'உலகம் சுற்றும் வாலிபன்'. 1972ல் வெளியானபோது வாலிபனுக்கு வயது
55. என்ன தில் இருக்க வேண்டும். இன்னும் குறைந்தது நூறு ஆண்டுகளுக்கு எவரும் தமிழகத்தில்
எட்ட முடியாத மாஸ். நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்று மூன்றே மூன்று படங்களைதான் தலைவர் இயக்கியிருக்கிறார். எம்.ஜி.யார் பிக்சர்ஸ் லோகோ அதிகாரப்பூர்வமாக வெள்ளித்திரைக்கு
வந்த முதல் படம். தலைவரின் மாஸ்டர்பீஸ். அந்த காலத்திலேயே அறுபது நாட்களில் தேவிபாரடைஸ் திரையரங்கில் மட்டும் ஐந்து லட்சத்தை வசூலித்த வசூல்
சக்கரவர்த்தி. சென்னையிலும், மதுரையிலும் வெள்ளி விழா கண்ட படம். தொடர் ஹவுஸ்ஃபுல்
காட்சிகளில் இன்று வரை சாதனையை தக்கவைத்துக் கொண்டிருக்கும் படம். தடைகளை தவிடுபொடியாக்கிய
சரித்திரம்.
இப்படத்தை திரையரங்கிலும், டி.வி.டி.யிலும் எத்தனைமுறை பார்த்திருப்பேன்
என்பதற்கு கணக்கே இல்லை. கண்ணை மூடிக்கொண்டு படத்தின் ஸ்க்ரிப்டை மடமடவென்று ஒரு
192 பக்க நோட்டுப்புத்தகத்தில் எழுதித்தள்ள முடியும். இத்தனை முறை பார்க்குமளவுக்கு
படத்தில் என்னதான் இருக்கிறது. உலகத்தரமா.. வித்தியாசமான கதையா? இது இரண்டுமே இல்லை.
ஃப்ரேமுக்கு ஃப்ரேம் கொண்டாட்டம். கொண்டாட்டத்தைத் தவிர வேறெதுவுமில்லை. தலைவரே பாடுவது
போல் 'எங்கேயும் எப்போதும் கொண்டாட்டம்'
இந்தியாவின் தலைசிறந்த(?) விஞ்ஞானிகளில் ஒருவரான முருகன் மின்னலின்
ஒட்டுமொத்த சக்தியை சிறு கேப்ஸ்யூல்களில் அடக்கிவிடக்கூடிய தொழில்நுட்பத்தை கண்டறிகிறார்.
அதை ஆக்கசக்திக்கு பயன்படுத்தும் விதமான அடுத்தக்கட்ட ஆராய்ச்சிகளுக்கு முயல்கிறார்.
அழிவுசக்திகளுக்கு இந்த ஃபார்முலாவை விற்று கோடி கோடியாக சம்பாதிக்க நினைக்கிறார் சக
விஞ்ஞானி பைரவன். ஃபார்முலாவை முருகன் எங்கோ மறைத்துவைத்திருக்க அதை தேடும் முயற்சியில்
ஈடுபட்டிருக்கும் பைரவன் முருகனை கடத்தி விடுகிறார். கடத்தலுக்கு முன்பாக முருகன் நினைவாற்றலை
இழந்துவிடுகிறார். ஒருபக்கம் வில்லன் குழு ஃபார்முலாவை தேட, மறுபுறம் முருகனின்
தம்பியும், போலிஸ் சிஐடியுமான ராஜூ ஃபார்முலாவையும், அண்ணனையும் சேர்த்து தேடுகிறார்.
ஜப்பான், ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர் என்று பலநாடுகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு
இறுதி வெற்றி நல்லவர்களுக்கே.
* இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் தலைவர் ஒரு கெட்டப்புக்கு
வித்தியாசம் காட்டுவதற்காக குறுந்தாடி வைத்து அசத்துவார். விஞ்ஞானி பாத்திரம் என்பதால் தாடி பொருத்தமாகவே இருக்கும்.
* தலைவர் ஆங்கிலத்திலும் விட்டு விளாசியிருப்பார். ஹோட்டல் ரிசப்ஷனில்
"மே ஐ மீட் மிஸ்டர் பைரவன்?" என்று ஆங்கிலத்தில் கேட்கும்போது அரங்கமே அதிரும்.
* லதா, மஞ்சுளா, சந்திரகலா, தாய்லாந்து நடிகை என்று தலைவருக்கு
நாலு ஹீரோயின்கள். ஒவ்வொரு ஹீரோயினுடனும் குஜாலான டூயட்கள் உண்டு.
* மனோகர், அசோகன், தேங்காய்சீனிவாசன், நம்பியார் என்று ஏராளமான
வில்லன்கள். ஏராளமான சண்டைகள். சிகப்பு விளக்கு ஒளிகாட்டவே தலைவர் பல ஆயிரங்களை செலவழிக்க
வேண்டியிருந்திருக்கும்.
* சந்திரகலாவை ஒரு நடன ஓட்டலில் இருந்து தலைவர் மீட்கும் காட்சியில்
ஸ்டண்ட் அட்டகாசம். தலைவரை விட பலமடங்கு எடை கூடி இருக்கும் வில்லனை அசால்ட்டாக தூக்கி
எறிவார். அந்த சண்டைகாட்சியின் போது வளையவரும் அயல்நாட்டு கவர்ச்சித்தாரகைகளால் நம் கண்ணுக்கும் பசுமை.
* இறுதிக்காட்சி ஸ்கேட்டிங் ஃபைட்டுக்காகவே வாத்தியார் ஸ்கேட்டிங்
பயிற்சி எடுத்திருந்தார்.
* வாலி - எம்.எஸ்.வி கலக்கல் காக்டெயில். பாடல்கள் ஒவ்வொன்றும் காதில்
தேன்மழை. சீர்காழி குரலில் 'வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்' கம்பீரமான ஓபனிங்
சாங்க். 'லில்லி மலருக்கு கொண்டாட்டம்' விஷூவல் ட்ரீட். 'சிக்குமங்கு சிக்குமங்கு சிக்கப்பாப்பா'
பாட்டில் தலைவரின் குழந்தைத்தனம் வெளிப்படும். 'தங்கத் தோணியிலே' அசத்தலாக போட்டில்
படமாக்கப்பட்ட பாடல். 'நிலவு ஒரு பெண்ணாகி' பாடலில் வரும்
வார்த்தைகள் 'மடல்வாழை துடையிருக்க மச்சமொன்று அதிலிருக்க' இளமைக்குறும்பு. 'பச்சைக்கிளி
முத்துச்சரம்' பட்டாசு, சிகப்புச்சட்டை, நீலநிற ஃபேண்ட், கழுத்தில் கர்ச்சீப், டீனேஜ்
ஹீரோயின் என்று அதகளப்படுத்தியிருப்பார் தலைவர், போதாதற்கு 'கண்ணில் ஆடும் மாங்கனி
கையில் ஆடுமா?' கிளர்ச்சியூட்டும் வரிகள். 'பஞ்சாயீ' இனிமை. 'அவள் ஒரு
நவரச நாடகம்' படமாக்கப்பட்ட விதம் ஆச்சரியம். 'உலகம் அழகுக்கலைகளின் சுரங்கம்' டோக்கியோ
டூர்.
* படத்தில் எனக்கு ஒரே ஒரு குறை. தலைவரின் இளமைக்கு ஈடுகொடுக்க
முடியாமல் ஹீரோயின் சந்திரகலா முத்திய முகமாக இருப்பார். புரட்சித்தலைவி நடித்திருந்தால்
செம மஜாவாக இருந்திருக்கும். அந்த நேரத்தில் தலைவருக்கும், தலைவிக்கும் ஊடல் இருந்ததாக
சொல்வார்கள். ஆனாலும் சந்திரகலாவின் நடனம் பரவசம்.
* "நீங்க என்னாச்சி? என்னாச்சின்னு கேட்குறீங்க.. அவர் யார்
ஆட்சி? யார் ஆட்சின்னு கேட்குறாரு...", "நாயோட திறமைய அவர் பார்க்கட்டும்.
என்னோட திறமைய நீ பாரு" - பஞ்ச் டயலாக்குகள், தவுசண்ட் வாலா சரங்கள்.
* பச்சைக்கிளி டூயட்டில் தாய்லாந்து ஹீரோயினை கசக்கி, தடவிய அடுத்தக்
காட்சியில் தலைவர் "தங்கச்சீ..." என்று பாசமழை பொழிய, ஹீரோயினும் "அண்ணா.."
என்று ஆரத்தழுவிக்கொள்வது அசத்தல் காமெடி. நாகேஷின் காமெடியை விட தலைவரின் காமெடி படத்தில்
கொடிகட்டிப் பறக்கும்.
* தெத்துப்பல் நம்பியாருடனான சண்டைக்காட்சி தான் படத்தின் ஹைலைட்.
புத்தவிகாரத்தில் நடைபெறும் சண்டையில் அனலும், ஆவியும் பறக்கும். புத்த விகாரத்துக்குள்
நுழையும்போது தலைவர் ஷூவை கழட்டிவிட்டு நுழையும் காட்சியில் இன்றும் கைத்தட்டல்.
* படத்தின் படப்பிடிப்பின் போது தலைவர் திமுகவில் இருந்ததால்
ஆங்காங்கே கருப்பு சிகப்பு தெரியும். மிகக்கஷ்டப்பட்டு எடிட்டிங்கில் அவற்றை வெட்டியிருந்தாலும்
பலகாட்சிகளில் கருப்பு சிகப்பு இன்னமும் பளீரிடுகிறது.
* படத்தின் எண்ட் கார்டில் 'எமது அடுத்தத் தயாரிப்பு கிழக்கு
ஆப்பிரிக்காவில் ராஜூ' என்று போடுவார்கள். தலைவர் முதல்வர் ஆகிவிட்டதால் இன்னொரு சாதனைப்படத்தை
தமிழ் திரையுலகம் இழந்தது.
* கடைசியாக ராஜூ கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு ஃப்ளைட்டில் ஏறும்போது
லதா, சந்திரகலா இரண்டு ஃபிகர்களையும் ஓட்டிக்கொண்டு போவார். ராஜூவுக்கு திருமணம் ஆனது தெரியாமல் லதாவிடம்
அவரது அண்ணி மஞ்சுளா செய்த சத்தியத்துக்காக துணைவியாராக ஏற்றுக்கொண்டாரா? என்ற கேள்விக்கு
இன்னமும் விடை தெரியவில்லை.