27 ஜூன், 2011

மாரி பேசுகிறேன்!


அன்பான எல்லோருக்கும் வணக்கம்.

எனக்கு கடிதங்கள் வருவதில்லை. அதனாலேயே யாருக்காவது நானாவது கடிதம் எழுதணும்னு உங்களுக்கு எழுதறேன். எனக்கு கடிதம் எழுத நீ யார் என்று கேட்காதீர்கள். என்னை உங்கள் மகனாகவோ, தம்பியாகவோ நினைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு கடிதம் எழுதாமல் வேறு யாருக்குதான் நான் எழுத முடியும்? அதுவுமில்லாமல் என்னுடைய கதையை, உறவுகளான நீங்களே கேட்காவிட்டால், வேறு யார்தான் கேட்பார்கள்?

என் பெயர் மாரிச்செல்வம். மூக்கையூர் என்கிற கடலோர குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். வயது பதினைந்து. என் அப்பா முனியசாமி ஒரு மீனவர். யாராவது கடலுக்கு மீன் பிடிக்க போகும்போது, கூட ஒத்தாசைக்கு போவார். கூலி வாங்கிக் கொள்வார். மீன் பிடிக்க அப்பாவுக்கு சொந்தமாக படகு எல்லாம் கிடையாது.

அம்மா அப்பாவோடு சேர்த்து மொத்தம் ஒன்பது பேர் கொண்ட பெரிய குடும்பம். ஐந்து மகள்கள், இரண்டு மகன்கள். நான்தான் கடைசி. அண்ணனுக்கும், நான்கு அக்காக்களுக்கும் எப்படியோ சிரமப்பட்டு திருமணம் முடித்துவிட்டார் அப்பா. இவ்வளவு பெரிய குடும்பத்தை கூலிவேலை செய்து காப்பாற்ற வேண்டுமானால், எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருப்பார்?

அப்பாவுக்கு ரெண்டே ரெண்டு கனவு உண்டு. ஒன்று, சொந்தமாக ஒரு கட்டுமரம் வாங்கி மீன்பிடித் தொழில் செய்யவேண்டும். இரண்டு, தன் குடும்பத்தில் ஒருவராவது நல்ல படிப்பு படித்து, பெரிய வேலைக்குப் போகவேண்டும்.

எங்கள் ஊரில் உள்ள புனித யாக்கோபு நடுநிலைப் பள்ளியில் எட்டாவது வரை படித்தேன். உயர்நிலைப் பள்ளிக்கு வேறு ஊருக்கு போக வேண்டும். அதுவரை படிக்கவே PAD என்கிற அரசுசாரா அமைப்புதான் எனக்கு உதவிக்கிட்டிருந்தது. ஆமாங்க. Christian Children Fund of Canada (CCFC) என்கிற கிராமப்புற குழந்தைகள் உதவித்திட்டம் மூலமாதான் நான் படிச்சிக்கிட்டிருந்தேன். குடும்பச்சூழலை உணர்ந்து அப்பாவோடு மீன் பிடிக்க போகலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்பாவுக்கு ரொம்ப கோபம்.

நல்லா படிச்சிக்கிட்டிருந்த பார்வதி அக்கா கூட எட்டாவதோட படிப்பை ஏறக்கட்ட வேண்டியதாயிடிச்சி. நானாவது நல்லா படிச்சி பெரிய அதிகாரியா வருவேன்னு அப்பா எம்மேலே நம்பிக்கையை வெச்சிக்கிட்டிருந்தாரு.

பெரிய அக்கா முருகேஸ்வரியோட ஊருக்குப் போயி தங்கி, அங்கிருந்து படிக்கிறதுக்கு அப்பா ஏற்பாடு பண்ணினார். முத்துப்பேட்டையில் அக்கா வீடு. பக்கத்தில் இருந்த வேலாயுதபுரம் புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். படிப்புலே கவனம் இருந்தாலும், குடும்பச் சூழல் என்னை வருத்திக்கிட்டே இருந்தது. குடும்ப வருமானத்துக்கு நானும் ஏதாவது செய்யணுமேன்னு மெனக்கெடுவேன்.

லீவு நாள்லே அம்மாவோடு கரிமூட்டம் அள்ளுற வேலைக்குப் போவேன். கரிமூட்டம்னா ரொம்ப பேருக்கு தெரியாது. நிறைய ஊர்லே செங்கல் சூளை போடுறது மாதிரி, எங்க ஊரு பக்கம் கருவேல மரங்களை எரித்து கரி போடுற தொழிலுக்கு பேரு கரிமூட்டம். அப்புறம் மாமா முனியனோட கடல்வேலைக்கும் அப்பப்போ போவேன். இது அக்காவுக்கு புடிக்காது. “படிக்குற புள்ளை படிப்புலேதான் கவனம் செலுத்தணும். வேலை, வெட்டிக்கு போயிக்கிட்டிருந்தா படிப்பு கெட்டுடும்”னு திட்டும்.

அக்கா பத்தி இங்கே சொல்லியே ஆவணும். முருகேஸ்வரி அக்காதான் எங்க குடும்பத்துலே மூத்தது. முனியன் மாமாவுக்கு கட்டிக் கொடுத்தாங்க. ரெண்டு பேரும் ரொம்ப நல்லவங்க. மத்த அக்காங்களுக்கு கல்யாணம் பண்ணுறதுலே தொடங்கி, அப்பாவோட குடும்பப் பாரத்தை இவங்களும் சேர்ந்து சுமந்தாங்க. இவங்களுக்கு மூணு பெண் குழந்தை. ஒரு ஆண் குழந்தை. என்னையும் இவங்களோட மகன் மாதிரியே பார்த்துக்கிட்டாங்க.

பத்தாவது பரிட்சை நெருங்கிட்டிருக்கு. தீவிரமா படிச்சிக்கிட்டிருந்தேன். அப்போதான் திடீருன்னு எங்க குடும்பத்துமேலே அந்த இடி விழுந்தது. ஆமாங்க, அப்பா செத்துப் போயிட்டாரு. அவருக்கு மூளையிலே கட்டி. ஆஸ்பத்திரியிலே எவ்வளவோ ட்ரீட்மெண்ட் எடுத்தும் பிரயோசனமில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையிலே எனக்கு படிப்பு தேவையான்னு திரும்ப யோசிக்க ஆரம்பிச்சிட்டேன்.

அம்மா சண்முகம்தான் என்னை தேத்தி மறுபடியும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புனாங்க. அவங்களும் மகள் வீட்டுக்கே வந்து தங்கி விறகு வெட்டுறது, கரிமூட்டம் போடுறது, கூலிவேலைக்குப் போவுறதுன்னு அப்பாவோட குடும்பச் சுமையை முழுமையா சுமக்க ஆரம்பிச்சிட்டாங்க.

அம்மா, அக்கா, மாமான்னு என் சொந்தங்க ஆவலா எதிர்ப்பார்த்த பரிட்சையும் வந்துடிச்சி. முதல் ரெண்டு பரிட்சை எழுதிட்டு வந்தப்போ, அக்கா கேட்டுச்சி. “என்னா மாரி. எப்படிடா பரிட்சை எழுதறே”ன்னு. “நல்லாதான் எழுதிக்கிட்டிருக்கேன்”ன்னு சொல்லிட்டு, அக்கா முகத்தை பார்த்தேன். அக்காவோட முகம் ரொம்ப சோர்வா இருந்திச்சி. “உடம்பு சரியில்லை. நெஞ்செல்லாம் ஒரு மாதிரி கரிக்குது. கொஞ்ச நேரம் தூங்குறேன். நீ போய் படி”ன்னு சொல்லிட்டு போய் தூங்க ஆரம்பிச்சது. ஏற்கனவே ஒருவாட்டி அக்காவுக்கு ஹார்ட் ஆபரேஷன் வேற பண்ணியிருக்காங்க.

அன்னைக்கு நைட்டு மறுபடியும் அக்காவுக்கு நெஞ்சுவலி. ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போயிக்கிட்டிருக்கோம். போற வழியிலேயே செத்துடிச்சி. கதறி அழுவறேன். எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு சோதனை?

“டேய். உன் அக்கா நீ நல்லா படிக்கணும்னுதான் ஆசைப்பட்டுது. நாளைக்கு பரிட்சைக்கு போய் படிடா”ன்னு மாமா என்னை தேத்தி அனுப்பறாரு. அன்னைக்கு நான் பரிட்சை எழுதிட்டு வந்தபிறகுதான் அக்காவோட இறுதிச்சடங்கையே மாமா தொடங்கினாரு. அம்மா மாதிரி என்னை வளர்த்த அக்கா சாவுக்கு பக்கத்துலே கூட இருக்க முடியாம பரிட்சை எழுதினேங்க.. இதே சோகத்தோடதான் அடுத்த ரெண்டு பரிட்சையையும் எழுதி முடிச்சேன்.

அப்பாவும் போயிட்டாரு, அக்காவும் போயிடிச்சி, எனக்கு வாழ்க்கையே வெறுத்திடிச்சி. அம்மாவோட உதவிக்கு வேலைக்கு போக ஆரம்பிச்சேன். எல்லாத்தையும் கொஞ்சம், கொஞ்சமா மறக்கவும் ஆரம்பிச்சேன்.

பரிட்சை முடிவுகள் வந்த அன்னிக்கு, எனக்கு முடிவுகளை தெரிஞ்சுக்க எந்த ஆர்வமும் இல்லை. முதல்நாள் போட்ட கரிமூட்டத்துலே இருந்து நானும், அம்மாவும் கரி அள்ளிக்கிட்டிருந்தோம். “டேய் மாரி. உன்னைப் பார்க்க உன் ஸ்கூல் சிநேகிதங்க வந்திருக்காங்க”ன்னு அக்கா சொல்லிச்சி. வெளியே வந்துப் பார்த்தேன். “டேய் நீ தாண்டா ராமநாதபுரத்துலே டிஸ்ட்ரிக்ட் பர்ஸ்ட்டு. 490 மார்க் வாங்கியிருக்கேடா”ன்னு சொல்லி கட்டி அணைச்சுக்கிட்டாங்க.

தமிழ் 95, ஆங்கிலம் 98, கணக்கு 100, அறிவியல் 99, சமூக அறிவியல் 98. அக்காவோட இறுதிச்சடங்கு அன்னைக்குதான் கணக்குப் பரிட்சை நடந்தது. அதுலே நூத்துக்கு நூறு வாங்கியிருக்கேன். என்னோட சேர்ந்து பரிட்சை எழுதின என்னோட அக்காமவ நிர்மலாவும் கூட 432 மார்க் வாங்கியிருக்கா.

அக்காவும், அப்பாவும் ஆசைப்பட்டமாதிரியே நல்ல மார்க் வாங்கியிருக்கேன். என்ன, அதைப் பார்க்கதான் அவங்க இல்லை. மாவட்டத்துலேயே முதலாவதுன்னு தெரிஞ்சதும் அம்மாவுக்கும், மாமாவுக்கும் ரொம்ப சந்தோஷம். இவங்களுக்கு இந்த சந்தோஷத்தைவிட பெருசா என்னாலே வேறு எதைக் கொடுத்துட முடியும்?

அடுத்து +1 படிக்கணும். PDA நிறுவனம்தான் இதுக்கும் உதவ முன்வந்திருக்காங்க. வறுமை, அப்பா-அக்கா மரணம்னு அடுத்தடுத்து சோகங்களையே சந்திச்சிக்கிட்டிருக்கிறதாலேயோ என்னவோ கொஞ்சநாளா எனக்கு தாங்கமுடியாத தலைவலி. உள்ளூர் டாக்டருங்கள்லாம் உனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லப்பான்னு சொல்லிட்டாங்க. கோயமுத்தூர்லே ஒரு டாக்டர் கிட்டே காட்டுனப்போ, இருதயத்துலே ஏதோ பிரச்சினைன்னு சொல்றாரு. அறுவை சிகிச்சை செய்யணுமாம். அதையும் உடனே செய்ய முடியாதாம். 21 வயசுலேதான் செய்யணுமாம். பாருங்க சார். பட்ட காலிலேயே திரும்ப திரும்ப பட்டுக்கிட்டிருக்கு. என்னதான் வாழ்க்கையோ தெரியலை.

எது எப்படியோ, இவ்வளவு நேரம் என் கதையை பொறுமையா கேட்ட உங்களுக்கு ரொம்ப நன்றி. எவ்வளவு பெரிய சோகத்தையும் கல்வியாலேதான் என்னை மாதிரி மாணவர்கள் கடக்க முடியும் என்பதற்கு என்னோட கதைதான் நல்ல உதாரணம்.

என் மனசுலே இருந்த மொத்த பாரங்களையும், இந்த கடிதத்தில் கொட்டித் தீர்த்ததுலே மனசு ரொம்ப லேசாகியிருக்கு. அம்மாவும், மாமாவும்தான் எனக்காக கவலைப்பட்டுக்கிட்டிருக்காங்க. இனிமே நீங்களும் நான் நல்லாருக்கணும்னு நெனைப்பீங்க. உங்களோட ஆசியாலே, நான் நிச்சயம் நல்லா வருவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்குங்க.

என்றும் உங்கள் அன்புள்ள
மாரிச்செல்வம்
முக்கையூர் கிராமம்,
கடலாடி ஒன்றியம்,
இராமநாதபுரம் மாவட்டம்.

(நன்றி : புதிய தலைமுறை கல்வி மற்றும் பத்ரி)

மாரிச்செல்வத்துக்கு உதவ நினைக்கும் நல்லுள்ளங்கள் feedback@puthiyathalaimurai.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி, அவரது தொடர்பு விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

9 கருத்துகள்:

  1. ஏற்கனவே பதிவாக படித்திருந்தாலும் நீங்கள் மாரி நம்முடன் நேரடியாக பேசுவது போல எழுதியிருந்தது வித்தியாசமாக இருந்தது.

    மாரியின் தலைவலி குணமாகிவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. //பக்கத்தில் இருந்த வேலாயுதபுரம் புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்து படிக்க ஆரம்பிச்சேன்.// Sir..antha school um Muthupettai la than irukku.. Am also from same village ..

    பதிலளிநீக்கு
  3. மாரியுடைய அப்பாவின் கனவு வெல்லும்.
    இந்த மாரிக்காக அனைவரும்
    வேண்டிக்கொள்வோம்
    வாழ்கையில் வெற்றிபெற
    எத்தனையே மாரிக்கள் நம் நாட்டில்
    உள்ளார்கள் அவர்களை காக்க அரசங்கம் கல்விக்காக சிறந்த திட்டங்களை கொண்டு
    வரவேண்டும்

    பதிலளிநீக்கு
  4. கண்டிப்பாக மாரியை அந்த கடவுள் குணபடுத்துவார். ஸார் உங்க அனுமதி இல்லாம இந்த பதிவ நான் என்னுடய பிலோக்லும் போஸ்ட் செய்துவிட்டேன்.
    உங்களுடய லிங்கும் குடுதுருக்கேன். நன்றி.... ,,

    பதிலளிநீக்கு
  5. நல்ல பதிவு , முடிந்தால் உங்கள் பதிவை இங்கேயும் இணையுங்கள்



    www.tamil10.com
    நன்றி

    பதிலளிநீக்கு
  6. மாரியின் தலை வலியும் சீக்கிரமே குணமாயுடும். நண்பா நீங்கள் என்மீது கோபம் கொள்ள மாட்டீர்கள் என் நம்புகிறேன். http://mypepasi.blogspot.com

    பதிலளிநீக்கு
  7. Lucky
    I sent a mail to the email id, but didnt get any details, Can you please provide his account details and phone number?
    venkat

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா9:00 PM, ஜூன் 28, 2011

    people dont know this method of adding label feed in google reader...u can tell this in a post if u wish...

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா9:17 PM, ஜூன் 28, 2011

    Karuvela marangalai pathi Junior vikatan-la vanthuthe. There was an article on this on how dangerous it is. May be that caused problems for Mari and his sister?

    பதிலளிநீக்கு