5 ஜூன், 2012

டாக்டர் வாத்தியார்


“நல்லா இருக்கீங்களா?” ரொம்பநாள் கழித்து பார்ப்பவர்கள் உங்களை கேட்கும் முதல் கேள்வி இது. நீங்கள் நன்றாகவே இல்லையென்றாலும் “நல்லாருக்கேன்” என்றுதான் சம்பிரதாயமாக சொல்வீர்கள்.

சுந்தரம் வாத்தியார் இந்த சம்பிரதாயங்களை கட்டுடைப்பவர். எப்போது யார் கேட்டாலும், “பி.பி. எகிறிடிச்சி. சுகர் கண்ட்ரோல்ல இல்லை. பாதத்தை எடுத்தே வைக்க முடியலை. தலைவலி உசுரு போவுது. ராவுலே நெஞ்சு படபடன்னு அடிச்சிக்குது. தூக்கமே இல்லை. காய்ச்சல். சளி. இருமல்” என்று ஏதோ ஒரு சுகவீனத்தை கண்டிப்பாக சொல்லுவார். இவரைப்போய் ஏன்தான் நலம் விசாரித்தோமோ என்று கேட்டவர் நொந்துக் கொள்வார்.

நிஜமாகவே சுந்தரம் வாத்தியார் கொஞ்சம் உடல்நலிவானவர்தான். அவரது ஐம்பது கிலோ உடம்பில் இல்லாத வியாதிகளே இல்லை எனலாம். எய்ட்ஸைத் தவிர எல்லா வியாதியும் உண்டு. ஒருமுறை இவரை பரிசோதித்த அசோக் டாக்டரே அசந்துப்போனார். “இவ்ளோ வியாதிகளை வெச்சுக்கிட்டு நீங்க உசுரோட இருக்குறதே பெரிய சாதனை வாத்தியாரே!” என்று பாராட்டுப் பத்திரமும் வாசித்தார். வாத்தியாரின் வீட்டில் அவருக்கென்று பிரத்யேகமாக ஒரு மெடிக்கல் ஷாப்பே உண்டு. டாக்டர் பரிந்துரைக்கும்அலோபதி மருந்துகள் மட்டுமின்றி, நாட்டு மருந்துகளையும் தானே விசாரித்துத் தெரிந்துக்கொண்டு, தனக்கானதை கண்டுபிடித்து பயன்படுத்துவார் வாத்தியார்.

வாழ்க்கை முழுக்க தன் உடலையே பரிசோதனைக் கருவியாக்கி விளையாடிக் கொண்டிருப்பதால், வாத்தியாருக்கு எந்த நோய்க்கு என்ன மருந்து, என்ன ட்ரீட்மெண்ட் எடுக்கவேண்டும் என்பதெல்லாம் கன்னாபின்னாவென்று அத்துபடி. எம்.பி.பி.எஸ். படிக்காமலேயே ஒரு டாக்டருக்குரிய அறிவு அவருக்கு இயல்பாகவே அமைந்துவிட்டது.

தெருமுனை பிள்ளையார் கோயில் அர்ச்சகருக்கு ஒருமுறை தீராத இருமல். எத்தனையோ முறை டாக்டரிடம் போயும் வருடக் கணக்கில் சரியாகவில்லை. யதேச்சையாக இதைக்கேள்விப்பட்ட வாத்தியார், அர்ச்சகர் கேட்காமலேயே இலவச மருத்துவ ஆலோசனையாக ஏதோ நாட்டு மருந்து பரிந்துரைத்தார். ‘ஒருமுறை முயற்சித்துதான் பார்ப்போமே’ என்று அர்ச்சகர் முயற்சிக்க, அதிசயமாய் ஒரே வாரத்தில் அவருடைய பிரச்சினை தீர்ந்தது. கோயிலுக்கு வருபவர்களிடமெல்லாம் அவர் சொல்லி, சொல்லி மாய.. வாத்தியாரின் புகழ் மின்சாரவேகத்தில் ஊருக்குள் பரவியது.

‘மூட்டுவலி’ புகழ் மாமிகள் சிலர் வாத்தியாரிடம் தங்களது நிரந்தரமான இப்பிரச்சினைக்கு தீர்வு உண்டா என்று ஆலோசனை கேட்டார்கள். ஊட்டியிலிருந்து ஏதோ ஒரு தைலத்தை வரவழைத்து அம்மாமிகளுக்கு வழங்கினார் வாத்தியார். என்னே ஆச்சரியம்? தாங்கித் தாங்கி நடந்துக் கொண்டிருந்த மாமிகள் இப்போது வீரபாண்டிய கட்டபொம்மன் சிவாஜி மாதிரி கம்பீர நடை போட்டு, குளத்திலிருந்து தண்ணீர் பிடித்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

ஊரில் குழந்தைகளுக்கு காய்ச்சல் தொடங்கி, வாலிப-வயோதிக அன்பர்களின் ரகசியப் பிரச்சினை வரை ‘டீல்’ செய்யத் தொடங்கிவிட்டதால் வாத்தியாரை யாரும் இப்போது வெறுமனே வாத்தியார் என்று அழைப்பதில்லை. அடைமொழி கொடுத்து ‘டாக்டர் வாத்தியார்’ என்று அசத்தலாக அழைக்கிறார்கள். தன்னுடைய மருத்துவ ஆலோசனைகளுக்கு ‘பீஸ்’ எதுவும் அவர் வாங்குவதில்லை என்பதால், ஊர்மக்கள் மத்தியில் பிரமாதமான வரவேற்பு.

வாத்தியாரின் இந்த திடீர் அவதாரத்தால் சைட் எஃபெக்ட் ஒன்றும் உண்டு. ஊரில் ஆஸ்பத்திரி வைத்திருந்த ஒரே டாக்டரான அசோக்கின் கிளினிக் நோயாளிகளின் வருகையின்றி, வருமானமில்லாமல் ஈயடித்துப் போனது. ஊரில் அவரது பிழைப்பு கேள்விக்குறியானது. வாடகை கொடுக்கக்கூட வக்கற்ற நிலைக்குப் போய்விட்ட டாக்டர், பேசாமல் வாத்தியாரிடம் கம்பவுண்டராக வேலைக்கு சேர்ந்துவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருப்பதாக கேள்வி.

5 கருத்துகள்: