எக்ஸலெண்ட்... படம் பற்றி இதைவிட வேறென்ன சொல்வது? பாராட்டுவது
என்றால் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமையும், ஏதேனும் ஒரு காரணத்துக்காக பாராட்டிக்
கொண்டே இருக்கவேண்டும்.
குறைகளின்றி எந்த படைப்பையும் முழுமையாக உருவாக்க முடியாது.
அப்படி உருவாக்கும் வாய்ப்பு இருந்தால், கடவுள் இருப்பதும் உண்மையாகிவிடும்.
வழக்கு எண்ணும் விதிவிலக்கல்ல. ஆசையாக பெற்றெடுத்த அழகான குழந்தைக்கே ‘திருஷ்டிப்
பொட்டு’ வைத்துத்தானே அழகு பார்க்கிறோம். தனக்கு அடுத்த படம் இயக்கும் வாய்ப்பு
கிடைக்கவே கிடைக்காது என்று நம்பியோ என்னவோ, நான்கைந்து படமாக எடுக்கவேண்டிய மொத்த
சரக்குகளையும் அவசரமாக வழக்கு எண்ணில் வாரி இறைத்திருக்கிறார் பாலாஜி சக்திவேல்.
டீனேஜ்களில் இருக்கும் விளிம்புநிலை சமூக இளைஞன் – இளம்பெண்.
அதற்கு நேரெதிர் நிலையில் இருக்கும் அதே வயதுகளில் பணக்கார பையன் – மேல்நடுத்தர வர்க்கத்து
பள்ளி மாணவி. இயல்பாக இவர்களது சிலநாள் வாழ்வை படம்பிடித்துக் காட்டியிருப்பதின்
மூலம் சமூகம் எவ்வளவு பெரிய இடைவெளிகளோடு நொண்டியடித்துக் கொண்டிருக்கிறது என்பதை
புரியவைக்கிறார் இயக்குனர்.
சாலையோர சாப்பாட்டுக் கடையில் வேலைபார்க்கும் வேலுவின்
ரிஷிமூலத்தையெல்லாம் விலாவரியாக காட்டியிருப்பதில் ஆவண நெடி அதிகம். வேலு வடநாட்டு
முறுக்குக் கம்பெனியில் வேலை பார்க்கும் காட்சிகள் எல்லாம் வழக்கு எண்ணின் கதைக்கு
அனாவசியம். இதெல்லாம் படத்தின் நீளத்துக்கு மட்டுமே உதவும். அக்காட்சிகள்
இல்லாமலேயே அப்பாத்திரத்தின் தன்மையை பார்வையாளன் பிடித்துக் கொள்வான்.
இரண்டாம் பாதி டீனேஜ் இன்பாச்சுவேஷன் காட்சிகள்
பெரும்பாலும் மிகையாக நாடகத் தன்மையோடே நகர்கிறது. பணக்காரர்கள், போலிஸ்காரர்கள்,
அரசியல்வாதிகள் எல்லாம் கெட்டவர்களாகவேதான் இருந்துத் தொலைக்கவேண்டும் என்று
ஏதாவது சட்டம் கிட்டம் இருக்கிறதா? மாணவ சமூகத்தினரிடையே செல்போன் எத்தகைய
கலாச்சார எதிர்விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை அக்கறையோடு
அணுகியிருப்பதை பாராட்டியே ஆகவேண்டும். அதே நேரம் செல்போனால் பாசிட்டிவ் விளைவுகளே
இல்லை என்று இயக்குனர் நம் தலைமீது அடித்து சத்தியம் செய்கிறாரோ என்றும் அஞ்சத் தோன்றுகிறது.
அரசியல் – காவல்துறை – முதலாளிகள் இவர்களுக்கிடையே தொடர்புக்கண்ணியாக பணம் மட்டுமில்லை, சாதியும் இருக்கிறது என்பதை விளைவுகளை எண்ணாமல் பட்டவர்த்தனமாக போட்டு உடைத்திருக்கும் பாலாஜி சக்திவேலின் துணிச்சலை கரகோஷம் எழுப்பி வரவேற்கலாம். இதே சாதியை தனது இரண்டாவது படமான ‘காதல்’-லிலும் வம்புக்கு இழுத்திருந்தார் என்பது நினைவுக்கு வருகிறது. தென்மாவட்டங்களில் பாலாஜி சக்திவேலை குறிவைத்து போஸ்டர்கள் ஒட்டப்படலாம்.
அரசியல் – காவல்துறை – முதலாளிகள் இவர்களுக்கிடையே தொடர்புக்கண்ணியாக பணம் மட்டுமில்லை, சாதியும் இருக்கிறது என்பதை விளைவுகளை எண்ணாமல் பட்டவர்த்தனமாக போட்டு உடைத்திருக்கும் பாலாஜி சக்திவேலின் துணிச்சலை கரகோஷம் எழுப்பி வரவேற்கலாம். இதே சாதியை தனது இரண்டாவது படமான ‘காதல்’-லிலும் வம்புக்கு இழுத்திருந்தார் என்பது நினைவுக்கு வருகிறது. தென்மாவட்டங்களில் பாலாஜி சக்திவேலை குறிவைத்து போஸ்டர்கள் ஒட்டப்படலாம்.
பாடி மவுண்ட் ரிக் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே சில
காட்சிகளில் அதை பயன்படுத்தி இருப்பதாக தோன்றுகிறது. அக்காட்சிகள் ஏதோ ப்ளூ மேட்
போட்டு எடுத்தமாதிரியாக ஒட்டாமல் பல்லிளிக்கிறது. பின்னணி இசை கொடுமை. இதைமாதிரி
தீவிர கதையம்சமுள்ள படங்களை எடுத்துவிட்டு, நேராக இளையராஜாவிடம் போய்விடலாம். கண்ணீரை
துடைத்துக்கொண்டே கலக்கலாக பின்னணி அமைத்துவிடுவார்.
தியேட்டரில் பார்த்தாலும் கூட என்னவோ வீட்டில் அமர்ந்து
கலைஞர் தொலைக்காட்சியில் ‘நாளைய இயக்குனர்’ பார்ப்பதைப் போன்ற உணர்வு வருவதை
தடுக்க முடியவில்லை. நான்கைந்து குறும்படங்களை மொத்தமாக பார்த்ததைப் போன்ற
அனுபவத்தை தருகிறது. சிக்கனமான படமாக்கம் இதற்கு காரணமாக இருக்கலாம். வழக்கமான சினிமா
ஃபீலிங் சுத்தமாக இல்லை. க்ளைமேக்ஸ் எண்டிங் பாசிட்டிவ்வா அல்லது நெகட்டிவ்வா என்கிற பட்டிமன்றம் இன்னும் மனசுக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது.
சர்வநிச்சயமாக ‘வழக்கு எண் 18/9’ தமிழ் சினிமாவுக்கு ஒரு
ட்ரெண்ட் செட்டர். உப்புமா இயக்குனர்கள் இதை படுமோசமாக பிரதியெடுத்து அடுத்தடுத்து
வெளியிடப்போகும் மொக்கைப் படங்களை நினைத்தால் இப்போதே வயித்தை கலக்குகிறது.