
ஆட்டோவிலிருந்து இறங்கும்போது உச்சிவெயில் உண்மையாகவே மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. பிளந்துவிட்ட மண்டையை ஈரக்கர்ச்சீப்பால் மூடினேன். சிகப்பான சென்ட்ரல் அடுப்பில் காணக்கிடைக்கும் தீக்கங்குகள் மாதிரி கனகனவென்றிருந்தது. கொடுத்ததை வாங்கிச் செல்லும் ஆட்டோ டிரைவர் வாய்ப்பது முன்னோர் எக்காலத்திலேயோ செய்த புண்ணியம். பயணச்சுமையை முதுகில் தாங்கிக் கொண்டு கிட்டத்தட்ட ஓடினேன். இரண்டு மணிக்கு கோவை எக்ஸ்பிரஸ். மணி ஒன்று நாற்பத்தி ஐந்து.
சரியான நடைமேடை கண்டறிந்து, என் பெட்டியை அடைவதற்குள் சட்டை வியர்வையால் தொப்பலாகிவிட்டிருந்தது. சன்னலோரத்தில் அமர்ந்தேன். லேசான காற்று வியர்வையால் நனைந்த உடல்மீது பட்டது இதமாக இருந்தது. திறந்திருந்த சன்னல் வழியாக பார்வையை ஓட்டினேன். இருப்புப் பாதையில் தேங்கியிருந்த அழுக்கு நீரை இரு காக்கைகள் அருந்திக் கொண்டிருந்தன. அலகால் நீரை உறிஞ்சி வானத்தைப் பார்த்து காக்கைகள் நீரருந்தும் பாணியே அழகுதான்.
என் பக்கத்தில் நாற்பது கூட்டல் வயதுடையவர் அமர்ந்தார். வெள்ளைச்சட்டை. கருப்பு கால்சட்டை. கையில் தினகரன். செய்தித்தாளைப் பிரித்தவாறே பேச ஆரம்பித்தார்.
“ராஜபக்ஷேவை போட்டுத் தள்ளணும் சார்”
“ஆமாங்க. டிவி பார்க்குறப்போவெல்லாம் மனசு பிசையுது” பதிலுக்கு பேசியாக வேண்டும். அதுதான் மரியாதை.
“நான் சந்திரசூடன்ங்க. கோயமுத்தூரு. மெட்ராஸ் ஹைகோர்ட்டுலே லாயரா இருக்கேன்” உடனடியாக அறிமுகப்படுத்திக் கொண்டார். கைகொடுத்து என்னையும் அறிமுகப்படுத்திக் கொண்டேன்.
ரயில் கிளம்பப் போவதாக இந்தி, ஆங்கிலம், தமிழில் கொஞ்சம் சுமாரான பெண்குரலில் அறிவிப்பு கொடுத்தார்கள். இஞ்சின் பெட்டியிலிருந்து ஹாரன் சத்தம் கேட்டது. பெட்டி இருக்கைகள் கிட்டத்தட்ட முழுமை அடைந்து இருக்க, எதிர் இருக்கை மட்டும் காலியாக இருந்தது கண்ணை உறுத்தியது.
அவசர அவசரமாக ஒரு பெரியவரும், இருபத்தெட்டு முதல் முப்பது வயது மதிக்கத்தவனும் வந்து அமர்ந்தார்கள். அந்த மதிக்கத்தக்கவன் பெரியவரின் மகனாக இருக்கக் கூடும். எனக்கென்னவோ அவனைப் பார்த்ததுமே பிடிக்கவில்லை. சிலபேரை பார்த்ததுமே பிடித்துவிடும். பழகியவுடன் கசந்துவிடும்.
அவன் முகம் வெறிகொண்ட வேங்கையைப் போல இருந்தது. அவனது கண்கள் என்னை மிகவும் துன்புறுத்தியது. அவன் ஒரு சைக்கோ என்று உள்ளுணர்வு உறுத்தியது. இவனோடு பழகினாலும் இவனைப் பிடிக்காது என்று தோன்றியது. பெரியவர் வெள்ளைச் சட்டையும், வேட்டியும் கொஞ்சம் அழுக்காக அணிந்திருந்தார். அவனோ கசங்கிப்போன சட்டையும், சாயம்போன கால்சட்டையுமாக நாகரிகத்துக்கு தொடர்பில்லாதவனாக இருந்தான்.
பக்கத்திலிருந்த லாயரைப் பார்த்தேன். சகப்பயணியாக என்னை திருப்தியோடு பார்த்தவருக்கு எதிர் இருக்கை பயணிகள் அதிருப்தியை தந்திருக்கிறார்கள் என்பது பார்வையிலேயே தெரிந்தது.
பெரியவர் ஒரு பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்தார். ரயில் கிளம்பியது. காணாததை கண்டவன் மாதிரி அந்த பிஸ்கட்டை பிடுங்கி கடித்தான் அவன். பிஸ்கட் துணுக்கு சிதறியது. வாயெல்லாம் துகள்கள். நிமிர்ந்துப் பார்த்த எனக்கோ அருவருப்பாக இருந்தது. லாயருக்கும் அதேபோல இருந்திருக்க வேண்டும். ஒரு டவல் துண்டினை எடுத்து முகத்தில் போர்த்திக்கொண்டு இருக்கையில் வசதியாக சாய்ந்தார். அனேகமாக தூங்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பார்.
ரயில் கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுக்க ஜன்னல் வழியாக காற்று ஜம்மென்று உள்நுழைந்தது. திடீரென்று அவன் உட்கார்ந்த நிலையில் குதித்தவாறே, “அப்பா.. அப்பா.. மரமெல்லாம் பச்சையா அழகாருக்குப்பா” என்று கொஞ்சம் சத்தமாக சொன்னான். பெரியவர் பதிலுக்கு “ம்” என்றார். ஒருவேளை மனநிலைப் பிறழ்ந்தவனோ?
“அப்பா அங்கே பாருங்க. எவ்ளோ அழகாயிருக்கு!” குதூகலமான குரலில் கத்தினான். எரிச்சல் மண்டியது.
பக்கத்திலிருந்தவர் துயில் களைந்து காதுக்கு பக்கத்தில் வந்து சொன்னார். “க்ராக்கு பய சார்!”
திடீரென்று இருண்டதைப் போல தோன்றியது. சடசடவென்று மழைத்துளி விழுந்தது. வானம்தான் எவ்வளவு வேகமாக மாற்றத்துக்கு தயாராகிறது. ஜன்னலை மூட எழுந்தேன். அவன் முரட்டுத்தனமாக என் கையைப் பற்றி முறைத்தான். இச்சூழலில் அவனை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் குழம்பி, உட்கார்ந்தேன். பெரியவரைப் பார்த்தேன். கெஞ்சும் தொனியில் ஒரு பார்வை பார்த்தார்.
“அப்பா. மழை ஜோன்னு பெய்யுது. ஹைய்யா. ரொம்ப அழகா இருக்கு. சூப்பரா இருக்கு” என்னவோ மழையைப் பார்த்ததே இல்லை என்பது மாதிரி கத்தினான். பெட்டியில் இருந்த மற்றவர்கள் வித்தியாசமாக திரும்பிப் பார்த்தார்கள். பெரியவர் பாவமான தொனியிலேயே அமர்ந்திருந்தார்.
ரயில்வேகத்தில் மழைத்துளி ஜன்னலுக்குள் புகுந்து என் சட்டையை நனைக்க, இதற்குமேல் பொறுக்க முடியாது என்ற நிலையில் ஜன்னலை மூட மீண்டும் எழுந்தேன்.
”ஜன்னலை மூடாதீங்க!” முரட்டுக்குரலில் சொன்னான். எரிச்சல் எல்லை மீறிப் போனது.
“ஏன் சார்? பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலே இவனை சேர்த்து சரி செய்யுறதை விட்டுட்டு, வயசான காலத்துலே இப்படி கஷ்டப்படறீங்க?” பெரியவரிடம் கொஞ்சம் காட்டமாகவே கேட்டேன். அவனது முகம் இருளடைந்தது. இதெல்லாம் மட்டும் புரியும்.
அவர் அமைதியாக சொன்னார்.
“தயவுசெஞ்சு தொந்தரவுக்கு மன்னிச்சுடுங்க தம்பி. ஆஸ்பத்திரியிலிருந்து தான் வர்றோம். அவனுக்கு ஜூரம் வந்து பத்து வயசுலே பார்வை போயிடிச்சி. போனவாரம் தான் கண் தானம் மூலமா அவனுக்கு மறுபடியும் பார்வை கிடைச்சிருக்கு. மழையும், மரமும் அவனுக்கு புதுசாதான் தெரியும்”
ஜன்னலை மூடாமலேயே லேசாக அதிர்ச்சியடைந்து இருக்கையில் சாய்ந்தேன். பக்கத்து சீட்டுக்காரர் குறட்டை விட்டுக் கொண்டிருந்தார். அவன் எதுவும் நடக்காதது போல மீண்டும் மழையை ரசிக்க ஆரம்பித்தான். கடந்துச்சென்ற டீனேஜ் பெண் ஒருத்தியின் டீஷர்ட்டில் ”Don't Judge Too Soon” என்று எழுதியிருந்தது.
நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த ஆங்கில மின்னஞ்சல் சமாச்சாரத்தை தழுவி புனையப்பட்ட கதை.
(நன்றி : தினகரன் வசந்தம் - இக்கதையின் சுருக்கப்பட்ட ஒரு பக்க வடிவம் 03-07-2011 வசந்தம் இதழில் வெளிவந்திருக்கிறது)