையாளப் படுத்தப்படுகிறது. குறிஞ்சியின் தெய்வம் முருகன் என்பதும் மரபு. எனவேதான் ஏலகிரி மலையை சுப்பிரமணிய சாமியின் திருக்கோயில் காத்துவருவதாக ஆன்மீக அன்பர்கள் கருதுகிறார்கள். சுற்றுலாவுக்கு வருபவர்கள் இக்கோயிலை தரிசிக்க தவறுவதேயில்லை.

மங்களம் கிராமத்திலிருந்து இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் சுவாமி மலை அமைந்திருக்கிறது. இங்கே பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே மக்கள் வசித்து வந்ததற்கான அடையாளச் சின்னங்கள் காணக் கிடைக்கிறது. நவீன இந்தியாவின் பழமையான பாரம்பரியம் கொண்ட கிராமங்களில் ஒன்றாக இங்கிருக்கும் நிலாவூர் விளங்குகிறது. சிலைவழிபாடு இங்கே காலம் காலமாக நடந்து வருகிறது. மலைவாழ் மக்களின் குலதெய்வமான கதவநாச்சியம்மன் கோயில் இங்கேதான் அமைந்திருக்கிறது.

யூகலிப்டஸ், மா, கொய்யா, மாதுளை, சப்போட்டா, நாவல், ரோஸ் ஆப்பிள், காப்பிச்செடி, புளியமரம், கூந்தமரம், ரம்போட்டா, ஆலமரம் மற்றும் பிரிஞ்சி இலைமரங்கள் என்று இயற்கை ஏலகிரிக்கு அள்ளிக் கொடுத்த செல்வங்கள் ஏராளம். நிலாவூர் கிராமத்தில் அரசு பழத்தோட்டம் ஒன்றும் அமைந்திருக்கிறது.

உயிரினங்கள் வாழ ஏற்ற சீதோஷணம் இங்கே நிலவுவதால் பாம்பு வகைகள், கரடி, சிறுத்தை, மான், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் இம்மலை காடுகளில் வாழ்வதாக சொல்கிறார்கள். யானைகள் கூட வருடத்தின் சில மாதங்களில் இங்கே இருக்குமாம். சிட்டுக்குருவி வகைகள், புறா வகைகள், கவுதாரி, காடை, காட்டுக்கோழி என்று மலைப்பிரதேசத்தில் வாழும் பறவையினங்களும் இங்கே ஏராளம். ஆனால் நம்மூரில் அனாயசமாக காணப்படும் காகம் மட்டும் இங்கே இல்லை (செந்நிற காகம் மட்டும் இருப்பதாக ஊர்க்காரர் ஒருவர் சொல்கிறார்). எனவே ‘கா.. கா’ என்கிற குரலை மட்டும் நீங்கள் ஏலகிரியில் கேட்கவே முடியாது.

மலை, மரம், செடி, கொடி, பறவைகள், விலங்குகள் தவிர்த்து ஏலகிரியில் வேறு என்ன ஸ்பெஷல்? அருவி. ஏலகிரியிலிருந்து 40 கி.மீ. தூரத்தில் ஜலகாம்பாறை அருவி இருக்கிறது. மலைவழியாக பாயும் ‘அட்டாறு’ என்கிற ஆறு பள்ளத்தாக்கினை அடைந்து, மலையின் வடகிழக்குப் பகுதியில் ஜடையனூர் என்கிற குக்கிராமத்தில் வீழ்ச்சி அடைகிறது. இதுவே ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி. மழைக்காலத்தில் – ஆண்டின் சில மாதங்களில் மட்டுமே – இங்கே குளிர்ந்த நீர் கொட்டும். கோடைக்காலத்தில் செல்லும் பயணிகளுக்கு இங்கே குளிக்கும் வாய்ப்பு கிடைக்காது.

ஏலகிரியில் சுற்றுலா தொடர்பான பணிகள் அனைத்தும் மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. நுழைவுக்கட்டணம் வாங்குவதில் தொடங்கி, கடைகள் நடத்துவது வரை அவர்கள் பொறுப்பு. அரசின் அசத்தலான ஐடியா இது. மலைவாழ் மக்களின் பெண்களும் பொருளாதார வலிவு பெற இது உதவுகிறது.

சுற்றுலா தவிர்த்துப் பார்க்கப் போனால் சாகச விளையாட்டுப் பிரியர்களின் சொர்க்கமாகவும் இம்மலை விளங்குகிறது. தென்னிந்தியாவிலேயே பாரா-கிளைடிங் எனப்படும் ‘ரெக்கை’ கட்டி மனிதன் பறக்கும் விளையாட்டு இங்கேதான் நடத்தப்படுகிறது. ஏலகிரி சாகச விளையாட்டு கழகம் (YASA – Yelagiri Adventure Sports Association) இந்த விளையாட்டுக்கு பொறுப்பேற்கிறது. ஆகஸ்ட்டு அல்லது செப்டம்பர் மாத வாக்கில் பாரா-கிளைடிங் திருவிழா இங்கே நடக்கும். இது மட்டுமன்றி மலையேற்றம், பாறையேற்றம், இருசக்கர சாகச விளையாட்டு (Biking) என்று பல விளையாட்டுகள் யாசா-வால் நடத்தப்படுகிறது.

ஒரு நடை குடும்பத்தோடு போய் பார்த்துவிட்டுதான் வாருங்களேன்!


ஏலகிரி சுற்றுலாவுக்கு சில தொடர்புகள்..

ஒய்.எம்.சி.ஏ. கேம்ப் சென்டர்
போன் : 04179-245226, 295144, 295146

ஏலகிரிக்கான வனச்சரகர் (ஜோலார்ப்பேட்டை)
போன் : 04179-220185

ஏலகிரி அட்வென்சர் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் (யாசா)
போன் : 9840593194, 9442357711, 9444449591, 9444033307

(நன்றி : புதிய தலைமுறை)