10 ஜூன், 2011

பணம் மரத்தில்தான் காய்க்கிறது!

“பணம் என்ன மரத்திலா காய்க்குது?” – இந்த கேள்வி உங்கள் காதில் விழாத நாளே இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. யாராவது இனி இப்படி உங்களை கேட்டால், தயங்காமல் பதில் சொல்லுங்கள். “பணம் மரத்தில்தான் காய்க்கிறது!”

என்னென்னவோ தொழில் நடத்தி நஷ்டமடைந்தவர்கள் ஆயிரம் பேரை உங்களுக்கு தெரியலாம். நிச்சய லாபம் கொடுக்கக்கூடிய ஒரு தொழில் இருக்கிறது. கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

மரம் வளர்ப்பு!

மரம் வளர்ப்பு ஒரு தொழிலா? மரம் வளர்த்தால் மாங்காய் கிடைக்கும், தேங்காய் கிடைக்கும். காசு கிடைக்குமா? கிடைக்காது. கொட்டும். இடியுடன் கூடிய மழை மாதிரி உங்கள் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டோ கொட்டுவென நிச்சயம் கொட்டும்.

முதலில் இரண்டு கதைகளை பார்த்துவிடுவோம்.

முதலில் அசலூர் கதை.

பீகாரின் பகல்பூர் மாவட்டத்தில் இருக்கும் கிராமம் தர்காரா. பிறக்கும் குழந்தை பெண்ணாக இருந்தால், குறைந்தது பத்து மாமரங்களை நடுவது இங்கே வழக்கம். இவ்வழக்கம் எப்போதிலிருந்து பின்பற்றப்படுகிறது என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் பரம்பரை பரம்பரையாக ஒரு சடங்காகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சரி, இந்த சடங்கினால் வேறு என்ன பிரயோசனம்? சுற்றுச்சூழல் காக்கப்படுகிறது என்கிற உலகளாவிய பயன்பாட்டை எல்லாம் விட்டு விடுவோம்.

இக்கிராமத்தில் வசிக்கும் சுபாஷ்சிங் ஒரு சிறுவிவசாயி. இருபது ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு மகள் பிறந்தாள். நிகாகுமாரி என்று பெயர் வைத்து, ஊர் வழக்கப்படி பத்து மாங்கன்றுகளை நட்டு வளர்த்தார்.

இந்த இருபது ஆண்டுகளில் மகள் திருமணத்துக்கு செலவு செய்யவேண்டுமே என்றெல்லாம் சுபாஷ்சிங் என்றுமே கவலைப்பட்டதில்லை. சமீபத்தில் நிகாகுமாரிக்கு ஜாம் ஜாமென்று திருமணம் நடந்தது. மாப்பிள்ளை அரசுப்பள்ளியில் வாத்தியார்.

“என் மகள் வளரும்போது அவளோடு சேர்ந்து, அவளுக்காக நான் நட்ட மாமரங்களும் வளர்ந்தது. மூன்றே ஆண்டுகளில் காய்க்க ஆரம்பித்தது. பழங்களை சந்தையில் விற்கத் தொடங்கினேன். இத்தனை ஆண்டுகளாக இதில் கிடைத்த வருமானம், எனது மகளின் திருமணச் செலவினை விட பன்மடங்கு அதிகம்” என்று பி.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் சொன்னார் சுபாஷ்சிங்.

‘லாஜிக்’ ஆக யோசித்துப் பாருங்கள். எவ்வளவு பெரிய பொருளாதார ரகசியம், இந்த மரம் நடும் சடங்கில் அடங்கியிருக்கிறது. கிராமப் பொருளாதாரத்தையே மாற்றியமைக்கும் மரம் நடும் சடங்கு, நிச்சயமாக வெறும் மூடநம்பிக்கையல்ல. பெரும் பொருளாதார நிபுணர்களுக்கு கூட தோன்றாத ‘ஐடியா’வினை, இக்கிராமத்து மக்கள் காலம் காலமாக பின்பற்றி வருகிறார்கள்.

மாமரங்களால் இவ்வளவு பெரிய பொருளாதார அனுகூலங்களை அடையமுடியுமா என்று உங்களுக்கு சந்தேகம் தோன்றலாம். ஒரு நடுத்தர அளவிலான மாந்தோப்பு, ஒவ்வொரு வருடமும் ரூபாய் ரெண்டு லட்சம் வரை வருமானத்தை வழங்குகிறது. மாந்தோப்பில் கிடைக்கும் வருமானத்தை, அப்படியே சம்பந்தப்பட்ட பெண் குழந்தையின் பெயரில் வங்கியில் சேமிக்கிறார்கள்.

மாமரங்கள் தரும் வருமானத்தால் முன்பெல்லாம் கோதுமை, நெல் விதைத்து வந்த விவசாயிகளும் கூட இப்போது தோப்புகள் அமைப்பதில் ஆர்வம் காட்டுகிறார்களாம். ஊரிலேயே வயதானவர் சத்ருகன் பிரசாத் சிங். 86 வயதாகும் இவர், அந்தக் காலத்தில் கடுமையான விவசாயி. 25 ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார். தன் நிலம் முழுக்க மாமரம் மற்றும் லிச்சி மரங்களை நட்டு இன்று நிம்மதியாக இருக்கிறார்.

தர்காரா இப்போது பசுமைச்சேலை உடுத்தி, மாஞ்சோலையாக பூத்துக் குலுங்குகிறது. நம்புங்கள். தர்காரா கிராமத்தில் மாமரம் மற்றும் லிச்சி மரங்களின் எண்ணிக்கை மட்டுமே ஒரு லட்சம். இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மாமரங்கள் நன்கு வளர்ந்து வருடா வருடம் நல்ல மகசூலை தந்து வருகிறது.

அடுத்தது நம்மூர் கதை.

புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலத்துக்கு அருகில் சேந்தன்குடி என்றொரு கிராமம். இந்த ஊரில் தங்கசாமி என்றொரு விவசாயி. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பாக விவசாயத்தால் நஷ்டப்பட்டுப்போய் மனம் கலங்கி நின்றார். ஊரில் கடுமையான வறட்சி. சொத்தை விற்று, கடன்களை அடைத்து ஏதாவது ஓட்டலில் ‘சர்வர்’ வேலைக்கு சென்றுவிடலாமா என்று யோசித்தார்.

அன்று, அகில இந்திய வானொலியில் ஏதோ நிகழ்ச்சி கேட்டுக் கொண்டிருந்தார். ‘மரப்பயிரும் பணப்பயிரே!’ என்கிற தலைப்பில் பேராசிரியர் ஒருவரின் உரை. அதுதான் தங்கசாமி வாழ்வின் திருப்புமுனை. சொத்தை விற்கும் முடிவினை மூட்டை கட்டி வைத்தார்.

நூறு தேக்கு மரங்களை வாங்கி தனது நிலத்தில் நட்டார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அவை வளர்ந்து தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாக்கும் என்பது அவரது திட்டம். ஒரே ஆண்டிலேயே தங்கசாமி நட்ட மரங்கள் இருபது அடி வளர்ந்து அவரை உற்சாகப்படுத்தியது. இதே உற்சாகத்திலேயே நூறு மாங்கன்றுகளை நட்டார். அப்படியே நூறு முந்திரி, நூறு புளியங்கன்று என்று நட்டுக்கொண்டே சென்றார்.

வேம்பு, சந்தனம், ரோஸ்வுட், செஞ்சந்தனம், நெல்லி, புளி, மகோகனி என்று சுமார் நூறு வகையில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மரங்களுட, இருபத்தைந்து ஏக்கர் அளவுக்கு விரிந்த காட்டுக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார் தங்கசாமி. இந்த காட்டினுடைய மதிப்பு பல கோடி. ஓட்டலில் சர்வர் வேலைக்குச் செல்ல திட்டமிட்டவர், இன்று கோட்டீஸ்வரர்.

சேந்தன்குடியில் போய் ‘மரம்’ தங்கசாமி என்று விசாரித்துப் பாருங்கள். இவரது காட்டுக்கு வழி சொல்லுவார்கள். தனது காட்டில் மட்டுமல்ல. நாடெங்கும் மரம் வளர்க்க ஊக்குவிப்பதுதான் தங்கசாமியின் லட்சியம். திருமணங்களுக்கு சென்றால் ‘மொய்’ எழுதமாட்டார். மரகன்றுதான் பரிசளிப்பார். புதுக்கோட்டை மாவட்டம் முழுக்க பயணித்து, எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் மரம் நட்டிருக்கிறார்.

இன்று உலகெங்கும் இருந்து, தங்கசாமி வளர்த்த காடை பார்க்க ஆராய்ச்சியாளர்கள் குவிகிறார்கள். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் தங்கசாமியின் அனுபவங்கள் வேளாண் மாணவர்களுக்கு ஆராய்ச்சிப் பாடமாக போதிக்கப்படுகின்றன.

இரண்டு கதைகளையும் வாசித்து, ஆச்சரியமாக இருக்கிறதா? ஆச்சரியமோ, அதிர்ச்சியோ அடையத் தேவையில்லை. தங்கம், வெள்ளி, பிளாட்டினம், மார்பிள், கிரானைட் போன்ற உலோகங்கள், கனிமங்கள் மாதிரி மரங்களும் கூட ‘காஸ்ட்லி’ ஆனவைதான்.

உதாரணத்துக்கு செஞ்சந்தன மரம். அணு உலை கதிர்வீச்சினை தடுக்கும் சக்தி இம்மரவகைகளுக்கு உண்டு. ஒரு டன் மூன்றரை முதல் நாலு லட்ச ரூபாய் வரைக்கும் சந்தை மதிப்பில் போகும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். எத்தகைய வறட்சியையும் தாங்கி வளரக்கூடிய தன்மை கொண்டது இம்மரம்.

குறைவான ஆள் தேவை, உற்பத்தி மற்றும் பராமரிப்புச் செலவும் மிகக்குறைவு என்பதால் ‘மரம் வளர்ப்பு’ நல்ல லாபகரமான தொழிலாக விளங்குகிறது. முழுநேரமும் இத்தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டிய தேவையுமில்லை. நிறைய பேர் ‘பார்ட் டைம்’ மற்றும் ‘வீக் எண்ட்’ தொழிலாகவும் கூட இத்தொழிலை செய்து வருகிறார்கள்.

குமிழ், முள்ளில்லா மூங்கில், மலைவேம்பு, சந்தனம் ஆகிய மரங்கள், இத்தொழிலுக்கு நன்கு தோதுப்படும் மரங்கள். குறிப்பாக குமிழ்மரம். தேக்கு வகையைச் சார்ந்த இம்மரம் வெகுவேகமாக வளரும். ஒரே ஒரு மரம், எட்டு ஆண்டுகளில் ஒரு டன் அளவுக்கு வளர்ந்து நிற்கும். இன்றைய தேதியில் விலை எட்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு சுமார் ஆயிரத்து இருநூறு மரங்களை வளர்க்க முடியுமென்றால், லாபத்தை நீங்களே கால்குலேட்டர் கொண்டு கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

“மரக்கன்றுகளின் விலை இருபதிலிருந்து நூறு ரூபாய்தான். நம் கண்ணெதிரிலேயே அவை வளர்ந்து, பலன் தர ஆரம்பிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு விலையே இல்லை” என்கிறார் மர ஆர்வலரான நடேசன்.

அந்தகாலத்து அண்ணா பல்கலைக்கழக பொறியாளரான நடேசனுக்கு இப்போது வயது எழுபது. சொந்தமாக ஒரு தொழிற்சாலை அம்பத்தூரில் வைத்திருந்தார். தொழில் நிமித்தம் 1980ஆம் ஆண்டு ஜப்பானுக்கு சென்றிருந்தபோது ‘க்ரீன் எர்த்’ என்றொரு கண்காட்சியை கண்டுகளிக்கும் சந்தர்ப்பம் இவருக்கு வாய்த்தது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நிலப்பரப்பில் நாற்பது சதவிகித காடுகளை கொண்டிருந்ததாகவும், அதன்பிறகு முப்பதாண்டுகளிலேயே வெகுவேகமாக அந்நிலை மாறி பதினான்கு சதவிகித காடுகளையே கொண்டிருப்பதாகவும் ஒரு செய்தியை அங்கே அறிந்தார். நாட்டின் பசுமையை மனிதர்கள் சுயநலத்துக்காக அழித்துக் கொண்டிருக்கிறோமே என்ற குற்றவுணர்ச்சி தோன்றியது. ஊர் திரும்பியதும் கும்மிடிப்பூண்டியில் 18 ஏக்கர், காரனோடையில் 6 ஏக்கர் நிலம் வாங்கி மரங்கள் வளர்க்க ஆரம்பித்தார்.

இன்று தனது ஓய்வுக்காலத்தை தான் வளர்த்த மரங்களோடு மகிழ்ச்சியாக கழித்துக் கொண்டிருக்கிறார். இத்தனை ஆண்டுகளில் இவர் வளர்த்த மரங்களின் எண்ணிக்கை மட்டுமே இருபதாயிரம். தொழிலதிபரான இவர் ‘மரம் வளர்ப்பும் நல்ல லாபகரமான தொழிலே’ என்று பொருளாதாரரீதியான பார்வையில் சுட்டிக் காட்டுகிறார்.

“மரம் வளர்ப்பினை சுற்றுச்சூழலைக் காக்கவோ, உலகவெப்பமயமாதலை குறைக்கவோ மட்டுமே செய்ய வேண்டும் என்பதில்லை. வங்கியில் வைப்புநிதி போட்டு வைப்பது மாதிரி கூட வளர்க்கலாம். கனியாகவோ, பூவாகவோ, விறகாகவோ, மருந்தாகவோ ஏதோ ஒரு வகையில் நீங்கள் வளர்த்த மரம் உங்களுக்கு நிறைய திருப்பித் தரும். தரிசு நிலம் கையகலம் கூட இல்லை என்கிற நிலை வரவேண்டும். சும்மா கிடக்கும் நிலங்களில் எல்லாம் சவுக்கு, மூங்கில் என்று கிடைத்த மரங்களை நட்டுவைத்தால், காலப்போக்கில் அவை நிறைய வருமானத்தை அள்ளித்தரும்” என்கிறார் நடேசன்.

மரம் வளர்ப்பு என்பது புதிய விஷயமில்லை. பாரம்பரியமாக நம் முன்னோர் செய்து வந்ததுதான். என்ன, இடையில் நகரமய சொகுசில் எல்லாவற்றையும் மறந்துவிட்டோம். மீண்டும் அதைத்தொடர வேண்டிய அவசியம் ஏற்பட்டு வருகிறது. ஆளுக்கு ஒரு மரமாவது நட்டு, நாமும்தான் இந்த மகிழ்ச்சியை அனுபவித்துப் பார்ப்போமே?


மரம் வளர்ப்பு : சில மகிழ்ச்சித் துளிகள்!

• மதுரை மாவட்டத்தில் இருக்கும் கிராமம் மாத்தூர். இந்த ஊர் கண்மாய் கரைகளில் பலன் தரும் புளிய மரங்களை பொதுமக்கள் நட்டு, பலன் பெற்று வருகிறார்கள். விறகுக்காக கண்மாய் மாதிரி பகுதிகளில் கருவேல மரங்களை வளர்ப்பது வழக்கம். இவை நிலத்தடி நீரை வெகுவாக உறிஞ்சிவிடுவதால் மாத்தூர் மக்கள் இவற்றை அழித்து, கரையோரங்களில் புளியமரங்களை நட்டு வருகிறார்கள். ஆண்டு தோறும் இம்மரங்களில் புளியம்பழம் பறிக்க ஏலம் விடப்படுகிறது. ஏலத்தொகையை அரசு கஜானாவுக்கு வருவாயாகவும் கொடுத்து அசத்தி வருகிறார்கள் மாத்தூர் மக்கள்.

• சோளங்குருணி என்கிற கிராமமும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தது. இந்த ஊரின் ஊடே செல்லும் நெடுஞ்சாலையின் இருபுறமும் பொதுமக்களால் புளிய மரங்கள் ஏராளமாக நட்டு வளர்க்கப்பட்டது. இம்மரங்கள் நெடுஞ்சாலைத் துறைக்கே சொந்தமென்றாலும், பொதுமக்கள் முன்வந்து வளர்த்தவை என்பதால், இதில் கிடைக்கும் வருமானத்தை கிராமவளர்ச்சித் திட்டங்களுக்கே நெடுஞ்சாலைத்துறை தந்துவிடுகிறது.

• திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் ஒரு சர்வதேச அமைப்பு - The International Small Group Tree Planting (TIST) – ஒரு லட்சம் மரங்களை நட திட்டமிட்டிருக்கிறது. இம்மரங்கள் முழுக்க அப்பகுதி சிறு விவசாயிகளின் நிலங்களில் நடப்படும். விவசாயிகளின் வழக்கமான பணிகளோடு, மரம் வளர்ப்பையும் சேர்த்து செய்வதின் மூலம் கூடுதல் வருவாயை அவர்கள் ஈட்ட முடியும் என்ற நோக்கத்தில் இந்த மரங்கள் நடப்படுகின்றன.



என்னென்ன மரங்களை வளர்க்கலாம்?

மணற்பாங்கான கரையோர நிலங்களில் வளர்க்கக் கூடியவை : பின்னை, முந்திரி, சிவகுண்டலம், பூவரசம், தென்னை, பனை, புங்கன், வேம்பு, நெட்டிலிங்கம், அழிஞ்சி, நாட்டு வாதுமை.
சிறுமரங்கள் : புங்கன், சரக்கொன்றை, கல்யாண முருங்கை, முருங்கை, பெருங்காலி, தங்கபட்டி, மயில் கொன்றை, கோவர்தனம், பவழமல்லி, மந்தாரை, தங்க அரளி, ரெட் கார்டியா, செண்பகம், கறிவேப்பிலை

மரச்சாலை மரங்கள் : வேம்பு, மகிழம், செவ்வில்வம், மலைவேம்பு, பிணாரி, இலவம்பஞ்சு, ஒதியமரம், வாகைமரம், கொண்டைவாகை, இயல்வாகை, வாதா நாராயண மரம், பூந்திக்கொட்டை மரம், மாவுக்காய், நுணா, பாலை, தேன்பூச்சி, மூக்குச்சளி, தூங்குமூஞ்சி
பழவகை மரங்கள் : நாவல், நெல்லிக்காய், பலாமரம், வில்வமரம், மாமரம், இலுப்பை, கொடுக்காப்புளி, கொய்யா, விளா, சபோட்டா, இலந்தை, சீதாப்பழம், மாதுளை, அரநெல்லி, கரம்போலா, பிம்ப்ளீ

பறவைகளை வசீகரிக்கும் மரங்கள் : கொய்யா, கறிவேப்பிலை, நெட்டிலிங்கம், கல்யாண முருங்கை, நெய்பழம், கம்பளி, இலுப்பை, ஸபோட்டா, அகத்தி, அத்தி, அழிஞ்சி

அழகிய பூக்கள் பூக்கும் மரங்கள் : பூந்திக்கொட்டை, பூமருது, அசோகா, மந்தாரை, திருவாட்சி, கொக்கு மந்தாரை, ஃப்ளேம் ஆஃப் தி ஃபாரெஸ்ட், மரவல்லி, சரக்கொன்றை, மஞ்சக் கொன்றை, கேஸியா ஜாவா, ஆத்துப் பூவரசு, நெருப்புக் கொன்றை

*அரசமரம், ஆலமரம் போன்றவை பரந்து வளரக்கூடிய பெரிய மரங்கள். அவை விசாலமான இடமாக இருந்தால் மட்டுமே வளர்க்கப்பட வேண்டும்.


எப்போது நடலாம்?

மரக்கன்றுகளை நட மழைக்காலமே சிறந்தது. பருவமழை துவங்கும் ஜூன் முதல் செப்டம்பர் வையிலான மழைக்காலம் இதற்கு ஏற்றது. தாழ்வான பகுதிகளில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் நீர் முற்றிலுமாக வடிந்துவிடுவதால், இம்மாதங்கள் ஏற்றவை. மரக்கன்றுகளை காலை 6 மணி முதல் 10 மணிக்குள் நடுவது நல்லது. இல்லையேல் மாலை 3 மணி முதல் 6 மணிக்குள் நடலாம்.


மரக்கன்றுகளை எங்கே வாங்கலாம்?

வனத்துறை அலுவலகங்கள் அருகில் இருந்தால், அவர்களிடம் விசாரித்து வாங்கலாம். வனத்துறை தோட்டங்களில் குறைந்த விலையில் தரமான மரக்கன்றுகள் கிடைக்கும். இல்லையேல் நர்சரிகளில் நீங்கள் விரும்பும் மரக்கன்றுகளை வாங்கி நடலாம். மரக்கன்றுகளை வாங்கும் இடத்திலேயே, அவற்றை பராமரிப்பது, உரமிடுவது குறித்த ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.


நகரங்களில் மரம் வளர்ப்பு!

“நாங்கள் மண் தரையே கண்ணில் படாத கான்க்ரீட் காடுகளில் வசிக்கிறோம். நாங்கள் என்ன மரத்தை வளர்ப்பது?” என்று நகரவாசிகள் கேட்கலாம். உங்கள் வீட்டுக்கு முன்பு கார், பைக் விட கொஞ்சமேனும் இடம் நிச்சயம் இருக்குமில்லையா? அது போதும். கொத்தனார் ஒருவரை கூப்பிட்டு 2க்கு 2 அளவில் குழிதோண்டி, முருங்கை வளர்க்க ஒரு கட்டமைப்பு ஏற்படுத்தித்தர சொல்லுங்கள். பெரிய பராமரிப்பு தேவையின்றி அதுபாட்டுக்கு வளரும் மரம் முருங்கை மரம். தெரிந்தவர்களிடம் ஒரு கிளை வாங்கி வந்து நட்டு வைத்தால், அது பாட்டுக்கு வளர்ந்து நிற்கும். இரண்டு வருடங்களில் ஐநூறு, அறுநூறு காய்கள் காய்த்துத் தொங்கும். முருங்கை கீரையும் போனஸ்.

(நன்றி : புதிய தலைமுறை)

21 கருத்துகள்:

  1. நல்ல பல விசயங்கள் உள்ள பயனுள்ள கட்டுரை பாஸ்.நன்றி.

    பதிலளிநீக்கு
  2. மிக அருமையான ஆழ்ந்த கருத்துக்கள் கொண்ட கட்டுரை. மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் அதே வேளையில் மரமும் (money) பணமாகும் என்ற கருத்தை மிக ஆழமாகவும் அழுத்தமாகவும் சுட்டிக்காட்டியமை பாராட்டுக்குறியது.

    பதிலளிநீக்கு
  3. Yuva,

    Salutations for such a fantastic articles.

    Keep posting more like this, to create a positive change

    பதிலளிநீக்கு
  4. ஆக்கபூர்வமானதும் தகவல்கள் நிறைந்ததுமான ஒரு கட்டுரை. நல்லா இருங்க!

    பதிலளிநீக்கு
  5. அவசியமான செய்தி.. நானும் இங்கு அமெரிக்கா வரும் முன்பு நூறு தேக்கு செடிகளை நட்டுவிட்டு வந்தேன்.. எந்த நிலையில் இருக்கிறது என்று தெரியவில்லை. பதிவுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  6. அற்புதமான பதிவு யுவகிருஷ்ணா!!!

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா6:11 PM, ஜூன் 11, 2011

    It is a very useful article. hatsoff

    P. AMARNATH SANTH

    பதிலளிநீக்கு
  8. எவ்வளோ பெரிய பதிவு.. அருமையான தகவலும் கூட. முழுமையாக வாசிக்க முடியவில்லை சகோ. தரவிறக்கி வைத்துள்ளேன் பிறகு படிக்கலாம் என்று,

    நேரம் இருந்தா இங்கயும் வாங்க..
    சிறையிலிருந்து ராசா எழுதிய கடிதம்

    பதிலளிநீக்கு
  9. Very useful information , even if it is not profitable it is good for environment and they give peace to us and bring rain . People should give importance to its maintenance like the importance given at the time of planting

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா7:30 PM, ஜூன் 12, 2011

    Great artical....Thank you

    பதிலளிநீக்கு
  11. அருமையான கட்டுரைங்ணா! ‘மரந்தான் மரந்தான், மனிதன் மறந்தான்’கிற வைரமுத்து வரிகள்தான் சட்டுனு ஞாபகத்துக்கு வருது.

    பதிலளிநீக்கு
  12. மரம் வளர்ப்பது தமக்கும் நாட்டுக்கும் நல்லது என்று உணர்ந்து பலர் அனுபவ் (மேக்ஸ் வொர்த்) முதலிய திட்டங்களில் சேர்ந்தது பலருக்கு நினைவு இருக்கலாம். சந்தன மரம், மா மரம், புளிய மரம் என்று திட்டங்கள் கொண்டு வந்தனர். பல்வேறு காரணங்களால் ஒன்றும் விளைந்ததாகத் தெரியவில்லை. பணம் இழப்பு தான். ஆனால் ஒன்று: மேக்ஸ் வொர்த்தின் சிவகங்க மாவட்டம், கல்லால் அருக்காமையில் உள்ள பாகனேரி புலியன் தோப்பு திட்டத்தில் சேர்ந்தவர் இப்பதிவை வாசித்தால் எனக்கு எ-மெயில் செய்யவும். எனக்கும் அரை ஏக்கர் உள்ளது. ஏழு மாதங்களில் பணி ஓய்வு பெறப்போகும் நான் ஒத்த எண்ணம் உள்ள அன்பர்கள் தமக்கு எதிர்ப்பு இல்லை எனத் தெரியப் படுத்தினால், மூன்று-ஐந்து ஏக்கரை பயன் பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என நினைக்கிறேன். என் முகவரி: நெற்குப்பை.தும்பி@ஜிமெயில்.கம
    பின்னூட்டமாக பதிப்பித்த யுவக்ருஷ்ணாவுக்கும் படித்து நண்பர்களுக்கு சொல்லியவர்க்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லா2:17 PM, ஜூன் 14, 2011

    Excellent article with rich facts! Thank yo!

    பதிலளிநீக்கு
  14. thappili@hotmail.co.uk2:23 AM, ஜூன் 15, 2011

    நல்லதொரு பதிவு.
    காலப்போக்கில் மொத்த உலகமுமே, வாழ்வதற்காக விவசாயத்தை நோக்கி முன்னேற வேண்டியிருக்கும்.
    இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் அறிவுரைகள் திருக்குறளாய் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  15. மிக அருமையான கட்டுரை யுவா. நன்றி

    பதிலளிநீக்கு
  16. மிக அருமையான ஆழ்ந்த கருத்துக்கள் கொண்ட கட்டுரை. மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் அதே வேளையில் மரமும் (money) பணமாகும் என்ற கருத்தை மிக ஆழமாகவும் அழுத்தமாகவும் சுட்டிக்காட்டியமை பாராட்டுக்குறியது.

    பதிலளிநீக்கு
  17. மிக அருமையான ஆழ்ந்த கருத்துக்கள் கொண்ட கட்டுரை. மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும். மரகன்றுகள் கிடைக்கும் இடமும் தெரிய படுத்துங்கள்

    பதிலளிநீக்கு
  18. 1100 teak For Sale

    Size
    Width- 30to50
    Leanth- 35to55
    Phone - 9600641270

    பதிலளிநீக்கு
  19. செம்மரம் வளர்த்தால் பாதுகாப்பது எப்படி

    பதிலளிநீக்கு