4 ஜூன், 2011

சிறுநகர நாயகன்!

தமிழ் சினிமாவின் ஆகப்பெரிய பிரச்சினை இது. வைத்தால் குடுமி. சிரைத்தால் மொட்டை. படத்தின் கதை நடக்கும் களம் என்பது தொண்ணூறு சதவிகிதம் சென்னைதான். இல்லாவிட்டால் மதுரை. அல்லது மதுரை மாவட்டத்தின் ஏதோ ஒரு குக்கிராமம். அரிவாள்தான் கதைக்கே முதலீடு என்றால், போனால் போகுதென்று திருநெல்வேலிக்குப் போவார்கள். “பசுபதி. விட்ரா வண்டியை” என்று வசனம் வைக்க இயக்குனருக்கு ஆசை வந்துவிட்டால், கோயமுத்தூருக்கு வண்டியை விடுவார்கள். ஒரு தெலுங்கரோ, இந்திக்காரரோ தமிழ்ப்படங்கள் பார்க்கும் வழக்கம் கொண்டிருந்தால் தமிழ்நாட்டில் இருப்பது நாலே, நாலு நகரங்கள்தான் என்று எண்ணக்கூடும்.

இந்தப் போக்கு தமிழ் சினிமாவின் சாபக்கேடு என்றும் சொல்லலாம். கிராமம் என்றால் கோவை அல்லது மதுரை. நகரமென்றால் சென்னையென்றே சிந்திக்க இயக்குனர்கள் பழகிவிட்டார்கள். செங்கல்பட்டு, சேலம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, வேலூர், பொள்ளாச்சி, லொட்டு, லொசுக்கு என்று எவ்வளவோ நகரங்கள் தமிழகத்தில் இருக்கிறது. இந்த ஊர்களை களமாக கொண்டும் கதை சொல்லலாம் என்று எந்த புதுமுக இயக்குனருக்கும் தோன்றுவதேயில்லை என்பது பரிதாபம்தான். ஒருவேளை படப்பிடிப்புச் செலவு, சரியான லொக்கேஷன்கள் இல்லாமை போன்ற வேறு நிர்வாக காரணங்களும் இருக்கக்கூடும். ஆனால், இதனால் இந்த சிறுநகர மாந்தர்களை தமிழ் சினிமா பிரதிநிதித்துவப் படுத்தாமல் போகின்ற அவலம் நேர்கின்றதை மறுக்கவே முடியாது. ஓரிரு விதிவிலக்கான திரைப்படங்கள் வந்திருக்கலாம். அவையெல்லாம் நூற்றில் ஒன்றோ, ஆயிரத்தில் நான்காகவோதான் இருக்கும்.

மற்ற ஊர் ஆட்களுக்கு இதனால் சென்னை மீது பெரிய கோபம் இருக்கலாம் என்று உளவியல்ரீதியாக உணரமுடிகிறது. சென்னையிலேயே ரீல் ஓட்டிக் கொண்டிருக்கும் முன்னணி நாயகர்களுக்கு போட்டியாக, புது நாயகன் யாராவது மற்ற ஊர் கதைகளில் நடித்தால் ஆரவாரமான வரவேற்பினை பெறுகிறார். முன்பு ராமராஜன். இப்போது விமல் (விஜய் கூட ஆரம்பக்கால படங்களில் சென்னை தவிர்த்த பிற நகர இளைஞன் கதாபாத்திரங்களில்தான் நடித்து வந்தார்). தங்கள் ஊரையும், தங்கள் மனிதர்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் திரைப்படங்களை சென்னை தவிர்த்து ஏனைய ஊர் மக்கள் எப்போதுமே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்திய களவாணி, பாஸ் (எ) பாஸ்கரன் மாதிரி படங்களின் வெற்றியை இதற்கு உதாரணமாக காட்டலாம்.

சில நாட்களுக்கு முன்பாக, உத்திரமேரூரில் +2 படிக்கும் பெண் ஒருவரின் ரெக்கார்ட் நோட்டை பார்க்க நேர்ந்தது. பின்பக்க உள்ளட்டையில் விமலின் வண்ணப்படம். பெண்கள் கமல், ஷாருக், சல்மான், ரித்திக் ரோஷன், அஜித், விஜய், சிம்பு படங்களைதான் வைத்திருப்பார்கள் என்று அதுவரை நமக்கு ஒரு மூடநம்பிக்கை இருந்தது.

“விமல் படத்தை கூடவா?”

“ஏன் வெச்சுக்க கூடாது? விமலுக்கு கல்யாணம் ஆனப்போ எங்கிளாஸ்லே நிறைய பொண்ணுங்க அழுதுட்டாங்க தெரியுமா?”

‘மாஸ்’ அளவிடும் மேட்டரில் நாம் கொஞ்சம் பின்தங்கியிருப்பது புரிந்தது. பிறகு செல்லுமிடமெல்லாம் கவனமாக கவனித்ததில், விமலுக்கு ஒரு மாதிரியான ரூரல் தன்மையோடு கூடிய செமி-அர்பன் மார்க்கெட் மாஸ் உயர்ந்து வருவதை புரிந்துக்கொள்ள முடிந்தது (இதே மாதிரி மாஸ், இவரது சக கூத்துப்பட்டறை நண்பரான மைனா விதார்த்துக்கும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது).

“இங்கிட்டு மீனாட்சி. அங்கிட்டு யாரு?” வசனம் விமலுக்கு நல்ல ஓபனிங். களவாணியின் தறுதலை பாத்திரம் பக்காவான ரீச்சிங். குட்டி, குட்டி ஊர்களில் வசிக்கும் டுட்டோரியல் ஸ்டூடண்ட்ஸ் தங்களை, அச்சு அசலாக கண்ணாடியில் பார்ப்பது மாதிரி விமலை பார்த்திருக்கிறார்கள். படா த்ராபையான திரைக்கதையம்சம் கொண்ட தூங்கா நகரம் கூட விமலுக்காக சொல்லிக் கொள்ளும்படியான வசூலை அள்ளியிருக்கிறது. இப்போது ‘எத்தன்’. அடுத்து ‘வாகை சூட வா’வென்று, நம்பி பந்தயம் கட்டக்கூடிய நிச்சயவெற்றி குதிரை ஆகிவிட்டார் விமல்.

எந்தவித நடிப்பாற்றலும் இல்லாமல், சமீபத்தில் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றிப் படங்களும் இல்லாமல் இருந்தாலும் அஜித்துக்கு எப்போதுமே ஒரு மாஸ் இருந்துக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் திரையுலகுக்குள் நுழைய அஜித் அடைந்த கஷ்டங்களும், நுழைந்த பிற்பாடு உழைத்த பெரிய ரவுண்ட் உழைப்புமே. ஒரு தன்னம்பிக்கை மனிதராக கனகச்சிதமாக அஜித் பிராண்ட் ஆகிவிட்டதைப் போன்றே, விமலுக்குமான ஒரு பின்னணிக்கதை ரசிகர்களுக்கு இவர் மீதான கூடுதல் பிடிப்பை ஏற்படுத்துகிறது.

திருச்சிக்கார இளைஞரான ரமேஷூக்கு சினிமா மீது கொள்ளை விருப்பம். இவருடைய துரதிருஷ்டம், இவர் நுழைய விரும்பிய நேரத்தில் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என்று ஏற்கனவே சினிமாவில் கொட்டை போட்டு பழம் தின்றவர்களின் வாரிசுகளே திரும்ப திரும்ப அறிமுகமாகிக் கொண்டிருந்தார்கள். அதே நேரம் ‘கூத்துப்பட்டறை’யிலிருந்து நடிகர்களை நேரடியாக, தமிழ் சினிமாவுக்கு சில இயக்குனர்கள் ‘டவுன்லோடு’ செய்துக் கொண்டிருக்கும் போக்கும் காணப்பட்டது. பிடி கூத்துப்பட்டறையை. சினிமாவுக்குள் நுழைய ஒரு குறுக்குவழி விகடன் என்றால், இன்னுமொரு குறுக்குவழி கூத்துப்பட்டறை.

ஆறுமாத காலம் கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றதாக பேட்டிகளில் சொல்கிறார் ரமேஷ். பின்னர் கில்லி, கிரீடம், குருவி என்று ‘மாஸ்’ படங்களில் துண்டு, துக்கடா வேடங்களில் தலையை காட்டினார். கிடைத்தது சிறுவேடங்கள் என்றாலும், எப்போதும் படப்பிடிப்புத் தளங்களிலேயே சுற்றிக் கொண்டிருந்ததால், இளம் புதுமுக இயக்குநர்கள் நிறைய பேரின் அறிமுகம் கிடைத்தது (களவாணி இயக்குனர் சற்குணமும், விமலும் ஏற்கனவே நண்பர்கள்).

விமலாக மாறி, முதல் படமான ‘பசங்க’ வெளியாவதற்கு முன்பே, களவாணி பட பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டது. நண்பன்தான் ஹீரோ என்பதில் சற்குணம் உறுதியாக இருந்தார். இருந்தாலும் புதுமுக நாயகன் என்பதால் தயாரிப்பாளருக்கு கொஞ்சம் தயக்கம். பசங்க வெளியாகி சக்கைப்போடு போட, களவாணி கம்பீரமாக வளர்ந்தான். மீதியெல்லாம் தெரிந்த கதைதான்.

விமலின் ‘லவ் ஸ்டோரி’யும் அவரது இமேஜூக்கு உரம் சேர்க்கிறது. டாக்டருக்குப் படிக்கும் சொந்தக்காரப் பெண்ணை நீண்டகாலமாக காதலித்து வந்திருக்கிறார். “சினிமாக்காரனுக்கு பொண்ணு கிடையாது” என்று பொண்ணுவீட்டுக்கார வீம்பினை எதிர்த்து, வீரமான ‘லவ் மேரேஜ்’.

இவருக்கான மைனஸ் பாயிண்ட் என்றால் ஒரேமாதிரியாக எல்லாப் படங்களிலும் (வாய்க்குள் மாவாவை போட்டு குதப்பிய மாதிரி) பேசிக்கொண்டிருக்கும் டயலாக் டெலிவரிதான்.

விமலின் திரைப்படங்களில் வரும் சென்னை தவிர்த்த பிறநகர இளைஞன் பாத்திரம் அவராக தேர்ந்தெடுப்பதா, அதுவாக அமைவதா என்று தெரியவில்லை. ஆயினும் அவரது சரிவிகித வளர்ச்சிக்கு இதுவும் ஒரு முக்கியக் காரணமாக அமைகிறது. நல்ல சிவந்த நிறம், களையான முகம். நாலு நால் தாடியென இனியும் தனக்குப் பொருத்தமான இதேமாதிரியான பாத்திரங்களை, சரியான கதையமைப்பில் தேர்வு செய்து – வித்தியாசமான கெட்டப்புகளுக்கு எல்லாம் அவசரப்பட்டு ஆசைப்படாமல் - நடித்தால் கொஞ்சம் கொஞ்சமாக காலியாகிக் கொண்டிருக்கும் ரஜினி, கமலுக்கான அடுத்த தலைமுறை முன்னணி நடிகர்கள் பட்டியலில் மிகச்சுலபமாக, விரைவாக இடம்பெற்று விடலாம்.

10 கருத்துகள்:

  1. பெயரில்லா4:55 PM, ஜூன் 04, 2011

    Lucky

    Good to see your blogpost which is motivating for young actors

    Better to focus on youth rather than old men like MK

    பதிலளிநீக்கு
  2. அதெல்லாம் இருக்கட்டும். லயன் காமிக்ஸ் பி டி எஃப் எங்கே கிடைக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. பசுமாடு8:08 PM, ஜூன் 04, 2011

    லக்கி அண்ணே இவரை ரஜினி கமல் ரேஞ்சுக்கு ஒப்பிடாதீங்க.

    இவர் இன்றைய ராமராஜன் அம்புட்டுதான்

    பதிலளிநீக்கு
  4. //இவருக்கான மைனஸ் பாயிண்ட் என்றால் ஒரேமாதிரியாக எல்லாப் படங்களிலும் (வாய்க்குள் மாவாவை போட்டு குதப்பிய மாதிரி) பேசிக்கொண்டிருக்கும் டயலாக் டெலிவரிதா//

    அதே அதே, சபாபதே.


    கிங் விஸ்வா
    LITTLE BIG SOLDIER (2010) - ஆசிய சிங்கத்தின் ஒலக சினிமா - திரை விமர்சனம்!

    பதிலளிநீக்கு
  5. விமல் கவனிக்கப் படவேண்டிய நடிகர். பசங்க, களவானி என்று சிறு கிராமத்து பாத்திரத்தை கண் முன் நிறுத்தியவர். உங்களது பதிவு அவருக்கு படிக்கட்டு.

    பதிலளிநீக்கு
  6. I like Vimal for his natural Acting and enjoying with his films truely. But he cant become rajini and kamal they are giants. Vimal is finished 4 films only.

    பதிலளிநீக்கு
  7. //கொஞ்சம் கொஞ்சமாக காலியாகிக் கொண்டிருக்கும் ரஜினி, கமலுக்கான//

    என்ன பாஸ் ?

    பதிலளிநீக்கு
  8. காஞ்சிவரம் படத்துல நம்ம இந்த விமல் இருக்கார் ,முன்பு படம் வந்த புதிதில் பார்த்தப்போ ,கண்டுபிடிக்கலை, போனவாரம் பார்த்தப்போ தெரிஞ்சது, பிரகாஷ்ராஜின் மகள் ஷம்முவுக்கு மாப்பிள்ளை இவர்தான். டைட்டில் கார்டில க்ரெடிட் சின்னவயசு ரங்கன் கதாபாத்திரத்துக்கு தான் க்ரெடிட் கொடுத்துள்ளனர்.இவர் இளைஞனா ப்ரிட்டிஷ் ராணுவத்துல சேர்ந்து மலேஷியாக்கு போறார்.பெரிய வயது ரங்கனுக்கு க்ரெடிட் இல்ல.

    பதிலளிநீக்கு
  9. // எந்தவித நடிப்பாற்றலும் இல்லாமல்,

    ஆமாங்க எந்த விதமான நடிப்புத்திறமையும் இல்லாமல் அம்பது படம் வரைக்கும் நடித்துவிட்டார் .. நாலைந்து அவார்ட் வேற வாங்கிட்டாறு .... அவரஓட நிறைய படங்கள் அம்பது கோடி அறுபது கோடின்னு வசூல் ஆகிக்கிட்டு இருக்கு ...

    எப்படின்னே இது ... நீங்க சொன்னா அது சரியாத்தான் இருக்கும் , ஆனாலும் எப்படி இது .. புரியலையே ...

    பதிலளிநீக்கு